Pages

  • RSS

30 December, 2011

முயற்சிக்கு நன்றி – நேசம்!

நல்லதொரு முயற்சியை முன்னெடுத்த எல்லோருக்கும் முதலில் பாராட்டுகள். மிகத் தேவையான ஒரு விழிப்புணர்வு வர இயன்றதை எல்லோரும் செய்வோம். இதனால் பயன் பெறும் ஒருவருக்கேனும் நாம் வழிவகை செய்து கொடுத்தவர்கள் ஆவோம்.

ஊரில் தெரிந்தவர்கள் ஒருவருக்கு 2000த்தில் என்று நினைக்கிறேன். புற்றுநோய் என்று தெரிந்ததில் இருந்து அவர் அருகில் கூடக் குழந்தைகளைப் போக அனுமதிக்காமல், தனியே பாத்திரம் எல்லாம் கொடுத்து, தனி அறையில் வைத்திருந்தார்கள். இத்தனைக்கும் அந்த வீட்டில் கல்லூரிப் படிப்பு முடித்த பெண், ஆசிரியத் தொழில் செய்த ஒரு பெண், அரசாங்க உத்தியோகத்தில் இருந்த மருமகன் என ’அறிவாளிகள்’ இருந்தனர்.

சின்ன வயதில் இருந்து நாங்கள் 88 கலவரத்துக்கு இடம் பெயர்ந்தது வரை ஒரு பாட்டி பிச்சை கேட்டு வருவார். தடையைச் சுற்றித் தலையில் ஒரு வெள்ளைத் துணியால் கட்டி இருப்பார். அவருக்கு புற்றுநோய் வந்ததில் அப்படி ஆனதாக அம்மா சொன்னார். வீட்டில் கடைக்குட்டியானதால் அவருக்கான காசும் கொடுக்கும் பொறுப்பு என்னிடம் வந்தது. முதலில் முகத்தைப் பார்க்காமல் குடுத்துவிட்டு ஓடி வந்த நான் வளர வளர அந்த முகத்தில் இருந்த புன்னகையைப் பரிசாக வாங்கி வரத் தொடங்கினேன். பின்னர் என்ன ஆனார் என்று தெரியவைல்லை.

இதைப் போல உறவினர், நண்பர், அறிந்தவர், தெரிந்தவர் என்று எத்தனை பேருக்கு புற்று நோய் வந்துவிட்டது. காய்ச்சலாம் என்பது போல சாதாரணமாகச் சொல்கிறார்கள் சிலர். மனம் வெந்து மாய்ந்து நோய் வந்தவரையும் வருத்திக் கொல்கிறார்கள் சிலர். இங்கேயே எத்தனையோ பேர் ஆரம்பக் கட்டத்திலே கண்டுபிடிக்கப்பட்டு, சிகிச்சை முடித்து, நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த நாட்டவரையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்.

கடந்த வாரம் இரத்தப் புற்று நோயால் தெரிந்தவர் ஒருவர் இங்கே இறந்துவிட்டார். முதற் கட்ட ஆபரேஷன் 2005 இல் முடிந்து நன்றாக வாழ்ந்தவரால் போன மாதம் நடந்த இரண்டாவது ஆபரேஷனின் பின் உயிரைத் தக்க வைத்துக் கொள்ள முடியவைல்லை. இருந்தாலும் 2005 க்கும் 2011க்கும் இடைப்பட்ட காலத்தில் அவர் வாழ்ந்ததே அவர் குடும்பத்துக்குப் பெரிய விஷயம் இல்லையா. அவர் ஆத்ம சாந்திக்குப் பிரார்த்தித்தபடியே இந்த நேசக்காரர்களோடு கரம் கோர்த்துக் கொள்ள எல்லோரையும் கேட்டுக் கொள்கிறேன். கீழே உள்ள இணையத்தளத்திற்கு சென்று பாருங்கள். அப்படியே உங்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள் அன்பர்களே.

நேசம்.

nesam small

27 December, 2011

பாசக் கண்ணீர்!!

tenn lys ஊரில் சுனாமி நினைவு அஞ்சலி நிகழ்வுகளில் ரஜி(சின்னண்ணா), ஜெயாண்ணா(இளைய மச்சினர்) கலந்து கொண்டார்களாம். நினைவுகள் அலையடித்து மீண்டன. எல்லா மக்களதும் ஆத்ம சாந்திக்கு மனதார வேண்டிக்கொண்டேன். அடிக்கடி சுனாமி எச்சரிக்கை விடுகிறார்களாம். கடலின் ஆக்ரோஷம் பயங்கரமாக இருக்கிறதாம். மழையும் சூறைக்காற்றும் வேறு. அண்ணா முதல் முதலாக வயல் விதைத்திருந்தார். அவளவும் நீரில்.

dagmar இங்கேயும் நாட்டின் பல இடங்களில் 30 வருடங்களின் பின் அதிக அளவிலான புயல் தாக்கம். நேற்றைய கிறிஸ்துமஸ் நாளில் இருந்து ஒரு லட்சம் பேர் மின்சாரம் இல்லாமல் இருக்கிறார்கள். Dagmar என பெயரிடப்பட்ட புயலின் சீற்றம் இப்போது குறைந்துவிட்டாலும் சேதங்கள் அதிகம். எங்கள் ஊருக்கும் தாக்கம் வருமென அறிவிக்கப்பட்டு காற்றோடு கடந்துவிட்டது. ஆனாலும் காற்றின் வேகம் இன்னமும் அதிகமாகவே இருக்கிறது.

இந்த வருடம் கிறிஸ்துமஸ் வார இறுதியில் வந்தது போதாதென்று White Christmas இல்லையென்பது நோர்வேஜியருக்கு மிகவும் வருத்தமான ஒன்று. மழை. ஒரு துளி பனி இல்லை. நேற்று நண்பர் வீட்டில் விருந்தில் இருக்கும்பொழுது மின்சாரம் விட்டுவிட்டு வந்தது. வழக்கமாக அவர்கள் வீட்டில் இருந்து வரும்பொழுது திட்டிக்கொண்டே வண்டி ஓட்டுவேன். தண்ணியிலும் தள்ளாடாமல் இருக்கும் மாம்ஸுக்கும் சேர்த்து வண்டி தள்ளாடும். இம்முறை ஜாக்கெட் மறந்துவிட்ட சது ஷர்ட்டையும் கழட்டி விட்டு இருந்தார். அவளவுக்கு இருந்தது காற்றில் வெப்பம்.

001 நான் இங்கு வந்ததில் இருந்து மூன்று இந்துக் குடும்பங்கள் வருடம் ஒருத்தர் வீட்டில் கிறிஸ்துமசை கொண்டாடுவோம். 24ஆம் திகதி ஒன்றுகூடி அங்கேயே தங்கி 25ஆம் திகதி வீடு திரும்புவோம். இந்த வருடம் எங்கள் முறை. கூடவே இன்னொரு இந்துக் குடும்பமும் சேர்ந்து கொண்டார்கள். ஒரு பாட்டில் வைனும் ஒரு சில பியருமே செலவானதில் எல்லோரும் ஒன்றாக மிகவும் சந்தோஷமாகக் கழிந்தது நாள். உடனேயே குடிக்கு நான் எதிரி என்று நினைத்துவிட வேண்டாம். சந்தோஷத்துக்கு குடிக்கிறோம் சாமி என்று தீர்த்தமாடுவதில் ஆண்கள் சீக்கிரமே மட்டை. அடுத்த நாள் எழுந்து ப்ரேக்ஃபாஸ்ட்டுடன் பாஸ்ட்டையும் கேட்டு அறிந்து கொள்வார்கள். இம்முறை 2 மணி வரையும் ஒரே பேச்சும் சிரிப்பும் தான். எல்லோரும் வண்டி ஓட்டும் நிலமையில் இருந்ததால் அவர்கள் போய்விட அக்காச்சியோடு 5 மணி வரை பேசிவிட்டுத் தூங்கினோம். வருங்காலத்தில் இதையே கடைப்பிடிக்கலாம் என்று ஏகமனதாக முடிவாகி உள்ளது. அவர்களுக்கான யாகத்தை புது வருடத்துக்கு இடையில் வைத்துக்கொள்ளவும் முடிவாகி உள்ளது.

030 032 1

எங்களுக்கு ஒன்றிலும், அவர்களுக்கு ஒன்றிலும் என பிள்ளைகளே சாப்பாட்டு மேஜையை ஒழுங்கு செய்தார்கள். ட்ரடிஷனல் நோர்வேஜியன் உணவுடன் டின்னர் முடிய பிள்ளைகள் ஆவலோடு காத்திருக்கும் பரிசு வழங்கல் ஆரம்பம் ஆகும். அதுவரையும் பரிசை தூக்கிப் பார்ப்பதும், பெயரை வாசிப்பதுமாக ஆர்வத்தோடு இருப்பவர்கள் கையில் கிடைத்ததும் குதிக்கும் குதிப்புக்கு ஈடு இல்லை.

008 விஷ் லிஸ்ட் முன்னாடியே தந்துவிடுவார்கள் என்றாலும் பரிசு என்னவென்று தெரிந்து கொள்ள முடியாதபடி உருமறைப்புச் செய்துவிடுவேன். பிள்ளைகளோடு சேர்ந்து பெரியவர்களும் ஏமாந்து விடுவார்கள். நண்பி ஒருவருக்கு மேக் அப் பாக்ஸ் கொடுத்திருந்தேன். அவர் அதை வெகுசிரமப்பட்டு திறக்க முயன்று கொண்டிருந்தார். ‘அக்கா.. பிடிக்கலையா.. இவ்ளோ கஷ்டப்பட்டு எதுக்கு திறக்கறிங்க’ என்றபோது விழுந்து விழுந்து சிரித்தார். வழக்கம் போல் நான் அதற்குள் வேறு எதையோ வைத்து பாக் செய்திருக்கிறேன் என்று நினைத்தாராம். நண்பியின் மகள் காசாக வேண்டுமென்று சொல்லி இருந்தார். இரண்டு எம்ப்டி பாக்ஸில் ஒன்றுக்குள் காசை வைத்து பேக் செய்து கொடுத்தபோது கரெக்ட்டாக அதை திறந்து என்னை ஏமாற்றினார்.

007 சது ஏற்கனவே xbox இருந்தாலும் play staion வேண்டுமென்று கேட்டிருந்தார். ஒரு ஷூ பாக்ஸில் சிப்ஸ் பாக்கெட், பேரீச்சை பாக்ஸ் வைத்து கூடவே கட்டில் கீழே பரிசு இருக்கிறது என்று குட்டிக் குறிப்பு எழுதி வைத்தேன். கவரை பிரித்ததும் ’ஷூவா’ என்றார். அவர் விஷ் லிஸ்ட்டில் அது இல்லை. உள்ளே பார்த்துவிட்டு ’சிப்ஸ் எனக்கு பிடிச்சது. ஆனா பேரீச்சை எனக்கு வேணாம்’ என்று என்னிடம் தர எடுத்தவர் குறிப்பை பார்த்து ஓடிப்போய் பரிசோடு வந்து கழுத்து வலிக்கும் அளவுக்கு இறுக்கி நன்ன்ன்றி சொன்னார். அம்முவின் கட்டில் கிஃப்ட்டை மாம்ஸ் முன்னாடியே சொல்லி சொதப்பியதால் சுவாரசியம் இல்லாது போய்விட்டது. சதுவுக்கு மாம்ஸ் வாங்கிய xbox கேமை கவரில் போட மறந்து நான் சொதப்பிவிட்டேன்.

பரிசு வாங்குவதென்பதும் அவளவு சாதாரண விஷயம் அல்ல. எங்களுக்கு கிடைக்கும் பரிசில் 90% தேவையில்லாததே வந்துவிடும். அதை தவிர்க்கவே நான் கொடுக்கும்போது ஒன்று அவர்களிடம் என்ன விருப்பம் என்று கேட்டுவிடுவேன். அல்லது எக்ஸ்சேஞ்ச் கார்ட் வைத்துக் கொடுத்துவிடுவேன். பிடிக்காத ஒரு பரிசை பிரித்துப் பார்க்கும் பிள்ளை மட்டுமல்ல பெரியவர் மனமும் கஷ்டப்படுவதைப் பார்த்திருக்கிறேன். பரிசென்பது ஒரு சாக்லெட்டாக இருந்தாலும் பிடித்த சுவையில் இருக்க வேண்டுமென்பது என் பாலிஸி. ஆர்வமும் ஆசையுமாகப் பரபரவெனப் பிரித்துப் பார்த்த பின் மலர்ந்த சிரிப்போடு சொல்லப்படும் நன்றிக்கு முன்னே நான் அலையும் அலைச்சல் காணாது போய்விடும்.

முதல் முறையாக மாம்ஸ் எனக்கு கிறிஸ்மஸ் கிஃப்ட் தந்து அசத்தி இருக்கிறார். மாமியார் ஆர்டர் போட்டு விட்டார்களாம். ‘இனிமேல நீ அவளுக்கு ஒழுங்கா கிஃப்ட் வாங்கி குடுத்திடணும். என்னதான் அவள்ட்ட எல்லாம் இருக்குன்னாலும் நீ குடுக்கிறதுதான் சந்தோஷம். எல்லாரும் உங்க அவர் என்ன கிஃப்ட் குடுத்தார்னு அவள்ட்ட கேக்கிறப்ப எனக்கு கஷ்டமா இருக்குது பெடியா’ என்று என் பர்த்டே முடிய நானறியாது சொல்லி இருக்கிறார்கள். ஃபோனில் நன்றி சொன்ன பொழுது சிரித்தார்கள். அக்காச்சி ‘அடியேய்.. மாமியார் மெச்சிய மருமகள் கேள்விப்பட்டிருக்கிறனடி.. மருமகள் மெச்சிய மாமியாரை இப்பதானடி பார்க்கிறன்’ என்றாள்.

அக்காச்சி மாம்சுக்கு எங்கள் இருவரின் படங்களை யாத்தே யாத்தே பாடலுக்கும், அம்மு சதுவுக்கு அவர்களின் படங்களை Justin Bieber பாடலுக்கும் animoto.comஇல் வீடியோவாக்கி பரிசாக அனுப்பி இருந்தாள். எனக்கு ரத்தத்தின் ரத்தமே பாடலுக்கு என் படங்களோடு அவள் அன்பையும், பாசத்தையும் வார்த்தைகளாகச் சேர்த்து அனுப்பி அழ வைத்துவிட்டாள். ‘அதுக்கு எதுக்குடி அழுதனி.. இஞ்சையும் எல்லாரும் சொன்னவை நீ அழப்போறாய் பாத்தெண்டு’ என்றவளிடம் ‘சும்மாவே நான் அழு அழுன்னு அழுவன்.. இதில நீ அழூ அழூன்னு வேற அனுப்பி இருக்கிறாய்.. அது பாசக் கண்ணீர் அக்காச்சி’ என்று சொன்னேன்.

18 December, 2011

உ பி.. மன்னிச்சூ..

முதல்ல வாழ்த்து சொல்றதா மன்னிப்பு கேக்கிறதான்னு தெரியவில்லை. இரண்டையும் சேர்த்தே சொல்லிடறேன்.

பிந்திய பிறந்த நாள் வாழ்த்துகளுக்கு மன்னிச்சிடுங்க உ பி.

உ பினா என்னவென்று தெரியாதவர்களுக்கு முதலில் சொல்லிவிடுகிறேன். உ பி என்றால் உடன் பிறப்பு. என் உடன் பிறக்காத என் உடன் பிறப்பு.

நான் இலங்கையைச் சேர்ந்தவள்ன்றது இன்னமும் பலருக்குத் தெரியாது. நேரில் பார்ப்பவர்களே ’நீங்க இந்தியாவா’ன்னு கேக்கும்போது பாராதவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. ஒரு நாள் சாட்டில் பேசிக் கொண்டிருக்கும்போது ’நான் இலங்கை.. அதிலவும் வன்னி’என்றேன். அடுத்த பதில் ‘உடன் பிறப்பே’ என்று வந்தது. அன்றிலிருந்து அவரை நான் வசந்த் என்றது குறைந்து போக அவரும் சுசிக்கா, அக்கா என்பதை குறைத்து உ பி என்பதே அழைப்பாய் போயிற்று.

ஒற்றைப் பிள்ளையாய் அம்மா, அப்பாவைப் பிரிந்து ஊர் நினைவுகளோடும் ஏக்கத்தோடும் இருக்கும் (இங்கே இருந்த என்று சொல்லலாமா உ பி?? ‘ஜோ’ரா சொல்லலாம்ன்னு நினைக்கறேன்) வசந்த் போலவே என் கஸின் ஒருவனும் கத்தாரில் வேலையில் இருந்தான். நாங்கள் பேசுவதுதான் அவனுக்கான பூஸ்ட். அதுவே வசந்திடம் ஒரு தனிப் பாசத்தை எனக்குள் உருவாக்கியது எனலாம். யாரிடமும் அதிகம் மெயில்/சாட்டில் பேசாத நான் வசந்திடம் அவ்வப்போது அம்மா, அப்பா பற்றி விசாரிப்பேன். ‘இப்பதான் உ பி பேசினேன்’ என்றோ ‘இனிமேலதான் பேசப் போறேன்’ என்றோ சொல்லும்போது அந்த சந்தோஷம் என்னையும் தொற்றிக் கொள்ளும்.

பிரியமுடன் வசந்த் என்பது பேச்சளவில் மட்டுமில்லை. உடன் வேலை செய்யும் இலங்கைப் பையன்கள் மேல் அவருக்கு இருக்கும் பாசமும் அன்பும் உங்களுக்குத் தெரியாது இருக்கலாம். ஒவொருவரின் மீதும் போர் ஏற்படுத்திய காயங்களை அறிந்து அவர்களுக்குத் தன்னாலான உதவியை, அன்பை வழங்குகிறார்.

எங்காவது நான் எழுதியதில் கருத்து முரண் இருப்பின் உடனேயே ஓலை வந்துவிடும். அதே போல அவர் எழுதுவதில் ஏதாவது யாராவது சொல்வதனால் நெருடல் இருந்தால் கேட்பார். புரிந்துகொண்டு கருத்துக்கு மதிப்பளிக்கும் பக்குவம் இருப்பதால் எதுவாக இருந்தாலும் என்னாலும் உடனேயே கேட்டுவிட முடிகிறது.

வசந்தின் அப்பா, அம்மா சிரிப்பைப் பார்த்தவர்களுக்குத் தெரியும் இவரின் சிரிப்பு எங்கிருந்து வந்ததென்று. இதே சிரித்த முகத்தோடு, உங்கள் மனம்போல எல்லாமும் ‘ஜோ’ராக அமைந்து, ‘ஜோதி`மயமாக உங்கள் எதிர்காலம் விளங்க எங்கள் அனைவரதும் மனமார்ந்த வாழ்த்துகள் உ பி. என்றும் என்னப்பனிடம் உங்களுக்காகவும் வேண்டிக்கொள்கிறேன்.

முதல் முதலில் இந்தப் பாடலைக் கேட்டபோது உ பி பர்த்டேக்கு பரிசாகப் போடலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் என் பர்த்டே முதலில் வந்ததால் அவர் முந்திக்கொண்டார். என் ஞாபகசக்தியின் லட்சணத்தில் சரியான நேரத்துக்கு இல்லாவிட்டாலும் இப்போது இந்தப் பாடலை பரிசாக்கிக் கொள்கிறேன். மனதார மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறேன். மன்னிச்சூஊஊஊ உ பி :)

29 November, 2011

நினைவில் நிறைந்தவர்க்கு!!

முதலில் மீண்டும் ஒரு முறை இலங்கையில் ஈழப்போரில் உயிர் நீத்த அத்தனை மாவீரர்களுக்கும், மக்களுக்கும் அஞ்சலிகளும், வணக்கங்களும்.

இம்முறையும் அஞ்சலிக்கும், அதன் பின்னான நிகழ்வுகளுக்கும் போக மனம் வரவில்லை. கேளிக்கைகள் பிடிக்கவில்லை. இவர்களின் தேவையில்லாத கொள்கைகள் பிடிக்கவில்லை. போயிருந்து மனம் வெதும்பி வருவதைவிட மனதார வீட்டிலேயே வணங்கினோம்.

 

புலம்பெயர் தமிழர்களைப் பொறுத்தவரை நவம்பர் 27 மாலை 6 மணிக்கு எல்லோரும் ஒன்றுகூடி அஞ்சலி செய்வோம். பின்னர் மண்டபம் கிடைப்பதைப் பொறுத்து ஒரு சனிக்கிழமை கலை நிகழ்வுகள் நடைபெறும். இப்போது??இவர்களுக்குள்ளேயே கொள்கை வேறுபாடுகள், குழுப் பிரிவுகள். நாடுகடந்த அரசமைப்போம் என்று ஆளுக்கொரு தலைமையின் கீழ் நாட்டுக்கு நாடு அரசு அமைக்க முயல்கிறார்கள். பிடிக்கவில்லை. ஒதுங்கிவிட்டோம்.

சிங்களவர் எல்லோரும் கெட்டவர் இல்லை. தமிழர் எல்லோரும் நல்லவர் இல்லை. அதனால் தான் இலங்கையில் ஈழப்போரில் உயிர் நீத்த என்று சொன்னேன். அப்பாவித் தமிழரோடு உயிரிழந்த அப்பாவிகளையும் சேர்த்து. எத்தனையோ தமிழர் உயிரைக் காப்பாற்றிய சிங்களவர் இருக்கிறார்கள். தமிழரையே காட்டிக்கொடுத்துக் கொலைக்குக் காரணமான தமிழர் இருக்கிறார்கள். இங்கே நான் இராணுவம், போராளி என்று பிரித்துச் சொல்லவில்லை.

சிறுவயதில் பார்த்த அப்பாவின் நண்பன் ரட்ணவீரா மாமாவின் கறுத்த நெடிய உருவமும், வெள்ளைப் பல் சிரிப்பும் இப்போதும் நினைவிருக்கிறது. பாதிக் காதை மூடியதாகப் படிய வாரிய முடியோடு வீரா மாமா கல்யாணம் செய்து கூட்டி வந்த ஆண்ட்டியும் நினைவில் இருக்கிறார். கந்தளாயில் அப்பாவோடு வேலை செய்தவர்களின் கதைகள் மட்டும் நினைவில்.

83 கலவரம். அப்போது சித்தியும் சித்தப்பாவும் பண்டாரவளையில் ஆசிரியப் பணியில் இருந்தார்கள். தமிழர் என்று தெரிந்த நொடி உயிரோடு கொழுத்தப்பட்ட காலம். இராணுவ வீரன் வீட்டிலேயே வாடகைக்கு இருந்தார்கள். இரவில் வீட்டின் மீது கல்வீசப்படும். காலையில் வீட்டம்மா அவர்கள் வீட்டு பஷன் ஃப்ரூட் பழம் வீழ்ந்ததாய் சொல்லி நிலமையை இலகுவாக்குவார். முதலில் என்னைக் கொன்றே உங்களை நெருங்க முடியும் தைரியமாய் இருங்கள் என்று சொல்லி இருவரையும் ஊருக்கு உயிரோடு அனுப்பி வைத்த அதே இராணுவ வீரன். அக்காச்சி ஊருக்குப் போனபோது சந்தித்த இராணுவ வீரர்கள். அண்ணாவிடம் வைத்தியம் பார்க்கும் போலீஸ். எல்லோரும் நல்ல சிங்களவர்கள்.

மாமியாரின் தென்னந்தோட்டத்தில் இளநீர் களவாகப் பிடுங்கும் இராணுவத்தினர் ’பசிக்குது அம்மா’ என்னும்போது இன்னும் இரண்டைப் பறித்துப் போடச்சொல்லிவிட்டு அடுத்த தடவை கேட்டுப் பிடுங்கவேண்டும் என்று சொல்வார்களாம். இருந்தாலும் அவ்வப்போது பசித்தவர்கள் பழங்கணக்கும் பார்க்கும்படியாக இருக்கிறது திருடர்களின் அட்டூழியம். விடுதலைப் புலிகள் இருந்தபோது அடங்கி இருந்த திருடனெல்லாம் இப்போது பகலிலேயே திருடும் தைரியத்தோடு இருக்கிறானாம். அவ்வப்போது ’அவங்கள் இருக்கேக்க’ என்று நம் மக்கள் அங்கலாய்க்கத்தான் செய்கிறார்கள்.

வீடுவீடாக வந்து மாவீரர் தினத்தன்று விளக்கேற்றக் கூடாதென்று சொல்லப்பட்டதாம். கோவிலில் கூட விளக்கு அணைக்கப்பட்டதாம். போகட்டும். எங்கள் உணர்வுகளால் அவர்கள் ஆத்ம சாந்திக்கு ஆயிரம் என்ன லட்சம் தீபங்கள் ஏற்றுவோம்.

என்னதான் இராணுவம் அன்பாய் இருந்தாலும் அடிமனதில் ஒரு பயம் எப்போதும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. எங்களுக்கும். அங்கே இருக்கும் அவர்களுக்கும். எத்தனை நாளைக்கு இந்த வாழ்வு?? இன்னொரு போரைத் தாங்கும் சக்தி அவர்களிடம் இல்லை. ஏனென்றால் அத்தனை இழந்திருக்கிறார்கள். உயிர்ப் பயம் இப்போதும் இருக்கிறது. குண்டுச் சத்தம் கேட்பதில்லை. அந்த அளவில் நிம்மதியாக ஒரு வாய் உண்டு, உறங்குகிறார்கள். ஏன் கெடுக்க வேண்டும்??

இழப்பை அநுபவித்தவர்க்குத் தெரியும் வலியின் அருமை. கடந்த மாதம் சானல் 4 இல் ஒளிபரப்பிய கடைசிக்கட்டப் போர் பற்றிய டாகுமெண்ட்ரியை இங்கே ஒரு சானலில் ஒளிபரப்பினார்கள். இன்னமும் வலிக்கிறது. பார்த்த எனக்கே இத்துணை வலியென்றால் அங்கே உயிரைக் கையில் பிடித்தபடி ஓடிய என் உறவுகளுக்கு எப்படி இருக்கும்?? இங்கிருந்து வீரம் பேசலாம். நாளை ஒன்றென்றால் நம்மில் எத்தனை பேர் நாட்டுக்குப் போவோம் உறவுகளின் உயிர் காக்க?? போயிருக்கிறார்கள். இல்லை என்கவில்லை. என் அண்ணன்களைக் காக்கவென்று நான் போவேனா?? சாத்தியம் இல்லாதபோது பேசக்கூடாது. அப்படியும் பேசுபவர் கேட்பது பிடிக்காவிட்டால் ஒதுங்கிப் போக வேண்டும். போய்விட்டோம்.

நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். இனி நடப்பவையேனும் நல்லவையாக அமையட்டும்.

பிரார்த்திப்போம்!!

maaveerar

15 November, 2011

மீசை முகம் மறந்து போச்சே..

போன திங்கள் நான் லீவ் போட்டேன்னு கவலையா, சந்தோஷமா தெரியலை. தரை/தலை தொட்டுக்கொண்டே இருக்கிறது மேகம். அழகாகவும், பயமாகவும், ஆபத்தாகவும் கூட இருக்கிறது. நாள் முழுவதும் இருந்தாலும் நேரத்துக்கேற்ப அடர்த்தியும், இருளும் கூடிக்குறைகிறது. இந்த அழகில் வீதியில் கறுப்பு உடையில் செல்லும் மக்களை என்னதான் செய்ய. பிள்ளைகளை பள்ளி கூட்டிப் போகும்போதும், வரும்போதும் அவளவு கவனமாக இருக்க வேண்டி இருக்கிறது. பள்ளி போகும்போது சது எடுத்த படங்கள் கீழே.

002 003

006

பால்கனியில் இருந்து ரசிக்க மனமும் இல்லை, குளிரும் விடவில்லை. அவ்வப்போது ஜன்னல் வழி எட்டிப் பார்ப்பதோடு சரி.

045 046 

@@@@@

halloween. இப்போ இரண்டு வருஷமாகத்தான் பசங்க தாங்களாகவே கேண்டி கலெக்‌ஷன் கோதாவில் குதித்திருக்கிறார்கள். முன்னெல்லாம் நானும் கூடவே போக வேண்டும். புல்லுக்கும் ஆங்கே பொசியும் என்றாலும் எலும்பை உறைய வைக்கும் குளிரில் போவது கொஞ்சம் கஷ்டம்தான். ஒரே ஒரு தடவை கூட வந்த மாம்ஸ் பின்னர் எஸ். இப்போதும் வீட்டில் இருப்பதும் ஒன்றும் நிம்மதியான விஷயம் அல்ல. விதவிதமாக வந்து மிரட்டுவார்கள். சிலருக்கு தூர நின்றே கேண்டியை கொடுத்துவிட்டு ஓடி வந்து விடுவேன்.

வீட்டுக்கு வெளியே லைட் போட்டிருந்தாலோ, மெழுகுவர்த்தி ஏற்றி இருந்தாலோ அந்த வீட்டில் கேண்டி கிடைக்கும் என்று அர்த்தமாம். trick or treet என்ற கலெக்‌ஷன் மந்திரத்தை இங்கே knask eller knep என்கிறார்கள். இங்கு வந்த வருடம் விஷயம் தெரியாமல் வெளியே லைட்டை போட்டுவிட்டு பயத்தோடு பல்ப்பும் வாங்கிய நினைவு பசுமையாக இருக்கிறது. நாங்கள் கலெக்‌ஷனுக்கு போவது போலவே வருபவர்களைப் பார்த்து மிரள்வதும், கேண்டி கிடைத்த மகிழ்வில் குதிக்கும் குழந்தைகளைப் பார்ப்பதுவும் சந்தோஷமே. எங்கள் வால்கள் உரிமையோடு இரண்டு முறை கலெக்‌ஷனுக்கு வந்தார்கள். போகும்போது போணி. பின்னர் வீடுகளின் வரிசைக்கிரமம்.

077 நண்பர் மகனுக்கு அம்மு மேக்கப் போடுகிறார். நாலு மணிக்கு நான் ஆஃபீஸால் வர அனைவரும் ரெடி. ஆறு மணிக்குத்தான் (பேய்)உலா தொடங்கும் என்பதால் காத்திருந்து கலைந்த மேக்கப்பை மீண்டும் டச்சப் செய்து விட்டார்.

 

 

084 a நம் வீட்டு வால்கள் இருகரையும், நடுவில் நண்பர் பிள்ளைகள்.

 

 

 

 

 

026 எனக்கு கிடைத்த மிச்ச சொச்சம் இவளவே. பெஸ்ட் சாக்லெட் மாம்ஸ் லண்டன் போனபோது இதற்கென்றே நான் சொல்லிவிட்டு வாங்கி வந்ததுதானாம். என்ன செய்ய. இக்கரை சாக்லெட்டுக்கு அக்கரை சாக்லெட் இனிமை.

 

 

@@@@@

018 வேறொரு நண்பர் மகளின் பர்த்டேக்கு வழக்கம்போல் ஐஸிங் செய்தேன். கதவு திறந்து கேக்கை பார்த்த குட்டிம்மா சொன்னார் ‘கிக்கி’ (கிற்றி). அக்காச்சி சொன்னது போல் கேக் சக்ஸஸ். அதாகப்பட்டது பிள்ளை கேக்கில் உள்ள உருவத்தை அடையாளம் காணவேண்டும். கண்டுவிட்டது. இந்த வயது குழந்தைகளிடம் ஹலோ கிற்றி பிரபலமாக இருக்கும்வரை எனக்கும் வேலை குறைவு. கண், மூக்கு, வாய், தலையில் ஒரு பூவோ, ரிப்பனோ கட்டிவிட்டால் முடிந்தது ஐஸிங். ஆனால் வழக்கம்போல் கிற்றிக்கு இம்முறையும் மீசை வைக்க மறந்துவிட்டேன். நண்பியிடம் சொன்னபோது

‘அதானே அதெப்டி ஒவொரு தடவையும் மறக்கறிங்க’ என்றார்.

‘அதில்லைங்க.. இங்க மீசை இல்லாத ஆம்பளைங்களையே பாத்திட்டு இருக்கிறதுல மீசையே மறந்து போச்சுங்க’ என்றேன்.

சிரிப்பில் வீடு ஆடி அடங்கியது. அங்கே நாங்கள் இருந்த அவளவு நேரமும் பர்த்டேக்குட்டி ஒவொரு செருப்பாகப் போட்டு நடப்பதும், விழுந்து எழுவதுமாக இருந்தார். இந்தக் குழந்தைகளுக்கு பெரியவர் செருப்புகளில்தான் எவளவு ஆசை. இத்தனூண்டு காலுக்குள் பென்னாம்பெரிய செருப்பையோ ஷூவையோ மாட்டிக்கொண்டு தானே நடக்கமாட்டாமல், அதையும் இழுத்துக்கொண்டு விழுந்தெழுந்து அவர்கள் போடும் கூத்து இருக்கிறதே. செம சிரிப்பு. நாங்கள் சிரிக்கிறோம் என்று தெரிந்ததும் இன்னமும் நடையின் வேகம் கூடும். கடைசியில் என் செருப்பை அவரிடம் இருந்து வாங்கி வர கொஞ்சம் கெஞ்ச வேண்டி இருந்தது.

028

09 November, 2011

ஹாய்.

#####                                                                                                                           #####

முன்போல் இல்லை நீ

நானும் தான்.

solsikke blomster

#####                                                                                                                          #####

ஒன்று

இன்னொன்று

மற்றொன்று

மொட்டுகள் திறக்கும்வரை

தாவத்தான் செய்யும்

வண்ணத்துப் பூச்சி.

sommerfugle 1

 

 

 

 

 

 

 

#####                                                                                                                            #####

எதுவுமே இருப்பதில்லை

எதுவோ ஒன்று ஆகிறது

காதல் என்பதாய்.

sky

#####                                                                                                                           #####

குளிர் காய்ச்சல்

ஜலதோஷம்

இருந்துவிட்டுப் போகட்டும்

ஐஸ்வண்டி பார்த்ததும்

அடம்பிடிக்கும் குழந்தையாய்

அழும் என் மனதை

என்னதான் நான் செய்ய

உன்னைப் பார்த்த நொடி

கேட்கிறது

லவ் யூ சொல்லு

இறுக்கிக் கட்டிக்கோ

உம்மா கொடு..

33892_119613398099607_100001528424389_133933_4362116_n

 

 

 

 

 

 

 

#####                                                                                                                           #####

எப்போதும் அமைவதில்லை

இப்போதும் இனிக்கின்ற

வாழ்வின் சில கணங்கள்.

kissing babies

#####                                                                                                                           #####

06 November, 2011

மாமி ராக்ஸ்ஸ்ஸ்..

’ஃபோன் ஃபோன்.. புள்ளை எடூஊஊஊஊ.. லச்சு ஃபோன் எடூஊஊஊ.. எட ஃபோன் அடிக்குது எங்கயெண்டும் தெரியேல்ல.. புள்ளை.. எந்த ஃபோன் அடிக்குது.. தம்பீஈஈஈஈஈஈஈ (சதுவ).. புள்ளை எடுக்கிறியளே..’

மாம்ஸ் தவிர வீட்டில் இருக்கும் அனைவருக்கும் இப்படியாகச் சொல்லிக்கொண்டே ஃபோன் வரும் ஒவொரு சமயத்திலும் மாமியார் கீழுக்கும் மேலுக்குமாக ஓடித் திரிவார்கள். நான் எப்போதும் என் பக்கத்தில் இதற்காகவே ஒரு ஃபோனை வைத்திருப்பேன். குளிக்கும்போதோ, எங்காவது பசங்க தூக்கிப்போய் வைத்துவிடும்போதோ இப்படி ஆகி விடுகிறது. யாராவது எதுவும் முக்கிய விஷயம் சொல்ல கூப்பிடுவார்களாம். ஒரு தடவை வந்திருந்தபோது படியேறி ஓடி வந்து தடுக்கி வீழ்ந்து காலில் காயம். மாம்ஸ் வீட்டிலிருக்கும் போது சமத்தாக இருந்துவிட்டு அவர் தலை மறைந்ததும் மீண்டும் ‘ஃபோன் ஃபோன்..

#####

அலாரத்தில் அலறி எழுந்தேன். அசந்து தூங்கும் அரிதான நாட்களில் எல்லாம் அலாரச் சத்தத்தில் இப்படியாகத்தான் எழ நேர்கிறது. படபடத்த இதயத் துடிப்பை ஆழ் மூச்செடுத்து ஆசுவாசப்படுத்தியபடி வலப்பக்கம் கையை நீட்டினேன். பதட்டம் போக பக்கத்தில் படுத்திருப்பவரை தொட்டுப்பார்ப்பது க.முவிலும், அணைப்பது க.பியிலும் வழக்கமான ஒன்று. தேடிய கையில் யாரும் தட்டுப்படவில்லை என்றதும் தள்ளிப் படுத்திருக்கிறாரோ என்று எட்டித் துளாவினேன். இல்லையென்றது கை. திடீர் விழிப்பால் எரிந்த கண்களில் வலக்கண்ணை பாதி விரித்துப் பார்த்ததில் அய்.. ஜாலி.. மாம்சை யாரோ மோகினி கட்டிலோட ச்சே.. போர்வை தலையணை சகிதம் தூக்கிட்டு போய்ட்டா என்றது காட்சி. சரி பொழுது விடிஞ்சாச்சு திரும்ப கொண்டு வந்து படுக்கையில விட்டிட்டு போகத்தானே போறா. அவங்களுக்கு இடைஞ்சல் இல்லாமல் நான் இன்றாவது ட்ராஃபிக்கில் நெரியாமல் ஆஃபீஸ் போவோம் என்று வெளியே வந்தேன். கைப்பைக்குள் மொபைல் வைக்கப் போனவளுக்கு அடுத்த அதிர்ச்சி. சோஃபாவில் மாம்ஸ்.

'நைட்டு மூணு மணிக்கே வெக்கையில தூங்க முடியாம நான் இங்க வந்து படுத்திட்டேன். நீ நல்ல்ல்லா தூங்கினே போல' என்றார்.

அப்போ காபி ஆர்டர் பண்ணியதும், வாசம் வந்ததும், கம்பியூட்டர்ல லைட் எரிஞ்சா என்னம்மா நீங்க பாட்டுக்கு தூங்குங்க அதுவும் ஸ்லீப்பிங் மோட்ல போய் தூங்கிடும், மத்த லைட் இன்டர்நெட் சிக்னல்மா அத ஒண்ணும் பண்ணமுடியாதுனு பேச்சு சத்தம் கேட்டதெல்லாம் கனவாஆவ்வ்வ்வ். காலையிலேயே இரண்டு ஏமாற்றம்!!

#####

தீபாவளிக்கு முதல் நாள் மாமியார் பெட்டுக்கு கவர் மாற்றிக் கொண்டிருந்தேன். சீரியல் இடையே ஆட். நாளை தீபாவளி தினத்தை முன்னிட்டு.. என்று தொடங்கி அன்றைய ஸ்பெஷல் நிகழ்ச்சிகள் என்னவென்று அவர்கள் சொல்ல எது எது பார்க்கும்படியாக இருக்கும் என்று மாமியார் சொல்லிக் கொண்டு வந்தார்கள்.

'நல்லா பாடுவாள் போல கிடக்கு ஆனா ஆறு மணிக்கு ஆர் எழும்பி பாக்கிற' இது மகதியின் கச்சேரி.

'ம்ம்.. இது பாக்கலாம் நல்லாருக்கும்.. பாப்பான்ர பிரசங்கம்' இது சாலமன் பாப்பையாவின் பட்டிமன்றம்.

'அடப் போங்கடா பேயன்களே.. சும்மா புதுப்படம் புதுப்படம் எண்டிட்டு பழைய படத்தையே போடுங்கோ' என்றார்கள்.

'புதுப் படத்தை இப்பவே போட்டா அவங்களுக்கு நட்டம் வந்திடுமெல்லே.. அதான் தியேட்டர்ல ஓடி முடியப் போடுவாங்கள் மாமி' என்றேன்.

'ம்க்கும்.. பின்ன ஏன் புள்ளை உலகத்திலையே முதல் முறையா புதுப்படம் எண்டு சொல்ல வேணும்.. எங்களை ஆகலும் பேக்காட்டக் கூடாது கண்டியோ' என்றார்கள். அவ்வ்வ்வவ்.. அன்று காலை சிங்கம். நைட் வேட்டைக்காரன் போட்டார்கள்.

*பேயன்கள் = முட்டாள்கள். பேக்காட்டல் = ஏமாற்றல்.

#####

மாமியார் வந்த நாள் முதல் அவ்வப்போதும் இப்போது எப்போதும் ஹீட்டர் வேலை செய்கிறது. இன்னமும் விண்டரே வரவில்லை இப்பவே குளிர்ர்ர்ருது என்றால் கொஞ்சம் கண்ணைக்கட்டத்தான் செய்கிறது. சமயத்தில் வீடு சூடாகி நாங்கள் அவனில் வைத்த கோழி போல வேகிப் போகிறோம். சாக்ஸ், ஸ்வெட்டர் எல்லாம் குளிர் விரட்டும் என்று சொன்ன பின்தான் எடுத்துப் போடுகிறார். அவ்வப்போது திருட்டுத்தனமாக ஹீட்டரை ஆஃப் செய்த ஐந்தாவது நிமிஷம்

'என்ன புள்ளை.. இண்டைக்கு இவளவு குளிரா கிடக்கு'

என்பவர் காதுக்கு சீரியலையும் மீறி ஹீட்டர் வேலை செய்யாத சத்தம் எப்படித்தான் கேட்கிறதோ. இது கூடப் பரவாயில்லை தலைக்கு/குளித்து விட்டு வெளியில் நின்று உலர்த்திவிட்டு ஒரு மணி நேரம் குளிரால் போர்வைக்குள் சுருண்டு படுக்கிறார். சற்றே சூர்யா எட்டிப் பார்த்ததும் ஜன்னல் திறந்து வரவேற்றுவிட்டு மூட மறந்துவிடுகிறார். ஹீட்டர் அப்பீட்டாவென்று சந்தேகத்தோடு குளிர் காற்று வரும் வழி பிடித்துப் போனால் திறந்த ஜன்னல் ஜில்லென்று வரவேற்கிறது. நேற்றும் கால்வலியால் அவஸ்தைப்பாட்டார்கள். சாக்ஸ் போடாததும் காரணம். என்று சொன்னதும்

'அவனிட்ட சொல்லிப் போடாதை பேசுவான்'

என்றவர் ஓடிப் போய் எடுத்துப் போட்டுக் கொண்டார். அவரிடம் சொல்லமாட்டேன் ஆனால் இப்படியே சாக்ஸ் போடாமல் கால் வலித்தால் டாக்டர்ட்ட போறது தவிர வேற வழி இல்லையென்று சொல்லி(மிரட்டி) இருக்கிறேன். அவர்களுக்கு ஹாஸ்பிடல்/டாக்டர் அலர்ஜி என்று தெரிந்ததாலும் வேறு வழி இல்லாமலும்.

02 November, 2011

மஷ்ரூம் பீஃபும் சோயா மட்டனும்.

'அம்மா.. தங்கா பெரியம்மா வீட்ல ஃபோறிகோல் சாப்டோம்மா.. அவ்வ்வவ்ளோ டேஸ்ட்ட்ட்ட்டா இருந்ததும்மா.. நீங்களும் செஞ்சு குடுக்கரிங்களா'

அப்டின்னு பசங்க ஒரு சேரக் கூறி(வி)னார்கள். அது ஒண்ணும் அவளவு கஷ்டமான ரெசிப்பி இல்லைங்க. கஷ்டம்னா கூட அது சாப்டுறவங்களுக்குதானே, செய்ற எனக்கு என்ன வந்தது. ஆனால் கோவா (முட்டைக்கோஸ்) + மட்டன்.. பார்க்க சூப் போல இருந்தாலும் மெயின் டிஷ்ஷே அதுதானாம். காம்பினேஷன் நல்லா இல்லையேன்னு விட்டிட்டன். இவங்க கேட்டதும் சரின்னு கூகிளாண்டவரிட்ட matpirat.no என்று வேண்டினேன்.. அவர் இதையா வேண்டினே சரியா பாருன்னு குட்டினதும் பார்த்தா pratக்கு பதில் piratனு டைப்பிட்டன். சரின்னு வேண்டப்பட்ட பொருளெல்லாம் லிஸ்ட் எழுத வேண்டியது இல்லாம ரோல்ஸ் செய்ய வாங்கி வச்ச மட்டன் கூடவே கோவான்னு பிரிஜ்ஜை திறந்ததும் சிரித்தன. வேறென்ன வேண்டும்?? ஓ.. என்னென்ன வேண்டும் என்று சொல்ல வேண்டுமோ?? நோட்டிக்குங்க.

fårikål (எ) mutton stew.

நாலு பேருக்கு.

1 1/2 கிலோ மட்டன்

1 1/2 கிலோ கோவா

4 ts முழு மிளகு

2 ts உப்பு

3 dl தண்ணீர்

உருளைக்கிழங்கு தேவைக்கு ஏற்ப.

 

063 பாத்திரம் கொஞ்சம் பெருசா இருக்கட்டும். இப்டிக்கா பெரிய துண்டா, எலும்பு இருக்கிறதா இருக்கணும் மட்டன். இங்க இப்டியே கிடைக்குது. கோவாவையும் இப்படியே பெரிய துண்டாக வெட்டிக்கொள்ளுங்க.

 

 

 

 

064 இடையிடையே மிளகையும் தூவிக்கணும். நான் 4 க்கு பதில் 8 டீ ஸ்பூன் சேர்த்தேன்.

 

 

 

 

 

 

067 அப்படியே முழுவதையும் கலந்து கட்டி அடுக்கிவிட்டு உப்பு சேர்த்து, தண்ணீரையும் ஊத்திக்கணும். இனி அதுபாட்டுக்கு  இரண்டு மணி நேரம் குறைஞ்ச தீயில வேகட்டும். இப்போ உருளைக்கிழங்கை தனியா வேக வைத்துக் கொள்ளுங்க. அது முடிய நீங்க வேற வேலை இருந்தா பாத்திட்டு வாங்க. சிம்ல இருக்கிறதால அடிப்பிடிக்க வாய்ப்புகள் குறைவு.

 

070 ஒன்றரை மணி நேரம் அவிந்ததும் நான் மேலும் காலிஃப்ளவர், புரோக்கலி, காரட் என சில பல சேர்த்துவிட்டேன். ஆனால் இவற்றை இறக்குவதற்கு ஒரு பத்து நிமிடம் இருக்கும்போது சேர்த்தாலே போதும். அரைமணி நேரமாக ஓவர் குக் ஆகிவிட்டது.

 

 

073 நம்பி சாப்பிடலாம்!! சுள்ளென்று மிளகு அவ்வப்போது கடிபட ம்ம்..

பாதியிலவே வாசனை வாயூற வைத்தது. வீட்டில் ஆரும் இல்லை. ஆசையாகக் கேட்ட பசங்க இல்லாமல் தனியே சாப்பிட மனமில்லாமல் அடிக்கடி கிச்சனுக்குப் போய் வாசனை பிடித்துக்கொண்டு மட்டும் இருந்தேன். நாலு மணிக்கு மேல் ஓவர் பசியாகி பாதி சாப்பிடும்போது வந்தார்கள். மீண்டும் வெளியே போக வேண்டி இருந்ததாலும், போன இடத்தில் எதுவோ சாப்பிட்டு விட்டதாலும் வந்து சாப்பிடுவதென்று மாம்ஸ் தீர்ப்பை வழங்கினார். திடீரென தடதடவென்று படியேறினார் அம்மு.

'எங்கம்மா போறீங்க.. கிளம்பலாம்' என்ற மாம்ஸ்க்கு

'அப்பா ஃபோறிகோல் மறந்திட்டேன்' என்ற பதில்தான் படியிறங்கிப் போனது. தடதடவென்று சது படியேறி வந்த சத்தத்தில் அம்முவின் 'ம்ம்..' கரைந்து போனது. இருவருக்குமே மீதியை ஊட்டிவிட்டு

'யம்மன் கொத் அம்மா.. நீங்கதான் ஃபோறிகோல் செய்றதில பெஸ்ட்' என்ற சர்ட்டிபிக்கேட்டோடு கிளம்பினோம். வரும்போது

'அது என்னடி ரெண்டு மணி நேரம் சமைச்சதா சொன்னே.. சூப் போல இருக்கு.. அதான் சாப்பாடா இன்னைக்கு' என்ற மாம்சுக்கு

'உங்கூர்ல சூப் ரெண்டு மணி நேரமா சமைப்பாங்களா' என்றதோடு நான் நிறுத்த சுவையின் புகழ் பரப்பினார்கள் நான் பெற்ற மக்கள். வந்து சாப்பிட ஆரம்பித்தார்கள்.

'அடியே.. பெரிய பீசா தூக்கிட்டு வந்தா அது கோவா.. இப்டியா என்ன ஏமாத்துவே நீ' என்று மாம்ஸின் குரல் கேட்டது.

நான் போன போது எனக்கு நிறைய்ய்ய முழு பெப்பரும், நான்கைந்து கோவா பீசும், பாதி பொட்டாட்டோவுமே இருந்தது. அப்பாவியாய் பார்த்த எனக்கு

'அதான் நீங்க அப்போவே சாப்டிங்களே' என்று பதில் வந்தது அதே நான் பெற்ற மக்களிடம் இருந்து. இங்கே இலையுதிர்காலக் குளிருக்கு இதமாகவும், பனிக்காலக் குளிருக்கு உடலைத் தயார்ப்படுத்தத்  தேவையான கொழுப்பைச் சேர்க்கவும் என இது ஃபோறிகோல்  சீஸனாகிவிடுகிறது. அக்காச்சிக்கு இந்த ரிசிப்பி சொன்னேன்.

’செய்லாம்டி எங்க.. சஜோபனுக்கு இப்டியான டிஷஸ் பிடிக்காது. கருண் குட்டிமாமா செஞ்சு குடுத்த பிளாக் சிக்கன் தவிர வேற சாப்டாது. சேரன் எடுவை எடுத்திட்டு இருக்கும். அப்பாவுக்கு செஞ்சு குடுக்கறேன்’ என்றார்.

‘அது என்ன குட்டிமாமா செஞ்ச ப்ளாக் சிக்கன்?? ரஜி எப்போ இப்டிலாம் சமைக்க ஆரம்பிச்சான்??’ என்று ஆச்சரியமானேன்.

’அது நாங்க அங்க போயிருந்தப்போ ரஜி பறவை மீன பொரிச்சுக் குடுத்தான். மீன்னு சொன்னா கருண் சாப்டாரேனுட்டு சிக்கன்னு சொன்னேன்.. அது கருப்பா இருந்ததால அதுக்கு பிளாக் சிக்கன்னு கருண் பேர் வச்சிட்டார்' அப்டின்னா.

நான் கூட மஷ்ரூம் சமைச்சுட்டு பீஃப்னு சொல்லி வெள்ளிக்கிழமைல இவங்களுக்கு குடுத்திட்டு இருந்தேன். மாமியார் இது மஷ்ரூம் ஆனா பீஃப்னு சொல்லி அம்மா தருவாங்கன்னு சொல்லின நாளில இருந்து அவங்க உஷாராயிட்டாங்க. சமைக்க முடியலை. அப்புறம்தான் தெரிஞ்சது மாமியாருக்கு மஷ்ரூம் உவ்வேன்னு. ஆனால் சோயாமீட் மாமியாருக்கு பிடித்தம்ன்றதால இன்றுவரை வெள்ளில மட்டன்னு போயிட்டு இருக்கு.

30 October, 2011

மாயம் செய்தவன்!!

தலைப்பை படித்ததும் தெரிந்திருக்குமே?? தெரிந்தவர்களுக்கும், தெரியாதவர்களுக்கும், தெரிந்தும் தெரியாது என்பவர்களுக்கும் சேர்த்தே சொல்கிறேன். வேலாயுதம் செம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம. ஒரு பரம விஜய் ரசிகையான என்னை ஏமாற்றாத விஜய்க்கு முதலில் நன்றிகளும் வெற்றிக்கு வாழ்த்துகளும். அதே விஜய். அதே செண்டிமெண்ட். அதே சண்டை. அதே காமெடி. அதே அசத்தும் நடனம். ஆனால் புதிய ரசனையைக் கொடுத்து மாயம்தான் செய்திருக்கிறார் விஜய்.

Velayutham-Movie-Poster ஆறு மணி ஷோவுக்கு நாலு மணிக்கு நானும், நாலரைக்கு அம்முவும், ஐந்து மணிக்கு சதுவும் ரெடி ஆகிவிட்டோம். மாம்ஸ் வந்து ‘என்னம்மா இன்னும் ரெடி ஆலையா நீங்க’ன்னு விரட்டி ஒரு வழியாக அவர்கள் ரெடியாகி தியேட்டர் போக ஐந்தே முக்கால். டிக்கட் காசை கையுக்கும், தான் வரவில்லை என்ற தகவலை காதுக்கும் கொடுத்தார். நின்றிருந்த மழைக்கொரு நன்றியை சொல்லிவிட்டு உள்ளே ஓடினால் ’என்னக்கா இவ்ளோ லேட்டா வரிங்க.. முன்னாடி தான் சீட் கிடைக்கப்போது’ என்ற படக்காரத் தம்பியிடம் டிக்கட்டை பிடுங்காத குறையாக வாங்கிக் கொண்டு அம்மு, சதுவை பாப்கார்ன், கேண்டிக்கு அனுப்பிவிட்டு, மாமியாரோடு உள்ளே போனால் முன்னிருந்து மூன்றாவது ரோவில் கரையோர சீட்தான் கிடைத்தது. துண்டை போட்டுவிட்டு மீண்டும் வந்து கடிக்கஸ், நொறுக்ஸ், குடிக்ஸ் எல்லாம் வாங்கியபடி டிக்கட் தம்பியை கடந்தபோது அவர் அருகில் நின்றிருந்த நோர்வேஜியன் சொன்னார் ‘பரவால்லையே உனக்கு நல்ல லாபம்தான் போல.. கடைசி நேரத்தில நிறையப்பேர் வராங்க’ பயபுள்ளை என்னத்தான் வாரிச்சோ என்ற டவுட்டை போக்கியது வெற்றிடமாக இருந்த முன் வரிசை. ‘என்னம்மா இது கரைல உக்காந்து தலை திருப்பி பாக்க கஷ்டமா இருக்குமே’ என்ற அம்முவை சமாதானம் செய்து எல்லோரும் உட்கார்ந்தோம். எங்கள் வரிசையில் நடுவில் இருந்த நால்வர் முன் வரிசைக்கு ஷிஃப்ட்டாக நடு சீட்டுகளுக்கு நாங்கள் ஷிஃப்ட்டினோம்.

’ண்ணா.. நான் சும்மாவே காட்டு காட்டுன்னு காட்டுவேன்.. நீ காட்ட்டு காட்ட்டுன்னு வேற சொல்றே’ என்று இமையை படபடவென்று வெட்டிவிட்டு அப்பாவியாய் சொன்னபோது சிரிப்புச் சத்தம் தியேட்டர் நிறைந்தது. அதையே விறைப்பா/முறைப்பா சொல்லி இருந்தால் இந்த அளவு ரசனை வந்திருக்காது. எப்படியும் செம சாத்து சாத்தப் போகிறார் என்பது  தெரிந்த ஒன்றே என்றாலும் இந்த அப்பாவித்தனம் ரசித்துச் சிரிக்க வைத்த இடம் அது.

velayudhamவிஜயின் காஸ்ட்யூம் கலக்கல். இங்கே வேட்டைக்காரனுக்கு அப்புறம் தியேட்டரில் விசில் கூடாதென்று கட்டுப்பாடு. அப்படியும் கைதட்டலும், விசிலும் கேட்டபடியே இருந்தது. சது அவ்வப்போது ’syk kul film அம்மா’ என்று சொல்லிக் கொண்டிருந்தார். எல்லோரையும் ஊருக்கு அனுப்பிய பின்னர் ‘இப்ப பாருங்க தங்கச்சிய கிட்நாப் பண்ணப் போறாங்க’ என்றார் அம்மு. ட்ரெயின் புழுதி கிளப்பியபடி நின்றபோது யாரோ ஒருவர் ஒன்ன்றிப் போய்ப் பார்த்திருப்பார் போல தூசி தாங்காமல் இருமுவது போலவே இருமினார்.

அம்முவுக்கு ஹன்ஸிகாவை விட ஜெனிலியாவைத்தான் பிடித்ததாம். ஜெனிலியா விஜய் முடிவு கேட்டு அழுதபோது எனக்கும் அழுகாச்சியா இருந்துது. பாடல்கள் கேட்டபோது மாயம் செய்தாயோ எனக்கு ரொம்ம்ம்ம்பவும் பிடித்திருந்தது. பார்த்தபோது விஜய் ஸ்டைலாக இருக்காரேன்னு நான் நினைக்க சது சொன்னார். சில்லாக்சில் விஜய் அவளவு அழகு. முளைச்சு மூணு படமாக்கிய விதம் அழகா இருந்துது. ரத்தத்தின் ரத்தமே ஒரு வகையான அமர்த்தலான இசையமைப்போடு அட்டகாசம். சொன்னாப் புரியாதுவுக்கு எழுந்து ஆட முடியாத வருத்தம் எனக்கு. என்னா டான்சுப்பா. ஆனால் பாடல்களை முழுதாகப் போடவில்லை. ’கேட்டிங்களாம்மா.. மீசைன்னு இந்தப் பாட்லவும் வருது. நான் நினைக்கறேன் எல்லாப் பாட்லவும் வருதுன்னு’ என்று தனது கண்டுபிடிப்பை அம்மு சொன்னார்.

velayudham_UHQ விஜய் கழுத்தில தாயத்து மாதிரி ஒண்ணு போட்டிருக்கார். மாம்ஸுக்கும் அதே போல் ஒன்று வாங்க வேண்டும். கியூட்டா இருந்தது.  சந்தானம் செம. சிரித்து முடியவில்லை. சரண்யா மோகன் தங்கச்சி காரக்டரோட அவ்ளோ பொருந்தி இருக்காங்க. சரியா 8:36 க்கு யாரோ என்னய திட்டி இருக்காங்க. அம்புட்டு புரையேறியது எனக்கு. மாம்ஸிடம் கேட்டு கன்ஃபார்ம் பண்ணிவிட்டேன். அவர் நினைக்கவே இல்லாதபோது திட்ட சான்ஸ் இல்லை. என்னைத் திட்டியது யார்?? நான் மேலே சொன்ன அந்த நோர்வேக்காரன் எங்களுக்கு பக்கத்தில் கேட்டுவிட்டு இருந்தார். கொஞ்சநேரம்தான் அப்புறம் போய்டுவேன் என்றவர் எழுந்து முன் வரிசையில் அமர்ந்து முழுப்படமும் பார்த்தார்.

என்னதான் சொல்லுங்க. விஜய் படத்த தியேட்டர்ல போய் பார்க்கிற அந்த சந்தோஷமே தனிதான். எப்படி நேரம் போனதென்றே தெரியாமல் அத்தனை நேரமும் எல்லோரையும் கட்டிப்போட்டிருந்தது படம் என்பதை விட விஜய் என்று சொல்வதே பொருத்தம். படம் முடிந்து வந்து வண்டியில் ஏறும்போதே ‘விஜய்க்கு வெற்றிப்படம்’ என்றார் மாமி. 

’அது நீங்க சொல்ணுமா உங்க முகம் சந்தோஷமா இருக்கிறது பார்க்கும்போதே தெரியுதே நல்லா என்ஜாய் பண்ணி இருக்கிங்கன்னு’ என்றார் மாம்ஸ்.

சது ‘அப்பா நான் பாத்ததிலயே பெஸ்ட் விஜய் படம் இதுதான்’ என்றதோடு டிவிடிக்கும் ஆர்டரை கொடுத்தார். கூடவே ’எப்போம்மா விஜயோட அடுத்த படம் வரும்’னு டிக்கட்டும் புக் செய்தார்.

மாம்ஸ் ஏழாம் அறிவு இந்தவாரம் பார்க்கப்போகிறாராம். பசங்களுக்கு விருப்பமில்லை. சூர்யாவின் நடிப்புக்காகப் போகலாம் என்றிருக்கிறேன். இல்லையென்றால் அடுத்து நான் தியேட்டரில் பார்க்கப்போகும் தமிழ்ப்படம்?? நண்பேண்டா!!

வர்ட்டா..

velayutjam movie new stills 2

28 October, 2011

என் சிங்கம்!

எல்லாரும் கண் வைக்கிறார்கள் என் கண்ணாளன் மீது. காதில் புகையோடு பெருமையாகவும் உணர முடிகிறது. அக்காச்சியுடன் ஃபேஸ்புக் வழி இணைந்த பழைய நட்புகள் சில ’என்ன உங்க அத்தான் அப்ப பாத்தது போலவே இருக்கார். அவருக்கு வயசே ஆகிறதில்லையா’ என்றார்களாம். அரைக்கிலோ எடை கூடினாலே அரை மணி நேரம் ஜாக்கிங்கை கூட்டிவிடுவார். எப்படித்தான் முடிகிறதோ. ஒரு நாள் மழை காற்றென்று கூட ஜாக்கிங் போவதை நிறுத்தமாட்டார். இவரைப் பார்த்து இப்போது ஒரு கூட்டமே ஜாக்கிங் கிளம்பியுள்ளது.

என் தொப்பை பற்றி சிறிதளவு வருத்தம் அவருக்கு. ’என் கூட ஜாக்கிங் வேண்டாம் அட்லீஸ்ட் வாக்கிங் வாயேன்’ என்பார். ’எதுக்குப்பா.. அதான் எனக்கும் சேர்த்து நீங்க அழகாவும், ஸ்லிம்மாவும் இருக்கிங்களே அது போதும் எனக்கு’ என்பேன். முறைத்தால் ‘என் ஸ்பீடுக்கு உங்களால நடக்க முடியும்னா சொல்லுங்க.. தினமும் வரேன்’ என்பேன். ’ராசாத்தி.. நீ இப்டியே சோஃபால இரு.. நான் போறேன்’னுட்டு போய்விடுவார்.

இப்போதெல்லாம் அவர் மேல் அடிக்கடி எரிஞ்சு விழறேனாம். அவர் சொல்லும் வரை எனக்கே தெரியவில்லை. என் இயல்பான பொறுமை ஓடிப் போய் அவரிடம் சேர்ந்து அவரை பொறுமைசாலி ஆக்கிவிடுகிறது.  நேற்றும் எதுவோ சொன்னபோது சுள்ளென்ற என் கோபம் பார்த்து சிரித்தார். ‘எதுக்கு சிரிக்கறிங்க இப்போ’ என்றேன். இன்னமும் சிரித்து ‘உன் கோவத்தை பாத்தா சிரிப்பா வருது’ என்றதோடு விடாமல் அக்காச்சிக்கு கால் பண்ணி ‘உங்க தங்கச்சிக்கு சொல்லி வைங்க.. என் மேல ரொம்ப கோச்சுக்கறா இப்பலாம்’னு சொல்லி என்னை இருவருமாக வாரிக் கொண்டிருந்தார்கள்.

மாமியார் மேல அவருக்கு இருக்கும் பாசம். எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து இன்றுவரை கூடிக் கொண்டே போகிறது. இப்படி ஒரு பிள்ளை கிடைக்க கண்டிப்பாக மாமி புண்ணியம் செய்துதான் இருக்கிறார்கள்.

‘அம்மா.. நோர்பேர்ட் அண்ணா கண் முழிச்சிட்டார்’

‘ஓ.. கடவுளே காப்பாத்திட்டே.. சிரிச்சாரா??’

‘ஏம்மா.. நான் என்ன ஃபோட்டோவா எடுக்கப் போனேன்.. சிரிச்சாரான்றிங்க??’

இடையில் புகுந்த நான் ‘இல்லைப்பா மாமி அவர் உங்களை அடையாளம் தெரிஞ்சு சிரிச்சாரானு கேக்கறாங்கப்பா’

‘ஆமா.. நீதானே அவங்க பக்கப்பாட்டு.. எங்கடா இன்னமும் ஒண்ணும் சொல்லையேனு பார்த்தேன்’

என்பதாய் அவர்கள் இருவர் மொக்கையில் நானும் பல்ப் வாங்கி வீடு எப்போதும் பிரகாசமாய் இருக்கிறது. இருவரும் பேசுவதை கேட்டுச் சிரிப்பதிலேயே என் பொழுது போய்விடும். நண்பர்களுக்கும் இவர்களின் இந்த வாரல் பேச்சு மிகவும் பிடிக்கும்.

இவருடைய பழைய பாஸ் ஒரு தமிழர். தினமும் அவரைப் பார்த்து மொக்கை போடுவது இவரது மிகப்பெரிய பொழுதுபோக்கு. இவர் முன்னே யாரோ ஒரு நோர்வேஜியனுக்கு ஊரில் அவர் ஆடாத வேட்டை பற்றி வெடித்துக்கொண்டு இருந்தாராம். எல்லாம் கேட்டுவிட்டு கடைசியில் இவர் சொன்னாராம். ‘நான் இவர் சொல்றது போல வேட்டைக்கு போறதில்லை.. ஏன் தெரியுமா? சிங்கம் புலில்லாம் கைல துப்பாக்கியோடையா வருது? அதேபோல வெறுங்கையோட போய் என் வீரத்தால வேட்டையாடுறதுதான் என் வழக்கம்’ என்றதை அந்த அப்பாவி நம்பிக்கொண்டு போயிருக்கிறார்.

ஒரு பார்ட்டிக்கு போய்விட்டு இன்னொன்றுக்கு போய்க்கொண்டிருந்தோம். ஒரு நாளும் அந்த ஹால் இருந்த் இடத்துக்குப் போனதில்லை என்பதால் நண்பர் ஒருவரின் பின்னே போய்க்கொண்டிருந்தோம். அவர்களும் எங்களைப்போல் இரண்டு வண்டி வாங்கி இருக்கிறார்கள்.

‘புவனா பெரிய வண்டி ஓட்டி நான் பாத்ததில்லை’

‘ஆமா.. அவங்க வேலைக்கு கூட சின்னதிலதான் போவாங்களாம்னு ரமணன் சொன்னான்’

‘ஏன்பா.. அவங்க தான் ரொம்ப தைரியமானவங்களாச்சே.. நானே பெரிய வண்டி ஓட்டறேன்.. அவங்களுக்கு என்ன?’

‘அடியேய்.. நீ பூனையா இருந்தாலும் சிங்கத்துக்கு வாழ்க்கைப்பட்டு பெண்சிங்கம் ஆயிட்ட.. அங்க அப்டி இல்லையே’

நான் சிரித்ததில் தூங்கிக் கொண்டிருந்த அம்மு எழுந்து சிணுங்கத் தொடங்கிவிட்டார்.

என்ன உங்க புருஷனுக்கு ரெண்டாவது பொண்டாட்டி வந்துட்டாங்களாமே என்று நண்பர்கள் கேலி செய்யும் அளவுக்கு அவரின் புது மொபைலோடு பொழுதைப் போக்குகிறார். ’இது வரை உனக்கு இத மாதிரி செமயா ஒரு காலர் ஐடி கிடைச்சதில்ல. கால் பண்ணி கேட்டுப்பாரு’ன்னார். அது warning it’s ur wife என்று அடித் தொண்டையில் அலறுது.

அப்பா மேல் அம்முவுக்கும் சதுவுக்கும் பயமும் இருக்கிறது. நான் என்னதான் கத்தினாலும்.. ம்ஹூம்.. ஆனால் அவர் கூப்பிடும் தொனி வைத்தே கோவத்தைப் புரிந்து கொள்வார்கள். அப்பாவிடம் பாசத்தோடு பயமும் இருப்பது நல்லதே. ஆனால் அதை பயம் என்று வரையறுக்க முடியாது. முடிவு அப்பாவுடையதென்பது போல, அப்பாவே எல்லாம் என்பது போல ஒரு வகையான.. எப்படிச் சொல்வதென்று தெரியவில்லை. உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள். அப்பாவை எப்படி உருக வைத்து காரியம் சாதிக்கலாம் என்று அவர்களுக்குத் தெரியும். சுருக்கமாகச் சொன்னால் அப்பா அவர்களுக்கு ஒரு தோழன்.

415 சம்மருக்கு சுவிஸ் போயிருந்த போது ’என்ன மச்சாள் அண்ணா கைல நீங்க வெள்ளில தாலி கட்டி விட்டிருக்கிங்களா’ன்னு நிலா கேட்டாள். இது அவர் கையில் எப்போதும் இருக்கும் செயின். இங்கே வந்த புதிதில் வாங்கினாராம். எப்போதும் கழுத்தில் ஒரு தங்கச் சங்கிலி போட்டிருப்பார்.

இன்னும் சரியாக ஒரு மணி நேரத்தின் பின் தூங்கிக் கொண்டிருப்பவரை எழுப்பி முதன்முதலாய் என் முகத்தில் முழிக்க வைத்து வாழ்த்துச் சொல்லி மிரட்டி அவருக்கான புது நாளைத் தொடங்க வைக்கப் போகிறேன். இம்முறை அவருக்கு அம்மாவின் ஆசீர்வாதமும் ஸ்பெஷலாக கிடைப்பது மனநிறைவாக இருக்கிறது.

லவ்யூப்பா.. பிள்ளையார் எனக்கு எல்லாமும் ஆன உங்கள் வழி எங்களைக் காத்துக்கொள்ளட்டும். என்றும் நீங்கள் இனிதே வாழ எல்லா வளமும் நலனும் துணை வரட்டும்.

26 October, 2011

காஃபி வித் அம்மு.

முன்னை விட ரொம்பவே மாறிவிட்டார் அம்மு. முதல் மாற்றம் ஷாப்பிங். முன்பென்றால் என் கையைப் பிடித்து இழுத்து, காலைக் கட்டி கடைக்கு உள்ளே போக விடமாட்டார். ஆனால் ஒரு போதும் அழுது அளிச்சாட்டியம் பண்ணியதில்லை. முடிந்த வரை தடுக்க முயற்சி செய்வார். அதனாலேயே நான் ஷாப்பிங் தனியாகப் போவதுண்டு. இப்போது எப்போது கடைக்குப் போவதென்றாலும் உடனேயே வருகிறார். உடையைப் பொறுத்தவரை முன்பு அவருக்கு வேண்டியதை நானே வாங்கி வரவேண்டும். ’எப்டிம்மா எனக்குப் பிடிச்சதை வாங்கினிங்க’ என்பதோடு சரி. இப்போது நான் ட்ரையல் ரூம் ஸ்டூலில் உக்கார்ந்திருக்க வேண்டியதுதான். அலுக்காமல் இதை போடவா, அது பொருந்துமா, எது நல்லாருக்கும் என்று தனக்கு வேண்டியதைத் தானே போட்டுப் பார்த்துத் தேர்வு செய்கிறார். என் கை கோர்த்து, தனக்குத் தெரிந்த ஃபாஷன் டிப்ஸை அள்ளி வீசியபடி அல்லது எதுவோ பேசியபடி கூட வரும் குட்டிப் பெண்ணோடு ஷாப்பிங் போவதென்பது எனக்கும் பிடித்த மிகவும் புதிய அனுபவமே.

104 ஐஸ்க்ரீம், hot dog, burger, hot chocolate இப்படி எதுவோ ஒன்றால் ஷாப்பிங்குக்கு சுபம் போடப்படும். நான் இருக்கும் மூடைப் பொறுத்து எனக்கு காஃபி ஆர்டர் செய்வேன். ’இன்னைக்கு நானும் காஃபி குடிக்கட்டுமா’ என்று கேட்டவர் தனியாக வேண்டாம் உங்களதில் டேஸ்ட் பார்த்துவிட்டு ஆர்டர் செய்கிறேன் என்றார். கூடவே ஒரு கேக்கும் வாங்கிக்கொண்டு உட்கார்ந்தோம். டேஸ்ட் பிடித்திருந்தாலும் அவ்ளோ பெரிய கிளாஸ் தனியாக குடிக்க முடியாதென்று சொன்னதால் இருவரும் ஷேர் செய்து கொண்டோம். இங்கு வந்ததுக்கு என் குட்டித்தோழியோடு தான் முதல் முதல் காஃபி குடித்திருக்கிறேன்.

போன வாரம் பள்ளியில் ஃபோட்டோ எடுத்தார்களாம். பாவம் என் செல்லத்துக்கு நல்லதாக ஒரு ட்ரஸ் கூட இல்லையாம். சரி என்று என் டீஷர்ட்டில் ஒன்றை குடுத்துவிட்டு இனிமேல உங்களுக்குத்தான் என்றேன். ஓடி வந்து கட்டிக்கொண்டார். இந்த சம்மரில் இருந்தே நான் போடாத என் டீஷர்ட்ஸ் சலவைக்கு வந்தது. கேட்டபோது பிடிச்சிருந்ததாம் எடுத்துப் போட்டுக்கொண்டாராம். என்னுடைய accessoriesக்கும் இதே கதிதான். ஆனால் அதிகமானவை ஏதோ ஒரு காரணத்தோடு உடைந்தே திரும்பி வருகின்றன. எங்காவது கிளம்பும்போது என் காலணிகளில் எதைப் போடலாம் என்று நான் நினைத்திருப்பேனோ எனக்கு முன்னே அது அம்மு கால்களில்.

எனக்கு கோவம் வரும்படியாக ஏதாவது சொல்கிறார்/செய்கிறார். அடுத்த நொடி ‘என் மேல கோவமா.. ஸாரிம்மா’ என்று ஓடி வந்து கட்டிக்கொண்டு உம்மா கொடுக்கிறார். முன்பை விட பொறுமை, புரிந்துணர்வு, விட்டுக் கொடுத்தல் போன்றவை கூடி இருந்தாலும் அவர் ரூமை ஒதுங்க வைப்பது மட்டும் இன்னமும் வரக் காணோம். சின்னச் சின்ன சமையல் கூட செய்து அசத்துகிறார். ’அச்சாக் குட்டியடி நீ’ என்று பொறுப்புணர்வைப் பாராட்டி சர்ட்டிஃபிக்கேட் கொடுத்த சில மணி நேரத்திலேயே ‘என்ன பிள்ளையம்மா நீங்கள்.. அம்மா இவளவு சத்தமா கத்துறன்.. கேக்காம இருக்குறிங்கள்’ என்றும் சொல்ல வைக்க அவரால் மட்டுமே முடிகிறது. இது சில சமயம் மாறியும் நடக்கிறது.

111 எங்கள் காரில் உறைந்திருந்த பனியில் அவர் எழுதியது இது. தமிழ் கற்பதில் நிறைய முன்னேற்றம். தானாகவே வீட்டுவேலை செய்துவிடுவார்.  புரியாதவற்றுக்கு மட்டுமே என்னிடம் உதவி கேட்பார். மீதி எல்லாம் தனக்குத் தெரிந்த வரையில் சமத்தாகச் செய்துவிடுவார். நாளை எல்லோர் வாழ்த்துகளையும் படித்துப் பார்க்க ஆவலாக இருக்கிறாராம் என்றும் எழுதச் சொன்னார்.

அவ்வப்போது எங்களை நிறுத்தி வைத்து உயரம் அளந்து பார்க்கிறார். இதில் அதிகம் மாட்டிக்கொள்வது நான் தான். அடுத்தபடியாக சதுவின் கன்னம். அது என்னவோ என்/சதுவின் கன்னத்தை கிள்ளி/வருடிப் பார்ப்பதில் இன்னமும் அலாதி இன்பம் என் தங்கத்துக்கு. இம் முறை நண்பர்களோடு பார்ட்டி வேண்டாமாம். யாருமே அவர் வகுப்பில் இந்த வருஷம் பார்ட்டி வைக்கவில்லையாம். அதனால் தனக்கும் தேவை இல்லை என்றார். இப்பொழுது குட்நைட் ஹக் கொடுக்க வந்தவர் ‘நீங்க எப்டித்தான் எழுப்பினாலும் சில சமயம் எந்திரிக்க மாட்டேன். அதனால எல்லாம் விட்டிட கூடாது. எப்டியாவது எழுப்பி கரெக்ட்டா பனெண்டு மணிக்கு விஷ் பண்ணணும்’ என்று சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்.

என் அம்மு இன்று போல் என்றும் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ என் அப்பன் துணை இருக்கட்டும்.

ஹாப்பி பர்த்டே லச்சு. லவ் யூ அம்மாச்சி.

29 September, 2011

சது இல்லைனா சத்.

‘அம்மா மங்கா தா படமா பார்க்கறிங்க??’

என்ற சது என் சிரிப்பில் வழக்கம் போல் மிரண்டு போனார்.

‘ஓம்.. எப்பிடித் தெரியும் உங்களுக்கு??’ என்றேன்.

‘அப்பம்மா கூட தூங்கறப்போ டிவில மங்கா தா 50ன்னு  வந்திச்சு’ என்றார்.

அவர் Mankatha வை அப்படி படித்திருக்கிறார். இன்னும் கொஞ்சம் வளர்ந்திருந்தால் மாங்கா தா என்று படித்திருப்பாரோ??

தமிழ் சொல்லிக்கொடுத்துக் கொண்டிருந்தேன். கண்ணன் வந்தது என்றார். திணை என்று மிரட்டாமல் இலகுவாகப் புரியவைத்தேன். புரிந்ததை சரி பார்க்க சில உதாரணங்கள் கேட்டேன். இந்த உதாரணம் கேட்டல் சரி பார்த்தல் என்பது சமயங்களில் பல சிக்கல்களில்/சிரிப்புகளில் விட்டுவிடும் என்பது நீங்களும் அறிந்ததே. திருடன் என்றதும் வந்தது என்றார். ஏனென்று கேட்காமலே அவங்க தான் கெட்டவங்க ஆச்சே அவங்களுக்கு எதுக்கு மரியாதை. அதுவே போதும் என்றார். பிள்ளைக்குப் புரிவது திருடனுக்குப் புரிந்தால் எவளவு நன்றாக இருக்கும்.

ஒழுங்காக விளையாடிக்கொண்டு இருந்தார்கள். என் கண்ணே பட்டுவிட்டது போல. அம்மு திடீரென்று பஞ்சாயத்துக்கு கூப்பிட்டார். இருங்கம்மா நான் சொல்றேன் என்று சதுவே ஆரம்பித்தார். அதாகப்பட்டது ஞாயிறன்று டிவி பார்க்கும்போது கொறிக்க வாங்கலாம் என்று அவர் சொன்ன சிப்ஸ் ப(b)ஷ் (அதாங்க.. ஆய்) டேஸ்ட்டா இருக்கும் வேற வாங்கலாம்னு அம்மு சொன்னாங்களாம். அப்டினா அக்காச்சி பஷ் சாப்டிருக்காங்களா?? அப்டி இல்லைனா அவங்களுக்கு எப்டி அந்த டேஸ்ட் தெரிய வந்தது?? இதுக்கு என்ன தீர்ப்பு சொல்ல முடியும்??

அம்முக்கு ஸ்கூல் லேட்டாக முடியும் நாட்களில் வழக்கமாக தனியே வருவேன் அதான் வளந்துட்டோம்ல என்பவர் அன்று முடியாது என்றதால் அவரை ஆஃபீஸில் விட்டுப் போனார் மாம்ஸ். நான் வாங்கி வைத்திருந்த சான்விச், ஜோடா, கேண்டி என நொருக்கியவர் வீடு வரும் வழியில் அதிகம் பேசாது வந்தார். உண்ட களையோ என நானும் கையை வருடிவிட்டபடி பேசாமலே வண்டியை ஓட்டினேன்.

‘அம்மா.. உங்களுக்கு சிறீலங்கா போணும்னு ஆசை இல்லையாம்மா??’

திடீரென்று கேட்டதும் மலைத்து சுதாரித்து ‘ம்ம்.. இருக்குப்பா.. ஏன் கேக்கறிங்க’ என்றேன்.

‘இல்லை எனக்கென்னவோ உங்களுக்கு அங்க போய் எல்லாரையும் பாக்கணும்னு ஆசையா இருக்குமோன்னு தோணிச்சு.. அதான் கேட்டேன்’ என்றார். ஆசை இல்லை பேராஆஆஆசையே இருப்பதைச் சொன்னேன்.

‘அங்க சண்டை இல்லைனா இங்க நீங்க வந்திருக்கமாட்டிங்க இல்லை. நானும் அங்கவே பிறந்திருப்பேன். நான் அங்க பிறந்திருந்தா நீங்க என்ன தமிழ் பேசு, தமிழ் படின்னு சொல்லி இருக்கமாட்டிங்க இல்லை’ என்றார்.

வெயிட்ட்ட்ட்ட்.. நீங்கள் நினைத்ததையே நானும் நினைத்தேன். ஆனால் அவர் தொடர்ந்து சொன்னதை கேளுங்கள்.

‘அதுக்கு பதிலா இங்லிஷ் படி, இங்லிஷ் பேசுன்னு சொல்லி இருப்பிங்க’ என்றார். நான் வேறென்ன சொல்வேன்??அவ்வ்வ்வ் தான்.

முன்போல் ஹக், கிஸ் கேட்டதுமே/கேக்காமலே எல்லாம் இப்போது கிடைப்பதில்லை. தூங்கச் செல்லும்முன் குட்நைட் ஹக் வேணும்னா கீழ வாங்க என்கிறார். இல்லையென்றால் இதோ இப்போது போல குளிச்சிட்டு அப்படியே கீழ தூங்கிடுவேன். மறுபடி மேல வரமாட்டேன் அதான் இப்பவே ஹக் என்று கொடுக்கிறார். சரி அவர் போக்கிலேயே விட்டுவிடலாம் என்றால் கள்ளச்சிரிப்போடு உங்களுக்கு இப்போ என்னவோ வேணும் போல இருக்கே என்று இறுக்கி அணைத்து பெற்ற மனதை இன்னமும் பித்தாக்குகிறார்.

இதை சொல்ல மறந்துவிட்டேன். எப்போதும் இருவர் பெயரையும் முழுதாகவே நானும் மாம்சும் கூப்பிடுவோம். காரணம் அப்போதுதான் பெயரின் பலன் கிடைக்கும் என்பதாயும் இருக்கலாம். அவரை சது என்றோ இல்லை சத் என்றோ கூப்பிட வேண்டுமாம். அவருக்கு அதுதான் பிடிக்குமாம். எனக்கென்னவோ தம்பி, கண்ணா, ஐயா, ஐயாச்சி, ராசா, கண்டுக்குட்டி, செல்லக்குட்டி என்றுதான் வருகிறதே தவிர அந்த சது அல்லது சத் வரவே மாட்டேன் என்கிறது. பார்ப்போம்.

 121 126

002

இந்தப் பிறந்தநாளை ஸ்விம்மிங் பூலில் ஃப்ரெண்டன்களோடு கொண்டாடப் போகிறார். அவரே வந்து தனக்குப் பிடித்த கேண்டீஸ் வாங்கி, தானே பேக் செய்தும் வைத்திருக்கிறார். இதுவரை இது என் வேலையாக இருந்தது. அவர் கேட்ட brownies செய்தாயிற்று. வீட்டில் பார்ட்டி ஒழுங்கு செய்த பின் எல்லாரையும் அழைக்கிறேன்.

என் கண்ணன் என்றும் நலமாய் வாழ என் அப்பன் துணை இருக்கட்டும்.

ஹாப்பி பர்த்டே சத். லவ் யூ கண்ணா.

22 September, 2011

வாழ்க வளமுடன்!!

இப்படி ஒரு ஆத்மார்த்தமான விஜய் ரசிகரை நான் இதுவரை பார்த்ததில்லை. எனக்கு கார்க்கி என்றதுமே நினைவுக்கு வரும் இரண்டாவது விஷயம் விஜய் என்பதாய்த்தான் இருக்கும். விஜய் பற்றிய அத்தனை தகவல்களும் அப்படியே தெரிந்து வைத்திருக்கிறார். சமயத்தில் விஜயை விட்டுக்கொடுக்காமல் பேசுவது போல் தோன்றினாலும் அவரின் தவறுகள், குறைகளை சொல்லிக்காட்டுவதிலும் கலாய்ப்பதிலும் எப்போதும் முன் நிற்பார். விஜய் பற்றிய ஒரு தொடரை அழகிய தமிழ்மகன் விஜய் என்ற தலைப்பில் 600024.com என்ற என்ற இணையத்தளத்தில் எழுதி வந்தார். புதியதான தகவல்களோடு புதிய படங்களையும் சேர்த்து மிகவும் நன்றாக வந்திருந்தது அந்தத் தொடர்.


காவலனில் ஸ்டெப் ஸ்டெப் பாடல் வந்த பொழுது அதன் காட்சியமைப்பு இப்படியாக இருக்கும் என்று எனக்குள் ஒரு கற்பனை வரும் அளவுக்கு அந்தத் தொடரின் முதல் பாகத்தையே கலக்கலாக எழுதி இருப்பார். படிக்காதவர்கள் படித்துப் பாருங்கள்.


"சென்னையின் முக்கிய ஏரியாவில் இருக்கிறது அந்தக் கல்லூரி. படிப்பிற்கும் சரி.. மற்ற எக்ஸ்ட்ரா கரிக்குலருக்கும் சரி. பெயர் போன கல்லூரி அது. தமிழ் சினிமாவுக்கு அதிக நன்கொடைகள் வழங்கிய கல்லூரிகளில் முக்கியமானதும் கூட. ஒரு மழைக்கால மாலை வேளையில், பரந்து விரிந்த அந்தக் கல்லூரியின் வளாகத்தில் இருந்து வெளியே வந்தது மொத்தம் நான்கு பேர் கொண்ட குழு. அதில் ஒருவன் மட்டும் பார்க்க படு ஸ்மார்ட். சிறிய கண்கள். முறையாய் வாரப்பட்ட தலை. எளிமையான டிஷர்ட். அதற்கேற்ற ஜீன்ஸ். பார்ப்பதற்கு நம்ம ராஜாவா இவன் என்ற சந்தேகத்தை எல்லோருக்கும் எழுப்பும் உருவம் என்றாலும் ஏதோ ஒரு காந்த சக்தி இருந்தது அவனிடம். குறிப்பாய் அவனது கண்களில
நால்வரும் ஐஐடியில் நடக்கும் மகா மெகா கலை நிகழ்ச்சிக்கு சென்றுக் கொண்டிருந்தார்கள். ஸ்மார்ட் பாய் தான் குழுத்தலைவன். அப்போது மரண ஹிட்டான ராக்கம்மா கையைத் தட்டு பாட்டிற்கும், மைக்கேல் ஜேக்ஸனின் பீட் இட் பாட்டிற்கும் ஒத்திகை எல்லாம் கனகச்சிதமாக முடித்திருந்தார்கள். முதல் பாதியில் சூப்பர்ஸ்டாரின் ஸ்டைலில் பட்டன் திறந்த சட்டையுடனும், எம்.ஜே பாடலுக்கு கருப்பு நிற மெட்டாலிக் உடையுடனும் ஆட திட்டம். மேடையேறும்போது ஒழுங்காய் இருந்த சட்டையை, இசைத்தொடங்கும் போது ஒவ்வொரு பட்டனாக கழட்டி, ரஜினி ஸ்டைலில் ஒரு முடிச்சு போட, அரங்கம் ஆர்ப்பரிக்க தொடங்கியது. 60 வயலின்களும் டன்..டன்ன்ன்டன்ன்ன் என்று தொடங்கிய நேரம் ஸ்மார்ட் பாய் ஆட ஆரம்பித்தான். உடன் இருந்தவர்கள் ஒவ்வொருவராக தொடர கைத்தட்டல் சத்தம் உச்சம் தொட்டது.
ரஜினி மாதிரி ஆடுறாண்டி.. செம ஸ்மார்ட் இல்லை. கண்ணை பாறேன்.. என ஸ்டெல்லா மேரிஸ்களும் எத்திராஜ்களும் கிசிகிசுக்க ஆர்ப்பாட்டமாய் ஆடிக்கொண்டிருந்தான். திடிரென அரங்கெமெங்கும் இருள் கவ்வ, ஒய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் என்ற சத்ததின் நடுவே விளக்குகள் மின்னின. மேடையில் ரஜினி போய் மைக்கேல் ஜேக்சன் வந்திருந்தார். உடன் வேறு யாரும் இல்லை. ஸ்மார்ட் பாய் மட்டும். பீட் இட் பாட்டின் பீட் ஒலிக்க ஆரம்பித்தது. ஸ்மார்ட் பாயின் ஒவ்வொரு ஸ்டெப்புக்கும் அரங்கம் அதிர்ந்துக் கொண்டேயிருந்தது.
நிகழ்ச்சி முடிந்து பரிசுகள் அறிவிப்பின் போது பிரச்சினை வெடித்தது. வெத்தல் போட்ட சோக்குல என்று ஆடித்தீர்த்த ஒரு குழு தங்களுக்குத்தான் முதல் பரிசு கிடைக்க வேண்டுமென்ற சண்டையில் இருந்தனர். அரங்கம் முழுவதும் ஸ்மார்ட் பாயின் பெயரை சொல்லி கோரஸாக கத்த ஆரம்பித்தது. வெறுப்பின் உச்சிக்கு போனவர்கள் ஸ்மார்ட் பாயிடமே யார் ஆட்டம் என்று கேட்டனர். உங்க ஆட்டம்தான் சூப்பர் என்றான். முதல் பரிசு அவர்களுக்கு சென்று விட, இரண்டாம் பரிசு வாங்க மேடைக்கு வந்தவன் சொன்னான் “நான் ஸ்டேஜுல மட்டும்தான் ஆடினேன். அவங்க இறங்கியதக்கப்புறமும் ஆடுறாங்க.அதனால் அவங்களுக்குத்தான் முதல் பரிசு போகணும்”. மொத்த ஸ்டேடியமும் எழுந்தி நின்று கைத்தட்ட ஒரே நாளில் சூப்பர் ஹீரோவாக ஆனவன் சிரித்துக் கொண்டே சென்றான்.அந்தக் கல்லூரி லயோலா. அந்த ஸ்மார்ட் பாய் இளைய தளபதி.
நியாயப்படி விஜய் பற்றிய தொடர் அவரது ஸ்டைலில் இப்படித் தொடங்கியிருக்க வேண்டும். ஆனால் உண்மையில் விஜயின் சினிமாவுக்கு முந்தையை வாழ்க்கை அப்படி இருக்க வில்லை. வகுப்பில் கடைசி பென்ச், மற்ற விஷயங்களில் எதுக்குடா அதெல்லாம் நமக்கு என்ற எண்ணம். படிப்பில் சுமார், பார்க்க ரொம்ப சுமார் என்றே இருந்தார். கலைந்த தலை, ஒல்லியான தேகம், ஜிகினா சட்டை என ரோமியோக்களின் எந்த சாயலும் இல்லாமல் இருந்தார் நம்ம இளைய தளபதி. படிப்பிலும் நாட்டமில்லாமல், சினிமாவுக்கென எந்த தகுதியுமில்லாமல் இருந்த விஜய் எப்படி தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமானார்? பார்க்கவும் சுமார், நடித்த அனுபவமும் இல்லை என்ற நிலையில் இருந்து விநியோகஸ்தர்களின் செல்லப்பிள்ளை என்றழைக்கும் படி எப்படி வளர்ந்தார்? விஜயின் சினிமா பயணத்தை முடிந்தவரை விரிவாக அலசப்போகிறது இந்த தொடர்."


எனக்கு தியேட்டரில் போய் அந்த பாடல் காட்சி பார்த்ததும் சிறிது ஏமாற்றம் வந்தது பற்றி முன்னாடியே சொல்லி இருக்கிறேன். என்னதான் கதைக்காக அப்படியாகக் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தாலும் இன்னும் கொஞ்சம் சிறப்பாக அமைந்திருக்கலாம் என்பது விஜய் ரசிகையாக என் விருப்பம்.


இப்போதெல்லாம் கார்க்கி அதிகம் எழுதுவதில்லை என்ற குறை அதிகம் இருக்கிறது. ஆனாலும் அதற்கும் சேர்த்து வைத்து நடிப்போடு குறும்படத் தயாரிப்பிலும் கால் வைத்திருக்கிறார். இன்னும் பல வெற்றிகளோடு வாழ்க்கையில் மேலும் மேலும் முன்னேற என் பிள்ளையாரை மனதார வேண்டிக் கொள்கிறேன். அவரின் பிஸி ஷெட்யூலில் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கென்று ஒரு முழு நாள் லீவ் எடுத்து கலக்கிக் கொண்டிருக்கிறார். எல்லோருக்கும் ஒரு நாள் என்றால் இவருக்கு மட்டும் 23, 24 என இரண்டு பிறந்தநாள்கள். அதனால் ட்ரீட் வேணும் என்பவர்கள் உடனடியாக சாளரத்தைத் தட்டுங்கள். 


இன்று போல் என்றும் உங்கள் மனதில் சந்தோசம் மலர்ந்து நிறையட்டும்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் கார்க்கி.

இணைய தளபதிக்கு ஸ்பெஷலாக இளைய தளபதியின் பாடல் பரிசு.

08 September, 2011

என் அடாவடித் தோழிக்கு!

தலைப்பை படிச்சியா. இப்டித்தான் உன்னை சொல்லத் தோணுது விஜி. நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்து தோழிகள்ல என் உயிர் நட்பு தவிர வேற யாரையும் நான் ஒருமையில சொன்னதில்ல. அவளுக்கு அடுத்து நீ தான்.

பதிவுலகம் வந்த புதிதில எப்பவோ உன்னோட ஒரு போஸ்ட் படிச்சேன். அது என்னன்னே மறந்திட்டேன். ஆனா உன்னோட ப்ரஃபைல்ல இருந்த மயில் மட்டும் நினைவிருந்தது. அப்புறம் வேற பதிவுகள்ல உன் கமண்ட்ஸ் பார்த்தேன். மறுபடி எப்போ உன் பதிவு தொடர்ந்து படிக்க ஆரம்பிச்சேன்னு நினைவில்ல. திடீர்னு ஒரு நாள் உன் மெயில் ஐடி குடுத்தே. முதல் நாள் சாட் இப்போ நினைச்சாலும் சிரிப்பு வருது. நான் இங்க எப்டி முழிச்சிட்டு (மிரண்டுட்டுன்னும் சொல்லலாம்) இருக்கேன்னு தெரியாம நீ பாட்டுக்கு நீ, வா, போன்னு பேசிட்டு (டைப்பிட்டு) இருந்தே. ரெண்டு மூணு தடவை மரியாதைப் பன்மையா வழக்கம் போல பேசினேன். அப்புறம் என்னை அறியாமலே நானும் நீ, வான்னு சொல்ல ஆரம்பிச்சிட்டேன்.

இத்தனை நாள்ல எவ்ளோ நேரம் சாட்/மெயில் பண்ணி இருப்போம். ஆனாலும் பல வருஷம் நட்பா இருந்த ஒரு உணர்வு தானா வந்திடிச்சு. எல்லாரோடும் பேசினாலும் ஒரு சிலர்ட்ட தான் இந்த உணர்வு வரும். உன்னட்ட பேசின உடனவே உன்னோட கலகலப்பும், குறும்பும் அப்படியே சந்தோஷமா மாறி மனசை நிறைக்கும். எப்பவாச்சும் நீ கொடுக்கிற அட்வைஸ்/டிப்ஸ் கூட சமயத்தில உதவியா இருக்கும்.

பதிவுலகம் (யாருக்கும்) நிரந்தரம் இல்லை. காலம் எப்படி மாறும்னு சொல்ல முடியாது. ஆனாலும் அதுக்கு அப்புறமும் உன் நட்பு தொடரணும்பா. உன் வீடு வந்து, உன் கலாய்த்தல்ல திணறி, பப்புவோட பல்பில பிரகாசமாகி, வர்ஷாவோட டான்ஸ்ல நிறைவாகி, ராம் என்ற புண்ணியாத்மாவை தரிசிச்சு.. உஸ்ஸ்ஸ்(இது நீ சொல்லிக்கோ).. நல்ல நாளதுவுமா உன்னை அதிகம் பயமுறுத்தல. ஆனா உனக்கு என் தொல்லை தொடரும் தாயீன்னு சொல்லி முடிச்சுக்கறேன்.

நல்ல்ல்லா என்ஜாய் மாடி. நிறைய்ய்ய்ய ஐஸ்க்ரீம் முழுங்கு. என்னிக்கும் இதே சந்தோஷத்தோட இரு. கிஃப்ட்ல எதுனா மாந்தளிர் நிறத்தில  கிடைச்சா பாத்திட்டு பத்ரமா எனக்கு பார்சல் பண்ணிடு.

பிள்ளையாரப்பா.. விஜிய மட்டும் காப்பாத்து.. அவ எங்க எல்லாரையும் காப்பாத்துவா!!

ஹாப்பி பர்த்டே டியர் :)

28 August, 2011

என்னம்மோ நடக்கு!!

’அது வேற ஒண்டும் இல்லை அப்பா. இப்ப என்னில யாருக்காச்சும் கோவம்னு வைங்க. இந்த சந்தர்ப்பத்த வச்சு உடனவே நைட் எங்க வீட்டுக்கு கிறீஸ் மனிதன் வருவான். அதுக்குன்னு கிறீஸ் மனிதன் இல்லேன்னு இல்லை. ஆனா நிஜமான கிறீஸ் மனிதர்களை விட போலிகள் ஜாஸ்தி ஆய்டிச்சு. பகல்ல கொல்லைல மூ*** கூட்டுக்கு போனாக்கூட அங்க கிறீஸ் மனிதன் நின்னா நம்ம ஊரு பொண்ணுங்க என்னதான் பண்ணுவாங்க. இந்த சந்தர்ப்பத்தை சாக்கா வச்சு அங்கங்க இப்டி தனியா இருக்கிறவங்களுக்கு தொல்லை பண்ணிட்டு இருக்காங்க. ஆனா நிஜ கிறீஸ் மனுசங்க எப்ப வருவாங்கன்னு யாருக்கும் தெரியல’

இது அப்பாவுக்கு ரஜி சொல்லியது. வெறுப்போடு இருக்கிறான். இப்போதுதான் திருடர் தொல்லை கொஞ்சம் ஓய்ந்துகொண்டு போகிறதென்றால் இது புதுத் தொல்லை. அண்ணாவின் வீடு நெருக்கமான இடத்தில் இருப்பதால் கத்தினால் உதவிக்கு யாராவது வருவார்கள். ரஜிக்கு அப்படி அல்ல. இருள ஆரம்பித்ததுமே அண்ணி அவனை எங்கும் போகவிடுவதில்லையாம்.

யாரைப் பற்றி சொல்கிறேன் என்று தெரியாதவர்களுக்காக எனக்குத் தெரிந்ததைச் சொல்கிறேன். இலங்கையில் தமிழர்/முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் கறுப்பு உடையோடு, உடலில் கிறீஸ் பூசியபடி மர்ம மனிதர்கள் அட்டகாசம் செய்கிறார்களாம். தனியாக இருக்கும் பெண்கள்தான் அவர்கள் குறி. ஆனால் எங்கேயும் திருட்டு நடைபெறவில்லை. முதலில் இரவில் ஆரம்பித்த தொல்லை இப்போது பகலிலும் நடக்கிறது. பிடிக்கப்போனால் இராணுவ முகாமுக்குள் தப்பி ஓடுகிறார்களாம். பொதுமக்களால் பிடித்துக் கொடுக்கப்பட்டவர்களும் விடுதலை செய்யப்பட்டோ அல்லது பொலிஸ் பாதுகாப்போடோ இருக்கிறார்களாம். இதனால் பொலிஸ்/இராணுவத்துக்கும் பொதுமக்களுக்குமிடையே பல முரண்பாடுகள் வந்து அடிதடியாகவும் போயிருக்கிறது. ஆனால் வெல்வது யார்?? உங்களுக்கே தெரியும்.

நேற்று ஸ்கைப்பில் பேசியபோது இளைய மச்சினர் வைஃப் கி.ம வுக்கு ஆணென்று காட்டிக்கொள்ளவென்று இரவில் சறமும் ஷர்ட்டும் போட்டுக்கொண்டு தூங்குவதாக மச்சினர் கிண்டல் பண்ணினாலும் எல்லோரும் இருட்ட ஆரம்பித்ததும் பயத்தோடுதான் இருக்கிறார்கள். மாமி தென்னந்தோப்பில் தனியாக பெரும் பொழுதைக் கழிப்பதால் சரியாகத் தூங்குவதில்லை என்றார். 20 வயதுக்குக் கீழேயும், 60 வயதுக்கு மேலேயும் உள்ளவர்களைக் கொன்று உடல் உறுப்புகளை திருடுகிறார்கள் என்றும் ஒரு கதை வந்ததாம். இப்போது மாமியின் உறவினர்கள் மாமி இங்கு வந்ததால் தனியாக இருக்கப் பயத்தோடு இருக்கிறார்கள்.

என் ஒன்றுவிட்ட அக்காவின் மாமியாருக்கு காதில் ஒரு துண்டை வெட்டியதோடு, புத்திசுவாதீனம் குறைந்த அவர்களின் உறவுப் பெண்ணுக்கும் வெட்டி இருக்கிறார்கள். அண்ணா ஹாஸ்பிடலில் போய் பார்த்திருக்கிறார். எங்கள் ஊர்ப் பெண்கள் இருவர் பகலில் சந்தைக்குப் போனபொழுது யாருமில்லாத வழியில் திடீரென வந்த கி.ம அவர்களை அடித்துவிட்டு ஓடி இருக்கிறான்.

ஒதுக்குப்புறமாகவும், தள்ளித் தள்ளியும் இருக்கும் வீடுகளுக்கு வருவதும் தப்பி ஓடுவதும் அவர்களுக்கு சுலபமாக இருக்கிறது. யாரும் பிடித்தாலும் நழுவ இலகுவாய் கிறீஸ் வேறு. திருவிழா சமயங்களில் ஊரில் கிறீஸ் பூசிய மரத்தில் ஏறி சாகசம் செய்யும் மாம்ஸின் ஃப்ரெண்ட் அது உடலில் பட்ட இடம்  அவ்வளவு எரிச்சலாக இருக்குமென்று சொல்வாராம். எப்படித்தான் அதை பூசிக்கொண்டு அலைகிறார்களோ தெரியவில்லை.

என்னதான் இருந்தாலும் ஒன்றுமட்டும் நன்றாகத் தெரிகிறது. நாங்கள் நிம்மதியாக இருப்பது யாருக்கோ பொறுக்கவில்லைப்போலும். அரசியலோ இல்லை வேறெதுவோ. காரணம் எதுவாயிருந்தாலும் இரவில் நிம்மதியாக உறங்க முடியாமல் பகலிலும் பயத்தோடு அலையும் அவலம் எம்மினத்துக்கு மறுபடி வந்திருக்கிறது. அண்ணா, ரஜி, மச்சினரோடு பேசும்போதெல்லாம் பத்திரமாக இருக்கச் சொல்லிக்கொள்வதை விட எங்களைப்போன்ற புலம் பெயர் வாழ் தமிழர்களால் வேறென்ன செய்ய முடியும்??

பிள்ளையாரப்பா!!

24 August, 2011

மாமி வந்தாச்சு.

ஊரிலிருந்து மாமியார் வந்திருக்கிறார்கள். மூன்று மாத விசா. விசா 20,000/-இன்ஷூரன்ஸ் 38,,000/-, டிக்கட் 190,000ரூபா. வந்ததும் ’வேற ஒண்ணுமில்லை பாசத்துக்கு விலை ஏறிப்போச்சு. இவ்ளோ செலவு செஞ்சுதான் என்ன கூப்டணும்னா இனிமேல நான் வரமாட்டேன்’ன்னு சொன்னார்கள். மாமியாரிடம் குண்டாயிட்டேன்னு கொஞ்சம் அதிகமாக சொல்லிவிட்டேன் என்பது அவங்க வாங்கி வந்த XL சைஸ் சுடிதாரைப் பார்த்ததும் புரிந்தது. போட்டுக்கொண்டு சதுரிடம் எப்படி என்று கேட்டேன். ‘இதான் அப்பம்மா உங்களுக்கு வாங்கிட்டு வந்த nattkjole (நைட்டி) வா??’ என்றார். பத்திரமாக மடித்து வைத்துவிட்டேன். இங்கே இருக்கும் தையல் அக்காவிடம் கொடுத்து டிங்கரிங் செய்தால் சுண்டக்கா காற்பணம் கதையாகிவிடும். அவ்ளோதான். சொக்கா.. அது உனக்கு இல்லை!!

மாம்ஸ்க்கு அழகாக எம்ப்ராய்டரி செய்த ஒரு சட்டை வாங்கியிருக்கிறார்கள். கொஞ்சம் லூசாக இருந்தது. டைட்டாக ஷர்ட்/டீஷர்ட் போட்டுப் பழகியவர் ‘என்னம்மா இது கொஞ்சம் பெருசா இருக்கே’ என்றார். ‘பரவால்ல.. நீ கொஞ்சம் குண்டாயிடு அப்போ சைஸ் சரியாய்டும்’ என்று மாமியார் சொன்னார். மொக்கைசாமி s/o மொக்கை மம்மி என்று நான் சொன்னேன்.

மாமியார் வந்த அன்று இடியப்பம் செய்தேன். மாம்ஸுக்கு புட்டு பிடிக்கும் என்பதால் இடியப்பம் எப்போதாவது அவருக்கு காய்ச்சல், சளிப்பிடிக்கும் சமயம் அவிப்பதோடு சரி. மாம்ஸ் இன்றுவரை அம்மா வந்ததுனாலதான் எனக்கு இடியப்பம் கிடைச்சுதென்று எல்லோரிடமும் சொல்லிக்கொண்டே இருக்கிறார்.

011 எனக்கு நினைவு  தெரிந்த நாளிலிருந்து அம்மா இடியப்பம் அவிக்கும் போதெல்லாம் நானும் கொஞ்சம் மாவை வாங்கி அதில் உருண்டைகளில் ஆரம்பித்து பின் படிப்படியாக பூ, குருவி, மீன் என விதவிதமாக செய்து கொடுப்பேன். அம்மா அதை இடியப்பத்தின் அருகில் வைத்து அவித்துக்கொடுப்பார். கையில் சுடாமல் ஊதியும், நேரமின்மைக்கு ஏற்ப ஒரு தட்டில் ஆவி பறக்கவுமென என் கைவண்ணம் கிடைக்கும். நசுங்காமல் இருக்கவென முதல் தட்டில் வைப்பதால் மூடியிலிருந்து நீர் சொட்டி மெல்லிய ஈரப்பதத்தோடு அவளவு சுவையாக இருக்கும். இன்று என்னவோ ஆசை வந்தாலும் குருவியோ மீனோ செய்ய வராததால் உருண்டைகளே செய்தேன். சுவை பார்த்த சது அடுத்த தடவை இடியப்பம் செய்யும்போது சொல்லச் சொல்லி இருக்கிறார்.

ஊரில் எங்கள் வீட்டின் எதிரில் அம்மாவின் அத்தான் வீடு. அவரும் மனைவியும் அம்மாவுக்குப் போலவே எங்களுக்கும் பெரியத்தான், சின்னாச்சி அக்காதான். யாரோ அவரை சின்னாச்சன் என்று சொல்லப்போய் எங்களுக்குள் இப்போதும் சின்னாச்சன் என்றே சொல்லிக்கொள்வோம். சின்னாச்சி அக்கா வீட்டில் மூன்று வேளை சாப்பாடும் சமைத்துக்கொடுப்பார். நாங்கள் மதிய, இரவுச் சாப்பாடு வாங்கியதாய் நினைவில்லை. ஆனால் காலைச்சாப்பாடு அதிகம் வாங்கி இருக்கிறோம். ஆரம்பத்தில் எவளவென்று சரியாக நினைவில்லை ஆனால் கடைசியாக 1990 இடப்பெயர்வின் முன் ஐம்பது ரூபாய் கொடுத்து வாங்கிய நினைவு. காலை மெனுவில் இடியப்பம், புட்டு இருந்தாலும் இடியப்பமே எங்கள் தேர்வு.

இடியப்பம் வாங்க ’குட்டிக்காலால போய்ட்டுவாம்மாச்சி’ என்ற ஐஸோடு நானே காலையில் அனுப்பி வைக்கப்படுவேன். குட்டிக்கால் வளர்ந்து விட்டதாய் சொன்னபோது கடைக்குட்டி சின்னப்பொண்ணு நீதான் போகணும் என்று விரட்டப்பட்டேன். ஓலைக்குசினி. இருட்டாக இருக்கும். உள்ளே போய் சிறிது நேரத்திலேயே கண்ணுக்கு எதுவும் தெரியும். ஆனால் எப்போதும் எல்லாம் அதனதன் இடத்தில் இருப்பதால் நேராகப் போய் வழக்கமாக இருக்கும் பலகைமீது அமர்ந்துவிடுவேன். அடுப்பின் வெளிச்சம் விளக்கின் தேவையை இல்லாது ஆக்கினாலும் அடுப்பின் ஓரத்தில் ஒரு மண்ணெண்ணெய் விளக்கு மங்கலாக எரிந்து கொண்டிருக்கும். சின்னாச்சி அக்காவின் தங்கை மகள் பிரேமாக்கா உதவியோடு வேலை மும்முரமாக நடந்துகொண்டிருக்கும். சும்மாவே இருட்டு மழைநாட்களில் கும்மிருட்டாகிப் போக ஈர விறகோடு அவர்கள் போராடுவதும்,  மழைக்குளிருக்கு இதமாய் குசினியின் கதகதப்பும் இப்போதும் நினைவிருக்கிறது.

ஒரு பெரிய ஓலைப் பெட்டிக்குள் மாவைக்கொட்டி முழுவதும் குழைத்தால் காய்ந்துவிடுமென்று ஒரு ஓரத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாகப் பதமாகக் குழைப்பார்கள். மர உரலால் இடியப்பத்தட்டில் பிழிந்துவிடும் வேகத்தை விட அவிந்த இடியப்பத்தை உலைப்பானையிலிருந்து இறக்கி ஒரு பெரிய சுளகில் அடுக்கி வைக்கும் வேகம் அதிகம். அதிசயமாய் பார்த்தபடி இருக்கும் என்னோடு பேசியபடியே பிரேமாக்கா வேலை செய்வார். இன்னொரு  மூலையில்  அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் பேப்பர் கிழித்து, லாவகமாக டிஷ்யூவை வாழை இலைக்குப் பதிலாக வைத்து சம்பலும் சேர்த்து பார்சலாகக் கொடுப்பார். சொதிக்கு ஏற்ற ஒரு பாத்திரமோ ஹார்லிக்ஸ் போத்தலோ நான் கொண்டு போவேன்.

சின்னாச்சி அக்கா நெற்றியில் ஒரு ரூபா அளவில் எப்போதும் குங்குமம் இருக்கும். கவுன் அழுக்காகாமல், வேலைக்கு இடைஞ்சலில்லாமல் இருக்கவென பிரேமாக்கா இடுப்பில் சறம் கட்டி இருப்பா. தாய், தங்கைகள் குடும்பமாக வந்து அங்கேயே இருந்து அவர்களும் சமையல் செய்து கொடுக்க ஆரம்பித்த போது கூட பிரேமாக்கா சின்னாச்சி அக்காவுக்கே உதவியாக இருந்தார்.

உள்ளங்கை அளவில் குட்டிக்குட்டியாய் இடியப்பம். ஒரு தடவை பிழிந்து பாலெடுத்த தேங்காய்ப்பூவில் சம்பல், மூன்றாவது பாலில் நீரோட்டமாய் இருக்கும் சொதி. ஆனால் எங்கிருந்து அந்தச் சுவையைச் சேர்த்தார்கள் என்று இன்றுவரை தெரியவில்லை.

சின்னாச்சி அக்காவின் ஒரே மகனுக்கு என் வயது. அவன் முழுப் பெயர் தெரியாது. வீட்டில் லகு என்று கூப்பிடுவார்கள். அம்மாவுக்கு அந்த அத்தானைக் கட்டி வைக்கக் கேட்டார்களாம். அம்மா தப்பியதால் என்னை லகுவுக்கு கொடுத்து அவரின் கவலையை போக்கிவிடலாமென்று கேலி பண்ணுவார்கள். என் தலை தெரிந்தாலே வீட்டுக்கோடியில் போய் ஒளிந்து கொள்ளும் லகு என்னிடமிருந்து தப்பிவிட்டான் பாவம். இப்போது சின்னாச்சி அக்கா சமைத்துக்கொடுப்பதில்லையாம். 2002 ஊருக்குப் போன சமயம் பார்த்துவிட்டு வந்தேன். அம்முவைத் தூக்கி அப்படியே என்னைப் பார்த்த நினைவு வருவதாகச் சொல்லிக் கொஞ்சினார். பெரியத்தான் அதே சிரிப்போடு தள்ளி இருந்து பார்த்துக்கொண்டிருந்தார். பிரேமாக்கா நர்ஸிங் கோர்ஸ் முடித்து அண்ணாவின் ஹாஸ்பிடலில் நர்ஸாக இருந்தார்.

idiyappam இணையத்தில் எடுத்த படம் இது. தனியாக இடியப்ப உரலென்றும், அதிலேயே முறுக்கு அச்சு போடக்கூடியது போலவும் கிடைக்கும். பூவரச மரத்தில் செய்த உரலும், பனை ஈர்க்கில் செய்த தட்டும் வெகுகாலம் இருக்கும். மாமி ஒரு முறை வரும்போது மர உரல் வாங்கிக்கொண்டு வந்தார். அதில் இடியப்பம் பிழிவதென்பது அவளவு இலகுவானதல்ல. கையில் நல்ல பலம் இருக்கவேண்டும். என்னால் இரண்டுக்கு மேல் அழுத்திப் பிழிய முடியவில்லை. இலகுவாக இருக்கவென்று மாவுக்கு நீரை அதிகம் சேர்த்தால் இடியப்பம் சாஃப்ட்டாக வரவில்லை.

278

அப்படியே பத்திரமாக அதை மாமியிடம் கொடுத்து அனுப்பிவிட்டு கன் டைப் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் உரலும், பிளாஸ்டிக் தட்டும் வாங்கிவிட்டேன்.

 

 

இப்போது இதற்கென்று மெஷினே வந்துவிட்டதாம். முன்பென்றால் சின்னாச்சி அக்காவுக்கு வாங்கிக் கொடுத்திருக்கலாம்.

21 August, 2011

எங்க ஊர் கோமாதா.

tine இங்கு வந்ததில் இருந்து நான் பாவிக்கும் dairy products எல்லாமே Tine என்கிற ஒரே ப்ராண்ட்தான். எனக்குத் தெரிந்து அநேகமானவரின் தேர்வும் இதுவே.

skolemelk பள்ளியில் பிள்ளைகளுக்கு பணம் கட்டிவிட்டால் பால் கிடைக்கும். அதனால் லஞ்ச் சரியாக சாப்பிடவில்லையே என்ற கவலை பாதி குறையும்.

 

 

 

003 - Kopi ஒவொரு வருஷமும் Tine யினால் 7 – 14 வயது வரையான பிள்ளைகளுக்காக football school காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை நடாத்தப்படுகிறது. இம்முறை நாடு முழுவதும் 403 கிளப்கள் பங்கேற்றிருக்கின்றன. இடத்துக்கு இடம் நேரம், நாள் வேறுபடும். பள்ளி விடுமுறையின் கடைசி வாரத்தை சதுரின் கிளப் தேர்வு செய்வது எல்லாருக்கும் வசதியான ஒன்று. கட்டணம் ஒரு பிள்ளைக்கு 900குரோனர். இங்கே பொதுவாகவே சம்மர் கேம்ப்/ஆக்டிவிட்டீஸ் குறைவு. இருக்கும் சிலவற்றுக்கும் கூட அனுப்ப முடிவதில்லை. ஆனால் சது ஃபுட்பால் ட்ரெய்னிங் தொடங்கியதில் இருந்து இதை மட்டும் தவற விடுவதில்லை. இரண்டு தடவை அம்முவும் போனார்.

006 - Kopi வீட்டின் முன்னே இருக்கும் கிரவுண்டில் நடப்பதால் தனியாகப் போய் வருவார். காலை அல்லது மதிய உணவு, ஜூஸ், ball, bag, டீஷர்ட்டோடு கடைசி நாள் பீஸா பார்ட்டியில் முடிப்பார்கள்.

 

 

 

013 - Kopi டெக்னிக்ஸ், ட்ரிக்ஸ் என்பதோடு நிறைய நிறைய ஜாலியையும் இந்த ஒரு வாரத்தில் சேர்த்துக்கொண்டு வருவார். இம்முறை முதல் நாள் சோ மழையும் கடைசி நாள் தூறலும் என ஜாலி இன்னும் கூடி இருந்தது.

 

 

 

Christian Kalvenes இடையில் ஒரு நாள் Brann என்ற ஃபுட்பால் டீம் வீரர் ஒருவர் வந்து அவர்களின் அனுபவங்கள்/ஆட்டோகிராஃப் பகிர்ந்து கொள்வதுதான் ஹைலைட். இம்முறை வந்தவர் Christian Kalvenes.

 

 

அப்படியே Tine யின் விளம்பரங்கள் சில. இவர் கவசகுண்டல கர்ணன்போல காலில் ski யோடு பிறந்தவராம். இந்த விளம்பரம் எனக்குப் பிடிக்க இதுவும் ஒரு காரணம்.

இது மிகவும் பிரபலமானது. அம்மு, சதுவுக்கும் பிடித்தது,

வாழ்க்கையில் சில சின்ன விஷயங்கள் பெரிய்ய்ய்ய மாறுதலை தருமென்று சொல்லும் தத்துவ விளம்பரம் இது.