Pages

  • RSS

24 April, 2012

God decides something!!

“யார் கையில் வந்து யார் சேர்ந்திருப்போம்

யார் சொல்வதிதை காட் டிசைட்ஸ் சம்திங்..”

காலேல ஒரு பாடல் பகிர்ந்து கொள்ளலாம்னு சம்திங் சம்திங் படப் பாடலை தேர்வு செஞ்சப்ப பிடித்த வரிகளா அமைஞ்ச வரிகள் இவை. எனக்கு கடவுள் நம்பிக்கை நிறையவே இருக்கறதால எங்கள் இருவருக்கும் பெற்றோர்கள் நிச்சயித்த திருமண பந்தத்துக்கு முதல் முடிவு எடுத்தது கடவுள்தான்னு பல சமயங்கள்ல இந்தப் பதின்மூன்று வருடங்கள்ல நினைச்சிருக்கேன். இதற்காகத்தான் என்னையும் இவரையும் இந்தப் பந்தம் இணைச்சதுன்னு உணர்ந்திருக்கேன். மனப்பூர்வமா உணர்ந்தேன்னு சொல்லணும்.

போன மாதம் மாம்ஸ்க்கு ஒரு வகையான இருமல் பிடிச்சது. பகல்ல எல்லாம் அளவாக இருக்கும். இரவானால் அளவே இல்லாமல் இருமும். அனைத்து நாடுகளின் பாட்டி வைத்தியங்கள் பார்த்தும் அடங்கவில்லை. சாதாரண இருமலுக்கு டாக்டரான்னு அவரிடம் என் பேச்சு எடுபடவில்லை. என்ன ஆனாலும் அடுத்த கணமே மறுபடி தூங்கிப் போய்டுறது அவர் வழக்கம். எனக்கு?? தொடர் சிவராத்திரிகளும், குறைத் தூக்கமுமா போக வண்டி ஓட்டும்போது தலைசுற்ற ஆரம்பிச்சிடிச்சு. ஒரு நாள் இரவு முடியாமல் போக எழுந்து கெஸ்ட் ரூமில் போய் படுத்துவிட்டேன். அது கூட நாலரை மணிக்குத்தான். ஆஃபீஸ்க்கு வழக்கம் போல் ஃபோன் பண்ணியவர் கேட்ட முதல் கேள்வி

‘என்னடி இப்டி பண்ணிட்டே??’

’நீங்க டாக்டர்ட்டவும் போக மாட்றிங்க என்னால தூங்காம ஆஃபீஸ் வர முடியல. அதான் எந்திரிச்சு போய்ட்டேன்`னேன்.

’டாக்டர்ட்ட அப்பாயின்மெண்ட் எடுத்திட்டேன். மவளே அவர் நான் சொன்னது போல வெறும் வைரஸ் இருமல்னு சொல்லட்டும் இருக்கு உனக்கு’ன்னார்.

என்னதான் ஆண் தான் உறுதியானவன்னு காட்டிக் கொண்டாலும் சில சின்ன விஷயங்கள்ல அப்படிக் காட்டிக்கொண்டு மட்டும்தான் இருக்கிறான். இருமல் சரியாகற வரைக்கும் நீ அம்மு ரூம்ல தூங்குன்னு சொன்னார். தனியாகத் தூங்க அவ்ளோ பயப்படற நான் திடீர்னு எழுந்து போனது அவருக்கு ஏதோ ஒரு வகையில் அதிர்ச்சி என்பது நல்லாவே புரிஞ்சது.

நான் அவர்ட்ட அவளவா கேள்வி கேக்கமாட்டேன். எங்க போறிங்க.. வரிங்க.. ஏன் லேட்.. அது ஏன் செஞ்சிங்க.. இத ஏன் செய்லைன்றது போல சின்ன விஷயங்கள் தொடங்கி பெரிய விஷயங்களிலும் மூக்கு நுழைக்கமாட்டேன். எல்லாம் அவர் பார்த்துப்பார்ன்ற நம்பிக்கை. அவரும் எதா இருந்தாலும் இன்ன முடிவு எடுத்தேன்/எடுக்கலாமான்னு கலந்துகொள்வார். போன வாரம் என்னவோ மூட் சரியா இல்லை. அவர் வீட்டுக்கு வந்து ஆசுவாசப்படுத்தினதும் ‘காலேல போனவர் இப்பதான் வரிங்க’ன்னு ஒரு வரிதான் சொன்னேன். கேள்வியாகக் கூட. அன்று தூங்கும்வரை பலமுறையும் தொடர்ந்து சில நாட்களும் அதற்கான விளக்கத்தை சொல்லிக்கொண்டிருந்தார். இந்த சின்ன விஷயத்துக்கு போயான்னு தோணினாலும் அவருக்குள் அதன் தாக்கம் பெரிதாக இருந்திருக்கும்போலன்னு தோணிச்சு.

எங்கேயோ கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருந்த வாழ்க்கையின் சில தத்துவங்கள் மெதுவா மிக மெதுவா புரிபட ஆரம்பிக்கிறது. அதற்கு வயதும், பிள்ளைகளின் வளர்ச்சியும், காலமும் கூடவே உலகமும் காரணமாக இருக்கலாம். ஒரு நாள் காரில் போய்க்கொண்டிருந்தபோது ஊர் சுற்றிய பேச்சு கடைசியில் இப்படி ஒரு குடும்பம் அமைய நான் என்ன தவம் செய்தேன்னு நினைக்கும்படியா வந்து முடிஞ்சது. காருக்குள் வந்த திடீர் அமைதி எனக்கும் அவருக்கும் இதை நல்லாவே உணர்த்திச்சு. பிள்ளைகளால அத மொழிப்படுத்த முடியலைன்னாலும் உணர முடிஞ்சதென்பது அவங்க முகத்திலும் ‘பாவம்ல அவங்கல்லாம்’ன்னு சொன்ன விதத்திலும் தெரிஞ்சது.

பிள்ளையாரப்பா.. உன்னட்ட எப்போதும் கேக்கறததான் இப்பவும் கேக்கறேன். நீ எல்லாரையும் நல்லா பாத்துக்கோ. அப்போ தான் நான் நல்லா இருப்பேன்.

ஃபீலிங்க்ஸ் ஆஃப் நோர்வே போதும்னு நினைக்கறேன்.. இதோ.. அடுத்த ஒரு புது வருஷத்துக்குள்ள போருக்கு கிளம்பிட்டோம்.. வந்து எங்கள் திருமணநாளுக்கு வாழ்த்திட்டு ஆசி வாங்கிட்டு போங்க மக்கள்ஸ்..

j 039

23 April, 2012

எல்லாம் நலம்!!

அக்காச்சி வீட்டில் நண்பன் தினமும் பல காட்சிகள் ஓடிக் கொண்டிருக்கிறதாம். கூடவே அதில் வரும் காரக்டர்களின் பெயர் ஒவொருவருக்கும் வைக்கப்பட்டு அந்தப் பெயரிலேயே அழைக்கும்படியும் கட்டளை இடப்பட்டிருக்கிறார்களாம். ‘அப்ப சித்திக்கு என்ன பேர்டா’ன்னு அக்காச்சி கேட்க கடைக்குட்டி சேரன் ’ஷித்திதான் ரியா’ன்னு சொல்லிட்டார். ஒரே நிமிஷம் இருங்க. இங்கே அவ்வியே ஆகணும் நான். அவ்வ்வ்வ்வ்..

இரண்டாவது பையன் கருண் திடீரென்று சீரியசாக ‘எனக்கு ஃப்யூச்சர்ல என் வைஃப் கூட ட்ரபிள் வரும்னு நினைக்கறேன்மா’ என்றாராம். ஏனென்று கேட்டதற்கு ‘பேபி கிடைக்கறப்ப எனக்கும் எப்டி ஹேண்டில் பண்ணும்னு தெரியாதேம்மா. ஸ்வேதா போல கோவப்படுவாங்கன்னு நினைக்கறேன்மா’ன்னாராம். அது ஆரது ஸ்வேதான்னேன். அடியேய் நண்பன்ல வர ஸ்வேதாடி.. இலியானா அக்கான்னா. இங்க இன்னுமொரு அவ்வ்வ்வ்..

TWO SISTERS இப்போது ஒரு டிப்ளமா கோர்ஸ் படித்துக் கொண்டிருக்கிறாள் அக்காச்சி. அவள் என்னைப் போல இல்லை. தைரியம், அறிவு, விவேகம், அழகு என அத்தனையிலும் என்னைவிடப் பல படிகள் மேலானவள். அவளிடம் நான் கற்றுக் கொள்ள எப்போதும் எதுவாவது இருந்துகொண்டே இருக்கும். நானும் அவளும் ஒரே சாயலில் இல்லாததால் யாராவது பார்த்தால் சகோதரிகள் என்று சொல்லமாட்டார்கள். பேச்சும் அப்படியே இருக்கும். இன்று வரை அம்மாவை விட எனக்கு அக்காச்சி மீதுதான் பயம் அதிகம். முன்னெல்லாம் அக்கா என்ற அதிகாரம் இருக்கும். இதுக்கு அக்காச்சி என்ன சொன்னா என்று என்னவர் கேட்கும் அளவுக்கு அவள் எனக்கு இப்போது எல்லாமுமாய் ஆகி அன்பால் கட்டிப்போடுகிறாள்.

நான் பதிவுலகம் வந்ததை இரண்டு மாதங்களின் பின் சொன்னபோது அவளவு கோவப்பட்டாள். உன் மனத் திருப்திக்கு எழுது ஆனால் நட்புகள் எதுவும் வேண்டாம் என்று சொன்னாள். லிங்க் கொடுத்தேன். ஆனால் படித்தாளா இல்லையாவென்று ஒரு வார்த்தை சொல்லவில்லை. போன வருஷம் என் பிறந்தநாளுக்கு அவளிடமிருந்து வந்த மெயில் இது.

ithu thaan en pirantha naal parisu

scrolllllllllllllllllllllllldown (இங்கே எக்கச்சக்க இடைவெளி விட்டிருந்தாள்)

"nallaaave eluthuredi!!"

எனக்கு கிடைச்ச மிகப்பெரிய பரிசு இது. கூடவே என் ஃப்ரெண்ட் படமும் அனுப்பி இருந்தாள்.

இப்பொழுது பதிவில் நான் அதிகம் எழுதாததால் அவ்வப்போது மிரட்டல் மெயில் அனுப்புவாள். படிப்பின் இடையில் அவள் இளைப்பாறுவது என் பதிவில்தானாம்.

‘summaave irunthirukkalaam. intha blog vaasikkira peeelingu irukke atha ennaaatha solla’ என்று தொடங்கி தொடர்ந்து எழுதச் சொல்லித் திட்டி முடித்திருப்பாள். நேர வேறுபாட்டால் சமயத்தில் பேச முடியாமல் போய்விடும். உடனேயே மெயில் வரும்.

enna pulla seiyirai
phonukal ennaththukku irukku
ஏன் புள்ள சைலெண்டா இருக்கிறாய்
piraku parai. naalaikku thanks giving day leave. veeddai nippan. time irunthaaa edu.
happy thanks giving day, I am thankful to god b'se of u!

இப்படியாக நக்கலோடு சேர்த்து நளினமாக தன் அன்பைச் சொல்வதில் அவளுக்கு நிகர் அவள்தான். இந்த வருடம் கோடை விடுமுறைக்கு அவளிடம் வரப் போவதாக என்னவர் சொன்ன நாளில் இருந்து எப்பொழுதும் அதே நினைவாகவே இருக்கிறாள். ’ஏன்ரியப்பா முதலே சொன்னனிங்கள். இஞ்ச மனுசரால நிம்மதியா இருக்கேலாதாம். ஒரே பரபரப்பா கிடக்கு’ என்று சிரிப்பாள். ஆனால் அது உண்மை என்பதை அவள் குரல் சொல்லும். மூன்று வயதில் அம்முவைப் பார்த்தவள் இப்பொழுது பெரிய எதிர்பார்ப்பில் இருக்கிறாள். அவளின் குணங்களை அம்முவில் அவளே பார்த்து அறிந்து கொள்வது அவளுக்கு எவளவு ஆனந்தமாயிருக்கும்.

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அக்காச்சி. எப்போதும் உன்னோடு நாங்கள் இருப்போம். எல்லாம் நலம்!!

05 April, 2012

5 நாட்கள்.

இந்த வாரம் புதன் அரை நாளோடு தொடங்கி செவ்வாய் வரை நீடிக்கும் ஈஸ்டர் கால விடுமுறை. பிள்ளைகளுக்கு திங்களில் இருந்து பள்ளி விடுமுறை விட்டதால் வழக்கம்போல் எதற்கு வளர்ந்து தொலைத்தோம் என்ற ஏக்கத்தோடு திங்கள் ஆஃபீசுக்கு கிளம்பினேன்.

இந்த விடுமுறை நாட்களில் ஆஃபீஸ் போகும் கொடுமையை குறைக்கும் முதல் விஷயம் my car, my petrol, my road தான். ஆளே இல்லாத வீதிகளில் எந்த டென்ஷனும் இல்லாமல் ட்ரைவ் பண்ணும் சுகம் இருக்கே.. அடடடடடடா..

004 என் மேஜையில் எனக்காகக் காத்திருந்த ஈஸ்டர் சாக்லெட் கொஞ்சம் சிரிப்பைக் கொடுத்தது. மேலிட தந்திரம்.

வெள்ளியோடு விடுப்பெடுத்து பாதி ஆஃபீஸ் திங்களன்று காலியாக இருக்கும். செவ்வாய் வந்ததும் கொஞ்சம் கடுப்பேறும். கலீக்ஸ் ஒவொருவராக விடைபெறுவார்கள். அதில் சிலர் அவர்கள் பயணம் பற்றிச் சொல்லும்போது. ம்ம்.. ஒருவழியாக புதன் கிழமை வந்தால் அன்று அரைநாள். ஆளே இல்லாத கடையில் டீ ஆற்றும் சுகம் இருக்கே?? அடடடடடா..

அநேகமானோர் இந்த ஈஸ்டர் விடுமுறைக்கு இந்த வருடத்தின் இறுதிப் பனியை அனுபவிக்கவென மலைப் பகுதிகளில் உள்ள அவர்களின் சொந்தமான/வாடகை காட்டேஜ்களுக்குப் போய்விடுவார்கள். எங்கள் அயலில் ஓரிண்டு வீடுகளில் தான் ஆட்கள் உண்டு. கிட்டத்தட்ட ஊரே காலியாக இருக்கும் காலம் இது. எங்கள் பழைய வீட்டில் நான் வந்த புதிதில் ஜன்னலில் நின்று வேடிக்கை பார்த்துக் கழித்த காலங்களில் ஒரு நாள் அது. வீதிக்கு எதிரே ஒரு வரிசை வீடு. அடுத்து ஒரு உள்வீதியோடு சில வீடுகள். அதில் ஒரு வீட்டில் யாரோ வண்டி வைத்து பொருட்களை ஏற்றிக் கொண்டிருந்தார்கள். பின்னர்தான் தெரிந்தது அது திருட்டென்று. போலவே காட்டேஜ்களில் தங்கி இருப்போருக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும் பிரபல திருடர்களும் ஒவொரு வருடமும் அவர்கள் கைவேலையை காட்டிக் கொண்டுதானிருக்கிறார்கள். போன வாரம் பக்கத்து ஊரில் ஒரு பெண் ஃபேஸ்புக்கில் ‘லீவு விட்டாச்சேய்ய்ய்ய்.. நான் காட்டேஜ் போறேனே’ என்று பொங்கிவிட அடுத்த நாளே வீட்டில் திருட்டு.

இதற்கிடையில் எங்கள் தமிழ்ப் பள்ளியின் பத்தாவது ஆண்டுவிழா வருகிறது. அதற்கென்று என் வகுப்புப் பிள்ளைகளுக்கு நாடகம் ஒன்று பழக்க ஆரம்பித்திருக்கிறேன். அற்புதமாகக் கழிகிறது நேரம். ஒவ்வொரு பிள்ளைக்குள்ளும் ஒழிந்திருக்கும் நடிகனையும் நடிகையையும் வெளிக்கொண்டு வருவதென்பது அபரிமிதமான ஒரு அனுபவம். ஓரளவுக்கு நன்றாக நடிப்பார்கள் என்ற நம்பிக்கை வந்திருக்கிறது. அதனால் இந்த விடுமுறை நாட்களில் 2 நாட்கள் மட்டும் பயிற்சி எடுத்துக்கொள்ளவுள்ளோம்.

2012-04-04 11.09.52 மலைப்பிரதேசம் போகாதவர்களே அனுபவியுங்கள் என்பதாய் திங்கள் பனி கொட்டித் தள்ளியது. கண்ணாளன் வேறு சின்ன வண்டிக்கு சம்மர் டயரை மாற்றிவிட்டார். ஒரு வழியாக பெரிய வண்டியை உருட்டிக்கொண்டு போய்வந்தேன். புதன் கிழமை அவரே போக்குவரத்துப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். சதுவுக்கு ஆண்டுவிழா பயிற்சி இருந்ததால் அம்மு என்னோடு ஆஃபீஸ் வந்து அவ விருப்பப்படி இருவரும் லஞ்சுக்கு இலை தழைகளை உண்டோம்.

017 கிளம்பும் நேரம் திடீரென்று ஃபயர் அலாரம் அலறத் தொடங்கியதில் மொபைலை மட்டும் கையில் எடுத்துக்கொண்டு கட்டடத்தை விட்டு வெளியே வந்த என்னைப் பார்த்து அம்மு சிரித்தார். அவர் கையில் படித்துக்கொண்டிருந்த புத்தகத்தோடு வந்து தொடர்ந்து படித்ததைப் பார்த்து நான் சிரித்தேன். தீயணைப்புப் படையினர் வந்து அரைமணி நேர காத்திருத்தலின் பின் எங்கேயும் தீப்பிடிக்கவில்லை உள்ளே போகலாம் என்றார்கள். காரணம் என்னவென்று செவ்வாய் போனால்தான் தெரியும்.

இரண்டு நண்பர்கள் வீட்டில் விருந்துக்கு நாங்கள் போய், ஒரு நண்பர் குடும்பத்தை விருந்துக்கு அழைத்து தண்டனை கொடுப்பது, சதுவின் இரண்டு நண்பர்கள் இரண்டு நாட்கள் இங்கே டேரா, ஆண்டுவிழா நாடகப் பயிற்சி, சனிக்கிழமை ஊர் சுற்றல் என்ற அளவில் மட்டும் இப்போதைக்கு 5 நாள் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

img_7868_20100404_1741788986        அனைவருக்கும் இனிய ஈஸ்டர் வாழ்த்துகள்.

01 April, 2012

குழந்தை வளர்ப்பு.

Barn-og-familie நோர்வேயில் குழந்தை வளர்ப்புப் பற்றிய தகவல்களை திரு.சொக்கன் அவர்கள் கேட்டிருந்தார்கள். அது பற்றிய முழு விபரங்களையும் அவர் பதிவில் எழுதி இருப்பதால் நான் இங்கே மீண்டும் விபரமாக எழுதவில்லை. தகவல்களை வைத்துக்கொண்டு எழுதப்போவது அவரே என்பதால் கொஞ்சம் அதிகமாகவே எனக்குத் தெரிந்ததை/அறிந்ததை எழுதி அனுப்பி இருந்தேன். அதில் எந்த மாற்றமும் செய்யாமல் அப்படியே வலை ஏற்றி இருந்தார். அதில் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவு இல்லை. அதே நேரம் அந்தத் தகவல்கள் அவர் எழுத்தில் புது வடிவம் பெறாதது அதே அளவு ஏமாற்றம் என்பதும் உண்மையே.

இந்தியக் குடும்பத்திடமிருந்து குழந்தைகளைப் பிரித்த சம்பவம் நடந்தபோது நான் ஏதாவது எழுதலாம் என்று நினைத்தபோது ‘நீ எதுனா எழுதி வச்சு அது ஏடாகூடமாகி உன் மேல யாராச்சும் கேஸ் போட்டுட போறாங்க’ என்று என்னவர் விளையாட்டாக மிரட்டியதில் உண்மையாகவே மிரண்டு போய் அந்த எண்ணத்தை மூட்டை கட்டி வைத்துவிட்டேன். அதற்கு ஈடுகட்டுவதாய் என்னிடம் தகவல்கள் கேட்ட சொக்கன் அவர்களுக்கு மனதார்ந்த நன்றிகள்.

இங்கே திரு.சொக்கன் அவர்களின் பதிவில் நான் எழுதிய தகவல்களைப் படித்துப் பாருங்கள்.