Pages

  • RSS

27 November, 2010

என்ன சொல்லி உமை போற்ற!!

நவம்பர் இருபத்தோராம் திகதியே தொடங்கிவிடும். ஊரெல்லாம் மஞ்சளும் சிவப்புமாய் தோரணம். வீதியின் முக்கிய இடங்களில் அலங்கார வளைவுகள். அத்தனை பூ மரங்களுக்கும் சுமை குறையும். ஒற்றைப் பூ விட்டு மீதி பறித்து அழகான மாலைகள்.

சாவை கழுத்திலே சுமந்தபடி, எந்த நொடியும் அதனை எதிர் நோக்கியபடி, அதன் சாயலே இல்லாமல் சிரித்தபடி சுழன்று வரும் புலி வீரர்கள் ஒருபுறம். உண்ண உணவில்லையென்றாலும் என்னால் முடிந்தது செய்வேன் என்ற எண்ணத்தில் பொதுமக்கள் மறுபுறம். எந்தளவு முடியுமோ அந்தளவுக்கு ஊரையே அலங்காரத்தால் திருவிழாக் காண வைப்பார்கள். யார் எந்தப் பகுதி அலங்காரப் பொறுப்பு, உணவு, தேநீர் பொறுப்பு, தங்குமிடப் பொறுப்பு என்று பிரித்துக்கொடுக்கப்படும். துயிலும் இல்லங்களில் உறங்கும் கண்மணிகளின் தூக்கம் கலைக்காமல் அத்தனை வேலைகளும் கச்சிதமாய் முடிக்கப்படும். தூர இடங்களில் இருக்கும் மாவீரர்களின் பெற்றோர் வரவழைக்கப்பட்டு எங்காவது தங்க வைக்கப்படுவர்.

நவம்பர் 27. மாவீரர் நாள். எப்படியும் அன்று பகைவனின் ஷெல் வீச்சு, விமானக் குண்டு வீச்சு இருக்கும் என்பதால் எங்கள் வீட்டில் தைரியசாலிகள் மட்டுமே போக அனுமதிக்கப்படுவர். ரஜியும் அக்காச்சியும் நான் கட்டிக் கொடுக்கும் மாலைகளை அலுங்காமல் எடுத்துக்கொண்டு போவார்கள். கல்லறைகளின் முன்னே ஊரே அமைதியாய், ஒன்றாகக் கூடி இருக்கும். அத்தனை முகங்களிலும் வலியின் சாயல். வேதனைகளின் விம்மல். வீரர்கள் அழுவதில்லை. வலியை மறைத்து கன்ணீரை விழுங்கும் மனத்திடக்காரர் அவர்கள். சரியாக மாலை ஆறு மணி ஐந்து நிமிடத்துக்கு பிரதான சுடர் ஏற்றப்பட, தொடர்ந்து அத்தனை சுடர்களும் ஏற்றப்படும். 1989இன் பின்னர் இது தான் எங்கள் கார்த்திகை விளக்கீடு. சரியாக அதே நேரம் ஒலிக்கத் தொடங்கும் மாவீரர் பாடல். கலங்காத அத்தனை கண்களும் கண்ணீர் மழையில். நெஞ்சு வெடிக்கும் வலி. உயிரைப் பிசையும் சோகம்.  சோவெனப் பெய்யும் மழை, சமயத்தில் கூடவே குண்டு மழை எதுவாயினும் அஞ்சலி அமைதியாய் நடந்து முடியும். நாங்கள் கோயிலாய் போற்றிப் பாதுகாத்த துயிலும் இல்லங்கள் இன்று..

இங்கு வந்த பின்னர் சரியாக ஆறு மணி ஐந்து நிமிடத்துக்கு எல்லோரும் ஒன்றுகூடி மெழுகுவர்த்தி ஏற்றுவோம். கலந்துகொள்ள முடியாதவர்கள் வீடுகளிலும். பாடல் ஒலிக்க எல்லோரும் சேர்ந்து உரக்கப் பாடுவோம். எம் மண்ணின் மைந்தருக்கு மலர்கள், தீபங்களோடு கண்ணீராலும் அஞ்சலி. பிறிதொரு நாளில் கலைநிகழ்வுகள்.

போன வருடத்தை விட இந்த வருடம் மனம் இன்னமும் கலக்கமாக.  ஆற்றாமை, ஆதங்கம், கோவம், வேதனையோடு சேர்ந்து இம் முறையும் அஞ்சலிக்குப் போகத் தோன்றவில்லை. வீட்டிலேயே ஏற்றி வைப்பேன் எல்லோருக்குமாய் ஒரு மெழுகுவர்த்தி.

என்னதான் ஆகட்டும். எங்கள் மண்ணுக்காய் இன்னுயிர் ஈந்து வித்தாகிப் போன எம் மாவீரர்களதும், மக்களதும் நினைவுகளை எம்மிடம் இருந்து பிரித்தெடுக்க எவராலும் முடியாது. உண்மைகளைப் புதைத்துவிட்டாலும் வித்தாக மனதில் நாம் புதைத்த தமிழுணர்வு என்றும் விழுதோடு மரமாக வியாபித்து இருக்கும்.

இந்த மாவீரர் நாள் பாடல் மாவீரர் தினத்தன்றும், மரணித்த வீரர்களை புதைகுழியில் புதைக்குமுன் அஞ்சலி செய்யும்போதும் மட்டுமே ஒலிக்கப்படும். புதுவை இரத்தினதுரையால் இயற்றப்பட்டு, வர்ணராமேஸ்வரனால் பாடப்பட்டது. எங்கே எங்கே ஒரு தரம் விழிகளை இங்கே திறவுங்கள் எனும் வரிகள் வரும்போது கல்லும் கரைந்துதான் போகும்.

முடிந்தால்.. விழி மூடி ஒரு நிமிடம் மனதார அஞ்சலி செய்யுங்கள். கல்லறைக் காவியங்கள் அமைதியாய் உறங்கட்டும்!!

தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய
சந்தனப் பேழைகளே – இங்கு
கூவிடும் எங்களின் குரல்மொழி கேட்குதா
குழியினுள் வாழ்பவரே
உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள்
உறவினர் வந்துள்ளோம் – அன்று
செங்களம் மீதிலே உங்களோடாடிய
தோழர்கள் வந்துள்ளோம்

எங்கே எங்கே ஒருதரம் விழிகளை
இங்கே திறவுங்கள்
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே
மறுபடி உறங்குங்கள்.


வல்லமை தாருமென்றுங்களின் வாசலில்
வந்துமே வணங்குகின்றோம் –  உங்கள்
கல்லறை மீதிலெம் கைகளை வைத்தொரு
சத்தியம் செய்கின்றோம்
சாவரும் போதிலும் தணலிடை வேகிலும்
சந்ததி தூங்காது – எங்கள்
தாயகம் வரும் வரை தாவிடும் புலிகளின்
தாகங்கள் தீராது.


உயிர்விடும் வேளையில் உங்களின் வாயது
உரைத்தது தமிழீழம் – அதை
நிரை நிரையாகவே நின்றினி விரைவினில்
நிச்சயம் எடுத்தாள்வோம்
தலைவனின் பாதையில் தமிழினம் உயிர்பெறும்
தனி அரசென்றிடுவோம் – எந்த
நிலைவரும் போதிலும் நிமிருவோம் உங்களின்
நினைவுடன் வென்றிடுவோம்

24 November, 2010

உங்கள யாரு காப்பாத்த போறாங்க..

உங்கள யாரு காப்பாத்தப் போறாங்களோ தெரியலையே பிள்ளையாரப்பா.. இப்படி வந்திருக்கணும் தலைப்பு.. என் டீம் லீடர் இருக்காங்களே. இன்னைக்கு எனக்கு இல்லை உங்களுக்கு ஒரு கொடும் செய்தியை சொல்லிட்டாங்க. அவங்க ஃப்ரெண்டி அம்மாவுக்கு  95 வயசாம் இந்த வாரம். இதிலெந்த கொடுமையும் இல்லைங்க. இவளவு காலம் அவங்க உயிரோட இருந்தது சாதனை. அவங்க வாழ்க்கை முறை, உணவுப்பழக்கம் எல்லாம் சொல்லிட்டு வந்தாங்க. போன வருஷம்தான் முதல்முதலா சொன்னாங்களாம் ’நான் நினைக்கிறேன் எனக்கு கண்ணு கொஞ்சம் மங்கலா தெரியுது போல’ ன்னு. நானும் கலீக் ப்ரெட்டும்.. (அட அந்த ப்ரெட் இல்லைங்க.. இது Brett..) ம் கொட்டி தேவையான இடங்களில் மானே தேனே சொல்லி கேட்டுக் கொண்டிருந்தோம். இருங்க.. எதுக்கும் மறுபடி நினைவுபடுத்தி சரி பார்க்கறேன் அவங்க அதத்தான் சொன்னாங்களான்னு.

‘ஏய் அவங்க உன்னை மாதிரியேதான்.. ரொம்ம்ம்ம்ப அமைதி.. அதனாலதான் அவங்க இத்தனை வருஷம் உயிரோட இருக்காங்க.. நான் எங்க சொன்னேன்னு பாரு.. நீயும் நிறைய வருஷம் இருக்கப்போறே’ 

இதை கேட்டதும் நான் அப்டியே ஷாக் ஆயிட்டேன். நீங்க கூட பரவால்லைங்க. தூர இருக்கிங்க. என் கண்ணாளனை நினைச்சுப் பாருங்க.. ஆவ்வ்வ்..

:(  :(

பசங்க பர்த்டேக்கு நான் செய்த ஐசிங். சது கேட்ட ஷாடோ என்ற கார்ட்டூன் ஃபிகர் சரியாக வந்தது. அம்முவோடது.. ஆவ்வ்வ்.. வெள்ளை நிறத்தில ஐபாட் கேட்டாங்க.. அது ஐ bad ஆகிவிட்டது. அம்மா மனம் நோகாமல் ‘இல்லைம்மா அது நல்லாருக்கு’ன்னு அவங்க ஆறுதல் சொல்லிட்டாங்க. நீங்களும்.. புரியுதில்லை?? அதையும் மீறினா கமண்ட் பப்ளிஷ் பண்ணமாட்டேன் சொல்லிட்டேன். இது எச்சரிக்கை இல்லை.. கட்டளை!!

DSCN0210 DSCN0211

:( :(

எல்லாரும் இன்னும் ஒரு தடவை தலைப்பை சொல்லிப்பாருங்கள். அதேதான். எனது அடுத்த தாக்குதல். பதிவுலக வரலாற்றில்.. அட என்னுடையதுங்க.. இரண்டாவது சமையல் குறிப்பு. பட்டர் கேக்.

முதலில் தேவையான பொருட்கள்.

IMG_0729 மா 500g

சீனி 500g

பட்டர்/மாஜரின் 500g

முட்டை 8 (படம் எடுக்கும்போது கோழி இடலை)

பேக்கிங் பவுடர் 4 தேக

வனிலா பவுடர் 4 தேக

 

முதலில் சீனி, மாஜரின் சேர்த்து நன்றாக பீட் செய்து கொள்ளுங்கள். அடுத்து ஒவொரு முட்டையாக சேர்த்து பீட் செய்து கொள்ளுங்கள். முட்டையை மொத்தமாக சேர்ப்பதைவிட ஒவொன்றாக சேர்த்தால் மெதுமெதுவென்று வருமாம் (வருகிறது) கேக். அது தடிப்பான கிரீம் மாதிரி ஆனதும் மாவை சிறிது சிறிதாக சேர்த்துக் கொண்டு பீட் செய்யுங்கள். கடைசியாக பேக்கிங்/வனிலா பவுடர்கள் சேர்த்து அதிகம் பீட் செய்ய வேண்டாம். செய்தால் கேக் கல்லாகிவிடும் (ஆகியது) அபாயம் நிறையவே இருக்கிறது. இனி கலவையை கேக் ட்ரேயில் பேக்கிங் பேப்பரோ இல்லை பட்டர் தடவியோ ஊற்றி 180c இல், அவனின்(அவனா ஓவனா?) நடுத் தட்டில் வைத்து 25 நிமிடங்கள் பேக் செய்து எடுத்தால்.. இப்படி வரும்.

IMG_0732

கத்தி லிஸ்ட்ல இல்லையே.. இப்போ எப்படி வந்தது என்று கேட்பவர்களுக்கு நான் செய்யும் கேக் செலவைப் பாராமல் பார்சலில் அனுப்பிவைக்கப்படும்.

முக்கிய அறிவிப்பு. மாஜரின் அல்லது பட்டர் அல்லது இரண்டும் கலந்து பாவிக்கலாம். ஆனால் பட்டர் சுவை தனி. அத்தோடு விருப்பமாயின் அன்னாசி எஸன்ஸ் ஒரு தேக சேர்த்துக் கொண்டால் அதன் மணமே தனி. விருப்பமான கலர் சேர்த்து இரண்டு லேயராக ஊற்றி பேக் செய்தால் அதன் அழகே தனி. படத்தில் கரையை மட்டும் கரெக்டா வெட்டி வச்சிருக்கேனே.. அந்தக் கரையோட சுவையே.. அதே தாங்க..

வர்ட்டா..

22 November, 2010

திருக் கார்த்திகை விளக்கீடு.

திருக்கார்த்திகை தினத்தன்று இங்கே வீட்டின் ’பால்கனிகள் பூரா மெழுகுவர்த்தி (tealight) ஏற்றி வைக்கலாம்பா’ என்ற என் ஆசை ’பக்கத்திலேயே உக்காந்து பாத்துக்கோ.. வீடு மட்டும் பத்திக்கிச்சு இன்ஷூரன்ஸ் கம்பெனி பைசா காசு குடுக்காது’ என்ற நடைமுறை சாத்தியமான என்னவரின் பதிலோடு இன்றுவரை நிராசையாகவே. இருந்தாலும் வீட்டிற்கு உள்ளே எங்கெல்லாம் முடியுதோ அங்கெல்லாம் மெழுகுவர்த்தி ஏற்றி வைப்பேன்.

அன்றைய தினம் ஊரில் அத்தனை வீடுகளும் ஜெகஜ்ஜோதியாய் இருக்கும். மின்விளக்குகளை அணைத்துவிட்டு சுட்டி விளக்கு (அகல் விளக்கு) வீட்டின் அத்தனை இடங்களிலும் வைப்போம். தடியில் துணி சுற்றி செய்த பந்தம் வீட்டைச் சுற்றி வைக்கப்படும். கேட்டுக்கு வெளியில் வாழை மரத்தை நட்டு வைத்து அதன் மேல் தேங்காய் மூடிக்குள் கற்பூரம் வைத்து ஏற்றினால் அது தான் மெயின் தீபம். எல்லாம் ஏற்றி ஆனதும் அப்படியே கோயிலுக்கு ஒரு விசிட். வீட்டுக்கு வரும்போது ஒரு முறை தீபங்களை மண் போட்டு அணைத்து வைத்திருந்தார்கள் வால் பசங்கள். அன்றிலிருந்து நாங்கள் கோயில் போகும் சமயம் அப்புச்சி காவற்காரன் பணியை மேற்கொள்ள, அவரிடம் சிக்கி கொட்டு வாங்கியவர்கள் அதிகம். கோயிலில் வாழை நட்டு அதைச் சுற்றி தென்னோலை கட்டி சொக்கப்பானை என்று எரிப்பார்கள். குளிருக்கு இதமாக நல்லா இருக்கும். படங்கள் கூகிளாண்டவர் உபயம். பாருங்கள்.

IMG_1240 

சர்வாலய தீபம், குமராலய தீபம் என்று வீடுகளிலும், ஆலயங்களிலும் ஏற்றப்படுவதை சொல்வார்கள் என்பதாய் ஞாபகம். அம்மாவுக்கு இப்போது கால் பண்ணி இதில் எது வீடு, எது கோயில் என்று கேட்டபோதுதான் ’ஐய்யோம்மா.. இண்டைக்கே அது.. அதுதான் நான் இண்டைக்கு மச்சம் சாப்பிடேக்க பல்லி சொன்னது`ன்னாங்க. ‘உங்க பல்லியெல்லாம் இருக்குதேம்மா?’ என்றேன். ‘இல்லையம்மா.. என்ர மனசுக்க சொல்லினது’ன்னாங்க. ரைட்டும்மா!! அம்மா குழம்பிவிட்டதால் அக்காச்சியிடம் ஃபோன் கொடுக்கப்பட்டு விஷயம் சொல்லப்பட்டது. ‘எனக்கு உதொண்டும் தெரியாது கண்டியோ.. இஞ்ச இவங்கள் சண்டை பிடிக்கிறாங்கள். இந்தா கருணோட கதை’ என்று ஃபோன் கருண் கைக்கு மாற்றப்பட்டது. ‘சித்தி.. அண்ணா அடிச்சுப்போட்டார்’ என்ற கருணின் கம்ப்ளெயிண்டுக்கு நான் நாட்டாமை ஆனதில் என் டவுட் அப்படியே டவுட்டாகவே இருக்கிறது.

ஊரில் விளக்கீட்டுக்கு முதல் நாளே அரிசிமா, உழுத்தம் மா, சீனி கலந்து தேங்காய்ப்பால் விட்டுப் பிசைந்து, அதை குட்டிக் குட்டி உருண்டைகளாக்கி, ஆவியில் அவித்து, சீனி சேர்த்துக் கொதிக்க வைத்த கெட்டித் தேங்காய்பாலில் கொட்டி பால் புட்டு என்று ஒன்று அம்மா செய்வார். அடுத்த நாள் காலையில் (அண்ணா எனும் இரண்டு கால் பூனையால் இரவே சுவை பார்க்கப்பட்டு) அப்படியே கெட்டியாகி இருக்கும். அதை பாளம் பாளமாக வெட்டிக் கொடுப்பார். ஹூம். அதன் சுவையின் நினைவு தந்த பெருமூச்சு இது. அன்று அம்மா கொழுக்கட்டையும் செய்வார். விளக்கீடு அன்று நாள் முழுவதும் அசைவம் கிடையாது.

இனி என் வீட்டு விளக்கீட்டைப் பாருங்கள். எனக்குத் தெரியாததால் நோ கொழுக்கட்டை, நோ பால் புட்டு.

IMG_0032 IMG_0034 IMG_0035

IMG_0036 IMG_0038 IMG_0042

IMG_0043 IMG_0044 IMG_0045

IMG_0046 IMG_0047 IMG_0048

IMG_0049 IMG_0050 IMG_0053

IMG_9985 IMG_9986 IMG_9987

IMG_0051 IMG_9990IMG_0055 

முழு நிலவு எதிரே மலை உச்சியில் எட்டிப் பார்த்தது. அதையும் கிளிக்.

IMG_0031IMG_0028 IMG_0030 

இன்னமும் இருட்டானதும் அழகா(?) எடுக்கணும்னு நினைத்துக் கொண்டு மெழுகுவர்த்தி ஏற்றி வைத்துவிட்டு வந்து பார்த்தால் பயபுள்ளை எங்கள் வீட்டுக்கு பின் பக்கமாய் மறைந்துவிட்டது. மலையில் எங்கள் வீட்டுக்கு மேலே இருக்கும் வீடுகளை இடித்துவிட்டு ஒளிந்திருக்கும் நிலவை படம் எடுக்க முடியாதென்பதால் இன்னொரு முழு நிலா நாளில் எடுத்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்தேன். சரிதானே என் முடிவு??

வர்ட்டா..

14 November, 2010

ஆரம்பிச்சிட்டாய்ங்கப்பா!!

அப்பாவோடு பேச வேண்டுமென்று நினைத்துக் கொண்டு கால் பண்ணினால் அப்பாவே ஹலோவினார்.
'ஆரம்பிச்சிட்டாய்ங்கப்பா' என்றேன்.
'என்ன மோனை (செல்லம், குட்டிம்மா, கண்ணு,தங்கம்னு அர்த்தம் இந்த மோனைக்கு) ஆர் என்ன ஆரம்பிச்சது??'
என்றவரிடம் தொடர்ந்து சொன்னதை டைப்புறேன் படிங்க. அம்மாச்சி ஆஃபீசுக்கு கால் பண்ணி சொன்னாங்க.
'அம்மா அப்பாவுக்கு டீ போட்டு குடுத்தேம்மா. நல்லா இருக்குன்னு சொன்னார். வீட்டுக்கு வந்ததும் உங்களுக்கும் போட்டுத் தரேன். சரியா?'
சொன்னது போல் வீட்டுக்குள் நுழைந்ததும் டீ தரப்பட்டது. பாவம் இந்த அப்பாக்கள். மகள் என்ன செய்து கொடுத்தாலும் அமிர்தம் ரேஞ்சுக்கு சுவைப்பாங்க. அம்முவின் மனம் நோகாம நானும் அமிர்தமே என்று சொல்லி விட்டு எந்த அளவில் பால், தண்ணீர், எத்தனை டீ பாக்கெட் சேர்த்து ஒரு கப் டீ செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தேன். அந்த சந்தோஷம்.. அப்பா வாயால் 'பாரு என் பொண்ணை.. என்ன டேஸ்ட்டா செஞ்சிருக்கான்னு' என்ற பாராட்டோடு, முதுகில் ஒரு வருடலும் கிடைக்கும் அந்த சந்தோஷம்.. அனுபவித்த பெண்களுக்குப் புரியும்.

அப்பா இங்கு வந்து நின்ற ஒன்பது மாதங்களில் அப்பா என்று நான் கூப்பிட்டால் என்னடி, என்ன மோனை என்று இரண்டு பதில் வரும். எங்கள் வழக்கத்தில் கணவனை இஞ்சருங்கோ என்பார்கள். அம்மா 'இஞ்சேங்கோ' என்பார். நானும் புதிதில் அப்படித்தான் சொன்னேன். அடுத்தவரிடம் சொல்லும்போது 'இவர்'. நண்பர்கள் கிண்டல் பண்ணுவாங்க. இவர் கிட்ட இதை குடுங்க என்றால் இவர்னா எவர்? இங்க நிறைய இவர் இருக்காங்களே அப்டிம்பாங்க. என் இவர் எவரோ அவர் கிட்ட குடுங்க என்று சொல்வேன். பிள்ளைகளிடம் சொல்வோம் இல்லையா அப்பாவை கூப்பிடுங்க, அப்பா கிட்ட இதை குடுங்க, அப்பா எங்க என்பதாய். அது அப்படியே டைரக்டாக நானே சொல்வதாயும் ஆகி விட்டது. ஒரு வகையில் என் கண்ணாளன் எனக்கு தந்தையுமானவனாய் இருப்பதை இது குறிப்பதாகிறது.


far k இந்த வயதிலும் ஓடி ஓடி உழைக்கும் அப்பா. இரண்டாவது தடவையும் ட்ரைவிங் லைசன்ஸ் ப்ராக்டிக்கல் டெஸ்டில் ஃபெயிலான போது சொன்னார். 'இது எனக்கு சரி வராது மோனை. இனிமே சும்மா காசை கரி ஆக்காம விடப்போறன். என்ன.. அம்மா சந்தோஷப்பட்டிருப்பா பாசாகி இருந்தா' தெரியும். அம்மாவுக்காகவே அப்பா இந்த முயற்சியில் இறங்கினார். மூன்றாவது தடவை எங்களுக்கும் சொல்லாமல் போய் 'மோனை நான் பாசாயிற்றன்' என்று ஆஃபீசுக்கு கால் பண்ணி சொன்னார். தீபாவளியன்று அம்மாவோடு போய் ஒரு வண்டி வாங்கி ஆயிற்று. ஊர் சுத்தி வந்தாச்சா வண்டிக்காரம்மா என்று நான் கேட்டபோது அம்மா முகத்தில் அத்தனை சந்தோஷமும், பெருமிதமும். முன்னெல்லாம் பஸ்ஸில் அலைவதற்குப் பயந்து வெளியே கிளம்பாதவர் இப்போது நினைத்த இடத்துக்கு அப்பாவோடு காரில் போய் வருகின்றார்.


அம்மாவுக்கு அவர் இப்படி செய்தது தவறு என்று எங்களால் சில விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டதால் வந்த அக்கறை இல்லை இது. அப்பா எப்போதும் இப்படித்தான். அக்காச்சி குட்டீசோடு கம்பியூட்டருக்கு சிக்கலாகி விடுகிறதென்று அம்மா ஊருக்கு போய் வந்த போது லாப் டாப் ஒன்று பரிசாகக் கொடுத்தார். செக்கியூரிட்டி கார்டாக வேலை. இரவு பகலென்று ஓட்டம். முதலில் அவருக்கு கிடைத்த யூனிஃபார்ம் கனேடிய போலீஸ் உடை மாதிரியாக இருந்ததால் கருண் என் அப்புச்சி ஒரு போலீசாக்கும் என்று வகுப்பில் தம்பட்டம் அடிப்பார். இப்போது Private Security and Investigative Services பரீட்சையில் பாஸாகி, லைசன்ஸ் உள்ள செக்கியூரிட்டி கார்ட் ஆகி விட்டார். அதற்கு புதிதாக ஒரு யூனிஃபார்ம் கிடைத்திருக்கிறதென்று ஸ்கைப்பில் காட்டினார். இப்படியான தருணங்களில் அப்பாவும் குழந்தைதான்.


ஸ்கைப்பில் பேசிக்கொண்டிருக்கும்போது 'சரியப்பா.. இனி நான் கட் பண்றன். சமைக்க வேணும், படுக்கப் போறன் நல்லா நேரம் போச்சு' என்று உரிய காரணம் சொல்வேன். 'இரு மோனை அம்மா கதைக்க வேணுமெண்டவ.. இந்தா உடன கூப்பிடுறன்' என்றுவிட்டு 'இஞ்சரப்பா.. எங்க நிக்கிறாய்.. சின்னது ஸ்கைப்பில.. கதைக்கோணுமெண்டாய்.. ஓடியா.. அவள் படுக்கப் போறாளாம்.. பன்ரெண்டு மணி ஆகுது அங்கை.. கெதியா வா' என்றபடி லாப் டாப்போடு ஓடுவார் அம்மா இருக்கும் இடத்துக்கு.

இது தான் என் அப்பா. அப்பாவுக்கு கத்திப் பேசத் தெரியாது. அப்பா சண்டை போட்டு நான் இது வரை பார்த்ததில்லை. இது வரை அம்மாவை ’டீ’ என்று சொல்லி நான் கேட்டதில்லை. அம்மாவோடு பேசும்போது எப்போதும் 'ப்பா' சேர்த்துக் கொள்வார். 'மோனை.. என்ன பிள்ளை நீ' என்பாரே தவிர கோவத்தில் ஒரு தடவை கூட வாடா இங்க, வாடி இங்கன்னு எங்களை சொன்னதில்லை. அப்பாவுக்கும் கோவம் வரும். இமை சுருக்கிய பார்வையோடான ஒரு தலையசைப்பில் ஓரிரு நிமிடங்களுக்குள் அது அடக்கி ஆளப்படும். இல்லையென்றால் அப்படி சொல்லப் போறேன், இப்படி செய்யப் போறேன்னு எங்களிடம் சொல்லுவார். அடுத்த நாள் 'இல்லை மோனை.. இரவிரவா யோசிச்சன். இப்படி சொல்லி செய்து என்ன வரப்போது இப்ப.. பேசாம விடுவம்.. என்ன சொல்லுறாய் நீ..' என்று சிரிக்கும் அப்பாவா நேற்று அத்தனை சொன்னார் என்றிருக்கும். என் அப்பாவுக்கு பொன்னும் பொருளும் கொட்டிக் கொடுக்காத கடவுள் பொறுமையை போதும் போதுமென்று கொடுத்திருக்கிறார்.

far அப்பா.. லவ்யூ அப்பா..

என்றும் எப்போதும்

உங்கள் மனநிம்மதி வேண்டி

வேண்டுகிறேன் என் அப்பனை

பிள்ளையாரப்பா

அப்பாவோடு இரு!!

எதுக்கு இப்போ திடீரென்று அப்பா புகழ் என்று கேட்காதீர்கள். இந்த பத்தி அதற்குத்தான். நார்வேயில், நவம்பர் மாதத்தின் இரண்டாவது ஞாயிறு, தந்தையர் தினமாக கொண்டாடப்படுகிறது. அமெரிக்காவிலிருந்து இந்த வழக்கம் இங்கு கொண்டு வரப்பட்டதாம். இன்றைய நாளில் கட்டிலுக்கே ப்ரேக்ஃபாஸ்டை கொண்டுபோய் கொடுத்தல், பரிசு, வாழ்த்து என அப்பாவை சந்தோஷப்படுத்தலாமாம். என் பிள்ளைகளின் அப்பாவான என் அன்புக் கண்ணாளனுக்கு நாங்கள் மூன்றாவது சந்தோஷத்தையே கொடுக்கவுள்ளோம்.

உலகத்தில் உள்ள எல்லா அப்பாக்களுக்கும் என் வாழ்த்துக்கள்!!

வர்ட்டா..

08 November, 2010

வாழ்ந்துவிட்டுப் போகிறேன்!!

✿♥‿♥✿     ✿♥‿♥✿     ✿♥‿♥✿     ✿♥‿♥✿     ✿♥‿♥✿     ✿♥‿♥✿     ✿♥‿♥✿    

என்னை விட்டு                                                                                       vindu

ரொம்பத் தூரம் சென்று விட்டான்

என் கண்ணன்

மனதுக்குள் கதவுகளை

ஒவ்வொன்றாய்

மறக்காமல் மூடிச் செல்கின்றான்

ஒற்றை ஜன்னல் மட்டும் 

எப்போதும் மூடத் தாயாராய்

இறுகப் பிடித்தபடி நான்..

✿♥‿♥✿     ✿♥‿♥✿     ✿♥‿♥✿     ✿♥‿♥✿     ✿♥‿♥✿     ✿♥‿♥✿     ✿♥‿♥✿    

jente klemmer gutt 

நீ எப்படியாவது இருந்துவிட்டுப் போ

என் கண்ணனாயும் இரு

நான் வாழ்ந்துவிட்டுப் போகிறேன்.

 

✿♥‿♥✿     ✿♥‿♥✿     ✿♥‿♥✿     ✿♥‿♥✿     ✿♥‿♥✿     ✿♥‿♥✿     ✿♥‿♥✿    

                                                             greek-statue-1

சிலையாய் செதுக்கினாய்

சிதைந்து கொண்டிருக்கிறேன்

செதுக்கியதோடு

உன் கடமை முடிந்துவிட்டதால்.

 

 

✿♥‿♥✿     ✿♥‿♥✿     ✿♥‿♥✿     ✿♥‿♥✿     ✿♥‿♥✿     ✿♥‿♥✿     ✿♥‿♥✿    

Picture0554 

ஈரக் கையில் ஒட்டிய முடியாய்

உதறியும் விழாமல் உன் நினைவுகள்

உலரும் வரை காத்திருக்கிறேன்

தானாக விழுந்திடுமென்ற தவிப்புடன்!!

 

 

 

 

✿♥‿♥✿     ✿♥‿♥✿     ✿♥‿♥✿     ✿♥‿♥✿     ✿♥‿♥✿     ✿♥‿♥✿     ✿♥‿♥✿    

drøm

 

இப்போதெல்லாம் முன் போல்

கனவுகள் வருவதேயில்லை

முன்போல் உன்னோடான கனவுகள்..

 

 

 

✿♥‿♥✿     ✿♥‿♥✿     ✿♥‿♥✿     ✿♥‿♥✿     ✿♥‿♥✿     ✿♥‿♥✿     ✿♥‿♥✿    

04 November, 2010

ஓ இதான் தீபாவளி(லி)யா??

deepavali-may-this-d-1255385323

காலையில் எழுந்து, தலைக்கு குளிச்சு, புது ட்ரெஸ் போட்டு, குடும்பமா கோயிலுக்கு போய் வந்து அம்மா செய்ற மட்டன் பிரியாணியை ஃபுல் கட்டு கட்டிட்டு, சாயந்தரம் பலகாரங்களை ஒரு கை பாத்தோம்னா முடிந்தது எங்கள் தீபாவளி கொண்டாட்டம்.

முன்னர் இஸ்லாமிய, கிறிஸ்தவ நண்பர்களும், பின்னர் கிறிஸ்தவ நண்பர்களும் வந்து சாப்பிட்டு போவாங்க. அரிசிமா, உழுத்தம்மா, எள்ளு சேர்த்து, எண்ணெயில் பொறித்த பின்னர் சர்க்கரைப் பாகு காய்ச்சி ஊற்றி அம்மா செய்யும் இனிப்பு முறுக்கு ரொம்பப் பிரபலம். பட்டாசும், மத்தாப்பும் சமயத்தில் எங்களுக்கு செலவில்லாமல் அரசாங்கமே வெடித்ததுண்டு. பெரும்பாலும் போர்நிறுத்தம் அமுலில் இருந்தாலும் கூட.

நான் குட்டிப் பெண்ணா இருந்தப்போ அப்பாவின் சிங்கள நண்பர்கள் குடும்பங்களாய் வருவார்கள். வீரா மாமா மட்டும் இன்னமும் நினைவில் ஒல்லியாய், உயரமாய் சிரித்தபடி. முஸ்லிம் நண்பர்களும் அயலவர்களாய் இருந்தார்கள். வந்தார்கள். பின்னர் அவர்கள் ஊரை விட்டு வெளியேற்றப்பட்டபின் கிறிஸ்தவ நண்பர்கள் மட்டும் வந்து போனார்கள். இன்னும் சற்று காலம் சென்றதும் விடுதலைப்புலி வீரர்கள். வந்து, இருந்து, மகிழ்ந்து, போகும்போது மனதில் கனத்தோடு கண்ணீரும் தந்து போவார்கள். சிலசமயம் அண்ணா விடுமுறையில் வருவார். அப்போதுதான் எங்கள் வீட்டில் பண்டிகையே களை கட்டும்.

தீபாவளி அன்று தீபங்கள் எல்லாம் ஏற்ற மாட்டோம். அதற்குத் தனியாக கார்த்திகை விளக்கீடு என்று ஒரு நாள் வரும். நேற்று அம்மாவிடம் கேட்டு அறிந்து கொண்ட வரைக்கும் இந்த மாதம் இருபதாம் திகதி வர இருப்பதாக அறிந்து கொண்டேன். அதைப் பற்றி பின்னர் எழுதுகிறேன். எனக்கும் ஒரு இடுகைக்கு.. புரிகிறதுதானே?

இனி கொசுவத்தியை விட்டு விட்டு நடப்புக்கு வருவோம் என்றால் இற்றைக்கு பனிரெண்டு வருஷத்துக்கு முன் நான் இங்கு வந்ததும் லைட்டாக கொசுவத்தி ஆகி விட்டது. பொறுத்தருள்க. இங்கு வந்த புதிதில் நண்பர்களை அழைத்து விருந்து கொடுத்தோம். பாவம் அவர்கள். பின்னர் குழந்தைகள் பிறந்ததும் எல்லோரும் பிசியாகி விட்டோம். எப்போதாவது நினைவு வந்தால் வாழ்த்துவார்கள். தமிழ்த் தொலைக்காட்சிகளின் புண்ணியத்தால் இப்போதெல்லாம் மறக்காமல் வாழ்த்துகின்றார்கள். கொண்டாட்டம் இல்லாவிட்டாலும் இன்று இன்ன பண்டிகை என்றளவில் பசங்களுக்கு சொல்லிக்கொடுத்திருக்கிறேன். அவர்கள் வளர்ந்ததும் புரிந்து கொள்ளட்டும்.

எல்லோருக்கும் எனது இனிய தீபாவளி வாழ்த்துக்கள் மக்கள்ஸ். ஏனோ இந்த வருடம் உங்களோடு சேர்ந்து கொண்டாடும் நிலையில் என் மனம் இல்லை. எனக்கும் சேர்த்து நீங்கள் மகிழ்வாய் இருங்கள். மகிழ்வின் அலைகளை எனக்கு அனுப்பி வையுங்கள். எனக்காக இந்த பாடலை மட்டும் சேர்த்து வைக்கிறேன். பார்த்து மகிழுங்கள். எம் இளைய தளபதி இல்லாத தீபாவளியா? அது ஆவ்வ்வ்வ் இல்லாத சுசி போஸ்ட் ஆயிடுமே. அப்படியே பாடல் தந்த யூ டியூபுக்கும், கூடல்.காமின் படம் தந்த கூகிளாண்டவருக்கும் நன்றிகள்.

அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!! 
வாழ்த்தில கிளிக்குங்க.. பாடல் வரும்..

வர்ட்டா..