Pages

  • RSS

13 February, 2011

அம்மா என்றால்..

இன்று இங்கே அன்னையர் தினம். என் அம்மாவுக்கும், என் பிள்ளைகளின் அம்மாவுக்கும், உலகத்தில் உள்ள அத்தனை அம்மாக்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.

251 

 258 அம்மாவுக்குப் பொன்னுக்குப் பதில் பொன் போன்றதையும், கூடவே ஒரு கேக்கையும் கொடுத்தோம்.

அப்பா திங்கள் காலை 6 மணிக்கு பயணம். நேற்று அப்பா முதலில் இங்கு வந்து நின்றபோது பழகிய நண்பர்களுக்குச் சின்னதாக ஒரு விருந்து. அம்மாவின் நளபாகம். நிம்மதியாக விருந்தினரை வரவேற்றது சந்தோஷமாக இருந்தது. அவர்கள் அதைவிட நிம்மதியாக வந்திருந்தார்கள் என்பது முகங்களில் தெரிந்தது.

நாங்கள் வாங்கிக் கொடுத்திருந்த கரும் நீலமும், வெள்ளையுமாய் கட்டம் போட்ட சட்டையைப் போட்டபடி குளித்துவிட்டு வந்த அப்பாவை அம்மா கண்நிறையப் பார்த்துக் கொண்டிருந்தார்.

’போதும் என் அப்பா மேல ரொம்ப கண்ணு வைக்காதிங்க’ன்னேன்.

`இல்லம்மா அப்பாவுக்கு சட்டை கொஞ்சம் சின்னதா இருக்கோன்னு தோணிச்சு அதான் பார்த்தேன்’ என்றார்.

‘அடப் போப்பா. நானும் என்னமோ ஆசையா பாக்கறேன்னு நினைச்சேன். இதோ போயி சட்டைய மாத்தறேன்’ என்ற அப்பாவைத் தொடர்ந்து

‘என்னம்மா.. நான் லவ்வில பாக்கறிங்கன்னு நினைச்சா இப்டி புஸ்னு போச்சே. பாவம் அப்பா டோட்டல் டேமெஜ்’ என்றபோதுதான் கவனித்தேன் கண்ணீரில் கண் நிறைந்திருந்தது.

இன்று ஒரு நாள். பின் வரும் இரண்டு மாதப் பிரிவின் தாக்கம் லைட்டாகத் தலைதூக்குகிறது.

’போச்சுடா.. ஊர்ல போய் அழுதது போலவே இங்கேயும் அழப் போறிங்களா’ என்றேன்.

சிரித்தபடி உண்மை சொன்னார். போன வருடம் அக்காச்சியோடு ஊருக்குப் போனார் அம்மா என்று முன்பே உங்களுக்குச் சொல்லி இருக்கிறேனே. நினைவிருக்கா? அங்கு போய் ஒரு வாரம் சென்றதும் இரவில் அழுதாராம். ஒரு மாதம் ஆனதும் அண்ணா, ரஜியின் கிண்டலுக்கு ஆளாகும் அளவுக்கு பகலிலும் அழுதாராம். எப்போடா அப்பாவை பார்ப்பேனென்று ஆகிவிட்டதாம். அதைவிட ஒன்று சொன்னார். இப்போதும் புல்லரித்துப்போகிறது. ஏர்போர்ட்டில் பார்த்த உடனேயே அண்ணாவும் ரஜியும் சாஷ்டாங்கமாக அம்மா காலில் விழுந்து வணங்கினார்களாம். அம்மா ஒரு குழந்தை. குழந்தையும் தெய்வமும் ஒன்றேதானாம்.

வந்தவர்கள் அப்பா இளமையாக இருப்பதாகவும், அம்மாவை அடிக்கடி ஃபோன் செய்து கண்காணிக்கும்படியும் கிண்டல் செய்தார்கள். அதில் மூவருக்கு அப்பாவின் முடி மேல் பொறாமை. ’அடுத்த தடவை வரும்போது பாதி முடி கொட்டி இருக்கும் பாருங்க’ன்னு ஒருத்தர் சாபமே கொடுத்தார். எனக்கென்னவோ அப்பாவும் அம்மாவும் இந்த ஆறு வருட இடைவெளியில் அதிக மாறுதலோடு இருப்பதாகத் தெரிகின்றது. உடலாலும் மனதாலும் அடுத்த கட்ட வாழ்க்கைப் படிக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இந்த வயதில் புலம் பெயர்த்து நடப்பட்ட மரங்கள் வெள்ளை தேச மண்ணுக்குள் இலகுவாக வேர்விட முடியாமல் ஊர்ப் பிரச்சனையும், மன உளைச்சலும் அரித்துக் கொண்டிருக்கின்றன.

உட்கார்ந்தபடியே தூங்கிப்போகும் அப்பா. ஒவ்வொரு படிக்கும் இரண்டு கால்களும் சேர்த்து வைத்த பின் பத்திரமாய் அடுத்த படி இறங்கும் அம்மா. அருகிருந்து பார்த்திருந்தால் இத்தனை ஆச்சரியம் இருந்திருக்காதோ என்னவோ. அப்பா அம்மாவிடம் தெரியும் வயதின் சாயல் மலைக்க வைக்கிறது. மனதை வலிக்கவும் வைக்கிறது. நண்பர் ஒருவர் வந்ததும் ’முதல்ல பாத்ததுக்கு இப்போ எவளவோ தேவலை’ என்று சொன்னதும் என்னோடு அக்காச்சிக்கும் ஆறுதல். உழைப்பின் பின்னே ஓடிய அப்பா இரண்டு வருடத்தின் பின் ஒரு மாத முழு ஓய்வில். அப்பாவைப் பார்த்து மன நிறைவில் அம்மா. அவர்களைப் பார்த்துக் கண்கள் பனிக்க நான். என் பிள்ளையாருக்கு நன்றி.

அம்மாவுக்குப் பிடித்த பாடல் ஒன்று, எல்லா அம்மாக்களுக்காகவும்.. பாருங்கள்.

06 February, 2011

அம்ம்ம்ம்மா..

அம்மா அக்காச்சியோடு ஸ்கைப்பில் பேசும்போது ‘எனக்குத்தான்மா பெரிய்ய்ய்ய கவலை’ என்றார்கள். கிச்சன் நோக்கி போய்க்கொண்டிருந்த நான் ஃப்ரீஸ் ஆகி நின்று தொடர்ந்து கேட்டதில் தெரிய வந்தது. இங்கு வந்ததில் இரண்டு கிலோ வெயிட் போட்டு விட்டார்களாம். அம்மா சாப்பாட்டு நேரத்தை தள்ளிப் போடுவதில் ரொம்ப சமத்து. நொறுக்ஸ் இருந்தால் போதும். டீயும் ரெண்டு பிஸ்கட்டும் கடித்துவிட்டு மதியச் சாப்பாட்டை மாலையில் சாப்பிடுவாங்க. இரவுச் சாப்பாடு தூங்க முன். போதாதென்று டீ குடிக்கப் போகும்போது எங்களுக்கும் வேண்டுமா என்று தவறாமல் கேட்பாங்க. வயிறு கும்மென்று இருந்தாலும் அம்மா டீயின் சுவை ஆம் சொல்ல வைக்கும். நேற்று எதேச்சையாகக் கவனித்தேன். தன் பங்கு டீக்குள் ஒரு டேபிள் ஸ்பூன் அளவு போலவே பால் சேர்த்தார்கள். ஏனென்றேன்.

‘எடை கூடுதும்மா. இதிலை நிறைய பால் வேற குடிச்சா இன்னமும் எடை கூடிடும் இல்லை’

#####

ஏறிப் போகும் எடையைப் பார்த்து நானும் மிரண்டு கொண்டு இருக்கிறேன். அம்மா எடையை அல்ல. என் எடையை. அம்மா தான் குண்ண்ண்டா இருப்பதாகவே எப்போதும் சொல்வாங்க. இப்போது என் பக்கத்திலை குட்ட்ட்டியா இருக்காங்க. வேலை எல்லாம் அம்மாவே முடித்துவிடுவார்கள். வீட்டில் வெட்டியாக இருக்கிறேன். அதனால் அம்மா வந்ததிலிருந்து பயத்தில் எடை பார்க்கவில்லை. ஆஃபீஸ்ல இருந்து வந்து சாப்பிட்டு நேராக அப்பா பக்கத்தில் சோஃபாவில் உக்கார்ந்து விடுவேன். மடியில் லாப் டாப். அவர்களோட பேசியபடியே லைட்டாக கண் சொக்கும், த்லை சாயும், ஆனால் காது நன்றாகக் கேட்கும். இதுதான் உண்ட களையென்றால் அதுதான் அப்போது எனக்கும். அம்மா அப்பாவிடம் சொன்னார்.

‘பாவம்ங்க என் பொண்ணு. நான் வந்ததுக்கு இளைச்ச்ச்ச்சுப் போய்ட்டா. முகமெல்லாம் எப்டி ஒட்டிப் போச்சு பாருங்க. ஆஃபீஸ்ல நாள் முழுக்க வேலை. அது முடிச்சு வீட்டுக்கு வந்தா இந்த எழுதுகோலை மடில வச்சு எழுத்துவேலை.. ரெஸ்ட் எடுக்கவே மாட்றா’

#####

எங்களுக்கு நிறைய வாங்கி வந்ததில் லக்கேஜில் இடம் இல்லாமல் அம்மாவின் சாரி ஒன்றுதான் வந்து சேர்ந்திருக்கிறது. கோயிலுக்குப் போக இன்னம் கொஞ்சம் நல்லதாக ஒன்று கட்டச் சொல்லி என்னிடம் இருந்த சாரிகளைக் காட்டினேன். ஆரஞ்சில் ஒன்றை எடுத்தார்கள். வேறும் சிலதும் எடுத்துக்கொள்ளச் சொன்னேன். அங்கே கிளாசெட் நிறைய வைத்திருக்கும் சாரிகளோடு இதையும் கொண்டு போனால் அக்காச்சி திட்டுக்கு ஆளாகும் அபாயம் நினைவு வந்ததோ என்னவோ, அப்பாவிடம் காட்டிச் சொன்னார்கள்.

‘என்ன பொண்ணுங்க இவ. என் வயசுக்காரங்க கட்ற சாரில்லாம் கட்டிட்டு இருக்கா. இத நானே எடுத்துட்டு போறேன். அங்க போயி இத விட நல்லதா இவளுக்கு ஏத்தாப்ல பார்சல் பண்றேன் பாருங்க’

#####

காரில் போய்க்கொண்டிருக்கும்போது இங்கே எந்த காருக்கு மவுசு ஜாஸ்தி, விண்டர் வெதர் + மலைப்பாதைக்கு ஏற்றது எது என்று கண்சும் அப்பாவும் பேசிக்கொண்டு வந்தார்கள். எல்லாம் கேட்டுக் கொண்டு வந்த அம்மா கடைசியில் சொன்னார்கள்.

‘கனடாலன்னா Honda CRV தான் நல்லதுன்னு எல்லாரும் சொல்வாங்க’

அப்பா அம்மாவுக்கு ஏறி இறங்கக் கஷ்டமில்லாமல் இருக்கவென்று பார்த்துப் பார்த்து வாங்கிய வண்டியின் பெயர் என்னவென்று இப்போ நான் சொல்லணுமா என்ன.

#####

நான் டைனிங்டேபிளில் இருந்து எழுதுகோலில் இதை எழுதிக் கொண்டிருக்கிறேன். அம்மா அப்பாவுக்கு ரொட்டி (மாவை பரோட்டாவுக்குப் போல குழைத்து, சப்பாத்தி போல் தட்டையாகச் சுட்டால் எங்கள் ஊரில் ரொட்டி) சுட்டுக்கொண்டிருந்தார். கொஞ்சம் கருகிய வாசம் வந்ததால் என்னவென்று கேட்டேன். அதெல்லாம் இல்லை எல்லாம் பதமாக இருப்பதாகச் சொன்னவர்கள் என்னைக் கடந்து அப்பாவுக்கு எடுத்துப் போகும்போது சொல்லிக் கொண்டு போகிறார்கள்.

‘கொஞ்சம் கருகிப் போச்சுத்தான். ஆனா அப்பாவுக்கு அதுதான் பிடிக்கும்’

#####

j 014 (3)

03 February, 2011

புது வருஷம்.

வருஷம் பிறந்து ஒரு மாதம் ஆன பின்பு அட அதுக்குள்ளை இவளவு நாள் போயிடிச்சே என்று கவலைப்படுபவர்கள் பலர். அப்பாடா ஒரு மாசம் போயாச்சு என்று நிம்மதி அடைபவர்கள் சிலர். சிலரும் பலரும் மாறலாம். புது வருஷம் தரும் நினைவுகள், சந்தோஷங்கள் இலகுவில் மனம் விட்டுப் போவதில்லை. வருடத்தின் தொடரும் நாட்களில் இடையில் எங்காவது அவை வந்து வந்து போகும். ’வருஷம் பிறக்கும்போதே தெரியும் எனக்கு நல்லா இருக்கும்னு’ என்று சிரிப்பவர்களும், ’ச்சே.. வருஷம் பிறக்கும்போதே தெரியும் இந்த வருஷம் இப்படித்தான் இருக்கும்னு’ என்று சலிப்பவர்களும் ஒன்றில் நாமாகவோ, இல்லை வேறு யாராகவோ இருக்கலாம். ஏதோ சொல்ல வந்தேன். ரொம்பக் குழப்பமா இருப்பதாக எனக்கே தோன்றுவதால் இதை இத்தோடு விட்டு விடலாம்.

ஒவொரு நியூ இயர் ஈவ்க்கும் கண்ஸ் ஃப்ரெண்ட் வீட்டில் டின்னர். ஃப்ரெண்ட் பிறந்த உடனே நர்சுக்குப் பதில் கடிகாரம்தான் கண்ணில் பட்டிருக்கும்போல. இம் முறை(யாவது) சொன்ன டைமுக்கு போக வேண்டுமென்று கண்ஸ் சபதம் போடாத குறை. ‘நாலு முப்பதுக்கு நீ ரெடி ஆகலைன்னா பெரிய வண்டி எடுத்துட்டு வருவே நீ. நான் கிளம்பிடுவேன்’ என்ற அவரின் மிரட்டலை கொலைமிரட்டலாக்கியது குவிந்திருந்த ஸ்னோவும், உறைந்திருந்த தெருக்களும். சரியாக 16:50 க்கு காலிங் பெல்லை அடித்தவர்களைப் பார்த்து நண்பர் குடும்பம் மயக்கம் போடாத குறை. ஒரு நண்பியின் மூன்று மாதக் குழந்தையோடு நான் ஐக்கியம். குழந்தைகள் என்றும் சொர்க்கம்.

நண்பர்கள் பாட்டிலோடு ஒன்று கூடியபோது நண்பிகள் சாப்பிட்டு முடித்தோம். ‘எங்கேங்க என் ரெண்டாவது பையன். கண்லவே காண்லை நான்’ என்று மேலே சொன்ன மூன்று மாதக் குழந்தையை தூக்கி வைத்திருந்த என்னைப் பார்த்து நண்பர் கேட்டதும் விளையாட்டு என்றுதான் நானும் முதலில் நினைத்தேன். இரகசியமாக அவரை கட்டிலில் படுக்க வைத்துவிட்டு மற்றவர்கள் வந்தபோதுதான் அவர் நிலை புரிந்தது. யாராவது ஒருத்தர் இப்படியான டின்னர்களில் மட்டையைப் போட்டுவிட்டால் அவர் தலை அல்ல ஆளே உருட்டப்படும் என்ற நியதிக்கும், அவரின் மனைவி உடனேயே மூட்டையைக் கட்டிக்கொண்டு கிளம்ப முயல்வார் என்ற வழக்குக்கும் ஏற்ப நிலைமை கொஞ்சம் மோசமாகியது.

அவரை தெளி நிலைக்குக் கொண்டு வரவென்று அவரவர் அனுபவத்தை சொல்லி பிளாக் காஃபி, சாக்லெட், ஜில்லென்று தண்ணீரில் தொடங்கி என்னென்னவோ எல்லாம் செய்து வாந்தியில் கொண்டுவந்து தூக்கத்தில் முடித்தார்கள். அவரை வாரியது அலுத்துப் போய் ஏதாவது பாடலாமே என்று ஆரம்பித்தோம். அவர்கள் எல்லோருக்கும் பழைய/80 களின் பாடல்களே பிடித்திருந்தது. புதுப் பாடல் பக்கம் யாரும் வரவில்லை. ஒரு குத்துப்பாடல் கூட இல்லாமல் காது வலித்தது. அட சாமிகளா.. ஏன் இப்டி அழுது வடியறிங்க. வேற பாடுங்களேன்’ என்றேன். என்னையே பாடச் சொன்னார்கள். ‘சூப்பரா ஒரு சிணுங்கல் பாட்டு பாடலாமா’ என்று கேட்டு ஒட்டு மொத்த ஆமோதிப்பையும் வாங்கிக் கொண்டு ஆரம்பித்தேன்..

‘நிலாக் காயுது.. நேரம் நல்ல நேரம்..’

சிரிப்புச் சத்தத்தில் ‘பித்தம்’ தெளிந்து எழுந்து வந்தார் மட்டையைப் போட்ட நண்பர். மீண்டும் களைகட்டியது அவர் தலை உருட்டும் படலம். கூடவே ஸ்வீட், காரம், சூடா டீ வேறு. சொல்ல மறந்துவிட்டேன். நண்பரின் ஸ்பெஷலே அவர் செய்யும் டெசர்ட்தான். ஒவொரு வருஷமும் புதிது புதிதாகத் தேடிப் பிடித்துச் செய்வார். அதை அவர் ப்ரசண்ட் பண்ணும் விதமும் அற்புதமாக இருக்கும். அந்த நேரத்தில் யாருக்கும் கிச்சனுக்குள் நுழைய அனுமதி இல்லை. இராணுவ ரகசியம் ரேஞ்சுக்கு ரெசிப்பியையும் பாதுகாப்பார்.

புது வருஷம் பிறக்கும் நேரம் எங்கள் வீட்டில் சாமி விளக்கு ஏற்றுவோம் என்பதால் நாங்கள் அரை மணி முன்னதாகவே கிளம்ப ஆயத்தமானோம். மற்றையவர்களும் கிளம்புவதற்குத் தயாரானார்கள். அப்போது முழுத் தெளிவானாலும் சிந்தனை வசப்பட்டிருந்த நண்பர் கேட்டார்..

‘நீங்க குடிச்ச வைன் தானேடா நானும் குடிச்சேன். எனக்கு மட்டும் ஏன் இப்டி ஆச்சு??’

உங்களுக்கு பதில் தெரிஞ்சா சொல்லுங்கள் நண்பர்ஸ்.

அத்தனை அழகாய், வண்ண வண்ணமாய் வெடிகள் வானை அலங்கரித்தன. நான் எடுத்த ஃபோட்டோவில் எல்லாம் நீஈஈஈஈளமாக மஞ்சள் வண்ணக் கோடுகள் மட்டுமே தெரிந்தன. சதுர் கொளுத்திப் போட்ட வெடிகளை விட பனி காரணமாகப் புகையே அதிகமாகத்  தெரிகிறது.

107 108

வர்ட்டா..