Pages

  • RSS

30 January, 2011

கொலைஞர்!!

’இண்டைக்கு சந்தேல மீன் குறைவு. கன்போட் நங்கூரம் போட்டிருக்காம்’

சந்தைக்குப் போய் வரும் அப்பாவோ, அப்புச்சியோ அம்மாவிடம் சொல்வார்கள். பின் எப்படி மீன் வந்தது? அவர்கள் வீட்டில் அடுப்பெரிய வேண்டுமே. உயிரை மறந்து படகோடு போவார்கள். பல சமயம் வள்ளம் மட்டும் எங்காவது கரை ஒதுங்கும். ’அப்பாவை நேவி சுட்டிட்டான் டீச்சர். அதான் கொப்பி வாங்கக் காசில்லை எண்டு அம்மா சொன்னவ’ என்று என் தோழி சொன்னதையே  ’சோதினைக்காசு அம்மா அடுத்த கிழமை தாறாவாம். அப்பாவை நேவி சுட்டதாலை வீட்டிலை காசில்லை டீச்சர்’ என்று என் மாணவியும் சொன்னாள்.

நெய்தல் நிலம் எங்கள் ஊர். அலை ஓசையோடு அவ்வப்போது நேவியின் போர்க்கப்பல் ஓசையும் சேரும்போது உயிர் பதைக்கும். அடிக்கடலில் ஒரு புள்ளியாய் தெரியும் நங்கூரம் பாய்ச்சிய கப்பல். எக்கணமும் குண்டு பொழியும். தம் உயிர் சிதறடித்து எம் உயிர் காத்த கடற்கரும்புலிகள் இல்லாது போயிருந்தால் இன்று மிச்சமிருக்கும் தமிழர்கள் எண்ணிக்கையில் இன்னமும் குறைவாய் இருந்திருப்போம்.

கத்தினோம், கதறினோம், போராடினோம்.. எத்தனை முடியுமோ அத்தனையும் செய்தோம். காதில் போட்டானா காதகன்?? பெண்ணென்றால் பேயும் இரங்குமாம். பேயாய் ஒரு பெண் தன் பங்குக்கு அழித்தாள். தன் இனமே தன்னைக் காட்டிக் கொடுத்தும், கூட்டுச் சேர்ந்தும் அழிக்கும்போது என்னதான் செய்ய முடியும் எம்மால்??

அழிந்தோம்.. அழிகிறோம்.. அழிவோம்..

கடைசித் தமிழன் இருக்கும் வரை இதுதான் எம் நிலை. தமிழனாய் இரு போதும். நீ இந்தியனா இலங்கையனா என்பதை சிங்களவன் குண்டுகள் பார்ப்பதில்லை.

ஊரில் இப்போது எப்படி இருக்காங்க எல்லாரும்?? எவர் கேட்டாலும் என் பதில் ரொம்ப நல்லா இருக்காங்க. நிம்மதியா இருக்காங்க. அதற்கு மேல் சொல்லத் தோன்றுவதில்லை. முடிவதில்லை. உள்ளே உறுத்தும் உணர்வு வேறு சொல்கிறதே. எத்தனை நாளைக்கு என்ற கேள்வி முட்டி மோதுகிறதே. என் அண்ணன் குடும்பங்களின் உயிருக்கு உத்தரவாதம் அடுத்த நொடி கூட இல்லை. இந்த நொடி வரைதான். எந்த நொடியும் நிலமை தலைகீழாகலாம். எதிர்காலம் பற்றிய பயத்தையும் தன்மானத்தோடு சேர்த்துப் புதைத்து விட்டு நாளையை மறந்துவிட்டு, இன்றை வாழ்கிறார்கள் என் அண்ணன்கள் போலவே தமிழராம் எம் இனத்தவர்.

போன வாரம் நெகிழ்வான ஒரு பேச்சின்போது அண்ணா சொன்னார்.

“எல்லாம் பாத்தாச்சுடி. மத்தவங்களை விடு. நானே பசி, தாகம், வறுமை, நோய், பிரிவு, சாவு எல்லாம் அனுபவிச்சாச்சு. செத்துட்டேன்னு நினைச்சு, ஏண்டா இன்னும் சாகாம இருக்கேன்னு நினைச்சு அத்தனை அவமானமும் பட்டாச்சு. இனிமே மிச்சமா இருக்கிற இந்த வெத்து உயிரை வச்சுட்டு  என்ன செய்யப் போறேன் தெரியுமா? என்னாலை எவளவு முடியுமோ.. அவளவு.. என் குடும்பம் மட்டுமில்லாம எல்லாரையும் சந்தோஷமா வச்சுக்கப் போறேன். நீங்க எல்லாரும் சந்தோஷமா இருக்கணும்டி. நான் இனிமே அத மட்டும்தான் கேக்கணும். பாக்கணும்”

வார்த்தை வரவில்லை எனக்கு. அண்ணா எப்போதும் இப்படி பேசமாட்டார். என்றாவது தான் தன் மனம் திறப்பார். இன்னமும் மனதில் அண்ணாவின் வார்த்தைகள். வேண்டிக்கொண்டே இருக்கிறேன். அண்ணாவோடு அத்தனை பேருக்குமாக.

ரஜி முதல் முதல் சண்டைப் பகுதியில் இருந்து முகாமுக்குள் வந்ததும் பேசியபோது சொன்னான்

“நான் என்ன வேணா செய்வேண்டி.. குண்டுச் சத்தம் கேக்கிற ஒரு இடத்துக்குள்ளை என் வாழ்க்கேல இனிமே போகமாட்டேன்”

இதன் அர்த்தம் புரிகிறதா உங்களுக்கு?? அப்பா பிள்ளையாக இருந்தபோதும் உயிர்ப் பயம் இருந்தது. ஆனால் இப்போது போலில்லை. என் பிள்ளையாவது ஒரு வாய்க் கஞ்சி உயிர்ப் பயம் இல்லாமல் குடிக்க வேண்டுமே என்பதே அத்தனை பேரதும் தேவையாக ஆகிவிட்டது.

வந்தது வயிற்றுப் பிழைப்புக்கென அப்பாவித் தமிழக மீனவன் என்று சிங்களவனுக்கு நன்றாகவே தெரியும். இருந்தாலும் அவனுக்கு இன்னமும் சொல்வதற்குக் காரணம் இருக்கிறது. எங்கேயோ தப்பிப் போன விடுதலைப்புலி வந்தான். அதான் சுட்டோம். உலகமும் அதை நம்பும். அவனை மன்னிக்கும். நாளையே மறந்தும் போகும். புதிதாய் எந்த நாட்டில் சண்டை மூட்டி ஆயுத ஏற்றுமதி செய்யலாம் என்று ஆதாயம் தேட யோசிக்கும். என் இந்தக் கருத்துத் தவறாக இருக்கலாம். எனக்கு அரசியல் புரிவதில்லை. ஈடுபாடும் இல்லை. ஆனால் மனம் கொதிக்கிறது. இது்ரை கண்ட, கேட்ட, அனுபவித்த கண்ணீர்க் கணங்கள் மீண்டும் மனதை நிறைக்கிறது. இதுவரை இழப்பைச் சந்தித்த மீனவக் குடும்பங்களின் கண்ணீருக்கும், எங்கள் கண்ணீருக்கும் வேறுபாடு இல்லாதது போலவே தீர்வும் இல்லை. தமிழ் வளர்க்கத் தெரிந்தவருக்குத்  தமிழன் உயிர் காக்கத் துப்பில்லாது போனது தமிழரின் சாபக்கேடு.

அழிப்பான். கடைசி இலங்கைத் தமிழன் அழியும் வரை சிங்களவன் அழிப்பான். விடுதலைப்புலி என்ற பட்டத்தோடு அவன் குண்டுக்குத் தேவை ஒரு தமிழன்.

ஒருநாள். அவன் தனிப்பட்ட வாழ்வில் என்றாவது ஒருநாள். எல்லார் கண்ணீருக்கும் அனுபவிப்பான். ஏதோ ஒரு வகையில் வலி அவனாலும் உணரப்படும். யார் என்ன சொன்னாலும் எனக்கு அதில் நிறையவே நம்பிக்கை இருக்கிறது. என் தெய்வம் நின்று கொல்லும்!!

stop nå

23 January, 2011

தைரியமா வாங்க.

வெள்ளி நைட் அம்மா வந்ததில் இருந்து சனி தொடங்கி ஞாயிறு வரை நான் தான் வ போ அத்தனை வீட்டு வேலையும் செய்தேன். அம்மா பாவம். ரெஸ்ட் எடுக்கணும் இல்லையா. திங்கள் நான் வேலைக்கு போனதிலிருந்து வீடு அவங்க கண்ட்ரோலில். அவ்வளவு இன்பமாகத்தான் இருக்கு. வீட்டுக்குள் வந்து கதவு திறந்ததுமே அம்மாவின் கைமண வாசனை. கூடவே ஃபுட்பால் மேச் சத்தம் அதிகமாக கேட்கும் வீட்டில் அப்பா பார்க்கும் கிரிக்கெட் மேச் சத்தம். கொடுத்து வைத்த நாட்கள்.

--

அம்மா சமையலின் ரெண்டாம் நாள். கருவாட்டு குழம்பு.

‘என்னம்மா சொன்னார் உங்க மருமகன்?’ நான் கேட்க

‘சாப்டு போய்ட்டார்மா. பாஆஆஆவமா இருந்திச்சு பார்க்க’ என்று அம்மா பதிலினார்.

ஒரு வேளை இத்தனை நாள் கழிச்சு நல்லதொரு சாப்பாடு சாப்டார் மனுஷன் என்ற அர்த்தத்தில் சொல்லி இருப்பாங்களோ?? கேள்வியை அடுத்த வாய் சோற்றோடு சேர்த்து முழுங்கிவிட்டேன். அம்மா இருக்கும் இந்த மூணு மாசத்துக்குள் தைரியமா எங்க வீட்டுக்கு சாப்பிட வாங்க. அப்புறம் சொல்லவே இல்லைன்னு சொல்லக் கூடாது.

--

ஸ்கைப்பில் அந்தப் பக்கம் அக்காச்சி. இந்தப் பக்கம் சோஃபாவில் கால் நீட்டியபடி அப்பா. அப்பாவின் அருகிலே இடது நெஞ்சில் சாய்ந்து படுத்தபடி நான். என் தலையில் ஆதரவாய் அப்பாவின் இடக்கரம். வலது நெஞ்சில் சாய்ந்து படுத்தபடி சதுர். சதுரை அணைத்துக் கொண்டு அப்பாவுக்கும் அவருக்கும் இடையில் எட்டிப் பார்த்தபடி அம்மா. காட்சி புரிந்ததா மக்கள்ஸ்?? ’என்னம்மா டல்லா இருக்கே’ என்று கேட்ட அப்பாவுக்கு ’ஒண்ணுமில்லைப்பா’ என்ற பதில் கொடுத்தாள் அக்காச்சி. ரெண்டு நிமிஷம் ஆனதும் ‘என்ன.. ஒருத்தங்க ரொம்ப பொழியறாங்க போலை` என்றாள். ’இவங்களா??’ என்று என் தலையில் கையால் சற்று அழுத்திக் காட்டினார் அப்பா.

‘ம்ம்.. அவங்களேதான். மவளே ஒரு மாசம் மட்டும்தான் உதெல்லாம் உனக்குன்னு நினைச்சுக்கோ’

என்று அவள் சொன்னதில் நான் அனுபவித்தது நினைவு வந்தது. உங்களுக்கு நினைவிருக்கா?? ஊருக்கு அக்காச்சி போயிருந்த பொழுது.. டவல் வச்சிருக்கிங்க இல்லை எல்லாரும். அதே உணர்வுதான் அவளுக்கு இப்போது. இந்த நேரத்தில் நானும் கூட இல்லையே என்ற ஏக்கம், கவலை,  இத்தனூண்டு பொறாமை.

--

இப்போது தம்பதி டென்மார்க்கில். பத்து வருடத்தின் பின் சித்தியையும், முதல் முதலாக தம்பி, தங்கச்சியையும் அம்மா பார்த்திருக்கிறார். அதிகமா சித்தியை கவலைப்படுத்த கூடாது என்ற கட்டளை மாதிரியான எங்கள் வேண்டுதலுக்கு அடங்கி அம்மா அடக்கி வாசித்திருக்கிறார். வேலை முடிந்து வரும் தங்கச்சிக்கு அவளவு வரவேற்பு. ’அம்மாவுக்கு எதிர் பெரியம்மா, நிறைய்ய்ய பேசுறாங்க’ என்று என்னிடம் சொன்னவரிடம் ’என்னை மாதிரியாம்மா’ என்று கேட்டேன்.. சிரிக்கிறார். நேற்றுத்தான் யூனிவர்சிட்டியில் இருந்து தம்பி வந்தார். வெடித்து அழுத அம்மாவை அழாதிங்க பெரியம்மா என்று தேற்றியபடி அத்தனை பேரும் அழுதிருக்கிறார்கள். நான் எப்போதும் சொல்வது போல் கண்ணீரும் சமயத்தில் தேவைதான் இல்லையா. சித்தப்பா இப்போதும் எங்களோடு இருந்திருந்தால்..

--

அம்மு ஆல்ரெடி ஒரு நாள் அம்மம்மாவோடு தூக்கம். புதன் கிழமை அவர்கள் திரும்பி வந்ததும் போட்டு வைத்திருக்கும் டைம்டேபிளின் படி இனி தினமும் சதுரும், அம்முவும் அம்மம்மாவோடு தூக்கமாம். ’அப்போ நானு??’ என்று நான் கேட்ட கேள்வி யார் காதிலும் விழவில்லை. பொறுத்திருக்கிறேன். நான் ஒரு தனி பிளானோடு. ஹஹாஹா.. அப்படியே வில்லி சிரிப்பு மாதிரி இல்லை??

--

அக்காச்சி என்னிடம் கவனம்ம்ம்ம்மா சேர்க்கச் சொல்லி அம்மாவிடம் அனுப்பிவிட்டிருக்கா. யாரையென்று பாருங்கள். இவர்தானாம் அவங்க இடத்தில் இருக்கிற வரசித்தி விநாயகர். இப்படி எதுவாவது எழுதி, சொல்லி, செய்து என்னை கண்ணை கசக்க வைப்பதே அவள் வேலை. லவ் யூ அக்காச்சி.

006 அவர் அருள் கிடைத்து யாவரும் நலமா இருக்கணும்.

 

 

 

 

 

வர்ட்டா..

19 January, 2011

ஹா(ர்)ட்ஸ் ஆஃப் டூ யூ விஜய்!!

இன்னமும் பேசிக் கொண்டே இருக்கிறோம். ஏதாவதொன்றில் காவலன் வந்து போகிறான். ரொம்ப நாளைக்கு அப்புறம் நான் அறிந்த எல்லோரையும் திருப்திப்படுத்தி இருக்கிறார் விஜய் எனும்போது என் சந்தோஷம் பற்றி சொல்லத் தேவையில்லை. தியேட்டர் வந்திருந்தவர்களில் யாரும் படத்தை குறைவாக சொல்லவில்லை. வெளியே வரும்போது பின்னால் வந்த ஒருவர் சொல்லியது ‘நல்லவேளை.. வீக் எண்ட்ல மட்டும் போட்டிருந்தா லேட்டா வந்த எனக்கு சீட் கிடைச்சிருக்காது’ வேலை நாளையும் பொருட்படுத்தாமல் நிறைவான கூட்டம். இன்னொருவர் ‘இன்னொரு ஷோ ஓட சொல்ணும்பா. மனுஷன் அசத்திட்டான் போ’ என்பதாய் சொல்லிக் கொண்டு போனார்.

பெரிய ஒரு குறை. டிக்கட் வந்து சேரவில்லையாம். குட்டியாக ஒரு சீட்டுத்தான் கொடுத்தார்கள். டிக்கட்டை போட்டா பிடிச்சு பிளாக்கில் போடுவதை அவர்களிடம் சொல்ல முடியாதே. 6 மணிக்கு படம். நாங்கள் உள்ளே போனபோது மணி 5:15. அப்படியும் பின் வரிசைகள் முழுவதும் ஃபுல். ஜாக்கெட், மஃப்ளர், சீட்டுக்கொன்றாக ஒரு கிளவ்ஸ், பாப்கார்ன் பாக்ஸ் என்று வைத்து சகட்டுமேனிக்கு இடம் பிடித்து வைத்திருந்தார்கள். இடையிடையே ஒன்றிரண்டு காலியாக இருந்ததே ஒழிய 6 சீட் மொத்தமாக கிடைக்கவில்லை. வேறு வழியின்றி முன்னிருந்து ஐந்தாவது வரிசையில் 6 சீட்களில் நானும் துண்டை போட்டேன்.

நேற்று கிளம்பும்போதே அப்பா என்ன சொல்வாரோ என்ற எதிர்பார்ப்போடுதான் போனேன். அப்பாவுக்கு விஜய் பிடிக்காது. ரொம்ப நாளைக்கு அப்புறம் தியேட்டர் போவதன் மகிழ்வு ரேகைகள் அம்மா முகத்திலும் தெரிந்தது. அம்மாவுக்கும் விஜய்.. ம்ஹூம்.. கண்ணாளன் அசின் ரசிகன் என்பதால் கவலை இல்லை. ஆனால் அசின் கொஞ்சம் பெரிய பொண்ணா ஆயிட்டாங்க போலன்னு எனக்கு போலவே அவருக்கும் தோணிச்சாம்.

’பரவால்லை.. விஜய் இந்த படத்திலை நல்ல நடிப்பு. முடிவு கொஞ்சம் வேற மாதிரி இருந்திருக்கலாம். மத்தபடி எல்லாமே நல்லாருக்கு’ என்று அப்பா சொன்னார். கடைசிக் காட்சிகளில் அம்மா அடிக்கடி கண்ணாடி கழற்றி கண்ணீரை துடைத்துக்கொண்டு இருந்தது என் கண்ணீர்க் கண்களுக்குள் நன்றாகத் தெரிந்தது. வீட்டுக்கு வந்ததும் ஸ்கைப்பில் அம்மா படம் பற்றி அக்காச்சியிடம் புகழ்ந்து கொண்டிருந்தார். ’விடுங்கம்மா. அவளே போய் பார்க்கட்டும். அப்போதான் இன்னும் நல்லாருக்கும். ஆனா கட்சில அம்ஸ் அழுதிச்சு அக்காச்சி. பக்கத்திலை மருமகன் இருக்கும்போதே இந்த பொண்ணு விஜய இவ்ளோ சைட் அடிக்குதேன்னு நினைச்சுது போல. அப்பா கைல வேற அடிக்கடி எட்டி எட்டி தட்டிட்டே இருந்துச்சு’ என்றேன். ‘அய்யோ அப்டில்லாம் இல்லைம்மா. அது அப்பாவுக்கு சாக்லெட், பாப்கார்ன் குடுத்தேன். அதோட எனக்கு ரொம்ப கவலையா போச்சும்மா.. அந்த குட்டிப் பையன் வந்ததும்.. அதுக்கு பின்னாடி நடக்குறதும்’னாங்க.

எனக்கும் ஒரு சின்னக் குறை. ஸ்டெப் ஸ்டெப் பாடல் இன்னும் கொஞ்ஞ்ஞ்சம் நல்லா வந்திருக்கலாம். வேறு ஒரு சந்தர்ப்பத்தில் இந்த பாடல் வருவதால் என் எதிர்பார்ப்போடு பொருந்தவில்லை. வடிவேலும் விஜயும் சேர்ந்து செய்யும் காமெடியில் வயிறு புண். சதுவும், அம்முவும் அத்தனை சிரிப்ப்ப்ப்பு. இந்தப் படத்தை யாராச்சும் ரீமேக் செய்யலாமேன்னு நான் ரத்த சரித்திரம் பாத்திட்டு எழுதினது போல எதாவது உளறி வச்சிடுவேன்னு நினைச்சுதோ என்னவோ ரெண்டு நாள் முன்னதாகவே ஒரு நட்பு அடிக்கடி சொல்லிச்சு இதோட ஒரிஜினல் நான் பாத்திருக்கேன்னு.

நீ எப்டி இருந்தா என்ன. எனக்கு உன் மனம்தான் முக்கியம். நீ இல்லை என்பதாய் அம்முவிடம் சொல்லும்போது என் பள்ளி நாட்களில் எனக்கும் என் உயிர் நட்புக்கும் நடந்த ஒரு நிகழ்வு நினைவு வந்திச்சு. அவ கிட்ட சொன்னேன் உதைக்காத குறை எனக்கு. அது பத்தி தனி போஸ்ட்ல சொல்றேன். யாரது பாடலில் ரெண்டு விஜயும் வேறுபட்ட நடிப்பில் அவ்ளோ அசத்துறாங்க. பார்க்கில் அசினை அம்முக்குட்டியாக நினைத்து பேசிப் பார்க்கும் இடம் அருமை. இப்போ நீங்க எனக்காக வேண்டிக்கோங்கன்னு அசினிடம் சொல்லும்போது மூக்கை சுழிப்பது செம க்யூட். பாருங்க. இத்தோட நான் முடிக்கலைன்னா அப்புறம் முழு படத்தையும் இங்க சொல்லிடுவேன். அதனால இந்த படத்தை இப்போ பாருங்க. இஷ்டப்பட்டவங்க தியேட்டர்ல போய் படத்தை பாருங்க. காவலன் கலக்கல். விஜய் விஜய் தான்.

Kaavalan_vijay

14 January, 2011

அம்மா செல்லமா.. அப்பா செல்லமா..

என் மனச் சிதறல்கள் பாலாஜி சரவணா போன வருஷம் நடைபெற்ற முக்கியமான நிகழ்வுகள் பற்றி எழுதச் சொல்லி ஒரு தொடர் பதிவுக்கு அழைத்திருந்தார். ரொம்ப நன்றி நண்பரே. எனக்கு தொடர் பதிவு எழுதுவதில் கஷ்டமில்லை. அதைத் தொடர யாரைக் கூப்பிடுவது என்பதில்தான் படு சிக்கல். நல்லவேளையாக இந்த வருஷம் வந்த முதல் தொடர்பதிவுக்கான அழைப்பில் எனக்கு அந்த சிக்கல் இல்லை. என்னைத் தவிர எல்லாரும் எழுதிவிட்டார்கள். உஸ்ஸ்ஸ்ஸ்..

போன வருஷம்.. ஊரில் உறவுகள் ஓரளவேனும் நிம்மதியாக இருக்கிறார்கள் என்பதே மிகப் பெரிய ஆசுவாசம். அது தவிர குறிப்பாக ஒரு விஷயம் மனதை புரட்டிப் போட்டு மாயை காட்டுகிறது.. சொன்னால் குவலயம் தாங்காது என்பதால் விட்டு விடுகிறேன்.. சும்மா பொத்தாம் பொதுவில் சொல்வதானால் சென்ற வருஷத்தில்

குறையாத கண்ணீர்..

நிறைவான சந்தோசம்..

மனம் நிறைந்த வலி..

உயிர் நிறைந்த காதல்..

சில புதிய நட்புகள்..

பல இனிய நாட்கள்..

பொய்த்துப்போன உறவுகள்  தந்த  ஏமாற்றங்கள்.. 

கூடவே ஆச்சரியங்கள்..

என பல வண்ணங்களின் கலவை ஓவியம் 2010.

எல்லாவற்றுக்கும் மேலாக இத்தனை விரைவாக ஓடிச் சென்ற நாட்கள் தந்த அதிர்ச்சி பெரிதாக உள்ளது. அதற்குள் ஒரு வருடம் போய்விட்டதா? என்ன சாதித்தேன் நான் என்று நினைக்கத் தோன்றவில்லை. மாறாக என்னை உயிருடன் வைத்திருக்கும் என் பிள்ளையாரப்பனுக்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன். ஒரு வருடம் உயிராபத்தில்லாமல் இருப்பதென்பதே எனக்கு பெரிய சாதனையாகத் தெரிகிறது, நடப்புலகில்.

பதிவுலகைப் பொறுத்தவரை வாசிக்கும் ஆர்வம் குறையவில்லை. எழுதும் ஆர்வம் என்னவோ வரவே காணோம். என் எழுத்துப் பற்றி எனக்குத் தெரிந்தாலும்.. ரைட்டு விடுங்க.. நேராவே சொல்லிடறேன். என்னதான் நான் மொக்கையா எழுதினாலும் அதைக் கூட எழுத வேண்டுமென்று இப்போதெல்லாம் முன்போல் தோன்றுவதில்லை. ஏதோ ஒரு அயர்ச்சி. வெறுப்பு. விருப்பமின்மை. சரி உங்களுக்காவது கமண்ட் போடுவோம் என்றால் ஆஃபீசில் டீ லீ யின் (சனிப்)பார்வை என் பக்கமே இருக்கிறது. படித்துவிடுகிறேன். அதில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் டைப்புவதில்தான் சிக்கலே. அதனால் பெரும்பாலும் ஒரு ஸ்மைலியோ, அருமையோ, நல்லா இருக்கோ போட்டுவிட்டு போக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். மன்னித்துக் கொள்ளுங்கள். வீட்டுக்கு வந்து போடலாம் என்றால் அதற்குள் நீங்கள் அடுத்த பதிவு என்னவென்று நினைக்கத் தொடங்கிவிடுகிறீர்கள். நேர வேறுபாடு. இருந்தாலும் வீட்டுக்கு வந்து படித்து கமண்ட் போடும்போது கொஞ்சம் விரிவாக கருத்தைச் சொல்வேன்.

2004 அக்டோபரில் அம்மா அப்பாவை பார்த்தது. நாளை முதல் முறையாக அம்மாவும், இரண்டாம் முறையாக அப்பாவும் இங்கு வருகிறார்கள். அதுவும் ’ஷித்தி அப்புச்சி அம்மம்மாவை அங்கயே வச்சுக்கப் போறா.. இனிமே அவங்க இங்க வரமாட்டாங்க’ என்று அழுத கருணுக்கு சத்தியம் செய்து கொடுத்து அம்மா மூன்று மாதங்களும், அப்பா வேலை காரணமாக ஒரு மாதமும் இருப்பதாக முடிவாகியுள்ளது. இப்போது ஏர்போர்ட்டில் நிற்கிறார்கள். நாளை எங்கள் நேரம் பகல் மூன்றரை மணிக்கு விமானம் தரை இறங்கும். என் கால்கள் தரை பதியவில்லை. இரண்டு நாள் லீவு போட்டுவிட்டு வீட்டிலேயே இருக்கிறேன். அவ்வப்போது அம்முவும் சதுவும் வேறு அம்மா சந்தோஷமா உங்களுக்கு? எங்களுக்கும்னு சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். யார் எப்போது அம்மம்மாவுடன் தூக்கம், எங்கெல்லாம் போவது போன்று ஏகப்பட்ட பிளான் போட்டு முடித்தாயிற்று. போன வாரம் தங்கா அக்கா வீட்டில் நடந்த பேச்சு இது.

கண்ணாளன் – தங்கா அக்கா இவ மூஞ்சி பாத்திங்களா.. அம்மா வர குஷியிலை அப்பளம் மாதிரி எப்டி விரிஞ்சு போய் கிடக்கு.

நான் – கிர்ர்ர்ர்ர்ர் (பார்வை)

விஜய் அண்ணா(தங்கா அக்கா ஹபி) – அதுக்கு ஏங்க அந்தக் கால பக்திப் படத்திலை வரா மாதிரி அப்டியே கண்ணாலையே லேசர் கதிர்களை விட்டு அவர பொசுக்கறிங்க..

நானு – பின்ன என்னண்ணா.. உதாரணமா ஒரு பூவை சொல்ல வேணாம். அப்பளம்னு கைய விரிச்ச்ச்ச்சு வேற காட்டணுமோ..

கண்ஸ் – இப்போ நான் என்ன தப்பா சொல்லிட்டேன்.. உன் முகம் மாதிரி ஒரு பூ பேர் சொல்லு.. சொல்லிட்டுப் போறேன்.

இந்த மொக்கைசாமிக்கு இதுக்கு மேலை நான் என்ன சொல்ல. இருந்தாலும் அவர் கேட்ட கேள்வி ரொம்ப கரெக்டுங்க. கூகிளாண்டவர் தந்த அப்பளத்தை பாத்தா உதாரணம் சரின்னுதான் தோணுது.

Appalam

சரி அதை விடுங்க. இப்போ மறுபடி அம்மா பற்றி பேசலாம். பாத்ததும் அம்மாவை கட்டிக்கொண்டு கண்டிப்பாக அழுவேன். அப்பா உச்சி மோந்து ஒரு முத்தம் கொடுப்பார். சித்தி ஒரு வாரத்தில் ஊட்டி வளர்த்த வெயிட்டே இறங்கக் காணோம். இதில் மூணு மாசம் அம்மா சமையல். ’இங்க வந்துட்டு போங்களேன்’னு கண்ணாளன் பேச்செடுத்த உடனேயே அக்காச்சியிடம் பதியம் வைத்த மரங்களில் வேப்பங் கன்று ஒன்றை (ஊருக்கு போன பொழுது விதை கொண்டு வந்து பதியம் வச்சு முளைச்சிருக்காம். கனடாவில் வன்னி வேம்பு. அதுவும் பூச்சாடிக்குள்) ‘பாலித்தின்ல ஒழுங்கா பேக் செஞ்சு குடும்மா அங்க போய் நான் நடணும்’னு கேட்ட என் குழந்தை அம்மாவை கொஞ்சிச் சீராட்ட வேண்டும். ஊருக்கு போன ரெண்டு முறையும் என் கையால் ஒரு டீ கூட போட்டு குடுத்ததில்லை நான். எல்லாத்துக்கும் சேர்த்து இந்த மூன்று மாதங்களும் ஜமாய்த்துவிடலாம். அப்பாவின் என் கடைக்குட்டி பக்குவம் பாத்தியாப்பா என்ற புகழாரம் அம்மா அடிக்கடி கேக்க வேண்டியதும் வரும். 

இப்போ கால் செஞ்சப்போ ஆளாளுக்கு வாங்கிக் குவித்து ஓவர் வெயிட்டாகிப் போனதில் எதை குறைப்பதென்று தெரியாமல் முழித்துக் கொண்டு உனக்கு இது வேணுமா, அதை வச்சிட்டு வரவா, இல்லை இது அவளுக்கு ரொம்ப பிடிக்கும் கொண்டு போயே ஆகணும்னு பரபரப்பா கடைசி நேரத்திலை பேக் செஞ்சிட்டு இருக்காங்க. அப்டி என்னடிப்பா வாங்கினிங்கன்னு கேட்டேன். இல்லைடி நேத்து கரெக்டா இருந்திச்சு.. இன்னைக்கு என்னமோ கல்லு கனத்திலை இருக்குன்னு சொல்றா அக்காச்சி. நீ என்ன செய்வியோ எதையாச்சும் குறைச்சு சேரனை உள்ளை வச்சு அனுப்பிடுன்னேன். நீ வேற.. சூப்பரா ட்ரஸ் பண்ணிட்டு ஷித்திட்ட போகன்னு அவரும் ரெடியாத்தான் நிக்கறார்னா. ஸ்கைப்ல பேசும்போது அழுவார். என்ன சொல்லி சமாளிக்க போறேன்னு தெரிலைங்க.

எல்லாரும் அவங்க நல்லபடியா வந்து சேரணும்னு மனதார வேண்டிக்கொள்ளுங்க. நான் கொஞ்சமாவது தூங்க முயற்சிக்கறேன்.

எல்லாருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்!!

வர்ட்டா..

09 January, 2011

முத்தம்ம்ம்ம்மா..

தூறல் மழை

உன் அருகில் நான்

நம்மைச் சுமந்த கார்

தெரு சேர்ந்த நீரை மெதுவே கிழித்தபடி

அழகு பேச்சு சிரிப்பென்ற உன்

மும்முனைத் தாக்குதலில்

மோக முளைவிட்டது

உன்னை முத்தமிடும் ஆசை

இதழாயுதத்தை இயக்கிவிட்டேன்

கன்னத்தில் தொடங்கி

காது கழுத்து மூக்கு நெற்றி

தாடை தொட்டு தலை திருப்பி

உதடு வரை ஜெயித்தேன்

என் முத்தச் சத்தங்கள் வெளிக்கேளாமல்

கண்ணாடியில் சடசடத்தது

பெருமழை

இதழ்கள் விழி மறைத்தபோது மட்டும்

செல்லமாய் விலக்கி வைத்தாய்

மூர்க்கமானேன்

வலம் ஒடித்து மரத்தின் கீழ்

காருக்கு அடைக்கலம் கொடுத்தாய்

பொறுமை உடைத்து

முத்தப்போரில் நீ என் எதிராளியானாய்

ஆயுதங்கள் பலவாயின

சிலிர்த்துப் போய் தன் பங்குக்கு

சிலிர் நீரைக் கொட்டி வெட்கியது

மழை நின்ற பின்னும்

பெருமரம்.