Pages

  • RSS

28 April, 2010

ஹாப்பி கிறிஸ்ட்மஸ்!!

 

என்னோட ஒரு ஃப்ரெண்டு கிட்ட பேசும்போது ஹாப்பி கிறிஸ்ட்மஸ்னேன். லூசா நீன்னு கேட்டு அலுத்திடுச்சோ என்னமோ என்னாச்சு.. எதுக்கு இப்போ சொல்றேனுச்சு. ஏப்ரல் முடிஞ்சு மே மாசமும் வரப் போது, ஆனா இன்னமும் ஸ்னோ கொட்டிட்டு இருக்கிற ஊர்ல இருந்துக்கிட்டு, வேற என்ன சொல்ல நான்..

வெயிலடிக்கும்.. மழை பெய்யும்.. அதுவே ஆலங்கட்டி மழையாகும்.. அப்டியே ஸ்னோவா கொட்டும்.. இவளவும் அரை மணி நேரத்துக்குள்ள நடக்கும். மறுபடி வெயில்.. மழை.. இயற்கை வித்தை காட்டிட்டு இருக்கு. அப்போதான் ஆஃபீஸ்ல ஆளாளுக்கு சொல்லிக்க ஆரம்பிச்சோம் ஹாப்பி கிறிஸ்ட்மஸ். இடுக்கண் வருகில் நகுகனு சும்மாவா சொன்னாங்க. ஜாலியா இருந்துது அப்புறம். அதுவும் பொறுக்கலை போல இயற்கைக்கு. வெள்ளி  காலேல வழக்கம் போல அலாரம் அலற அலறி அடிச்சிக்கிட்டு எந்திரிச்சு ரூம விட்டு வெளிய வந்தா வழக்கமா கதவு வழியா தெரியிற வேலி, கார், மலை, வீடுகள் எதையும் காணோம். கண்ணாடி போட்டிருக்கேனான்னு தொட்டுப் பாத்தா இருக்கு. என்னடா இதுன்னு கிட்டக்க போயி பாத்தா ஸ்னோ.. ராத்திரி பூரா கொட்டி வச்சிருக்கு. சம்மர் டயர் ஸ்லிப்பாக உயிர கைல பிடிச்சிக்கிட்டு வேண்டுதலோட ஆஃபீஸ் போனேன்.

Bilde027 Bilde029 Bilde030

பாருங்க.. முதல் படத்தில ஆலங்கட்டி மழை.. அடுத்து ஸ்னோ. மொபைல்ல எடுத்ததால கொஞ்சம் க்ளியரா இல்லை.. (இல்லேன்னா மட்டும்??)

இதுக்கும் முன்ன இருந்த ஸ்னோவோட மிச்ச சொச்சத்த ஃபோட்டோ எடுத்ததா போன பதிவில நான் சொன்னத நீங்க மறந்தாலும் நான் மறக்கல. அதையும் பாருங்க.

IMG_9130 IMG_9131 IMG_9132 முன்னாடி ப்ளே க்ரவுண்ட், எங்க உள்பாதை.

 

 

 

IMG_9127 IMG_9133 IMG_9134 ரெண்டு வீட்டுக்கும் இடையில பெரிய குவியல், ரோட், வீட்டு முற்றம்.

 

 

 

IMG_9043 இத முதல் இந்த பதிவில சேர்க்க மறந்துட்டேன். இந்த வருஷ அமோக ஸ்னோவ வழிக்கிறத்துக்கும், அள்ளி எறியவும்னு வாங்கிய ஆயுதங்கள். ரெண்டு மூணு ஸ்னோல புதைஞ்சு வேற போச்சு.

 

அப்டியே அந்த படங்கள்ல பாருங்க ஸ்னோவோட இந்த இடமெல்லாம் எப்டி இருந்திச்சுன்னு, நேரம் கிடைச்சா..

வர்ட்டா..

24 April, 2010

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்..

அவன் நண்பன் வீட்ல இருந்தான். அவனைப் போலவே பட்டு வேஷ்டி சட்டையில இருந்த நண்பன் அப்பா கிட்ட பேசிட்டு இருந்தான். எல்லாரும் கோயிலுக்கு போக ரெடி ஆயிட்டு இருந்தாங்க. நண்பனோட ரெண்டாவது தங்கை அப்பா கிட்ட கையில ப்ரேஸ்லட் கட்டி விட சொல்லி ஹெல்ப் கேட்டா. அவரும் எந்திரிச்சு கொக்கிய மாட்டிக்கிட்டிருந்தார். அப்போதான் கவனிச்சான். இத்தனை நாளா எப்டி கவனிக்காம போனோம். தினமும் பாக்கிறதால தெரியலையா. குழப்பம். கொஞ்சம் அதிர்ச்சி. இல்ல. நம்பி பழக விட்டிருக்காங்க. இது தப்பு. கவனமா இருக்கணும் இனிமே. கட்டாயமாக பார்வையை அவளிடம் இருந்து திருப்பிக் கொண்டான். புது ட்ரஸ் போட்டுக் கிட்டு திருவிழாவுக்கு போற சந்தோஷம் அப்டியே முகத்தில தெரிய தேவதை ரேஞ்சுக்கு இல்லேன்னாலும்.. எதுவோ ஒண்ணு இவ கிட்டவும் இருக்கத்தான் செய்யுது. நினைத்துக் கொண்டான், அதன் பின் அவன் அதை மறந்தே போனான். (இருந்தாலும் காலம் அதை மறக்கல. தப்புக்கு தண்டனை வழங்க காத்துக்கிட்டு இருந்துது)

)()()()()(

பைக் சத்தம் கேட்டது.. வரார் ஹீரோ.. நினைத்துக் கொண்டாள். ஆமாம். இப்போ ஆள் இன்னும் அழகா வந்து ஹீரோ மாதிரித்தான் ஆயிட்டாரு. என்ன இது?? அண்ணன்களோட நண்பன்.. இப்டில்லாம் நினைக்க கூடாது. இது தப்பு. முதல்ல படிக்கணும். ஆனா அன்னிக்கு அவங்க மான் குட்டிய கொண்டு வந்து காட்னப்போ அது ஓடாம பிடிச்சுக்கன்னு என் கையையும் சேர்த்து அவர் பிடிச்சப்போ ஜில்லுன்னு எதுவோ ஆச்சுதே?? இனிமே கவனமா இருக்கணும். அவனுடன் பேசுவதை முடிந்த வரை குறைத்துக் கொண்டாள். போராட வேண்டிய தேவை எதுவும் இல்லாமல் தோன்றிய எண்ணம் தானாக மறைந்து போனது. அதன் பின் அவள் அதை மறந்தே போனாள். (இருந்தாலும் காலம் அதை மறக்கல. தப்புக்கு தண்டனை வழங்க காத்துக்கிட்டு இருந்துது)

)()()()()(

இந்தியாவுக்கு விடுமுறைக்கு வந்த அவன், அம்மாவையும் இலங்கையிலிருந்து கூப்பிட்டிருந்தான். அம்மா கேட்டாங்க.. “ஏம்பா அங்கிளோட ரெண்டாவது பொண்ண உனக்கு பேசி முடிக்கலாம்னு இருக்கேன். நல்ல பொண்ணுதானே. நீ என்ன சொல்றே..” “நீங்களா கேட்டிங்களா” “இல்லப்பா.. அவங்க உறவில யாராவது நல்ல பொண்ணு இருந்தா பாக்க சொல்லி உன் ஜாதகம் கொடுத்தேன். அவர் தன்னோட ரெண்டாவது பொண்ணுக்கு பாக்கலாமான்னார். நான் உன்ன கேட்டு சொல்றதா சொல்லி இருக்கேன்” “அவங்களுக்கு சம்மதம்னா எனக்கும் ஓக்கேதான்.” அவளுக்குன்னு ஒரு புடவை ஸ்பெஷலா அம்மா கிட்ட வாங்கி குடுத்தான். அம்மா சந்தோஷமா ஊருக்குத் திரும்பிப் போனாங்க.

)()()()()(

பள்ளியில அன்னிக்கு இலவச சீருடை வழங்கினதால அவ கிளாஸ்ல மொத்தமா வந்திருந்த முன்னூத்தி சொச்ச பசங்களையும் ஒரு வழியா உக்காத்தி வச்சிருந்தா. புது துணிய பாத்த சந்தோஷம் ஒவொரு பிஞ்சு முகத்திலேம். தலைவலியையும் மறந்து ரசிச்சுக்கிட்டே தொடர்ந்து வேலை பார்த்தவளை சக ஆசிரியர் கூப்டார். “எப்டித்தான் இந்த கஷ்டத்திலேம் சிரிச்சுட்டு உக்காந்திருக்கீங்களோ.. உங்க அப்பா வந்திருக்கார். போய்ப் பாருங்க.” “அய்.. டீச்சர் அப்பாஆஆஆஆ..” ஆரவாரம் போட்ட பசங்கள க்ளாஸ் லீடர பாத்துக்க சொல்லிட்டு அப்பா கிட்ட ஓடிப் போனா. “என்னப்பா இந்த நேரம்?? அண்ணா வந்திருக்காரா?? லீவ் போட்டுட்டு வரட்டுமா??” படபடத்தவளை சின்னச் சிரிப்பால அடக்கினவர் சொன்னார். “அதெல்லாம் இல்லம்மா. ஆண்டியோட ரெண்டாவது பையன உனக்கு பேசி முடிக்கலாம்னு இருக்கோம். நீ என்ன நினைக்கிறே..” நேரடியான கேள்வி. கொஞ்சம் கூட எதிர் பார்க்காததால அவள் அதிர்ச்சி வெளிப்படையாய் தெரிஞ்சது. தொடர்ந்தார் அவர்.. “அண்ணா அக்கா கிட்ட லெட்டர் மூலம் கேட்டாச்சு. அம்மா ரஜிக்கு முழு சம்மதம். நீ என்ன சொல்றே” “அவரு ரொம்ப கோவக்காரராச்சேப்பா. என் மேலயும் கோபப்பட்டுட்டார்னா??” சம்மதத்தை இந்த மாதிரியும் சொல்ல முடியும்னு காட்டிய சின்னப் பொண்ண நினைச்சு சிரிச்சுக்கிட்டே வீடு நோக்கி பைக்ல போயிட்டிருந்தார் அப்பா.

இண்டர்வல் முடிச்சு மறுபடி சீருடையில மூழ்கிப் போய் இருந்தவள தாய்மாமன் வகுப்பறைக்கே வந்து கூப்டார். முகம் பார்த்ததுமே அவளுக்கு புரிஞ்சிடுச்சு. “என்ன மாமா.. போற வழியில அப்பா சொல்லிட்டு போய்ட்டாரா??” “ம்ஹூம்.. இங்க வரும்போது சொன்னாரும்மா. அத்தையும் கூட வரேனாங்க. நாந்தான் இல்ல நான் பாத்துட்டு வரேன்னுட்டு வந்தேன். உன்ன பாக்கவே சம்மதம் சொல்லிட்டேனு தெரியுது. நான் இப்பவே போயி அத்தை கிட்ட சொல்றேன்”னு கிளம்பினார். “என்ன டீச்சர்.. முதல்ல அப்பங்காரன் வரார்.. இப்போ மாமங்காரன் வரார்.. என்ன நடக்குது இங்க” கிண்டல் பண்ண அதே சக ஆசிரியருக்கு “போங்க சார்.. நீங்க வேற.. முடிஞ்சா கொஞ்சம் வந்து ஹெல்ப் பண்ணுங்க.. ஸ்கூல் முடியிறத்துக்குள்ள மீதியையும் குடுத்து முடிச்சிடணும்”னு சொல்லிக் கிட்டே மறுபடி வேலையில் மூழ்கினாள். காலேலயே குண்டு விமானம் ரெண்டு சுத்து சுத்திட்டு போயிருக்கு. நாளை பள்ளி நடக்குமோ இல்லையோ.. கண்டபடி குழம்பிய மனச விட இன்னைக்கு நம்பி வந்த பிஞ்சு மனங்கள் வாடிப் போகாம சீருடை வழங்குறது முக்கியம்னு அவளுக்கு தோணிச்சு.

)()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()(

விதி வலியதுங்க. அதோட கூட்டு சேர்ந்து காலமும் காத்துட்டு இருந்துதா..

24.04.1998..

09:23 - 10:23 க்கு இடைப்பட்ட சுப நேரத்தில..

தண்டனைய நிறைவேத்திடுச்சு.

அதாங்க. நீங்க நினைச்சதேதான். அவனுக்கும் அவளுக்கும் கல்யாணம்.

சரியான தண்டனை தானுங்களே.. நீங்க என்ன சொல்றீங்க??

எனக்கும் என் அன்புக் கண்ணாளனுக்கும் இனிய திருமண நாள் வாழ்த்துக்கள சொல்லிக்கிறேன்.

பெற்றார், உற்றார், சுற்றம், சோதரம், நட்புனு சுத்திக்கிட்டு இருந்தவ, தன்னந்தனியா பக்கத்து வீட்டுக்கு போகக் கூட பயந்தவ என்னிக்கு தனியா ஃப்ளைட்டேறி வந்து இவர் கிட்ட சேர்ந்தேனோ அன்னிலேர்ந்து அத்தனையும் எனக்கு அவராய். கண்ணாளனாய், கண்ணனாய், பொறுக்கியாய், போக்கிரியாய், நண்பனாய், நாயகனாய் சமயத்துக்கேற்ப அவர் உறவு முறை மாறும். நண்பியோட அப்பா எப்போதும் சொல்வார். என் குணம்தான் அவருடைய பலம்னு. கேக்கும்போது பெருமையா இருந்தாலும் இதையும் நான் ஒத்துக் கிட்டுதான் ஆகணும். என்ன ஒவொரு படியா முன்னேற வச்ச முழுப் பொறுப்பும் அவரதுதான். நான் இருக்கேன்ல.. நீ செய். எப்போதும் எனக்கு அவர் சொல்றது. எங்களுக்கிடையான காதல், கோபம், குறும்பு, அன்பு எல்லாத்தையும் அப்பப்போ கொஞ்சம் கொஞ்சம் உங்க கூட பகிர்ந்துக்கிட்டேன்.. இனியும் அது தொடரும். 

j 055 

இந்த தடவை சனிக்கிழமைல வந்திருக்கிறதால கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கு. மாலை ஆறு மணிக்கு சின்னதா ஒரு பார்ட்டி.. எல்லாரும் வந்திருங்க. கண்டிப்பா சமையல் நான் தான். இதுக்கு அப்புறமும் வரவங்க நலத்துக்கு யாவரும் நலம் எந்த வகையிலேம் பொறுப்பு கிடையாது. இது எச்சரிக்கை இல்லை.. வேண்டுகோள்!!

வர்ட்டா..

23 April, 2010

என் அன்பு அக்காவுக்கு..

எங்க வீட்டு நாட்டாமை.. என் அக்கா.. செல்லமா அக்காச்சின்னு சொல்லுவோம். எனக்கு அம்மாவுக்கு கூட பயம் இல்லைங்க. இவங்களுக்குத்தான் ரொம்ப பயப்படுவேன். ஒண்ணும் பண்ண மாட்டாங்க. ஒரு லுக்கு ஒண்ணு விடுவாங்க. ஆள் கருகிப் போறத்துக்குள்ள இடத்த விட்டு எஸ் ஆயிடணும். நாயே பேயேன்னெல்லாம் என்னய மாதிரி திட்டமாட்டா. ஆனா உனக்கு நான் முன்னாடியே சொல்லி இருக்கேன்னு ஆரம்பிச்சு திட்டுவா.  எதா இருந்தாலும் அவ கிட்டயும் ஒரு வார்த்தை  கேட்டு செய்வேன், இல்லேன்னா செஞ்சுட்டு இப்டி செஞ்சுட்டேன்னு சொல்வேன்.

søstreநாங்க இந்த சைஸ்ல இருக்கும்போது ஸ்கூல்ல பஞ்சில ஒரு பொம்மை செஞ்சு எனக்கு குடுத்தா. ரொம்ப காலம் அது கூட விளையாடி இருக்கேன். அது இந்த படம் பாத்ததும் நினைவு வந்துது..

 

 

 

 

சின்ன வயசில ஒரே டிசைன் துணியில ரெண்டு பேருக்கும் அம்மா ஃப்ராக் தச்சு குடுத்துடுவாங்க. ரெடிமேட்னா கூட ஒரே கலர், ஒரே டிசைன். கொஞ்சம் வளர்ந்ததும் அவ சண்டை போட்டு அந்த வழக்கம் இல்லாம போச்சு. இப்போ மறுபடி அம்மா ஆரம்பிச்சிருக்காங்க. அதாவது ஒரே சாரி.. வேற கலர். எனக்கும் அவளுக்கும் நாலு வயசு இடைவெளின்னாலும் பாத்தா ரெட்டைப் பிறவிங்க மாதிரியே இருப்போம். அவ திங்ஸ் நான் எடுத்தா அவளுக்கு பிடிக்கவே பிடிக்காது. படிக்கனு வெளியூர் போனதும் நம்ம வேலைய காட்டிடுவோம்ல. எடுத்தத அப்டியே அந்த இடத்தில இன்ச் விலகாம வச்சிடுவேன். ரெண்டு மூணு தடவை செக் பண்ணுவா. அப்புறம் நான் படிக்கனு வெளியூர் போனதும் தானாவே எல்லாத்தையும் தந்து அனுப்புவா.

சின்னண்ணன் கூட கூட்டு சேர்ந்துட்டு என்னய அழ வைக்கிறது அவளுக்கு ஒரு ஹாபி. முடிய முகத்த மூடிக்கிறா மாதிரி பிரிச்சு போட்டுடுவா. அப்டியே மெதுவா விலக்கி கண்ண முழிச்சு ஒரு பார்வை பார்த்தான்னா என் அலறல்ல வீடே அதிரும். அம்மா வந்து பாக்கும்போது சமத்தா உக்காந்திட்டு இருப்பா. நம்ம பேச்ச யார் நம்பறாங்க. பளீர்னு ஒண்ணு என் முதுகில விழும்.  ரெண்டு பேரும் அடிச்சிக்குவோம். யாரு கடைசி அடி அடிக்கிறதுங்கிறதுதான் போட்டியே. அதில மட்டும் விட்டுக் குடுக்க மாட்டேன். நான் ஊர விட்டு வர வரைக்கும் இது நடந்துது. 

ரொம்பத் தைரியசாலி. தொட்டத்துக்கெல்லாம் அழற, பயப்படற எனக்கு நேர் எதிர். யாருக்கும் எதுக்கும் பயப்பிட மாட்டா. இப்பவும் அவள பாத்து ஆச்சரியப்பட்டுக் கிட்டே இருக்கேன். எப்டி இவளால மட்டும் இது முடியுதுன்னு. ஊர்ல இருக்கும்போது எங்க போறதுன்னாலும் ஒண்ணா சுத்துவோம். ஆனா மனசு விட்டு ஒரு ஃப்ரெண்டா பழகினதில்ல. எதுவோ ஒண்ணு என்ன அவ கிட்ட இருந்து தள்ளி வச்சுட்டே இருந்துது. அவளும் இதுதான் உனக்கான எல்லைனு ஒரு அளவு வச்சிருப்பா. இது பாக்கிறவங்களுக்கு தெரியாது. அவ்ளோ ஜாலியா பேசுவோம். ஏன் அவளுக்கே தெரியாது. இல்லை அவ இத புரிஞ்சுக்கலைன்னும் சொல்லலாம். 2002 ல சித்தப்பாவுக்கு உடம்புக்கு முடியாம போனப்போ அவளும் டென்மார்க் வந்திருந்தா. அப்போ பசங்கள தூங்க வச்சிட்டு நைட்டு பூரா பேசிட்டே இருப்போம். மெல்ல எங்களுக்குள்ள இருந்த தடை விலக ஆரம்பிச்சு அவ்வளவும் பேசினோம். அவ என்ன விலக்கிய, ஒதுக்கிய இல்லை கவனிக்காத சின்னச் சின்ன விஷயங்கள எல்லாம் சொன்னேன். ரொம்ப ஆச்சரியப்பட்டா. சிரிச்சா. இவ்ளோ கொடுமைக்காறியாவா நான் இருந்திருக்கேன்னு. அது வரைக்கும் எனக்கு எல்லாமுமாய் இருந்தவ தோழியாயும் ஆயிட்டா.

என்ன இருந்தாலும் மூத்தவ இருக்கும்போது இளையவளுக்கு கல்யாணம் பண்றது நல்லதில்லைன்னு நிறையப் பேர் சொன்னப்போ அப்பாவ சமாதானம் பண்ணதே இவதான். அது மட்டும் இல்லாம டீச்சர் ட்ரெய்னிங்ல இருந்தவ யாருக்கும் தெரியாம ரிஸ்க் எடுத்து எங்க கல்யாணத்துக்கு வந்தா. எனக்கு வேண்டிய எல்லாம் செஞ்சு குடுத்துட்டு நார்வே போயி எப்டி தனியா இருக்க கத்துக்கணும்னு அம்மாவ விட நிறைய அட்வைஸ் பண்ணா. அவ ஊருக்கு திரும்பின அன்னைக்கு என்ன அணைச்சுக் கிட்டு ரெண்டு துளி கண்ணீர் விட்டதுதான் அவ எனக்காக அழுத முதல் அழுகை. அப்புறம் டென்மார்க்ல இருந்து புறப்பட்டப்போ ஏர்போட்ல அவ அழுதது. அவ கிட்ட சொல்லி இருக்கேன். நீ என்ன வேணா பண்ணு. ஆனா இனிமே அழ மட்டும் கூடாது. என் அக்காச்சிய அப்டி என்னால பாக்கவே முடியாதுன்னு.

அவளுக்கு மூணும் பசங்களா போயிட்டதால என் அம்முக்குட்டி மேல அவளுக்கு உயிர். டென்மார்க்ல இருந்தப்போ சித்தி அவள பேர் சொல்லி கூப்டத கேட்டு அம்முவும் அவள பேர் சொல்லிதான் கூப்டுவாங்க. பெரியம்மானு சொல்ல மாட்டாங்க. விடுடி. அவங்களா என்னிக்கு தோணுதோ அப்போ சொல்லிட்டு போறங்கன்னு சொல்லிட்டா. என்னவர் கூட முன்பிருந்த அதே பாசம் இப்போவும் இருக்கு.  முன்ன மாதிரியே அண்ணான்னுதான் சொல்வா. எல்லா விஷயமும் அவ கிட்ட பேசுவார். பாருங்களேன் இவள இப்டி பண்றானு போட்டுக் குடுக்கவும் தவற மாட்டார். மாமியாருக்கும் அவள ரொம்ப பிடிக்கும். என்னடி இன்னமும் ஆண்ட்டி ஒழுங்கா மாமின்னு கூப்டுன்னு அவ சொன்னதும்தான் நானே அத கவனிச்சேன்.

அது என்னமோ தெரியல ஒவொரு வருஷமும் அவ கிட்ட போகணும்னு ப்ளான் பண்ணுவோம். ஆனா எப்டியோ அது தள்ளி போய்ட்டே இருக்கு. அவ கனடா போனத்துக்கு அப்புறம் இப்போதான் முதல் முறையா ஊருக்கு வெக்கேஷன்ல போக இருக்கா. எல்லாம் நல்லபடியா நடக்கணும்னு இப்பவே வேண்டுதல் வச்சாச்சு. அவ என்னிக்கும் சந்தோஷமா தீர்க்காயுசோட வாழணும்னு எப்பவும் போல என் பிள்ளையார வேண்டிக்கிறேன்.

ஹாப்பி பர்த்டே அக்காச்சி..

+ + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + +

நீங்களும் உங்க வாழ்த்துக்கள சொல்லிடுங்க. பார்ட்டி எங்க எப்போனு அடுத்த பதிவில சொல்றேன்.

வர்ட்டா..

18 April, 2010

யாரும் தப்பிக்க முடியாது..

மறுபடி என் புது வீட்ட பாத்துட்டு நல்லா இருக்குன்னு சொன்னவங்க.. பாத்துட்டும் கம்முன்னு இருந்தவங்க.. இன்னமும் பாக்காதவங்க அல்லாருக்கும் ஒண்ணு சொல்லிக்கிறேன்..

சைடு பார்ல புதுசா ஒரு விஷயம் சேர்த்திருக்கிறத பாத்துட்டு நல்லா இருக்குன்னு சொன்னவங்க.. பாத்துட்டும் கம்முனு இருக்கிறவங்க.. இன்னமும் பாக்காதவங்க.. அல்லாருக்கும் ஒண்ணு சொல்லிக்கிறேன்.. ஒண்ணுதாங்க.. ரெண்டு விஷயத்துக்கும் சேர்த்து சொல்ல வந்தது ஒண்ணுதான்.

இதனால ரெம்பக் கடுப்பில இருக்கேன் நானு. சோ.. அதனால.. இந்த தடவையும் சீரியஸ் பதிவுதான். தண்டனையில இருந்து யா..ரும் தப்பிக்க முடியாது சொல்ட்டேன்.

ஐஸ்லாண்ட்ல நடந்த எரிமலை வெடிப்பு பத்தி அறிஞ்சிருப்பீங்க. சாம்பல் புகை மண்டலம் குறையுற வரைக்கும் இங்க ஃப்ளைட்டெல்லாம் நிறுத்தி வச்சிருக்காங்க. லைட்டா சல்ஃபர் வாசனை காத்தில இருக்கு. ஒரு இடத்தில சாம்பல் வண்டி மேல படிஞ்சிருந்ததா கூட பேப்பர்ல படிச்சேன். எங்க ஆஃபீஸோட வெளியூர் கிளைகளில இருந்து வர வேண்டிய தபால் வராததால ஆணி கம்மியா இருந்துது. ரெண்டு நாள் ஜாலியா போச்சு. இப்போ யாரு கண்ணு பட்டுதோ பயபுள்ளைக ட்ரெயின் மூலமா அனுப்பி வச்சிட்டாங்க. விளைவு.. வெள்ளிக் கிழமை ஆணி குமியப் போதுன்னு டீம் லீடர் சொல்லிட்டாங்க. அன்னிக்குன்னு பாத்து லேட்டா எந்திரிச்சிட்டேன். (அடிப்பாவி.. பத்து நிமிஷம்தானேடி லேட்டா எந்திரிச்சே..) 

நீங்க லேட்டா எந்திரிச்சா எப்டி ரெடியாவீங்களோ அப்டி இல்லாம வழக்கம் போலவே ரெடியானேன். (ம்க்கும்.. ) ரோட்ல இறங்குறத்துக்கு முன்னாடி மம்மி சின்ன வயசில சொல்லிக் குடுத்தா மாதிரி வலது பக்கம் முதல்ல பார்த்தேன். ரெண்டு கார் சைட் குடுக்கிறத்துக்காக வெயிட் பண்ணிட்டு இருந்துது. பின்னாடி வரப்போற என் காருக்கு எதுக்கு சைட் குடுக்குறாங்கன்னுட்டு கொஞ்சம் எட்டிப் பாத்தா ஒரு ட்ரக் வந்துட்டு இருந்துது. இப்போ மம்மி சொன்னது மறுபடி ஞாபகம் வந்து இடது பக்கம் பாத்தா அங்க ஒரு கார் வந்துட்டு இருந்துது. அப்டியே என் கார் முன்னாடி அது வரும்போது ரெண்டு பக்கம் பாத்தா போதாதும்மா.. போக வேண்டிய பக்கத்த பறுபடி பாக்கணும்னு ம சொ ஞா வந்து மறுபடி வலது பக்கம் பார்த்தேன். ட்ரக் இன்னமும் வந்துட்டு இருந்துது. இல்ல நின்னுட்டு இருந்துது. என்னடா இது.. சைட் குடுத்தும் எதுக்கு வெயிட் பண்றாங்கனு என்ன மாதிரியே யோசிச்ச ரெண்டாவதா நின்ன வண்டி ட்ரைவர் வெளிய இறங்கி ட்ரக் ட்ரைவருக்கு இங்கதான் இவ்ளோ இடம் இருக்கே எடுத்துட்டுப் போயேன்னு சைகை காமிச்சாங்க. அவர் கண்டுக்கணுமே. அப்போ முத வண்டியில இருந்த ட்ரைவர் இறங்கி இவங்களுக்கு எதுவோ சொன்னாங்க. ரெண்டு பேரும் அவங்க அவங்க வண்டியில மறுபடி ஏறி உக்காந்துட்டாங்க. இப்போ என் முன்னாடி வந்த வண்டி என்ன கடந்து போய் ரெண்டாவது வண்டி பின்னாடி போய் மூணாவதா நின்னுது.

என்னடா நடக்குது இங்கனு ட்ரக்காளன இன்னும் நல்ல்ல்ல்லா எட்டிப் பாத்தா.. பாத்தா.. பா.. அதான் நல்லா எட்டிப் பாக்கறேன்னு சொன்னேன்ல. அதுக்குள்ள என்ன அவசரம்?? இருங்க என்ன பாத்தேன்னு எழுதறேன். அது வேற ஒண்ணும் இல்லீங்க. ஸ்னோ இருந்த வரைக்கும் ரோடோரம் சேர்ந்த குப்பை கூளம் கல்லையெல்லாம் சுத்தம் பண்ற வேலைய செஞ்சுட்டு இருந்தாரு அவரு. வழக்கமா வர வண்டிய விட இது வித்யாசமா இருந்ததால எங்களுக்கு தெரியல. அவர் நத்தை வேகத்தில வர எப்டியும் பத்து நிமிஷமாவது ஆகும்னு நினைச்சுட்டு என் கார நிறுத்தினேன். சரியா எட்டு நிமிஷம். ஒரு வண்டி ஓடிட்டு இருக்கிறத விட ஸ்டார்ட்ல நிக்கும்போதுதான் அதிகமா சூழல் மாசடையும்கிறது நீங்க அறிஞ்ச விஷயம்தானே. மத்த மூணு பேரும் அத செய்யலைங்க. ஸ்ட்டார்ட்லவே வண்டிங்க நின்னுது.

அது மட்டுமா.. ஆக்ஸிடண்ட் ஆயிடுச்சுன்னா இல்லை ரோட் வேலைக்குன்னு ட்ராஃபிக் ஜாமாகி நிக்கும்போது எத்தன பேர் வண்டிய நிறுத்தறோம்.. நேரமாகும்னு தெரியுதில்ல. அப்புறமும் எதுக்கு ஸ்டார்ட்ல நிக்கணும். ஆஃப் பண்ணிட்டோம்னா வண்டியும் ரிலாக்ஸ் பண்ணிக்கும். கொஞ்சம் யோசிக்கலாம்ல.. இது மட்டும் இயற்கை அனர்த்தங்களுக்கு காரணம் இல்லேன்னாலும் இதுவும் காரணம் தான் இல்லையா. அப்புறம் எரிமலை பொங்கி பனிப் பாறைகள் உருகிப் போகாம என்ன செய்யும். ஏப்ரல் மாசத்துல இந்த ஊர்ல இன்னைக்கு ஸ்னோ கொட்டாம என்ன செய்யும். வண்டிக்கு சம்மர் டயர் வேற மாத்தியாச்சு. கொஞ்சம் டெம்ப்ரேச்சர் ப்ளஸ்ல இருக்கப்போயி ஸ்னோ கரைஞ்சு போயிடறதால தப்பிச்சோம். இல்லேன்னா டயர் ஸ்லிப்பாகி ஆக்சிடெண்ட் சகட்டு மேனிக்கு நடக்குமே. என்னவோ போங்கப்பா.. யாருமே கவனிக்க மாட்றாங்க.

நேத்து ஒரு பார்ட்டிக்கு போயிருந்தோம். விழா நாயகி அஞ்சு மாச குழந்தை. சர்ச்ல ஞானஸ்நானம் காலேல முடிச்சுட்டு சாயந்தரம் பார்ட்டி, கூட்டம், ஃபோட்டோன்னு கஷ்டம் குடுத்தாலும் சமத்தா அழாம இருந்தாங்க. எல்லாரும் ஃபோட்டோ எடுத்து முடிச்சதும் நான் தூக்கி வச்சிருந்தேன். என் ராசி உடனவே என் தோள்ல தூங்கிட்டாங்க. சின்ன சின்ன போட்டிகள் விளையாட்டுகள்னு சத்தமா இருந்ததால ஒரு ஓரத்தில மடியில அவங்கள வச்சுட்டு உக்காந்திருந்தேன். அவங்க உறவுக்காரக் குட்டிப்பொண்ணு ஒண்ணு.. சது வயசு.. பயங்கர வாயாடி.. உங்க வயசு என்ன ஆண்ட்டினு என் கிட்ட பேச்ச ஆரம்பிச்சா. வயசுக்கேத்தாப்ல பேசுவாங்களோ?? சொன்னேன். கேட்டதும்  ஆஆச்சரியப்பட்டா. நீங்க எவ்ளோன்னு நினைச்சீங்கன்னேன்.. நான் சொன்னதில இருந்து பத்த குறைச்சு சொன்னா. இப்போ நான் ஆஆஆஆச்சரியப்பட்டேன். உங்களுக்கு பாப்பானா பிடிக்குமா? ம்.. ரொம்ப. அப்போ உங்களுக்குன்னு ஒண்ண எடுத்துக்க வேண்டியதுதானே. அவங்க அகராதியில குழந்தை பெத்துக்கிறத்துக்கு அர்த்தம் இதுதான் போல?! இல்லடா.. எனக்குன்னு வேணாம். ஆனா இப்டி அடுத்தவங்க பாப்பாவ தூக்கி வச்சுக்க பிடிக்கும். உங்களுக்குனு வேணவே வேணாமா? வேணாம். அதான் எனக்குனு ரெண்டு பசங்க இருக்காங்களே.. அவங்களே போதும்.

அந்த ஆண்ட்டி யாரு? அவங்க பசங்க யாருனு இப்டியே பேச்சு போயிட்டு இருந்துது. சீரியசா.. ஆண்ட்டி இந்த பாப்பா உங்க மடில சமத்தா தூங்குது.. ஆமாண்டா.. அவங்க ரொம்ப டயர்டாயிட்டாங்க இல்லை.. அதான். பாப்பா பாக்கும்போது உங்க பாப்பா மாதிரியே இருக்காங்க.. அப்டியா? ஏம்மா அப்டி சொல்றீங்க?? நீங்க ரெண்டு பேரும் ஒரே கலரா இருக்கீங்க..  சாயல் இல்லாம கலர் தீர்மானிக்குது பாருங்க. விஷயம் புதுசா இருக்கில்ல. இப்டி இன்னமும் சீரியசா போச்சு பேச்சு..

ஆண்ட்டி நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க. (சிரிச்சுட்டேன் நான். அவ முழிச்சா. எதுக்கு சிரிச்சேன்னு புரியாமலா.. இல்ல என் சிரிப்ப பாத்து பயந்தானு தெரில) தாங்ஸ்டா தங்கம். நீங்களும் ரொம்ப அழகா இருக்கிங்க. உங்க சாரி அழகா இருக்கு. தாங்ஸ்டா.. உங்க ஃப்ராக்கும் அழகா இருக்கு. உங்க வளையல் அழகா.. என்ன இது.. எதுக்கு சிரிக்கிறிங்க இப்போ?? ஹல்லோ.. படிச்சிட்டு இருக்கிற உங்களத்தான் கேக்கறேன். அதான் முன்னாடியே சொன்னேன்ல சீரியசா எழுதப் போறேன் இன்னைக்குன்னு..  நிஜமா சொன்னாங்கப்பா.. நம்புங்க. ரைட்டு!! இதுக்கு மேல நாங்க பேசிக்கிட்டத உங்களுக்கு சொல்லப் போறதில்ல நானு..  உங்க பேச்சு கா.. 

வர்ட்டா..

14 April, 2010

செருப்பு.. அப்பப்போ சப்பல்..

எல்லோருக்கும் எங்களோட இனிய சித்திரைப் புது வருட வாழ்த்துக்கள்.

சித்திரை வருஷம் தடல் புடலா கொண்டாடினதெல்லாம் ஒரு காலம். நான் அது பத்தி சொன்னாலும் பசங்கள பொறுத்த வரைக்கும் தை முதலாம் தேதிதான் புது வருஷம். இங்க வந்த புதுசுல சில ஃப்ரெண்ட்ஸ் வருவாங்க. இப்போ எல்லாரும் பசங்க, வேலைன்னு பிஸி ஆயிட்டாங்க. நினைவிருந்தா வாழ்த்துவாங்க. அவ்ளோதான். இதுவே ஊர்லன்னா.. அவ்வ்வ்.. இன்னைக்கு வேணாம். வருஷத்தன்னிக்கு சந்தோஷமா இருந்தாத்தான் வருஷம் பூரா  சந்தோஷமா இருப்பேன்னு நம்புறவ நான். (அச்சச்சோ.. அப்போ இந்த வருஷம் உனக்கு அம்புட்டுதானா?? ) அதனால எங்க ஊர்ல புது வருஷம் கொண்டாடுறது பத்தி வேற ஒரு நாளைக்கு எழுதறேன். ஆவ்வ்வ்.. (அதுக்கேண்டி நீ அழறே.. அவங்க இல்ல அழணும்)

சரி அத விடுங்க. இந்த ஊர்ல 86/87 ஆண்டுப் பகுதியில வந்த விண்டர் சீஸன் 62 நாட்கள் தொடர்ச்சியா ஸ்னோ இருந்த வருஷம்னு ரெக்கார்ட் பதிவாச்சு. அதாவது ஸ்னோ தொடர்ந்து கொட்டும்னு இல்லை. ஆனா மழைக்குப் பெயர் போன எங்க ஊர்ல மழை பெஞ்சு கரைஞ்சு போகாம இருந்தது. இந்த சீஸன் 2009/2010.. மொத்தம் 98 நாட்கள். புது ரெக்கார்ட். இடையில ரெண்டு நாள் மழைன்னாலும் ஸ்னோ கரையல.

இனிமே போதும். முடியலங்கிர ரேஞ்சுக்கு ஸ்னோல பிறந்து, தவழ்ந்து, அள்ளித் தின்னு வளர்ந்தவங்களே வந்திட்டாங்கன்னா, வந்தேறு குடிகளான நம்ம நிலை?? மழை பெய்து கரைஞ்ச ஸ்னோ கண்ணாடியாட்டம் ஃப்ரீஸ் ஆகாம இருந்ததால வழுக்கி விழுந்து டேமேஜ் ஆன மக்கள் + வாகனங்களோட எண்ணிக்கை இந்த வருஷம் குறைவு. நானும் இந்த வருஷம் சாதனை செஞ்சாச்சு. ஒரு நாள் கூட ஆஃபீசுக்கு கண்ணாளன் கூட்டிப் போல. பஸ்லவும் போல. (சில பல நாட்கள் பரவால்ல நீயே தைரியமா போனு அவர் சொல்லிட்டார்னு பயத்தில நடுங்கி கிட்டே அவர திட்டிக்கிட்டு ட்ரைவ் பண்ணது யார்டி சுசி?? நீயா என்ன??)

அதையும் விடுங்க. தலைப்பு பத்தி சொல்லணும்ல. கண்ணன் மேல கோவம்  எனக்கு. ஒரு கட்டத்தில இனிமே என்ன செருப்புன்னு கூப்டுன்னு சொன்னேன். சொன்னது தப்புனு உணர்ந்து சாரி சொன்னேன். சிரிச்சுக்கிட்டே எதுக்கு சாரின்னிச்சு. இல்ல நான் அப்டி சொன்னது உனக்கு வருத்தமா இருந்திருக்கும்னு நினைச்சு சாரி சொன்னேன். ஆனா இப்போ உன் சிரிப்பு பாத்தா அப்டி இல்லைன்னு  தோணுது. அப்பப்போ ஒரு சேஞ்சுக்கு சப்பல்னும் கூப்டுன்னேன். நான் சொன்னது சரிதானுங்களே.. செருப்பு.. சப்பல்.. இதில எந்தப் பெயர் எனக்கு நல்லா இருக்கும்??

ரெக்கார்ட் வச்ச ஸ்னோவ ஊரெல்லாம் அமர்க்களமா படம் பிடிச்சாங்க. நானும் எங்க வீட்ல இருந்த ஸ்னோவ படம் பிடிச்சிருக்கேன். ராமலக்ஷ்மி அக்கா மன்னிச்சிடுங்க.. உங்கள மாதிரி முத்து முத்தா கவிதையா எடுக்க தெரியல எனக்கு. வெயில் பட்டு இறுகிப் போன ஸ்னோ அப்டியே டைமன்ல கம்பளம் செஞ்சு விரிச்சு வச்சா மாதிரி ஜொலிச்சுது பாருங்க.. அப்போ உங்கள நினைச்சேன்.

IMG_9023 பால்கனில இருந்து பாத்தா முன்னாடி இருந்த எதையும் காணோம்.

 

 

 

IMG_9026IMG_9025  கராஜ் கூரை மேல.

IMG_9031 IMG_9032

பின் பக்கம். இதுக்கு மேல கதவு திறக்க முடியல.

IMG_9068 IMG_9036 IMG_9073

இன்னொரு பால்கனி.. கதவே திறக்க முடியல.

IMG_9037 IMG_9038 IMG_9039 IMG_9040

வீட்டோட முன்பக்கம். பசங்க உழுது வச்சிருக்காங்க.

IMG_9041 IMG_9045

அநாதரவா புதைஞ்சு போய் இருக்கிற பேப்பர் ரீசைக்கிள் பின். நல்ல வேளை குப்பை போடற பின்ன முன்னாடியே எடுத்து கராஜ்ல வச்சிட்டோம்.

IMG_9048 IMG_9056 IMG_9057 IMG_9058 பள்ளத்தில ஃபுட்பால் க்ரவுண்ட், நெருங்க முடியாத நிலையில போஸ்ட் பாக்ஸ், ரோட்.

IMG_9047 வீட்ல இருந்து ரோடுக்கு போம்போது வழுக்கிச்சுன்னா ஒண்ணு  எதுக்க இருக்கிற பள்ளத்தில குபீர். இல்ல ரெண்டு பக்கமிருந்தும் வர வண்டி மேல டமார். 

 

 

IMG_9054 சைட்ல.. மேல இருக்குற வீடுகளுக்கு போறத்துக்கான படிக்கட்டு. நடக்க இல்லை. சறுக்க மட்டும்.

 

 

 

 

 

IMG_9049IMG_9055

ரோட்ல, நடைபாதையில இருக்கிற ஸ்னோவ அள்ளிக் கொண்டு போய் பள்ளத்தில கொட்டறாங்க.. வசதி இல்லாத இடங்கள்ல லாரில அள்ளிட்டுப் போய் குளங்கள்ல கொட்டினாங்க.

இப்பவே படங்கள் ஜாஸ்தி ஆயிடுச்சு. அதனால இப்போ ஸ்னோ விட்டுப் போயிருக்கிற மிச்ச சொச்சங்கள இன்னொரு பதிவில பார்க்கலாம்.

மீண்டும் புது வருஷ வாழ்த்துக்கள்.

வர்ட்டா..

11 April, 2010

கோக் சாப்டா சரி ஆய்டும்..

-சரியா இந்த இடத்தில என் மொபைல் திடீர்னு துளி துளி துளி மழையாய் வந்தாளேனு பாடிச்சு.. எங்க நேரம் இரவு 22:00. டிஸ்ப்ளேல என்னவர் பெயர பாத்ததுமே பரபரப்போட  ஹலோன்னு சொன்னேன்.. விபரம் அடுத்த பதிவில..

மேலும் விபரங்களுக்கு இங்க கிளிக்குங்க.

= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =

இப்போ அங்க சொன்ன அடுத்த பதிவான இந்த பதிவுக்கு வாங்க..

 ஹலோ..

ஏய் டாக்டர் சதுவுக்கு appendicitis ஆகி இருக்கலாம்னு சொல்றார்.. சீக்கிரம் ரெடியாகு ஹாஸ்பிடல் போணும்.. அம்மா அக்கா கூட வரணும்னு அடம் பிடிக்கிறார்.. வந்துட்டு இருக்கேன்..

கடவுளே என்னப்பா சொல்றீங்க.. என்ன ரெடியாகுறது.. இதோ இறங்கிறேன்.. சீக்கிரம் வாங்க..

அத்தனை கடவுளையும் வேண்டிக்க ஆரம்பிச்சேன்.. இன்னும் அம்மு குடுத்த அதிர்ச்சியில இருந்தே நான் முழுசா வெளியில வரல.. இப்போ இது.. என் குட்டிக் கண்ணன்.. வலி தாங்க மாட்டாரே.. என்ன செய்வேன் நான்.. அம்மு கூடவே இருந்து கேட்டுட்டு இருந்தவங்க பிஜாமாஸ் சேஞ் பண்ணிட்டு ரெடி ஆகி எனக்கும் ஷூஸ் எடுத்துக் கொடுத்து ஹெல்ப் பண்ணாங்க. பாவம் தம்பின்னும் அடிக்கடி சொல்லிட்டு இருந்தாங்க.

இன்னமும் என்ன ஆச்சுன்னு சொல்லலை இல்லை. இங்க இப்போ ஸ்டமக் ஃபீவர் சீஸன். ஒரு வகையான வைரல் ஃபீவர். தலை வலிக்கும், செம டயர்டா இருக்கும், குமட்டல், சமயத்தில வாந்தி, இனித்தான் மெயின்.. வயித்து வலீஈஈஈஈஈஈ.. ஸ்கூல்ல இருந்து முதல்ல கொண்டு வந்தவங்க அம்மு.. அடுத்து எனக்கு, கண்ணாளனுக்கு கடைசியா சதுவுக்கு. ஸ்கூல் முடிச்சு வந்து இருந்தவர் நைட்டு எட்டு மணி போல வலியில ரொம்ப கஷ்டப்பட்டார். கண்ணாளன் எமர்ஜன்சிக்கு கூட்டிப் போனார். இதுக்கு மெடிசின் கிடையாதுன்னு தெரிஞ்சாலும் டாக்டர் கிட்ட போனா அவருக்கு ஓக்கேவா இருக்குமேன்னுதான் கூட்டிப் போனார். நானும் அம்முவும் அவங்க வந்ததும் தூங்கலாம்னு வெயிட் பண்ணிட்டு இருந்தோம். பெயர்தான் எமர்ஜன்சியே தவிர டாக்டர பாக்க குறைஞ்சது ரெண்டு மணி நேரமாகும். அது வரைக்கும் நர்ஸ்தான் அப்பப்போ வந்து செக் பண்ணுவாங்க.

கார்ல நாங்க ஏறினதும் அழ ஆரம்பிச்சிட்டார்.                                  

அழாதிங்க கண்ணா.. எதுவும் ஆகாது.. அதான் ஹாஸ்பிடல் போறோம்ல..

ஊசி போடுவாங்க..                                                                                     

போடுவாங்க ஆனா பசங்களுக்கு வலிக்காம பாத்துப்பாங்க..                     

என் வயித்த வெட்டப் போறாங்க..                                                       

அதெல்லாம் ஒண்ணும் பயம் இல்லை.. அம்மா வயித்த ரெண்டு தடவை வெட்டித்தானே நீங்க ரெண்டு பேரும் பிறந்தீங்க..                                      

தம்பி.. எனக்கு கூட ஒரு தடவை ஆபரேஷன் பண்ணாங்களே.. மறந்துட்டீங்களா?? அதுவும்  முதலாம் வகுப்பில..                             

அப்பாவுக்கு கூட ரெண்டு தடவை முழங்கால்ல பண்ணாங்களேப்பா.. இப்போல்லாம் லேசர்லவே வயித்த வெட்டாம ட்ரீட்மெண்ட் குடுப்பாங்க தெரியுமா..                                                                                                       

ஆஆஆஆ.. லேசராஆஆஆ.. லேசர் வச்சு சுட்டா நான் செத்துப் போய்டுவேனே..

வேற ஒண்ணும் இல்லைங்க. பசங்களோட அத்தனை கேம்ஸ்லயும் லேசர் வெப்பன்ஸ் வச்சு எதிரிய சுட்டு வீழ்த்துறதா வருதில்லையா.. அவர் பயம் போகட்டும்னு சொன்னது இப்டி ஆயிடிச்சு.. மறுபடி அவர சமாதானம் பண்ணி கார் பார்க் பண்ணிட்டு எல்லாரும் இறங்கினா அவர் இறங்கணுமே.. ஒரு வழியா இறங்க வச்சு எமர்ஜன்சி போணும்னா சிவப்பு லைன பிடிச்சு போங்கனு இருந்தத படிச்சு உள்ள போனோம். டாக்டரோட ரெஃபரல் பாத்து இவர இப்போ எப்டி இருக்குனு கேட்டா வலியா.. எனக்கா.. கிடையவே கிடையாது ரேஞ்சுக்கு பேச ஆரம்பிச்சிட்டார். அவர் பயத்திலதான் அப்டி சொல்றார்னு சொன்னோம். ஒரு மேல் நர்ஸ்தான் வந்தார். “ஹலோ யங் மேன்.. என் பெயர் ஹூல.. உங்க பெயர்”னு ஆரம்பிச்சு பேச்சு குடுத்துக் கிட்டே ஒரு பெட்ல படுக்க வச்சு இன்னொரு ரூமுக்கு கொண்டு போனார். ரூமுக்குள்ள இருந்த அத்தனை  உபகரணங்களும் தன்ன செக் பண்ணத்தான்னு நினைச்சு இன்னமும் அழுகை பெருசாயிடிச்சு. மறுபடி நர்ஸ் தன் பேச்சால வசியம் பண்ணி யூரின் டெஸ்ட் எடுத்தாச்சு. இப்போ ப்ளட். அம்மா கண்ண மறைங்க.. அப்பா கைய்ய பிடிங்கனு சொல்லி ஊசி குத்தியாச்சு. இதோ பாரு உன் ப்ளட் எவ்ளோ அழகா இருக்குனு அவர் சொன்னதும் எட்டிப் பாத்தவர் என்ன இத்தன புட்டில எடுக்கறே?? என் ரத்தம் முழுக்க எடுத்து முடிக்க போறியானு கேட்டு லைட்டா பயத்தோட சிரிச்சார்.

நர்ஸ் “பயந்தா மாதிரி appendicitis இல்ல.. அதுனா வலி ஜாஸ்தி ஆயிட்டே போகும். இது வேற எதுவோ தான்.. பாக்கலாம்.. யூரின் ரிசல்ட் க்ளியரா இருக்கு. ப்ளட் ரிசல்ட் வந்ததும் டாக்டர் வருவார். அது வரைக்கும் நீ ஒரு துளி தண்ணி கூட குடிக்க கூடாது. சமத்தா இருக்கணும். அப்டி எதுனா டவுட்னா உன்ன இன்னைக்கு ஆப்ஸர்வேஷன்ல வச்சிருப்போம். இல்லைன்னா நீ வீட்டுக்கு போலாம்”னார். நான் தனியா இருக்க மாட்டேன் அம்மாவும் என் கூட இருக்கணும்னு மறுபடி அழுகை. மறுபடி சமாதானம் பண்ணிட்டு அப்புறமென்ன.. ரிசல்டுக்கு வெயிட்டிங்தான்.

அழுத களைப்பில அவர் தூங்க ஆரம்பிச்சிட்டார். அம்முவுக்கும் சாமம் ஒரு மணி ஆயிட்டதால கண்ணு சொக்க ஆரம்பிச்சிடுச்சு. கண்ணாளனும் அதே அதே.. 01:50 க்கு டாக்டர் வந்தார். ஒரு வழியா இவர எழுப்பி விட்டோம். இது வரை வந்த ரிசல்ட்ல எந்த ப்ராப்ளமும் இல்லை. மீதி வந்ததும் எதுனா டவுட்னா நாங்க காண்டாக்ட் பண்றோம். மறுபடி வலிக்குதுனு சொன்னார்னா டைரெக்டா இங்க வாங்க. மத்த படி நீங்க இப்போ வீட்டுக்கு போலாம்னு வயித்தில பால வார்த்தார். அப்போதான் எனக்கு நமக்கு வந்த தண்ணீர் சப்ளை ப்ராப்ளம் நினைவுக்கு வந்து சொன்னேன். அதுன்னா டயரியா பிச்சுக்கும். அதான் அதுக்கு முதல் சைன். இவருக்கு வெறும் வலிங்கிறதுனால இது வைரஸ்தான்னு சொன்னார்.

Bilde004

அவர் ஸ்கூல் போகல. நான் லீவ் எடுத்துட்டேன். புதன் டு வெள்ளி.. ராத்திரில வலிச்சா உடனவே அம்மாவ எழுப்புங்கனு சொல்லி எங்க ரூம்லதான் அவர் தூங்கறார்.

 அம்மா..                                                                                                                         

ம்.. என்னடா செல்லம்..                                                                                   

வயித்த வலிக்குதும்மா..                                                                                           

ஓ.. சரி தூங்குங்க.. அம்மா வருடி விடறேன்..                                          (லைட்டா கண்ண திறந்து பார்த்தேன் மணி 03:14. வெள்ளி அதிகாலை)

அம்மா..                                                                                                            

என்னப்பா.. இன்னமும் வலிக்குதா..                                                     

இல்லம்மா.. கொஞ்சம் கோக் சாப்டா சரி ஆகும்னு நினைக்கிறேன்.

கோக்காஆஆ..                                                                                                     

எனக்கு இப்போ சரி ஆயிடிச்சுன்னு நீங்க இன்னைக்கு பூரா கோக் குடுக்கல இல்ல.. அதான் எனக்கு வயித்த வலிக்குதுனு நினைக்கிறேன்..

சரிப்பா எடுத்துட்டு வரேன். கொஞ்சம்தான் குடிக்கணும் ஓக்கேவா..             

ம்ம்..

இப்போ இந்த ரேஞ்ச்ல போயி கிட்டு இருக்கு. இங்க பசங்களுக்கு வயிறு சரியா இல்லைனா கோக் குடுக்கிறது பாட்டி வைத்தியம். எங்களுக்கு சின்ன வயசில சோடா காய்ச்சல்னு ஒண்ணு வரும். மருந்தே இல்லாம அவரவருக்கு பிடிச்ச சோடா சாப்டா அன்னிக்கே சரி ஆய்டும். ஒரு பாட்டிலையும் தனிய்ய்யா அவங்களே சாப்டுறதுதான் பாயிண்டே. அதே கதைதான் இங்கவும் நடக்குது. அம்மு சும்மான்னா விட மாட்டாங்க. தம்பி அழுதது அவங்களுக்கு ரொம்ப கஷ்டமா ஆயிட்டதால விட்டிருக்காங்க.

என் செல்லங்கள் குறையே இல்லாம ஆளாளுக்கு கலங்க வச்சிட்டாங்க. இப்போ தனக்கு ஹாஸ்பிடல்னா எந்த பயமும் இல்லைனு சொல்ற அளவுக்கு அவருக்கு தைரியம் குடுத்த நர்ஸுக்கு தான் அன்னிக்கு நிறைய நன்றி சொன்னோம். மேல் நர்ஸ் அன்பா பாத்துக்க மாட்டாங்கன்னு எனக்கு இருந்த ஒரு அபிப்பிராயத்த அடியோட மாத்தின அந்த ஹூல..

பங்கக பிங்கோ பாங்கோ.. அதாங்க.. எங்கிருந்தாலும் வாழ்க..

இத எழுதி முடிச்சிட்டு நிம்மதியா தூங்கிட்டேங்க.. வ போ ஞாயிறு போஸ்ட் செஞ்சு உங்க நிம்மதிய குலைக்கலாமேன்னுட்டு. என் மொபைல் திடீர்னு பாடிச்சு.. சிறகடிக்கும் நிலவு கரம் பிடித்ததென்னை.. பாட்ட ரசிக்க முடியாம பயத்தோட பார்த்தேன் டிஸ்ப்ளேல புது நம்பர்.. ஏற்கனவே நடுங்கிட்டு இருந்த கையால ஒரு வழியா எடுத்து விழுந்திடாம இறுக்கி பிடிச்சிட்டே சொன்னேன்.. ஹஹஹலோலோ.. வெறும் காத்து தாங்க வந்துது.. மீதி அ டு த் த ப தி வு ல..

வர்ட்டா..

07 April, 2010

ஒரு யுகமாய் ஒரு மணித்துளி..

திங்களும் இங்க ஈஸ்டர் லீவுங்கிரதால வழக்க விரோதமா ஞாயிறு அதுவுமா முழுக் குடும்பமும் சீக்கிரமே எந்திரிச்சோம். மலைக்கு ஒரு டூர் போய்ட்டு வரலாம்னு கண்ணாளன் முத நாளே சொல்லி இருந்தார். நான் வீட்ல தலைக்கு மேல வேலை இருந்ததால போகல. ஒரு பத்தரை மணி போல புறப்பட்டாங்க. நான் அப்பப்போ ஃப்ரெண்ட்ஸ் கிட்ட பேசிக்கிட்டே வேலை செஞ்சுட்டு இருந்தேன். ஒரு மணி இருக்கும். என் மொபைல் திடீர்னு துளி துளி துளி மழையாய் வந்தாளேனு பாடிச்சு.. டிஸ்ப்ளேல என்னவர் பெயர பாத்ததுமே இன்னைக்கு சமையல் பண்ணாத வெளிய சாப்டலாம்னு சொல்ல போறாரோன்னு சந்தோஷமா ஹலோன்னேன்..

 

இப்போ நாங்க மலைக்கு டூர் போறது பத்தி சின்னதா சொல்றேங்க.. என்னோட ஒரு ஃப்ரெண்டு கேட்டுது ”எப்டி? பார்க்குக்கு போறா மாதிரி மலை மேல டூர் போவீங்களா”னு. அதே தாங்க. இங்க எங்க ஊர்ல மொத்தம் ஏழு மலை இருக்கு. அப்டியே ஊர சுத்தி, தொடரா. அதில ஒண்ணு எங்க வீட்டுக்கு எதிர்க்க இருக்கு. போன வருஷம் சம்மர்க்கு நாங்களும்  ஏறிப் பாக்கலாம்னு போனோம். அவ்ளோ நல்லா இருந்துது. (கஷ்ட நஷ்டங்கள் இன்னொரு பதிவில கண்டிப்பா சொல்வா பாருங்க)

 

ஹலோ..

லச்சு வீட்டுக்கு வந்திட்டாளா?

என்னப்பா.. நீங்க கூட்டிட்டு போய்ட்டு வீட்டுக்கு வந்துட்டாளான்னா..

இல்லடி.. பாதி வழி வந்ததும் முன்னாடி இறங்கட்டுமான்னா.. சரி போயி கீழ கார் பக்கத்துல வெயிட் பண்ணுங்கனு சொன்னேன். இங்க வந்து பாத்தா காணோம்டி..

என்னப்பா சொல்றீங்க.. எதுக்கு அவள தனியா விட்டீங்க.. என்னப்பா இது ஏன்..

சரி சரி ஃபோன வை. நான் மறுபடி ஏறிப் பார்க்கறேன்..

 

கடவுளே.. எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல.. பேசிக் கிட்டு இருந்த ஃப்ரெண்ட் கிட்ட விஷயத்த சொன்னேன். அதுக்கு என்ன பத்தி நல்லாவே தெரியும்கிறதால சொல்லிச்சு. “ஒண்ணும் ஆகாது. பயப்படாத. அவ அங்கதான் நிப்பா.. அவர் பாத்துப்பார்”னு.  இருந்தாலும் வெளிய மலைய பார்க்கிறதும் அது கிட்ட எதுனா சொல்றதும்னு ஜன்னலுக்கும் பால்கனிக்குமா ஒரு பத்து நிமிஷம் ஓடினேன்.. அவருக்கு கால் பண்ணேன்..

 

என்னப்பா..

இரு.. பாக்கறேன்..

சத்தமா கூப்டு பாருங்களேன்..

இல்லடி.. இரு.. அதான் நான் ஏறிட்டு இருக்கேன்ல.. சந்திரன் அடுத்த வழியால ஏறிட்டு இருக்கார்..

ஐயோ.. மழை வேற பெய்ய போதுப்பா.. யாரும் கூட ஏறிட்டு இருக்கிறவங்க கிட்ட ஹெல்ப் கேளுங்களேன்.. இல்லேன்னா  நான் வரட்டா..

நீ இங்க எங்கனு வருவே.. நான் பாத்துக்கறேன். இரு..

 

மறுபடி மனசு அடிச்சுக்க ஆரம்பிச்சுது. பிள்ளையாரே.. என் குழந்தை பாவம் தவிக்கப் போறாளே.. மழையும் தன் பங்குக்கு மிரட்ட ஆரம்பிச்சுது. என் தங்கம் தவிச்சுக்கிட்டே ஓடறா மாதிரி ஒரு எண்ணம் வந்துது.. அடி வயித்தில இருந்து ஒரு வலி வந்துது பாருங்க.. என் ஃப்ரெண்டு மட்டும் இல்லேன்னா என் இதயம் நின்னு போயிருக்கும். அழுது கிட்டே எல்லா கடவுளையும் வேண்டிக்கிட்டு மறுபடி ஃபோன்..

 

என்னடி.. இன்னும் காணல..

என் தங்கம் பயந்துடப் போறாப்பா.. போலீஸ்ல சொல்லிடலாமா.. எனக்கு பயமா இருக்குப்பா..

இல்ல.. இரு பாக்கலாம். இங்க ஒருத்தர் கிட்ட வழி கேட்டிருக்கா.. அவரும் தேடிட்டு இருக்கார். வை ஃபோன.. பாக்கலாம்..

 

இப்போ அரைமணி போயாச்சு. இன்னொரு ஃப்ரெண்டுக்கு ஃபோன் பண்ணேன். அவர் உடனவே என்னவர் கிட்ட பேச அவர இன்னொரு வழியால வர சொல்லி சொல்லி இருக்கார். அவர் ”பயப்பிடாதீங்க.. இதோ நான் போயிட்டே இருக்கேன். போலீஸ்லாம். வேணாம். நாங்க பாத்துக்கறோம்”னார். இதுக்குள்ள இன்னும் ரெண்டு தரம் கண்ணாளன் கிட்ட பேசிட்டேன். இது மூணாவது கால்..

 

என்னப்பா..

என்ன.. மலை உச்சிக்கு வந்துட்டேன். காணோம்.. இரு..

இல்லைப்பா.. இப்பவாவது போலீசுக்கு ஃபோன் பண்ணுங்க.. என்னால தாங்க முடியலைப்பா..

சரி நீயே பண்ணு.. நான் இன்னும் கொஞ்சம் தேடறேன்.

 

கை நடுங்க 112 அழுத்திட்டு அவங்க லைனுக்காக வெயிட் பண்றேன் டிங் டாங்.. காலிங் பெல்.. பால்கனி கதவ திறந்து ”லச்சும்மாஆஆஆஆ”ன்னேன் ஒரு எதிர்பார்ப்பில.. ”அம்மா அப்பா என்னய வெயிட் பண்ண சொல்லிட்டு தனியா விட்டிட்டு வந்திட்டார்”னு விசும்பலோட சொன்னா.. உங்க பொண்ணு பேச ஆரம்பிச்சதும் முத முதலா பேசினது என்னன்னு தூக்கத்தில எழுப்பி கேட்டாக் கூட இனிமே இத தாங்க சொல்வேன். எப்டியோ படி இறங்கி கீழ போயி கதவு திறந்து என் செல்லத்த அணைச்சதும் தான் என் உயிர் திரும்பி வந்துது.. உடனவே அவருக்கும் ஃப்ரெண்டுக்கும் சொல்லிட்டு, அவங்க ஈர உடுப்பெல்லாம் மாத்த வச்சு, மூஞ்சி கழுவி, சாமி கும்பிட வச்சு, சாமி முன்னாடி பணமும் எடுத்து வச்சேன். அவ அப்பா மாதிரி தைரியசாலி. இத்தனைக்கும் அவ பயப்பிடல. எப்டியாவது தான் வந்திடுவேங்கிற மனத் திடம் இருந்திருக்கு. அது படியே வீட்டுக்கு தனியா வந்தும் விட்டா. ஏற்கனவே ஸ்கூலால + அப்பா கூடனு நிறைய தடவ அதே மலையில ஏறி இருக்கா. அதனாலதான் அவர் தனியா இறங்க சம்மதிச்சதே.

 

ஒரே மலைக்கு ஏற இறங்க நிறைய வழிகள் இருக்குங்க. ஏழு மலையும் தொடரா இருக்கிறதால வழி தப்பி பக்கத்து மலைக்கு போகவும் வாய்ப்பு இருக்கு. நானும் அவரும் ஒரு தடவை அப்டி போயிருக்கோம். ப்ராப்ளம் என்னன்னா எல்லா வழியும் பெரும்பாலும் ஒரே மாதிரி இருக்கும். சில இடங்கள்ள வெறும் பாறையா இருக்கும். நாமதான் கரெக்டா போகணும். இவங்களும் இறங்கும் போது வேற இடத்துக்கு போயிட்டாங்க. அப்புறம் மறுபடி மேல ஏறி கரெக்டா இறங்கிட்டாங்க. அப்போதான் ஒருத்தர் கிட்ட வழி கேட்டது. பக்கத்து வீட்டுக்கு போறாங்கன்னாலே மொபைல் கொண்டு போங்கம்மான்னு சொல்வேன். அன்னிக்கு என்னமோ எனக்கு அது தோணவே இல்லை. அவங்க மொபைலும் எடுத்து போகல. என்னவரும் ரொம்ம்ம்ம்ம்ப பயந்துட்டார். ஒரு மணி நேரம்.. நாங்க பட்ட அவஸ்தை இருக்கே.. யாருக்கும் அது வரக் கூடாதுங்க. குட்டித் தளபதி சொன்னார் ”அக்கா இனிமே நீங்க எங்கள விட்டு போக கூடாது. எனக்கு பயத்தில அழுகையே வந்துச்சு தெரியுமா”ன்னு. பாவம் இவர் கூட போன ஃப்ரெண்ட் சந்திரன் பசங்க ரெண்டு பேர் + சது இவ்ளோ கூத்துக்கும் வண்டில தனியா உக்காந்திருந்தாங்க.

 

ஒரு தடவை இப்டி ஆனத்துக்காக அவங்க தைரியத்த கெடுக்க வேணாமேன்னுட்டு இதோ இன்னைக்கும் அவரும் பசங்களும் டூர் போனாங்க.  ”மொபைல் எடுத்தீங்களாம்மா, அப்பா கூடவே போகணும், தனியா போயிட கூடாது”ன்னு சொன்னத்துக்கு சரிம்மான்னு சமத்தா தலை ஆட்டிட்டு போய் வந்து இதோ இப்போ எப்டி இருந்தது டூர்னு சொல்லிட்டு இருக்காங்க. பனையால விழுந்தவன மாடேறி மிதிச்சா மாதிரி என் அம்மாவும் அக்காவும் என்னய போட்டு கிழி கிழினு கிழிச்சுட்டாங்

 

-சரியா இந்த இடத்தில என் மொபைல் திடீர்னு துளி துளி துளி மழையாய் வந்தாளேனு பாடிச்சு.. எங்க நேரம் இரவு 22:00. டிஸ்ப்ளேல என்னவர் பெயர பாத்ததுமே பரபரப்போட  ஹலோன்னு சொன்னேன்.. விபரம் அடுத்த பதிவில..

 

இப்போ நேரம் எங்க நேரம் அதிகாலை 02:35. தொடர்ந்து படிங்க. இத எங்க விட்டேன்.. ஆங்.. கிழிச்சுட்டாங்க. அம்மா சொன்னாங்க ”உன் அக்காவுக்கு பெண் குழந்தை இல்லையேங்கிர கவலை இனிமே எனக்கு இல்லடிம்மா. இருக்கிறத பாத்துக்க முடியாம நீ பண்ணுறதே போதும் எனக்கு”னு. அக்கா அதுக்கும் மேல போயி “இதோ பாரு இது ரெண்டாவது தடவை. (ஓ.. அப்போ முதல் தடவை என்ன ஆச்சுன்னும் இன்னொரு போஸ்ட்ல சொல்லப் பேறியாஆ?) உன்னால வளர்க்க முடியலைன்னா குடுடி. என் செல்லத்த நான் வளர்த்துக்கறேன்”னு மிரட்டறா. செலவப் பாக்காம டிக்கட்ட போட்டு வந்து கூட்டிட்டுப் போயிடுவாளோன்னு பயந்து வருது எனக்கு.  அண்ணன்கள் ”என்னடி இது கவனமா பாத்துக்கோ”ன்னாங்க. மாமியார், மச்சினர்கள் கிட்ட பேசவே பயமா இருக்கு. அப்பா சொன்னார் ”நீ ஏற்கனவே நொந்து போய் இருக்கேன்னுட்டு நான் எதுவும் சொல்லலைம்மா.. ஆனா எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு, கோவமாவும்”னார்.

 

நான் என்னங்க வேணும்னா செஞ்சேன்.. அவங்க பயம் கோவமாகி திட்டிட்டாங்க. இனிமே என்ன.. உங்க பங்கையும் தீர்த்திடுங்க.

 

வர்ட்டா..

04 April, 2010

சாது மிரண்டால்..

பசங்களுக்கு பள்ளியில பெற்றோர் சந்திப்பு வச்சாங்க. போன அரையாண்ட விட இப்போ முன்னேற்றம் இருக்குன்னு சொன்னாங்க. ரெண்டு பேர் டீச்சருங்களும் ரொம்ப சந்தோஷப்படறாங்களாம் இவங்க ஸ்டூடண்ட்சா கிடைச்சத்துக்கு. அவங்க நிறைய சொன்னாங்கங்க. நான் ரொம்ப சமத்துன்னு மட்டும் எழுதிடறேன். (படிக்கிற நீங்க பாவம்ல) விஷயம் சின்னதா இருந்தாலும் கேக்கும்போது.. ஈன்ற பொழுதில்..

 

சின்ன வயசில இருந்து சது ஒரு ஜெண்டில்பாய்னு சொல்லி இருக்கேன். அவர விட சின்னப் பசங்க அடிச்சிட்டாங்கன்னா கூட திருப்பி அடிக்க மாட்டார். நர்ஸரி டீச்சர் சொன்னாங்களாம் யாரையும் அடிக்க கூடாது, அதிலயும் உங்கள விட சின்னப் பசங்கள அடிக்கவே கூடாதுன்னு. ஸ்கூல் சேர்ந்ததும் தான் ப்ராப்ளமாச்சு. நிறைய புது பசங்க. அப்போ என் கண்ணாளன் ஒரு நாள் சொல்லி வச்சார். யாராவது அடிச்சா உங்களுக்கு வலிக்குதில்ல. அதே மாதிரி நீங்க அடிச்சாலும் அவங்களுக்கு வலிக்கும். திருப்பி அடிச்சிங்கனா வலியோட பயத்தில மறுபடி அடிக்க மாட்டாங்க. இல்லேனா ஒரு விளையாட்டு மாதிரி எப்பவும் உங்கள சீண்டிப் பாப்பாங்கனு. இருந்தாலும் அவரால அத முழுசா ஒத்துக்க முடியல. சின்னப் பசங்க அடிச்சா எங்க கிட்ட சொல்வார். இனிமேல திருப்பி அடிச்சிடுவேன். ஏன்னா எனக்கு வலிக்குது அப்டினு. எங்க ஃப்ரெண்ட் ஒருத்தங்க பையனுக்கு ஒண்ணு வச்சிட்டார். அவர் இப்போ அண்ணா அண்ணானு ரொம்ப மடக்கம்.

 

க்ளாஸ் பையன் ஒருத்தர் ஓவரா டார்ச்சர் குடுத்திட்டார். இவருக்கு வந்த கோவத்தில அவர விரட்டி விரட்டி அடி.. அவர் பாத்ரூம்ல போயி தாழ்  போட்டுட்டு வெளிய வர மாட்டேனு அழுது கடசில டீச்சர் போயி சது அந்த ஏரியாலவே இல்லனு சொல்லி சமாதானம் பண்ணி தான் வெளிய வந்தாராம். அடுத்து ஒருத்தர் கூட சண்டை போட்டப்போ இவர் டீச்சரால விலக்கி விட முடியாம போக இன்னொருத்தங்க வந்து ரெண்டு பேருமா கஷ்டப்பட்டு பிரிச்சு விட்டாங்களாம். டீச்சர் சொன்னாங்க. ”அவ்ளோ கோவமா அன்னிக்குதான் நான் உன்ன பாத்தேன். வழக்கமா சண்டைக்கு நீயா போறதில்ல. அன்னிக்கு உனக்கு கோவம் வந்தது நியாயம்தான் இருந்தாலும் நீ அடிக்கிற அளவுக்கு போவேன்னு நான் நினைக்கல சது”னு.. உடனவே இவரு சொன்னார். ”நானா அடிக்க நினைக்கல அப்பாதான் சொன்னார் அடினு.” லைட்டா கம்ப்ளைண்ட் மாதிரி டீச்சர் எங்க கிட்ட சொல்ல வந்தாங்க போல. என்ன இதுங்கிறா மாதிரி என்னவர ஒரு லுக்கு விட்டாங்க. என்னவர் சொன்னார் ”சும்மாவே தொட்டத்துக்கெல்லாம் சண்டை போடறவங்கன்ற ஒரு தப்பான அபிப்பிராயம் வெளிநாட்டவங்க மேல இங்க இருக்கு. அதிலயும் நாங்க ஆயுத சண்டைக்கு பெயர் போன நாட்ல இருந்து வந்தவங்க. பசங்களுக்கும் அது தெரியும். யாரும் அடிச்சா தற்காப்புக்காக திருப்பி அடிக்கிறதோ, தடுக்கிறதோ தப்பில்லைங்கிறத புரிய வைக்க ட்ரை பண்ணேன். அததான் சொல்றார்”னு.. சொன்னேன் ஆனா சொல்லலை ரேஞ்சுக்கு பேசினார். அப்டியே நர்ஸரி டீச்சர் சொன்னத நான் சொன்னேன். டீச்சர் சிரிச்சிட்டே சொன்னாங்க. ”புரியுது. சது தானா வம்புக்கு போக மாட்டார். எனக்கு நல்லாவே தெரியும். ஆனா வந்ததையும் விட மாட்டார். இது இனி எல்லாருக்கும் தெரியும். (பன்ச் டயலாக்??) அதனால பெருசா ப்ராப்ளம் ஒண்ணும் வராது. இருந்தாலும் நீங்களும் தெரிஞ்சுக்கணும்னுதான் சொன்னேன்”னாங்க.

 

அவர் இத முன்னாடியே எங்ககிட்ட சொல்லி இருந்தார். இருந்தாலும் அப்பாவ மாட்டி விடுவார்னு நாங்க எதிர்பார்க்கல. அதொண்ணும் இல்லிங்க. அந்தப் பையன் நிறைய்ய்ய கெட்ட வார்த்தை சொல்வாராம். அன்னிக்கு கெட்ட வார்த்தை சொல்லிட்டே அடிச்சிட்டு நீ கருப்பன் தானே அதனால நான் அடிச்சாலும் திட்டினாலும் நீ வாங்கிதான் ஆகணும்னு சொன்னாராம். அப்புறமென்ன.. சாது மிரண்டிட்டார். அதென்னமோ தெரிலிங்க. இவங்க உடனவே சொல்றது நம்ம நிறத்ததான். பசங்க கிளாஸ்ல நல்லா படிக்கிறாங்கன்னா உடனவே நிறத்த சொல்லி கிண்டல் பண்ணுறது பெரிய வகுப்புகள்ள நிறையவே இருக்கு. இவங்க அதை எல்லாம் கண்டுக்காம படிச்சு மேல வரது இவங்க சாம்ர்த்தியம்.

 

நான் கூட எத்தனையோ தடவ கேட்டிருக்கேன். சுள்ளுனு கோவம் வந்தாலும் ஒண்ணும் சொல்ல மாட்டேன். அப்பாவப் பாத்து கத்துக்கிட்டது. பேசாம ஒரு சிரிப்போட போயிட்டோம்னா அதுவும் கூட அவங்களுக்கு செருப்படிதான். இருந்தாலும் ஏன் இப்டி இருக்காங்கன்னு வலிதான் கொஞ்ச நாளைக்கு மனச போட்டு வதைக்கும். நல்ல வேளை அப்போல்லாம் பக்கத்தில என் கண்ணன் இல்லையேனு நினைச்சுப்பேன். சின்ன சின்ன விஷயங்களுக்கு ஊரையும் உறவுகளையும் தேடி ஓடற மனச இழுத்து வச்சிக்கிட்டு, இந்த நாட்டோட காலனிலை தொடக்கம் கலாச்சாரம் வரைக்கும் எங்கள மாத்திக்கிட்டு வாழற வாழ்க்கையோட கஷ்டம் புரியுமா இவங்களுக்கு.

 

ஆஃபீஸ்ல இது வரைக்கும் ஒரு தடவை கூட எனக்கு விஷ் பண்ணாத ஏன் ஒரு ஹாய் கூட சொல்லாத ஒருத்தர் இருக்கார்னா பாருங்களேன். ரிஸப்ஷன்ல நிக்கிறப்போ, கிச்சன்ல காஃபி எடுக்க போறப்போ, லிஃப்ட்ல, இல்ல எதிர்க்க கடந்து போறப்போ சமயத்தில சிலர் கண்களுக்கு எப்டித்தான் நான் தெரியாம போறேனோங்கிறது எனக்கு இன்னமும் தெரியாத, புரியாத ஒண்ணு. (அதுவும் இவ்ளோ பெரிய உருவம் தெரியலைன்னாஆ.. அதையும் சொல்லேண்டி சுசி) அதுக்காக நான் அலட்டிக்கிறதில்ல. எங்க டீம் லீடர் நான் வேலைக்கு சேர்ந்த புதுசில ட்ரெய்னிங்ல இதையும் கத்துக் குடுத்தா. யாரெல்லாம் கண்டுக்காம போறாங்களோ அவங்கள பாத்து சத்தமா ஹாய் சொல்லு.. அடுத்த வாட்டி அவங்களாவே சொல்வாங்கனு. எனக்கு என்னமோ அது சரியா படலை. அதனால என் கண்ணன் சொல்றத செஞ்சிடுவேன். அது சரியானு சொல்லுங்க.

பிடிக்கலேன்னா போயிட்டே இரு..

வரட்டா..