Pages

  • RSS

23 April, 2011

எப்படி மறந்தேன்??

’எல்லாம் எடுத்து வச்சிட்டியா?’

கிளம்பும்போதும் அக்காச்சி நினைவாகக் கேட்டாள்.

‘வச்சிட்டேன் அக்காச்சி. கொஞ்சம் இருட்டா இருக்கு தனியா போறது பயமில்லையா’

1998. இதே திகதி. அதிகாலையில் ப்ரசிடண்ட் ஹோட்டல் நோக்கிப் போய்க் கொண்டிருந்த காருக்குள் நான் கேட்ட கேள்விக்கு ஒரு சிரிப்பையே பதிலாய்த் தந்தாள். அங்கே ஹோட்டலில் எங்களுக்காக புக் செய்த அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டோம். அறை எண் நினைவில்லை. ஒரு காஃபி ஆர்டர் செய்து குடித்து முடிக்கவும் மேக் அப் உமன் வரவும் சரியாக இருந்தது. படபடவென்று அவர் மேக் அப்பை ஆரம்பிக்கப் பொழுதும் புலர்ந்தது.

இமை த்ரெட்டிங் செய்த போது பாதியிலேயே அழ ஆரம்பித்து அக்காச்சியிடம் கெஞ்சினேன். ’கொஞ்சம் பொறுத்துக்கடி’ என்றாள். முதல் நாள் மேக் அப் பற்றிப் பேச்சு வந்தபோது நடுவில் சேர்ந்திருக்கும் என் இமைகளை ஒரு கணம் பார்த்துவிட்டு ’அதை ஒண்ணும் பண்ணாதிங்க’ன்னு அவர் சொன்னதையும் சொல்லிப் பார்த்தேன்.’இப்டி பாதி இமையோட நீ இருக்க முடியாது’ என்று கண்ணாடியில் காட்டி சமாதானம் செய்தாள். இதைச் சொல்லி இப்போதும் சிரிக்கத் தவறுவதில்லை அவள். என் வாழ்க்கையில் நான் செய்த முதலும் கடைசியுமான த்ரெட்டிங் அதுதான்.

மீண்டும் காஃபி ஆர்டர் செய்தோம். புதியதான ஓர் உணர்வுப் பிசையல் வயிற்றுக்குள். பசித்தாலும் சாப்பிடப் பிடிக்கவில்லை. சாப்பிடச் சொல்லி அவளும் அடம்பிடிக்கவில்லை. இடைப்பட்ட நேரத்தில் தன் வேலையைத் தொடர்ந்து கொண்டிருந்தார் மேக் அப் உமன். நாள் போதாமல் இருந்ததால் எல்லா டிங்கரிங் வேலைகளும் அப்போதுதான் செய்தார். அவருக்கு ஒத்தாசையாக இருந்ததிலும், என் பதட்டத்தைக் குறைப்பதிலும் நேரம் போனதில் அக்காச்சி ரெடியாகவில்லை. எட்டு மணிக்குள் மணப்பெண் தயார்.  நல்ல நேரம் வந்ததும் அவர்கள் வந்து கூப்பிடும் வரை அறையிலேயே இருக்கச் சொல்லித்தான் காலையிலேயே அனுப்பி இருந்தார்கள். ஏன் இன்னும் யாரும் வரவில்லை என்ற பயமும் சேர்ந்து கொண்டது.

எட்டு மணி கடந்த சில நிமிடங்களில் தானும் ரெடி ஆகலாம் என்று அக்காச்சி சூட்கேஸைத் திறக்க கதவு தட்டப்பட்டது. மணப் பெண்ணை அழைத்துப் போகவென பெண்கள் வந்திருந்தனர். அவர்கள் மேக் அப் உமனின் திறமையை சரி பார்த்த நேரத்தில் நீ போ நான் இதோ வரேன் என்ற அக்காச்சி மீண்டும் சூட்கேஸ் பக்கம் திரும்பினாள். உடனேயே நான் எழுந்து இரண்டடி வைப்பதற்குள் ’அடியேய் எங்கடி என் ட்ரஸ்லாம்’ என்றவள் சூட்கேஸை கவிழ்த்துத் தேடியும் அதற்குள் அவளின் புடவை தவிர வேறெதுவும் இருக்கவில்லை. பரவிக் கிடந்த என் உடைகள் என்னைப் பார்த்துச் சிரிக்க, மலங்க விழித்த என்னை ’நீ போ நான் எப்டியாச்சும் வரேன்’ என்று விரட்டினாள்.

அக்காச்சி.. கல்யாண மேடை கண்ணில் படும்வரை எனக்கு நீ என்ன செய்யப் போகிறாயோ என்று அழுகையாய் வந்தது. பதிவுலகம் மேல் சத்தியமாகச் சொல்கிறேன்.. இது உண்மை. நான் ஒன்றும் உன்னை அடியோடு மறந்துவிட்டு அவரிடம் ஓடவில்லை. அதன் பின் சடங்குகளுக்கிடையே தலை உயர்த்தி உன்னைத் தேடியபோது, உன் வழக்கமான சிரிப்போடு என் கண்ணில் நீ பட்ட பின்னர்தான் எனக்கு முழுமையான சந்தோஷம் வந்தது. மேக் அப் லேடியும் லேட்டாகிவிட்டதால் அடுத்த வேலை என்று போய் விட கூறைப் புடவையை எனக்கு நீயே கட்டிவிட்டு, தலை அலங்காரம் எல்லாம் மாற்றிவிட்டாய். அதுவும் அவர்கள் கொடுத்த பத்தே நிமிடத்துக்குள். ’ஏண்டி என் பொட்டைக் கூடவா மறந்துட்டு வருவே’ என்றபடி காஜலால் பொட்டு வைத்துக் கொண்ட உன்னைப் பார்த்து மறுபடி அசடாகச் சிரித்தேன்.

கல்யாணம் என்று முடிவாகியும் கண்ஸ் நோர்வேயில் அகதியாகத் தஞ்சம் புகுந்து இருந்ததால் இலங்கை வர முடியவில்லை. இந்தச் சிக்கல் உள்ள எல்லோருக்கும் இருந்த ஒரே தீர்வு இந்தியா அல்லது சிங்கப்பூர் சென்று கல்யாணம் செய்வதுதான். எங்களுக்கு இந்தியா தேர்வானது. நாட்டிலிருந்த பாதுகாப்புக் கெடுபிடிகள் காரணமாக இலங்கையிலிருந்து வரவே மாட்ட்ட்டோம் என்று நினைத்துக் கடைசி நேரத்தில் எல்லாம் சரியாகி ஏப்ரல் 19ஆம் திகதி மாமியார், மச்சினர்கள் சகிதம் இந்தியா வந்து சென்னையில், பாலவாக்கத்தில்  ஒரு தூரத்து உறவினர் வீட்டில் தங்கி இருந்தோம். 21ஆம் திகதி கண்ஸ் நோர்வேயிலிருந்து வந்தார். நாள் பார்த்து, தாலிப் பொன்னுருக்குவது தொடங்கி, கல்யாணத்துக்கு வேண்டிய அத்தனை ஏற்பாடுகளும், ஷாப்பிங்கும் அன்று மாலையே ஆரம்பித்து 23ஆம் திகதி மாலைக்குள் முடித்தோம். மாலை ஐந்து மணிக்கு அக்காச்சி, அம்மா, அப்பா வந்து சேர்ந்தார்கள். அண்ணா, ரஜி வரவே முடியவில்லை. நாங்கள் கடைசிக் கட்ட ஷாப்பிங் முடித்து வர அவர்கள் வந்து பசியாறிக் காத்திருந்தார்கள்.

கல்யாணப் பொண்ணு பர்த்டேப் பொண்ணுக்கு என்ன பரிசு வாங்கி வந்தீங்க என்று யாரோ கேட்டதும்தான் எனக்கு அன்று அவளின் பிறந்த நாள் என்பதே நினைவு வந்தது. ‘அட.. ஏன் நீங்கள் சொல்லேல்ல’ என்ற கண்ஸை அசட்டுச் சிரிப்போடு பார்த்தேன். உடனேயே எனக்கென வாங்கிய புடவைகளில் ஒன்றை அவளுக்குக் கொடுக்கச் சொன்னார். சாம்பல் நிறத்தில் வானவில் வண்ணங்களோடு இருந்த பனாரஸைக் கொடுத்தேன். அதையே கல்யாணத்துக்கும் கட்டலாம் என்று வீட்டுக்கார அக்காவோடு உடனே போய் ரெடிமேட் பிளவுஸ் வாங்கி வந்தாள். என் சூட்கேஸில் அவளதையும் வைக்கச் சொல்லிக் கொடுத்தாள். எப்படி மீதியெல்லாம் மறந்து, புடவையை மட்டும் மறக்காமல் வைத்தேனென்று இன்று வரை எனக்குத் தெரியவில்லை.

என்னை மணவறைக்கு அனுப்பிவிட்டு, அவள் யாரையோ கடைக்கு அனுப்பி, ஒருவழியாக ரெடியாகித் தானும் வந்து கலந்துகொண்டாள். இன்று வரை அவளின் பிறந்தநாளோடு ஆரம்பிக்கும் கிண்டல் எங்கள் திருமண நாள் வாழ்த்தில் முடியும்.

’அண்ணா இவள் என் பர்த்டேவ மறந்தா கூட பரவால்லை. பொண்ணு வாங்கன்னு சொன்னதும் என்னையும் மறந்துட்டு எடுத்தா பாருங்க ஒரு ஓட்டம்’

’அதில்லைங்க.. அவளுக்கு பயம். எங்க கடைசி நேரத்திலை பொண்ண மாத்திடுவாங்களோன்னு. அதான் வேணும்னே மறந்திருக்கா’

‘அது மட்டுமில்லைண்ணா. அவ ரொம்ப ஆசப்பட்டு வாங்கின புடவையாம் அது. அத எனக்கு குடுக்க வேண்டியதாச்சேன்னு வேணும்னே செய்த சதி இது’

இப்படியாக வருஷா வருஷம் அலுக்காமல் அந்த நினைவுகளை மீட்டெடுப்போம். 1998 இல் இதே நாட்களில் நாம் இந்தியாவில் இருந்தது. குடும்ப நண்பர்களாய் இருந்தவர்கள் கல்யாண பந்தத்தாலும் இணைக்கப்பட்டது. இன்று நினைத்தாலும் என்றுமே திரும்பக் கிடைக்க முடியாத நாட்கள் அவை. கிண்டலும் கேலியுமாய்ப் பறந்தோடிய பொன்னான நாட்கள்.

꽃배경04 உனக்காக வந்த ஸ்பெஷல் வாழ்த்து.

பாசக்கார உறவுக்கு நன்றிகள்.

 

 

 

 

என் ச்செல்ல அக்காச்சிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். என்றும் நாங்கள் உன்னோடு. உன் வீட்டில் நீ ராணியானாலும் நம் வீட்டின் இளவரசி இன்றும் நீதான். குட்டிப் பெண்ணாய் உன்னை அண்ணாந்து பார்த்து அன்று மலைத்தது போலவே இன்றும் இருக்கிறேன். உன் வழிநடத்தல் என் பலம். எனக்கு எது நல்லது என்று என்னைவிட உனக்குத் தெரியும். எதுவாக இருந்தாலும் உன்னிடம் பகிர்ந்த பின் தான் அது முழுமை பெறும். எதையும் இலகுவாகப் பார்க்கப் பழகும்படி எனக்கு எப்போதும் நீ சொல்வாய். இந்தப் பாடல் கேட்டிருக்கியா?

..உலகத்தின் ஓரம் நின்று அத்தனையும் பார்த்திருப்போம்
நடப்பவை நாடகம் என்று நாமும் சேர்ந்து நடித்திருப்போம்
பல முகங்கள் வேண்டும் சரி மாட்டிக்கொள்வோம்,
பல திருப்பம் தெரியும் அதில் திரும்பிக்கொள்வோம் கதை முடியும் போக்கில் அதை முடித்துக்கொள்வோம்..

ஒரு நாளில் வாழ்க்கை இங்கே எங்கும் ஓடி போகாது
மறு நாளும் வந்து விட்டால் துன்பம் தேயும் தொடராது
எத்தனை கோடி கண்ணீர் மண் மீது விழுந்திருக்கும்
அத்தனை கண்ட பின்னும் பூமி இங்கு பூ பூக்கும்..

இனியாவது ஊரில் வசந்தம் வரட்டும். எல்லார் வாழ்வும் செழிக்கட்டும். லவ் யூ அக்காச்சி.

 

par j இப்போதும் அநேகமானவர்கள் நம்பாத ஒரே விஷயம் எங்கள் திருமணம் பெற்றவர்களால் முடிவு செய்யப்பட்டது என்பது. கண்ஸிடம் சொல்லி இருக்கிறேன். அடுத்த பிறவியில் எப்படியாச்சும் காதலிச்சுத்தான்பா நாங்க கல்யாணம் பண்ணிக்கணும். அண்ணன்கள் தடுக்க, மச்சினர் கொதிக்க, பெற்றவர்கள் திட்டித் தள்ள ஓர் அதிரடிக் கல்யாணம் பண்ணணும். ஒரு திருட்டு முத்தமாவது காதலர்களாய் நாம் கொடுக்க வேண்டும். ஒருவரை ஒருவர் பார்க்க முடியாமல் ஒரு நாளாவது அழ வேண்டும். கல்யாணத்தின் பின் காதல் என்பதைவிட கல்யாணத்தின் முன்னும் காதலித்துப் பார்க்க வேண்டும். அவர் ஒரு சிரிப்போடு அடுத்த பிறவியலும் எனக்குத் தண்டனையா என்றாலும் எனக்கு என்னவோ அந்த ஆசை இப்போதும் இருக்கிறது. இருக்கும்.

எங்கள் பத்தாவது திருமண நாளுக்கு நண்பர்களுக்குப் பெரிதாக விருந்து வைத்தோம். கேக் கட் செய்யும் முன்னர் எங்களை பார்ட்டி ஹாலில் இருந்த மாடிப்படி வழியாக இறங்கி வரச் சொல்லிக் கட்டாயப்படுத்தி அனுப்பி வைத்தார்கள். முன்னே அம்மு, அடுத்து அவர், நான், கடைசியில் சதுவென்று கை கோர்த்தபடி இறங்கி வந்தோம். கிட்டத்தட்டப் பதினைந்து படிகள் இறங்கி வரும்போது, நண்பர்களின் வாழ்த்துப் பாடல்களோடு பத்து வருட மண வாழ்க்கையைப் பட்டென்று திரும்பிப் பார்த்து வந்த உணர்வு, உறவென்று ஒருவரும் இல்லாத இடத்தில் அத்தனைக்கும் உடன் வரும் நண்பர்கள். அத்தனை பேருக்கும் கண்ஸ் மனதார நன்றி சொன்னபோது அதிகம் பேர் கண்கள் கலங்கிப்போய் இருந்தது.

வாழ்த்திய கையோடு என்ன விசேஷம் இன்னைக்கு என்று கேட்பவர்களுக்கு எதுவுமே இல்லை எல்லாம் வழக்கம் போல்தான் என்று பதில் சொன்னாலும் இந்த நாள் தரும் புத்துணர்வுக்கு இணையேதும் இல்லை. என் அன்புக் கண்ணாளா.. என் காதல் கணவா.. நீங்களில்லாது நான் வாழ்ந்திருப்பேன்.. ஆனால் இப்படி வாழ்ந்திருக்கமாட்டேன். லவ் யூ கண்ணா.

என் பிள்ளையாரப்பா.. எல்லோரையும் இன்பமாய் வாழ வை!!

18 April, 2011

அப்பப்போ நினைச்சும் பார்க்கணும்!!

ஆஃபீஸ்கு லேட்டாக எழுந்து அரக்கப் பரக்க.. இங்கே ஒரு வழக்கம் போல் சேர்த்துக்கொண்டாலும் தப்பில்லை. ரெடியாகிக் கொண்டிருந்தபோது அளவுக்கு அதிகமாக கிரீமை கையில் கொட்டி விட்டேன். பூசியது போக மீதியை அருகில் ப்ரஷ் செய்துகொண்டிருந்த சது மீது பூசிவிட்டேன். ‘அஷ் (அய்யே) என்னம்மா நீங்க.. என்மேல பொண்ணு வாசம் வரப்போது’ என்று சொல்லியபடி தேய்த்துக் கழுவியும் சந்தேகத்தோடு என்னை மோந்து பார்க்கச் சொன்னார். பாடி க்ரீமுக்கு இந்த அலப்பரையா என்று கேட்டு அம்மு எண்ணையை ஊற்ற, சமாதானம் செய்து கிளம்பினேன். ஆஃபீஸில் Fund Department கலீக் ஒருவன் என் hand cream எடுத்துப் பூசிக் கொள்வான். முதல் முதல் அவன் க்ரீம் கேட்டு வந்தபோது சூட் போட்டு மீட்டிங் போக ரெடியாக இருந்தான். கேலியாய் பார்த்த இன்னொரு கலீகுக்கு ’என் மேல எப்போதும் பெண் வாசம் இருக்கணும். அதான் பெண்கள் க்ரீம்’ என்று காரணம் சொன்னான். ’ஆமா பார்த்தேன்.. மீட்டிங் ரூம்ல அத்தனையும் சூட்டு போட்ட ஆம்பளைங்கதான் இருக்காங்க. பெண்வாசனையோட போற.. இன்னைக்கு நீ காலி பாரு’ என்று நான் வாரிவிட சிரித்துக் கொண்டே ஓடிவிட்டாலும் இன்னமும் அவனுக்கும் சேர்த்து தண்டத்துக்கு hand cream வாங்கிக் கொண்டிருக்கிறேன். ஹிஹிஹி.. சதுவும் வருங்காலத்தில் என்ன செய்வாரோ என்று நினைத்துப் பார்த்தேன்.

@@

ரஜி வயல் அறுவடை செய்து வழக்கம்போல என் மாமியார் வீட்டுக்குக் குடும்ப சமேதராய் போய் புத்தரிசி கொடுத்துவிட்டு வந்தானாம். மாமியார் பெருமையாகச் சொன்னார். ‘என்னடா.. மாமியாரை வசியம் பண்றியா. எனக்குத்தான் தங்கச்சியே கிடையாதேடா’ என்று கண்ஸ் கிண்டல் செய்தார். புத்தரிசி வீட்டுக்கு வந்ததும் கோயிலில் பொங்குவதும், பெரியவர்களுக்கு கொடுத்து ஆசீர்வாதம் வாங்குவதும் எங்கள் வழக்கம். புத்தரிசிப் பொங்கல்.. ஹூம். புத்தரிசிச் சோறு.. ஹூம். ’கண்ணு வைக்காத இப்போதான் சாப்டேன்’ என்று ஃபோனில் சொன்னதால் அவனுக்கு எதுவும் ஆகவில்லை. ஹிஹிஹி.. என் மருமகள் சைடு ஆளுங்க வருங்காலத்தில் எனக்கு என்ன வசியம் செய்வார்களோ என்று நினைத்துப் பார்த்தேன்.

@@

பெரிய கிளாஸ் ஒன்றை எடுத்துத் தரச் சொன்னார் சது. எதுக்கென்று கேட்டு பதிலுக்குக் காத்திருந்த என்னைத் தவிர்த்து அவரே எட்ட்ட்டி எடுக்கப் பார்த்து முடியாமல் பதிலினார். ஜூஸ் குடிக்கவாம். அதுக்கு எதுக்கு அவ்ளோ பெரிய கிளாஸ். சின்னதிலை குடிங்க போதும் என்று சிறியதொன்றை எடுத்துக் கொடுத்தேன். கிளாஸை ஜூஸால் நிறைத்து மடமடவென்று குடித்துவிட்டு மீண்டும் கிளாஸை நிறைத்தார். ‘எதுக்கு இப்..’ என் பாதிக் கேள்வியிலேயே பதில் வந்தது. ‘முதல்ல டேஸ்ட் பார்த்தேன். ம்ம்ம்ம்.. ரொம்ப நல்லாருக்கு. இனிமேலதான் குடிக்கப் போறேன்’ ஹிஹிஹி.. அவர் வயசில் கடந்த காலத்தில் நான் எம்புட்டு அறிவோடு இருந்தேன் என்று நினைத்துப் பார்த்தேன்.

012

@@

‘இத்தக்குக்கு பித்தாக்கு குதாங் இஞ்கா உவ்வி உவ்வி காவா கவ்..’

அட்ஷகி சொன்னதை அப்படியே திருப்பிச் சொன்னேன்.. விழுந்து புரண்டு சிரித்தார். ‘என்னடி நிலா.. அவங்க பாஷேல இது என்னமோ செம காமடி மாட்டர் போல இருக்கே’ ன்னேன். இப்படியாகத்தான் அட்ஷகி பேசுகிறார். இடையில் நாங்கள் சிரித்தால் புரிந்ததுபோல் அவரும் கைகொட்டிச் சிரிப்பு வேறு. குழந்தைப் பேச்சுக்கு என்ன அர்த்தம் என்று ஒரே சொல்லை அவர்கள் அடிக்கடி சொல்வதை வைத்துக் கண்டுபிடிக்கலாம். எதை வைத்து அப்படி ஒரு சொல்லை உருவாக்குகிறார்கள் என்று ஆச்சரியப்படும் அளவுக்கு சம்பந்தமே இல்லாத ஒலிகளை/சொற்களை சில பொருட்களுக்குக் கொடுப்பார்கள். அதில் அலோ என்றால் ஃபோன் போன்ற இலகுவான சொற்களும் இருக்கும். அம்மா, அப்பாவுக்கு அடுத்து அம்மு சொல்லியது அக்கா என்ற சொல். அந்த அக்காவின் தொனியை வைத்து என்ன சொல்கிறார் என்று எனக்குப் புரியும். அடுத்து கடாபுடாவென்று அவர் பேசத் தொடங்கியபோது.. அவளவு சரளமாக எனக்குப் புரியும் என்பது போல் பேசிக்கொண்டே போவார். இடையிடையே என்னிடம் பதில் வேறு எதிர்பார்ப்பார். ‘என்னவாம்டி’ என்று கேட்கும் கண்சுக்கு மொழிபெயர்ப்பது நான் தான். சது அவளவாகப் பேசியதில்லை. சிரிப்பும், தலையசைப்பும், அம்மா என்பதுமாகவே காலத்தைப் போக்கிவிட்டார். ஹிஹிஹி.. வருங்காலத்தில் வரப் போற மாப்பிள்ளை, மருமகள் நிலமை பற்றி நினைத்துப் பார்த்தேன்.

@@

கடந்த காலத்தை நினைத்துப் பார்த்தால் இம்புட்டு அப்பாவியாவா இருந்திருக்கேன்னு தோன்றுகிறது. வருங்காலம் ரொம்பவே மிரட்டுகிறது. அட உங்களை இல்லைங்க. என்னை..

வர்ட்டா..

10 April, 2011

என் கண்ணன்..

சீடன். எதிர்பார்க்கவே இல்லை இப்படிப்பட்ட ஒரு படமாக இருக்குமென்று. விமர்சனங்கள் படிக்காமல், கேட்காமல் படம் பார்த்து மலைப்பதும் வித்தியாசமான அனுபவம்தான். எனக்குப் பிடித்த காதல். எனக்குப் பிடித்த வலியோடான காதல். அடுத்து நடக்கப் போவதை மட்டுமில்லாமல் முடிவைக் கூட முன்னாடியே ஊகிக்க முடிந்தது. எந்த திடீர்திருப்பங்களும் இல்லை. இருந்தாலும் ஏனோ மென்மையாய்.. மயிலிறகாய் வருடியது கதை.. படம்.

எங்கள் வீட்டில் எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து ஒரு கண்ணன் படம் எப்போதும் இருந்தது. செப்பு வாயும், வட்டக் கண்களும், அலை அலையாய் கருமுடியும், எதையோ சொல்வதாய்/எதிர்பார்ப்பதாய் அந்தக் கண்களில் வழியும் கருணையும்,  பஞ்சுக் கை உயர்த்தி வெண்ணெயை எமக்குத் தருவதாய் இரு கால் நீட்டி உட்கார்ந்திருப்பான் குறும்புக்காரன். என் பொல்லாத போக்கிரிக் கண்ணன் என்னைக் கை நீட்டி  அழைப்பதாகவே என் கண்ணுக்குத் தெரியும். அப்போதிருந்து அவனுக்குத் தனியாகப் பூ வைக்க ஆரம்பித்தேன். காதல் என்றால் கண்ணன் என்று புரியத் தொடங்கியதில் இருந்து அவனோடான என் உறவும் நெருக்கமாய் ஆனது. நாங்கள் இடம்பெயர்ந்து எங்கு போனாலும் அங்கே அவன் வந்துவிடுவான். அவனில்லாத இடத்தில் மயிலறகில் அவன் உருவம் பொருத்தி வணங்கிய நாட்களும் உண்டு.

012 இங்கே வந்த புதிதில் பூஜை அறையில் அவன் இல்லாத கவலையை அடுத்த வருடமே காலண்டர் வடிவில் வந்து போக்கினான். கன்சீவ் ஆகி இருந்த சமயங்களில் அந்தக் குழந்தைக் கண்ணனின் குறும்பு முகத்தைப் பார்க்கத் தெவிட்டுவதே இல்லை. இப்போது போலவே.

 

மீண்டும் சீடன். மனதை அழுத்திய வலியோடு அசையாது பார்த்துக்கொண்டிருந்தேன். ’நீயும் நானும் மட்டும்தான் இங்க இருக்கோம்னு நினைச்சுப்பாடு’ என்று பாட்டிம்மா சொல்ல மகா பாடத் தொடங்கியதும் கண்ணீர் கட்டுக்குள் இருக்கவில்லை. சுகமான அழுகையோடு இன்னொன்றும் தோன்றியது. சித்ரா அற்புதமாகப் பாடி இருந்தாலும் அனன்யாவுக்கு அவரின் குரல் கொஞ்சமாய் பொருந்தவில்லை. நன்றாக நடித்திருக்கிறார் அனன்யா. தனுஷ் முருகனாய் காட்சி கொடுத்த இடத்துக்குப் பக்கத்தில் சேவல் காணிக்கை செலுத்துமிடம் என்று எழுதப்பட்டிருந்தது சின்னதாய் ஒரு சிரிப்பைத் தந்தது.

தினாவின் இசையில் பா.விஜயின் வரிகள் காதலின் வலியை அழகாய்ச் சொல்கின்றன. முருகனிடம் பாடலைக் கேட்கும் நானும் வேண்ட ஆரம்பித்துவிட்டேன். நீங்களும் கேட்டு, பாருங்க.

--

ஒரு நாள் மட்டும் சிரிக்க
ஏன் படைத்தான் அந்த இறைவன்
என்று கேட்டது பூக்களின் இதயம்
மறுநாள் அந்த செடியில் 
அந்த மலர் வாடிய பொழுதில்
பட்டுக் கிடந்ததே இறைவனின் மனமும்..

(ஒரு நாள்..)

கண்பார்வை பறித்து எனை காண சொல்கிறாய்
வெந்நீரை ஊற்றி ஏன் பூக்கச் சொல்கிறாய்
ஊமையாய் மாற்றியே பாடவும் கேட்கிறாய்
நான் சரியா இல்லை தவறா
நான் கனவு எழுதி கலைந்து போன கதையா..

(ஒரு நாள்..)

உன் மீது சிந்தும் நீர் தீர்த்தமானதே
உனைச் சேரும் சாம்பல் திருநீறும் ஆகுதே
உருகியே கேட்கிறேன் அடுத்த என் பிறவியில்
மனம் இரங்கி அருள் வழங்கி
உன் கோயில் படிகள் ஆகப் பிறக்கும் வரம் தா..

முருகா என் சலனம் சலனம் தீர்க்க வேண்டும் முருகா
இந்த ஜனனம் ஜனனம் போதும் போதும் முருகா
உன் சரணம்.. சரணம் முருகா..


02 April, 2011

எல்லோரும் கொண்டாடுவோம்!!

அண்ணா, ரஜி, அப்பா, அவர்களின் ஃப்ரெண்ட்ஸ் கை தட்டும்போது என் கையும் சேர்ந்து தட்டும். அவர்கள் இருக்கை விட்டு எழுந்து  ஆரவாரிக்கும்போது நானும் குதிப்பேன். அடச்சே/ஐயோ என்று தலையில் கைவைத்தால் சிரிப்பு வந்தாலும் சோகமாய் இருப்பதாய் காட்டிக் கொள்வேன். வீட்டிலுள்ள அத்தனை கதிரைகளையும் வரிசையாக அடுக்கி, பாய் கொண்டு தரை டிக்கட்டும், மேஜை வைத்து பால்கனியும் என ஒரு தியேட்டர் எஃபெக்ட் இருக்கும். வெளியே சைக்கில்களும், ஓரிரு பைக்குமென இலவச பார்க்கிங். இடையிடையே வறுத்த கடலை, லெமன் ஜூஸ், கூல்ட்ரிங்க்ஸ் என அம்மா என்னைக் கூப்பிட்டுக் கொடுத்தனுப்புவார். எனக்கும் சேர்த்து. முதல் வரிசைக் கதிரையில் ஆரம்பித்த என் கிரிக்கெட் (பார்வையாளர்) பயணம் காலப்போக்கில் மேஜை பால்கனிக்குப் பின்னே நின்று எட்டிப் பார்க்கும் நிலமைக்குத் தள்ளப்பட்டது. நான் வளர்ந்துவிட்டேனாம்.

நானும் ரஜியும் தென்னை மட்டை வைத்து எப்போதும், அண்ணா பேட் திருடி சிலசமயமும் கிரிக்கெட் விளையாடுவோம். கிச்சன் பக்கமா அடிச்சா ஃபோர். வேலில, கிணத்துப் பக்க மதில்ல பட்டா சிக்ஸர். அப்புறம் அவன் ஆறாம் வகுப்பு போனதும் ஸ்கூல் கிரவுண்ட் போயிடுவான். எனக்கு பர்மிஷன் கிடைக்கல. அத்தோடு ஒரு கிரிக்கெட் வீராங்கனையின் திறமை உலகுக்குத் தெரியாமல் போய்விட்டது.

அப்பா கிரிக்கெட் விளையாடி நான் பார்த்ததில்லை. அம்பயராய் இருப்பார். அவர் ஒரு வாலிபால் ப்ளேயர். அவர் உயரம் அதுக்கு ஒரு பிளஸ். இப்போதும் நேரம் கிடைத்தால் கனடாவில் விளையாடுவார்.

அண்ணா, கண்ஸ் ஸ்கூல் டீமில் இருந்தார்கள். கண்ஸ் பேட்டிங்கில் அசத்துவார். அவர் பேட்டிங் பார்க்கவே பக்கத்து ஸ்கூல் பொண்ணுங்கல்லாம் அலை மோதுவாங்க. என் காதில் இப்போதும் புகை.

இடப் பெயர்வுகளால் கிரிக்கெட் போகப் போகக் குறைந்து போய் ஃபுட்பால், வாலிபால் அதிகமாகியது. அண்ணா வேறு ஊரில் இருந்ததால் ரஜி, கண்ஸ், இரண்டு மச்சினர்கள் ஒரே டீமில் விளையாடுவார்கள்.

என்னதான் போரும் சாவுமாய் நாட்கள் கழிந்தாலும் கிரிக்கெட், ஃபுட்பால், வாலிபால் டோர்னமெண்ட்ஸ் நடப்பதும், கண்ஸ் பக்கத்து ஊர்க்காரருக்கு கும்மிவிட்டு வருவதும் ஒரு பக்கம் நடந்து கொண்டுதான் இருந்தது. மாவீரர் பெயரில் போட்டிகள் நடந்தால் மட்டும் சண்டை இழுக்கமாட்டார்கள்.

பொருளாதாரக் கட்டுப்பாடு விதித்து இராணுவம் எங்களை முடக்கிய காலங்களில் கூடசெய்திக்கு அடுத்து கிரிக்கெட் கமண்ட்ரி கேட்கத் தவறியதில்லை. உயிரே இல்லாத பாட்டரி. காதோடு ரேடியோவை அழுத்தி வைத்து ஸ்கோர் கேட்டுச் சொல்வார் அப்பா.

இங்கு வந்த பின் கிரிக்கெட் என்ற பேச்சுக்கே இடமில்லை. ஆனால் ஃபுட்பால், வாலிபால் தொடர்கிறது. சிக்ஸரும், ஃபோரும் மட்டும் தெரிந்த நான் கிரிக்கெட் என்றால் என்னவென்றே தெரியாத நார்வேஜிய அப்பாவி மக்களுக்கு கிளாஸ் எடுத்துக் கொண்டிருக்கிறேன். கலீக்ஸில் ஒரு வங்களாதேசத்தவரும், ஒரு தென் ஆபிரிக்கரும் இருப்பதால் ஸ்கோரும் வேலையுமாய் டீம் லீடரை கடுப்பேற்றிக் கொண்டிருந்தோம். போன வருடம் முதல் முதல் தமிழர்கள் ஒரு கிரிக்கட் டோர்னமெண்ட் வைத்தார்கள். கண்ஸ் கிளப்பும் கலந்துகொண்ட வகையில் நான் பார்க்கப் போயிருந்தேன். வந்திருந்தவர்களில் இங்கே பிறந்த பல தமிழ்ப் பிள்ளைகளுக்கு விளையாட்டுப் புரியவில்லை. சிலர் கூகிளாண்டவர் துணையோடு வந்திருந்தனர்.

வெகு காலம் பார்க்காததாலோ என்னவோ அன்று அவளவு சந்தோஷமாக இருந்தது. கண்ஸ் டீம் பிராக்டிசே இல்லாமல் களமிறங்கி போட்டிகளிலேயே பிராக்டிஸ் செய்து காலிறுதிவரை வந்தனர். அண்ணனாய் இருந்தபோது அவர் விளையாடியதை பார்த்தவளுக்கு கண்ணனாய் ஆனதும் பார்ப்பதென்றால் கேட்க வேண்டுமா. விசில் தெரியாததால் அதை விட்டு கைதட்டல், கூக்குரல், ஓ போடுதல் என நான் போட்ட அலப்பறையில் எல்லோரும் கொஞ்சம் அரண்டுதான் போனார்கள். ‘என்னப்பா.. நீங்க இவ்ளோ சத்தம் போடுவிங்கன்னு இவ்ளோ நாள் எங்களுக்குத் தெரியாம போச்சேன்னு’ தெரிந்த அக்கா ஒருவர் மலைப்போடு சொல்லும் அளவுக்கு சவுண்ட்.

அதற்குப் பிறகு இந்த வருஷம்தான் முதல் தடவையாக வீட்டில் கிரிக்கெட் அதுவும் உலகக் கோப்பை மேச்கள் பார்த்தோம். கண்ஸ்க்குப் பிடித்த Man U மேச்கள் அவரோடு சேர்ந்து பார்ப்பேன். ஆனால் இந்த உலகக் கிண்ணப் போட்டிகள் முழுவதும் இருவரும் சேர்ந்து பார்த்தோம். இருவரும் ஒன்றில் உறுதியாக இருந்தோம். இலங்கை தவிர எந்த நாடும் ஜெயிக்கட்டும்.

சது முதற்கொண்டு எல்லோருக்கும் இந்த எங்கள் உணர்வு ஆச்சரியம். நாட்டுப்பற்று இல்லையா என்று இமை தூக்கினர். இது எங்களைப் போல் நாடிழந்த, உறவுகள் இழந்த பலரின் ஆதங்கம். இலங்கை அணி பாவமே. அதுவும் 48 ரன்ஸில் சங்கக்கார அவுட்டானபோது ‘பாவமா இருக்குப்பா, ஐம்பதாவது அடிச்சிருக்கலாம்’ என்று நான் அங்கலாய்க்க, ‘ம்ம்.. என்னதான் இருந்தாலும் அவன் நல்ல ப்ளேயர்டி’ என்று கண்ஸ் ஆமோதித்தார். ஆனால் இந்தியா ஃபைனல்ஸ் வந்ததில் எங்களுக்கு எக்கச்ச்ச்ச்சக்க சந்தோஷம். கடைசி நொடி வரை இந்தியா வெல்லவென்று பிரார்த்தனையோடு பார்த்தேன். அதுவும் சிரித்துக் கொண்டு இருந்த மஹிந்தவின் முகம் பார்த்ததில் இருந்து இந்தியா வெல்ல வேண்டுமென்று வெறியே வந்துவிட்டது.

இடையில் இன்று Man U மேச் இருந்ததால் கண்ஸ் எஸ்ஸாக சது வந்து எனக்குக் கம்பனி குடுத்தார். எனக்குத் தெரிந்ததைச் சொல்லிப் புரியவைத்தேன். மலிங்கா தலை மட்டும் அல்ல, பந்து வீசும் விதமும் பயங்கரமாக இருக்கும் என்பதால் ‘இவன் கொஞ்சம் ஆபத்தானவன்’ என்றேன். உடனேயே ‘ஏன்மா அவர் கொலை செய்வாரா’ என்று சது கேட்டார். சிங்களவர் என்றால் கொலைகாரர் என்ற எண்ணத்தை பிள்ளை மனதில் இருந்து மாற்ற வேண்டும். உடனேயே அவருக்குப் புரியும்படியாய் மீண்டும் நான் ஏன் இலங்கை அணியை எதிர்க்கிறேன் என்று சொன்னேன். அத்தோடு இந்தியா அவருக்கும் பிடிக்கும் என்பதால் அவரும் இந்திய அணிக்கு ஆதரவை அள்ளி வழங்கினார்.

the cup of joy இந்திய வீரர்களுக்கு எனது மரியாதை கலந்த வாழ்த்துகள். கடைசியில் ஆனந்தக் கண்ணீரோடு எழுந்து நின்று என்னை அறியாமல் கைதட்ட ஆரம்பித்துவிட்டேன். நன்றி இந்திய வீரர்களே.

 

 

இந்த மேச்சுகளுக்கிடையே Sky sports காரர்கள் போட்ட விளம்பரங்களில் தமிழ்ப்பட ஹீரோ ரேஞ்சுக்கு அடாவடியாய் ரசிக்க வைத்தது இந்த NISSAN QASHQAI விளம்பரம். பாருங்கள்.