Pages

  • RSS

28 October, 2010

கண(ள்)வரே..

நேற்று வீட்டுக்கு அவருடைய இரண்டு நண்பர்கள் வெவ்வேறு நேரத்தில் வந்தாங்க. வந்தவங்களுக்கு வீடெல்லாம் சுற்றிக் காட்டினார். இதிலென்ன அதிசயம் என்று நினைப்பவர்கள் (நினைக்காதவர்கள் அடுத்த பத்திக்கு எஸ்ஸாகாமல்) தொடர்ந்து படிக்கவும். இந்த வீடு ஒதுங்க வைப்பதென்பது எனக்கு மட்டும்.. ம்ஹூம்.. முடியவில்லை. ’ஒரு ஃப்ரெண்டு வந்தா கூட வாசலோட அனுப்ப வேண்டியது இருக்கு’ ‘நான் மட்டும் அசையாம இருந்தேன்னா என் தலை மேலவும் எதையாவது வச்சிட்டு போயிடுவேடி நீ’ இப்படியான வசனங்கள் அடிக்கடி கேட்கும் எங்கள் வீட்டில். பொறுத்துப் பார்த்துப் பொங்கி விட்டார் கண்ணாளன். திடீரென்று வீடு பெரியதாகிவிட்டது போன்ற உணர்வு. நடக்கும் போது எதுவும் காலை இடறவைல்லை. இருக்கும்போது இல்லை.. இருக்க இடம் தேட வேண்டியதில்லை சோஃபாவில். தேவையில்லாததென்று தான் கருதிய அத்தனை பொருட்களையும், (கவனிக்க.. பொருட்கள்) கடாசிவிட்டார். ஒவொரு நாளும் நான் வேலை முடிந்து வீட்டுக்கு வரும்போதும் வீடு எம்ப்ட்டியாகும் வேகத்தை கண்டு திகைத்துப்போவேன். எடுத்தது எடுத்த இடத்தில் வைக்கப்பட வேண்டும் என்பதில் தொடங்கி ஏகப்பட்ட ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸ். ’இப்போ பாத்தியா வீட்டை’ பெருமையோடு சொன்னவரிடம் ‘இதெல்லாம் முன்னாடி நான் செஞ்சப்போ கவலையே இல்லாம கிளறி வச்ச ஆள், இப்போ தான் அடுக்கி வைக்க ஆரம்பிச்சதும் அலப்பரைய பாரு’ என்றேன். ஒத்துக் கொள்வதற்கும் கொள்ளாததற்கும் இடைப்பட்டதாய் ஒரு ரீயாக்‌ஷன் கணவனால் மட்டுமே முகத்தில் காட்ட முடியும் போல.

ஒரு பர்த்டே பார்ட்டிக்குப் போயிருந்தோம். கை தவறி டீயைக் கொட்டி விட்டேன். சாரி (இது அந்த சாரி இல்லைங்க) ரொம்ப பிடிச்ச சாரி. ஆவ்வ்வ்வ்.. பாழாகிய கவலையில் அருகில் இருந்தவர்களின் ஆடைகளையும் அது நனைத்து வைத்ததை கவனிக்கவில்லை. அவர்கள் பலகாரங்கள் (உங்க ஊர்ல பட்ஷணமானா ஸ்வீட் காரம்னா சொல்விங்க?) எடுக்க போய்விட்டதால் தர்ம அடியிலிருந்து தப்பிவிட்டேன். விடுவாரா என்னவர். சாரிக்கு முதலுதவி செய்துவிட்டு சோகத்தோடு வந்தவளைக் கை காட்டி ‘பாலன்.. இதோ வரா உங்க  லெதர் ஜாக்கெட்ட நாசம் பண்ணவ’ என்று போட்டுக்கொடுத்துவிட்டு ஜூன் போனால் ஜூலை காற்றே என்று பாடிக் கொண்டிருந்தவரை ரசிக்க ஆரம்பித்தார். அதாவது அவர் பாடிய பாடலை.

ஒரு தடவை தங்கா அக்கா வீட்டில் பேசிக் கொண்டிருந்த பொழுது விஜய் அண்ணா சொன்னார்.

’நான் எப்போதும் தங்கா கிட்ட சொல்லி ஆச்சரியப்படுவேன். குணா கிட்ட எத கேட்டாலும் இருங்கண்ணா.. அவ கிட்ட கேட்டுட்டு சொல்றேன்னுதான் சொல்வார். நான் தங்கா கிட்ட கேட்டு சொல்றேன்னு சொன்னதில்லை’

’எப்டி என்கிட்ட சொல்விங்க. சொன்னாலும் நான் ஒத்துக்கணுமே. சுசி அப்டி இல்லை. அவர் என்ன சொன்னாலும் சரிம்பா. அந்த நம்பிக்கைல அவர் கேக்கறார்’

என்று தங்கா அக்கா பதில் சொன்னபோது மறுபடியும் முதல் பத்தியில் நான் சொன்ன ரீயாக்‌ஷன் அவர் முகத்தில். எதுவாக இருந்தாலும் என்னிடம் கேட்பார். இதை செய்யலாமா, இங்கே போகலாமா, அதை வாங்கலாமா என்று அவர் கேட்கும்போதே எனக்கு புரிந்துவிடும். அவருக்கு அதில் எவளவு விருப்பம் இருக்கிறதென்று. அதற்கேற்ப பதில் சொல்வேன். பிடிக்காவிட்டால் இன்ன காரணம் என்று சொல்லி அதன் பின் உங்கள் இஷ்டம் என்று முடித்துவிடுவேன். நான் மறுத்த,  தடுத்த  சந்தர்ப்பங்களை எண்ணித்தான் பார்க்க வேண்டும்.

கடையில் நின்று கொண்டு கால் பண்ணுவேன். ‘என்னப்பா கார்ட்ல காசே இல்லை’ என்று. இன்னொரு கார்ட் பேரை சொல்லி அதில இருக்கும் எடுத்துக்கோ என்பார். மறுபடி கால் பண்ணி அதோட கோட் சொல்லுங்க என்பேன். ’இவ கிட்ட கொஞ்சம் பொறுப்பா இருக்க சொல்லுங்களேன். செல்லப் பிள்ளை. குடுத்து வைச்சவ. மாசம் மாசம் பில்ஸ் செட்டில் பண்ண நான் படும்பாடு எதுவும் இவளுக்குத் தெரியாது. கடைல நின்னுட்டு கால் பண்றா. அவ கார்டோட கோட் கூட என் கிட்ட கேக்கறா’ தங்கா அக்காவிடமோ அக்காச்சியிடமோ குறைப்பட்டுக் கொள்வார். அவ்வப்போது எங்களின் நிதிப்பிரிவு பற்றி புரிய வைப்பார். கேட்டுவிட்டு மறந்துவிடுவேன். எப்படி அப்பாவின் பிள்ளையாய் வளர்ந்தேனோ அப்படி என்னவரின் முதல் பிள்ளையாய் வளர்ந்து கொண்டிருக்கிறேன். இப்படி இருப்பது தப்பென்று அதிலும் என்ன லோன், எங்கே, எவளவு போன்ற வீட்டின் நிதி நிலைமை கூடத் தெரியாத அளவுக்கு இருப்பது மிகவும் தப்பென்று தெரிந்தாலும் எல்லாம் அவர் பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கை பெரிதாக இருக்கிறது.

எங்கள் வீட்டிலிருந்து நாங்கள் செல்லும் அதிகபட்சமான தூரம் தங்கா அக்கா வீடு. அரைமணி நேர ட்ரைவிங். வரும்போது அவர் வண்டி ஓட்டும் நிலைமையில் இருந்தால் (!) இப்போதெல்லாம்  தூங்கிப்போகிறேன்.  ’என்னடி அங்க இருந்து வரும்போது தூங்கிடறே பரவால்லை. தூரம். உனக்கும் வயசாயிடுச்சு. அதுக்குன்னு பத்தே நிமிஷத்தில இருக்கிற ரஞ்சன் வீட்டுக்கு போயிட்டு வரும்போது கூடவா தூங்குவே’ தட்டி எழுப்பிக் கேட்டார். முன்பெல்லாம் தூங்கும்போது நான் ஏதாவது சொல்லிக்கொண்டே இருப்பேன். ம் கொட்டியபடி தூங்கிப் போவார். இப்போதெல்லாம் அவர் பேச ம் கொட்டுவது நானாகிப் போயிற்று. கேக்கரியான்னு கொஞ்சம் சத்தமாய் கேட்கும்போதுதான் உறங்கிவிட்டேன் என்று தெரிகிறது.

‘என்னடி நீ. எனக்கு முன்னாடி தூங்கிப் போறே. எனக்கு தூக்கமே இல்லை நைட் பூரா தெரியுமா’

‘இல்லப்பா நீங்க பேசினத கேட்டுட்டு தானே இருந்தேன். தூங்கலை நானு’

அவர் பின் தான் தூங்கினேன் என்பதில் உறுதியாக இருந்தேன். பிறிதொரு நாள் தட்டி எழுப்பி ‘இதோ பாரு.. தலைய கோது, முதுகை வருடு.. எதுனா செய்து என்ன தூங்க வச்சிட்டு நீ தூங்கு. இப்டி நீ முன்னாடியே தூங்கிப் போனா எனக்கு தூக்கமே வர்லடி’ என்று குழந்தையாய் சிணுங்கிய போது இனிமேல் முதலில் தூங்கக் கூடாது என்று நினைத்துக் கொண்டேன். இதனால்தான் முன்னோர்கள் முன் தூங்கி பின் எழச் சொன்னார்கள் போல. பாவம் என் கண்ணாளன். 

இன்று முதல் முதலாக அவர் என் அருகில் இல்லாத அவரின் பிறந்தநாள். லண்டனில் இருக்கும் மச்சினர் ஊருக்குப் போகப் போவதால் அவரை வழி அனுப்பப் போக வேண்டிய கட்டாயம். அதிகாலை ஃப்ளைட்டுக்குக் கிளம்புகையில், வாசலில் கிடைத்த அணைப்பில் ’தம்பிக்காகத்தான் போறேன் குஞ்சு (உங்க ஊர்ல செல்லம்) கவலைப்படாம இரு’ என்பதாய் அவர் மனம் தெரிந்தது. எனக்கு நேர் எதிர். உணர்வுகளை அதிகம் வெளிக்காட்ட மாட்டார்.

எல்லாரும் அவரை என்றும் இதுபோல் இன்பமாய் வாழ மனமார வாழ்த்துங்கள். அவருக்கு பிடிச்ச Manchester United சாங் ஒண்ணு பாத்திடலாம்.

அப்படியே இங்க போய் எனக்கு பிடிச்ச, இப்போ நான் கேட்டுட்டு இருக்கிற பாட்டையும் பாருங்க.

வர்ட்டா..

26 October, 2010

என் குட்டித் தேவதை!!

’அம்மாச்சி.. இத வந்து இப்போ எடுத்து வைச்சிட்டு போறிங்களா இல்லையா.. எத்தனை தடவை சொல்றது கிச்சன்ல ஸ்கூல் பாக் வைக்காதிங்கன்னு’ என் சத்தம் வீடதிர ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு தடவையாவது கேக்கும். என் வாழ்க்கையில் நான் அதிகமா சண்டை போடும் ஒரே ஆள்.. என் அம்மாச்சி(உங்க ஊர்ல அம்மு). எங்களுக்கே சமயத்தில் சண்டை போடாதபோது சாப்பிட்டது செரிக்காதது போல் இருக்கும். கண்ணாளன் அடிக்கடி சொல்வது ’இதுங்க ரெண்டும் ஒரே நம்பர்ல இருக்கிறதும் போதும், போடற சண்டையும் போதும்’ ஆனால் என்னதான் சண்டையென்றாலும் அம்மா வேண்டும். எல்லாவற்றுக்கும்.

நவராத்ரி சமயம் கோயில் போனபோது வழக்கம் போல் என் முன்னே நின்றவரை வயிற்றை சுற்றி அணைத்தபடி சாமி கும்பிட்டேன். சாமி தெரியவில்லை. தன்னிச்சையாய் தலை உயர்த்தியும், பக்கவாட்டிலும் பார்த்து வணங்கினேன். எல்லோரும் அதையே சொன்னபோது தான் புரிந்தது. வளர்ந்துட்டாங்க. என் மூக்கு உயரம் வந்திட்டாங்க.

அப்படியே உருவத்தில் மட்டுமல்ல குணத்திலும் கண்ணாளன். பிடிவாதம், முன்கோபம், பொறுமையின்மை, எதையும் இலகுவாக எடுத்துக் கொள்வது. மீதிக்கு என் அக்காச்சி. நகைகள் பொன்னோ, பொய்யோ. பிடிக்காது. பொட்டு பிடிக்காது. அம்மா வாங்கும் உடைகள் பிடிக்கும், சொல்வதை போட பிடிக்காது. இருந்தாலும் தனியாக விளையாடும்போதோ, பாடும்போதோ, அம்மாவை சுற்றிச் சுற்றி வரும்போதோ அவரில் எங்காவது என்னையும் பார்த்துக் கொள்கிறேன்.

’அம்மா.. நீங்க போட்டிருக்கிற இந்த ட்ரஸ் ரொம்ப அழகா இருக்கு. இந்த தோடு, வளையல் எல்லாம். நான் வளந்ததும் அப்டியே எனக்கு குடுக்கறிங்களா??’

‘ஏம்மா.. இது பழசில்லை. அம்மா உங்களுக்கு புதுசா வாங்கி குடுக்கறேன்’

‘புதுசும் வாங்கி குடுங்க. பழசுன்னாலும் இதுவும் எனக்கு வேணும்’

கேட்டு வாங்கி வைப்பாரே தவிர எதுவும் போட்டுக்கமாட்டார். இந்த சம்மர் சமயம் என் டீஷர்ட்ஸ் நான் போடாமலே சலவைக்கு வந்தது. எப்படின்னு கேட்டால் ‘சும்மா போட்டுப் பாத்தேம்மா. சரியா இருந்திச்சு’ன்னு தன் அலமாரில எடுத்து அடுக்கி வைத்திருந்தா. என் காலணிகளும் தப்பவில்லை.

இப்போவே அக்காச்சி சொற்படி தம்பி நடக்க ஆரம்பித்தாயிற்று. அவருக்கு சாப்பாடு எடுத்து குடுப்பது, சாக்லேட் மில்க் செய்து கொடுப்பது போன்ற சின்ன சின்ன உதவிகள் செய்து கொடுப்பாங்க. அப்பாவிடம் ஐஸ் வைத்து காரியம் சாதிப்பதிலும் சமத்தோ சமத்து.

ஒரு நண்பி பொறுப்பே இல்லாம இருக்கா உங்க பொண்ணு என்பதாய் எதுவோ சொல்ல, பொறுப்பை வளர்ப்பதாய் நினைத்துக்கொண்டு நான் சிலபல அட்வைஸ்களை வாரி வழங்கியபோது சரியென்று நல்ல விதமாகத் தலையாட்டினார். என் பொண்ணுக்குப் பொறுப்பு வந்ததாய் எனக்கும் நிம்மதி. அடுத்த அரை மணியில் அதை சுக்கு நூறாக்கிவிட்டு ஓடியவரைப் பார்த்துக் கேட்டேன்.. இப்போதானே இவ்ளோ சொன்னேன்.. இப்டி பண்ணி வச்சிருக்கிங்க.. பொண்ணா நீங்க?? கேட்ட வாய் மூட முன்னர் பதில் வந்தது.. ஆமாம்.

குழந்தையாய் இருந்தபோது எடுத்த படங்கள், வீடியோக்கள் பார்ப்பதென்றால் கொள்ளைப் பிரியம். ஊர்க் கதைகள், என் சின்ன வயதுக் கதைகள் எல்லாம் கேட்டுக்கொண்டே இருப்பார். தோழிகளுக்குக் கூட அதை சொல்லச் சொல்லுவார். வகுப்பில் சமத்து. ஆசிரியர்களின் செல்லப் பெண். எதையும் முதலே செய்து முடித்துக் கொடுத்துவிடுவார். அது சரியா என்று திருப்பி பார்ப்பது கிடையாது. இந்த வகையிலாவது கொஞ்சம் பொறுமையை கற்றுக் கொடுக்கவென்று இன்னமும் முயன்று கொண்டு இருக்கிறேன்.

என் வீட்டுத் தேவதைக்கு இன்று பிறந்தாள். மனதார வாழ்த்துங்க.  என் அம்மாச்சி என்றும் இனிமையாய் வாழட்டும்.

தமிழில் இந்தப் பாட்டுத்தான் இப்போ அவங்க விருப்பம். ஐஷின் டான்சும் ஒரு காரணம்.

24 October, 2010

முன்னே ஒரு U பின்னே ஒரு A..

wings

விரிந்து கொண்ட சிறகுகளுக்குத்

தெரியவில்லை

இது எட்டா வானம் நோக்கிய

முடிவில்லாப் பயணம் என்று

போகட்டும் விட்டுவிடு..

முடிந்த வரை பறந்து சாகட்டும்!!

புரிந்து கொண்ட மனதின்

கெஞ்சுதலை மீறி

ஒடித்துப் போடத் தோன்றவில்லை

பரிதாபமான என் சிறகுகளை.

#####               #####                #####                #####                #####                #####

kyss t

எதுவோ சொன்னேன்

mm என்றான்

முன்னே ஒரு u

பின்னே ஒரு a

சேர்த்து சொல்லு என்றேன்

சொன்னதை செய்யும்

வழக்கம் தெரியாத என் கண்ணன்

சொல்லவில்லை..

கொடுத்தான்..

umma..

#####               #####                #####                #####                #####                #####

rein kyss முத்து முத்தாய் மழைத் துளிகள்

கூடவே கண்ணீர்த் துளிகள்

என் மடியில் பட்டுத் தெறித்தன

உன்னோடு நனையாத

ஒவ்வொரு மழைக்கும்

சொல்லி அனுப்புகிறேன்

நாளை என் கண்ணன்

என்னுடன் இருப்பான்..

மறக்காமல் வந்துவிடு!!

#####               #####                #####                #####                #####                #####

21 October, 2010

அடுத்த மாட்டருக்குப் போகலாம்!!

ஒரு குட்டிக் கதை. ரொம்ப பிடிச்சுது கேட்ட பொழுது.

ஒரு குருவும் சிஷ்யனும் போய்க் கொண்டு இருக்கிறார்கள். வழியில் ஒரு ஆறு. கடக்க நினைக்கும்போது வந்து சேர்கிறாள் ஒரு இளம்பெண். அவளால் அதைக்  கடக்க முடியாத நிலை. குரு அவளைத் தோளில் தூக்கியபடி கடக்கத் தொடங்குகிறார். சிஷ்யனுக்கு ஒரே யோசனை, குழப்பம். குருவிடம் கேட்கத் தைரியம் இருந்தும் கேட்க விடவில்லை அவரின் பிடிவாதக் குணம். கூடவே அவராகவே சொல்லுவார் என்ற நம்பிக்கையும். குரு சிஷ்யனின் மனம் அறிவார். குழப்பத்தை அவரே கேட்கட்டும் என்று வாளாவிருந்தார். அக்கரை சேர்ந்து இரவு ஒய்வு எடுத்துக் கொள்ளும்போது குருவே கேட்டார் ’உன் மனக் குழப்பம் என்ன? சொல் சிஷ்யா’ . அதற்கு சிஷ்யன்  ’நீங்கள் எப்படி ஒரு இளம் பெண்ணை தொட்டுத் தூக்கலாம். உங்களுக்கே இது நியாயமாகப்பட்டதா’ என்று பொங்கிவிட்டார். அதற்கு குரு ஒன்றே ஒன்றுதான் சொன்னார். ’நான் அவளை அப்போதே, அங்கேயே இறக்கிவிட்டுவிட்டேன். நீ இன்னமும் சுமந்து கொண்டு இருக்கிறாய்’

சமயத்தில் நாமும் இந்த சிஷ்யனைப் போலத்தான். அவரவர் தாம் செய்வதை செய்து முடித்துவிட்டு சந்தோஷமாகப் போய்க் கொண்டே இருப்பார்கள். நாம் தான் அதை நினைத்து நினைத்தே.. சரி விடுங்கள். அடுத்த மாட்டருக்குப் போகலாம் நாம்.
[ [ [ [ [

நேற்று தேதி 20.10.2010. நேற்றுத்தான் இந்த வருடத்துக்கான முதல் பனி வீழ்ச்சி என்பதில் இந்த ஊருக்கு அதிகப்படி சந்தோஷம். எல்லோரையும் போல் என்னால் கொண்டாட முடியவில்லை. வெள்ளைப் பனி பார்த்து வெள்ளந்தியாய் ஆனந்தக் கூக்குரலிட்ட பிள்ளைகளுடன் ஒப்புக்கு ஆர்ப்பரித்தேன். மனதுக்குள் ஒரு பக்கம் எரிமலை வெடித்துச் சிதற, மறுபக்கம் பொங்கி வந்த கண்ணீர் நதி அதை அணைத்துக் குளிர்வித்துக் கொண்டிருந்தது. அந்த மனநிலையில், அக் கணம் பேசிக் கொண்டிருந்த உயிர் நட்பிடம் கூட இதைப் பகிர்ந்து கொள்ளவில்லை. 'ஏன் டல்லா இருக்கே?' என்று கேட்கப்பட்ட  கேள்விக்கு பதில் சொல்லாதது போலவே இதை பகிர்ந்து கொள்ளவும் தோன்றவில்லை. இன்று வழக்கத்துக்கு மாறாக அதிகாலையிலேயே விழித்தும் வெளிநடப்பு மறந்து, கட்டில் விட்டு இறங்கி வர மனமில்லாமல் கண் மூடிப் படுத்திருந்தேன். லேட்டானதில் விரைவாக ரெடியாகி, கார்க்கீயோடு அதை விட வேகமாக வெளி வந்தால்.. என்ன சொல்ல.. நீங்களே பாருங்கள். வண்டி இப்படி இருக்கிறது. அதிலிருந்த பனியை தட்டிக் கொட்டி வேலைக்கு வர அரைமணி லேட். ட்ராஃபிக் வேறு நெரித்தது. என்னைப்போலவே நிறையப் பேர் இருக்கிறார்கள் போல.

026 027 முதல் நாளே காலை 7:17 க்கு இந்தக் கொடுமை. ரோடைப் பாருங்கள்.

இரண்டு வாரம் முன்னாடியே இங்கு குளிர் தொடங்கி விட்டது. எனக்கு சுவீடனில் ஒரு நண்பி இருக்கிறார். அவருடன் பேசும்போது 'இனிமேல shawl, gloves, woolen hat, rubber boots, down jacket எல்லாம் போட்டுக்கிட்டு fancy dress contest போக ஆரம்பிக்க வேண்டியதுதான். அதுக்காகவே அரை மணி நேரத் தூக்கத்தை தியாகம் பண்றதுதான் பெரிய கொடுமைங்க' என்று சொன்னார். அவங்க ஒல்லியா இருப்பாங்க. நான் down jacket ல போனாஆஆவ்வ்வ்.. சரி விடுங்கள். அடுத்த மாட்டருக்குப் போகலாம் நாம். 
[ [ [ [ [ 

பனிகாலத்தில் காலையில் வண்டிக்குள் ஏறும்பொழுது ஒரு குளிர் வரும் பாருங்கள்.. எலும்பை உறைய வைக்கும். முன்னாடியே காரை ஸ்டார்ட் செய்து ஹீட்டர் போட்டு வைக்காவிட்டாலோ அல்லது காரிலிருக்கும் நவீன முறை தானியங்கி ஹீட்டர்களை முன்னாடியே டைம் செட் செய்து வைக்காவிட்டாலோ செத்தோம். நான் ஸ்னோவை வழித்து, சுரண்டி சுத்தம் செய்யும் நேரம் கண்டிப்பாக காரை ஸ்டார்ட் செய்து விடுவேன். உறுத்தலுடன். அரை மணி நேரம் முன்னாடி வண்டியை ஸ்டார்ட் செய்து வைப்போர் பலர். உறுத்தலின்றி. ஒவொரு வின்டரின் போதும் சூழல் எவளவு மாசுபடும் என்று நினைத்துப் பாருங்கள். . போன வாரமே அவதானிகள் சொல்லிவிட்டார்கள் இன்று பனி விழும் என்று. ஞாயிறன்றே கண்ணாளன் எங்கள் வண்டிக்கு விண்டர் டயர் மாத்திவிட்டார். இன்னும் பலர் சம்மர் டயரோடு ஓட்டுகிறார்கள். பின்னர் எங்கிருந்து விபத்துக்களைத் தவிர்ப்பது. போன வருடம் டிசம்பரில் ஆரம்பித்த பனி வீழ்ச்சி, இந்த வருடம் ஐப்பசியிலேயே ஆரம்பித்துவிட்டதில் கடுப்பில் இருக்கும் இந்த ஊர்க்காரர்களுக்கு இதுக்கு மேலும் புத்தி சொல்வது எனக்கு நல்லதல்ல. பரவாயில்லை சொல்லு என்கிறீர்கள்தானே? சரி விடுங்கள். அடுத்த மாட்டருக்குப் போகலாம் நாம்.
[ [ [ [ [

மதியம் ஒரு மணி வரை நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. பின்னர் பாருங்கள் கூத்தை. நாங்களும் ஆணிகளை வைத்து விட்டு யன்னல் வழியாக புதினம் பார்க்க ஆரம்பித்தோம். சம்மர் டயர் மாற்றாததால் வந்த வினை. என் பேச்சை யார் கேட்கிறார்கள்.

037 சிவப்பு பஸ்சின் பின் நிற்கும் வெள்ளை வண்டி பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்து வைத்தது போக்குவரத்துச் சிக்கலை.

036 இந்த சிவப்பு வண்டி வழுக்கிப் போய் முன்னால் நிற்கும் வெள்ளை வண்டி மீது டமார்.. மரம் மறைக்கின்றது. ரோடுக்கு அந்தப்புரம் ஒரு சிவப்பு வண்டி தெரிகிறதா? அரைமணிக்கும் மேலாக முயற்சி செய்தார். வண்டி நேராகுவதாய் காணோம். பின்னர் அப்படியே பார்க் செய்துவிட்டுப் போய்விட்டார்.

038 இந்த அம்மணியும் சம்மர் டயர் மாற்றவில்லை. பாதசாரியிடம் உதவி கேட்கிறார். பாருங்க.. பஸ் கஷ்டப்பட்டு ஓவர் டேக்கிங்.

039 041 என் இருக்கையில் இருந்தபடியே யன்னல் வழி காட்சிகள்.

042 043 என் மீது எந்த வண்டியும் இடித்துவிடாமல் தப்பிவந்து பசங்களை பள்ளியில் இருந்து கூட்டிப் போகக் காத்திருந்தபோது. இடப்பக்கம் லச்சு பள்ளி. வலப்பக்கம் சதுர் பள்ளி.

047 048 இது நேற்று வீட்டு பால்கனியில் இருந்து எடுத்தது. எதிரே மைதானத்தில் சதுர் காற்பந்துப் பயிற்சியில். சரியாக இப்போதுதான் ஓரிரு வெண்பனித் துளிகள் விழத் தொடங்கின. உற்றுப் பார்த்தால் வெள்ளைப் புள்ளிகளாய் தெரியும். தெரியவில்லையா? சரி விடுங்கள். அடுத்த மாட்டருக்குப் போகலாம் நாம் என்று சொல்லப் போவதில்லை நான். இத்துடன் முற்றும். இப்போதைக்கு!!

வர்ட்டா..

17 October, 2010

தேதி என்ன??

j 030

அக்டோபர் பதினேழு என்று சொல்பவர்கள் தெரிந்து கொள்ளுங்கள். இதையும் தெரிந்து கொள்ளுங்கள் என்று சொல்ல வேண்டுமோ??இன்றுதான் நான் இந்தப் பூமியில் அவதரித்த பொல்லாத நாள்.

மறக்காமல் நினைவு வைத்து வாழ்த்திய குருவுக்கும், சுவரொட்டியில் வாழ்த்திய சங்கத்துக்கும், பஸ்ஸில் முதலில் வாழ்த்தி, பின் தனியாக வாழ்த்திய வசந்துக்கும், பஸ்ஸில் அவரின் வாழ்த்தைத் தொடர்ந்து டவுட்டாகவும், தெளிவாகவும் வாழ்த்திய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். (எங்கே என் டவல்.. ஆவ்வ்) எல்லோருக்கும் தனித் தனியாக நன்றி சொல்லாததன் காரணம் அறிய அடுத்த பத்திக்கு உங்களை பண்போடு அழைக்கிறேன்.

இதை நான் எழுதத் தொடங்கும்போது மணி 00:32. நேற்று ஒரு நண்பியின் குழந்தைக்கு தொட்டில் இடும் விழா. எங்கள் ஊரில் 31 என்று சொல்வோம். அது முடித்து அப்படியே ஒருவருக்குப் பிறந்தநாள் விழா. ஒரே நாளில் இரு விழாக்கள் என்பது ஒரே கல்லில் இரு மாங்காய் போல் அவ்வளவு உவப்பாக இல்லை. இங்கு பாதி, அங்கு மீதியென முழுதாகக் கலந்து கொள்ள முடியாது. இன்னும் கொஞ்சம் இருந்துவிட்டுப் போகலாமே என்று இவர்களும், என்ன இவ்வளவு தாமதம் என்று அவர்களும் கேட்கும்போது சிரித்துத்தான் வைக்க முடிகிறது. மிகவும் களைப்பாக இருக்கிறது. ஒரு விருந்தல்ல, இரு விருந்தில் சாப்பிட்டேன். தூக்கம் ஆளைச் சுற்றுகிறது. தூங்கி எழுந்து எல்லோருக்கும் நன்றி சொல்கிறேன். தயை கூர்ந்து மன்னித்து அருளுங்கள்.

எப்போதும் எனக்கு ஒரு கவலை. என்ன?? நான் ஏன் பிறந்தேன் என்று நினைப்பேன் என்றுதானே நீங்கள் நினைக்கிறீர்கள்?? அது அல்ல.

நான் ஏன் வளர்ந்தேன்??

இதுதான் அந்தக் கேள்வி. இப்போதும் என் மனம் கேட்கும் கேள்வி. ஒரு மூன்று வயதோடு என் வளர்ச்சி நின்றிருக்க வேண்டும். அந்த வயதில்தான் என்ன ஒரு சுகம். அனைவரையும் பேச்சாலும், சிரிப்பாலும், குறும்புகளாலும், வசியம் செய்து வாழ்ந்த அந்தக் குட்டி இளவரசி வாழ்க்கை.. மீண்டும் வருவதில்லை.. கனவில் கூட.

அதை விட்டு விடுவோம். இதோ.. உங்களுக்கு நானே செய்த கேக்குகள் இரண்டு. பார்த்து மகிழுங்கள். வேலைக்கு விடுப்பு வேண்டுமென்பவர்கள் சாப்பிடலாம்.

IMG_0802 இது என் நண்பி மகள் பிறந்தநாளுக்கு செய்தது. பார்த்ததுமே Hello Kitty என்று கண்டுபிடித்துவிட்டார் துளசிக் குட்டி. அவர் கேட்டதும் அதுதான். அதன் பின் கேக்கை விட்டு நகராமல் ’மின் கிற்றி’ (எனது கிற்றி) என்று சொல்லி, ஒரு கையால் தொட்டபடி கேக் வெட்டும் வரையும் அவர் நின்றபோது ஏன் முன்னாடியே காட்டினோம் என்று ஆகிவிட்டது.

IMG_0732 இது பட்டர் கேக். சதுர்ஜன் பிறந்த நாள் அன்று செய்தது.

வாழ்த்துக்களோடு கண்டிப்பாக பரிசுகளும் வேண்டும் எனக்கு. ஆவன செய்யுங்கள்..

வர்ட்டா..

10 October, 2010

வேண்டவே வேண்டாம்!!

என்னை நீ முழுவதுமாக

புரிந்து கொள்ளும்போது

என் உயிர் கண்டிப்பாக

என்னிடம் இருக்காது

எனக்காக உன் கண்ணிலிருந்து

ஓர் ஒற்றைத் துளி கூட

வேண்டவே வேண்டாம்

உன் மீதான என் அன்பை

அது கேவலப்படுத்தி விடும்

பதிலாக யாரிடமாவது சொல்லி

பெருமைப் பட்டுக்கொள்

உனக்காகவே ஒரு பைத்தியம்

வாழ்ந்து இறந்ததென்று!!

;;;     ;;;     ;;;     ;;;     ;;;

girl with book

;;;     ;;;     ;;;     ;;;     ;;;

மறு ஜென்மம் எனக்கு

உண்டா தெரியவில்லை

ஆம் என்பது பதிலானால்

உன் அன்புக்குரியவளாய்

அதிலாவது பிறக்க வேண்டும்

இன்னொரு பிறவி

உன் அன்புக்காக ஏங்கும்

பாவப்பட்ட ஜீவனாக

இறைவா எனக்கு

வேண்டவே வேண்டாம்!!

04 October, 2010

என் மன்னன் எங்கே!!

இலங்கையின் வன்னி மண்ணை ஆட்சி செய்த மன்னர்களில் கயிலைவன்னியனின் ஆட்சிக்காலத்தை வன்னி வரலாற்றின் பொற்காலமென்று சொல்லலாம். இவன் கயிலாயவன்னியன் என்றும் அழைக்கப்பட்டான். வன்னியர் என்றால் வலிமை மிக்கவர் என்று பொருள். வன்னியின் பனங்காமம் என்ற இடத்திலிருந்து 1644 ஆம் ஆண்டு முதல் 34 ஆண்டுகள் வலிமையான ஆட்சியை இம் மன்னன் நடத்தி வந்தான்.

இவன் ஆட்சிக்கு வந்ததில் இருந்து யாழ்ப்பாணத்தில் போர்த்துக்கேயரது ஆட்சியின் இறுதிக்காலம் வரை, 14 ஆண்டுகள் அவர்களுக்குப் பணியாது, திறை செலுத்தாது இருந்தான். அதேபோல் ஒல்லாந்தரது ஆட்சியிலும் தன் வாழ்வின் இறுதி வரை அவர்களுக்குத் தலை வணங்காது, திறை செலுத்தாது, யாழ்ப்பாணம் வருமாறு அவர்கள் விடுத்த கட்டளையை ஏற்காது உறுதியாக இருந்தான். இதனை ஒல்லாந்து ஆளுநர் Thomas Wantry தனது அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

வன்னிப்பகுதி ஏழு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு வெவ்வேறு மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்ட போதும் மாற்றாரினால் அச்சுறுத்தல் வந்த போதெல்லாம் இவன் தலைமையின் கீழ் அனைவரும் ஒன்று சேர்ந்து போரிட்டனர். ஏழு அரசுக்குள்ளும் இவன் அரசு பேரரசாக போற்றப்பட்டது. Robert Knox என்ற ஆங்கிலேயர் தமது இலங்கையின் வரைபடத்தில் இவனது ஆட்சிப்பகுதி தென்கிழக்கே கொட்டியாரம் என்ற இடத்தையும் உள்ளடக்கிப் பரந்து இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

கயிலைவன்னியன் தம் ஆட்சிப்பகுதியான யாழ்ப்பாணத்தின் மீது படையெடுக்கக் கூடுமென்று அஞ்சிய போர்த்துக்கேயர், வெற்றிலைக்கேணி என்ற இடத்தில் ‘பெங்சூற்றர்’ என்றும், ஆனையிறவு என்ற இடத்தில் ‘பைல்’ என்றும் இரண்டு கோட்டைகளைக் கட்டியதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இவன் கி.பி 1678 ஆம் ஆண்டு இயற்கைச் சாவு எய்தினான்.

hjemland k

O O O O O O O O O O O O O O O O O O O O

என்ன மக்கள்ஸ்?? அப்டி எல்லாம் நினைக்கக் கூடாது. நான் நல்லாத்தான் இருக்கேன். இது எப்பவோ ஒரு காலத்தில மரியாதைக்குரிய வெறும்பய அவர்கள் என்னை தொடர்ந்து எழுதச் சொல்லி கை கா(மா)ட்டி விட்ட ஒரு தொடர் பதிவு. அவர் அவரப் பத்தியே ”யோசிச்சு தான் சொல்லணும்... சீக்கிரமே சொல்றேன்..” அப்டின்றார். ஆனாலும் மன்னாதி மன்னன் என்று ஒரு தொடர் பதிவில பாபர் மன்னன் பத்தி நிறைய எழுதி இருக்கார். அப்படியே மன்னர்கள் வரலாறு மீண்டும் நினைவுபடுத்தப்படணும்னு இதை ஒரு தொடரா எழுதலாம்னு என்னையும் தொடரச் சொன்னார். அதுக்கு அவருக்கு மீண்டும் நன்றிகள். ஆவ்வ்வ்.. இனி நான் சிலரை தொடர வைக்கணும். அட.. அதுக்குள்ள அம்புட்டுப் பேரும் ஓடியே போய்ட்டாங்களே.. இருந்தாலும் ஓலை அனுப்புவோம்ல..

அதுக்கு முன்னாடி ஒரு விஷயம். என்ன செய்ய.. டிவின்னா யாரக் கூப்பிடப் போறேன்னு சொல்ல முன்னம் ஒரு ஆர்வத்தைக் குடுக்க ப்ரேக் விடலாம். பிளாக்ல.. இப்டித்தான். கொசுவத்தி சுத்தணும். இந்த மன்னன் ஆட்சி செய்ததா சொல்லப்பட்ட இடமான பனங்காமத்தில என் அத்தை ஒருத்தங்க கல்யாணம் செஞ்சு போயிருக்காங்க. வளர்ந்ததுக்கு அப்புறம் போர்ச் சூழ்நிலைகளால அதிகம் போக முடியலைன்னாலும் சின்ன வயசில அங்க போறப்போல்லாம் அரண்மனை சிதைவுகள் உள்ள ஒரு கோயிலுக்கு போவோம். பெரிய பெரிய தூண்கள், சுவர்கள் எல்லாம் காடு மூடி இருக்கும். அதுக்குள்ள ஒளிஞ்சு விளையாடுவோம். அதே போல மாபெரும் மன்னனான பண்டாரவன்னியனுக்கு அவனைக் கொன்ற ஆங்கிலேயத் தளபதியே அவன் வீரத்தைப் பாராட்டி வைத்த நடுகல் சின்னத்தை கற்சிலைமடு என்ற இடத்தில போய் பாத்திருக்கேன். இதை விட வன்னிப் பிரதேசத்தில ஆங்காங்கு குறு நில மன்னர்கள் ஆண்ட கோட்டைகளின் சிதைவாக கருதப்படுற இடங்களையும் பாத்திருக்கேன். சில இடங்கள் யாருமே போக முடியாத அளவுக்குப் பயங்கரக் காடா மாறிப் போச்சு. காடையே வீடாக்கி வாழ்ந்து வந்த விடுதலைப் புலி வீரர்கள் சில இடங்கள் பத்தி சொல்லி இருக்காங்க. இப்போ இதை எழுதும்போது அவ்வளவு பெருமையா இருக்கிறது அப்போ.. அங்க இருந்தப்போ தெரியலை எனக்கு. இனிமே போகும்போது படம் எடுத்துட்டு வரணும்.

சரி.. இப்போ நான் கை கா(மா)ட்டுறவங்க தொடர்ந்து எழுதுங்க.

சாளரம் கார்க்கி – குரு.. நின்று போன மொக்கை வர்மன் தொடர் நினைவிருக்காங்க??

பிரியமுடன் வசந்த் – ஸ்டார்ட் மீஜிக்.. கிளப்புங்கள் பட்டையை..

யாவரும் கேளிர் நர்சிம் – இலக்கியத்துக்கும் மன்னர்களுக்கும் நிறையத் தொடர்பு இருக்கு இல்லையா நர்சிம்.. அதான்..

வீட்டுப் புறா சக்தி – புறா விடு தூது.. தொடருங்க சக்தி.

கூர்வாள் கயல் – ஆவ்வ்வ்.. வாள்.. அதுவும் கூரா.. வீசுங்க பார்ப்போம்.

விஜி – சும்மா இல்லைங்க.. இவங்க இப்போ ’கிரேட்’ விஜியாம். வெல்கம் பேக் விஜி.. அசத்துங்க..

கண்டிப்பா எழுதுங்கப்பா.. ரொம்ப சுவாரசியமா இருக்கும். அனுபவம் சொல்லுது. சரியா..

வர்ட்டா..