Pages

  • RSS

26 August, 2012

பழையன பகிர்தல்..

இப்பொழுதெல்லாம் பதிவு எழுதுவதற்கான பொறுமையும், மனமும் இல்லாமலே போய்விட்டது. எதுவாக இருந்தாலும் கூகிள் ப்ளஸ்ஸில் உடனுக்குடன் பகிர்ந்து கொள்வது மிக இலகுவாக இருக்கிறது. இல்லாத மூளையை உருட்டிப் பிரட்டி அதே விஷயத்தை 140 எழுத்துகளுக்குள் அடக்கி ட்விட்டரில் பகிர்ந்து கொள்வது மிகப் பிடித்திருக்கிறது. அப்படியே அங்கே பகிரப்படுபவற்றை படித்து கருத்துகளைச் சொல்வதில் நேரம் போய்விடுவதால் பதிவுகளை படிப்பதையும் குறைத்துவிட்டேன். முன் போல எப்படியாவது வாரம் இரண்டு இடுகைகளை எழுதி விட வேண்டுமென்று போன வாரம் முடிவு எடுத்தேன். அதை செயலாக்குவது முயற்கொம்பாகவே இருக்கிறது.

விருப்பமானவர்கள் என்னை @susiguna என்ற ஐடியில் ட்விட்டரில் தொடருங்கள். அதிகமாக அவ்வப்போது கேட்கும் பாடல்களின் வரிகளையே பகிர்ந்து கொள்வேன். அதனால் தைரியமாகத் தொடரலாம். நானும் தப்பித்துக்கொள்வேன். ட்விட்டரிலும் கூகிள் ப்ளஸ்ஸிலுமாய் அவ்வப்போது பகிர்ந்து கொள்வதில் பிடித்தவற்றில் சில இங்கேயும்.

--

சொன்ன சொல்லின் விலை.. கொடுக்கக் கொடுக்கத் தீரவில்லை.. தீர்வதாய் இல்லை..

--

பிறந்தநாள் வாழ்த்துகளின் போது சந்தோஷமாய் சிரிப்பவர்களை பார்த்தால் குட்டியாய் ஒரு வலி எட்டிப் பார்க்கிறது..

--

டைப்பும்போது கவனிப்பதில்லை
கவனிக்கும்போது எண்டர் தட்டியிருப்போம்
# எண்டர் தட்டிய சாட்

--

சொன்ன சொல்லையும் எண்டர் தட்டிய சாட்டையும் திருப்ப வாங்க முடியாது.. இரண்டிலும் பழிவாங்கப்படும்போது அழாம இருக்க கத்துக்கணும்..

--

காதலுக்குள் நட்பையும் உறவையும் சேர்த்து நரகமாக்குபவனும் நண்பன் தான்..

--

தானாய் அமைந்தது சொந்தம்.. நானாய் அமைத்தது நட்பு..

--

கையை ஆட்டியபடி பள்ளிக்குள் செல்லும் பிள்ளையின் சிரித்த முகத்தின் முன் ட்ராபிக்கும் பார்க்கிங் அலைச்சலும் ஒன்றுமே இல்லை.. 
--
படுத்தவுடன் தூங்கும் வரத்தை சிலருக்கு மட்டும் கொடுத்தது கடவுளின் மிகப் பெரிய ஓரவஞ்சனை..
--
வெயில், மழை, ஆலங்கட்டி மழை, பனியென மாறி மாறி வரும் காலநிலையும் என்னைப் போல இன்று ஒருநிலையில் இல்லைப் போல..

--

காலையில் நான் தலைவாரும்பொழுது சது ஸ்கூலுக்கு ரெடியாகிட்டு இருந்தார்.. நான் தலைவாரிய சத்தம் அவருக்கு ஆப்பிளை கடிச்சு சாப்டுறது போல இருந்திச்சாம்.. பிள்ளைகளுக்குத் தான் எப்டிலாம் யோசிக்க முடியுது..

22 August, 2012

மழையும் மழை சார்ந்த கவலையும்..

IMG_6967குடும்ப இஸ்திரி ட்ரைவிங் லைசன்ஸ் மட்டும் எடுக்கக்கூடாது என்ற எண்ணத்தோடு விடிந்தது கடந்த ஞாயிறு காலை. சதுவுக்கு ஃபுட்பால் மேச். திருவிழா போல கூட்டம் கூட்டமாய் இல்லாவிட்டாலும் குடும்பம் குடும்பமாய் நடந்து வந்த மக்களைக் கடந்து வந்து காவலுக்கு நின்றவர் கை காட்டிய இடத்தில் பார்க் செய்தேன். நாங்கள் காரிலிருந்து இறங்கி வரவும் கோச் எங்கள் காருக்குப் பக்கத்தில் பார்க் செய்யவும் 'பாத்திங்களா நாங்க முன்னாடி வந்துட்டோம்' என்பதன் மூலம் அவர் ரெடியாக லேட்டானதற்காக நான் கடிந்து கொண்டிருக்க வேண்டியதில்லை என்பது சதுவால் சுட்டிக்காட்டப்பட்டது. 'உங்களுக்கு சுலபமா பார்க்கிங்குக்கு பெரிய இடம் கிடைச்சுதும்மா' என்றவர் தொடர்ந்து இந்தக் குறுக்கு வழி ஏறி இறங்குவது எனக்கு முடியாத காரியமென்றால் சுற்றுப் பாதையில் போகலாம் என்றார். குறுக்கு வழியைப் படம் எடுக்க மறந்துவிட்டேன். ஒரு குட்ட்ட்டி மலையை ஏறி இறங்கினோம்.

IMG_6969காலையிலே போட்டிகள் ஆரம்பித்து விட்டாலும் இவருக்கு முதல் மேச் 2 மணிக்கும் தொடர்ந்து 4:20, 5:10 என மூன்று மேச்கள். அம்மா முழு விருப்போடு வரவில்லை என்பதைப் புரிந்துகொண்டவர் போல வரவேற்பு பேனர், வந்திருந்த கூட்டம், மழை நின்ற வெதர், க்ரவுண்டின் அளவு எனப் பலதும்  பேசிக்கொண்டு வந்தார்.  விடுமுறையின் கடைசி வாரத்தில் ஃபுட்பால் ஸ்கூல் இருந்ததால் பயிற்சிவிட்டுப்போகவில்லை என்றாலும் முதல் மேச்சில் 6:2 இல் தோற்றார்கள். இந்த இரண்டு மாத காலத்துக்குள்ளேயே பிள்ளைகள் வளர்ந்திருந்தார்கள்.

IMG_6971இடைப்பட்ட நேரங்களில் அரட்டையோடு கூடவே தலைக்கு மேலே தாழப் பறந்து கொண்டிருந்த விமானங்களிடம் தவ்விய மனம் கனடாவுக்குப் பறந்து போக அதைத் தரை இறக்குவது பெரும்பாடாகிப் போனது. அன்று இங்கே ரமலான் தினம் ஆகையால் பாகிஸ்தானியர் ஒருவர் கொண்டாட்ட வேலைகள் இருப்பதால் கிளம்புவதாகவும் அவர் மகனை வீட்டில் விட முடியுமாவெனவும் கேட்டார். வாழ்த்தைச் சொல்லி நன்றியை வாங்கிக்கொண்டு பிரியாணி கிடைக்குமாவெனக் கேட்க நினைத்ததை மூட்டை கட்டி வைத்தேன். இரண்டாவது மேச் 7:2 இல் தோற்றார்கள். எதிரணி போங்காட்டம் ஆடியதில் 3 பேருக்கு அடிபட்டுவிட்டது. கூடவே தொடர் தோல்வியில் சோர்ந்துபோய்விட்டதால் கடைசி மேச்சில் எப்படி விளையாடுவார்களோ என்ற கவலைபிடித்துக்கொண்டது. நினைத்ததை விட இடைவேளை வரை நன்றாக விளையாடி 2 கோல் போட்டார்கள். பின்னர் எதிரணி 4 கோல்களைத்தாண்டியதும் தளர்ந்து போய் 7:2 இல் தோற்றார்கள்.

IMG_6981பரிசளிப்பை மிக வித்தியாசமாக ஒழுங்கு செய்திருந்தார்கள். எல்லோரையும் உட்கார வைத்து ஒரே சமயல் 6 அணிகளை அழைத்து அரங்கம் நிறைந்த கரகோஷமும், எழுந்து நின்று வரவேற்புமெனப் பிள்ளைகள் மிக மகிழ்ந்ததில் பெற்றவர் அகம் மகிழ்ந்தது. வழக்கம் போல ஒரு குட்டி ஷீல்டும், டீ ஷர்ட்டும், கிஃப்ட் வவுச்சரும் கிடைத்தது. மேலதிக பரிசாக அன்று மீதி நாள் முழுவதும் டீவி ரிமோட் பிள்ளையின் கையில் இருக்க வேண்டுமென்று அறிவிக்கப்பட்டதும் அத்தனை குஷி பிள்ளைகளுக்கு. அம்மாவை இலவச டாக்ஸியாக்கிய சதுவின் புண்ணியத்தால் கூட வந்தவர்களை வீடுகளில் விட்டுவிட்டு நாங்கள் வீடு வர எட்டு மணி ஆகிவிட்டது. வந்ததுமே அப்பாவிடமிருந்து ரிமோட் பறிமுதல் செய்யப்பட்டது.

--

சம்மர் வெகேஷன் முடிந்ததுமே விண்டரையும் ஸ்னோவையும் மனம் தானாக நினைக்கத் தொடங்கிவிடுகிறது. அதற்குத் தொடர் மழையும், இருட்டும், எப்போதாவது எட்டிப்பார்க்கும் சூர்யாவும் கூட காரணமாக இருக்கலாம். ”கிணறெல்லாம் வத்திப் போகுதம்மாச்சி.. எட்டிப் பாத்தா அடியில எப்பன் தண்ணி தெரியுது.. அனல் வெயில் தாங்கேலாதாம்.. தம்பி (என்னோட அண்ணன்) அண்ணேன்ர (என்னோட அப்பா) காணிக்குள்ள கிணறு வெட்டுறார்.. வெயில்ல பிள்ளை படுற கஸ்ரம் பாக்கக் கவலையாக்கிடக்கம்மா”ன்னு ரெண்டு நாள் முன்னாடி அத்தை சொன்னதிலிருந்து மழையைப் பார்க்க/கேட்க நேரும்போதெல்லாம் பெருமூச்சே மிஞ்சுகிறது. இதில் கொஞ்சமேனும் ஊரில் போய்ப் பொழியக்கூடாதா என ஏக்கம் எட்டிப் பார்க்கிறது.

--

பள்ளிகள்  மீண்டும் தொடங்கிவிட்டன. புதிய வகுப்பு, புதுப் புத்தகங்கள், புதிய ஆசிரியர்கள் என்று பிள்ளைகளின் பரபரப்பு எங்களையும் தொற்றிக்கொண்டது. புதுப்புத்தக வாசனையை மோந்து பார்த்த நாட்களும், போரினால் பழைய புத்தகங்களை ஏக்கத்தோடு பெற்றுக்கொண்ட நாட்களும், கொப்பி, பென்சில், பேனை வாங்கக் கூட முடியாமல் தவித்த நாட்களும் என மனம் அதன் போக்கில் கொசுவத்தி சுற்றிக்கொண்டிருக்கிறது. எனக்கு எப்போதும் அம்மாவே அட்டை போட்டு பெயர் எழுதித் தர வேண்டும். அம்மாவின் அழகான கையெழுத்து ஒரு காரணமென்றாலும் அது ஏனோ நான் அந்த வழக்கத்தைக் கடைசி வரை மாற்றவில்லை. இன்று அம்முவின் புத்தகப்பையைத் தூக்கிவிட்டுப் பயந்துவிட்டேன். எவளவு பெரிய்ய்ய்ய புத்தகங்கள். நல்லவேளை வீட்டுவேலை இல்லாத நாட்களில் பள்ளியிலேயே புத்தகங்களை வைக்க வேண்டும் என்ற நடைமுறை இங்கே இருக்கிறது.

அப்படியே தமிழ்ப்பள்ளியும் ஆரம்பித்துவிட்டது. நாங்கள் இதுவரை பாவித்து வந்த நோர்வேஜியப் பள்ளியில் திருத்த வேலைகள் தொடங்குவதால் புதிதாக வேறொரு பள்ளியில் இடம் தரப்பட்டது. அங்கே ஏகப்பட்ட கெடுபிடிகள். எங்கள் வீட்டைத் திடீரென ஒரு நாளைக்கு யாராவது பாவிக்கத் தொடங்கினால் எப்படி இருக்குமோ அப்படி ஒரு நிலையில் புதிய பள்ளியின் ஆசிரியர்கள் இருக்கிறார்கள். என்னதான் அவர்களின் நிலையை நாம் புரிந்துகொண்டாலும் ஏகப்பட்ட நிபந்தனைகளோடு அங்கே போய் வருவது எங்களுக்கும் சிரமமானதே. என் பிள்ளைகளின் ஆசிரியர்களைப் பார்த்ததுமே இந்த வருடம் வீட்டில் அதிக கவனம் எடுத்தே ஆகவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். என் வகுப்பில் பதினாறு பிள்ளைகள். முதல்நாளே இலகுவாகப் பேச ஆரம்பித்துவிட்டார்கள். என் முகராசி அப்படியென்றாலும் கூடவே நான் நினைத்தது போல இந்தப் பதினாறையும் பெற்றதில் எத்தனை பேர் நான் தான் ஆசிரியை என்றதும் கவனம் எடுக்க வேண்டுமென நினைத்தார்களோ என்றும் எண்ணத் தோன்றியது.