Pages

  • RSS

30 December, 2011

முயற்சிக்கு நன்றி – நேசம்!

நல்லதொரு முயற்சியை முன்னெடுத்த எல்லோருக்கும் முதலில் பாராட்டுகள். மிகத் தேவையான ஒரு விழிப்புணர்வு வர இயன்றதை எல்லோரும் செய்வோம். இதனால் பயன் பெறும் ஒருவருக்கேனும் நாம் வழிவகை செய்து கொடுத்தவர்கள் ஆவோம்.

ஊரில் தெரிந்தவர்கள் ஒருவருக்கு 2000த்தில் என்று நினைக்கிறேன். புற்றுநோய் என்று தெரிந்ததில் இருந்து அவர் அருகில் கூடக் குழந்தைகளைப் போக அனுமதிக்காமல், தனியே பாத்திரம் எல்லாம் கொடுத்து, தனி அறையில் வைத்திருந்தார்கள். இத்தனைக்கும் அந்த வீட்டில் கல்லூரிப் படிப்பு முடித்த பெண், ஆசிரியத் தொழில் செய்த ஒரு பெண், அரசாங்க உத்தியோகத்தில் இருந்த மருமகன் என ’அறிவாளிகள்’ இருந்தனர்.

சின்ன வயதில் இருந்து நாங்கள் 88 கலவரத்துக்கு இடம் பெயர்ந்தது வரை ஒரு பாட்டி பிச்சை கேட்டு வருவார். தடையைச் சுற்றித் தலையில் ஒரு வெள்ளைத் துணியால் கட்டி இருப்பார். அவருக்கு புற்றுநோய் வந்ததில் அப்படி ஆனதாக அம்மா சொன்னார். வீட்டில் கடைக்குட்டியானதால் அவருக்கான காசும் கொடுக்கும் பொறுப்பு என்னிடம் வந்தது. முதலில் முகத்தைப் பார்க்காமல் குடுத்துவிட்டு ஓடி வந்த நான் வளர வளர அந்த முகத்தில் இருந்த புன்னகையைப் பரிசாக வாங்கி வரத் தொடங்கினேன். பின்னர் என்ன ஆனார் என்று தெரியவைல்லை.

இதைப் போல உறவினர், நண்பர், அறிந்தவர், தெரிந்தவர் என்று எத்தனை பேருக்கு புற்று நோய் வந்துவிட்டது. காய்ச்சலாம் என்பது போல சாதாரணமாகச் சொல்கிறார்கள் சிலர். மனம் வெந்து மாய்ந்து நோய் வந்தவரையும் வருத்திக் கொல்கிறார்கள் சிலர். இங்கேயே எத்தனையோ பேர் ஆரம்பக் கட்டத்திலே கண்டுபிடிக்கப்பட்டு, சிகிச்சை முடித்து, நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த நாட்டவரையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்.

கடந்த வாரம் இரத்தப் புற்று நோயால் தெரிந்தவர் ஒருவர் இங்கே இறந்துவிட்டார். முதற் கட்ட ஆபரேஷன் 2005 இல் முடிந்து நன்றாக வாழ்ந்தவரால் போன மாதம் நடந்த இரண்டாவது ஆபரேஷனின் பின் உயிரைத் தக்க வைத்துக் கொள்ள முடியவைல்லை. இருந்தாலும் 2005 க்கும் 2011க்கும் இடைப்பட்ட காலத்தில் அவர் வாழ்ந்ததே அவர் குடும்பத்துக்குப் பெரிய விஷயம் இல்லையா. அவர் ஆத்ம சாந்திக்குப் பிரார்த்தித்தபடியே இந்த நேசக்காரர்களோடு கரம் கோர்த்துக் கொள்ள எல்லோரையும் கேட்டுக் கொள்கிறேன். கீழே உள்ள இணையத்தளத்திற்கு சென்று பாருங்கள். அப்படியே உங்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள் அன்பர்களே.

நேசம்.

nesam small

27 December, 2011

பாசக் கண்ணீர்!!

tenn lys ஊரில் சுனாமி நினைவு அஞ்சலி நிகழ்வுகளில் ரஜி(சின்னண்ணா), ஜெயாண்ணா(இளைய மச்சினர்) கலந்து கொண்டார்களாம். நினைவுகள் அலையடித்து மீண்டன. எல்லா மக்களதும் ஆத்ம சாந்திக்கு மனதார வேண்டிக்கொண்டேன். அடிக்கடி சுனாமி எச்சரிக்கை விடுகிறார்களாம். கடலின் ஆக்ரோஷம் பயங்கரமாக இருக்கிறதாம். மழையும் சூறைக்காற்றும் வேறு. அண்ணா முதல் முதலாக வயல் விதைத்திருந்தார். அவளவும் நீரில்.

dagmar இங்கேயும் நாட்டின் பல இடங்களில் 30 வருடங்களின் பின் அதிக அளவிலான புயல் தாக்கம். நேற்றைய கிறிஸ்துமஸ் நாளில் இருந்து ஒரு லட்சம் பேர் மின்சாரம் இல்லாமல் இருக்கிறார்கள். Dagmar என பெயரிடப்பட்ட புயலின் சீற்றம் இப்போது குறைந்துவிட்டாலும் சேதங்கள் அதிகம். எங்கள் ஊருக்கும் தாக்கம் வருமென அறிவிக்கப்பட்டு காற்றோடு கடந்துவிட்டது. ஆனாலும் காற்றின் வேகம் இன்னமும் அதிகமாகவே இருக்கிறது.

இந்த வருடம் கிறிஸ்துமஸ் வார இறுதியில் வந்தது போதாதென்று White Christmas இல்லையென்பது நோர்வேஜியருக்கு மிகவும் வருத்தமான ஒன்று. மழை. ஒரு துளி பனி இல்லை. நேற்று நண்பர் வீட்டில் விருந்தில் இருக்கும்பொழுது மின்சாரம் விட்டுவிட்டு வந்தது. வழக்கமாக அவர்கள் வீட்டில் இருந்து வரும்பொழுது திட்டிக்கொண்டே வண்டி ஓட்டுவேன். தண்ணியிலும் தள்ளாடாமல் இருக்கும் மாம்ஸுக்கும் சேர்த்து வண்டி தள்ளாடும். இம்முறை ஜாக்கெட் மறந்துவிட்ட சது ஷர்ட்டையும் கழட்டி விட்டு இருந்தார். அவளவுக்கு இருந்தது காற்றில் வெப்பம்.

001 நான் இங்கு வந்ததில் இருந்து மூன்று இந்துக் குடும்பங்கள் வருடம் ஒருத்தர் வீட்டில் கிறிஸ்துமசை கொண்டாடுவோம். 24ஆம் திகதி ஒன்றுகூடி அங்கேயே தங்கி 25ஆம் திகதி வீடு திரும்புவோம். இந்த வருடம் எங்கள் முறை. கூடவே இன்னொரு இந்துக் குடும்பமும் சேர்ந்து கொண்டார்கள். ஒரு பாட்டில் வைனும் ஒரு சில பியருமே செலவானதில் எல்லோரும் ஒன்றாக மிகவும் சந்தோஷமாகக் கழிந்தது நாள். உடனேயே குடிக்கு நான் எதிரி என்று நினைத்துவிட வேண்டாம். சந்தோஷத்துக்கு குடிக்கிறோம் சாமி என்று தீர்த்தமாடுவதில் ஆண்கள் சீக்கிரமே மட்டை. அடுத்த நாள் எழுந்து ப்ரேக்ஃபாஸ்ட்டுடன் பாஸ்ட்டையும் கேட்டு அறிந்து கொள்வார்கள். இம்முறை 2 மணி வரையும் ஒரே பேச்சும் சிரிப்பும் தான். எல்லோரும் வண்டி ஓட்டும் நிலமையில் இருந்ததால் அவர்கள் போய்விட அக்காச்சியோடு 5 மணி வரை பேசிவிட்டுத் தூங்கினோம். வருங்காலத்தில் இதையே கடைப்பிடிக்கலாம் என்று ஏகமனதாக முடிவாகி உள்ளது. அவர்களுக்கான யாகத்தை புது வருடத்துக்கு இடையில் வைத்துக்கொள்ளவும் முடிவாகி உள்ளது.

030 032 1

எங்களுக்கு ஒன்றிலும், அவர்களுக்கு ஒன்றிலும் என பிள்ளைகளே சாப்பாட்டு மேஜையை ஒழுங்கு செய்தார்கள். ட்ரடிஷனல் நோர்வேஜியன் உணவுடன் டின்னர் முடிய பிள்ளைகள் ஆவலோடு காத்திருக்கும் பரிசு வழங்கல் ஆரம்பம் ஆகும். அதுவரையும் பரிசை தூக்கிப் பார்ப்பதும், பெயரை வாசிப்பதுமாக ஆர்வத்தோடு இருப்பவர்கள் கையில் கிடைத்ததும் குதிக்கும் குதிப்புக்கு ஈடு இல்லை.

008 விஷ் லிஸ்ட் முன்னாடியே தந்துவிடுவார்கள் என்றாலும் பரிசு என்னவென்று தெரிந்து கொள்ள முடியாதபடி உருமறைப்புச் செய்துவிடுவேன். பிள்ளைகளோடு சேர்ந்து பெரியவர்களும் ஏமாந்து விடுவார்கள். நண்பி ஒருவருக்கு மேக் அப் பாக்ஸ் கொடுத்திருந்தேன். அவர் அதை வெகுசிரமப்பட்டு திறக்க முயன்று கொண்டிருந்தார். ‘அக்கா.. பிடிக்கலையா.. இவ்ளோ கஷ்டப்பட்டு எதுக்கு திறக்கறிங்க’ என்றபோது விழுந்து விழுந்து சிரித்தார். வழக்கம் போல் நான் அதற்குள் வேறு எதையோ வைத்து பாக் செய்திருக்கிறேன் என்று நினைத்தாராம். நண்பியின் மகள் காசாக வேண்டுமென்று சொல்லி இருந்தார். இரண்டு எம்ப்டி பாக்ஸில் ஒன்றுக்குள் காசை வைத்து பேக் செய்து கொடுத்தபோது கரெக்ட்டாக அதை திறந்து என்னை ஏமாற்றினார்.

007 சது ஏற்கனவே xbox இருந்தாலும் play staion வேண்டுமென்று கேட்டிருந்தார். ஒரு ஷூ பாக்ஸில் சிப்ஸ் பாக்கெட், பேரீச்சை பாக்ஸ் வைத்து கூடவே கட்டில் கீழே பரிசு இருக்கிறது என்று குட்டிக் குறிப்பு எழுதி வைத்தேன். கவரை பிரித்ததும் ’ஷூவா’ என்றார். அவர் விஷ் லிஸ்ட்டில் அது இல்லை. உள்ளே பார்த்துவிட்டு ’சிப்ஸ் எனக்கு பிடிச்சது. ஆனா பேரீச்சை எனக்கு வேணாம்’ என்று என்னிடம் தர எடுத்தவர் குறிப்பை பார்த்து ஓடிப்போய் பரிசோடு வந்து கழுத்து வலிக்கும் அளவுக்கு இறுக்கி நன்ன்ன்றி சொன்னார். அம்முவின் கட்டில் கிஃப்ட்டை மாம்ஸ் முன்னாடியே சொல்லி சொதப்பியதால் சுவாரசியம் இல்லாது போய்விட்டது. சதுவுக்கு மாம்ஸ் வாங்கிய xbox கேமை கவரில் போட மறந்து நான் சொதப்பிவிட்டேன்.

பரிசு வாங்குவதென்பதும் அவளவு சாதாரண விஷயம் அல்ல. எங்களுக்கு கிடைக்கும் பரிசில் 90% தேவையில்லாததே வந்துவிடும். அதை தவிர்க்கவே நான் கொடுக்கும்போது ஒன்று அவர்களிடம் என்ன விருப்பம் என்று கேட்டுவிடுவேன். அல்லது எக்ஸ்சேஞ்ச் கார்ட் வைத்துக் கொடுத்துவிடுவேன். பிடிக்காத ஒரு பரிசை பிரித்துப் பார்க்கும் பிள்ளை மட்டுமல்ல பெரியவர் மனமும் கஷ்டப்படுவதைப் பார்த்திருக்கிறேன். பரிசென்பது ஒரு சாக்லெட்டாக இருந்தாலும் பிடித்த சுவையில் இருக்க வேண்டுமென்பது என் பாலிஸி. ஆர்வமும் ஆசையுமாகப் பரபரவெனப் பிரித்துப் பார்த்த பின் மலர்ந்த சிரிப்போடு சொல்லப்படும் நன்றிக்கு முன்னே நான் அலையும் அலைச்சல் காணாது போய்விடும்.

முதல் முறையாக மாம்ஸ் எனக்கு கிறிஸ்மஸ் கிஃப்ட் தந்து அசத்தி இருக்கிறார். மாமியார் ஆர்டர் போட்டு விட்டார்களாம். ‘இனிமேல நீ அவளுக்கு ஒழுங்கா கிஃப்ட் வாங்கி குடுத்திடணும். என்னதான் அவள்ட்ட எல்லாம் இருக்குன்னாலும் நீ குடுக்கிறதுதான் சந்தோஷம். எல்லாரும் உங்க அவர் என்ன கிஃப்ட் குடுத்தார்னு அவள்ட்ட கேக்கிறப்ப எனக்கு கஷ்டமா இருக்குது பெடியா’ என்று என் பர்த்டே முடிய நானறியாது சொல்லி இருக்கிறார்கள். ஃபோனில் நன்றி சொன்ன பொழுது சிரித்தார்கள். அக்காச்சி ‘அடியேய்.. மாமியார் மெச்சிய மருமகள் கேள்விப்பட்டிருக்கிறனடி.. மருமகள் மெச்சிய மாமியாரை இப்பதானடி பார்க்கிறன்’ என்றாள்.

அக்காச்சி மாம்சுக்கு எங்கள் இருவரின் படங்களை யாத்தே யாத்தே பாடலுக்கும், அம்மு சதுவுக்கு அவர்களின் படங்களை Justin Bieber பாடலுக்கும் animoto.comஇல் வீடியோவாக்கி பரிசாக அனுப்பி இருந்தாள். எனக்கு ரத்தத்தின் ரத்தமே பாடலுக்கு என் படங்களோடு அவள் அன்பையும், பாசத்தையும் வார்த்தைகளாகச் சேர்த்து அனுப்பி அழ வைத்துவிட்டாள். ‘அதுக்கு எதுக்குடி அழுதனி.. இஞ்சையும் எல்லாரும் சொன்னவை நீ அழப்போறாய் பாத்தெண்டு’ என்றவளிடம் ‘சும்மாவே நான் அழு அழுன்னு அழுவன்.. இதில நீ அழூ அழூன்னு வேற அனுப்பி இருக்கிறாய்.. அது பாசக் கண்ணீர் அக்காச்சி’ என்று சொன்னேன்.

18 December, 2011

உ பி.. மன்னிச்சூ..

முதல்ல வாழ்த்து சொல்றதா மன்னிப்பு கேக்கிறதான்னு தெரியவில்லை. இரண்டையும் சேர்த்தே சொல்லிடறேன்.

பிந்திய பிறந்த நாள் வாழ்த்துகளுக்கு மன்னிச்சிடுங்க உ பி.

உ பினா என்னவென்று தெரியாதவர்களுக்கு முதலில் சொல்லிவிடுகிறேன். உ பி என்றால் உடன் பிறப்பு. என் உடன் பிறக்காத என் உடன் பிறப்பு.

நான் இலங்கையைச் சேர்ந்தவள்ன்றது இன்னமும் பலருக்குத் தெரியாது. நேரில் பார்ப்பவர்களே ’நீங்க இந்தியாவா’ன்னு கேக்கும்போது பாராதவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. ஒரு நாள் சாட்டில் பேசிக் கொண்டிருக்கும்போது ’நான் இலங்கை.. அதிலவும் வன்னி’என்றேன். அடுத்த பதில் ‘உடன் பிறப்பே’ என்று வந்தது. அன்றிலிருந்து அவரை நான் வசந்த் என்றது குறைந்து போக அவரும் சுசிக்கா, அக்கா என்பதை குறைத்து உ பி என்பதே அழைப்பாய் போயிற்று.

ஒற்றைப் பிள்ளையாய் அம்மா, அப்பாவைப் பிரிந்து ஊர் நினைவுகளோடும் ஏக்கத்தோடும் இருக்கும் (இங்கே இருந்த என்று சொல்லலாமா உ பி?? ‘ஜோ’ரா சொல்லலாம்ன்னு நினைக்கறேன்) வசந்த் போலவே என் கஸின் ஒருவனும் கத்தாரில் வேலையில் இருந்தான். நாங்கள் பேசுவதுதான் அவனுக்கான பூஸ்ட். அதுவே வசந்திடம் ஒரு தனிப் பாசத்தை எனக்குள் உருவாக்கியது எனலாம். யாரிடமும் அதிகம் மெயில்/சாட்டில் பேசாத நான் வசந்திடம் அவ்வப்போது அம்மா, அப்பா பற்றி விசாரிப்பேன். ‘இப்பதான் உ பி பேசினேன்’ என்றோ ‘இனிமேலதான் பேசப் போறேன்’ என்றோ சொல்லும்போது அந்த சந்தோஷம் என்னையும் தொற்றிக் கொள்ளும்.

பிரியமுடன் வசந்த் என்பது பேச்சளவில் மட்டுமில்லை. உடன் வேலை செய்யும் இலங்கைப் பையன்கள் மேல் அவருக்கு இருக்கும் பாசமும் அன்பும் உங்களுக்குத் தெரியாது இருக்கலாம். ஒவொருவரின் மீதும் போர் ஏற்படுத்திய காயங்களை அறிந்து அவர்களுக்குத் தன்னாலான உதவியை, அன்பை வழங்குகிறார்.

எங்காவது நான் எழுதியதில் கருத்து முரண் இருப்பின் உடனேயே ஓலை வந்துவிடும். அதே போல அவர் எழுதுவதில் ஏதாவது யாராவது சொல்வதனால் நெருடல் இருந்தால் கேட்பார். புரிந்துகொண்டு கருத்துக்கு மதிப்பளிக்கும் பக்குவம் இருப்பதால் எதுவாக இருந்தாலும் என்னாலும் உடனேயே கேட்டுவிட முடிகிறது.

வசந்தின் அப்பா, அம்மா சிரிப்பைப் பார்த்தவர்களுக்குத் தெரியும் இவரின் சிரிப்பு எங்கிருந்து வந்ததென்று. இதே சிரித்த முகத்தோடு, உங்கள் மனம்போல எல்லாமும் ‘ஜோ’ராக அமைந்து, ‘ஜோதி`மயமாக உங்கள் எதிர்காலம் விளங்க எங்கள் அனைவரதும் மனமார்ந்த வாழ்த்துகள் உ பி. என்றும் என்னப்பனிடம் உங்களுக்காகவும் வேண்டிக்கொள்கிறேன்.

முதல் முதலில் இந்தப் பாடலைக் கேட்டபோது உ பி பர்த்டேக்கு பரிசாகப் போடலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் என் பர்த்டே முதலில் வந்ததால் அவர் முந்திக்கொண்டார். என் ஞாபகசக்தியின் லட்சணத்தில் சரியான நேரத்துக்கு இல்லாவிட்டாலும் இப்போது இந்தப் பாடலை பரிசாக்கிக் கொள்கிறேன். மனதார மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறேன். மன்னிச்சூஊஊஊ உ பி :)