Pages

  • RSS

29 September, 2010

நான் வளர்கிறேனே அம்மா!!

இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஒரு மழை நாள் காலையில் விழிப்பதற்கு மனமில்லாமல் தாமதமாக எழுந்ததால் வேகமாக வேலைக்கு கிளம்பிக் கொண்டிருந்தேன். ஸ்டோர் ரூமுக்குள் சென்று கார் கீயில் கை வைக்கும் போது படாரென்று பக்கத்து அறைக் கதவு திறந்து கூடவே “அம்மா” என்றொரு குரல். “என்ன கண்ணா” என்றேன். “ஆஃபீஸுக்கு கிளம்பிட்டிங்களா?? நீங்க ரொம்ப அழகா இருக்கிங்கம்மா. உங்களுக்கு இந்த ட்ரஸ் ரொம்ப அழகா இருக்கு. ரொம்ப சூடா இருக்கிங்கம்மா. எனக்கு குளிருது. ஏன் இன்னைக்கு லேட்டா போறிங்க??” இடுப்பை கட்டி, வயிற்றோடு முகம் சேர்த்து காலைக் குளிருக்கு இதமாய் என் கதகதப்பை அனுபவித்த படி தொடரும் கேள்விகளுக்கு, இரு கைகளால் நானும் இறுக்கி அணைத்தபடி பதில் சொன்னேன். இடையிடையே தலை கோதலும், உச்சி முகர்தலும் என் செல்லக் குட்டிக் கண்ணனுக்கு மிகவும் பிடித்தமானது.

நான் வேலைக்குப் போகத் தொடங்கிய வருடத்தில் ஒரு நாள் மாலை மடி மீது இருந்த படி சொன்னார். ”நீங்க முன்ன மாதிரி இல்லம்மா” என்ன இது என்று கண நேரத் திகைப்போடு கேட்டேன் “ஏண்டா கண்ணா இப்டி சொல்றிங்க. அம்மா எப்போதும் போல தானே இருக்கேன்” சிணுங்கியது பிஞ்சு  முகம். “இல்லை.. இப்பல்லாம் நான் ஸ்கூல் முடிஞ்சு வந்தா நீங்க வீட்ல இருக்கிறதில்லை.. காலேலவும் எந்திரிச்சா உங்கள காணோம்” “என்ன கண்ணா செய்யட்டும். அம்மாவும் வேலைக்கு போனா தானே..” காரணங்கள் சொல்லியும் சமாதானம் ஆகவில்லை. ”இப்டி செய்லாமா? நீங்க எங்ங்ங்கேயும் போகாம வீட்ல இருக்கும் போது உங்களுக்கு சம்பளம் கிடைக்கிறா மாதிரி ஒரு வேலை தேடிக்கோங்களேன்” அப்படி ஒரு வேலை கிடைக்காதென்று சொன்ன பின் புரிந்து கொண்டு வெக்கத்தோடு சிரித்தார். என்னைப் போலவே அவருக்கும் பகல் நேரப் பிரிவு இயல்பாய் இருக்கவில்லை.

கொசுவத்திகள் எப்போதும் இனிமை தான் இல்லையா. இப்பொழுது முதல் பத்தியை தொடரலாம். அன்று காலை எதேச்சையாக ஆரம்பித்தது இப்போதும் தொடர்கின்றது. என்ன தான் என் மனதுக்கு மகிழ்வாய் இருந்தாலும் சமயத்தில் என்னை வழி அனுப்பவென்றே சீக்கிரம் எழுந்து வருவது ஏற்பாய் இல்லை. வழக்கத்தை விடவும் சீக்கிரமாக கிளம்பி போனால் கதவை திறந்தோ, ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தோ குளிருக்கு உடலை குறுக்கியபடி கை ஆட்டி டாடா சொல்லும்போது.. முடியவில்லை. போகட்டும் சில நாட்கள் இப்படியே. கட்டி முத்தத்தோடு வேலைக்கு போவதும் புது உற்சாகம்தான்.

அம்மாவின் அணைப்பும், முத்தமும், மடி இருத்தலும் இன்னமும் வேண்டுமென்பதைத் தவிர இப்போதெல்லாம் ஏதோ ஒரு வகையில் தான் வளர்ந்து விட்டதை காட்டிக் கொண்டே இருக்கிறார். சென்ற வியாழன் வேலையால் வரும்போது இருவரையும் கடைக்குக் கூட்டிப் போவதாக சொல்லி இருந்தேன். இவர் ஃபோன் பேசினார்

“அம்மா.. நான் யூனாஸ் கூட வீட்டுக்கு போறேம்மா. ஓக்கே”

“அப்போ நீங்க கடைக்கு வர்லையா? அக்காச்சி எங்க?”

“அவங்க உங்களுக்கு வெயிட் பண்ணிட்டு இருக்காங்க. நான் போறேன்”

“சரிப்பா.. ஆனா அப்பா வர லேட்டாகும். நீங்க நாங்க வர வரைக்கும் தனியா இருப்பிங்களா? அஞ்சு மணி கூட ஆகலாம்” 

“அம்ம்ம்மா.. நான் ஒண்ணும் சின்ன பையன் இல்லம்மா.. நான் இருப்பேன். பை”

“இருங்க.. கீ இருக்கா?”

“இருக்கு.. பை”

அவர்கள் ஆடிப் பாடி வீடு போய்ச் சேரும் நேரம் கணக்கு வைத்து அழைத்தேன்.

“என்னாம்மா”

“என்ன செய்றிங்க? யூனாஸ் என்ன செய்றார்?”

“யூனாஸ் இங்க வரல”

“அப்போ?”

“அவர் அவங்க வீடு வரைதான் வந்தார்”

“ஓ.. அம்மா அவரும் எங்க வீட்டுக்கு வரதா நினைச்சிட்டேன். அடுத்த தடவை சரியா சொல்லணும் ஓக்கேவா.. நீங்க என்ன செய்றிங்க இப்போ? என்ன வண்டி சத்தம் கேக்குது?”

” நான் இன்னும் வீட்டுக்குள்ள போலம்மா. வாசல்ல வரும் போது கால் பண்ணிங்க. அதான் வெளிய நின்னே பேசிட்டு இருக்கேன்”

“முதல்ல வீட்டுக்குள்ள போங்க. உள்ள போய்ட்டு கதவை சரியா லாக் பண்ணிட்டு மறுபடி கால் பண்ணி சொல்லுங்க”

“அம்மா.. நீங்க நினைக்கிரிங்க இல்லை நான் குட்டிப் பையன் மாதிரி பயப்படுவேன்னு. உங்களுக்காக வேணும்னா கால் பண்றேன். எனக்கு பயம் கிடையாது”

இதற்கு மேலும் அவர் தைரியத்தை குறைக்க முயலாமல் சரி என்று வைத்தேன். நாங்கள் வீட்டுக்கு வரும்போது டிவி முன் இருந்தார். கூடவே பெருமிதமாய் ஒரு பார்வை.

”அம்மா.. செப்பானியா வீட்டுக்கு போய்ட்டு வரேன். எத்தனை மணிக்கு வரணும்?” மொபைலில் அலாரம் செட் செய்து கொள்வார். ஸ்கேட் போர்ட், மைக்ரோ ஸ்கூட்டர் இல்லையென்றால் சைக்கிள் சகிதம் பாடல் ஒன்றை முணுமுணுத்தபடி போகும் அவரை மறையும் வரை பார்த்துக் கொண்டிருப்பேன். இதை எழுதும் இந்த நேரத்துக்கு இடையில் முத்தங்களும் அணைப்புமாக அடிக்கடி கொடுத்துப் பெற்றுக் கொண்டிருக்கிறேன். இன்று விடிந்ததில் இருந்து கேட்டுக் கொண்டே இருக்கிறார். “நான் குழந்தையா இருந்தது நினைவிருக்காம்மா உங்களுக்கு?” நானும் அதே நினைவுகளுடனேயே சுற்றிக் கொண்டிருக்கிறேன். வயிற்றுக்குள் இன்னமும் அவர் உதைப்பது போல சில்லென்ற ஒரு உணர்வு வந்து போக, தானாகவே ஒரு இனம் புரியாத பெருமூச்சும் வருகிறது.

நேற்றுத் தான் கவனித்தேன். தூங்குவதற்கு முன் இரண்டு கிளாஸ் பால் எடுத்துக் குடிக்கின்றார். “ஏன் கண்ணா ரெண்டு கிளாஸ் பால்? சாப்பாடு பத்தலையா?” “அம்மா.. தெரியாதா உங்களுக்கு? ரெண்டு கிளாஸ் பால் குடிச்சிட்டு தூங்கலைன்னா எனக்கு தூக்கமே வராது. அப்புறம் நைட்டு பூரா முழிச்சிட்டே இருப்பேன்” அவ்வளவு சீரியசாக சொல்லி விட்டுப் போனவர் இன்று பாலே குடிக்காமல் பன்னிரண்டு மணிக்கு எழுவதற்கு தயாராய் தூங்கப் போயிருக்கிறார்.

சும்மாவே அதிகம் எழுதுவேன். இதில் அம்மாவாய் எழுத ஆரம்பித்தால்? இப்போதைக்கு முடித்துக் கொள்ளலாம்.

என் செல்லக் கண்ணனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

sathu அவருக்கு அழகான ஒரு வாழ்த்தை நினைவாக அனுப்பி வைத்த கோப்ஸ்.. உங்களுக்கு ரொம்ப நன்றிப்பா. இன்றுதான் காட்ட வேண்டும் என்பதையும் மீறி நேற்று இரவே காட்டி விட்டேன். அவ்வளவு சந்தோஷப்பட்டார். பிரிண்ட் எடுத்து கொடுக்கும்படியும் கேட்டிருக்கின்றார். அவர் அறைக்குள் வைக்க வேண்டுமாம். மீண்டும் நன்றி.

அப்படியே அவர் கேட்ட பாடலையும் கொடுத்து விடுகிறேன்.

27 September, 2010

இரண்டில் ஒன்று!!

100. சொல்லிப் பார்க்கவே சந்தோஷத்தில் மனம் நிறைகிறது. இது என்னோட நூறாவது இடுகை. என்னை இது வரை எழுத வைத்த உங்களுக்கும் எழுதிய எனக்கும் எவ் வகையில் நன்றி சொல்வதென்று தெரியவில்லை. உங்கள் அன்புக்கும், ஆதரவுக்கும், நட்புக்கும் என்றும் என் வணக்கங்கள். நன்றி சொல்லி தள்ளி வைக்க விருப்பம் இல்லை. இருந்தாலும் சொல்லிக் கொள்கிறேன்..

நன்றி மக்கள்ஸ்..

இன்னைக்கு ஸ்பெஷலா, வித்தியாசமா எதாவது எழுதணும்னு ரொம்ம்ம்ம்ப யோசிச்சு ஒரு முடிவுக்கு வந்திருக்கேன். எப்போதும் என் இஷ்டத்துக்கே எழுதிட்டு இருக்கேனேன்னு ரொம்ப நாளா ஒரு உறுத்தல். இன்னைக்கு ஒரு நாள் (கேட்டுக்குங்க மக்கள்ஸ்.. இன்னைக்கு ஒரு நாள் தானாம்) ஒரு சின்ன மாற்றம். உங்களுக்கு ரெண்டு ஆப்ஷன் குடுத்திருக்கேன். உங்களுக்கு இருக்கிற நேர அளவுகளுக்கேற்ப ரெண்டில ஒண்ண படிச்சிட்டு போங்க. கண்டிப்பா படிச்சிடணும் சொல்ட்டேன். நூறாவது இடுகைன்னு நெகிழ்ந்து போய் இருக்கிற சந்தர்ப்பத்தில ரெம்ப கஷ்டப்பட்டு உங்கள டவல் எடுக்க வைக்காத மாதிரி எழுதிட்டு இருக்கேன்.

எல்லாரும் நலமா இருக்க என் பிள்ளையார வேண்டிக்கிறேன்.

 \ \ \ \ \ \ \ \ \ \

நான் உன்னிடம்

’லவ் யூ’ சொன்னதை விடவும்

’சாரி’ சொன்னது அதிகம்

’உம்மா’ கேட்டதை விடவும்

’திட்டாதே’ கேட்டது அதிகம்

’கிட்ட வா’ என்றதை விடவும்

’கோச்சுக்காதே’ என்றது அதிகம்

’கொஞ்சிய’ கணங்களை விடவும்

’கெஞ்சிய’ கணங்கள் மிக மிக அதிகம்!!

 \ \ \ \ \ \ \ \ \ \

லவ் யூ

சாரி

உம்மா

திட்டாதே

கிட்ட வா

கெஞ்சி கேட்டுக்கறேன்

கோச்சுக்காதே!!

\ \ \ \ \ \ \ \ \ \

22 September, 2010

தோழி(கள்) அப்டேட்ஸ்!!

nathiya

shalini

malavika 1

bavana 2

kajal-agarwal 1

sunaina 1

nayantara

எல்லாம் ஒரு கடிதம் செஞ்ச வேலை. நடிச்சா இணைய தளபதி கூடத்தான் நடிப்போம்னு ஆளாளுக்கு கால்ஷீட்டும் பொக்கேயுமா சாளரம் வாசல்லவே நிக்கறாங்க. மத்தவங்கள ஏதோ சமாளிச்சிட்டேன். இந்த மாளவிகாவதான் ஒழுங்கா ஒரு போட்டா பிடிக்கிறத்துக்குள்ள.. உஸ்ஸ்ஸ்ஸ்.. ஹீரோ ஃபோட்டோவ வேற பாத்திடுச்சா.. தானும் செக்ஸியாதான் வருவேன்னு ஒரே அட்ட்ட்டம்.

பரிசுகள், பண முடிப்புகள் என்னைச் சேரும். வாழ்த்துக்கள், பாமாலைகள் ’இன்ன பிற’.. ஹிஹிஹி.. அடுத்த லைன் படிக்காமலே உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும் யாரைச் சேரும்னு. மனதார வாழ்த்தி பரிசு/பண முடிப்புகள அள்ளி வழங்கிட்டு போங்க மக்கள்ஸ்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கார்க்கி!!

குறிப்ஸ் :- படங்கள் தந்துதவிய ஃபேஸ்புக்காண்டவருக்கும், கூகிளாண்டவருக்கும் நன்றிகள்.

20 September, 2010

நிலா(வீட்டு)க்கு போய்ட்டேன் - 5

ஊர் சுத்தல் ஒண்ணு.     ரெண்டு.     மூணு.     நாலு.

IMG_0189 IMG_0193 திடீர்னு சைட்ல பாக்ஸ் மேல கால்கள் இளைப்பாறும். என்ன இப்டி திடீர்னு ஆரம்பிச்சேன் இந்த வாரம்னு பாக்கறிங்களா?? இதே மாதிரித்தான் திடீர்னு எங்க கைய தள்ளி விட்டுட்டு காலை வச்சுக்குவாங்க. அதிலயும் சண்டை வந்திட்டதால மணிக்கு ஒருத்தர் என்று முடிவாகி டைம் அவுட் சொல்ல வேண்டிய பொறுப்பு என் கிட்ட கொடுக்கப்பட்டது.

IMG_0201 இப்போ ஒரு வழியா சுவீடன் நாட்டுக்குள்ள வலது டயர் உருண்டு போயாச்சு. முன்னல்லாம் பார்டர்ல செக் பாயிண்ட் மாதிரி வச்சிருந்தாங்க. இப்போ எதையும் காணோம். அந்த இடம் வெறிச்னு இருந்திச்சு. இனிமே இப்படியே நேராஆஆஆ போயிட்டே இருக்கும் பாதை. ஸ்கண்டினேவியன் நாடுகளான நோர்வே, சுவீடன், டென்மார்க்கில பெரும்பாலும் ஹை வேல ரெண்டு லேன் இருக்கும். சில இடங்கள்ல மூணாவும், ஒண்ணாவும் மாறி மாறி வரும்.

 

IMG_0205 கண்ணாளன் முகத்தில இப்போ அவ்ளோ மலர்ச்சி. ஸ்பீட் குறைஞ்சது 110km என்ற சைன் பாத்துட்டார்ல. அதான் குஷி. இனி ரெக்கை கட்டிக்கும் டயர்களுக்கு. அவர் பாட்டுக்கு ஓவர் டேக் பண்ணிட்டு போயிட்டே இருப்பார். சில கார்கள் அடிக்கடி எங்களை ஓவர் டெக் செய்யும். அப்புறம் நாங்க அவங்களை. அப்படி அடிக்கடி சந்திக்கும்போது குட்டியா ஒரு சிரிப்பு பரிமாறிக்குவோம். சிலர் கடுப்ஸ். இந்த கருப்புங்க எங்கள முந்தவான்னு. அதிலயும் பசங்க இருந்தாங்கன்னா கை ஆட்டி சிரிச்சுட்டு போவாங்க.

IMG_0199 IMG_0204 பச்சையும் மஞ்சளுமாய் கம்பளம் விரித்து வைத்த வயல் வெளிகள். இந்த வருஷ காலநிலை சரியா இல்லாததால நிறைய இடங்கள் வரட்சியா இருந்துது.

IMG_0200 நோர்வே மண் கன்னங்கரேர்னு இருக்கும். சுவீடன்ல பழுப்பு நிறமா மண் மட்டுமில்லாம மலைகளும் பழுப்பாவே இருந்திச்சு. குட்டியா இருந்தா குன்றுன்னு சொல்லணுமோ??

IMG_0211 இது என்ன செடினு தெரியலை. ஆனா எங்க பாத்தாலும் சோளப் பொரி தூவி வச்ச மாதிரி இருந்துது.

IMG_0197 இது சுவீடன்ல தரை இறங்குற  ஏரோப்ளேன். நல்லா பாத்துக்கோங்க. பாத்திட்டு கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க. அடுத்த ஸ்டாப்பிங்ல மதிய சாப்பாடு.

வர்ட்டா..

15 September, 2010

குழந்தைக் கதைகள்..

பூச்சி காட்டினான் என் குழந்தை

ஒன்றல்ல இரண்டு முறை

பாம்போ பல்லியோ இருக்குமென்று பார்த்தவளுக்கு

பூச்சி சிரிப்பைத் தான் தந்தது

காரணம் அறியாக் குழந்தை முழித்தது

சொல்லக் கேட்ட பின் செல்லமாய் முறைத்தது

பறந்து போய் விட்ட பூச்சியை

இப்போதும் தேடிக் கொண்டிருக்கிறான்

சிரிப்புக்கான கோவத்தை என் மேல் காட்ட முடியாத

என் போக்கிரிக் குழந்தை

7 7 7 7 7

woman looking

7 7 7 7 7

என் குழந்தை மெச்சிய

கதைகாரி நான்

அவ்வளவு அழகாய் கதை சொல்வேனாம்

அவன் தான் சொன்னான்

கதைக்கான கருவை கொடுத்துவிடுவான்

சொல்லும்போது விட்டுப் போகும் அத்தனையும்

கேள்விகளாய் குறிப்புக்களாய்

அவனால் எடுத்துக் கொடுக்கப்படும்

கதை நாயகனும் அவனே ஆகும்போது

நிஜத்தில் நடந்தது

என் நினைவில் உணரப்படும்

அழகாய் கதை சொல்வேனாம்

அவன் தான் சொல்கிறான்

நடந்ததையெல்லாம் கதையென்னும்

என் தங்கக் குழந்தையை

என்னவென்று நான் சொல்வேன்..

12 September, 2010

நிலா(வீட்டு)க்கு போய்ட்டேன் – 4

ஊர் சுத்தல் ஒண்ணு.

ஊர் சுத்தல் ரெண்டு.

ஊர் சுத்தல் மூணு.

பயணங்கள் போகும்போது பொதுவாகவே வெயில் குறைவாக இருந்தா நல்லதுன்னு உங்க எல்லாருக்குமே தெரியும். அதுவும் வண்டியில போகும்போது ஏசி போட்டோம்னா குளிரும், தூக்கம் சொக்கும். வெயிலுக்கும் வயித்துக்கும் இதமா பழங்கள் கொண்டு போறது என் வழக்கம். அதிலேயும் என் சித்தப்பா ஒரு தடவை அவங்க வீட்ல இருந்து கிளம்பும்போது அன்னாசி பழத்த குட்டி குட்டியா கட் பண்ணி, சர்க்கரை, உப்பு, கொஞ்சூண்டு தூள் (அதாவது உங்க ஊர்ல காஞ்ச மிளகாய், தனியா, சோம்பு, மற்றும் இதர பொடி எல்லாம் தனி தனியா சேர்த்துப்பிங்க இல்லையா.. அதையே நாங்க மொத்தமா உரல்ல இடிச்சோ, மில்லுல குடுத்து அரைச்சோ வச்சுக்குவோம். அது தான் எங்க ஊர்ல மிளகாய்த் தூள் என்கிற தூள். யாருக்காச்சும் ரெசிபி வேணும்னா கேளுங்க) சேர்த்து ஒரு பாக்ஸ்ல போட்டு முதல் நாள் இரவு ஃப்ரிஜ்ல வச்சிட்டார். அடுத்த நாள் நாங்க ஒரு பத்து மணி வாக்குல சூரியன் சுட ஆரம்பிச்சதும் எடுத்து சாப்டோம்னா.. அமிர்தம். அப்டி ஒரு ஜூஸியா காரம், இனிப்பு, உப்பு சுவைக் கலவையோட தாகத்துக்கும் பசிக்கும் சேர்த்து சாப்பிடலாம். பசங்களுக்கும் ரொம்ப பிடிக்கும்.

 IMG_0181 இப்போ வெயில பாருங்க. நேரம் காலை 8:48. பாக்க இப்டி இருந்தாலும் கண்ணாடி வழியா ரொம்ப சுடும். அது என்னமோ என் சைடுலவே எப்போதும் சூரியனோட கொடும், கனல் பார்வை இருக்கும். பெயர் சரியில்லை. சூரியனோட பெயர மாத்தணும்.

தலை நகர் ஆஸ்லோ போய் சேரும் வரைக்கும் இடப்புறமும் வலப்புறமுமா கூடவே வரும் ஆறு. அமைதியா, ஆரவாரமா, பொங்கும் நுரையோட குதிச்சோடி கும்மளமா அதுவும் எங்க மனம் போல. இந்த வருஷம் மழை குறைவா இருந்ததால நிறைய இடங்களில வற்றிப் போய் இருந்தது கவலை. கண்ணாளன் கூட பகிர்ந்து கிட்டு ஒரு படமும் எடுத்து வச்சேன். 1280080481535

 

 

 

 

 

அடுத்து வந்த சுப யோக சுப நேரத்தில முதலாவது சண்டைய ஆரம்பிச்சு வச்சாங்க பசங்க. அம்மு தூங்கிட்டு இருக்கும்போது சது அவங்க சோடாவ குடிச்சிட்டாராம். அவங்கள சமாதானம் பண்ணுறத்துக்குள்ள சத்தத்தில கண்ணாளன் எந்திரிச்சாச்சு. அடுத்து நம்மதுக்கு பிள்ளையார் சுழி. எப்டின்னு எழுதறேன் படிங்க.

’அந்த சன்கிளாஸ் கொஞ்சம் எடுத்து குடுங்கப்பா..’   இந்தா..   ’இது இல்லை.. மத்தது..’   இந்தா..

’டீ கொஞ்சம் குடுங்களேம்பா..’    இந்தா..

’அதோ.. அந்த பூவை ஒரு ஃபோட்டோ எடுங்கப்பா..’

(எடுத்ததும்) ’நல்ல அழகா இருக்கில்லை.. சரியா எடுத்திங்களா??’

(நோ பதில்)

’என்னோட ஐபாட் கொஞ்சம் எடுங்களேன்..’

எதுக்கு இப்போ அது உனக்கு?? அதான் சிடி பாடுதுல்ல..

’இல்லைப்பா.. இதில இருக்கிற 6 சிடியும் கேட்டாச்சு.. இனிமே அதில கேக்கலாம்..’

அதெல்லாம் ஒண்ணும் வேணாம்.. அதையே கேளு.. எவ்ளோ வேலைதான் நான் உனக்கு செய்றது.. எனக்கு தூக்கம் வருது நான் தூங்கறேன்..

பாத்திங்களா.. என்ன அடாவடித்தனம்னு. விடுவேனா நான். அவர் ட்ரைவ் பண்ணும்போது பழி வாங்கிட்டேன்ல.  இப்போ அவர் ஓட்டுநர். நான் எதுவும் பேசல. அடிக்கடி என் பக்கம் பார்வைய வீசிட்டே ஒரு கள்ளச் சிரிப்போட இருந்தார். இப்டியே ஒரு ஒரு மணி நேரம் போச்சுது. அப்புறமா கேட்டார்.

“என்ன கம்னு இருக்கே”

“அது இப்போதான் தெரிஞ்சுதா உங்களுக்கு..”

“இல்லைடி. அது எனக்கு எப்பவோ புரிஞ்சுது. கேட்டா உனக்கு பிடிக்காது. இருந்தாலும் என் வாய் சும்மா இருக்காதே”

“அப்போ புரிஞ்சுதுன்னா வளைவில எதுக்கு இவ்ளோ ஸ்பீடா திருப்பறிங்க”

“ஆமாப்பா.. ஸ்லோவா போங்க. எனக்கும் ஒரு மாதிரியா இருக்கு” இத சொன்னது அம்மு.

எனக்கும் அம்முவுக்கும் ட்ராவல் சிக். அவ குழந்தையா இருந்தப்போ தூங்காம இருந்தான்னா உடனவே உவ்வே தான். எனக்கு எதுனா சாப்டுட்டே இருக்கணும், இல்லை புக் படிக்கணும், இல்லை ட்ரைவ் பண்ணணும். இல்லேன்னா உவ்வே. டாப்ளெட் போட்டா தூங்கிட்டே இருப்போம். இதில அம்மு அம்மா வாந்தி வருதுன்னு சொன்னதும் சதுர் படற பாடு பாக்கணுமே. எங்க அவர் மேல பட்டுடுமோன்னு பயம். கதவோட ஒண்டிக்குவார். போன வருஷம் அதுக்கும் ஒரு முடிவு வந்திச்சு. அதாவது டாப்ளட்டுக்கு. ஒரு பாண்ட். ஃபார்மசில கேட்டு கண்ணாளன் வாங்கிட்டு வந்தார். அதுல ஒரு குட்டி கோலி. அதை கைல நரம்பு மேல படும்படியா வச்சுக்கணும். அவரு நம்ம பாடியோட பாலன்ஸ பாத்துக்குவாராம். என்ன அதிக நேரம் போட்டிருந்தா அழுத்தும். வலிக்கும். அப்பப்போ அட்ஜஸ்ட் பண்ணிக்கணும். காரோ, கப்பலோ, ஃப்ளைட்டோ.. இப்போ கவலை இல்லை.  இது தெரியாம என்ன அம்மாவும் பொண்ணும் ஸ்டைலா ரெண்டு கைலேம் பாண்ட் போட்டிருக்கிங்கன்னு கேக்குறவங்களும் உண்டு. கொஞ்ச நேரம் தூங்கேன்.. நான் ஸ்பீடா ட்ரைவ் பண்ணனும்னு கண்ணாளன் கேக்குற ரேஞ்சுக்கு என் தூக்கம் குறைஞ்சு போச்சு. அம்முவும் விழிச்சிருந்து எல்லாருமா ஜாலியா பேசிட்டு போறது.. என்ன சுகம்.

IMG_0215 IMG_0543

முன்னல்லாம் பெருசா ஒரு மேப் கைல வச்சுட்டு வாயில நுழையாத ஊர் பேரெல்லாம் படிச்சு கண்டுபிடிச்சு போறதும் ஒரு கிக் தான். அப்புறம் navigator வாங்கினோம். அது சமயத்தில பொத்துன்னு கீழ விழுந்துடும். இப்போ GPS வண்டிலவே இருக்கு. தொழில்நுட்ப முன்னேற்றத்துக்கேற்ப நாங்களும் மாறிக்கிட்டோம். அடுத்த வருஷம் GPS க்கு புது சிடி வாங்கி போடணும்னு முடிவு எடுத்துக்கிட்டோம். ஏன்னா பாதையில புதுசா செய்த மாற்றங்கள் பிடிபடாம சில பல கீலோ மீட்டர்கள் சுத்த வேண்டியதாச்சு.

“அம்மா.. நான் மூணு பிஸ்கட் தான் சாப்டேன்”

“ஓ.. அப்டியா.. சமத்து.. அவ்வ்வ்ளோ பிஸ்கட் சாப்டிங்களா”

“அம்ம்ம்மா.. மூணு தானே சாப்டேன். அதுக்கு எதுக்கு இப்டி சொல்றிங்க”

“டனல் எப்டி கட்டினாங்க தெரியுமா?? கேளுங்க அப்பா சொல்றேன்”

“மலை இருக்குதில்லை மலை.. அதை குடைஞ்சு குடைஞ்சு குடைஞ்சு குடைஞ்சு.. ”

“அப்பா.. அது எங்களுக்கு தெரியும்பா”

இப்டியா நாங்க பசங்க கூட போட்ட மொக்கைகளோட..

“அம்மா.. நான் உங்க ஜூஸ்ல கொஞ்சம் குடிக்கலாமா.. ஏன்னா நான் எனக்கு ஐஸ் கிறீம் தான் வாங்கினேன்.. ஜூஸ் வாங்கலை”

இப்டியா அவங்க எங்களுக்கு செய்யிற அரசியல்களோட பயணம் தொடருது..

வரட்டா..

 

05 September, 2010

இறைவா கொடுக்காதே..

2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 

மனதை வதம் செய்வதில்

அவன் போல் தான் நீயும்

சில முறையேனும்

காயங்களுக்கு இதமாய்

ஆ(ற்)றுதல் செய்வதால்

நீ மட்டும்

சற்று வேறுபட்டுப் போகிறாய்.

Sleeping_Beauty_by_MarcinT 

2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 

ஒற்றை வார்த்தையால்

உயிர் வரை நனைக்கவும்

உயிர் வதை செய்யவும்

உன்னால் மட்டுமே முடிகிறது

உதாரணத்திற்கு ஒன்று

“செல்லம்”

2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 

gråt

என்னது போல் ஒரு வாழ்வு

யாருக்கும் கொடுக்காதே இறைவா

இருக்கென்று சிரிக்க விடு

இல்லையென்று அழவிடு

இருந்தும் இல்லாமல்

என்ன வலி இது??

2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 

உன்

காலடியில் பரிதவிக்கும்

என் இதயம்

கடந்து வேண்டுமானால் போய்விடு

மிதித்து மட்டும் போகாதே.

2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 

01 September, 2010

வனவாசம்.

 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5

எப்போதாவது உன்னோடு வாழ்வேன்
இல்லை வாழ்ந்து விட்டுப் போகிறேன்
எப்போதும் போல் நினைவுகளில்..

 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5

par r உன் மூச்சு சத்தம்

கேட்காத எந்த இடமும்

ஏற்பாய் இல்லை

வைத்துக் கொள் என்னை

உன் கைகளின் வட்டத்துக்குள்

 

  5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5

நெகிழச் செய்யாதே..

நீ சொல்வதெல்லாம் சரியாகவும்

கூடவே கேட்பதெல்லாம் செய்யவும்

எனை மீறித் தோன்றுகிறது.

  5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5

sjø 1 என்னோடு நீயும்

உன்னோடு நானும்

நம்மோடு யாரோவுமாய்

வாழ்க்கை..

விதி..

படைப்பு..

 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5

இந்த உன் சிரிப்பு

இப்போதும் நினைவில்..

எப்போதும் இல்லை

எப்போதாவது சிரிக்கிறாய்

என்னை சிலிர்க்க வைத்த

அந்த முதல் சிரிப்பை..

 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5

உன் ஒற்றை நொடி உதட்டு முத்தம்
மனதோடு தலை வலிக்கும் மருந்தாக
நிம்மதியாய் ஒரு தூக்கம்
நன்றிக்கடன் தீர்க்க வேண்டும்
கிட்ட வா கண்ணா..

 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5