Pages

  • RSS

30 October, 2011

மாயம் செய்தவன்!!

தலைப்பை படித்ததும் தெரிந்திருக்குமே?? தெரிந்தவர்களுக்கும், தெரியாதவர்களுக்கும், தெரிந்தும் தெரியாது என்பவர்களுக்கும் சேர்த்தே சொல்கிறேன். வேலாயுதம் செம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம. ஒரு பரம விஜய் ரசிகையான என்னை ஏமாற்றாத விஜய்க்கு முதலில் நன்றிகளும் வெற்றிக்கு வாழ்த்துகளும். அதே விஜய். அதே செண்டிமெண்ட். அதே சண்டை. அதே காமெடி. அதே அசத்தும் நடனம். ஆனால் புதிய ரசனையைக் கொடுத்து மாயம்தான் செய்திருக்கிறார் விஜய்.

Velayutham-Movie-Poster ஆறு மணி ஷோவுக்கு நாலு மணிக்கு நானும், நாலரைக்கு அம்முவும், ஐந்து மணிக்கு சதுவும் ரெடி ஆகிவிட்டோம். மாம்ஸ் வந்து ‘என்னம்மா இன்னும் ரெடி ஆலையா நீங்க’ன்னு விரட்டி ஒரு வழியாக அவர்கள் ரெடியாகி தியேட்டர் போக ஐந்தே முக்கால். டிக்கட் காசை கையுக்கும், தான் வரவில்லை என்ற தகவலை காதுக்கும் கொடுத்தார். நின்றிருந்த மழைக்கொரு நன்றியை சொல்லிவிட்டு உள்ளே ஓடினால் ’என்னக்கா இவ்ளோ லேட்டா வரிங்க.. முன்னாடி தான் சீட் கிடைக்கப்போது’ என்ற படக்காரத் தம்பியிடம் டிக்கட்டை பிடுங்காத குறையாக வாங்கிக் கொண்டு அம்மு, சதுவை பாப்கார்ன், கேண்டிக்கு அனுப்பிவிட்டு, மாமியாரோடு உள்ளே போனால் முன்னிருந்து மூன்றாவது ரோவில் கரையோர சீட்தான் கிடைத்தது. துண்டை போட்டுவிட்டு மீண்டும் வந்து கடிக்கஸ், நொறுக்ஸ், குடிக்ஸ் எல்லாம் வாங்கியபடி டிக்கட் தம்பியை கடந்தபோது அவர் அருகில் நின்றிருந்த நோர்வேஜியன் சொன்னார் ‘பரவால்லையே உனக்கு நல்ல லாபம்தான் போல.. கடைசி நேரத்தில நிறையப்பேர் வராங்க’ பயபுள்ளை என்னத்தான் வாரிச்சோ என்ற டவுட்டை போக்கியது வெற்றிடமாக இருந்த முன் வரிசை. ‘என்னம்மா இது கரைல உக்காந்து தலை திருப்பி பாக்க கஷ்டமா இருக்குமே’ என்ற அம்முவை சமாதானம் செய்து எல்லோரும் உட்கார்ந்தோம். எங்கள் வரிசையில் நடுவில் இருந்த நால்வர் முன் வரிசைக்கு ஷிஃப்ட்டாக நடு சீட்டுகளுக்கு நாங்கள் ஷிஃப்ட்டினோம்.

’ண்ணா.. நான் சும்மாவே காட்டு காட்டுன்னு காட்டுவேன்.. நீ காட்ட்டு காட்ட்டுன்னு வேற சொல்றே’ என்று இமையை படபடவென்று வெட்டிவிட்டு அப்பாவியாய் சொன்னபோது சிரிப்புச் சத்தம் தியேட்டர் நிறைந்தது. அதையே விறைப்பா/முறைப்பா சொல்லி இருந்தால் இந்த அளவு ரசனை வந்திருக்காது. எப்படியும் செம சாத்து சாத்தப் போகிறார் என்பது  தெரிந்த ஒன்றே என்றாலும் இந்த அப்பாவித்தனம் ரசித்துச் சிரிக்க வைத்த இடம் அது.

velayudhamவிஜயின் காஸ்ட்யூம் கலக்கல். இங்கே வேட்டைக்காரனுக்கு அப்புறம் தியேட்டரில் விசில் கூடாதென்று கட்டுப்பாடு. அப்படியும் கைதட்டலும், விசிலும் கேட்டபடியே இருந்தது. சது அவ்வப்போது ’syk kul film அம்மா’ என்று சொல்லிக் கொண்டிருந்தார். எல்லோரையும் ஊருக்கு அனுப்பிய பின்னர் ‘இப்ப பாருங்க தங்கச்சிய கிட்நாப் பண்ணப் போறாங்க’ என்றார் அம்மு. ட்ரெயின் புழுதி கிளப்பியபடி நின்றபோது யாரோ ஒருவர் ஒன்ன்றிப் போய்ப் பார்த்திருப்பார் போல தூசி தாங்காமல் இருமுவது போலவே இருமினார்.

அம்முவுக்கு ஹன்ஸிகாவை விட ஜெனிலியாவைத்தான் பிடித்ததாம். ஜெனிலியா விஜய் முடிவு கேட்டு அழுதபோது எனக்கும் அழுகாச்சியா இருந்துது. பாடல்கள் கேட்டபோது மாயம் செய்தாயோ எனக்கு ரொம்ம்ம்ம்பவும் பிடித்திருந்தது. பார்த்தபோது விஜய் ஸ்டைலாக இருக்காரேன்னு நான் நினைக்க சது சொன்னார். சில்லாக்சில் விஜய் அவளவு அழகு. முளைச்சு மூணு படமாக்கிய விதம் அழகா இருந்துது. ரத்தத்தின் ரத்தமே ஒரு வகையான அமர்த்தலான இசையமைப்போடு அட்டகாசம். சொன்னாப் புரியாதுவுக்கு எழுந்து ஆட முடியாத வருத்தம் எனக்கு. என்னா டான்சுப்பா. ஆனால் பாடல்களை முழுதாகப் போடவில்லை. ’கேட்டிங்களாம்மா.. மீசைன்னு இந்தப் பாட்லவும் வருது. நான் நினைக்கறேன் எல்லாப் பாட்லவும் வருதுன்னு’ என்று தனது கண்டுபிடிப்பை அம்மு சொன்னார்.

velayudham_UHQ விஜய் கழுத்தில தாயத்து மாதிரி ஒண்ணு போட்டிருக்கார். மாம்ஸுக்கும் அதே போல் ஒன்று வாங்க வேண்டும். கியூட்டா இருந்தது.  சந்தானம் செம. சிரித்து முடியவில்லை. சரண்யா மோகன் தங்கச்சி காரக்டரோட அவ்ளோ பொருந்தி இருக்காங்க. சரியா 8:36 க்கு யாரோ என்னய திட்டி இருக்காங்க. அம்புட்டு புரையேறியது எனக்கு. மாம்ஸிடம் கேட்டு கன்ஃபார்ம் பண்ணிவிட்டேன். அவர் நினைக்கவே இல்லாதபோது திட்ட சான்ஸ் இல்லை. என்னைத் திட்டியது யார்?? நான் மேலே சொன்ன அந்த நோர்வேக்காரன் எங்களுக்கு பக்கத்தில் கேட்டுவிட்டு இருந்தார். கொஞ்சநேரம்தான் அப்புறம் போய்டுவேன் என்றவர் எழுந்து முன் வரிசையில் அமர்ந்து முழுப்படமும் பார்த்தார்.

என்னதான் சொல்லுங்க. விஜய் படத்த தியேட்டர்ல போய் பார்க்கிற அந்த சந்தோஷமே தனிதான். எப்படி நேரம் போனதென்றே தெரியாமல் அத்தனை நேரமும் எல்லோரையும் கட்டிப்போட்டிருந்தது படம் என்பதை விட விஜய் என்று சொல்வதே பொருத்தம். படம் முடிந்து வந்து வண்டியில் ஏறும்போதே ‘விஜய்க்கு வெற்றிப்படம்’ என்றார் மாமி. 

’அது நீங்க சொல்ணுமா உங்க முகம் சந்தோஷமா இருக்கிறது பார்க்கும்போதே தெரியுதே நல்லா என்ஜாய் பண்ணி இருக்கிங்கன்னு’ என்றார் மாம்ஸ்.

சது ‘அப்பா நான் பாத்ததிலயே பெஸ்ட் விஜய் படம் இதுதான்’ என்றதோடு டிவிடிக்கும் ஆர்டரை கொடுத்தார். கூடவே ’எப்போம்மா விஜயோட அடுத்த படம் வரும்’னு டிக்கட்டும் புக் செய்தார்.

மாம்ஸ் ஏழாம் அறிவு இந்தவாரம் பார்க்கப்போகிறாராம். பசங்களுக்கு விருப்பமில்லை. சூர்யாவின் நடிப்புக்காகப் போகலாம் என்றிருக்கிறேன். இல்லையென்றால் அடுத்து நான் தியேட்டரில் பார்க்கப்போகும் தமிழ்ப்படம்?? நண்பேண்டா!!

வர்ட்டா..

velayutjam movie new stills 2

28 October, 2011

என் சிங்கம்!

எல்லாரும் கண் வைக்கிறார்கள் என் கண்ணாளன் மீது. காதில் புகையோடு பெருமையாகவும் உணர முடிகிறது. அக்காச்சியுடன் ஃபேஸ்புக் வழி இணைந்த பழைய நட்புகள் சில ’என்ன உங்க அத்தான் அப்ப பாத்தது போலவே இருக்கார். அவருக்கு வயசே ஆகிறதில்லையா’ என்றார்களாம். அரைக்கிலோ எடை கூடினாலே அரை மணி நேரம் ஜாக்கிங்கை கூட்டிவிடுவார். எப்படித்தான் முடிகிறதோ. ஒரு நாள் மழை காற்றென்று கூட ஜாக்கிங் போவதை நிறுத்தமாட்டார். இவரைப் பார்த்து இப்போது ஒரு கூட்டமே ஜாக்கிங் கிளம்பியுள்ளது.

என் தொப்பை பற்றி சிறிதளவு வருத்தம் அவருக்கு. ’என் கூட ஜாக்கிங் வேண்டாம் அட்லீஸ்ட் வாக்கிங் வாயேன்’ என்பார். ’எதுக்குப்பா.. அதான் எனக்கும் சேர்த்து நீங்க அழகாவும், ஸ்லிம்மாவும் இருக்கிங்களே அது போதும் எனக்கு’ என்பேன். முறைத்தால் ‘என் ஸ்பீடுக்கு உங்களால நடக்க முடியும்னா சொல்லுங்க.. தினமும் வரேன்’ என்பேன். ’ராசாத்தி.. நீ இப்டியே சோஃபால இரு.. நான் போறேன்’னுட்டு போய்விடுவார்.

இப்போதெல்லாம் அவர் மேல் அடிக்கடி எரிஞ்சு விழறேனாம். அவர் சொல்லும் வரை எனக்கே தெரியவில்லை. என் இயல்பான பொறுமை ஓடிப் போய் அவரிடம் சேர்ந்து அவரை பொறுமைசாலி ஆக்கிவிடுகிறது.  நேற்றும் எதுவோ சொன்னபோது சுள்ளென்ற என் கோபம் பார்த்து சிரித்தார். ‘எதுக்கு சிரிக்கறிங்க இப்போ’ என்றேன். இன்னமும் சிரித்து ‘உன் கோவத்தை பாத்தா சிரிப்பா வருது’ என்றதோடு விடாமல் அக்காச்சிக்கு கால் பண்ணி ‘உங்க தங்கச்சிக்கு சொல்லி வைங்க.. என் மேல ரொம்ப கோச்சுக்கறா இப்பலாம்’னு சொல்லி என்னை இருவருமாக வாரிக் கொண்டிருந்தார்கள்.

மாமியார் மேல அவருக்கு இருக்கும் பாசம். எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து இன்றுவரை கூடிக் கொண்டே போகிறது. இப்படி ஒரு பிள்ளை கிடைக்க கண்டிப்பாக மாமி புண்ணியம் செய்துதான் இருக்கிறார்கள்.

‘அம்மா.. நோர்பேர்ட் அண்ணா கண் முழிச்சிட்டார்’

‘ஓ.. கடவுளே காப்பாத்திட்டே.. சிரிச்சாரா??’

‘ஏம்மா.. நான் என்ன ஃபோட்டோவா எடுக்கப் போனேன்.. சிரிச்சாரான்றிங்க??’

இடையில் புகுந்த நான் ‘இல்லைப்பா மாமி அவர் உங்களை அடையாளம் தெரிஞ்சு சிரிச்சாரானு கேக்கறாங்கப்பா’

‘ஆமா.. நீதானே அவங்க பக்கப்பாட்டு.. எங்கடா இன்னமும் ஒண்ணும் சொல்லையேனு பார்த்தேன்’

என்பதாய் அவர்கள் இருவர் மொக்கையில் நானும் பல்ப் வாங்கி வீடு எப்போதும் பிரகாசமாய் இருக்கிறது. இருவரும் பேசுவதை கேட்டுச் சிரிப்பதிலேயே என் பொழுது போய்விடும். நண்பர்களுக்கும் இவர்களின் இந்த வாரல் பேச்சு மிகவும் பிடிக்கும்.

இவருடைய பழைய பாஸ் ஒரு தமிழர். தினமும் அவரைப் பார்த்து மொக்கை போடுவது இவரது மிகப்பெரிய பொழுதுபோக்கு. இவர் முன்னே யாரோ ஒரு நோர்வேஜியனுக்கு ஊரில் அவர் ஆடாத வேட்டை பற்றி வெடித்துக்கொண்டு இருந்தாராம். எல்லாம் கேட்டுவிட்டு கடைசியில் இவர் சொன்னாராம். ‘நான் இவர் சொல்றது போல வேட்டைக்கு போறதில்லை.. ஏன் தெரியுமா? சிங்கம் புலில்லாம் கைல துப்பாக்கியோடையா வருது? அதேபோல வெறுங்கையோட போய் என் வீரத்தால வேட்டையாடுறதுதான் என் வழக்கம்’ என்றதை அந்த அப்பாவி நம்பிக்கொண்டு போயிருக்கிறார்.

ஒரு பார்ட்டிக்கு போய்விட்டு இன்னொன்றுக்கு போய்க்கொண்டிருந்தோம். ஒரு நாளும் அந்த ஹால் இருந்த் இடத்துக்குப் போனதில்லை என்பதால் நண்பர் ஒருவரின் பின்னே போய்க்கொண்டிருந்தோம். அவர்களும் எங்களைப்போல் இரண்டு வண்டி வாங்கி இருக்கிறார்கள்.

‘புவனா பெரிய வண்டி ஓட்டி நான் பாத்ததில்லை’

‘ஆமா.. அவங்க வேலைக்கு கூட சின்னதிலதான் போவாங்களாம்னு ரமணன் சொன்னான்’

‘ஏன்பா.. அவங்க தான் ரொம்ப தைரியமானவங்களாச்சே.. நானே பெரிய வண்டி ஓட்டறேன்.. அவங்களுக்கு என்ன?’

‘அடியேய்.. நீ பூனையா இருந்தாலும் சிங்கத்துக்கு வாழ்க்கைப்பட்டு பெண்சிங்கம் ஆயிட்ட.. அங்க அப்டி இல்லையே’

நான் சிரித்ததில் தூங்கிக் கொண்டிருந்த அம்மு எழுந்து சிணுங்கத் தொடங்கிவிட்டார்.

என்ன உங்க புருஷனுக்கு ரெண்டாவது பொண்டாட்டி வந்துட்டாங்களாமே என்று நண்பர்கள் கேலி செய்யும் அளவுக்கு அவரின் புது மொபைலோடு பொழுதைப் போக்குகிறார். ’இது வரை உனக்கு இத மாதிரி செமயா ஒரு காலர் ஐடி கிடைச்சதில்ல. கால் பண்ணி கேட்டுப்பாரு’ன்னார். அது warning it’s ur wife என்று அடித் தொண்டையில் அலறுது.

அப்பா மேல் அம்முவுக்கும் சதுவுக்கும் பயமும் இருக்கிறது. நான் என்னதான் கத்தினாலும்.. ம்ஹூம்.. ஆனால் அவர் கூப்பிடும் தொனி வைத்தே கோவத்தைப் புரிந்து கொள்வார்கள். அப்பாவிடம் பாசத்தோடு பயமும் இருப்பது நல்லதே. ஆனால் அதை பயம் என்று வரையறுக்க முடியாது. முடிவு அப்பாவுடையதென்பது போல, அப்பாவே எல்லாம் என்பது போல ஒரு வகையான.. எப்படிச் சொல்வதென்று தெரியவில்லை. உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள். அப்பாவை எப்படி உருக வைத்து காரியம் சாதிக்கலாம் என்று அவர்களுக்குத் தெரியும். சுருக்கமாகச் சொன்னால் அப்பா அவர்களுக்கு ஒரு தோழன்.

415 சம்மருக்கு சுவிஸ் போயிருந்த போது ’என்ன மச்சாள் அண்ணா கைல நீங்க வெள்ளில தாலி கட்டி விட்டிருக்கிங்களா’ன்னு நிலா கேட்டாள். இது அவர் கையில் எப்போதும் இருக்கும் செயின். இங்கே வந்த புதிதில் வாங்கினாராம். எப்போதும் கழுத்தில் ஒரு தங்கச் சங்கிலி போட்டிருப்பார்.

இன்னும் சரியாக ஒரு மணி நேரத்தின் பின் தூங்கிக் கொண்டிருப்பவரை எழுப்பி முதன்முதலாய் என் முகத்தில் முழிக்க வைத்து வாழ்த்துச் சொல்லி மிரட்டி அவருக்கான புது நாளைத் தொடங்க வைக்கப் போகிறேன். இம்முறை அவருக்கு அம்மாவின் ஆசீர்வாதமும் ஸ்பெஷலாக கிடைப்பது மனநிறைவாக இருக்கிறது.

லவ்யூப்பா.. பிள்ளையார் எனக்கு எல்லாமும் ஆன உங்கள் வழி எங்களைக் காத்துக்கொள்ளட்டும். என்றும் நீங்கள் இனிதே வாழ எல்லா வளமும் நலனும் துணை வரட்டும்.

26 October, 2011

காஃபி வித் அம்மு.

முன்னை விட ரொம்பவே மாறிவிட்டார் அம்மு. முதல் மாற்றம் ஷாப்பிங். முன்பென்றால் என் கையைப் பிடித்து இழுத்து, காலைக் கட்டி கடைக்கு உள்ளே போக விடமாட்டார். ஆனால் ஒரு போதும் அழுது அளிச்சாட்டியம் பண்ணியதில்லை. முடிந்த வரை தடுக்க முயற்சி செய்வார். அதனாலேயே நான் ஷாப்பிங் தனியாகப் போவதுண்டு. இப்போது எப்போது கடைக்குப் போவதென்றாலும் உடனேயே வருகிறார். உடையைப் பொறுத்தவரை முன்பு அவருக்கு வேண்டியதை நானே வாங்கி வரவேண்டும். ’எப்டிம்மா எனக்குப் பிடிச்சதை வாங்கினிங்க’ என்பதோடு சரி. இப்போது நான் ட்ரையல் ரூம் ஸ்டூலில் உக்கார்ந்திருக்க வேண்டியதுதான். அலுக்காமல் இதை போடவா, அது பொருந்துமா, எது நல்லாருக்கும் என்று தனக்கு வேண்டியதைத் தானே போட்டுப் பார்த்துத் தேர்வு செய்கிறார். என் கை கோர்த்து, தனக்குத் தெரிந்த ஃபாஷன் டிப்ஸை அள்ளி வீசியபடி அல்லது எதுவோ பேசியபடி கூட வரும் குட்டிப் பெண்ணோடு ஷாப்பிங் போவதென்பது எனக்கும் பிடித்த மிகவும் புதிய அனுபவமே.

104 ஐஸ்க்ரீம், hot dog, burger, hot chocolate இப்படி எதுவோ ஒன்றால் ஷாப்பிங்குக்கு சுபம் போடப்படும். நான் இருக்கும் மூடைப் பொறுத்து எனக்கு காஃபி ஆர்டர் செய்வேன். ’இன்னைக்கு நானும் காஃபி குடிக்கட்டுமா’ என்று கேட்டவர் தனியாக வேண்டாம் உங்களதில் டேஸ்ட் பார்த்துவிட்டு ஆர்டர் செய்கிறேன் என்றார். கூடவே ஒரு கேக்கும் வாங்கிக்கொண்டு உட்கார்ந்தோம். டேஸ்ட் பிடித்திருந்தாலும் அவ்ளோ பெரிய கிளாஸ் தனியாக குடிக்க முடியாதென்று சொன்னதால் இருவரும் ஷேர் செய்து கொண்டோம். இங்கு வந்ததுக்கு என் குட்டித்தோழியோடு தான் முதல் முதல் காஃபி குடித்திருக்கிறேன்.

போன வாரம் பள்ளியில் ஃபோட்டோ எடுத்தார்களாம். பாவம் என் செல்லத்துக்கு நல்லதாக ஒரு ட்ரஸ் கூட இல்லையாம். சரி என்று என் டீஷர்ட்டில் ஒன்றை குடுத்துவிட்டு இனிமேல உங்களுக்குத்தான் என்றேன். ஓடி வந்து கட்டிக்கொண்டார். இந்த சம்மரில் இருந்தே நான் போடாத என் டீஷர்ட்ஸ் சலவைக்கு வந்தது. கேட்டபோது பிடிச்சிருந்ததாம் எடுத்துப் போட்டுக்கொண்டாராம். என்னுடைய accessoriesக்கும் இதே கதிதான். ஆனால் அதிகமானவை ஏதோ ஒரு காரணத்தோடு உடைந்தே திரும்பி வருகின்றன. எங்காவது கிளம்பும்போது என் காலணிகளில் எதைப் போடலாம் என்று நான் நினைத்திருப்பேனோ எனக்கு முன்னே அது அம்மு கால்களில்.

எனக்கு கோவம் வரும்படியாக ஏதாவது சொல்கிறார்/செய்கிறார். அடுத்த நொடி ‘என் மேல கோவமா.. ஸாரிம்மா’ என்று ஓடி வந்து கட்டிக்கொண்டு உம்மா கொடுக்கிறார். முன்பை விட பொறுமை, புரிந்துணர்வு, விட்டுக் கொடுத்தல் போன்றவை கூடி இருந்தாலும் அவர் ரூமை ஒதுங்க வைப்பது மட்டும் இன்னமும் வரக் காணோம். சின்னச் சின்ன சமையல் கூட செய்து அசத்துகிறார். ’அச்சாக் குட்டியடி நீ’ என்று பொறுப்புணர்வைப் பாராட்டி சர்ட்டிஃபிக்கேட் கொடுத்த சில மணி நேரத்திலேயே ‘என்ன பிள்ளையம்மா நீங்கள்.. அம்மா இவளவு சத்தமா கத்துறன்.. கேக்காம இருக்குறிங்கள்’ என்றும் சொல்ல வைக்க அவரால் மட்டுமே முடிகிறது. இது சில சமயம் மாறியும் நடக்கிறது.

111 எங்கள் காரில் உறைந்திருந்த பனியில் அவர் எழுதியது இது. தமிழ் கற்பதில் நிறைய முன்னேற்றம். தானாகவே வீட்டுவேலை செய்துவிடுவார்.  புரியாதவற்றுக்கு மட்டுமே என்னிடம் உதவி கேட்பார். மீதி எல்லாம் தனக்குத் தெரிந்த வரையில் சமத்தாகச் செய்துவிடுவார். நாளை எல்லோர் வாழ்த்துகளையும் படித்துப் பார்க்க ஆவலாக இருக்கிறாராம் என்றும் எழுதச் சொன்னார்.

அவ்வப்போது எங்களை நிறுத்தி வைத்து உயரம் அளந்து பார்க்கிறார். இதில் அதிகம் மாட்டிக்கொள்வது நான் தான். அடுத்தபடியாக சதுவின் கன்னம். அது என்னவோ என்/சதுவின் கன்னத்தை கிள்ளி/வருடிப் பார்ப்பதில் இன்னமும் அலாதி இன்பம் என் தங்கத்துக்கு. இம் முறை நண்பர்களோடு பார்ட்டி வேண்டாமாம். யாருமே அவர் வகுப்பில் இந்த வருஷம் பார்ட்டி வைக்கவில்லையாம். அதனால் தனக்கும் தேவை இல்லை என்றார். இப்பொழுது குட்நைட் ஹக் கொடுக்க வந்தவர் ‘நீங்க எப்டித்தான் எழுப்பினாலும் சில சமயம் எந்திரிக்க மாட்டேன். அதனால எல்லாம் விட்டிட கூடாது. எப்டியாவது எழுப்பி கரெக்ட்டா பனெண்டு மணிக்கு விஷ் பண்ணணும்’ என்று சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்.

என் அம்மு இன்று போல் என்றும் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ என் அப்பன் துணை இருக்கட்டும்.

ஹாப்பி பர்த்டே லச்சு. லவ் யூ அம்மாச்சி.