Pages

  • RSS

22 August, 2012

மழையும் மழை சார்ந்த கவலையும்..

IMG_6967குடும்ப இஸ்திரி ட்ரைவிங் லைசன்ஸ் மட்டும் எடுக்கக்கூடாது என்ற எண்ணத்தோடு விடிந்தது கடந்த ஞாயிறு காலை. சதுவுக்கு ஃபுட்பால் மேச். திருவிழா போல கூட்டம் கூட்டமாய் இல்லாவிட்டாலும் குடும்பம் குடும்பமாய் நடந்து வந்த மக்களைக் கடந்து வந்து காவலுக்கு நின்றவர் கை காட்டிய இடத்தில் பார்க் செய்தேன். நாங்கள் காரிலிருந்து இறங்கி வரவும் கோச் எங்கள் காருக்குப் பக்கத்தில் பார்க் செய்யவும் 'பாத்திங்களா நாங்க முன்னாடி வந்துட்டோம்' என்பதன் மூலம் அவர் ரெடியாக லேட்டானதற்காக நான் கடிந்து கொண்டிருக்க வேண்டியதில்லை என்பது சதுவால் சுட்டிக்காட்டப்பட்டது. 'உங்களுக்கு சுலபமா பார்க்கிங்குக்கு பெரிய இடம் கிடைச்சுதும்மா' என்றவர் தொடர்ந்து இந்தக் குறுக்கு வழி ஏறி இறங்குவது எனக்கு முடியாத காரியமென்றால் சுற்றுப் பாதையில் போகலாம் என்றார். குறுக்கு வழியைப் படம் எடுக்க மறந்துவிட்டேன். ஒரு குட்ட்ட்டி மலையை ஏறி இறங்கினோம்.

IMG_6969காலையிலே போட்டிகள் ஆரம்பித்து விட்டாலும் இவருக்கு முதல் மேச் 2 மணிக்கும் தொடர்ந்து 4:20, 5:10 என மூன்று மேச்கள். அம்மா முழு விருப்போடு வரவில்லை என்பதைப் புரிந்துகொண்டவர் போல வரவேற்பு பேனர், வந்திருந்த கூட்டம், மழை நின்ற வெதர், க்ரவுண்டின் அளவு எனப் பலதும்  பேசிக்கொண்டு வந்தார்.  விடுமுறையின் கடைசி வாரத்தில் ஃபுட்பால் ஸ்கூல் இருந்ததால் பயிற்சிவிட்டுப்போகவில்லை என்றாலும் முதல் மேச்சில் 6:2 இல் தோற்றார்கள். இந்த இரண்டு மாத காலத்துக்குள்ளேயே பிள்ளைகள் வளர்ந்திருந்தார்கள்.

IMG_6971இடைப்பட்ட நேரங்களில் அரட்டையோடு கூடவே தலைக்கு மேலே தாழப் பறந்து கொண்டிருந்த விமானங்களிடம் தவ்விய மனம் கனடாவுக்குப் பறந்து போக அதைத் தரை இறக்குவது பெரும்பாடாகிப் போனது. அன்று இங்கே ரமலான் தினம் ஆகையால் பாகிஸ்தானியர் ஒருவர் கொண்டாட்ட வேலைகள் இருப்பதால் கிளம்புவதாகவும் அவர் மகனை வீட்டில் விட முடியுமாவெனவும் கேட்டார். வாழ்த்தைச் சொல்லி நன்றியை வாங்கிக்கொண்டு பிரியாணி கிடைக்குமாவெனக் கேட்க நினைத்ததை மூட்டை கட்டி வைத்தேன். இரண்டாவது மேச் 7:2 இல் தோற்றார்கள். எதிரணி போங்காட்டம் ஆடியதில் 3 பேருக்கு அடிபட்டுவிட்டது. கூடவே தொடர் தோல்வியில் சோர்ந்துபோய்விட்டதால் கடைசி மேச்சில் எப்படி விளையாடுவார்களோ என்ற கவலைபிடித்துக்கொண்டது. நினைத்ததை விட இடைவேளை வரை நன்றாக விளையாடி 2 கோல் போட்டார்கள். பின்னர் எதிரணி 4 கோல்களைத்தாண்டியதும் தளர்ந்து போய் 7:2 இல் தோற்றார்கள்.

IMG_6981பரிசளிப்பை மிக வித்தியாசமாக ஒழுங்கு செய்திருந்தார்கள். எல்லோரையும் உட்கார வைத்து ஒரே சமயல் 6 அணிகளை அழைத்து அரங்கம் நிறைந்த கரகோஷமும், எழுந்து நின்று வரவேற்புமெனப் பிள்ளைகள் மிக மகிழ்ந்ததில் பெற்றவர் அகம் மகிழ்ந்தது. வழக்கம் போல ஒரு குட்டி ஷீல்டும், டீ ஷர்ட்டும், கிஃப்ட் வவுச்சரும் கிடைத்தது. மேலதிக பரிசாக அன்று மீதி நாள் முழுவதும் டீவி ரிமோட் பிள்ளையின் கையில் இருக்க வேண்டுமென்று அறிவிக்கப்பட்டதும் அத்தனை குஷி பிள்ளைகளுக்கு. அம்மாவை இலவச டாக்ஸியாக்கிய சதுவின் புண்ணியத்தால் கூட வந்தவர்களை வீடுகளில் விட்டுவிட்டு நாங்கள் வீடு வர எட்டு மணி ஆகிவிட்டது. வந்ததுமே அப்பாவிடமிருந்து ரிமோட் பறிமுதல் செய்யப்பட்டது.

--

சம்மர் வெகேஷன் முடிந்ததுமே விண்டரையும் ஸ்னோவையும் மனம் தானாக நினைக்கத் தொடங்கிவிடுகிறது. அதற்குத் தொடர் மழையும், இருட்டும், எப்போதாவது எட்டிப்பார்க்கும் சூர்யாவும் கூட காரணமாக இருக்கலாம். ”கிணறெல்லாம் வத்திப் போகுதம்மாச்சி.. எட்டிப் பாத்தா அடியில எப்பன் தண்ணி தெரியுது.. அனல் வெயில் தாங்கேலாதாம்.. தம்பி (என்னோட அண்ணன்) அண்ணேன்ர (என்னோட அப்பா) காணிக்குள்ள கிணறு வெட்டுறார்.. வெயில்ல பிள்ளை படுற கஸ்ரம் பாக்கக் கவலையாக்கிடக்கம்மா”ன்னு ரெண்டு நாள் முன்னாடி அத்தை சொன்னதிலிருந்து மழையைப் பார்க்க/கேட்க நேரும்போதெல்லாம் பெருமூச்சே மிஞ்சுகிறது. இதில் கொஞ்சமேனும் ஊரில் போய்ப் பொழியக்கூடாதா என ஏக்கம் எட்டிப் பார்க்கிறது.

--

பள்ளிகள்  மீண்டும் தொடங்கிவிட்டன. புதிய வகுப்பு, புதுப் புத்தகங்கள், புதிய ஆசிரியர்கள் என்று பிள்ளைகளின் பரபரப்பு எங்களையும் தொற்றிக்கொண்டது. புதுப்புத்தக வாசனையை மோந்து பார்த்த நாட்களும், போரினால் பழைய புத்தகங்களை ஏக்கத்தோடு பெற்றுக்கொண்ட நாட்களும், கொப்பி, பென்சில், பேனை வாங்கக் கூட முடியாமல் தவித்த நாட்களும் என மனம் அதன் போக்கில் கொசுவத்தி சுற்றிக்கொண்டிருக்கிறது. எனக்கு எப்போதும் அம்மாவே அட்டை போட்டு பெயர் எழுதித் தர வேண்டும். அம்மாவின் அழகான கையெழுத்து ஒரு காரணமென்றாலும் அது ஏனோ நான் அந்த வழக்கத்தைக் கடைசி வரை மாற்றவில்லை. இன்று அம்முவின் புத்தகப்பையைத் தூக்கிவிட்டுப் பயந்துவிட்டேன். எவளவு பெரிய்ய்ய்ய புத்தகங்கள். நல்லவேளை வீட்டுவேலை இல்லாத நாட்களில் பள்ளியிலேயே புத்தகங்களை வைக்க வேண்டும் என்ற நடைமுறை இங்கே இருக்கிறது.

அப்படியே தமிழ்ப்பள்ளியும் ஆரம்பித்துவிட்டது. நாங்கள் இதுவரை பாவித்து வந்த நோர்வேஜியப் பள்ளியில் திருத்த வேலைகள் தொடங்குவதால் புதிதாக வேறொரு பள்ளியில் இடம் தரப்பட்டது. அங்கே ஏகப்பட்ட கெடுபிடிகள். எங்கள் வீட்டைத் திடீரென ஒரு நாளைக்கு யாராவது பாவிக்கத் தொடங்கினால் எப்படி இருக்குமோ அப்படி ஒரு நிலையில் புதிய பள்ளியின் ஆசிரியர்கள் இருக்கிறார்கள். என்னதான் அவர்களின் நிலையை நாம் புரிந்துகொண்டாலும் ஏகப்பட்ட நிபந்தனைகளோடு அங்கே போய் வருவது எங்களுக்கும் சிரமமானதே. என் பிள்ளைகளின் ஆசிரியர்களைப் பார்த்ததுமே இந்த வருடம் வீட்டில் அதிக கவனம் எடுத்தே ஆகவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். என் வகுப்பில் பதினாறு பிள்ளைகள். முதல்நாளே இலகுவாகப் பேச ஆரம்பித்துவிட்டார்கள். என் முகராசி அப்படியென்றாலும் கூடவே நான் நினைத்தது போல இந்தப் பதினாறையும் பெற்றதில் எத்தனை பேர் நான் தான் ஆசிரியை என்றதும் கவனம் எடுக்க வேண்டுமென நினைத்தார்களோ என்றும் எண்ணத் தோன்றியது.

10 நல்லவங்க படிச்சாங்களாம்:

கவி அழகன் said...

Suvaarasiyama summer vidumurai nikalvukalai solliyirukkireerkal ,
Pillaikalidam remote a kodunka endum solluraankalaa
Romba nallavankala iruppanka pola

திண்டுக்கல் தனபாலன் said...

/// எத்தனை பேர் நான் தான் ஆசிரியை என்றதும் கவனம் எடுக்க வேண்டுமென நினைத்தார்களோ என்றும் எண்ணத் தோன்றியது. ///

பொறுப்பு அதிகம் ஆகி விட்டது... வாழ்த்துக்கள்...

பதிவாகிப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...

vinu said...

welcome back sis!!!!

கோபிநாத் said...

\\வந்ததுமே அப்பாவிடமிருந்து ரிமோட் பறிமுதல் செய்யப்பட்டது.\\

அன்னையின் பிராத்தனை நிறைவேறியது ;))

புதிய வகுப்புக்கு மருமக்களுக்கும் டீச்சருக்கு வாழ்த்துக்கள் ;))

அமுதா கிருஷ்ணா said...

எப்பவும் போல இரண்டு முறை படித்தும் உங்கள் எழுத்து நடை கொஞ்சம் புரியவில்லை.

'பரிவை' சே.குமார் said...

அழகான பகிர்வு.
பகிர்வுக்கு நன்றி.

ராமலக்ஷ்மி said...

/அம்மா முழு விருப்போடு வரவில்லை என்பதைப் புரிந்துகொண்டவர் போல../

பாவமில்லையா:)?

/பிரியாணி கிடைக்குமாவெனக் கேட்க நினைத்ததை /

அதுசரி:)!

/வழக்கம் போல ஒரு குட்டி ஷீல்டும், டீ ஷர்ட்டும், கிஃப்ட் வவுச்சரும் கிடைத்தது./

என் வாழ்த்துகளைச் சொல்லுங்கள்!

/டீவி ரிமோட் பிள்ளையின் கையில் /

சூப்பர் பரிசு இதுதான்:)!

சுவாரஸ்யமான பகிர்வு சுசி. அடிக்கடி எழுதுங்கள்.


சுசி said...

நன்றி கவி அழகன்.. சின்ன விஷயமா இருந்தாலும் பசங்க சந்தோஷப்பட்டாங்க :)

--

உண்மைதான் தனபாலன்.. முதல் வருகைக்கும் சேர்த்து நன்றி :)

--

நன்றி வினு :)

சுசி said...

ஹிஹீஹீ.. கககபோங் கோப்ஸ்.. நன்னீஸ் :)

--

அப்பாடா.. கொஞ்சம் தானே புரியலைங்க அமுதா :)

--

நன்றி குமார் :)

சுசி said...

அன்னிக்கு எனக்கு உடம்பு சரியா இல்லை அக்கா.. அதோட ஆறு மணி நேரம் அவருக்காத்தான் போனேன்.. ஆனா கஷ்டமா இருக்கு வரன்னு அவர்ட்ட சொல்லல.. அடுத்த தடவை உங்கள ட்ராப் பண்ணிட்டு அப்பறமா வந்து பிக் அப் பண்ணவான்னு கேட்டேன்.. முடியாது முழு நேரமும் அங்கயே நிக்கணும்னார் :)
இடையில ஒரு அரை மணி நேரம் கார்க்குள்ள இருந்திட்டு வந்தேன்.. கொஞ்சம் சமாளிக்க முடிஞ்சது.. வாழ்த்துகளைச் சொல்லியாச்சு.. நன்றி :)

எழுதறேன் அக்கா :)