Pages

  • RSS

29 November, 2011

நினைவில் நிறைந்தவர்க்கு!!

முதலில் மீண்டும் ஒரு முறை இலங்கையில் ஈழப்போரில் உயிர் நீத்த அத்தனை மாவீரர்களுக்கும், மக்களுக்கும் அஞ்சலிகளும், வணக்கங்களும்.

இம்முறையும் அஞ்சலிக்கும், அதன் பின்னான நிகழ்வுகளுக்கும் போக மனம் வரவில்லை. கேளிக்கைகள் பிடிக்கவில்லை. இவர்களின் தேவையில்லாத கொள்கைகள் பிடிக்கவில்லை. போயிருந்து மனம் வெதும்பி வருவதைவிட மனதார வீட்டிலேயே வணங்கினோம்.

 

புலம்பெயர் தமிழர்களைப் பொறுத்தவரை நவம்பர் 27 மாலை 6 மணிக்கு எல்லோரும் ஒன்றுகூடி அஞ்சலி செய்வோம். பின்னர் மண்டபம் கிடைப்பதைப் பொறுத்து ஒரு சனிக்கிழமை கலை நிகழ்வுகள் நடைபெறும். இப்போது??இவர்களுக்குள்ளேயே கொள்கை வேறுபாடுகள், குழுப் பிரிவுகள். நாடுகடந்த அரசமைப்போம் என்று ஆளுக்கொரு தலைமையின் கீழ் நாட்டுக்கு நாடு அரசு அமைக்க முயல்கிறார்கள். பிடிக்கவில்லை. ஒதுங்கிவிட்டோம்.

சிங்களவர் எல்லோரும் கெட்டவர் இல்லை. தமிழர் எல்லோரும் நல்லவர் இல்லை. அதனால் தான் இலங்கையில் ஈழப்போரில் உயிர் நீத்த என்று சொன்னேன். அப்பாவித் தமிழரோடு உயிரிழந்த அப்பாவிகளையும் சேர்த்து. எத்தனையோ தமிழர் உயிரைக் காப்பாற்றிய சிங்களவர் இருக்கிறார்கள். தமிழரையே காட்டிக்கொடுத்துக் கொலைக்குக் காரணமான தமிழர் இருக்கிறார்கள். இங்கே நான் இராணுவம், போராளி என்று பிரித்துச் சொல்லவில்லை.

சிறுவயதில் பார்த்த அப்பாவின் நண்பன் ரட்ணவீரா மாமாவின் கறுத்த நெடிய உருவமும், வெள்ளைப் பல் சிரிப்பும் இப்போதும் நினைவிருக்கிறது. பாதிக் காதை மூடியதாகப் படிய வாரிய முடியோடு வீரா மாமா கல்யாணம் செய்து கூட்டி வந்த ஆண்ட்டியும் நினைவில் இருக்கிறார். கந்தளாயில் அப்பாவோடு வேலை செய்தவர்களின் கதைகள் மட்டும் நினைவில்.

83 கலவரம். அப்போது சித்தியும் சித்தப்பாவும் பண்டாரவளையில் ஆசிரியப் பணியில் இருந்தார்கள். தமிழர் என்று தெரிந்த நொடி உயிரோடு கொழுத்தப்பட்ட காலம். இராணுவ வீரன் வீட்டிலேயே வாடகைக்கு இருந்தார்கள். இரவில் வீட்டின் மீது கல்வீசப்படும். காலையில் வீட்டம்மா அவர்கள் வீட்டு பஷன் ஃப்ரூட் பழம் வீழ்ந்ததாய் சொல்லி நிலமையை இலகுவாக்குவார். முதலில் என்னைக் கொன்றே உங்களை நெருங்க முடியும் தைரியமாய் இருங்கள் என்று சொல்லி இருவரையும் ஊருக்கு உயிரோடு அனுப்பி வைத்த அதே இராணுவ வீரன். அக்காச்சி ஊருக்குப் போனபோது சந்தித்த இராணுவ வீரர்கள். அண்ணாவிடம் வைத்தியம் பார்க்கும் போலீஸ். எல்லோரும் நல்ல சிங்களவர்கள்.

மாமியாரின் தென்னந்தோட்டத்தில் இளநீர் களவாகப் பிடுங்கும் இராணுவத்தினர் ’பசிக்குது அம்மா’ என்னும்போது இன்னும் இரண்டைப் பறித்துப் போடச்சொல்லிவிட்டு அடுத்த தடவை கேட்டுப் பிடுங்கவேண்டும் என்று சொல்வார்களாம். இருந்தாலும் அவ்வப்போது பசித்தவர்கள் பழங்கணக்கும் பார்க்கும்படியாக இருக்கிறது திருடர்களின் அட்டூழியம். விடுதலைப் புலிகள் இருந்தபோது அடங்கி இருந்த திருடனெல்லாம் இப்போது பகலிலேயே திருடும் தைரியத்தோடு இருக்கிறானாம். அவ்வப்போது ’அவங்கள் இருக்கேக்க’ என்று நம் மக்கள் அங்கலாய்க்கத்தான் செய்கிறார்கள்.

வீடுவீடாக வந்து மாவீரர் தினத்தன்று விளக்கேற்றக் கூடாதென்று சொல்லப்பட்டதாம். கோவிலில் கூட விளக்கு அணைக்கப்பட்டதாம். போகட்டும். எங்கள் உணர்வுகளால் அவர்கள் ஆத்ம சாந்திக்கு ஆயிரம் என்ன லட்சம் தீபங்கள் ஏற்றுவோம்.

என்னதான் இராணுவம் அன்பாய் இருந்தாலும் அடிமனதில் ஒரு பயம் எப்போதும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. எங்களுக்கும். அங்கே இருக்கும் அவர்களுக்கும். எத்தனை நாளைக்கு இந்த வாழ்வு?? இன்னொரு போரைத் தாங்கும் சக்தி அவர்களிடம் இல்லை. ஏனென்றால் அத்தனை இழந்திருக்கிறார்கள். உயிர்ப் பயம் இப்போதும் இருக்கிறது. குண்டுச் சத்தம் கேட்பதில்லை. அந்த அளவில் நிம்மதியாக ஒரு வாய் உண்டு, உறங்குகிறார்கள். ஏன் கெடுக்க வேண்டும்??

இழப்பை அநுபவித்தவர்க்குத் தெரியும் வலியின் அருமை. கடந்த மாதம் சானல் 4 இல் ஒளிபரப்பிய கடைசிக்கட்டப் போர் பற்றிய டாகுமெண்ட்ரியை இங்கே ஒரு சானலில் ஒளிபரப்பினார்கள். இன்னமும் வலிக்கிறது. பார்த்த எனக்கே இத்துணை வலியென்றால் அங்கே உயிரைக் கையில் பிடித்தபடி ஓடிய என் உறவுகளுக்கு எப்படி இருக்கும்?? இங்கிருந்து வீரம் பேசலாம். நாளை ஒன்றென்றால் நம்மில் எத்தனை பேர் நாட்டுக்குப் போவோம் உறவுகளின் உயிர் காக்க?? போயிருக்கிறார்கள். இல்லை என்கவில்லை. என் அண்ணன்களைக் காக்கவென்று நான் போவேனா?? சாத்தியம் இல்லாதபோது பேசக்கூடாது. அப்படியும் பேசுபவர் கேட்பது பிடிக்காவிட்டால் ஒதுங்கிப் போக வேண்டும். போய்விட்டோம்.

நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். இனி நடப்பவையேனும் நல்லவையாக அமையட்டும்.

பிரார்த்திப்போம்!!

maaveerar

11 நல்லவங்க படிச்சாங்களாம்:

ராமலக்ஷ்மி said...

நேர்மையான நெகிழ்வான பதிவு. உங்கள் பிரார்த்தனையில் நாங்களும் இணைகிறோம் சுசி.

அமுதா கிருஷ்ணா said...

பிராத்தனையில் பங்கேற்போம்.படிக்கவே மனது வலிக்கிறது.

கோபிநாத் said...

நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். இனி நடப்பவையேனும் நல்லவையாக அமையட்டும் !

vinu said...

:(

vinu said...

:(

தமிழரசி said...

//இழப்பை அநுபவித்தவர்க்குத் தெரியும் வலியின் அருமை//

உண்மை தான் இது மிகக் கொடியவலி என்பதை மறுப்பதற்கில்லை...பிரார்த்திக்கிறோம் சுசி..

பாலா said...

நானும் பிரார்த்திக்கிறேன்.

manjoorraja said...

உண்மையை சொல்லியிருக்கிறீர்கள்.

நல்லவர்களும் கெட்டவர்களும் உலகின் எல்லா இடங்களிலும் இருக்கிறார்கள் என்பதை மட்டும் புரிந்துக்கொண்டால் போதுமானது.

அப்பாவி தங்கமணி said...

//சிங்களவர் எல்லோரும் கெட்டவர் இல்லை. தமிழர் எல்லோரும் நல்லவர் இல்லை//

மனதை தொட்ட வரிகள் சுசி...நானும் பிராத்திக்கிறேன் எல்லோரின் நலம் வேண்டி... நன்றி பகிர்வுக்கு

பித்தனின் வாக்கு said...

long pending blogs today i read all. nice.

How are you and family?.

Part Time Jobs said...

Hi i am JBD From JBD

Hi i Read Your Information its Really Very interesting & Usefull!


Visit My Website Also : www.cutcopypaste.co.in , www.indiai365.com , www.classiindia.com , www.jobsworld4you.com