ஊரிலிருந்து மாமியார் வந்திருக்கிறார்கள். மூன்று மாத விசா. விசா 20,000/-இன்ஷூரன்ஸ் 38,,000/-, டிக்கட் 190,000ரூபா. வந்ததும் ’வேற ஒண்ணுமில்லை பாசத்துக்கு விலை ஏறிப்போச்சு. இவ்ளோ செலவு செஞ்சுதான் என்ன கூப்டணும்னா இனிமேல நான் வரமாட்டேன்’ன்னு சொன்னார்கள். மாமியாரிடம் குண்டாயிட்டேன்னு கொஞ்சம் அதிகமாக சொல்லிவிட்டேன் என்பது அவங்க வாங்கி வந்த XL சைஸ் சுடிதாரைப் பார்த்ததும் புரிந்தது. போட்டுக்கொண்டு சதுரிடம் எப்படி என்று கேட்டேன். ‘இதான் அப்பம்மா உங்களுக்கு வாங்கிட்டு வந்த nattkjole (நைட்டி) வா??’ என்றார். பத்திரமாக மடித்து வைத்துவிட்டேன். இங்கே இருக்கும் தையல் அக்காவிடம் கொடுத்து டிங்கரிங் செய்தால் சுண்டக்கா காற்பணம் கதையாகிவிடும். அவ்ளோதான். சொக்கா.. அது உனக்கு இல்லை!!
மாம்ஸ்க்கு அழகாக எம்ப்ராய்டரி செய்த ஒரு சட்டை வாங்கியிருக்கிறார்கள். கொஞ்சம் லூசாக இருந்தது. டைட்டாக ஷர்ட்/டீஷர்ட் போட்டுப் பழகியவர் ‘என்னம்மா இது கொஞ்சம் பெருசா இருக்கே’ என்றார். ‘பரவால்ல.. நீ கொஞ்சம் குண்டாயிடு அப்போ சைஸ் சரியாய்டும்’ என்று மாமியார் சொன்னார். மொக்கைசாமி s/o மொக்கை மம்மி என்று நான் சொன்னேன்.
மாமியார் வந்த அன்று இடியப்பம் செய்தேன். மாம்ஸுக்கு புட்டு பிடிக்கும் என்பதால் இடியப்பம் எப்போதாவது அவருக்கு காய்ச்சல், சளிப்பிடிக்கும் சமயம் அவிப்பதோடு சரி. மாம்ஸ் இன்றுவரை அம்மா வந்ததுனாலதான் எனக்கு இடியப்பம் கிடைச்சுதென்று எல்லோரிடமும் சொல்லிக்கொண்டே இருக்கிறார்.
எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து அம்மா இடியப்பம் அவிக்கும் போதெல்லாம் நானும் கொஞ்சம் மாவை வாங்கி அதில் உருண்டைகளில் ஆரம்பித்து பின் படிப்படியாக பூ, குருவி, மீன் என விதவிதமாக செய்து கொடுப்பேன். அம்மா அதை இடியப்பத்தின் அருகில் வைத்து அவித்துக்கொடுப்பார். கையில் சுடாமல் ஊதியும், நேரமின்மைக்கு ஏற்ப ஒரு தட்டில் ஆவி பறக்கவுமென என் கைவண்ணம் கிடைக்கும். நசுங்காமல் இருக்கவென முதல் தட்டில் வைப்பதால் மூடியிலிருந்து நீர் சொட்டி மெல்லிய ஈரப்பதத்தோடு அவளவு சுவையாக இருக்கும். இன்று என்னவோ ஆசை வந்தாலும் குருவியோ மீனோ செய்ய வராததால் உருண்டைகளே செய்தேன். சுவை பார்த்த சது அடுத்த தடவை இடியப்பம் செய்யும்போது சொல்லச் சொல்லி இருக்கிறார்.
ஊரில் எங்கள் வீட்டின் எதிரில் அம்மாவின் அத்தான் வீடு. அவரும் மனைவியும் அம்மாவுக்குப் போலவே எங்களுக்கும் பெரியத்தான், சின்னாச்சி அக்காதான். யாரோ அவரை சின்னாச்சன் என்று சொல்லப்போய் எங்களுக்குள் இப்போதும் சின்னாச்சன் என்றே சொல்லிக்கொள்வோம். சின்னாச்சி அக்கா வீட்டில் மூன்று வேளை சாப்பாடும் சமைத்துக்கொடுப்பார். நாங்கள் மதிய, இரவுச் சாப்பாடு வாங்கியதாய் நினைவில்லை. ஆனால் காலைச்சாப்பாடு அதிகம் வாங்கி இருக்கிறோம். ஆரம்பத்தில் எவளவென்று சரியாக நினைவில்லை ஆனால் கடைசியாக 1990 இடப்பெயர்வின் முன் ஐம்பது ரூபாய் கொடுத்து வாங்கிய நினைவு. காலை மெனுவில் இடியப்பம், புட்டு இருந்தாலும் இடியப்பமே எங்கள் தேர்வு.
இடியப்பம் வாங்க ’குட்டிக்காலால போய்ட்டுவாம்மாச்சி’ என்ற ஐஸோடு நானே காலையில் அனுப்பி வைக்கப்படுவேன். குட்டிக்கால் வளர்ந்து விட்டதாய் சொன்னபோது கடைக்குட்டி சின்னப்பொண்ணு நீதான் போகணும் என்று விரட்டப்பட்டேன். ஓலைக்குசினி. இருட்டாக இருக்கும். உள்ளே போய் சிறிது நேரத்திலேயே கண்ணுக்கு எதுவும் தெரியும். ஆனால் எப்போதும் எல்லாம் அதனதன் இடத்தில் இருப்பதால் நேராகப் போய் வழக்கமாக இருக்கும் பலகைமீது அமர்ந்துவிடுவேன். அடுப்பின் வெளிச்சம் விளக்கின் தேவையை இல்லாது ஆக்கினாலும் அடுப்பின் ஓரத்தில் ஒரு மண்ணெண்ணெய் விளக்கு மங்கலாக எரிந்து கொண்டிருக்கும். சின்னாச்சி அக்காவின் தங்கை மகள் பிரேமாக்கா உதவியோடு வேலை மும்முரமாக நடந்துகொண்டிருக்கும். சும்மாவே இருட்டு மழைநாட்களில் கும்மிருட்டாகிப் போக ஈர விறகோடு அவர்கள் போராடுவதும், மழைக்குளிருக்கு இதமாய் குசினியின் கதகதப்பும் இப்போதும் நினைவிருக்கிறது.
ஒரு பெரிய ஓலைப் பெட்டிக்குள் மாவைக்கொட்டி முழுவதும் குழைத்தால் காய்ந்துவிடுமென்று ஒரு ஓரத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாகப் பதமாகக் குழைப்பார்கள். மர உரலால் இடியப்பத்தட்டில் பிழிந்துவிடும் வேகத்தை விட அவிந்த இடியப்பத்தை உலைப்பானையிலிருந்து இறக்கி ஒரு பெரிய சுளகில் அடுக்கி வைக்கும் வேகம் அதிகம். அதிசயமாய் பார்த்தபடி இருக்கும் என்னோடு பேசியபடியே பிரேமாக்கா வேலை செய்வார். இன்னொரு மூலையில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் பேப்பர் கிழித்து, லாவகமாக டிஷ்யூவை வாழை இலைக்குப் பதிலாக வைத்து சம்பலும் சேர்த்து பார்சலாகக் கொடுப்பார். சொதிக்கு ஏற்ற ஒரு பாத்திரமோ ஹார்லிக்ஸ் போத்தலோ நான் கொண்டு போவேன்.
சின்னாச்சி அக்கா நெற்றியில் ஒரு ரூபா அளவில் எப்போதும் குங்குமம் இருக்கும். கவுன் அழுக்காகாமல், வேலைக்கு இடைஞ்சலில்லாமல் இருக்கவென பிரேமாக்கா இடுப்பில் சறம் கட்டி இருப்பா. தாய், தங்கைகள் குடும்பமாக வந்து அங்கேயே இருந்து அவர்களும் சமையல் செய்து கொடுக்க ஆரம்பித்த போது கூட பிரேமாக்கா சின்னாச்சி அக்காவுக்கே உதவியாக இருந்தார்.
உள்ளங்கை அளவில் குட்டிக்குட்டியாய் இடியப்பம். ஒரு தடவை பிழிந்து பாலெடுத்த தேங்காய்ப்பூவில் சம்பல், மூன்றாவது பாலில் நீரோட்டமாய் இருக்கும் சொதி. ஆனால் எங்கிருந்து அந்தச் சுவையைச் சேர்த்தார்கள் என்று இன்றுவரை தெரியவில்லை.
சின்னாச்சி அக்காவின் ஒரே மகனுக்கு என் வயது. அவன் முழுப் பெயர் தெரியாது. வீட்டில் லகு என்று கூப்பிடுவார்கள். அம்மாவுக்கு அந்த அத்தானைக் கட்டி வைக்கக் கேட்டார்களாம். அம்மா தப்பியதால் என்னை லகுவுக்கு கொடுத்து அவரின் கவலையை போக்கிவிடலாமென்று கேலி பண்ணுவார்கள். என் தலை தெரிந்தாலே வீட்டுக்கோடியில் போய் ஒளிந்து கொள்ளும் லகு என்னிடமிருந்து தப்பிவிட்டான் பாவம். இப்போது சின்னாச்சி அக்கா சமைத்துக்கொடுப்பதில்லையாம். 2002 ஊருக்குப் போன சமயம் பார்த்துவிட்டு வந்தேன். அம்முவைத் தூக்கி அப்படியே என்னைப் பார்த்த நினைவு வருவதாகச் சொல்லிக் கொஞ்சினார். பெரியத்தான் அதே சிரிப்போடு தள்ளி இருந்து பார்த்துக்கொண்டிருந்தார். பிரேமாக்கா நர்ஸிங் கோர்ஸ் முடித்து அண்ணாவின் ஹாஸ்பிடலில் நர்ஸாக இருந்தார்.
இணையத்தில் எடுத்த படம் இது. தனியாக இடியப்ப உரலென்றும், அதிலேயே முறுக்கு அச்சு போடக்கூடியது போலவும் கிடைக்கும். பூவரச மரத்தில் செய்த உரலும், பனை ஈர்க்கில் செய்த தட்டும் வெகுகாலம் இருக்கும். மாமி ஒரு முறை வரும்போது மர உரல் வாங்கிக்கொண்டு வந்தார். அதில் இடியப்பம் பிழிவதென்பது அவளவு இலகுவானதல்ல. கையில் நல்ல பலம் இருக்கவேண்டும். என்னால் இரண்டுக்கு மேல் அழுத்திப் பிழிய முடியவில்லை. இலகுவாக இருக்கவென்று மாவுக்கு நீரை அதிகம் சேர்த்தால் இடியப்பம் சாஃப்ட்டாக வரவில்லை.
அப்படியே பத்திரமாக அதை மாமியிடம் கொடுத்து அனுப்பிவிட்டு கன் டைப் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் உரலும், பிளாஸ்டிக் தட்டும் வாங்கிவிட்டேன்.
இப்போது இதற்கென்று மெஷினே வந்துவிட்டதாம். முன்பென்றால் சின்னாச்சி அக்காவுக்கு வாங்கிக் கொடுத்திருக்கலாம்.
20 நல்லவங்க படிச்சாங்களாம்:
நல்ல பகிர்வு சகோ ... மாஸ்டர் ஒரு பிலேட் இடியாப்பம் பார்சல் ...
WELCOME BACK!!!!!!!! I am happy to see you back.....
இடியாப்பம் நல்ல உணவு.ஆனால், செய்வது தான் கஷ்டம்.
மாமி வந்தாச்சியில ஆரம்பிச்சி இடியாப்பத்து வழியாக போயி சின்னாச்சி அக்காவுல முடிச்சிருக்கிங்க ;-) சூப்பரு ;-)
\\ கடைக்குட்டி சின்னப்பொண்ணு நீதான் போகணும் என்று விரட்டப்பட்டேன்.\\
விரட்டப்பட்ட கோடான கோடி கடைக்குட்டிகளில் நானும் ஒருவன் ;)
நமக்குன்னு ஒரு சங்கம் ஆரம்பிக்கனும் ;-)
இடியாப்பம் பார்சல்
இங்கேயும் கொஞ்சம் இடியாப்பம் அனுப்பறது.. அங்கே வர்றவங்களுக்கு மட்டும் தான் செஞ்சு தருவீங்களா..
உங்கபக்கம் இப்பதான் வரேன். நீங்களும்
என்பக்கம் வந்து பாருங்க. உங்க அனுபவ பகிர்வு இடியாப்பம் சாப்பிட்ட
மாதிரி இருந்தது.
ஹஹாஹா.. சமத்தா ஹோட்டல் மாஸ்டர்ட்ட ஆர்டர் பண்ணிட்டிங்க தினேஷ்குமார்.
@@
ரொம்ப நன்றி சித்ரா.
@@
அதேதான் அமுதா. சாஃப்டா வரது ரெம்ப கஷ்டம் (எனக்கு)
ஹிஹிஹி.. என்னைக்கு நாம தொடங்கின விஷயத்த மட்டும் பேசறோம் கோப்ஸ்.. கண்டிப்பா தொடங்கணும்.. அல்லாரும் கடைக்குட்டின்னா என்னமோ ச்செல்லம் மட்டும்தானு நினைச்சிட்டு இருக்காங்கப்பா :)
@@
தாராளமா அனுப்பறேன் சரவணன்.
@@
அனுப்பலாம் விக்கி.. சாப்டப்போற உங்க நிலமைய நினைச்சாதான் அனுப்பலை.
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி லக்ஷ்மி மேடம்.. இதோ வரேன் :)
நல்ல பகிர்வு
அருமையான தளம் சகோதரி.எனது பக்கம் ஒருமுறை வந்து போங்கள்!
//மாமியாரிடம் குண்டாயிட்டேன்னு கொஞ்சம் அதிகமாக சொல்லிவிட்டேன் என்பது அவங்க வாங்கி வந்த XL சைஸ் சுடிதாரைப் பார்த்ததும் புரிந்தது. போட்டுக்கொண்டு சதுரிடம் எப்படி என்று கேட்டேன். ‘இதான் அப்பம்மா உங்களுக்கு வாங்கிட்டு வந்த nattkjole (நைட்டி) வா??’ என்றார். பத்திரமாக மடித்து வைத்துவிட்டேன்.//
ha ha haa
//இடியப்பம் எப்போதாவது அவருக்கு காய்ச்சல், சளிப்பிடிக்கும் சமயம் அவிப்பதோடு சரி//
ஓஹ் அதான் இடியாப்பம் எல்லாம் டேப்லட் மாதிரி வட்ட வட்டமா சுடறாங்களா இத்தனை நாள் தெரியாம போச்சே :-)))))
//எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து அம்மா இடியப்பம் அவிக்கும் போதெல்லாம் நானும் கொஞ்சம் மாவை வாங்கி அதில் உருண்டைகளில் ஆரம்பித்து பின் படிப்படியாக பூ, குருவி, மீன் என விதவிதமாக செய்து கொடுப்பேன். அம்மா அதை இடியப்பத்தின் அருகில் வைத்து அவித்துக்கொடுப்பார்.//
ஹேய் அக்கா நானும் ஆனா அம்மா பால் கொழுக்கட்டை செய்றப்போ இதுமாதிரி செய்வேன் :))
//இன்று என்னவோ ஆசை வந்தாலும் குருவியோ மீனோ செய்ய வராததால் உருண்டைகளே செய்தேன். சுவை பார்த்த சது அடுத்த தடவை இடியப்பம் செய்யும்போது சொல்லச் சொல்லி இருக்கிறார்.//
வளர்ந்தபிறகும்
குழந்தை தனத்தின்
போன்சாய்
கவித கவித
//ஒரு தடவை பிழிந்து பாலெடுத்த தேங்காய்ப்பூவில் சம்பல், மூன்றாவது பாலில் நீரோட்டமாய் இருக்கும் சொதி. ஆனால் எங்கிருந்து அந்தச் சுவையைச் சேர்த்தார்கள் என்று இன்றுவரை தெரியவில்லை.//
எனக்கு விவரம் தெரிஞ்ச நாள்ல இருந்து இப்போ வரைக்கும் அம்மா இடியாப்பத்துக்கு தேங்காய்ப்பால் மட்டும்தான் செய்து கொடுப்பாங்க தேங்காய்ப்பால்தான் இடியாப்பத்துக்கு சரியான ஜோடிப்பொருத்தம் அப்படின்னு நினைக்கிறேன் இது தவிர வேற எது ஜோடி சேர்த்தாலும் ரஜினியோட ஸ்ரேயா சேர்ந்த மாதிரி பொருந்தாத மாதிரிதான் இருக்கும் :)))
//தனியாக இடியப்ப உரலென்றும், அதிலேயே முறுக்கு அச்சு போடக்கூடியது போலவும் கிடைக்கும். பூவரச மரத்தில் செய்த உரலும், பனை ஈர்க்கில் செய்த தட்டும் வெகுகாலம் இருக்கும். மாமி ஒரு முறை வரும்போது மர உரல் வாங்கிக்கொண்டு வந்தார். அதில் இடியப்பம் பிழிவதென்பது அவளவு இலகுவானதல்ல. கையில் நல்ல பலம் இருக்கவேண்டும். என்னால் இரண்டுக்கு மேல் அழுத்திப் பிழிய முடியவில்லை. இலகுவாக இருக்கவென்று மாவுக்கு நீரை அதிகம் சேர்த்தால் இடியப்பம் சாஃப்ட்டாக வரவில்லை.//
ஹிஹிஹி
தாத்தா தன்னோட பட்டறையில இருந்து எங்க குடும்பத்துல இருக்கிற எல்லோருக்கும் இடியாப்ப உரல் செய்து கொடுத்திருக்கார் இன்னும் அதான் அம்மா யூஸ் பண்றாங்கா ஆனா தாத்தாதான் இல்ல :(
நல்ல பதிவுக்கா இன்னும் நிறைய பண்டங்கள் இருக்கு நாங்க தெரிஞ்சிக்க சரியா ஞாபகமிருக்கட்டும் எல்லாத்தையும் எழுதுங்க ..!
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மாலதி.
@@
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸ்ரீதர்.
@@
உ பி.. ஆமால்ல.. இடியப்பம் டாப்லட் போலவும் இருக்கு :)
பால்கொழுக்கட்டை?? சாப்டதில்லப்பா..
கவிதை கியூட்டா இருக்குப்பா :))
ஓ.. ஆனா எங்க ஊர்ல எதுனா குழம்பு, சம்பல், சொதிதான்பா.. தேங்காய்ப்பால் சேர்த்து சாப்ட நினைவில்ல..
தாத்தா நினைவா அதாவது இருக்கேப்பா..
ஒண்ணொண்ணா எழுதறேன்.. சரியா..
Post a Comment