Pages

  • RSS

02 April, 2011

எல்லோரும் கொண்டாடுவோம்!!

அண்ணா, ரஜி, அப்பா, அவர்களின் ஃப்ரெண்ட்ஸ் கை தட்டும்போது என் கையும் சேர்ந்து தட்டும். அவர்கள் இருக்கை விட்டு எழுந்து  ஆரவாரிக்கும்போது நானும் குதிப்பேன். அடச்சே/ஐயோ என்று தலையில் கைவைத்தால் சிரிப்பு வந்தாலும் சோகமாய் இருப்பதாய் காட்டிக் கொள்வேன். வீட்டிலுள்ள அத்தனை கதிரைகளையும் வரிசையாக அடுக்கி, பாய் கொண்டு தரை டிக்கட்டும், மேஜை வைத்து பால்கனியும் என ஒரு தியேட்டர் எஃபெக்ட் இருக்கும். வெளியே சைக்கில்களும், ஓரிரு பைக்குமென இலவச பார்க்கிங். இடையிடையே வறுத்த கடலை, லெமன் ஜூஸ், கூல்ட்ரிங்க்ஸ் என அம்மா என்னைக் கூப்பிட்டுக் கொடுத்தனுப்புவார். எனக்கும் சேர்த்து. முதல் வரிசைக் கதிரையில் ஆரம்பித்த என் கிரிக்கெட் (பார்வையாளர்) பயணம் காலப்போக்கில் மேஜை பால்கனிக்குப் பின்னே நின்று எட்டிப் பார்க்கும் நிலமைக்குத் தள்ளப்பட்டது. நான் வளர்ந்துவிட்டேனாம்.

நானும் ரஜியும் தென்னை மட்டை வைத்து எப்போதும், அண்ணா பேட் திருடி சிலசமயமும் கிரிக்கெட் விளையாடுவோம். கிச்சன் பக்கமா அடிச்சா ஃபோர். வேலில, கிணத்துப் பக்க மதில்ல பட்டா சிக்ஸர். அப்புறம் அவன் ஆறாம் வகுப்பு போனதும் ஸ்கூல் கிரவுண்ட் போயிடுவான். எனக்கு பர்மிஷன் கிடைக்கல. அத்தோடு ஒரு கிரிக்கெட் வீராங்கனையின் திறமை உலகுக்குத் தெரியாமல் போய்விட்டது.

அப்பா கிரிக்கெட் விளையாடி நான் பார்த்ததில்லை. அம்பயராய் இருப்பார். அவர் ஒரு வாலிபால் ப்ளேயர். அவர் உயரம் அதுக்கு ஒரு பிளஸ். இப்போதும் நேரம் கிடைத்தால் கனடாவில் விளையாடுவார்.

அண்ணா, கண்ஸ் ஸ்கூல் டீமில் இருந்தார்கள். கண்ஸ் பேட்டிங்கில் அசத்துவார். அவர் பேட்டிங் பார்க்கவே பக்கத்து ஸ்கூல் பொண்ணுங்கல்லாம் அலை மோதுவாங்க. என் காதில் இப்போதும் புகை.

இடப் பெயர்வுகளால் கிரிக்கெட் போகப் போகக் குறைந்து போய் ஃபுட்பால், வாலிபால் அதிகமாகியது. அண்ணா வேறு ஊரில் இருந்ததால் ரஜி, கண்ஸ், இரண்டு மச்சினர்கள் ஒரே டீமில் விளையாடுவார்கள்.

என்னதான் போரும் சாவுமாய் நாட்கள் கழிந்தாலும் கிரிக்கெட், ஃபுட்பால், வாலிபால் டோர்னமெண்ட்ஸ் நடப்பதும், கண்ஸ் பக்கத்து ஊர்க்காரருக்கு கும்மிவிட்டு வருவதும் ஒரு பக்கம் நடந்து கொண்டுதான் இருந்தது. மாவீரர் பெயரில் போட்டிகள் நடந்தால் மட்டும் சண்டை இழுக்கமாட்டார்கள்.

பொருளாதாரக் கட்டுப்பாடு விதித்து இராணுவம் எங்களை முடக்கிய காலங்களில் கூடசெய்திக்கு அடுத்து கிரிக்கெட் கமண்ட்ரி கேட்கத் தவறியதில்லை. உயிரே இல்லாத பாட்டரி. காதோடு ரேடியோவை அழுத்தி வைத்து ஸ்கோர் கேட்டுச் சொல்வார் அப்பா.

இங்கு வந்த பின் கிரிக்கெட் என்ற பேச்சுக்கே இடமில்லை. ஆனால் ஃபுட்பால், வாலிபால் தொடர்கிறது. சிக்ஸரும், ஃபோரும் மட்டும் தெரிந்த நான் கிரிக்கெட் என்றால் என்னவென்றே தெரியாத நார்வேஜிய அப்பாவி மக்களுக்கு கிளாஸ் எடுத்துக் கொண்டிருக்கிறேன். கலீக்ஸில் ஒரு வங்களாதேசத்தவரும், ஒரு தென் ஆபிரிக்கரும் இருப்பதால் ஸ்கோரும் வேலையுமாய் டீம் லீடரை கடுப்பேற்றிக் கொண்டிருந்தோம். போன வருடம் முதல் முதல் தமிழர்கள் ஒரு கிரிக்கட் டோர்னமெண்ட் வைத்தார்கள். கண்ஸ் கிளப்பும் கலந்துகொண்ட வகையில் நான் பார்க்கப் போயிருந்தேன். வந்திருந்தவர்களில் இங்கே பிறந்த பல தமிழ்ப் பிள்ளைகளுக்கு விளையாட்டுப் புரியவில்லை. சிலர் கூகிளாண்டவர் துணையோடு வந்திருந்தனர்.

வெகு காலம் பார்க்காததாலோ என்னவோ அன்று அவளவு சந்தோஷமாக இருந்தது. கண்ஸ் டீம் பிராக்டிசே இல்லாமல் களமிறங்கி போட்டிகளிலேயே பிராக்டிஸ் செய்து காலிறுதிவரை வந்தனர். அண்ணனாய் இருந்தபோது அவர் விளையாடியதை பார்த்தவளுக்கு கண்ணனாய் ஆனதும் பார்ப்பதென்றால் கேட்க வேண்டுமா. விசில் தெரியாததால் அதை விட்டு கைதட்டல், கூக்குரல், ஓ போடுதல் என நான் போட்ட அலப்பறையில் எல்லோரும் கொஞ்சம் அரண்டுதான் போனார்கள். ‘என்னப்பா.. நீங்க இவ்ளோ சத்தம் போடுவிங்கன்னு இவ்ளோ நாள் எங்களுக்குத் தெரியாம போச்சேன்னு’ தெரிந்த அக்கா ஒருவர் மலைப்போடு சொல்லும் அளவுக்கு சவுண்ட்.

அதற்குப் பிறகு இந்த வருஷம்தான் முதல் தடவையாக வீட்டில் கிரிக்கெட் அதுவும் உலகக் கோப்பை மேச்கள் பார்த்தோம். கண்ஸ்க்குப் பிடித்த Man U மேச்கள் அவரோடு சேர்ந்து பார்ப்பேன். ஆனால் இந்த உலகக் கிண்ணப் போட்டிகள் முழுவதும் இருவரும் சேர்ந்து பார்த்தோம். இருவரும் ஒன்றில் உறுதியாக இருந்தோம். இலங்கை தவிர எந்த நாடும் ஜெயிக்கட்டும்.

சது முதற்கொண்டு எல்லோருக்கும் இந்த எங்கள் உணர்வு ஆச்சரியம். நாட்டுப்பற்று இல்லையா என்று இமை தூக்கினர். இது எங்களைப் போல் நாடிழந்த, உறவுகள் இழந்த பலரின் ஆதங்கம். இலங்கை அணி பாவமே. அதுவும் 48 ரன்ஸில் சங்கக்கார அவுட்டானபோது ‘பாவமா இருக்குப்பா, ஐம்பதாவது அடிச்சிருக்கலாம்’ என்று நான் அங்கலாய்க்க, ‘ம்ம்.. என்னதான் இருந்தாலும் அவன் நல்ல ப்ளேயர்டி’ என்று கண்ஸ் ஆமோதித்தார். ஆனால் இந்தியா ஃபைனல்ஸ் வந்ததில் எங்களுக்கு எக்கச்ச்ச்ச்சக்க சந்தோஷம். கடைசி நொடி வரை இந்தியா வெல்லவென்று பிரார்த்தனையோடு பார்த்தேன். அதுவும் சிரித்துக் கொண்டு இருந்த மஹிந்தவின் முகம் பார்த்ததில் இருந்து இந்தியா வெல்ல வேண்டுமென்று வெறியே வந்துவிட்டது.

இடையில் இன்று Man U மேச் இருந்ததால் கண்ஸ் எஸ்ஸாக சது வந்து எனக்குக் கம்பனி குடுத்தார். எனக்குத் தெரிந்ததைச் சொல்லிப் புரியவைத்தேன். மலிங்கா தலை மட்டும் அல்ல, பந்து வீசும் விதமும் பயங்கரமாக இருக்கும் என்பதால் ‘இவன் கொஞ்சம் ஆபத்தானவன்’ என்றேன். உடனேயே ‘ஏன்மா அவர் கொலை செய்வாரா’ என்று சது கேட்டார். சிங்களவர் என்றால் கொலைகாரர் என்ற எண்ணத்தை பிள்ளை மனதில் இருந்து மாற்ற வேண்டும். உடனேயே அவருக்குப் புரியும்படியாய் மீண்டும் நான் ஏன் இலங்கை அணியை எதிர்க்கிறேன் என்று சொன்னேன். அத்தோடு இந்தியா அவருக்கும் பிடிக்கும் என்பதால் அவரும் இந்திய அணிக்கு ஆதரவை அள்ளி வழங்கினார்.

the cup of joy இந்திய வீரர்களுக்கு எனது மரியாதை கலந்த வாழ்த்துகள். கடைசியில் ஆனந்தக் கண்ணீரோடு எழுந்து நின்று என்னை அறியாமல் கைதட்ட ஆரம்பித்துவிட்டேன். நன்றி இந்திய வீரர்களே.

 

 

இந்த மேச்சுகளுக்கிடையே Sky sports காரர்கள் போட்ட விளம்பரங்களில் தமிழ்ப்பட ஹீரோ ரேஞ்சுக்கு அடாவடியாய் ரசிக்க வைத்தது இந்த NISSAN QASHQAI விளம்பரம். பாருங்கள்.

 

17 நல்லவங்க படிச்சாங்களாம்:

ஊரான் said...

துன்பக் கடலில் துவளும் இந்தியா!
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தோற்றிருந்தால்....
http://hooraan.blogspot.com/2011/04/blog-post_02.html

மாணவன் said...

//இந்திய வீரர்களுக்கு எனது மரியாதை கலந்த வாழ்த்துகள். கடைசியில் ஆனந்தக் கண்ணீரோடு எழுந்து நின்று என்னை அறியாமல் கைதட்ட ஆரம்பித்துவிட்டேன். நன்றி இந்திய வீரர்களே.//

இந்த கொண்டாட்டங்களை வெறும் வார்த்தைகளால் வருணிக்க முடியாது. மிகவும் சந்தோஷமான நெகிழ்வான தருணங்கள் அது...
பகிர்வுக்கு நன்றிங்க சகோ :))

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள்.

நல்ல வெளிப்பாடு

எல் கே said...

வாழ்த்துக்கள் சுசி. உணர்சிகரமானத் தருணம் அது

R. Gopi said...

நல்லா சுத்துனீங்க கொசுவத்தி (பிளாஷ்பேக்).

கார் விளம்பரம் சூப்பர். ஓட்டுறது ரஜினியோ! கடைசியா parallel parking பண்றதுதான் டாப்பு!

Shanmugam Rajamanickam said...

எல்லோறும் கொண்டாடுவோம், இந்தியா ஜெயிச்சதை....

ராமலக்ஷ்மி said...

நினைவலைகளும் நேற்றைய குதூகலமுமான பகிர்வு அருமை சுசி:)! வாழ்த்துவோம் இந்திய அணியை.

கோபிநாத் said...

\\இடையில் இன்று Man U மேச் இருந்ததால் \\

MAN U மேச் அப்படின்னா? விளக்கம் பீலிஸ் ! ;)

எல் கே said...

@கோபி மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து மேட்ச்

சுசி said...

முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஊரான்.

@@

சரியா சொன்னிங்க மாணவன். வார்த்தைக்கு அப்பாற்பட்டு அனுபவிச்ச கணங்கள் அவை.

@@

நன்றி ஜமால்.

சுசி said...

நன்றி கார்த்திக்.

@@

அதே தான் கோபி. பார்க்கிங் முடிவில படக்னு ஒரு பிரேக் போட்டு என்னா ஸ்டைலா நிக்குது பாத்திங்களா..

@@

முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சண்முகம்.

சுசி said...

வாழ்த்திட்டே இருப்போம் அக்கா.

@@

கார்த்திக் விளக்கி இருக்காரு கோப்ஸ். மாம்சுக்கு பிடிச்ச ஃபுட்பால் டீம் மேச் நேத்திக்குன்னு போட்டாங்க. அதனாலை இடையில ஒரு 90 மினிட்ஸ் அதை பார்த்துட்டு இருந்தார்.

@@

மீண்டும் நன்றி கார்த்திக்.

logu.. said...

\\அத்தோடு ஒரு கிரிக்கெட் வீராங்கனையின் திறமை உலகுக்குத் தெரியாமல் போய்விட்டது.\\


அடடா..
ப்ச்..

logu.. said...

\\இந்திய வீரர்களுக்கு எனது மரியாதை கலந்த வாழ்த்துகள். \\

ஹி..ஹி.. நாங்களும்..

பா.ராஜாராம் said...

உணர்வுப் பூர்வமாக இருந்தது சுசி. the best is, உங்க ஃப்ளோ!

சுசி said...

லோகு :))))))

@@

ரொம்ப நன்றி பாரா சார்.

மாலதி said...

எல்லோறும் கொண்டாடுவோம், இந்தியா ஜெயிச்சதை....