Pages

  • RSS

13 March, 2011

சுனாமியும் உண்டா??

ஜப்பானில் சுனாமி, நிலநடுக்கத்தில் உயிரை பறிகொடுத்த அத்தனை பேருக்கும் எல்லோரும் செலுத்திய அஞ்சலிகளோடு என்னதையும் சேர்த்துக் கொள்கிறேன். காட்சிகள் தந்த மலைப்பும், வேதனையும் போக நாள் பல ஆகும்.

japan-tsunami

ஆஃபீஸில் இருந்து அடிக்கடி நிலமையை அறிந்து கொண்டும், கடவுளை வேண்டிக் கொண்டும் இருந்தபோது இன்னும் கொஞ்சம் காலம் போனதும் மழையை, ஸ்னோவைப் போல சுனாமியும் பூகம்பமும் கூட எமக்கு ஆச்சரியம் தராத ஒன்றாய் போய்விடும் என்று சொன்னேன். கேட்கவே பயமாக இருந்தாலும் நாம் இயற்கையை அழித்துக் கொண்டிருக்கும் வேகத்தில் இப்படி ஆனாலும் ஆகலாம் என்று கலீக்ஸ் ஆமோதித்தார்கள். ஜப்பான்காரர்கள் எமக்கு செய்த கொடுமைக்குத்தான் இப்படி ஆகி இருக்கு அங்கே என்று ஒரு நண்பர் சொன்னார். எனக்கும் எங்கேயோ மெலிதாக அந்த எண்ணம் ஒரே ஒரு தரம் தலை தூக்கி இருந்தது. அரசாங்கம் செய்யும் அட்டூழியத்துக்கு அப்பாவி மக்களை ஏன் பலி ஆக்க வேண்டும்?? கடவுளிடம் என் நினைப்புக்கு மானசீகமாக மன்னிப்புக் கேட்டுக் கொண்டேன்.

இரண்டு வாரம் முன்னர் அம்மாவின் பிறந்தநாளுக்கு சின்னதாக ஒரு பார்ட்டி வைத்தோம். அப்பா உடன் இல்லாத கவலையை ஒரு நண்பர் கிளறிவிட சின்னதாய் ஒரு அழுகையோடு சந்தோஷமாகவே கேக் கட் செய்தார் அம்மா. சாப்பாடு முடிந்ததும் சுனாமியும் உண்டா என்று தங்கா அக்கா கேட்டார். என்னதான் சிரித்தாலும் பிள்ளையாரே என்று மனதுக்குள் வேண்டிக்கொண்டேன்.

2004 அக்டோபரில் இலங்கைக்குப் போய் வந்தோம். டிசம்பரில் சுனாமி. காலையில் குண்டு வெடித்தது போல் ஏதோ சத்தம் கேட்டு எல்லோரும் வெளியே வந்து பார்த்தார்களாம். வீட்டில் அம்மா, அப்பா, ரஜி, சின்னண்ணி, இரண்டு மாதக் குழந்தையாக சாத்வி, அத்தை பையன் ஒருவன் என எல்லோரும் இருந்தார்கள். ஓரிரு நிமிடங்களில் ‘ஓடுங்கோ தண்ணி வருது, தண்ணி வருது’ என்று ஓலமிட்டபடி தெருவால் ஆட்கள் ஓடுவதும், இரைச்சலாய் ஒரு சத்தம் கேட்பதுமாய் என்னவென்று தெரியாமல் இவர்களும் கூட்டத்தோடு ஓடி இருக்கிறார்கள். ஊரின் மத்தியில் எங்கள் வீடு. வீட்டிலிருந்து அரை கி.மீ தூரத்தில் கடல். ஆனாலும் எங்கிருந்து தண்ணீர், என்ன ஏது என அறியாமல் பயமும், பதட்டமுமாய் ஓடியவர்களை பத்தடி போவதற்குள் விரட்டிப் பிடித்தது வெள்ளம்.

எங்கள் வீடு உயரமாகக் கட்டப்பட்டிருக்கிறது. பக்கத்தில் இரண்டு மாடிக் கட்டடத்தில் ஒரு கடை. அதன் அருகில் உயரமான சந்தைக் கட்டடங்கள், கடைகள். என்னவென்று தெரியாததால் தூர ஓடினால் தப்பிக்கலாம் என்று நினைத்து வயற் பிரதேசம் நோக்கி ஓடி இருக்கிறார்கள்.  அங்கே  அவர்களுக்கு முன்னராகவே வெள்ளம் நிறைந்து நீர்மட்டம் உயர அங்கே இருந்த ஒரு பழைய வீட்டின் மேல் ஏறி இருக்கிறார்கள். கடைசியாக கையில் குழந்தையோடு ரஜி ஏற முயன்ற சமயம் தண்ணீரின் வேகமும் கூட, ஒரு குட்டிப் பனை மரத்தின் கருக்கை எட்டிப் பிடித்துக்கொண்டு அவன் போராடிய கணங்கள். கை கிழிந்து இரத்தம் வழிய கைக்குழந்தையையாவது காப்பற்ற வேண்டுமே என்று அவன் பட்டபாடு இன்று சொன்ன போதும் அம்மாவின் கண்களில் தெரிந்தது.

பழைய கட்டடம் பத்துப் பதினைந்து பேர் பாரமும், தண்ணீரின் வேகமும் தாங்காது இடிந்து விழ ஆரம்பித்ததும்தான் மீண்டும் கடைத்தெருப் பக்கம் போகலாம் என்று நினைத்து இன்னொரு பக்கத்தால் கீழே இறங்கி நீரோட்டத்துக்கு எதிராக ஒருவர் கை ஒருவர் கோர்த்தபடி போயிருக்கிறார்கள். அம்மா ஒரு கட்டத்தில் முடியாது போகவே அப்பாவை கெஞ்சினாராம் தன்னை விட்டு அவர்கள் உயிரைக் காத்துக் கொள்ளச் சொல்லி. சின்னண்ணியின் தம்பி விஷயம் கேட்டு பக்கத்து ஊரிலிருந்து வந்தவர் கயிறொன்றை மரத்தில் கட்டித் தூக்கிப் போட அதன் உதவியோடு எல்லோருமாக உயரமான ஒரு கடையின் மொட்டை மாடியில் ஏறி நின்றிருக்கிறார்கள். இவர்கள் போராட்டத்தோடு வந்து கொண்டிருக்கும்போதே முடியாமல் போய் தண்ணீரோடு அடித்துச் செல்லப்பட்டவர்கள் பலர். மூன்றாவது அலையின் வேகமும் குறைந்த பின்தான் கீழே இறங்கி வந்திருக்கிறார்கள். உயிர்ப் பயம், உடை கிழிந்து எல்லோர் முன்னும் இருந்த நிலை என எல்லாம் தந்த அதிர்வு போக அம்மாவுக்கு நெடுநாட்கள் ஆயிற்று.

அண்ணா அப்போது பக்கத்து ஊரில் இருந்தார். அம்மா வீட்டுக்கு வந்து இது நடப்பதற்கு சற்று முன்னர்தான் கிளம்பி பைக்கில் தன் வீடு போய்க் கொண்டிருந்தவர் விஷயம் அறிந்து திரும்பி வந்திருக்கிறார். அம்மா வீட்டுப் பக்கம் போகமுடியாது என்று தெரிந்ததும் தன்னால் இயன்ற அளவு வெள்ளத்தில் போராடிக் கொண்டிருந்த மக்களை காப்பாற்றி இருக்கிறார். கால் முழுவதும் பனை மட்டைகளும், இன்னும் தண்ணீரோடு வந்த என்னவெல்லாமோ உடல் முழுவதும் கிழித்துப் போட்ட காயங்கள். அண்ணா போலவே இன்னும் நிறைய இளைஞர்களும், ஆண்களும் எத்தனையோ பேரைக் காப்பாற்றினாலும் இழப்பு அதிகம்தான். ரஜியும், அண்ணியின் தம்பியும் கூட எல்லோரையும் பாதுகாப்பாக விட்டுவிட்டு மற்றவர்கள் உதவிக்குப் போயிருக்கிறார்கள். போனதில் கடைசி மாமா குடும்பத்தை மீட்க முடிந்தது. அண்ணா தண்ணீருக்குள் எட்டிப் பிடித்த சிறுவர்களும், பெரியவர்களும் மீண்டும் தண்ணீரால் இழுத்துச் செல்லப்பட்டபோது எப்படி இருந்திருக்கும் அண்ணாவுக்கு. 

எங்கள் வீட்டுக்குள் அரைச் சுவர் உயரத்துக்கு நீர்மட்டம் வந்து போயிருக்கிறது. அழிவென்று எதுவும் இல்லாவிட்டாலும் எங்களின் பழைய ஃபோட்டோ ஆல்பங்கள், ஆவணங்கள் உட்பட எல்லாம் நீரோடு போய்விட்டன. உயிர் இழப்பின் முன் இதெல்லாம் ஒன்றும் இல்லை என்றாலும் கவலை இருக்கத்தான் செய்கிறது. மாமியார் வீடு பக்கத்து ஊரில். கடலில் இருந்து மூன்று மைல் உள்ளே இருந்ததோடு இயற்கையாகவே அரண் போல சேர்ந்திருந்த பெரிய மண் திட்டு ஊருக்குள் வெள்ளம் அதிகளவில் வராமல் காத்துக் கொண்டது.

அப்போதுதான் போய் பார்த்து வந்த ஊரவர்கள், உறவினர்கள், நண்பர்கள் எத்தனை பேரை இழந்துவிடப் போகிறோம் என்று தெரியாத நாங்கள், அந்த வருடம் கிறிஸ்மஸ் ஒன்றுகூடல் எங்கள் வீட்டில் என்பதால் கொண்டாட்டமாக இருந்தோம். அன்று நான் செய்த டெசர்ட் ஃப்ரூட் சலட். அளவு சொன்ன நண்பி ’என்னங்க இவ்வ்வ்வ்வ்வ்ளோ வந்திடிச்சு’ன்னு ஒரு பெரிய்ய்ய பாத்திரம் நிறைந்திருந்த சாலட்டை பார்த்து மிரண்டு போய் நான் கேட்டபோது தான் சொன்னார் ’அய்யோ.. அது 100 பேருக்கான அளவுங்க’ என்று. தங்கா அக்கா, அவரின் அக்கா, நாங்கள் என மூன்று குடும்பங்கள்தான் என்றாலும் பேச்சும், கும்மாளம் அவ்வப்போது சாலட்டுமாய் முழுவதும் காலி பண்ணிவிட்டோம். 26 பகல் ஒரு நண்பரின் ஃபோனில் கண் விழித்து விஷயம் அறிந்து.. அப்பா.. அன்று பட்ட வேதனை. அண்ணா எல்லாம் முடிந்து மூன்று ஊர் தள்ளி வந்து இயங்கிக் கொண்டிருந்த ஒரே கமியூனிகேஷன் செண்டரில் வரிசையில் காத்து நின்று கால் செய்த போதுதான் உயிர் வந்தது.

அன்றிலிருந்து நண்பர்கள் வீட்டு விசேஷங்களுக்குச் செய்து கொடுத்தாலும் எங்கள் வீட்டில் எதுவும் விருந்தென்றால் நான் ஃப்ரூட் சாலட் செய்வதே இல்லை. எதுவும் கடந்து போகும் என்பது போல் நாங்கள் ஃப்ரூட் சாலட்டுக்கு வைத்த பெயர்தான் சுனாமி. ஊரில் இருந்த சமயம் தினமும் மாலையில் ரஜி சகிதம் நண்பர்கள் புடைசூழ, அம்மா செய்து கொடுக்கும் சைட் டிஷ்ஷோடு கண்ஸ் கடற்கரை சென்றுவிடுவார். பாட்டில் எல்லாம் காலி செய்து, சிரிதுப் பேசி(?) அப்படியே என்னையும் பிக்கப் பண்ணிக்கொண்டு ஒரு ஒன்பது மணி அளவில் மாமியார் வீட்டுக்குப் போவோம். சது என்னோடு வருவார். லச்சு இந்த யாகசாந்தியில் கலந்து கொள்ளும் வழக்கம் இல்லாத மச்சினரோடு முன்னாடியே போய்விடுவார். ’அண்ணா நீங்க கடல்ல போய் போட்ட ஆட்டம் தாங்க முடியாம தான் சுனாமி வந்திருக்கு’ என்று அக்காச்சி இப்போதும் சொல்வாள்.

என்னதான் இயற்கையை வெல்ல முடியாது என்றாலும் அழிப்பதையாவது மனிதன் நிறுத்தும்வரை சுனாமிகளும், பூகம்பங்களும் தொடரும். இனிமேல் ஜப்பானியர்களின் அணுக்கதிர்களின் பாதிப்பு என்னென்ன கொடுமைகளை கொண்டுவரப் போகிறதோ என்று இப்போதே மனம் பதைக்கிறது. பேரப் பிள்ளைகள், பூட்டப் பிள்ளைகளோடு வாழாவிட்டாலும், எம் பிள்ளைகளோடாவது வாழ்ந்து விட்டு சாக பிள்ளையாரப்பா வழி விடட்டும்.

16 நல்லவங்க படிச்சாங்களாம்:

எல் கே said...

அழிப்பதை இனியாவது நிறுத்திக் கொள்ளவேண்டும்

vinu said...

me presenttuuuuuuuuuu

vinu said...

varuththangalllllllll.......

பா.ராஜாராம் said...

இன்னதென்று சொல்ல இயலாத கலவையான மனநிலை, இதை வாசித்ததும் சுசி. மிக நெகிழ்வான பதிவு.

'பரிவை' சே.குமார் said...

Padikkum pothu nenjam kanakkirathu akka.

கோபிநாத் said...

மறக்கமுடியாத நாள் அது...ம்ம்ம்... உயிர்ப் பயம்ன்னா என்னென்னு புரிஞ்ச நாள்!

இதுவும், எதுவும் கடந்து போகும் !

r.v.saravanan said...

நெகிழ்வான பதிவு.

அமுதா கிருஷ்ணா said...

ஜப்பான்காரர்கள் எமக்கு செய்த கொடுமைக்குத்தான் இப்படி ஆகி இருக்கு அங்கே என்று ஒரு நண்பர் சொன்னார்//

புரியலை சுசி..

Pranavam Ravikumar said...

பதிவு அருமை!

Anonymous said...

சுனாமியில் அகப்பட்டுக் கொண்டவர்களின் கதைகள் நானும் கேள்விப் பட்டிருக்கிறேன் சுசி!
இதில் வலி இன்னும் அதிகமாக!

ராமலக்ஷ்மி said...

வேதனையான பகிர்வு சுசி.

//அன்றிலிருந்து நண்பர்கள் வீட்டு விசேஷங்களுக்குச் செய்து கொடுத்தாலும் எங்கள் வீட்டில் எதுவும் விருந்தென்றால் நான் ஃப்ரூட் சாலட் செய்வதே இல்லை.//

நெகிழ்வு.

//என்னதான் இயற்கையை வெல்ல முடியாது என்றாலும் அழிப்பதையாவது மனிதன் நிறுத்தும்வரை சுனாமிகளும், பூகம்பங்களும் தொடரும்.//

சரியாய் சொல்லியிருக்கீங்க சுசி. ஜப்பான் மக்களுக்காக பிரார்த்திப்போம்.

சுசி said...

கண்டிப்பா கார்த்திக்.

@@

வினு :)

@@

பாரா நன்றிங்க.

சுசி said...

குமார் :)

@@

போயே ஆகணும் கோப்ஸ்..

@@

நன்றி சரவணன்.

சுசி said...

அமுதாக்கா.. இலங்கையில கடைசிக் கட்ட யுத்தம் நடந்த சமயம்.. எம்மின அழிவுக்கு ஜப்பான் மறைமுகமா நிறைய உதவி செய்ததுக்கா.. அந்த வலி தந்த ஆற்றாமையின் வார்த்தை வெளிப்பாடு தான் அந்த நண்பர் சொன்னதும்.. நான் நினைச்சதும் :(

@@

நன்றி ரவிகுமார்.

@@

நம் குடும்பம் என்று வரும்போது ஜாஸ்தி வலிக்கும் பாலாஜி.

சுசி said...

கண்டிப்பா பிரார்த்திப்போம் அக்கா.

Ahamed irshad said...

நெகிழ்வான பதிவு.