Pages

  • RSS

27 March, 2011

வெற்று வார்த்தைகள்..

writing அறியாமல் வந்தது காதல்

உன்னைப் பற்றி

உன் மேல்

 

 

--

வலைகள் வேறு

ஆண் வேடர்கள்

பெண் மான்கள்

--

 

glemt உண்மைதான்

உன் போல் நான் இல்லை

இதில் கூட

 

 

 

--

கிணற்று நீர்

வெள்ளம் அள்ளாது

வற்றிப் போகும்

 

--

 

jeg savner deg உன் பெயர்

பேச்சில் அனிச்சையாய் வருகிறது

உன்னவள் பெயரும்

23 March, 2011

வேண்டும்போது வராத மழை..

ஊரில் எல்லாத் தொல்லையும் ஓய்ந்தாலும் மழை விட்டபாடாய் இல்லை. ஊரே வெள்ளக்காடாய். கடல் மட்டமும் உயர்ந்து உள்ளதால் ஆற்று நீர் கடலுக்குள் கலக்க முடியாமல் ஊருக்குள்ளேயே நிறைந்துவிட்டது. கொடும் குளிர். ரஜி வீடு கொஞ்சம் உயரமான இடத்தில் இருப்பதால் வீட்டுக்குள் தண்ணீர் வரவில்லை. அண்ணா முன் பக்கத்துக்கு சுற்று மதில் கட்டிவிட்டதால் வயற் பிரதேசமான இடத்தில் இருக்கும் அவர் வீட்டுக்குள் தண்ணீர் குறைவாகவே புகுந்துள்ளது. பலர் பாடசாலைகளில் தஞ்சம். சொந்த நாடு மட்டுமல்ல, சொந்த வீடு கூட தமிழனுக்கு..

DSC05448 DSC05449

அண்ணா ஐந்து மாடுகள் வாங்கினார். சீமைப்பசுக்கள். எங்கள் ஊரில் கேப்பை மாடு என்பார்கள். அத்தனை அன்பாகப் பார்த்துக்கொண்டார்கள். போன வாரம் அண்ணா ‘வெள்ளை மாடு படுத்திட்டுது அப்பா’ என்று ஸ்கைப்பில் சொன்னபோது கூட இருந்து கேட்டுக்கொண்டு இருந்த அம்மு கேட்டார் ‘மாடு படுத்தா தப்பாம்மா.. தூங்கிறதுன்னா அது படுத்து தானே ஆகணும்’ கவலை மீறி அண்ணா சிரித்தார். மாடுகள் சீக்காகிப் போவதை அப்படிச் சொல்வது எங்கள் வழக்கம் என்று அவளுக்குப் புரிய வைத்தேன். இரண்டு நாள் முன்னர் எந்த வைத்தியமும் சேராமல் செத்துவிட்டது. டவுன் கவுன்சிலில் சொல்லி, ட்ராக்டரில் வந்து, புதைந்து, மதில் சுவரையும் சற்றே இடித்து, ஏற்றிக் கொண்டு போனார்களாம். இப்போது அடுத்த மாடுகளும் வரிசையாய் நோயில்..

பொங்கல் சமயமே பெருவெள்ளம். அண்ணா, ரஜி, மச்சினர், மாமியார் உட்பட பலர் வீட்டுக்குள்ளேயே பொங்கி வராத சூரியனுக்கு சம்பிரதாயமாகப் படைத்தார்கள். வெடி கூட வீட்டுக்குள்தான். அதிலும் எங்களுக்காக, ஒற்றை மத்தாப்பு கூட சுட்டுப் போடாத துர்ப்பாக்கியசாலிகளுக்காக முதல் நாள் இரவே சக்கரவாணம் வெடித்துக் காட்டினார் அண்ணா. எத்தனையோ வருடங்களின் பின் பட்டாசுச் சத்தத்தோடு பொங்கல். இந்த மழை மட்டும் அன்று நின்றிருந்தால்..

DSC05400 DSC05422

பயிர்கள் எல்லாம் அழிந்துபோய், அழுகிப்போய், குளம்போல் தோன்றும் வயல்கள், எப்போதும் உடைப்பெடுக்கும் என மிரட்டும் குளங்கள், பாடசாலைகளுக்கு மூடுவிழா. பள்ளிப் பருவத்தில் அவ்வளவு ஆனந்தம் தந்த மழைக்கால விடுமுறை. இன்னமும் ஊரோடு அதே பள்ளிப் பிள்ளையாய் இருந்திருந்தால்..

90ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து கிராமம் ஒன்றில் இருந்தோம். வீட்டின் பின் பக்கம் குளம். பெரிய குளம். ஊரில் எப்போதாவது குளங்கள் வான் பாய்வதை வேடிக்கை பார்த்தபோது இருந்த சந்தோஷம் அப்போது இருக்கவில்லை. சில இடங்களில் உடைந்துவிடத் தயாராய் இருந்த குளக்கட்டு ரொம்பவே மிரட்டியது. அரிசி மூட்டைகளை உயரமாக அடுக்கி வைத்து அதன் மேல் ஏறி விழிப்போடு கழித்த இரவு. வீட்டுப் படி மேவி நில்லாது ஓடிய வெள்ளத்தோடு அடித்துச் செல்லப்படும் பாம்புகள், தேள்கள். நீர் வடிந்து போக வழியில்லாத களிமண் பூமி. இருந்த அரிசியையும், ஈர விறகையும் வைத்து பசி போக்கியதோடு இரவில் குளிரும் விரட்ட வேண்டிய கட்டாயத்தில் இருந்த அகதிகளிடம் குளிர்ச்சட்டை ஏது. அம்மம்மாவின் காட்டன் சேலையால் சுற்றிக் கொண்டு சுருண்டு போய் இருப்போம்.

அப்போது எங்களிடம் மாமாவின் மாடுகள் இரண்டும், முன் வீட்டுப் பாட்டி தந்த மாடு ஒன்றும் இருந்தது. மழையில் அவை பட்ட அவஸ்தை. அந்த மழையிலும் விறகு தறித்து வந்து இரவில் இரண்டு விறகை அவற்றுக்கும் எரித்துவிட்டுக் கூதல் விரட்டுவான் ரஜி. மாடு மீட்கப் போய் புதைகுழியில் மாளப் பார்த்த அக்காச்சி நேற்று ஸ்கைப்பில் சொன்னாள் ’உடம்பெல்லாம் மூழ்க ஆரம்பிச்சு கடைசில கண் வரைக்கும் சேறு மூடினப்போ சிவப்பியோட கண்ல தெரிஞ்சுதே ஒரு மரண பயம்.. என் வாழ்க்கேல மறக்கமாட்டேன்பா’

hund 94இல் இருந்த வீட்டின் பின்பக்க ஒழுங்கை மழை பெய்யும் நாட்களில் ஆறு. இல்லாத நாட்களில் மறுபடி ஒழுங்கை. எங்கிருந்துதான் அவளவு வெள்ளம் வருமோ. மாரிகாலம், தொடர் மழை தவிர மீதி நாளில் வந்த வேகத்திலேயே வடிந்து விடும் மணல் பூமி. அப்போது நாங்கள் வளர்த்த செல்லம் லஸி. Alsatian நாய். ஆனந்தமாய் குளியல் போடும். வெள்ளத்தோடு அடித்துச் செல்லப்படும் தடிகளையும், நாங்கள் தூக்கிப் போடும் பந்துகளையும் நீந்தியபடியே தேடி எடுத்து வரும். உபரியாய் தேங்காய்களும் கவ்வி வரும். நாங்களும் சேர்ந்து நனைந்தபடி வெள்ளத்தில் விளையாடிய நாட்கள் இன்னமும் ஏங்க வைப்பவை.

சின்ன மச்சினர் புகுந்த ஊரில் அவளவு சேறாக இருக்கும். நிலத்தில் கால் வைத்தால் சர்ர்ர்ர். ஸ்கேட்டிங் தான். நடை கிடையாது. அப்பாவின் கிராமத்துக்கு மழைக்காலத்தில் போவதென்றால் எங்களுக்கு அவளவு கொண்டாட்டம். காடும், மழையும், புதுவிதமான பூச்சிகளின் ஒலியும், மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சமும் இரவில் ஒரு பயம் கலந்த தூக்கத்தைத் தரும். போர்க் காரணத்தால் தார் ரோடே இல்லாத காலத்தில் மண் ரோடுகளும், வண்டிகளும், நாங்களும் போக்குவரத்தில் பட்ட அவஸ்தைகள்.. அப்பப்பா..

வேண்டுமென்றே மறந்த குடை, மழை வெள்ளத்தில் ஆட்டம், பல் கிட்டும் குளிர்,  போர்வைக்குள் ஒளிந்தபடி கால் மடித்து அமர்ந்து, அம்மாவின் திட்டோடு ஈரத் தலை உலர, கை சுடும் தேநீர் இதமாய் குளிர் விரட்ட.. ஹூம்.. இங்கேயும் எல்லாம் உண்டு. என்ன இருந்து அனுபவிக்க நேரம்தான் இல்லை. அப்படியே இருந்தாலும் இங்கே பெய்யும் மழை மட்டும் ஏன் தான் அநியாயத்துக்குக் குளிர்ர்ர்ர்ந்து தொலைக்கிறதோ தெரியவில்லை. மழைக் காதலனான என் நண்பனுக்கு அடிக்கடி சொல்வேன் ‘இங்க வந்து இந்த மழையில நனைஞ்சிட்டு அப்புறமும் சின்ன சின்ன மழைத் துளிகள்னு பாடு.. அப்போ ஒத்துக்கறேன் உன் மழைக் காதலை’ என்று.

21 March, 2011

கலந்துகட்டிய தமிழ்.

என் நண்பி வந்திருக்கிறார். ஒரு வாரம் எங்களோடு இருப்பார். அந்த ஒரு வாரத்திலும் இன்னும் இரண்டே நாட்களே மீதம் இருக்கிறது. ஏர்போர்ட்டில் இருந்து வீட்டுக்கு உள்ளே வந்ததுமே படி இறங்கி வந்த அம்மாவின் கால் தொட்டு அவர் ஆசீர்வாதம் வாங்கியபோது கலங்கிய என் கண்கள் அடிக்கடி கலங்கிப் போகும் என்று அப்போது நான் நினைக்கவில்லை. அவர் அன்பால் அவ்வப்போது கண்கலங்குவதைத் தவிர்க்கவே முடியவில்லை. ‘நான் காஃபி சாப்ட போறேன். யாருக்கெல்லாம் வேணும்’ என்று உரிமையோடு வீட்டுப் பெண்ணாக ஆகிவிட்டார். எங்கள் அன்பில் அவருக்கு அந்நிய உணர்வே தோன்றவில்லையாம். அது உண்மை என்பதை அவரின் சிரித்த முகமும், பேச்சும் உறுதிப்படுத்துகிறது. பிள்ளைகளை தட்டித் தூங்க வைக்கும் அளவுக்கு அவர்களோடு ஒன்றிவிட்டார்.

நாடு கடந்த நட்பு இப்போது என்னை அக்காச்சி என்று அழைக்கும் அளவுக்குப் பாசமாக வடிவம் கொண்டுள்ளது. லீவு கிடைக்காத கவலையோடு நேரத்தை நெட்டித் தள்ளிவிட்டு வீட்டுக்கு ஓடி வருகிறேன். இங்கே சுற்றிப் பார்க்க எதுவும் சிறப்பாக இல்லையென்றாலும் பேசித் தீர்த்துக் கொள்கிறோம். இலங்கைச் சமையலை அம்மாவிடம் கற்றுக் கொள்கிறார். ’பப்பிம்மா.. அக்காச்சி கிட்ட பொட்டுக்கடலை இருக்குமா தெரியலை கேட்டுப் பார்த்து நீங்க சொன்ன மாதிரியே தேங்கா சட்னி செஞ்சுகுடுக்கறேன்’ என்று அவர் அம்மாவிடம் கேட்டு இந்தியச் சமையல் செய்து தருகிறார்.

‘நீயே ஒரு திருடி. உன்னை நம்பி இந்தப் பொண்ணை இங்க அனுப்பி வச்சாங்க பாரு.. அவ அம்மா அப்பாவுக்கு பூப் போட்டு கும்பிடணும்’னு கண்ஸ் சொல்லும் அளவுக்கு அன்பான பெண். வேகத்தோடு தூய இலங்கைத் தமிழ் பேசும் கண்ஸின் பேச்சு சட்டென்று புரியாமல் அவர் முழிக்கும்போதும், இவரின் இந்தியத் தமிழ் புரியாமல் கண்ஸ் முழிக்கும்போதும் நான் தமிழுக்கே மொழிபெயர்ப்பாளராக மாறி இருவரையும் கலாய்த்துக் கொண்டிருக்கிறேன். இப்போது எங்கள் வீட்டில் கலந்து கட்டிய தமிழ் துள்ளி விளையாடுகிறது. உதாரணத்துக்கு சில..

நுளம்புன்னா என்னக்கா?? ஒரு வகை இன்செக்டா??

நுளம்புன்னா கொசு.

--

இதில என்ன சேர்த்திருக்குன்னு சொன்னிங்க..

கறுவாவும், சீனியும், பட்டரும்.

கறுவான்னா??

பட்டை.

--

ஃப்ரெண்ட்ஸ் கூட கதைச்சேனான்னு கேட்டிங்களே.. கதைக்கிறதுன்னா??

பேசுறது.

--

பேசிப்போடுவன்னு சொன்னிங்களே.. பேசுறதுன்னா??

திட்றது.

இன்று Aquarium போய் வந்தோம். சில படங்கள் உங்கள் பார்வைக்கும்.

083 முட்டையை அடைகாக்கும் ஒரு பென்குயின் பார்த்து நெகிழ்ந்து போய்விட்டோம்.

 

 

 

 

 

126 பேய் போல இருந்தது கண்ணாடியோடு ஒட்டியபடி பயமுறுத்திய திருக்கை வகை மீன். பயத்தில் பெயர் மறந்துவிட்டது. இரவுத் தூக்கம் சந்தேகமே.

 

 

 

163 அழகாய்த்தான் இருக்கு அனகொண்டாவும்.

 

 

 

 

 

158 கொடுத்து வச்ச மனுஷன்/ஷி.

 

 

 

 

 

172 Green tree python ன்னு போட்டிருந்தது. எங்கடா காணம்னு தேஏஏஏடிப் பார்த்தா ஒற்றைக் கொம்பில ரெண்டு பச்சைக் கலர் ஜாங்கிரி.

 

 

 

அப்படியே மீன்களையும் சுட்டுத் தள்ளினோம்.

090  110 113 116 125 134 025 040

13 March, 2011

சுனாமியும் உண்டா??

ஜப்பானில் சுனாமி, நிலநடுக்கத்தில் உயிரை பறிகொடுத்த அத்தனை பேருக்கும் எல்லோரும் செலுத்திய அஞ்சலிகளோடு என்னதையும் சேர்த்துக் கொள்கிறேன். காட்சிகள் தந்த மலைப்பும், வேதனையும் போக நாள் பல ஆகும்.

japan-tsunami

ஆஃபீஸில் இருந்து அடிக்கடி நிலமையை அறிந்து கொண்டும், கடவுளை வேண்டிக் கொண்டும் இருந்தபோது இன்னும் கொஞ்சம் காலம் போனதும் மழையை, ஸ்னோவைப் போல சுனாமியும் பூகம்பமும் கூட எமக்கு ஆச்சரியம் தராத ஒன்றாய் போய்விடும் என்று சொன்னேன். கேட்கவே பயமாக இருந்தாலும் நாம் இயற்கையை அழித்துக் கொண்டிருக்கும் வேகத்தில் இப்படி ஆனாலும் ஆகலாம் என்று கலீக்ஸ் ஆமோதித்தார்கள். ஜப்பான்காரர்கள் எமக்கு செய்த கொடுமைக்குத்தான் இப்படி ஆகி இருக்கு அங்கே என்று ஒரு நண்பர் சொன்னார். எனக்கும் எங்கேயோ மெலிதாக அந்த எண்ணம் ஒரே ஒரு தரம் தலை தூக்கி இருந்தது. அரசாங்கம் செய்யும் அட்டூழியத்துக்கு அப்பாவி மக்களை ஏன் பலி ஆக்க வேண்டும்?? கடவுளிடம் என் நினைப்புக்கு மானசீகமாக மன்னிப்புக் கேட்டுக் கொண்டேன்.

இரண்டு வாரம் முன்னர் அம்மாவின் பிறந்தநாளுக்கு சின்னதாக ஒரு பார்ட்டி வைத்தோம். அப்பா உடன் இல்லாத கவலையை ஒரு நண்பர் கிளறிவிட சின்னதாய் ஒரு அழுகையோடு சந்தோஷமாகவே கேக் கட் செய்தார் அம்மா. சாப்பாடு முடிந்ததும் சுனாமியும் உண்டா என்று தங்கா அக்கா கேட்டார். என்னதான் சிரித்தாலும் பிள்ளையாரே என்று மனதுக்குள் வேண்டிக்கொண்டேன்.

2004 அக்டோபரில் இலங்கைக்குப் போய் வந்தோம். டிசம்பரில் சுனாமி. காலையில் குண்டு வெடித்தது போல் ஏதோ சத்தம் கேட்டு எல்லோரும் வெளியே வந்து பார்த்தார்களாம். வீட்டில் அம்மா, அப்பா, ரஜி, சின்னண்ணி, இரண்டு மாதக் குழந்தையாக சாத்வி, அத்தை பையன் ஒருவன் என எல்லோரும் இருந்தார்கள். ஓரிரு நிமிடங்களில் ‘ஓடுங்கோ தண்ணி வருது, தண்ணி வருது’ என்று ஓலமிட்டபடி தெருவால் ஆட்கள் ஓடுவதும், இரைச்சலாய் ஒரு சத்தம் கேட்பதுமாய் என்னவென்று தெரியாமல் இவர்களும் கூட்டத்தோடு ஓடி இருக்கிறார்கள். ஊரின் மத்தியில் எங்கள் வீடு. வீட்டிலிருந்து அரை கி.மீ தூரத்தில் கடல். ஆனாலும் எங்கிருந்து தண்ணீர், என்ன ஏது என அறியாமல் பயமும், பதட்டமுமாய் ஓடியவர்களை பத்தடி போவதற்குள் விரட்டிப் பிடித்தது வெள்ளம்.

எங்கள் வீடு உயரமாகக் கட்டப்பட்டிருக்கிறது. பக்கத்தில் இரண்டு மாடிக் கட்டடத்தில் ஒரு கடை. அதன் அருகில் உயரமான சந்தைக் கட்டடங்கள், கடைகள். என்னவென்று தெரியாததால் தூர ஓடினால் தப்பிக்கலாம் என்று நினைத்து வயற் பிரதேசம் நோக்கி ஓடி இருக்கிறார்கள்.  அங்கே  அவர்களுக்கு முன்னராகவே வெள்ளம் நிறைந்து நீர்மட்டம் உயர அங்கே இருந்த ஒரு பழைய வீட்டின் மேல் ஏறி இருக்கிறார்கள். கடைசியாக கையில் குழந்தையோடு ரஜி ஏற முயன்ற சமயம் தண்ணீரின் வேகமும் கூட, ஒரு குட்டிப் பனை மரத்தின் கருக்கை எட்டிப் பிடித்துக்கொண்டு அவன் போராடிய கணங்கள். கை கிழிந்து இரத்தம் வழிய கைக்குழந்தையையாவது காப்பற்ற வேண்டுமே என்று அவன் பட்டபாடு இன்று சொன்ன போதும் அம்மாவின் கண்களில் தெரிந்தது.

பழைய கட்டடம் பத்துப் பதினைந்து பேர் பாரமும், தண்ணீரின் வேகமும் தாங்காது இடிந்து விழ ஆரம்பித்ததும்தான் மீண்டும் கடைத்தெருப் பக்கம் போகலாம் என்று நினைத்து இன்னொரு பக்கத்தால் கீழே இறங்கி நீரோட்டத்துக்கு எதிராக ஒருவர் கை ஒருவர் கோர்த்தபடி போயிருக்கிறார்கள். அம்மா ஒரு கட்டத்தில் முடியாது போகவே அப்பாவை கெஞ்சினாராம் தன்னை விட்டு அவர்கள் உயிரைக் காத்துக் கொள்ளச் சொல்லி. சின்னண்ணியின் தம்பி விஷயம் கேட்டு பக்கத்து ஊரிலிருந்து வந்தவர் கயிறொன்றை மரத்தில் கட்டித் தூக்கிப் போட அதன் உதவியோடு எல்லோருமாக உயரமான ஒரு கடையின் மொட்டை மாடியில் ஏறி நின்றிருக்கிறார்கள். இவர்கள் போராட்டத்தோடு வந்து கொண்டிருக்கும்போதே முடியாமல் போய் தண்ணீரோடு அடித்துச் செல்லப்பட்டவர்கள் பலர். மூன்றாவது அலையின் வேகமும் குறைந்த பின்தான் கீழே இறங்கி வந்திருக்கிறார்கள். உயிர்ப் பயம், உடை கிழிந்து எல்லோர் முன்னும் இருந்த நிலை என எல்லாம் தந்த அதிர்வு போக அம்மாவுக்கு நெடுநாட்கள் ஆயிற்று.

அண்ணா அப்போது பக்கத்து ஊரில் இருந்தார். அம்மா வீட்டுக்கு வந்து இது நடப்பதற்கு சற்று முன்னர்தான் கிளம்பி பைக்கில் தன் வீடு போய்க் கொண்டிருந்தவர் விஷயம் அறிந்து திரும்பி வந்திருக்கிறார். அம்மா வீட்டுப் பக்கம் போகமுடியாது என்று தெரிந்ததும் தன்னால் இயன்ற அளவு வெள்ளத்தில் போராடிக் கொண்டிருந்த மக்களை காப்பாற்றி இருக்கிறார். கால் முழுவதும் பனை மட்டைகளும், இன்னும் தண்ணீரோடு வந்த என்னவெல்லாமோ உடல் முழுவதும் கிழித்துப் போட்ட காயங்கள். அண்ணா போலவே இன்னும் நிறைய இளைஞர்களும், ஆண்களும் எத்தனையோ பேரைக் காப்பாற்றினாலும் இழப்பு அதிகம்தான். ரஜியும், அண்ணியின் தம்பியும் கூட எல்லோரையும் பாதுகாப்பாக விட்டுவிட்டு மற்றவர்கள் உதவிக்குப் போயிருக்கிறார்கள். போனதில் கடைசி மாமா குடும்பத்தை மீட்க முடிந்தது. அண்ணா தண்ணீருக்குள் எட்டிப் பிடித்த சிறுவர்களும், பெரியவர்களும் மீண்டும் தண்ணீரால் இழுத்துச் செல்லப்பட்டபோது எப்படி இருந்திருக்கும் அண்ணாவுக்கு. 

எங்கள் வீட்டுக்குள் அரைச் சுவர் உயரத்துக்கு நீர்மட்டம் வந்து போயிருக்கிறது. அழிவென்று எதுவும் இல்லாவிட்டாலும் எங்களின் பழைய ஃபோட்டோ ஆல்பங்கள், ஆவணங்கள் உட்பட எல்லாம் நீரோடு போய்விட்டன. உயிர் இழப்பின் முன் இதெல்லாம் ஒன்றும் இல்லை என்றாலும் கவலை இருக்கத்தான் செய்கிறது. மாமியார் வீடு பக்கத்து ஊரில். கடலில் இருந்து மூன்று மைல் உள்ளே இருந்ததோடு இயற்கையாகவே அரண் போல சேர்ந்திருந்த பெரிய மண் திட்டு ஊருக்குள் வெள்ளம் அதிகளவில் வராமல் காத்துக் கொண்டது.

அப்போதுதான் போய் பார்த்து வந்த ஊரவர்கள், உறவினர்கள், நண்பர்கள் எத்தனை பேரை இழந்துவிடப் போகிறோம் என்று தெரியாத நாங்கள், அந்த வருடம் கிறிஸ்மஸ் ஒன்றுகூடல் எங்கள் வீட்டில் என்பதால் கொண்டாட்டமாக இருந்தோம். அன்று நான் செய்த டெசர்ட் ஃப்ரூட் சலட். அளவு சொன்ன நண்பி ’என்னங்க இவ்வ்வ்வ்வ்வ்ளோ வந்திடிச்சு’ன்னு ஒரு பெரிய்ய்ய பாத்திரம் நிறைந்திருந்த சாலட்டை பார்த்து மிரண்டு போய் நான் கேட்டபோது தான் சொன்னார் ’அய்யோ.. அது 100 பேருக்கான அளவுங்க’ என்று. தங்கா அக்கா, அவரின் அக்கா, நாங்கள் என மூன்று குடும்பங்கள்தான் என்றாலும் பேச்சும், கும்மாளம் அவ்வப்போது சாலட்டுமாய் முழுவதும் காலி பண்ணிவிட்டோம். 26 பகல் ஒரு நண்பரின் ஃபோனில் கண் விழித்து விஷயம் அறிந்து.. அப்பா.. அன்று பட்ட வேதனை. அண்ணா எல்லாம் முடிந்து மூன்று ஊர் தள்ளி வந்து இயங்கிக் கொண்டிருந்த ஒரே கமியூனிகேஷன் செண்டரில் வரிசையில் காத்து நின்று கால் செய்த போதுதான் உயிர் வந்தது.

அன்றிலிருந்து நண்பர்கள் வீட்டு விசேஷங்களுக்குச் செய்து கொடுத்தாலும் எங்கள் வீட்டில் எதுவும் விருந்தென்றால் நான் ஃப்ரூட் சாலட் செய்வதே இல்லை. எதுவும் கடந்து போகும் என்பது போல் நாங்கள் ஃப்ரூட் சாலட்டுக்கு வைத்த பெயர்தான் சுனாமி. ஊரில் இருந்த சமயம் தினமும் மாலையில் ரஜி சகிதம் நண்பர்கள் புடைசூழ, அம்மா செய்து கொடுக்கும் சைட் டிஷ்ஷோடு கண்ஸ் கடற்கரை சென்றுவிடுவார். பாட்டில் எல்லாம் காலி செய்து, சிரிதுப் பேசி(?) அப்படியே என்னையும் பிக்கப் பண்ணிக்கொண்டு ஒரு ஒன்பது மணி அளவில் மாமியார் வீட்டுக்குப் போவோம். சது என்னோடு வருவார். லச்சு இந்த யாகசாந்தியில் கலந்து கொள்ளும் வழக்கம் இல்லாத மச்சினரோடு முன்னாடியே போய்விடுவார். ’அண்ணா நீங்க கடல்ல போய் போட்ட ஆட்டம் தாங்க முடியாம தான் சுனாமி வந்திருக்கு’ என்று அக்காச்சி இப்போதும் சொல்வாள்.

என்னதான் இயற்கையை வெல்ல முடியாது என்றாலும் அழிப்பதையாவது மனிதன் நிறுத்தும்வரை சுனாமிகளும், பூகம்பங்களும் தொடரும். இனிமேல் ஜப்பானியர்களின் அணுக்கதிர்களின் பாதிப்பு என்னென்ன கொடுமைகளை கொண்டுவரப் போகிறதோ என்று இப்போதே மனம் பதைக்கிறது. பேரப் பிள்ளைகள், பூட்டப் பிள்ளைகளோடு வாழாவிட்டாலும், எம் பிள்ளைகளோடாவது வாழ்ந்து விட்டு சாக பிள்ளையாரப்பா வழி விடட்டும்.

10 March, 2011

டார்லிங்ங்ங்..

முதல்ல என்னை தொடர் பதிவுக்கு அழைத்த கோபிக்கு நன்றியை.. இல்லை இல்லை.. நன்றிகளை சொல்லிக்கொள்கிறேன். என்னைப் பொறுத்தவரை தொடர்பதிவு எழுதுவதை விட தொடர யாரையாவது அழைப்பதுதான் அவ்வ்வ்வ்.. அப்படியே கோபி தன் பெயர்க்காரணம் சொன்ன பதிவை இங்கே சென்று படித்துப் பாருங்கள். சிரிப்புச் சுவை தூக்கலாக எழுதி இருக்கின்றார். மீண்டும் நன்றி கோபி.

இனி என் விஷயத்துக்கு வருவோம்.

navn

நான் பிறந்தது நவராத்ரி நேரம். அதுவும் சரஸ்வதிக்குரிய நாளில் பிறந்தேனாம். சரஸ்வதி கடாட்சம் கிடைக்கட்டும் என்று அம்மாவுக்கு கொள்ளை ஆசையாம். நல்லவேளை சரஸ்வதி என்று வைக்காமல் விட்டார்கள். நியூமராலஜியும் பார்க்கவில்லையாம். ஆனால் பின்னாளில் கூட்டெண் 5 வரும்படியாக எழுது என்று அப்பா சொல்லித் தந்தார். கல்யாணத்தின் பின் இனிஷியல் மாறியபோது அதையும் விட்டுவிட்டேன்.

எனக்கு என் பெயர் தவிர்த்து யாராவது செல்லப் பெயர் சொல்லிக் கூப்பிடுவது நினைவு தெரிந்த நாளில் இருந்து பிடிக்காது. எனக்கு நினைவு தெரியாத வயதுகளில் என்னை ச்செல்லமாக.. ரொம்பச் ச்செல்லமாக கூப்பிடுவார்களாம். ஒரு தடவை க மு வில் கண்ஸ் அம்மாவிடம் என் கூட சண்டை போட மேட்டர் சிக்காத நாளில் இது பற்றிக் கேட்டபோது அம்மா சொன்னார். ‘கூப்டோமே.. ஆனா நீங்க அதை சொல்லி கூப்ட முடியாதே’ன்னு. அப்போ கண்ஸ் வெக்கத்தோட சிரித்ததும், நான் அம்மாவை முறைத்த்த்ததும் இப்போதும் எனக்கு நினைவிருந்தாலும் கூடவே அவர் விதியும் சிரித்தது அப்போது யாருக்கும் தெரியவில்லை.

பக்கத்து வீட்டில் அம்மா உறவுமுறைப் பாட்டி ஒருவர். என்னை வெள்ளை ஆப்பம்னு கூப்பிடுவார். விடுங்க மக்கள்ஸ். அதான் பாட்டி என்று சொன்னேனே. அவர் கண்ணாடி கூட போட்டதில்லை. நான்காவது படிக்கும்போது போய்விட்ட பாட்டியோடு அந்தப் பெயரும் போய்விட்டது.

அம்மா வழி, அப்பா வழி உறவுகளில் அம்மாச்சி, செல்லம், ராசாத்தி இப்படியாக கூப்பிடுவார்கள். என் முன்னே பிறந்தவர்கள் அதிலும் குறிப்பாக ரஜி.. மாடு, எருமை, மூதேவி, சிலோங்கி (எதிலும் ஸ்லோ), சாக்குமூட்டை, நாய், பேய், பிசாசு, குரங்கு, சனியன் இப்படியாக இன்னும் பல பெயர்கள் சொல்லி அன்ன்ன்ன்ன்பா கூப்பிடுவார்கள்.

நண்பர்கள் நான் மேலே சொன்ன காரணத்தால் வேறு பெயர் சொன்னதில்லை. ஆனால் கஸின்ஸ், நண்பர்ஸ் அவ்வப்போது நான் இருக்கும் கெட்டப்புக்கு ஏற்ப வனிதா, மனிஷா, சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன், நயன் தாரா, ஷாலினி, ஜெனிலியா இப்போ லேட்டஸ்ட்டா டப்சி என்பது வரைக்கும் கூப்பிடுவார்கள். எல்லோரும் ஒரு தடவை உஸ்ஸ்ஸ்ஸ் சொல்லி கொண்டீர்கள்தானே. என்னுடைய ஒரு ஃபோட்டோ பார்த்த அப்பா லைட்டா ஐஷ்வர்யா ராய் ஜாடை தெரிவதாகச் சொல்லி ஐஷ் என்று கூப்பிட்டதைக் கேட்டும் இன்னமும் நான் உயிரோடு இருக்கிறேன் மக்கள்ஸ். எனவே அழுகை வேண்டாம். கொலைவெறி வேண்டவே வேண்டாம்.

ஐந்தாவது வரை என் பெயரில் யாரும் பள்ளியில் படித்ததில்லை. ஆறாவதுக்கு போனபோது அந்தப் பள்ளியில் எட்டாவதில் ஒருத்தர் இருந்தாங்க. எங்கள் ஊரில், சொந்தங்களில் மூவர் என் பெயரில் இருந்ததாக நினைவு. இங்கே வந்ததும் என் கலர் காரணமாக சாக்லெட் என்று கூப்பிடுகிறார்கள். அதை விட என் பெயர் இவர்கள் வாயில் படும்பாடு இருக்கிறதே.. கொடும்ம்மை.. இந்த ஊரில் என் பெயரில் யாருமே இல்லை. நான் மட்டும்தான். இங்கே இருப்பதே கொஞ்சம் தமிழர் என்பதால் இனிப் பிறக்கப்போகும் குழந்தைக்கு என் பெயர் யாரும் வைக்க மாட்டார்கள் என்ற பெரும் ஆறுதல் எனக்கு இருக்கிறது.

கண்ஸ் வீட்டில் இரண்டாவது பிள்ளை என்பதால் பெரியண்ணன் பேருக்குப் பொருத்தமாய் வைத்ததாக மாமியார் சொன்னார். அம்மு பிறந்தபோது எல்லாப் பொருத்தமும் பார்த்து மாமியாரே பெயர் வைத்தார். அழகு, லட்ஷணம் என்பதாகப் பொருள் வரும் அவர் பெயருக்கு. சதுவுக்கு என் சித்தப்பா வைத்த பெயர். எதிர்பாராமல் என் பிள்ளையாரின் பெயரே அமைந்ததில் அவ்வளவு சந்தோஷம் என்பதை விட எங்களோடு இப்போது இல்லாத சித்தப்பா நினைவாக அவர் பெயர் இருப்பது வரம்.

அம்முவும் சதுவும் என்னை அம்மா என்றுதான் கூப்பிடுவார்கள். அதிலும் அம்மு அம்ம்ம்மா என்று அழுத்திச் சொல்லும்போதும், என்னாம்மா என்று சதுர் அடிக்குரலில் சொல்லும்போதும் நான் சரணாகதி. என் கண்ணன் என்னை கண்ணம்மா, தங்கம்மா என்று உருக வைப்பான். உபரியாக டா, டி வேறு. கோவம் வந்தால் மட்டும் கண்ணாளனாகி முழுதாகப் பெயர் சொல்வான்.

இப்பொழுது நானும் சிலரை தொடருக்கு அழைக்கலாம் என்றால் கடைசிப் பத்தி தரும் இதம் வேறு யோசிக்க விடவில்லை. சும்மாவே கைகாட்டிவிடுவது சுலபமில்லை. அத்தோடு ஓரளவுக்கு எல்லோரும் எழுதி வேறு ஆகிவிட்டது. தொடர அழைப்பவர்கள் முன்பே எழுதி இருந்தால் எனக்கு அல்ல கோபிக்கு ஆட்டோவோ லாரியோ அனுப்பிக் கொள்ளுங்கள். என்னை மன்னித்துக் கொல்லுங்கள். விருப்பமும் நேரமும் இருந்தால் தொடர்ந்து எழுதுங்கள்.

என் உடன் பிறப்பு ப்ரியமுடன் வசந்த்

என் மனதிலிருந்து ப்ரியா

வெறும்பய ஜெயந்த்

வினு வினோத்

கூர்வாள் கயல்

மாணவன்

அக்கம் பக்கம் அமுதா கிருஷ்ணா

மனசு சே. குமார்

வர்ட்டா..

13 February, 2011

அம்மா என்றால்..

இன்று இங்கே அன்னையர் தினம். என் அம்மாவுக்கும், என் பிள்ளைகளின் அம்மாவுக்கும், உலகத்தில் உள்ள அத்தனை அம்மாக்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.

251 

 258 அம்மாவுக்குப் பொன்னுக்குப் பதில் பொன் போன்றதையும், கூடவே ஒரு கேக்கையும் கொடுத்தோம்.

அப்பா திங்கள் காலை 6 மணிக்கு பயணம். நேற்று அப்பா முதலில் இங்கு வந்து நின்றபோது பழகிய நண்பர்களுக்குச் சின்னதாக ஒரு விருந்து. அம்மாவின் நளபாகம். நிம்மதியாக விருந்தினரை வரவேற்றது சந்தோஷமாக இருந்தது. அவர்கள் அதைவிட நிம்மதியாக வந்திருந்தார்கள் என்பது முகங்களில் தெரிந்தது.

நாங்கள் வாங்கிக் கொடுத்திருந்த கரும் நீலமும், வெள்ளையுமாய் கட்டம் போட்ட சட்டையைப் போட்டபடி குளித்துவிட்டு வந்த அப்பாவை அம்மா கண்நிறையப் பார்த்துக் கொண்டிருந்தார்.

’போதும் என் அப்பா மேல ரொம்ப கண்ணு வைக்காதிங்க’ன்னேன்.

`இல்லம்மா அப்பாவுக்கு சட்டை கொஞ்சம் சின்னதா இருக்கோன்னு தோணிச்சு அதான் பார்த்தேன்’ என்றார்.

‘அடப் போப்பா. நானும் என்னமோ ஆசையா பாக்கறேன்னு நினைச்சேன். இதோ போயி சட்டைய மாத்தறேன்’ என்ற அப்பாவைத் தொடர்ந்து

‘என்னம்மா.. நான் லவ்வில பாக்கறிங்கன்னு நினைச்சா இப்டி புஸ்னு போச்சே. பாவம் அப்பா டோட்டல் டேமெஜ்’ என்றபோதுதான் கவனித்தேன் கண்ணீரில் கண் நிறைந்திருந்தது.

இன்று ஒரு நாள். பின் வரும் இரண்டு மாதப் பிரிவின் தாக்கம் லைட்டாகத் தலைதூக்குகிறது.

’போச்சுடா.. ஊர்ல போய் அழுதது போலவே இங்கேயும் அழப் போறிங்களா’ என்றேன்.

சிரித்தபடி உண்மை சொன்னார். போன வருடம் அக்காச்சியோடு ஊருக்குப் போனார் அம்மா என்று முன்பே உங்களுக்குச் சொல்லி இருக்கிறேனே. நினைவிருக்கா? அங்கு போய் ஒரு வாரம் சென்றதும் இரவில் அழுதாராம். ஒரு மாதம் ஆனதும் அண்ணா, ரஜியின் கிண்டலுக்கு ஆளாகும் அளவுக்கு பகலிலும் அழுதாராம். எப்போடா அப்பாவை பார்ப்பேனென்று ஆகிவிட்டதாம். அதைவிட ஒன்று சொன்னார். இப்போதும் புல்லரித்துப்போகிறது. ஏர்போர்ட்டில் பார்த்த உடனேயே அண்ணாவும் ரஜியும் சாஷ்டாங்கமாக அம்மா காலில் விழுந்து வணங்கினார்களாம். அம்மா ஒரு குழந்தை. குழந்தையும் தெய்வமும் ஒன்றேதானாம்.

வந்தவர்கள் அப்பா இளமையாக இருப்பதாகவும், அம்மாவை அடிக்கடி ஃபோன் செய்து கண்காணிக்கும்படியும் கிண்டல் செய்தார்கள். அதில் மூவருக்கு அப்பாவின் முடி மேல் பொறாமை. ’அடுத்த தடவை வரும்போது பாதி முடி கொட்டி இருக்கும் பாருங்க’ன்னு ஒருத்தர் சாபமே கொடுத்தார். எனக்கென்னவோ அப்பாவும் அம்மாவும் இந்த ஆறு வருட இடைவெளியில் அதிக மாறுதலோடு இருப்பதாகத் தெரிகின்றது. உடலாலும் மனதாலும் அடுத்த கட்ட வாழ்க்கைப் படிக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இந்த வயதில் புலம் பெயர்த்து நடப்பட்ட மரங்கள் வெள்ளை தேச மண்ணுக்குள் இலகுவாக வேர்விட முடியாமல் ஊர்ப் பிரச்சனையும், மன உளைச்சலும் அரித்துக் கொண்டிருக்கின்றன.

உட்கார்ந்தபடியே தூங்கிப்போகும் அப்பா. ஒவ்வொரு படிக்கும் இரண்டு கால்களும் சேர்த்து வைத்த பின் பத்திரமாய் அடுத்த படி இறங்கும் அம்மா. அருகிருந்து பார்த்திருந்தால் இத்தனை ஆச்சரியம் இருந்திருக்காதோ என்னவோ. அப்பா அம்மாவிடம் தெரியும் வயதின் சாயல் மலைக்க வைக்கிறது. மனதை வலிக்கவும் வைக்கிறது. நண்பர் ஒருவர் வந்ததும் ’முதல்ல பாத்ததுக்கு இப்போ எவளவோ தேவலை’ என்று சொன்னதும் என்னோடு அக்காச்சிக்கும் ஆறுதல். உழைப்பின் பின்னே ஓடிய அப்பா இரண்டு வருடத்தின் பின் ஒரு மாத முழு ஓய்வில். அப்பாவைப் பார்த்து மன நிறைவில் அம்மா. அவர்களைப் பார்த்துக் கண்கள் பனிக்க நான். என் பிள்ளையாருக்கு நன்றி.

அம்மாவுக்குப் பிடித்த பாடல் ஒன்று, எல்லா அம்மாக்களுக்காகவும்.. பாருங்கள்.

06 February, 2011

அம்ம்ம்ம்மா..

அம்மா அக்காச்சியோடு ஸ்கைப்பில் பேசும்போது ‘எனக்குத்தான்மா பெரிய்ய்ய்ய கவலை’ என்றார்கள். கிச்சன் நோக்கி போய்க்கொண்டிருந்த நான் ஃப்ரீஸ் ஆகி நின்று தொடர்ந்து கேட்டதில் தெரிய வந்தது. இங்கு வந்ததில் இரண்டு கிலோ வெயிட் போட்டு விட்டார்களாம். அம்மா சாப்பாட்டு நேரத்தை தள்ளிப் போடுவதில் ரொம்ப சமத்து. நொறுக்ஸ் இருந்தால் போதும். டீயும் ரெண்டு பிஸ்கட்டும் கடித்துவிட்டு மதியச் சாப்பாட்டை மாலையில் சாப்பிடுவாங்க. இரவுச் சாப்பாடு தூங்க முன். போதாதென்று டீ குடிக்கப் போகும்போது எங்களுக்கும் வேண்டுமா என்று தவறாமல் கேட்பாங்க. வயிறு கும்மென்று இருந்தாலும் அம்மா டீயின் சுவை ஆம் சொல்ல வைக்கும். நேற்று எதேச்சையாகக் கவனித்தேன். தன் பங்கு டீக்குள் ஒரு டேபிள் ஸ்பூன் அளவு போலவே பால் சேர்த்தார்கள். ஏனென்றேன்.

‘எடை கூடுதும்மா. இதிலை நிறைய பால் வேற குடிச்சா இன்னமும் எடை கூடிடும் இல்லை’

#####

ஏறிப் போகும் எடையைப் பார்த்து நானும் மிரண்டு கொண்டு இருக்கிறேன். அம்மா எடையை அல்ல. என் எடையை. அம்மா தான் குண்ண்ண்டா இருப்பதாகவே எப்போதும் சொல்வாங்க. இப்போது என் பக்கத்திலை குட்ட்ட்டியா இருக்காங்க. வேலை எல்லாம் அம்மாவே முடித்துவிடுவார்கள். வீட்டில் வெட்டியாக இருக்கிறேன். அதனால் அம்மா வந்ததிலிருந்து பயத்தில் எடை பார்க்கவில்லை. ஆஃபீஸ்ல இருந்து வந்து சாப்பிட்டு நேராக அப்பா பக்கத்தில் சோஃபாவில் உக்கார்ந்து விடுவேன். மடியில் லாப் டாப். அவர்களோட பேசியபடியே லைட்டாக கண் சொக்கும், த்லை சாயும், ஆனால் காது நன்றாகக் கேட்கும். இதுதான் உண்ட களையென்றால் அதுதான் அப்போது எனக்கும். அம்மா அப்பாவிடம் சொன்னார்.

‘பாவம்ங்க என் பொண்ணு. நான் வந்ததுக்கு இளைச்ச்ச்ச்சுப் போய்ட்டா. முகமெல்லாம் எப்டி ஒட்டிப் போச்சு பாருங்க. ஆஃபீஸ்ல நாள் முழுக்க வேலை. அது முடிச்சு வீட்டுக்கு வந்தா இந்த எழுதுகோலை மடில வச்சு எழுத்துவேலை.. ரெஸ்ட் எடுக்கவே மாட்றா’

#####

எங்களுக்கு நிறைய வாங்கி வந்ததில் லக்கேஜில் இடம் இல்லாமல் அம்மாவின் சாரி ஒன்றுதான் வந்து சேர்ந்திருக்கிறது. கோயிலுக்குப் போக இன்னம் கொஞ்சம் நல்லதாக ஒன்று கட்டச் சொல்லி என்னிடம் இருந்த சாரிகளைக் காட்டினேன். ஆரஞ்சில் ஒன்றை எடுத்தார்கள். வேறும் சிலதும் எடுத்துக்கொள்ளச் சொன்னேன். அங்கே கிளாசெட் நிறைய வைத்திருக்கும் சாரிகளோடு இதையும் கொண்டு போனால் அக்காச்சி திட்டுக்கு ஆளாகும் அபாயம் நினைவு வந்ததோ என்னவோ, அப்பாவிடம் காட்டிச் சொன்னார்கள்.

‘என்ன பொண்ணுங்க இவ. என் வயசுக்காரங்க கட்ற சாரில்லாம் கட்டிட்டு இருக்கா. இத நானே எடுத்துட்டு போறேன். அங்க போயி இத விட நல்லதா இவளுக்கு ஏத்தாப்ல பார்சல் பண்றேன் பாருங்க’

#####

காரில் போய்க்கொண்டிருக்கும்போது இங்கே எந்த காருக்கு மவுசு ஜாஸ்தி, விண்டர் வெதர் + மலைப்பாதைக்கு ஏற்றது எது என்று கண்சும் அப்பாவும் பேசிக்கொண்டு வந்தார்கள். எல்லாம் கேட்டுக் கொண்டு வந்த அம்மா கடைசியில் சொன்னார்கள்.

‘கனடாலன்னா Honda CRV தான் நல்லதுன்னு எல்லாரும் சொல்வாங்க’

அப்பா அம்மாவுக்கு ஏறி இறங்கக் கஷ்டமில்லாமல் இருக்கவென்று பார்த்துப் பார்த்து வாங்கிய வண்டியின் பெயர் என்னவென்று இப்போ நான் சொல்லணுமா என்ன.

#####

நான் டைனிங்டேபிளில் இருந்து எழுதுகோலில் இதை எழுதிக் கொண்டிருக்கிறேன். அம்மா அப்பாவுக்கு ரொட்டி (மாவை பரோட்டாவுக்குப் போல குழைத்து, சப்பாத்தி போல் தட்டையாகச் சுட்டால் எங்கள் ஊரில் ரொட்டி) சுட்டுக்கொண்டிருந்தார். கொஞ்சம் கருகிய வாசம் வந்ததால் என்னவென்று கேட்டேன். அதெல்லாம் இல்லை எல்லாம் பதமாக இருப்பதாகச் சொன்னவர்கள் என்னைக் கடந்து அப்பாவுக்கு எடுத்துப் போகும்போது சொல்லிக் கொண்டு போகிறார்கள்.

‘கொஞ்சம் கருகிப் போச்சுத்தான். ஆனா அப்பாவுக்கு அதுதான் பிடிக்கும்’

#####

j 014 (3)

03 February, 2011

புது வருஷம்.

வருஷம் பிறந்து ஒரு மாதம் ஆன பின்பு அட அதுக்குள்ளை இவளவு நாள் போயிடிச்சே என்று கவலைப்படுபவர்கள் பலர். அப்பாடா ஒரு மாசம் போயாச்சு என்று நிம்மதி அடைபவர்கள் சிலர். சிலரும் பலரும் மாறலாம். புது வருஷம் தரும் நினைவுகள், சந்தோஷங்கள் இலகுவில் மனம் விட்டுப் போவதில்லை. வருடத்தின் தொடரும் நாட்களில் இடையில் எங்காவது அவை வந்து வந்து போகும். ’வருஷம் பிறக்கும்போதே தெரியும் எனக்கு நல்லா இருக்கும்னு’ என்று சிரிப்பவர்களும், ’ச்சே.. வருஷம் பிறக்கும்போதே தெரியும் இந்த வருஷம் இப்படித்தான் இருக்கும்னு’ என்று சலிப்பவர்களும் ஒன்றில் நாமாகவோ, இல்லை வேறு யாராகவோ இருக்கலாம். ஏதோ சொல்ல வந்தேன். ரொம்பக் குழப்பமா இருப்பதாக எனக்கே தோன்றுவதால் இதை இத்தோடு விட்டு விடலாம்.

ஒவொரு நியூ இயர் ஈவ்க்கும் கண்ஸ் ஃப்ரெண்ட் வீட்டில் டின்னர். ஃப்ரெண்ட் பிறந்த உடனே நர்சுக்குப் பதில் கடிகாரம்தான் கண்ணில் பட்டிருக்கும்போல. இம் முறை(யாவது) சொன்ன டைமுக்கு போக வேண்டுமென்று கண்ஸ் சபதம் போடாத குறை. ‘நாலு முப்பதுக்கு நீ ரெடி ஆகலைன்னா பெரிய வண்டி எடுத்துட்டு வருவே நீ. நான் கிளம்பிடுவேன்’ என்ற அவரின் மிரட்டலை கொலைமிரட்டலாக்கியது குவிந்திருந்த ஸ்னோவும், உறைந்திருந்த தெருக்களும். சரியாக 16:50 க்கு காலிங் பெல்லை அடித்தவர்களைப் பார்த்து நண்பர் குடும்பம் மயக்கம் போடாத குறை. ஒரு நண்பியின் மூன்று மாதக் குழந்தையோடு நான் ஐக்கியம். குழந்தைகள் என்றும் சொர்க்கம்.

நண்பர்கள் பாட்டிலோடு ஒன்று கூடியபோது நண்பிகள் சாப்பிட்டு முடித்தோம். ‘எங்கேங்க என் ரெண்டாவது பையன். கண்லவே காண்லை நான்’ என்று மேலே சொன்ன மூன்று மாதக் குழந்தையை தூக்கி வைத்திருந்த என்னைப் பார்த்து நண்பர் கேட்டதும் விளையாட்டு என்றுதான் நானும் முதலில் நினைத்தேன். இரகசியமாக அவரை கட்டிலில் படுக்க வைத்துவிட்டு மற்றவர்கள் வந்தபோதுதான் அவர் நிலை புரிந்தது. யாராவது ஒருத்தர் இப்படியான டின்னர்களில் மட்டையைப் போட்டுவிட்டால் அவர் தலை அல்ல ஆளே உருட்டப்படும் என்ற நியதிக்கும், அவரின் மனைவி உடனேயே மூட்டையைக் கட்டிக்கொண்டு கிளம்ப முயல்வார் என்ற வழக்குக்கும் ஏற்ப நிலைமை கொஞ்சம் மோசமாகியது.

அவரை தெளி நிலைக்குக் கொண்டு வரவென்று அவரவர் அனுபவத்தை சொல்லி பிளாக் காஃபி, சாக்லெட், ஜில்லென்று தண்ணீரில் தொடங்கி என்னென்னவோ எல்லாம் செய்து வாந்தியில் கொண்டுவந்து தூக்கத்தில் முடித்தார்கள். அவரை வாரியது அலுத்துப் போய் ஏதாவது பாடலாமே என்று ஆரம்பித்தோம். அவர்கள் எல்லோருக்கும் பழைய/80 களின் பாடல்களே பிடித்திருந்தது. புதுப் பாடல் பக்கம் யாரும் வரவில்லை. ஒரு குத்துப்பாடல் கூட இல்லாமல் காது வலித்தது. அட சாமிகளா.. ஏன் இப்டி அழுது வடியறிங்க. வேற பாடுங்களேன்’ என்றேன். என்னையே பாடச் சொன்னார்கள். ‘சூப்பரா ஒரு சிணுங்கல் பாட்டு பாடலாமா’ என்று கேட்டு ஒட்டு மொத்த ஆமோதிப்பையும் வாங்கிக் கொண்டு ஆரம்பித்தேன்..

‘நிலாக் காயுது.. நேரம் நல்ல நேரம்..’

சிரிப்புச் சத்தத்தில் ‘பித்தம்’ தெளிந்து எழுந்து வந்தார் மட்டையைப் போட்ட நண்பர். மீண்டும் களைகட்டியது அவர் தலை உருட்டும் படலம். கூடவே ஸ்வீட், காரம், சூடா டீ வேறு. சொல்ல மறந்துவிட்டேன். நண்பரின் ஸ்பெஷலே அவர் செய்யும் டெசர்ட்தான். ஒவொரு வருஷமும் புதிது புதிதாகத் தேடிப் பிடித்துச் செய்வார். அதை அவர் ப்ரசண்ட் பண்ணும் விதமும் அற்புதமாக இருக்கும். அந்த நேரத்தில் யாருக்கும் கிச்சனுக்குள் நுழைய அனுமதி இல்லை. இராணுவ ரகசியம் ரேஞ்சுக்கு ரெசிப்பியையும் பாதுகாப்பார்.

புது வருஷம் பிறக்கும் நேரம் எங்கள் வீட்டில் சாமி விளக்கு ஏற்றுவோம் என்பதால் நாங்கள் அரை மணி முன்னதாகவே கிளம்ப ஆயத்தமானோம். மற்றையவர்களும் கிளம்புவதற்குத் தயாரானார்கள். அப்போது முழுத் தெளிவானாலும் சிந்தனை வசப்பட்டிருந்த நண்பர் கேட்டார்..

‘நீங்க குடிச்ச வைன் தானேடா நானும் குடிச்சேன். எனக்கு மட்டும் ஏன் இப்டி ஆச்சு??’

உங்களுக்கு பதில் தெரிஞ்சா சொல்லுங்கள் நண்பர்ஸ்.

அத்தனை அழகாய், வண்ண வண்ணமாய் வெடிகள் வானை அலங்கரித்தன. நான் எடுத்த ஃபோட்டோவில் எல்லாம் நீஈஈஈஈளமாக மஞ்சள் வண்ணக் கோடுகள் மட்டுமே தெரிந்தன. சதுர் கொளுத்திப் போட்ட வெடிகளை விட பனி காரணமாகப் புகையே அதிகமாகத்  தெரிகிறது.

107 108

வர்ட்டா..

30 January, 2011

கொலைஞர்!!

’இண்டைக்கு சந்தேல மீன் குறைவு. கன்போட் நங்கூரம் போட்டிருக்காம்’

சந்தைக்குப் போய் வரும் அப்பாவோ, அப்புச்சியோ அம்மாவிடம் சொல்வார்கள். பின் எப்படி மீன் வந்தது? அவர்கள் வீட்டில் அடுப்பெரிய வேண்டுமே. உயிரை மறந்து படகோடு போவார்கள். பல சமயம் வள்ளம் மட்டும் எங்காவது கரை ஒதுங்கும். ’அப்பாவை நேவி சுட்டிட்டான் டீச்சர். அதான் கொப்பி வாங்கக் காசில்லை எண்டு அம்மா சொன்னவ’ என்று என் தோழி சொன்னதையே  ’சோதினைக்காசு அம்மா அடுத்த கிழமை தாறாவாம். அப்பாவை நேவி சுட்டதாலை வீட்டிலை காசில்லை டீச்சர்’ என்று என் மாணவியும் சொன்னாள்.

நெய்தல் நிலம் எங்கள் ஊர். அலை ஓசையோடு அவ்வப்போது நேவியின் போர்க்கப்பல் ஓசையும் சேரும்போது உயிர் பதைக்கும். அடிக்கடலில் ஒரு புள்ளியாய் தெரியும் நங்கூரம் பாய்ச்சிய கப்பல். எக்கணமும் குண்டு பொழியும். தம் உயிர் சிதறடித்து எம் உயிர் காத்த கடற்கரும்புலிகள் இல்லாது போயிருந்தால் இன்று மிச்சமிருக்கும் தமிழர்கள் எண்ணிக்கையில் இன்னமும் குறைவாய் இருந்திருப்போம்.

கத்தினோம், கதறினோம், போராடினோம்.. எத்தனை முடியுமோ அத்தனையும் செய்தோம். காதில் போட்டானா காதகன்?? பெண்ணென்றால் பேயும் இரங்குமாம். பேயாய் ஒரு பெண் தன் பங்குக்கு அழித்தாள். தன் இனமே தன்னைக் காட்டிக் கொடுத்தும், கூட்டுச் சேர்ந்தும் அழிக்கும்போது என்னதான் செய்ய முடியும் எம்மால்??

அழிந்தோம்.. அழிகிறோம்.. அழிவோம்..

கடைசித் தமிழன் இருக்கும் வரை இதுதான் எம் நிலை. தமிழனாய் இரு போதும். நீ இந்தியனா இலங்கையனா என்பதை சிங்களவன் குண்டுகள் பார்ப்பதில்லை.

ஊரில் இப்போது எப்படி இருக்காங்க எல்லாரும்?? எவர் கேட்டாலும் என் பதில் ரொம்ப நல்லா இருக்காங்க. நிம்மதியா இருக்காங்க. அதற்கு மேல் சொல்லத் தோன்றுவதில்லை. முடிவதில்லை. உள்ளே உறுத்தும் உணர்வு வேறு சொல்கிறதே. எத்தனை நாளைக்கு என்ற கேள்வி முட்டி மோதுகிறதே. என் அண்ணன் குடும்பங்களின் உயிருக்கு உத்தரவாதம் அடுத்த நொடி கூட இல்லை. இந்த நொடி வரைதான். எந்த நொடியும் நிலமை தலைகீழாகலாம். எதிர்காலம் பற்றிய பயத்தையும் தன்மானத்தோடு சேர்த்துப் புதைத்து விட்டு நாளையை மறந்துவிட்டு, இன்றை வாழ்கிறார்கள் என் அண்ணன்கள் போலவே தமிழராம் எம் இனத்தவர்.

போன வாரம் நெகிழ்வான ஒரு பேச்சின்போது அண்ணா சொன்னார்.

“எல்லாம் பாத்தாச்சுடி. மத்தவங்களை விடு. நானே பசி, தாகம், வறுமை, நோய், பிரிவு, சாவு எல்லாம் அனுபவிச்சாச்சு. செத்துட்டேன்னு நினைச்சு, ஏண்டா இன்னும் சாகாம இருக்கேன்னு நினைச்சு அத்தனை அவமானமும் பட்டாச்சு. இனிமே மிச்சமா இருக்கிற இந்த வெத்து உயிரை வச்சுட்டு  என்ன செய்யப் போறேன் தெரியுமா? என்னாலை எவளவு முடியுமோ.. அவளவு.. என் குடும்பம் மட்டுமில்லாம எல்லாரையும் சந்தோஷமா வச்சுக்கப் போறேன். நீங்க எல்லாரும் சந்தோஷமா இருக்கணும்டி. நான் இனிமே அத மட்டும்தான் கேக்கணும். பாக்கணும்”

வார்த்தை வரவில்லை எனக்கு. அண்ணா எப்போதும் இப்படி பேசமாட்டார். என்றாவது தான் தன் மனம் திறப்பார். இன்னமும் மனதில் அண்ணாவின் வார்த்தைகள். வேண்டிக்கொண்டே இருக்கிறேன். அண்ணாவோடு அத்தனை பேருக்குமாக.

ரஜி முதல் முதல் சண்டைப் பகுதியில் இருந்து முகாமுக்குள் வந்ததும் பேசியபோது சொன்னான்

“நான் என்ன வேணா செய்வேண்டி.. குண்டுச் சத்தம் கேக்கிற ஒரு இடத்துக்குள்ளை என் வாழ்க்கேல இனிமே போகமாட்டேன்”

இதன் அர்த்தம் புரிகிறதா உங்களுக்கு?? அப்பா பிள்ளையாக இருந்தபோதும் உயிர்ப் பயம் இருந்தது. ஆனால் இப்போது போலில்லை. என் பிள்ளையாவது ஒரு வாய்க் கஞ்சி உயிர்ப் பயம் இல்லாமல் குடிக்க வேண்டுமே என்பதே அத்தனை பேரதும் தேவையாக ஆகிவிட்டது.

வந்தது வயிற்றுப் பிழைப்புக்கென அப்பாவித் தமிழக மீனவன் என்று சிங்களவனுக்கு நன்றாகவே தெரியும். இருந்தாலும் அவனுக்கு இன்னமும் சொல்வதற்குக் காரணம் இருக்கிறது. எங்கேயோ தப்பிப் போன விடுதலைப்புலி வந்தான். அதான் சுட்டோம். உலகமும் அதை நம்பும். அவனை மன்னிக்கும். நாளையே மறந்தும் போகும். புதிதாய் எந்த நாட்டில் சண்டை மூட்டி ஆயுத ஏற்றுமதி செய்யலாம் என்று ஆதாயம் தேட யோசிக்கும். என் இந்தக் கருத்துத் தவறாக இருக்கலாம். எனக்கு அரசியல் புரிவதில்லை. ஈடுபாடும் இல்லை. ஆனால் மனம் கொதிக்கிறது. இது்ரை கண்ட, கேட்ட, அனுபவித்த கண்ணீர்க் கணங்கள் மீண்டும் மனதை நிறைக்கிறது. இதுவரை இழப்பைச் சந்தித்த மீனவக் குடும்பங்களின் கண்ணீருக்கும், எங்கள் கண்ணீருக்கும் வேறுபாடு இல்லாதது போலவே தீர்வும் இல்லை. தமிழ் வளர்க்கத் தெரிந்தவருக்குத்  தமிழன் உயிர் காக்கத் துப்பில்லாது போனது தமிழரின் சாபக்கேடு.

அழிப்பான். கடைசி இலங்கைத் தமிழன் அழியும் வரை சிங்களவன் அழிப்பான். விடுதலைப்புலி என்ற பட்டத்தோடு அவன் குண்டுக்குத் தேவை ஒரு தமிழன்.

ஒருநாள். அவன் தனிப்பட்ட வாழ்வில் என்றாவது ஒருநாள். எல்லார் கண்ணீருக்கும் அனுபவிப்பான். ஏதோ ஒரு வகையில் வலி அவனாலும் உணரப்படும். யார் என்ன சொன்னாலும் எனக்கு அதில் நிறையவே நம்பிக்கை இருக்கிறது. என் தெய்வம் நின்று கொல்லும்!!

stop nå

23 January, 2011

தைரியமா வாங்க.

வெள்ளி நைட் அம்மா வந்ததில் இருந்து சனி தொடங்கி ஞாயிறு வரை நான் தான் வ போ அத்தனை வீட்டு வேலையும் செய்தேன். அம்மா பாவம். ரெஸ்ட் எடுக்கணும் இல்லையா. திங்கள் நான் வேலைக்கு போனதிலிருந்து வீடு அவங்க கண்ட்ரோலில். அவ்வளவு இன்பமாகத்தான் இருக்கு. வீட்டுக்குள் வந்து கதவு திறந்ததுமே அம்மாவின் கைமண வாசனை. கூடவே ஃபுட்பால் மேச் சத்தம் அதிகமாக கேட்கும் வீட்டில் அப்பா பார்க்கும் கிரிக்கெட் மேச் சத்தம். கொடுத்து வைத்த நாட்கள்.

--

அம்மா சமையலின் ரெண்டாம் நாள். கருவாட்டு குழம்பு.

‘என்னம்மா சொன்னார் உங்க மருமகன்?’ நான் கேட்க

‘சாப்டு போய்ட்டார்மா. பாஆஆஆவமா இருந்திச்சு பார்க்க’ என்று அம்மா பதிலினார்.

ஒரு வேளை இத்தனை நாள் கழிச்சு நல்லதொரு சாப்பாடு சாப்டார் மனுஷன் என்ற அர்த்தத்தில் சொல்லி இருப்பாங்களோ?? கேள்வியை அடுத்த வாய் சோற்றோடு சேர்த்து முழுங்கிவிட்டேன். அம்மா இருக்கும் இந்த மூணு மாசத்துக்குள் தைரியமா எங்க வீட்டுக்கு சாப்பிட வாங்க. அப்புறம் சொல்லவே இல்லைன்னு சொல்லக் கூடாது.

--

ஸ்கைப்பில் அந்தப் பக்கம் அக்காச்சி. இந்தப் பக்கம் சோஃபாவில் கால் நீட்டியபடி அப்பா. அப்பாவின் அருகிலே இடது நெஞ்சில் சாய்ந்து படுத்தபடி நான். என் தலையில் ஆதரவாய் அப்பாவின் இடக்கரம். வலது நெஞ்சில் சாய்ந்து படுத்தபடி சதுர். சதுரை அணைத்துக் கொண்டு அப்பாவுக்கும் அவருக்கும் இடையில் எட்டிப் பார்த்தபடி அம்மா. காட்சி புரிந்ததா மக்கள்ஸ்?? ’என்னம்மா டல்லா இருக்கே’ என்று கேட்ட அப்பாவுக்கு ’ஒண்ணுமில்லைப்பா’ என்ற பதில் கொடுத்தாள் அக்காச்சி. ரெண்டு நிமிஷம் ஆனதும் ‘என்ன.. ஒருத்தங்க ரொம்ப பொழியறாங்க போலை` என்றாள். ’இவங்களா??’ என்று என் தலையில் கையால் சற்று அழுத்திக் காட்டினார் அப்பா.

‘ம்ம்.. அவங்களேதான். மவளே ஒரு மாசம் மட்டும்தான் உதெல்லாம் உனக்குன்னு நினைச்சுக்கோ’

என்று அவள் சொன்னதில் நான் அனுபவித்தது நினைவு வந்தது. உங்களுக்கு நினைவிருக்கா?? ஊருக்கு அக்காச்சி போயிருந்த பொழுது.. டவல் வச்சிருக்கிங்க இல்லை எல்லாரும். அதே உணர்வுதான் அவளுக்கு இப்போது. இந்த நேரத்தில் நானும் கூட இல்லையே என்ற ஏக்கம், கவலை,  இத்தனூண்டு பொறாமை.

--

இப்போது தம்பதி டென்மார்க்கில். பத்து வருடத்தின் பின் சித்தியையும், முதல் முதலாக தம்பி, தங்கச்சியையும் அம்மா பார்த்திருக்கிறார். அதிகமா சித்தியை கவலைப்படுத்த கூடாது என்ற கட்டளை மாதிரியான எங்கள் வேண்டுதலுக்கு அடங்கி அம்மா அடக்கி வாசித்திருக்கிறார். வேலை முடிந்து வரும் தங்கச்சிக்கு அவளவு வரவேற்பு. ’அம்மாவுக்கு எதிர் பெரியம்மா, நிறைய்ய்ய பேசுறாங்க’ என்று என்னிடம் சொன்னவரிடம் ’என்னை மாதிரியாம்மா’ என்று கேட்டேன்.. சிரிக்கிறார். நேற்றுத்தான் யூனிவர்சிட்டியில் இருந்து தம்பி வந்தார். வெடித்து அழுத அம்மாவை அழாதிங்க பெரியம்மா என்று தேற்றியபடி அத்தனை பேரும் அழுதிருக்கிறார்கள். நான் எப்போதும் சொல்வது போல் கண்ணீரும் சமயத்தில் தேவைதான் இல்லையா. சித்தப்பா இப்போதும் எங்களோடு இருந்திருந்தால்..

--

அம்மு ஆல்ரெடி ஒரு நாள் அம்மம்மாவோடு தூக்கம். புதன் கிழமை அவர்கள் திரும்பி வந்ததும் போட்டு வைத்திருக்கும் டைம்டேபிளின் படி இனி தினமும் சதுரும், அம்முவும் அம்மம்மாவோடு தூக்கமாம். ’அப்போ நானு??’ என்று நான் கேட்ட கேள்வி யார் காதிலும் விழவில்லை. பொறுத்திருக்கிறேன். நான் ஒரு தனி பிளானோடு. ஹஹாஹா.. அப்படியே வில்லி சிரிப்பு மாதிரி இல்லை??

--

அக்காச்சி என்னிடம் கவனம்ம்ம்ம்மா சேர்க்கச் சொல்லி அம்மாவிடம் அனுப்பிவிட்டிருக்கா. யாரையென்று பாருங்கள். இவர்தானாம் அவங்க இடத்தில் இருக்கிற வரசித்தி விநாயகர். இப்படி எதுவாவது எழுதி, சொல்லி, செய்து என்னை கண்ணை கசக்க வைப்பதே அவள் வேலை. லவ் யூ அக்காச்சி.

006 அவர் அருள் கிடைத்து யாவரும் நலமா இருக்கணும்.

 

 

 

 

 

வர்ட்டா..

19 January, 2011

ஹா(ர்)ட்ஸ் ஆஃப் டூ யூ விஜய்!!

இன்னமும் பேசிக் கொண்டே இருக்கிறோம். ஏதாவதொன்றில் காவலன் வந்து போகிறான். ரொம்ப நாளைக்கு அப்புறம் நான் அறிந்த எல்லோரையும் திருப்திப்படுத்தி இருக்கிறார் விஜய் எனும்போது என் சந்தோஷம் பற்றி சொல்லத் தேவையில்லை. தியேட்டர் வந்திருந்தவர்களில் யாரும் படத்தை குறைவாக சொல்லவில்லை. வெளியே வரும்போது பின்னால் வந்த ஒருவர் சொல்லியது ‘நல்லவேளை.. வீக் எண்ட்ல மட்டும் போட்டிருந்தா லேட்டா வந்த எனக்கு சீட் கிடைச்சிருக்காது’ வேலை நாளையும் பொருட்படுத்தாமல் நிறைவான கூட்டம். இன்னொருவர் ‘இன்னொரு ஷோ ஓட சொல்ணும்பா. மனுஷன் அசத்திட்டான் போ’ என்பதாய் சொல்லிக் கொண்டு போனார்.

பெரிய ஒரு குறை. டிக்கட் வந்து சேரவில்லையாம். குட்டியாக ஒரு சீட்டுத்தான் கொடுத்தார்கள். டிக்கட்டை போட்டா பிடிச்சு பிளாக்கில் போடுவதை அவர்களிடம் சொல்ல முடியாதே. 6 மணிக்கு படம். நாங்கள் உள்ளே போனபோது மணி 5:15. அப்படியும் பின் வரிசைகள் முழுவதும் ஃபுல். ஜாக்கெட், மஃப்ளர், சீட்டுக்கொன்றாக ஒரு கிளவ்ஸ், பாப்கார்ன் பாக்ஸ் என்று வைத்து சகட்டுமேனிக்கு இடம் பிடித்து வைத்திருந்தார்கள். இடையிடையே ஒன்றிரண்டு காலியாக இருந்ததே ஒழிய 6 சீட் மொத்தமாக கிடைக்கவில்லை. வேறு வழியின்றி முன்னிருந்து ஐந்தாவது வரிசையில் 6 சீட்களில் நானும் துண்டை போட்டேன்.

நேற்று கிளம்பும்போதே அப்பா என்ன சொல்வாரோ என்ற எதிர்பார்ப்போடுதான் போனேன். அப்பாவுக்கு விஜய் பிடிக்காது. ரொம்ப நாளைக்கு அப்புறம் தியேட்டர் போவதன் மகிழ்வு ரேகைகள் அம்மா முகத்திலும் தெரிந்தது. அம்மாவுக்கும் விஜய்.. ம்ஹூம்.. கண்ணாளன் அசின் ரசிகன் என்பதால் கவலை இல்லை. ஆனால் அசின் கொஞ்சம் பெரிய பொண்ணா ஆயிட்டாங்க போலன்னு எனக்கு போலவே அவருக்கும் தோணிச்சாம்.

’பரவால்லை.. விஜய் இந்த படத்திலை நல்ல நடிப்பு. முடிவு கொஞ்சம் வேற மாதிரி இருந்திருக்கலாம். மத்தபடி எல்லாமே நல்லாருக்கு’ என்று அப்பா சொன்னார். கடைசிக் காட்சிகளில் அம்மா அடிக்கடி கண்ணாடி கழற்றி கண்ணீரை துடைத்துக்கொண்டு இருந்தது என் கண்ணீர்க் கண்களுக்குள் நன்றாகத் தெரிந்தது. வீட்டுக்கு வந்ததும் ஸ்கைப்பில் அம்மா படம் பற்றி அக்காச்சியிடம் புகழ்ந்து கொண்டிருந்தார். ’விடுங்கம்மா. அவளே போய் பார்க்கட்டும். அப்போதான் இன்னும் நல்லாருக்கும். ஆனா கட்சில அம்ஸ் அழுதிச்சு அக்காச்சி. பக்கத்திலை மருமகன் இருக்கும்போதே இந்த பொண்ணு விஜய இவ்ளோ சைட் அடிக்குதேன்னு நினைச்சுது போல. அப்பா கைல வேற அடிக்கடி எட்டி எட்டி தட்டிட்டே இருந்துச்சு’ என்றேன். ‘அய்யோ அப்டில்லாம் இல்லைம்மா. அது அப்பாவுக்கு சாக்லெட், பாப்கார்ன் குடுத்தேன். அதோட எனக்கு ரொம்ப கவலையா போச்சும்மா.. அந்த குட்டிப் பையன் வந்ததும்.. அதுக்கு பின்னாடி நடக்குறதும்’னாங்க.

எனக்கும் ஒரு சின்னக் குறை. ஸ்டெப் ஸ்டெப் பாடல் இன்னும் கொஞ்ஞ்ஞ்சம் நல்லா வந்திருக்கலாம். வேறு ஒரு சந்தர்ப்பத்தில் இந்த பாடல் வருவதால் என் எதிர்பார்ப்போடு பொருந்தவில்லை. வடிவேலும் விஜயும் சேர்ந்து செய்யும் காமெடியில் வயிறு புண். சதுவும், அம்முவும் அத்தனை சிரிப்ப்ப்ப்பு. இந்தப் படத்தை யாராச்சும் ரீமேக் செய்யலாமேன்னு நான் ரத்த சரித்திரம் பாத்திட்டு எழுதினது போல எதாவது உளறி வச்சிடுவேன்னு நினைச்சுதோ என்னவோ ரெண்டு நாள் முன்னதாகவே ஒரு நட்பு அடிக்கடி சொல்லிச்சு இதோட ஒரிஜினல் நான் பாத்திருக்கேன்னு.

நீ எப்டி இருந்தா என்ன. எனக்கு உன் மனம்தான் முக்கியம். நீ இல்லை என்பதாய் அம்முவிடம் சொல்லும்போது என் பள்ளி நாட்களில் எனக்கும் என் உயிர் நட்புக்கும் நடந்த ஒரு நிகழ்வு நினைவு வந்திச்சு. அவ கிட்ட சொன்னேன் உதைக்காத குறை எனக்கு. அது பத்தி தனி போஸ்ட்ல சொல்றேன். யாரது பாடலில் ரெண்டு விஜயும் வேறுபட்ட நடிப்பில் அவ்ளோ அசத்துறாங்க. பார்க்கில் அசினை அம்முக்குட்டியாக நினைத்து பேசிப் பார்க்கும் இடம் அருமை. இப்போ நீங்க எனக்காக வேண்டிக்கோங்கன்னு அசினிடம் சொல்லும்போது மூக்கை சுழிப்பது செம க்யூட். பாருங்க. இத்தோட நான் முடிக்கலைன்னா அப்புறம் முழு படத்தையும் இங்க சொல்லிடுவேன். அதனால இந்த படத்தை இப்போ பாருங்க. இஷ்டப்பட்டவங்க தியேட்டர்ல போய் படத்தை பாருங்க. காவலன் கலக்கல். விஜய் விஜய் தான்.

Kaavalan_vijay

14 January, 2011

அம்மா செல்லமா.. அப்பா செல்லமா..

என் மனச் சிதறல்கள் பாலாஜி சரவணா போன வருஷம் நடைபெற்ற முக்கியமான நிகழ்வுகள் பற்றி எழுதச் சொல்லி ஒரு தொடர் பதிவுக்கு அழைத்திருந்தார். ரொம்ப நன்றி நண்பரே. எனக்கு தொடர் பதிவு எழுதுவதில் கஷ்டமில்லை. அதைத் தொடர யாரைக் கூப்பிடுவது என்பதில்தான் படு சிக்கல். நல்லவேளையாக இந்த வருஷம் வந்த முதல் தொடர்பதிவுக்கான அழைப்பில் எனக்கு அந்த சிக்கல் இல்லை. என்னைத் தவிர எல்லாரும் எழுதிவிட்டார்கள். உஸ்ஸ்ஸ்ஸ்..

போன வருஷம்.. ஊரில் உறவுகள் ஓரளவேனும் நிம்மதியாக இருக்கிறார்கள் என்பதே மிகப் பெரிய ஆசுவாசம். அது தவிர குறிப்பாக ஒரு விஷயம் மனதை புரட்டிப் போட்டு மாயை காட்டுகிறது.. சொன்னால் குவலயம் தாங்காது என்பதால் விட்டு விடுகிறேன்.. சும்மா பொத்தாம் பொதுவில் சொல்வதானால் சென்ற வருஷத்தில்

குறையாத கண்ணீர்..

நிறைவான சந்தோசம்..

மனம் நிறைந்த வலி..

உயிர் நிறைந்த காதல்..

சில புதிய நட்புகள்..

பல இனிய நாட்கள்..

பொய்த்துப்போன உறவுகள்  தந்த  ஏமாற்றங்கள்.. 

கூடவே ஆச்சரியங்கள்..

என பல வண்ணங்களின் கலவை ஓவியம் 2010.

எல்லாவற்றுக்கும் மேலாக இத்தனை விரைவாக ஓடிச் சென்ற நாட்கள் தந்த அதிர்ச்சி பெரிதாக உள்ளது. அதற்குள் ஒரு வருடம் போய்விட்டதா? என்ன சாதித்தேன் நான் என்று நினைக்கத் தோன்றவில்லை. மாறாக என்னை உயிருடன் வைத்திருக்கும் என் பிள்ளையாரப்பனுக்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன். ஒரு வருடம் உயிராபத்தில்லாமல் இருப்பதென்பதே எனக்கு பெரிய சாதனையாகத் தெரிகிறது, நடப்புலகில்.

பதிவுலகைப் பொறுத்தவரை வாசிக்கும் ஆர்வம் குறையவில்லை. எழுதும் ஆர்வம் என்னவோ வரவே காணோம். என் எழுத்துப் பற்றி எனக்குத் தெரிந்தாலும்.. ரைட்டு விடுங்க.. நேராவே சொல்லிடறேன். என்னதான் நான் மொக்கையா எழுதினாலும் அதைக் கூட எழுத வேண்டுமென்று இப்போதெல்லாம் முன்போல் தோன்றுவதில்லை. ஏதோ ஒரு அயர்ச்சி. வெறுப்பு. விருப்பமின்மை. சரி உங்களுக்காவது கமண்ட் போடுவோம் என்றால் ஆஃபீசில் டீ லீ யின் (சனிப்)பார்வை என் பக்கமே இருக்கிறது. படித்துவிடுகிறேன். அதில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் டைப்புவதில்தான் சிக்கலே. அதனால் பெரும்பாலும் ஒரு ஸ்மைலியோ, அருமையோ, நல்லா இருக்கோ போட்டுவிட்டு போக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். மன்னித்துக் கொள்ளுங்கள். வீட்டுக்கு வந்து போடலாம் என்றால் அதற்குள் நீங்கள் அடுத்த பதிவு என்னவென்று நினைக்கத் தொடங்கிவிடுகிறீர்கள். நேர வேறுபாடு. இருந்தாலும் வீட்டுக்கு வந்து படித்து கமண்ட் போடும்போது கொஞ்சம் விரிவாக கருத்தைச் சொல்வேன்.

2004 அக்டோபரில் அம்மா அப்பாவை பார்த்தது. நாளை முதல் முறையாக அம்மாவும், இரண்டாம் முறையாக அப்பாவும் இங்கு வருகிறார்கள். அதுவும் ’ஷித்தி அப்புச்சி அம்மம்மாவை அங்கயே வச்சுக்கப் போறா.. இனிமே அவங்க இங்க வரமாட்டாங்க’ என்று அழுத கருணுக்கு சத்தியம் செய்து கொடுத்து அம்மா மூன்று மாதங்களும், அப்பா வேலை காரணமாக ஒரு மாதமும் இருப்பதாக முடிவாகியுள்ளது. இப்போது ஏர்போர்ட்டில் நிற்கிறார்கள். நாளை எங்கள் நேரம் பகல் மூன்றரை மணிக்கு விமானம் தரை இறங்கும். என் கால்கள் தரை பதியவில்லை. இரண்டு நாள் லீவு போட்டுவிட்டு வீட்டிலேயே இருக்கிறேன். அவ்வப்போது அம்முவும் சதுவும் வேறு அம்மா சந்தோஷமா உங்களுக்கு? எங்களுக்கும்னு சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். யார் எப்போது அம்மம்மாவுடன் தூக்கம், எங்கெல்லாம் போவது போன்று ஏகப்பட்ட பிளான் போட்டு முடித்தாயிற்று. போன வாரம் தங்கா அக்கா வீட்டில் நடந்த பேச்சு இது.

கண்ணாளன் – தங்கா அக்கா இவ மூஞ்சி பாத்திங்களா.. அம்மா வர குஷியிலை அப்பளம் மாதிரி எப்டி விரிஞ்சு போய் கிடக்கு.

நான் – கிர்ர்ர்ர்ர்ர் (பார்வை)

விஜய் அண்ணா(தங்கா அக்கா ஹபி) – அதுக்கு ஏங்க அந்தக் கால பக்திப் படத்திலை வரா மாதிரி அப்டியே கண்ணாலையே லேசர் கதிர்களை விட்டு அவர பொசுக்கறிங்க..

நானு – பின்ன என்னண்ணா.. உதாரணமா ஒரு பூவை சொல்ல வேணாம். அப்பளம்னு கைய விரிச்ச்ச்ச்சு வேற காட்டணுமோ..

கண்ஸ் – இப்போ நான் என்ன தப்பா சொல்லிட்டேன்.. உன் முகம் மாதிரி ஒரு பூ பேர் சொல்லு.. சொல்லிட்டுப் போறேன்.

இந்த மொக்கைசாமிக்கு இதுக்கு மேலை நான் என்ன சொல்ல. இருந்தாலும் அவர் கேட்ட கேள்வி ரொம்ப கரெக்டுங்க. கூகிளாண்டவர் தந்த அப்பளத்தை பாத்தா உதாரணம் சரின்னுதான் தோணுது.

Appalam

சரி அதை விடுங்க. இப்போ மறுபடி அம்மா பற்றி பேசலாம். பாத்ததும் அம்மாவை கட்டிக்கொண்டு கண்டிப்பாக அழுவேன். அப்பா உச்சி மோந்து ஒரு முத்தம் கொடுப்பார். சித்தி ஒரு வாரத்தில் ஊட்டி வளர்த்த வெயிட்டே இறங்கக் காணோம். இதில் மூணு மாசம் அம்மா சமையல். ’இங்க வந்துட்டு போங்களேன்’னு கண்ணாளன் பேச்செடுத்த உடனேயே அக்காச்சியிடம் பதியம் வைத்த மரங்களில் வேப்பங் கன்று ஒன்றை (ஊருக்கு போன பொழுது விதை கொண்டு வந்து பதியம் வச்சு முளைச்சிருக்காம். கனடாவில் வன்னி வேம்பு. அதுவும் பூச்சாடிக்குள்) ‘பாலித்தின்ல ஒழுங்கா பேக் செஞ்சு குடும்மா அங்க போய் நான் நடணும்’னு கேட்ட என் குழந்தை அம்மாவை கொஞ்சிச் சீராட்ட வேண்டும். ஊருக்கு போன ரெண்டு முறையும் என் கையால் ஒரு டீ கூட போட்டு குடுத்ததில்லை நான். எல்லாத்துக்கும் சேர்த்து இந்த மூன்று மாதங்களும் ஜமாய்த்துவிடலாம். அப்பாவின் என் கடைக்குட்டி பக்குவம் பாத்தியாப்பா என்ற புகழாரம் அம்மா அடிக்கடி கேக்க வேண்டியதும் வரும். 

இப்போ கால் செஞ்சப்போ ஆளாளுக்கு வாங்கிக் குவித்து ஓவர் வெயிட்டாகிப் போனதில் எதை குறைப்பதென்று தெரியாமல் முழித்துக் கொண்டு உனக்கு இது வேணுமா, அதை வச்சிட்டு வரவா, இல்லை இது அவளுக்கு ரொம்ப பிடிக்கும் கொண்டு போயே ஆகணும்னு பரபரப்பா கடைசி நேரத்திலை பேக் செஞ்சிட்டு இருக்காங்க. அப்டி என்னடிப்பா வாங்கினிங்கன்னு கேட்டேன். இல்லைடி நேத்து கரெக்டா இருந்திச்சு.. இன்னைக்கு என்னமோ கல்லு கனத்திலை இருக்குன்னு சொல்றா அக்காச்சி. நீ என்ன செய்வியோ எதையாச்சும் குறைச்சு சேரனை உள்ளை வச்சு அனுப்பிடுன்னேன். நீ வேற.. சூப்பரா ட்ரஸ் பண்ணிட்டு ஷித்திட்ட போகன்னு அவரும் ரெடியாத்தான் நிக்கறார்னா. ஸ்கைப்ல பேசும்போது அழுவார். என்ன சொல்லி சமாளிக்க போறேன்னு தெரிலைங்க.

எல்லாரும் அவங்க நல்லபடியா வந்து சேரணும்னு மனதார வேண்டிக்கொள்ளுங்க. நான் கொஞ்சமாவது தூங்க முயற்சிக்கறேன்.

எல்லாருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்!!

வர்ட்டா..

09 January, 2011

முத்தம்ம்ம்ம்மா..

தூறல் மழை

உன் அருகில் நான்

நம்மைச் சுமந்த கார்

தெரு சேர்ந்த நீரை மெதுவே கிழித்தபடி

அழகு பேச்சு சிரிப்பென்ற உன்

மும்முனைத் தாக்குதலில்

மோக முளைவிட்டது

உன்னை முத்தமிடும் ஆசை

இதழாயுதத்தை இயக்கிவிட்டேன்

கன்னத்தில் தொடங்கி

காது கழுத்து மூக்கு நெற்றி

தாடை தொட்டு தலை திருப்பி

உதடு வரை ஜெயித்தேன்

என் முத்தச் சத்தங்கள் வெளிக்கேளாமல்

கண்ணாடியில் சடசடத்தது

பெருமழை

இதழ்கள் விழி மறைத்தபோது மட்டும்

செல்லமாய் விலக்கி வைத்தாய்

மூர்க்கமானேன்

வலம் ஒடித்து மரத்தின் கீழ்

காருக்கு அடைக்கலம் கொடுத்தாய்

பொறுமை உடைத்து

முத்தப்போரில் நீ என் எதிராளியானாய்

ஆயுதங்கள் பலவாயின

சிலிர்த்துப் போய் தன் பங்குக்கு

சிலிர் நீரைக் கொட்டி வெட்கியது

மழை நின்ற பின்னும்

பெருமரம்.

27 December, 2010

யார் சித்தி விஷால்??

’என் பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டாஆஆஆ’

செம ஜாலியாக ஆனந்தக் கூச்சல் போட்டுட்டு இருக்கார் என்னவர். வீட்டில் தனியாக இல்லை.. நண்பர்கள் கூட. ஒரு வார விடுமுறை. அம்மாவுக்கு இணையான என் சித்தி வீட்டுக்கு வந்திருக்கிறோம். சின்னம்மம்மா வீடு என்றதுமே குஷியாகி விட்டார்கள் குட்டீஸ். நான்கு வருடங்களின் முன்னர் நான்கு நாட்கள் சித்தி வீட்டுக்குத் தனியாக வந்ததற்கு அப்புறமாக இப்பொழுது தான் கண்ணாளனை விட்டுத் தனியாக வருகிறேன் என்பதாலோ என்னவோ பிரிவு கொஞ்சம் கசந்தது. மனம் எக்கச்சக்கமாகக் குழம்பிப் போயிருந்தது. அவரிடம் ஏர்போர்ட்டில் வைத்து ‘விண்டர் சமயம் ஃப்ளைட்ல போக கூடாதுப்பா` என்றேன்.‘அப்போ நில்லு. உன்னை யார் போக சொன்னா’ என்றார்.  நாங்கள் கிளம்பிய அன்று நார்வேயில் பயங்கர பனி வீழ்ச்சி. அவருக்கும் ஒரு இதுவாக(?) இருந்ததோ என்னவோ டென்மார்க் ஃப்ளைட் போர்டிங் என்று வரும்வரை பேசிக் கொண்டிருந்தார்.

ஒரு வழியாக குறித்த நேரத்தில் ஃப்ளைட் கிளம்பியது. அப்பா  வராததால் விமானப் பயணத்தின் சேஃப்டி குறித்து அத்தனை சந்தேகம் சதுருக்கு. அவருக்குத் தைரியமாகப் பதிலினாலும் எனக்குள் இருந்த கிலி இன்னும் கூடியது. கூப்பிட்டேன் கில்லியை. காவலனாய் உடன் வந்தார்.

077

சிக்கன் சான்விச்சை சாப்பிட்டு முடித்ததும் ஃப்ளைட் லேண்டாகப் போது பெல்ட்டை மாட்டுங்கள் என்றார் பைலட். இரண்டு ஹாட் சாக்லேட், பாதி கோக்கை பிடுங்கிக் கொண்டு போனார் ஏர்ஹோஸ்டஸ். கரியானது காசு என்று இப்போது போல் அப்போது தோன்றவில்லை. அத்தனை பனி மூட்டம், ஃப்ளைட்டின் ஆட்டம். போச்சுடா. இன்னைக்கு தரை இறங்கின மாதிரித்தான் என்று வேண்டுதலோடு ஆஃப் செய்த ஐபாடை பார்த்துக் கொண்டே ஸ்டெப் ஸ்டெப் என்று மனதுக்குள் பாட ஆரம்பித்தேன். உடன் தரை தட்டியது விமானம்.

கொடுமை கொடுமை என்ற கதையானது நம் நிலைமை. அங்கிருந்த பனிக்கு சற்றும் சளைக்காமல் இங்கும் அதி பனி வீழ்ச்சி இந்த வருடம். சித்தி ஏர்போர்ட் வரை காரில் வருவது பயம் என்பதால் தம்பி ட்ரெய்னில் வந்து எங்களை கூட்டிப் போவதாக பிளான் மாற்றப்பட்டது. மேட்ரோவும், ட்ரெயினுமாய் பயணம். அனுபவம் புதியதாக இருந்தது. இலவச நெட் வசதி செய்திருக்கிறார்கள் இரண்டுக்குள்ளும். சட்டென்று பிளாக் படிக்கலாமா என்று எழுந்த ஆசையை அடக்கிக்கொண்டு தம்பியோடு பேசியபடி வெளிப்புறத்தை ரசிக்க ஆரம்பித்தேன்.

ஸ்டேஷனில் சித்தி காரோடு காத்திருந்தார். வீட்டில் தங்கச்சியின் வரவேற்பு. அன்றிலிருந்து அவ்வப்போது பஸ்ஸில் எட்டிப் பார்க்க மட்டுமே நேரம். சித்தி கவனிப்பில் ‘என்னடி ரெண்டு நாள்லவே இப்டி குண்டாயிட்டே’ என்கிறார் ஸ்கைப்பில் கண்ணாளன். இரவு இரண்டு மணிக்குத் தூங்கி பகல் பனிரண்டு மணிக்கு எழுந்து செம பிஸியாக இருக்கிறேன். உங்கள் பதிவுகள் ஒழுங்காகப் படிக்கக் கூட முடியவில்லை. மன்னியுங்கள்.

டென்மார்க்குக்கு முதல் முதலாய் விண்டர் சமயம் வந்தாலும் சித்தி ஃப்ரெண்ட்ஸ் திட்டித் தீர்க்கிறார்கள். நார்வே ஸ்னோவை இங்கே கொண்டு வந்துவிட்டேனாம். வந்த அன்று இரவு பனிப்புயல் வேறு. இந்த ஊர் பனி ரொம்ப மோசம். எனக்கு ஒத்து வராமல் காய்ச்சல். தொண்டை வேறு கட்டிக்கொண்டு பேசவும் முடியவில்லை. சித்தி வீட்டைச் சுற்றி எப்படிக் குவிந்திருக்கிறது பாருங்கள்.

098 099

100 

102 103

தங்கச்சி எல்லார் கிட்டவும் என்னோட அக்கா வந்திருக்காங்க என்று சொல்லும்போது மருந்தில்லாமலே நடமாட முடிகிறது. அத்தனை மகிழ்வு அவருக்கு. சித்தப்பாவின் பேச்சு ஏதாவது ஒரு விஷயத்தில் எப்போதும் வந்து போகிறது. அவரில்லாத உணர்வை அழித்தும் போகிறது. முன்பு வரும் சமயம் பேசிய பழைய கதைகளெல்லாம் மறுபடி பேசுகிறோம். இம் முறை அம்மு, சதுரும் கேட்க ஆசைப்படுவதால். சித்தியின் டனிஷ் நண்பி வீட்டில்தான் கிறிஸ்துமஸ் விருந்து. எங்கள் உயிரையும் சேர்த்துக் கையில் பிடித்தபடி சித்தி காரில் அவர்கள் வீட்டுக்குக் கூட்டிச் சென்றார். அவர்களை முன்னரே சந்தித்திருந்தாலும் அதிகம் பேசியதில்லை. அந்நிய வீடு என்ற எண்ணமே இல்லாமல் பழகினார்கள். அவர்களுக்கும் அந்த உணர்வு வராதபடி நாங்களும் பழகியதாகச் சொல்லி சந்தோஷப்பட்டார்கள்.

ஒவொன்றிலும் நார்வே முறை என்ன என்று கேட்டுத் தெரிந்து கொண்டார்கள். டனிஷ் மக்கள் தொண்டைக்குள் உருளைக்கிழங்கை வைத்துக் கொண்டு பேசுவதாக நார்வே மக்களால் கிண்டல் செய்யப்படுவார்கள். அப்படி இருக்கும் அவர்கள் உச்சரிப்பு. அவர்கள் பேசியதில் எங்காவது ஓரிரு சொல்லைப் பொருத்திப் புரிந்து கொண்டேன். எதுவும் புரியாத இடத்தில் சும்மா சிரித்து வைத்தேன். இல்லை நீ புரிந்தே ஆக வேண்டும் என்று அவர்கள் அடம்பிடித்து பதிலை எதிர்பார்த்த சமயங்களில் சித்தி உதவிக்கு வந்தார். அன்பானவர்கள். சித்தி வழி நிறையவே அவர்கள் பற்றி அறிந்திருந்தாலும் நேரில் பழகியபோது அன்பு அதிகமானது.

117 சித்தியிடம் என்னைப் பற்றி அறிந்து வைத்திருந்ததால் கான்(Karen என்பதை இப்படித்தான் உச்சரிக்கிறார்கள்) எனக்குக் கொடுத்த க்ளாஸ். அம்முவுக்கு ப்ரின்சஸ், சதுருக்கு பென்குவின்.

 

 

என்னில் சித்தியின் சாயல் இருப்பதாக எல்லோரும் சொன்னார்கள். தம்பியின் சாயலில் அம்மாவின் அத்தனை சகோதரங்களதும் ஒரு ஆண்பிள்ளை இருப்பதை சித்தி சொன்னார். தங்கச்சியில் அக்காச்சியின் சாயல். உடனேயே ’அப்போ விஷால் யார் மாதிரிம்மா’ என்றார் தங்கச்சி. ‘அது யார் சித்தி விஷால்’ என்றேன் நான். முன்னரே உங்களுக்குச் சொன்னதாக நினைவு. ரஜியை விஷால் மாதிரி என்று சொல்லி வந்த தங்கச்சி இப்பொழுதெல்லாம் அவனை விஷால் என்றே சொல்கிறாராம். அவனும் கால் செய்யும்போது நான் விஷால் பேசறேன் என்றே சொல்கிறானாம். இதில் சிரிப்பு என்னவென்றால் தங்கச்சி மூலம் கான் குடும்பத்துக்கு விஜய், விஷால், சிம்பு, அசினைத் தெரிந்திருக்கிறது.

128 அவர்கள் வீட்டின் டனிஷ் பேசும் குருவி. பெயர் நினைவில்லை. துணையின்றி இருந்தது வருத்தமாக இருந்ததால் நான் படம் எடுக்கவில்லை. அம்மு எடுத்தார்.

 

 

 

127 gingerbread house பக்கத்தில் கான் வைத்திருந்த மெழுகுவத்திகளை நான் எடுத்த இந்தப் படம் தம்பிக்குப் பிடித்திருந்ததால் இதையும் சேர்த்திருக்கின்றேன்.

எல்லோருக்கும் கிறிஸ்துமஸ் நன்றாக அமைந்திருக்கும்.  அந்த மகிழ்வோடு இருக்கும் உங்களை அதிகம் தொல்லை செய்யாமல் மீதியை அடுத்த இடுகையாக எழுதலாமென்று நினைக்கிறேன். சரிதானே?

வர்ட்டா..

13 December, 2010

ரத்தத்துள் காதல்!! டம்டடடம்!!

ப்ரதாப்.. அந்த பாத்திரமாகவே அவர் மாறிவிட்டதால் எனக்கு அங்கே விவேக் ஓப்ராய் தெரியவில்லை.. பிரதாப் என்பதை விட ப்ரதாப் அவருக்கு பொருத்தமாக இருப்பதாகத் தோன்றியது.. அப்படி எழுதுவது தவறாகத் தெரிந்தாலும் ப்ரதாப் என்றே சொல்லிக் கொள்வோம். ப்ரதாப் ஜெயிலுக்கு வெளியே.. உள்ளே சூர்யா.. கண்கள் கூண்டுக்குள் அடைபட்ட புலியை நினைவுபடுத்தின.

’கனவு கண்டுக்கிட்டே இரு..’ 

’முடிஞ்சா நீ தூங்கு..’

இது ப்ரதாப்பும் சூர்யாவும் பேசிக் கொள்ளும் வசனம். ரசித்தேன். ஏன் ரசித்தேன் என்று நினைப்பீர்கள். ஆதலால் சொல்கிறேன். கொலைவெறியில் அவர்கள் பேசிக் கொண்டது இது. இதையே ஒரு ஆணும் பெண்ணும் பேசினால் காதல்வெறி ஆகிவிடும் இல்லையா?? உஸ்ஸ்ஸ்ஸ் சொல்லிக் கொள்ளுங்கள் உங்களுக்கு கொலைவெறி குறையும்.

’சூர்யா எனக்கு தெரியும் சூர்யா.. உனக்கு நான் முக்கியம் இல்லைல்ல.. இதோ.. இந்த சிமெண்டு, செங்கல்லு, மண்ணு.. இதானே முக்கியம்’ என்னைப் போலவே ஆதங்கத்தோடு கேட்கிறார் பிரியா மணி.

‘நான் அப்டி சொல்லையே’ சமாளிக்கிறார் சூர்யா என் கண்ணனைப் போலவே.

‘என்னைக்காவது என்னை பத்தி பேசி இருக்கியா.. என்னையும் கொஞ்சம் யோசிப்பா’ கெஞ்சலோடான கோவம்.

தெரிந்து கொண்டே கேட்பவளிடம் என்ன சொல்வது என்பதாய் சிரிப்போடு தன் மனதிருக்கும் இடம் பார்த்து சூர்யா சொல்வார்..

’இங்க.. எவ்ளோ இருக்கு தெரியுமா?’

’ம்ஹூம்..’ பிரியா மணி உதட்டை சுளிக்கிறார் என்னைப் போலவே.   பின் கேட்கிறார். ‘சொல்லு’ கண்களில்  ஆர்வத்தோடு.  அதை விட ஆர்வம் என் கண்களிலும் இருக்கும்.

’மை கண்மணி..’ (இப்படித்தான் எனக்கு கேட்டது) சூர்யா ஆரம்பிக்க ஃபோன் ஒலிக்கிறது. என் கண்ணனுக்குப் போலவே. இப்படித்தான் எங்களுக்குள்ளும் ஆகிப் போகும். அவன் சொல்ல ஆரம்பிக்கும்போது ஏதாவது ஒரு தடை வந்துவிடும். கல்லும், மண்ணும், சிமெண்டும் வேண்டுமானால் வேறாக இருக்கலாம். ஆனால் நான் கேட்பதும் அவன் மழுப்புவதும் என்னமோ அப்படியே காட்சியாகி இருந்தது. ரத்த சரித்திரத்துக்குள் என் காதலை பார்த்து சொக்கிப் போய் இருந்துவிட்டேன். மறுபடி உஸ்ஸ்ஸ்ஸ் சொல்லிக் கொள்ளுங்கள்.  உங்களுக்கு மறுபடி கொலைவெறி குறையும்.

k

ஜெயிலுக்குள் வரும் சண்டைக்காட்சி.. சூர்யாவின் சிக்ஸ் பேக் உடலுக்கு பொருத்தமாக இருந்தது. தைரியமாக சட்டை பற்றி சட்டை செய்யாமல் சண்டை போடலாம் சூர்யா.

நினைத்ததை முடித்து வண்டியை ஓட்டியபடி ஜெயிலுக்குத் திரும்பி வரும் சூர்யா.. முதலில் ப்ரதாப்பை தப்ப விட்டுவிட்டு வரும் சூர்யாவுக்கு நேர் எதிர். கோபம், சந்தோஷம், வருத்தம், ஆற்றாமை என கலவையாய் ஒரு அபார நடிப்பு.. ஹாட்ஸ் ஆஃப் டூ யூ சூர்யா..

அதே ஜெயிலுக்குள் கட்சி ஆள் சூர்யாவை சந்திக்க வருகிறார்.. ஃபேன் சுற்றும் சத்தம் மட்டும் கேட்கிறது அந்த நிசப்தத்தில்.. இப்படியாகச் சில காட்சிகளும் பின்னணியும் பிடித்திருந்தது.

ஒன்றிரண்டு தவிர்த்து மீதி காட்சிகள் ஸ்லோமோஷனில் போகும்போதெல்லாம் சீக்கிரம் போங்களேன் என்று பிடித்துத் தள்ளிவிட வேண்டும்போல் இருந்தது.

இசையிலேயே ரத்தம் தெறிக்கிறது. ஒரு Hardrock concert கேட்டதுபோல், சண்டைக்காட்சிகளில் பார்த்ததுபோல் இருந்தது. பின்னணியும் மிரட்டுகிறது. பாடல்கள்.. பயந்துவிட்டேன் கேட்டு.. ஆனால் இந்த ’துணிஞ்சு வெட்டுவேன்..’ மட்டும் எனக்கு பிடித்து விட்டது.

’மரணம் துரத்துது.. மரணம் துரத்துது..

கனவில் கூட பயத்தைக் கொடுக்கும் மரணம் துரத்துது..

வேட்டை நடக்குது.. வேட்டை நடக்குது..

உயிரைப் பறிக்கும் உயிரைப் பறிக்கும் வேட்டை நடக்குது..

டம்டடடம் டம்டடடம் டம்டடடம் வெறியாட்டம்

டம்டடடம் டம்டடடம் டம்டடடம்  டடம்டம்’

கண்முன்னே ரத்தசரித்திரத்தைப் பார்த்த ஒரு உணர்வை இந்தப் பாடல் தருகிறதென்னவோ உண்மைதான்.

குழந்தையில் கொண்டு வந்து முடித்த விதம்.. எல்லாவற்றையும் எங்கள் ஊகத்துக்கே விட்டு விட்டது. இல்லை இதை யாராவது தொடர்ந்து பார்ட் டூவாக எடுக்க ஏதுவாய் அப்படி முடித்தார்களா தெரியவைல்லை. ஆனால் தைரியமாக பார்ட் டூ எடுக்கலாம். நான் பார்ப்பேன். ஏனென்றால் எனக்கு பொறுமை ஜாஸ்தியாம். ஊரில் சொல்லிக் கொல்கிறார்கள். உங்கள் கொலைவெறியை மனதில் வைத்து ‘ல்’ சரியாகத்தான் டைப்பியுள்ளேன்.

வர்ட்டா..

09 December, 2010

பனியில கண்டம்!!

ஒரே நாளில் எத்த்த்தனை கொலை முயற்சி.. உஸ்ஸ்ஸ்.. ஒரு தடவை வீட்டை விட்டு வெளியே சென்றால் திரும்பி மீண்டும் வீட்டுக்குள் வருவேன் என்பதற்கு எந்த காரண்டியும் கிடையாது. தினமும் காலையில் ஆஃபீஸ் போகலாம்னு வண்டிய ஸ்டார்ட் செய்து ரிவர்ஸ் பண்ணா சர்ரென்று வழுக்கிக் கொண்டுபோகிறது. கம்பி வேலி மட்டும் இல்லாவிட்டால் நான் காலி. தப்பிச்சேண்டா சாமியென்று நினைப்பதற்குள் தண்ணி போட்ட ஆசாமியாட்டம் வண்டி சாமியாடும் நேர் ரோட்டிலேயே. அடிக்கடி வண்டி s எழுதியபடி போய்க்கொண்டிருக்கும்.

ரவுண்ட் அபவுட், சாலை வளைவுகள், திருப்பங்களில் எனக்காகக் காத்திருக்கும் அடுத்த கண்டம். பின்னாடி வரும் வண்டிகள் மட்டும் கவனமாக வராவிட்டால் நான் திருப்பும் வழி போகாது தன் வழியில் திரும்பிச் சுழன்று ஒரு c போட்டுத் திரும்பி நிற்கும் என் வண்டி அங்கேயே டமால்.

அதிலும் தப்பி இதயம் ஒரு சீராக இயங்க ஆரம்பிக்கும்போதுதான் கவனிப்பேன். எவண்டா இங்க இருந்த ரோட்டை ஆட்டைய போட்டதுன்னு. மேகம் அப்படியே தரை இறங்கி தேவலோக எஃபெக்டில் இருக்கும். புகை மூட்டத்தின் இடையே வாகனங்களின் லைட் வெளிச்சம் மிக அருகில் வந்ததும் தான் தெரியும். இல்லையென்றால் திடீர் கடும் பனிப் பொழிவால் முன்னே வெள்ளைத் திரை போட்டதுபோல் இருக்கும். இதில் சில பிரகஸ்பதிகள் வண்டியில் பல்ப் எரியாதது தெரியாமலே போய்க்கொண்டிருப்பார்கள். ஹெட்லைட்டை போட்டுவிட்டு எதிரே வரும் வாகனங்களில் இருந்தும், அடிக்கடி லைட்டாக பிரேக் அழுத்தி பின்னே வரும் வாகனங்களில் இருந்தும் இங்க ஒரு வாகனம் போய்க்கொண்டு இருக்கிறது பாத்து வாங்க சாமிகளா என்று சிக்னல் கொடுத்தபடி தப்பித்துக் கொள்ள வேண்டும். இதுவும் ஒரு கண்டம் என்று உங்களுக்குப் புரிந்திருக்கும்.

ஒரு வழியாய் ஃபர்ஸ்ட் கியரில் உருட்டியபடியே உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஆஃபீஸ் வந்து சேர்வதற்குள்.. அதற்கு முன் இங்கே இந்த இடுகையின் முதல் வரியை காப்பி பேஸ்டிக்கறேன்.. ஒரே நாளில் எத்த்த்தனை கொலை முயற்சி.. உஸ்ஸ்ஸ்.. இயற்கைக்கு என் மேல் ஏன்தான் இத்த்த்தனை கோவமோ.. என் கண்ணாளன் பொண்டாட்டி பாக்கியம் ஸ்ட்ராங்கா இருக்கக்கொண்டு நான் தப்பித்தேன்.. இல்லையென்றால் ஏதோ ஒரு வின்டர் சீசனில் எனக்கான சங்கு எப்போதோ முழங்கி இருக்கும்.

இந்த ஸ்னோ மீது டயர் போகும்போது ஒரு சத்தம் வரும் பாருங்கள். ஆங்கிலப் படங்களில் ஆழ்கடலில் போகும் கப்பலின் அடித்தளத்திலோ, இல்லை நீர்மூழ்கிக் கப்பலிலோ போவதுபோல் சீன் வந்தால் அங்கே ஒரு பின்னணி இசை குடுப்பார்களே.. இனிமேல் கவனித்துக் கேளுங்கள்.. அப்படி இருக்கும் அந்தச் சத்தம். உறை பனியில் டயர்கள் வழுக்கிச் செல்லும்போது அடி வயிற்றுக் கிலியோடு கேட்கும் கரகரவென்று ஒரு சத்தம். அம்முவே சொல்வார்.. ’அம்மா இந்த சத்தம் எனக்குப் பிடிக்கிறதே இல்லம்மா’ன்னு.

பசங்க ஸ்விம்மிங், கராத்தே, ஐஸ் ஸ்கேட்டிங் போன்றவற்றுக்கு விடுமுறை விட்டுவிடுவதால் கடவுளுக்கு, குறிப்பாக என் பிள்ளையாரப்பாவுக்கு நிம்மதி. இல்லையென்றால் வீட்டிலிருந்து கிளம்பி, மீண்டும் திரும்பி வருவதற்குள் என் வேண்டுதல் கேட்டு என்னைப் பாதுகாப்பதிலேயே அவர்கள் உஸ்ஸ்ஸ்ஸ் என்பார்கள்.

ஐஸ் ஸ்கேட்டிங்கில் விண்டர் ஷோ.. என்ன ஷோ வைத்தென்ன.. எங்கும் அனுமதி இலவசம் இல்லை. ஒவொரு பிரிவாக அவர்கள் பழகியதை செய்து காட்டினார்கள். இசையோடு உறை பனியை சர்ரென்று கிழித்துக் கொண்டு போகும் கால்களும், அவர்களின் பாலன்ஸ் செய்யும் லாவகமும், நிரை மாறி சற்று முன்னேயும் பின்னேயுமாய் சென்று விட்டு, பழக்குனர்களின் உதவியுடன் மீண்டும் நிரையாக வழுக்கிச் செல்லும் வாண்டுகளைப் பார்க்கும்போது மனம் உறை குளிரிலும் குளிர்ந்துதான் போனது. தொப்பென்று ஆங்காங்கே சிலர் விழுந்தபோது.. திட்டாதிங்க சித்ரா.. உங்க நினைவு வந்து போனது.

IMG_8700 IMG_8713

Taekwondo என்ற ஒரு வகையான martial art கத்துக்கறாங்க பசங்க. அதைப் பற்றிய மேலதிக விபரம் தெரியணும்னா இங்கே கிளிக்குங்கள். அநேகமாக இந்த வருஷத்தோடு முழுக்குப் போடப்படும் நிலையில் உள்ளது. இந்த தடவை மஞ்சல் பெல்ட்டில் பச்சை கோடு கிடைத்துள்ளது. அடுத்து பச்சை பெல்ட். சதுருக்கு இரண்டு நாளும் ஃபுட்பால் பிராக்டிஸ் இருப்பதாலும், அம்மணி தனியாக போவதை விரும்பாததாலும் இந்த முடிவு, அவர்கள் முடிவு. Grading முடிந்து பெல்ட் வழங்கும் நிகழ்வுக்கு போன பொழுது அவர்களின் கட்டுப்பாடு மலைப்பைத் தந்தது இம் முறையும். ஒற்றைச் சொல்லில் தட் தட் என்று குதிக்கும் கால்கள் அடுத்த கட்டளை வந்ததும் குண்டூசி விழுந்தால் கேட்கும் அளவில் ஒரே நேரத்தில் அமைதி காத்தன. அத்தனை குரல்களும் ஒரு சேர பயிற்சி முடிவில் ‘ஹே’ என்று சொல்லும்போது எங்கோ ஒரு கீச்சுக் குரல் மட்டும் சற்றுத் தாமதமாக கேட்டபோது சிரிப்பில் அரங்கம் அதிர்ந்தது. ஆனால் அவர்கள் அடுத்த நொடி அடுத்த மான்ஸ்டர் செய்யத் தயாராயிருந்தார்கள்.

IMG_8622 IMG_8623

--

//சில நாட்களாக என் உயிர்த் தோழி ஒருத்திக்கு வாழ்க்கை சோதனையாகவே உள்ளது. மனது எப்போதும் அவளையே நினைத்துத் தவித்து, துடித்துக் கொண்டிருப்பதால் அதிகமாக பதிவுலகுக்குள் வர முடியவைல்லை. குழந்தைகளுக்காக எவளவோ பொறுத்துப் போய்க் கொண்டிருக்கும் அவளுக்கு எல்லா வகையிலும் என் ஆறுதலை, உறுதுணையை கொடுத்துக் கொண்டிருக்கிறேன்/றோம். என்னவருக்கும் அவளை நன்கு தெரியுமென்பதால் சிரித்துக் கொண்டிருக்கும் அவள் முகத்தின் பின்னே இத்தனை சோக ரேகைகளா என்று ஆடிப்போய்விட்டார். எத்துணை அற்புதமான ஒரு ஜீவன் அவள். எல்லோருக்குமாகவும் பொறுத்துப் போகிறாள். அம்மாவோடு அப்பாவும் பிள்ளைகளுக்கு வேண்டும் என்பதற்காக தைரியத்தை அடக்கி வைத்து, கோழையாக அல்ல.. அம்மாவாக வாழ்கிறாள். உன் கண்ணீருக்கு தகுதியான ஒருத்தர் இல்லை அவர் என்று சொல்லி இருக்கிறேன். அவளுக்கும் சேர்த்து நான் அழுது கொண்டிருக்கிறேன். அவளின் பொறுமையை பொசுக்கும்படியான ஒரு நிலை அவளுக்கு உருவாகாமல் இருக்கட்டும். பிள்ளையார் துணையிருப்பார்..//

01 December, 2010

என்ன செய்வேன் நான்??

என்னை அழ வைக்கவென்றே எல்லோரும் என்னோடு பழகுவது போதாதென்று திரைப்படங்களை வேறு என்னை அழ வைக்கவென்றே எடுக்கிறாங்க போல. என்ன செய்வேன் நான்??

மைனா.. என்ன சொல்ல.. நினைவில் சிறகடித்துக் கொண்டே இருக்கிறது.. அந்த எளிமை, யதார்த்தமான நடிப்பு, நம்ப முடியாத ஆனால் சாத்தியமானதோ என்று நினைக்க வைக்கும் கதை.. சுருளி, மைனா, ஏட்டு, இன்ஸ்பெக்டர் என மனதில் நின்ற பாத்திரங்கள்.. பஸ் விழும் காட்சியும், கடைசி நேர காட்சிகளும் கொஞ்சம் அதிகமென்று நினைக்கத் தோன்றினாலும், இன்ஸ்பெக்டர் எடுத்த முடிவினால் எங்கோ ஒரு ஆறுதல் வரத்தான் செய்கிறது.

இத்தோடு விட்டிருக்கலாம் நான். தெரிந்தே பார்த்தேன் நந்தலாலா..

சிறுவனை அடிக்க முடியாமல் அழுதபடி போய்ப் போய்த் திரும்பி வரும் மிஷ்கினைப் போல கண்ணீரும் கண்ணை நிறைத்து நிறைத்து காய்ந்து கொண்டிருந்தது. தொண்டை அடைத்து, மனதைப் பிசைந்த வலி தலைவலியாய் மாறியும் தொடர்ந்து படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அல்லது பார்க்காமல் இருக்க முடியாமல் கட்டுப்பட்டிருந்தேன். அம்மாவை மிஷ்கின் பார்த்த கணம்.. இருந்த அமைதியை குலைத்தபடி கேட்டதே ஒரு குரல்..

’தாலாட்டுக் கேட்க நானும் எத்தனை நாள் காத்திருந்தேன்..’

அதன் பின் பொல பொலவென்று நில்லாது ஓடியது கண்களில் அருவி.. இங்கே என் வழக்கம் போல் ஆவ்வ்வ் என்று என்னால் இப்போது சொல்ல முடியவில்லை.. அத்தனை பாரம் மனதில்.. அப்படியே உணர்வைக் குழைத்து குரலில் கொடுக்கும்படி இசை தெய்வத்தை படைத்த தெய்வத்துக்குக் கோடி நன்றி.. இப்போதும் தென்பாண்டி சீமையிலே அவர் குரலில் கேட்கும்போது என்னை அறியாது தொண்டைக்குள் எதுவோ சிக்கிக் கொள்ளும் ஒரு உணர்வு எனக்கு வரும். அதன் பின் இன்று இந்த வரியின் தாக்கம்.. இனி மனதை விட்டுப் போகுமா தெரியவில்லை..  மிஷ்கின் அம்மாவைத் தூக்கிக் கொண்டு போகத் தொடங்கியபோது பாடல் தொடர்ந்தாலும் இன்னமும் அந்த ஒற்றை வரி மட்டும் காதுக்குள் கேட்பதாய் ஒரு உணர்வு..

என் அம்மாவோட தூரத்து உறவில் ஒருத்தர் புத்திசுவாதீனம் இல்லாதவர். அவருடைய அம்மாதான் அத்தனையும் செய்து பார்த்துக் கொள்வார்.  எங்கள் ஊர் கோயில் திருவிழாவுக்கு தவறாமல் கூட்டி வருவார். நாங்கள் போய்ப் பார்க்கும்போது ஒரு தடவை பக்கத்தில் இருக்கச் சொல்லி என் கையைப் பிடித்துக் காட்டி எதுவோ கேட்டார் அவர் அம்மாவிடம்.  சட்டென்று பறித்துக் கொண்டு என் அம்மா பின்னே சென்று ஒளிந்து கொண்டேன். பின்னர் என்னை சமாதானம் செய்து கையை பிடிக்க விடும்வரை அவர் முகத்தில் அத்தனை கவலை, அப்படியே அங்கங்கே மிஷ்கின் முகத்தில் தெரிந்தது போல. டீ, காஃபி பொடி கண்டால் எடுத்து அப்படியே சாப்பிட்டு விடுவார். ஒரு குழந்தையை அதட்டுவது போல அவர் அம்மா அதட்டி பறித்து வைத்தது இப்போதும் நினைவிருக்கு. ஒரு தடவை திருவிழாவுக்கு அவர்கள் வராத காரணம் கேட்டபோது அம்மா சொன்னார்.. ‘அவருக்கு தண்ணி எடுத்து குடிக்க தெரியாதில்லையா.. வீட்ல அம்மா இல்லையாம்.. தாகமா இருந்திருக்கு போல.. வழக்கம் போல கிணத்தை எட்டிப் பாத்துட்டு இருந்திருக்கார்.. அப்டியே உள்ள விழுந்திட்டாராம்’ அவர் அம்மா இப்போது இருக்கிறாரா என்று தெரியவில்லை.

சிறுவன் ஸ்னிக்தாவை அம்மாவாக்கி முத்தமாய் கொடுக்கும்போது.. எப்படி சொல்வதென்று தெரியவில்லை.. சந்தோஷம் வருவதற்குப் பதிலாக மீண்டும் அழத்தான் முடிந்தது என்னால்..

காமரா இஷ்டத்துக்குக் கவிதை வடித்திருக்கிறது. ஒற்றைத் தெரு.. பச்சை வயல்.. சோவென்ற மழை.. எல்லாம் பழசுதான்.. அத்தனை அழகாய், புதுமையாய் எடுத்த விதம்.. படம் பாருங்கள்.. புரியும்.

மனநிலை சரி இல்லாதவர் போடப் போகும் சண்டை எப்படி இருக்குமோ என்று ஒரு பயத்தோடு இருக்கும்போது, அப்படியே எங்கள் மனதில் இருக்கும் பதட்டம், எதிர்பார்ப்பு புரிந்து இசைஞானி ஒரு பின்னணி கொடுத்திருப்பார்.. கேளுங்கள்.. தெய்வம்டா.. படத்தோடு முழு நேரமும் புலனைப் பிணைத்துப் போட்டு வைத்ததில் பெரும்பங்கு இளையராஜா என்ற இசை தேவனுடையது.

குளிர்க் கண்ணாடியை சிறுவனிடம் வாங்கிப் போட்டு விட்டு ’அய்யோ ராத்ரி ஆய்டிச்சு’ என்று மிஷ்கின் சொல்லும்போதும், குடிசையில் இருந்து இளநீரோடு எட்டிப் பார்க்கும்போது தப்பி ஓடி விட்டானோ சிறுவன் என்று நான் நினைக்க தள்ளி நின்று பார்க்கும் சிறுவனைக் காட்டி அப்படியே சைக்கிளோடு தோட்டக்காரன் காமராவுக்குள் வரும்போதும், சட்டென்று பியர் பாட்டிலால் இளைஞன் தலையில் மிஷ்கின் அடிக்கும்போதும் இயல்பாய் சிரிப்பு வருகின்றது இதம்.

உங்கள் எல்லாருக்கும் மிஷ்கின் வழியில் நானும் கொடுக்கிறேன். பத்திரமாய் வைத்துக் கொள்ளுங்கள்.

stein

இன்னைக்கும் வர்ட்டா சொல்ல மனசு வர்லை..

27 November, 2010

என்ன சொல்லி உமை போற்ற!!

நவம்பர் இருபத்தோராம் திகதியே தொடங்கிவிடும். ஊரெல்லாம் மஞ்சளும் சிவப்புமாய் தோரணம். வீதியின் முக்கிய இடங்களில் அலங்கார வளைவுகள். அத்தனை பூ மரங்களுக்கும் சுமை குறையும். ஒற்றைப் பூ விட்டு மீதி பறித்து அழகான மாலைகள்.

சாவை கழுத்திலே சுமந்தபடி, எந்த நொடியும் அதனை எதிர் நோக்கியபடி, அதன் சாயலே இல்லாமல் சிரித்தபடி சுழன்று வரும் புலி வீரர்கள் ஒருபுறம். உண்ண உணவில்லையென்றாலும் என்னால் முடிந்தது செய்வேன் என்ற எண்ணத்தில் பொதுமக்கள் மறுபுறம். எந்தளவு முடியுமோ அந்தளவுக்கு ஊரையே அலங்காரத்தால் திருவிழாக் காண வைப்பார்கள். யார் எந்தப் பகுதி அலங்காரப் பொறுப்பு, உணவு, தேநீர் பொறுப்பு, தங்குமிடப் பொறுப்பு என்று பிரித்துக்கொடுக்கப்படும். துயிலும் இல்லங்களில் உறங்கும் கண்மணிகளின் தூக்கம் கலைக்காமல் அத்தனை வேலைகளும் கச்சிதமாய் முடிக்கப்படும். தூர இடங்களில் இருக்கும் மாவீரர்களின் பெற்றோர் வரவழைக்கப்பட்டு எங்காவது தங்க வைக்கப்படுவர்.

நவம்பர் 27. மாவீரர் நாள். எப்படியும் அன்று பகைவனின் ஷெல் வீச்சு, விமானக் குண்டு வீச்சு இருக்கும் என்பதால் எங்கள் வீட்டில் தைரியசாலிகள் மட்டுமே போக அனுமதிக்கப்படுவர். ரஜியும் அக்காச்சியும் நான் கட்டிக் கொடுக்கும் மாலைகளை அலுங்காமல் எடுத்துக்கொண்டு போவார்கள். கல்லறைகளின் முன்னே ஊரே அமைதியாய், ஒன்றாகக் கூடி இருக்கும். அத்தனை முகங்களிலும் வலியின் சாயல். வேதனைகளின் விம்மல். வீரர்கள் அழுவதில்லை. வலியை மறைத்து கன்ணீரை விழுங்கும் மனத்திடக்காரர் அவர்கள். சரியாக மாலை ஆறு மணி ஐந்து நிமிடத்துக்கு பிரதான சுடர் ஏற்றப்பட, தொடர்ந்து அத்தனை சுடர்களும் ஏற்றப்படும். 1989இன் பின்னர் இது தான் எங்கள் கார்த்திகை விளக்கீடு. சரியாக அதே நேரம் ஒலிக்கத் தொடங்கும் மாவீரர் பாடல். கலங்காத அத்தனை கண்களும் கண்ணீர் மழையில். நெஞ்சு வெடிக்கும் வலி. உயிரைப் பிசையும் சோகம்.  சோவெனப் பெய்யும் மழை, சமயத்தில் கூடவே குண்டு மழை எதுவாயினும் அஞ்சலி அமைதியாய் நடந்து முடியும். நாங்கள் கோயிலாய் போற்றிப் பாதுகாத்த துயிலும் இல்லங்கள் இன்று..

இங்கு வந்த பின்னர் சரியாக ஆறு மணி ஐந்து நிமிடத்துக்கு எல்லோரும் ஒன்றுகூடி மெழுகுவர்த்தி ஏற்றுவோம். கலந்துகொள்ள முடியாதவர்கள் வீடுகளிலும். பாடல் ஒலிக்க எல்லோரும் சேர்ந்து உரக்கப் பாடுவோம். எம் மண்ணின் மைந்தருக்கு மலர்கள், தீபங்களோடு கண்ணீராலும் அஞ்சலி. பிறிதொரு நாளில் கலைநிகழ்வுகள்.

போன வருடத்தை விட இந்த வருடம் மனம் இன்னமும் கலக்கமாக.  ஆற்றாமை, ஆதங்கம், கோவம், வேதனையோடு சேர்ந்து இம் முறையும் அஞ்சலிக்குப் போகத் தோன்றவில்லை. வீட்டிலேயே ஏற்றி வைப்பேன் எல்லோருக்குமாய் ஒரு மெழுகுவர்த்தி.

என்னதான் ஆகட்டும். எங்கள் மண்ணுக்காய் இன்னுயிர் ஈந்து வித்தாகிப் போன எம் மாவீரர்களதும், மக்களதும் நினைவுகளை எம்மிடம் இருந்து பிரித்தெடுக்க எவராலும் முடியாது. உண்மைகளைப் புதைத்துவிட்டாலும் வித்தாக மனதில் நாம் புதைத்த தமிழுணர்வு என்றும் விழுதோடு மரமாக வியாபித்து இருக்கும்.

இந்த மாவீரர் நாள் பாடல் மாவீரர் தினத்தன்றும், மரணித்த வீரர்களை புதைகுழியில் புதைக்குமுன் அஞ்சலி செய்யும்போதும் மட்டுமே ஒலிக்கப்படும். புதுவை இரத்தினதுரையால் இயற்றப்பட்டு, வர்ணராமேஸ்வரனால் பாடப்பட்டது. எங்கே எங்கே ஒரு தரம் விழிகளை இங்கே திறவுங்கள் எனும் வரிகள் வரும்போது கல்லும் கரைந்துதான் போகும்.

முடிந்தால்.. விழி மூடி ஒரு நிமிடம் மனதார அஞ்சலி செய்யுங்கள். கல்லறைக் காவியங்கள் அமைதியாய் உறங்கட்டும்!!

தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய
சந்தனப் பேழைகளே – இங்கு
கூவிடும் எங்களின் குரல்மொழி கேட்குதா
குழியினுள் வாழ்பவரே
உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள்
உறவினர் வந்துள்ளோம் – அன்று
செங்களம் மீதிலே உங்களோடாடிய
தோழர்கள் வந்துள்ளோம்

எங்கே எங்கே ஒருதரம் விழிகளை
இங்கே திறவுங்கள்
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே
மறுபடி உறங்குங்கள்.


வல்லமை தாருமென்றுங்களின் வாசலில்
வந்துமே வணங்குகின்றோம் –  உங்கள்
கல்லறை மீதிலெம் கைகளை வைத்தொரு
சத்தியம் செய்கின்றோம்
சாவரும் போதிலும் தணலிடை வேகிலும்
சந்ததி தூங்காது – எங்கள்
தாயகம் வரும் வரை தாவிடும் புலிகளின்
தாகங்கள் தீராது.


உயிர்விடும் வேளையில் உங்களின் வாயது
உரைத்தது தமிழீழம் – அதை
நிரை நிரையாகவே நின்றினி விரைவினில்
நிச்சயம் எடுத்தாள்வோம்
தலைவனின் பாதையில் தமிழினம் உயிர்பெறும்
தனி அரசென்றிடுவோம் – எந்த
நிலைவரும் போதிலும் நிமிருவோம் உங்களின்
நினைவுடன் வென்றிடுவோம்