Pages

  • RSS
Showing posts with label இளையதளபதி. Show all posts
Showing posts with label இளையதளபதி. Show all posts

30 October, 2011

மாயம் செய்தவன்!!

தலைப்பை படித்ததும் தெரிந்திருக்குமே?? தெரிந்தவர்களுக்கும், தெரியாதவர்களுக்கும், தெரிந்தும் தெரியாது என்பவர்களுக்கும் சேர்த்தே சொல்கிறேன். வேலாயுதம் செம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம. ஒரு பரம விஜய் ரசிகையான என்னை ஏமாற்றாத விஜய்க்கு முதலில் நன்றிகளும் வெற்றிக்கு வாழ்த்துகளும். அதே விஜய். அதே செண்டிமெண்ட். அதே சண்டை. அதே காமெடி. அதே அசத்தும் நடனம். ஆனால் புதிய ரசனையைக் கொடுத்து மாயம்தான் செய்திருக்கிறார் விஜய்.

Velayutham-Movie-Poster ஆறு மணி ஷோவுக்கு நாலு மணிக்கு நானும், நாலரைக்கு அம்முவும், ஐந்து மணிக்கு சதுவும் ரெடி ஆகிவிட்டோம். மாம்ஸ் வந்து ‘என்னம்மா இன்னும் ரெடி ஆலையா நீங்க’ன்னு விரட்டி ஒரு வழியாக அவர்கள் ரெடியாகி தியேட்டர் போக ஐந்தே முக்கால். டிக்கட் காசை கையுக்கும், தான் வரவில்லை என்ற தகவலை காதுக்கும் கொடுத்தார். நின்றிருந்த மழைக்கொரு நன்றியை சொல்லிவிட்டு உள்ளே ஓடினால் ’என்னக்கா இவ்ளோ லேட்டா வரிங்க.. முன்னாடி தான் சீட் கிடைக்கப்போது’ என்ற படக்காரத் தம்பியிடம் டிக்கட்டை பிடுங்காத குறையாக வாங்கிக் கொண்டு அம்மு, சதுவை பாப்கார்ன், கேண்டிக்கு அனுப்பிவிட்டு, மாமியாரோடு உள்ளே போனால் முன்னிருந்து மூன்றாவது ரோவில் கரையோர சீட்தான் கிடைத்தது. துண்டை போட்டுவிட்டு மீண்டும் வந்து கடிக்கஸ், நொறுக்ஸ், குடிக்ஸ் எல்லாம் வாங்கியபடி டிக்கட் தம்பியை கடந்தபோது அவர் அருகில் நின்றிருந்த நோர்வேஜியன் சொன்னார் ‘பரவால்லையே உனக்கு நல்ல லாபம்தான் போல.. கடைசி நேரத்தில நிறையப்பேர் வராங்க’ பயபுள்ளை என்னத்தான் வாரிச்சோ என்ற டவுட்டை போக்கியது வெற்றிடமாக இருந்த முன் வரிசை. ‘என்னம்மா இது கரைல உக்காந்து தலை திருப்பி பாக்க கஷ்டமா இருக்குமே’ என்ற அம்முவை சமாதானம் செய்து எல்லோரும் உட்கார்ந்தோம். எங்கள் வரிசையில் நடுவில் இருந்த நால்வர் முன் வரிசைக்கு ஷிஃப்ட்டாக நடு சீட்டுகளுக்கு நாங்கள் ஷிஃப்ட்டினோம்.

’ண்ணா.. நான் சும்மாவே காட்டு காட்டுன்னு காட்டுவேன்.. நீ காட்ட்டு காட்ட்டுன்னு வேற சொல்றே’ என்று இமையை படபடவென்று வெட்டிவிட்டு அப்பாவியாய் சொன்னபோது சிரிப்புச் சத்தம் தியேட்டர் நிறைந்தது. அதையே விறைப்பா/முறைப்பா சொல்லி இருந்தால் இந்த அளவு ரசனை வந்திருக்காது. எப்படியும் செம சாத்து சாத்தப் போகிறார் என்பது  தெரிந்த ஒன்றே என்றாலும் இந்த அப்பாவித்தனம் ரசித்துச் சிரிக்க வைத்த இடம் அது.

velayudhamவிஜயின் காஸ்ட்யூம் கலக்கல். இங்கே வேட்டைக்காரனுக்கு அப்புறம் தியேட்டரில் விசில் கூடாதென்று கட்டுப்பாடு. அப்படியும் கைதட்டலும், விசிலும் கேட்டபடியே இருந்தது. சது அவ்வப்போது ’syk kul film அம்மா’ என்று சொல்லிக் கொண்டிருந்தார். எல்லோரையும் ஊருக்கு அனுப்பிய பின்னர் ‘இப்ப பாருங்க தங்கச்சிய கிட்நாப் பண்ணப் போறாங்க’ என்றார் அம்மு. ட்ரெயின் புழுதி கிளப்பியபடி நின்றபோது யாரோ ஒருவர் ஒன்ன்றிப் போய்ப் பார்த்திருப்பார் போல தூசி தாங்காமல் இருமுவது போலவே இருமினார்.

அம்முவுக்கு ஹன்ஸிகாவை விட ஜெனிலியாவைத்தான் பிடித்ததாம். ஜெனிலியா விஜய் முடிவு கேட்டு அழுதபோது எனக்கும் அழுகாச்சியா இருந்துது. பாடல்கள் கேட்டபோது மாயம் செய்தாயோ எனக்கு ரொம்ம்ம்ம்பவும் பிடித்திருந்தது. பார்த்தபோது விஜய் ஸ்டைலாக இருக்காரேன்னு நான் நினைக்க சது சொன்னார். சில்லாக்சில் விஜய் அவளவு அழகு. முளைச்சு மூணு படமாக்கிய விதம் அழகா இருந்துது. ரத்தத்தின் ரத்தமே ஒரு வகையான அமர்த்தலான இசையமைப்போடு அட்டகாசம். சொன்னாப் புரியாதுவுக்கு எழுந்து ஆட முடியாத வருத்தம் எனக்கு. என்னா டான்சுப்பா. ஆனால் பாடல்களை முழுதாகப் போடவில்லை. ’கேட்டிங்களாம்மா.. மீசைன்னு இந்தப் பாட்லவும் வருது. நான் நினைக்கறேன் எல்லாப் பாட்லவும் வருதுன்னு’ என்று தனது கண்டுபிடிப்பை அம்மு சொன்னார்.

velayudham_UHQ விஜய் கழுத்தில தாயத்து மாதிரி ஒண்ணு போட்டிருக்கார். மாம்ஸுக்கும் அதே போல் ஒன்று வாங்க வேண்டும். கியூட்டா இருந்தது.  சந்தானம் செம. சிரித்து முடியவில்லை. சரண்யா மோகன் தங்கச்சி காரக்டரோட அவ்ளோ பொருந்தி இருக்காங்க. சரியா 8:36 க்கு யாரோ என்னய திட்டி இருக்காங்க. அம்புட்டு புரையேறியது எனக்கு. மாம்ஸிடம் கேட்டு கன்ஃபார்ம் பண்ணிவிட்டேன். அவர் நினைக்கவே இல்லாதபோது திட்ட சான்ஸ் இல்லை. என்னைத் திட்டியது யார்?? நான் மேலே சொன்ன அந்த நோர்வேக்காரன் எங்களுக்கு பக்கத்தில் கேட்டுவிட்டு இருந்தார். கொஞ்சநேரம்தான் அப்புறம் போய்டுவேன் என்றவர் எழுந்து முன் வரிசையில் அமர்ந்து முழுப்படமும் பார்த்தார்.

என்னதான் சொல்லுங்க. விஜய் படத்த தியேட்டர்ல போய் பார்க்கிற அந்த சந்தோஷமே தனிதான். எப்படி நேரம் போனதென்றே தெரியாமல் அத்தனை நேரமும் எல்லோரையும் கட்டிப்போட்டிருந்தது படம் என்பதை விட விஜய் என்று சொல்வதே பொருத்தம். படம் முடிந்து வந்து வண்டியில் ஏறும்போதே ‘விஜய்க்கு வெற்றிப்படம்’ என்றார் மாமி. 

’அது நீங்க சொல்ணுமா உங்க முகம் சந்தோஷமா இருக்கிறது பார்க்கும்போதே தெரியுதே நல்லா என்ஜாய் பண்ணி இருக்கிங்கன்னு’ என்றார் மாம்ஸ்.

சது ‘அப்பா நான் பாத்ததிலயே பெஸ்ட் விஜய் படம் இதுதான்’ என்றதோடு டிவிடிக்கும் ஆர்டரை கொடுத்தார். கூடவே ’எப்போம்மா விஜயோட அடுத்த படம் வரும்’னு டிக்கட்டும் புக் செய்தார்.

மாம்ஸ் ஏழாம் அறிவு இந்தவாரம் பார்க்கப்போகிறாராம். பசங்களுக்கு விருப்பமில்லை. சூர்யாவின் நடிப்புக்காகப் போகலாம் என்றிருக்கிறேன். இல்லையென்றால் அடுத்து நான் தியேட்டரில் பார்க்கப்போகும் தமிழ்ப்படம்?? நண்பேண்டா!!

வர்ட்டா..

velayutjam movie new stills 2

26 June, 2011

சிங்கம் ஒன்று புறப்பட்டதே..

மாம்ஸ் லண்டன் போயிருக்கிறார். ஃப்ரெண்ட்ஸ் வாலிபால் விளையாடலாம் வாடா மச்சான்னு கூப்டிருக்காங்க. நேற்று ஈவ்னிங் போனவர் நாளை நைட் வருவார். கிளம்பும் சமயம் கால் செய்த உள்ளூர் ஃப்ரெண்டுக்கு அவர் சொன்னது.

‘ஆமா. சிங்கம் கிளம்பிட்டே இருக்கு. என்னமோ பழைய ஃபார்ம்ல இருப்பேன்னு நம்பி வரச் சொல்லி இருக்காங்க. அங்க போய் பார்த்தாத்தானே தெரியும். வின் பண்ணா ட்ராஃபியோட வரேன். இல்லேன்னா டியூட்டி ஃப்ரீல வாங்கற டாஃபியோட வரேன்’

நான் நினைச்சேன். அவர் சொல்லிட்டார். அவரை பஸ்ஸேத்தி விட்டு வரும் வழியில் மாம்ஸ் ஃப்ரெண்ட் பசங்களோடு விளையாட அம்மு, சதுவை ட்ராப் பண்ணினேன். அதே அபார்ட்மெண்டில் இருக்கும் இன்னொரு குட்டிப் பையன் ஓடி வந்து சதுவின் காலைக் கட்டிக்கொண்டார். இவர் அப்படியே அவரைத் தூக்கி ஒரு தட்டாமாலை சுற்றி இறக்கினார். குட்டிப் பையன் கையில் இருந்த ஸ்வெட்டரை கொடுத்து போட்டு விடச் சொல்லிக் கேட்டதும் இவர் போட்டுவிட்டார். நன்றியாக அவர் மீண்டும் காலை இறுக்கிக்கட்டிக் கொள்ள சது என்னைப் பார்த்து ஒரு சிரிப்பு விட்டார் பாருங்க. எப்போதும் அவர் கேட்பது போல ஒரு குட்டித் தம்பி இருந்திருக்கலாமோ??

உடம்பு சரியாக இல்லாவிட்டாலும் ஏர்போர்ட்டுக்கு நானே வரேன்னு மாம்ஸ்ட்ட சொல்லிட்டேன். என்னவோ இம்முறை மாம்ஸ் என்னை பரிதாபமாகப் பார்க்கும் அளவுக்குப் பிரிவுத் துயர் கண் நிறைத்தது. அதற்கும் அவரே தீர்வொன்று செய்துவிட்டார். அவரின் நண்பர் ஒருவர் புது வீடு வாங்கி இருந்தார். வீடு கைக்கு வருமுன்னர் பழைய வீடு விற்று குறித்த தேதிக்குள் கொடுக்கும்படி ஆயிற்று. ஒரு மாத வாடகைக்கு வேறு ஒரு வீடு எடுத்திருந்தார்கள். அதற்கும் உரியவர்கள் வந்துவிட பகலில் அவரின் மாமனார் வீட்டில் தங்குவதும், இரவில் மனைவி தவிர அவரும் 3 பிள்ளைகளும் வேறு உறவினர் வீட்டில் தங்குவதுமென்ற முடிவில் இருந்தார்கள். மாம்ஸ் பிள்ளைகளை இரவில் எங்கள் வீட்டில் தங்கச் சொல்லி இருக்கிறார். இதோ நேற்றே வந்துவிட்டார்கள். ஹாலில் தூங்க அடம்பிடித்தவர்களை ரூமில் தூங்கச் சொன்னேன். நாங்க தூங்கிடுவோம் உங்களால தனியா, பயமில்லாம தூங்க முடியுமான்னு பயமில்லாம வில் அழுத்தம் கொடுத்து அம்மு கேட்டபோது வேறு வழியில்லாமல் ஹாலில் 2 air mattress போட்டு அதில் நால்வரும், சோஃபாவில் நானும் அவர்களில் ஒருவரும் எனப் படுக்கையை ஒழுங்கை செய்தோம். 

010 016 k

22 ஆம் தேதியில் இருந்து பள்ளி மூடியாயிற்று. எங்களுக்குத் திண்டாட்டம் தொடங்கியாயிற்று. நேற்று காலிங் பெல் கேட்டு பால்கனிக் கதவு வழியாக ஹலோ என்றால் யாரையும் காணோம். பக்கத்திலே படி வழியாக மேலே ஏறிக் கொண்டிருந்த பையன் அதோ அந்தாள் தான் பெல் அடிச்சார் என்று பக்கத்து வீட்டை நோக்கிக் கையில் காகித அட்டைகளோடு போய்க் கொண்டிருந்த ஒருவரைக் கைகாட்டினார். நான் பெல் அடிச்சியான்னு கேட்டும் அவர் திரும்பிப் பாராமல் போய்க் கொண்டிருந்தார். எனக்குப் பகீரென்றது. ஆள் வேறு ஆறடி உயரத்தில் ஆஜானுபாகுவாக இருந்தார். இது திருடர்களின் ஒரு தந்திரம். அட்டைகளில் வரைந்த ஓவியங்களோடு கூடவே படிக்க வந்திருக்கேன், பண உதவி செய்ங்கன்னு ஒரு கடிதமும் வச்சிட்டு பள்ளி விடுமுறை காலத்தில வீடு வீடாகப் போய் நோட்டம் விடுவது. எங்கோ ஓரிரண்டு திருட்டுத்தான் நடந்திருக்கிறது என்றாலும் பயமே. எங்கள் அயலில் பெரும்பாலானவர் வெக்கேஷன் போய்விட்டார்கள். மீதி எம்மைப் போல வேலைக்குப் போனால் மூன்று மணிக்கு மேல்  திரும்பிவருபவர்கள்.   பகலில் வெளியே பறவைகளும், வீடுகளில் பிள்ளைகளும் தவிர யாரும் இல்லை.  அவர்கள் தைரியமாய் இருக்கிறார்கள். எமக்குத்தான்.. பிள்ளையாரப்பா பாத்துக்கோ.

என்னமோ எனக்கு பிடிச்சவங்க சந்தோஷமா இருந்தா நான் சோகாச்சியாவோ இல்லை சுகக்கேடாவோ இருக்க வேண்டியதா இருக்கு. இந்த வருஷம் விஜய்க்கு வாழ்த்துப் பதிவு போட முடியாத அளவுக்கு  ஆகிப்போச்சு. பல்லுல ஆப்பரேஷன். 5 ஸ்டிச்சஸ். அதுவும் அவர் பர்த்டே அன்னைக்கே. ஆனா அவர் பர்த்டேக்கு முதல் நாள் எங்க வீட்ல நடந்தது இது. சது ரூம்ல அவருக்கு போன வருஷம் வாழ்த்தாக கிடைச்ச விஜய் படம் ஒட்டி வச்சிருக்கார். முதல் தடவையா வீட்டுக்கு வந்த அவரோட ஃப்ரெண்ட் ஒருத்தர் இது உன்னோட அப்பா டீனேஜ்ல எடுத்த ஃபோட்டோவான்னு கேட்டாராம். இவர் இல்லைன்னு சொல்லி தான் அவரோட ரசிகன்னு சொன்னாராம். வாழ்த்து அனுப்பி வச்ச நட்புக்கு நன்றி.

sathu 

எனக்குப் பிடித்த விஜயின் பாடல் மாம்ஸ்க்குப் பிடித்த ஷ்ரேயாவோடு.

19 January, 2011

ஹா(ர்)ட்ஸ் ஆஃப் டூ யூ விஜய்!!

இன்னமும் பேசிக் கொண்டே இருக்கிறோம். ஏதாவதொன்றில் காவலன் வந்து போகிறான். ரொம்ப நாளைக்கு அப்புறம் நான் அறிந்த எல்லோரையும் திருப்திப்படுத்தி இருக்கிறார் விஜய் எனும்போது என் சந்தோஷம் பற்றி சொல்லத் தேவையில்லை. தியேட்டர் வந்திருந்தவர்களில் யாரும் படத்தை குறைவாக சொல்லவில்லை. வெளியே வரும்போது பின்னால் வந்த ஒருவர் சொல்லியது ‘நல்லவேளை.. வீக் எண்ட்ல மட்டும் போட்டிருந்தா லேட்டா வந்த எனக்கு சீட் கிடைச்சிருக்காது’ வேலை நாளையும் பொருட்படுத்தாமல் நிறைவான கூட்டம். இன்னொருவர் ‘இன்னொரு ஷோ ஓட சொல்ணும்பா. மனுஷன் அசத்திட்டான் போ’ என்பதாய் சொல்லிக் கொண்டு போனார்.

பெரிய ஒரு குறை. டிக்கட் வந்து சேரவில்லையாம். குட்டியாக ஒரு சீட்டுத்தான் கொடுத்தார்கள். டிக்கட்டை போட்டா பிடிச்சு பிளாக்கில் போடுவதை அவர்களிடம் சொல்ல முடியாதே. 6 மணிக்கு படம். நாங்கள் உள்ளே போனபோது மணி 5:15. அப்படியும் பின் வரிசைகள் முழுவதும் ஃபுல். ஜாக்கெட், மஃப்ளர், சீட்டுக்கொன்றாக ஒரு கிளவ்ஸ், பாப்கார்ன் பாக்ஸ் என்று வைத்து சகட்டுமேனிக்கு இடம் பிடித்து வைத்திருந்தார்கள். இடையிடையே ஒன்றிரண்டு காலியாக இருந்ததே ஒழிய 6 சீட் மொத்தமாக கிடைக்கவில்லை. வேறு வழியின்றி முன்னிருந்து ஐந்தாவது வரிசையில் 6 சீட்களில் நானும் துண்டை போட்டேன்.

நேற்று கிளம்பும்போதே அப்பா என்ன சொல்வாரோ என்ற எதிர்பார்ப்போடுதான் போனேன். அப்பாவுக்கு விஜய் பிடிக்காது. ரொம்ப நாளைக்கு அப்புறம் தியேட்டர் போவதன் மகிழ்வு ரேகைகள் அம்மா முகத்திலும் தெரிந்தது. அம்மாவுக்கும் விஜய்.. ம்ஹூம்.. கண்ணாளன் அசின் ரசிகன் என்பதால் கவலை இல்லை. ஆனால் அசின் கொஞ்சம் பெரிய பொண்ணா ஆயிட்டாங்க போலன்னு எனக்கு போலவே அவருக்கும் தோணிச்சாம்.

’பரவால்லை.. விஜய் இந்த படத்திலை நல்ல நடிப்பு. முடிவு கொஞ்சம் வேற மாதிரி இருந்திருக்கலாம். மத்தபடி எல்லாமே நல்லாருக்கு’ என்று அப்பா சொன்னார். கடைசிக் காட்சிகளில் அம்மா அடிக்கடி கண்ணாடி கழற்றி கண்ணீரை துடைத்துக்கொண்டு இருந்தது என் கண்ணீர்க் கண்களுக்குள் நன்றாகத் தெரிந்தது. வீட்டுக்கு வந்ததும் ஸ்கைப்பில் அம்மா படம் பற்றி அக்காச்சியிடம் புகழ்ந்து கொண்டிருந்தார். ’விடுங்கம்மா. அவளே போய் பார்க்கட்டும். அப்போதான் இன்னும் நல்லாருக்கும். ஆனா கட்சில அம்ஸ் அழுதிச்சு அக்காச்சி. பக்கத்திலை மருமகன் இருக்கும்போதே இந்த பொண்ணு விஜய இவ்ளோ சைட் அடிக்குதேன்னு நினைச்சுது போல. அப்பா கைல வேற அடிக்கடி எட்டி எட்டி தட்டிட்டே இருந்துச்சு’ என்றேன். ‘அய்யோ அப்டில்லாம் இல்லைம்மா. அது அப்பாவுக்கு சாக்லெட், பாப்கார்ன் குடுத்தேன். அதோட எனக்கு ரொம்ப கவலையா போச்சும்மா.. அந்த குட்டிப் பையன் வந்ததும்.. அதுக்கு பின்னாடி நடக்குறதும்’னாங்க.

எனக்கும் ஒரு சின்னக் குறை. ஸ்டெப் ஸ்டெப் பாடல் இன்னும் கொஞ்ஞ்ஞ்சம் நல்லா வந்திருக்கலாம். வேறு ஒரு சந்தர்ப்பத்தில் இந்த பாடல் வருவதால் என் எதிர்பார்ப்போடு பொருந்தவில்லை. வடிவேலும் விஜயும் சேர்ந்து செய்யும் காமெடியில் வயிறு புண். சதுவும், அம்முவும் அத்தனை சிரிப்ப்ப்ப்பு. இந்தப் படத்தை யாராச்சும் ரீமேக் செய்யலாமேன்னு நான் ரத்த சரித்திரம் பாத்திட்டு எழுதினது போல எதாவது உளறி வச்சிடுவேன்னு நினைச்சுதோ என்னவோ ரெண்டு நாள் முன்னதாகவே ஒரு நட்பு அடிக்கடி சொல்லிச்சு இதோட ஒரிஜினல் நான் பாத்திருக்கேன்னு.

நீ எப்டி இருந்தா என்ன. எனக்கு உன் மனம்தான் முக்கியம். நீ இல்லை என்பதாய் அம்முவிடம் சொல்லும்போது என் பள்ளி நாட்களில் எனக்கும் என் உயிர் நட்புக்கும் நடந்த ஒரு நிகழ்வு நினைவு வந்திச்சு. அவ கிட்ட சொன்னேன் உதைக்காத குறை எனக்கு. அது பத்தி தனி போஸ்ட்ல சொல்றேன். யாரது பாடலில் ரெண்டு விஜயும் வேறுபட்ட நடிப்பில் அவ்ளோ அசத்துறாங்க. பார்க்கில் அசினை அம்முக்குட்டியாக நினைத்து பேசிப் பார்க்கும் இடம் அருமை. இப்போ நீங்க எனக்காக வேண்டிக்கோங்கன்னு அசினிடம் சொல்லும்போது மூக்கை சுழிப்பது செம க்யூட். பாருங்க. இத்தோட நான் முடிக்கலைன்னா அப்புறம் முழு படத்தையும் இங்க சொல்லிடுவேன். அதனால இந்த படத்தை இப்போ பாருங்க. இஷ்டப்பட்டவங்க தியேட்டர்ல போய் படத்தை பாருங்க. காவலன் கலக்கல். விஜய் விஜய் தான்.

Kaavalan_vijay

22 June, 2010

நாங்களும் பூவு குடுப்போம்ல..

Vijay அக்காச்சி கிட்ட இருந்து இந்தப் படம் எனக்கு மெயில்ல வந்திருந்துது. அடடடடா.. என் உபியோட அன்பே அன்பு. எனக்காக இவ்ளோ செய்த அவளுக்கு என்ன செய்யலாம்னு நினைச்சுக்கிட்டே படத்தில இருக்கிறவர கொஞ்சூண்டு சைட் அடிச்சிட்டு.. அப்டியே படத்துக் கீழ எழுதி இருந்தத படிக்க ஆரம்பிச்சேன். அதுக்கப்புறம் அதுக்காக அவள என்ன செய்யலாம்னு நினைச்சுக்கிட்டே மறுபடி படத்தில இருக்கிறவர சைட் அடிக்காமலே பாத்தேன். பல்ப்.. இது அந்த பல்ப் கிடையாது. ஐடியா பல்ப். ஜகஜ்ஜோதியா எரிஞ்சுது தலைக்கு மேல. இப்போ கண்டிப்பா நீங்க அவ என்ன எழுதி இருந்தானு படிச்சிருக்க முடியாது. ஏன்னா நாந்தான் படத்துக்குக் கீழ இத டைப்பிட்டேனே. அப்டியே அடுத்த பத்திக்கு வாங்க. அவ என்ன எழுதி இருந்தான்னு சொல்றேன்.. சாரி.. டைப்புறேன்.

”ஏய்ய்ய்ய்.. நேத்து செமையா ஒரு கனவுடி. அதில விஜய்  வந்தாரு..  ஜாலியா பேசினாரு.. பூல்லாம் குடுத்தார்டி.. என்ன பேசினோம்னு நினைவில்ல..  ஹைய்ய்ய்ய்ய்யோஓஓஒ.. எனக்கு அது கனவு மாதிரியே தோணலை. நீதான அவரோட பரம ரசிகை. அப்புறம் எப்டி?? நார்வேக்கு பதில் கனடாக்கு டிக்கட் போட்டுட்டார் போல. இருந்தாலும் உன்னை நினைச்சா பாவமா இல்லை.. ரெம்ம்ம்ப பாவமா இருந்துதா.. அத்தோட உனக்கு இப்போ கோவம், வயித்தெரிச்சல்னு கலவையா ஒரு பீலிங்ஸ் வரும்னு தெரிஞ்சுதா.. அதான் இத ஃபோன்ல சொல்லை.. உன் ஆறுதலுக்காக இந்த படம். கோச்சுக்காத பூக்குட்டி..”

அவளோட இந்த பூக்குட்டி ஐஸுக்கும் ஒரு பின்னணி இருக்கு. பயம் வேண்டாம் மக்கள்ஸ். அத இன்னொரு நாளைக்கு சொல்றேன். இப்போ நான் அவளுக்கு ஒரு படம் அனுப்பி, அதுக்கு மேல இத எழுதினேன்.

“போக்காச்சி.. உன்னால திரையுலகமே ஆஆஆடிப் போயிருக்காம். பின்ன.. இருக்காதா. அவர் பாட்டுக்கு யாருக்கும் சொல்லாம உனக்கு பூக் கொடுத்துட்டு போயிட்டாரு. சொல்லி இருந்தா நாங்களும் வந்திருப்போமேன்னு மத்த ஹீரோஸ் ஆளாளுக்கு சண்டை போடறாங்களாம். இப்போ தினமும் ஒருத்தர் வரதா முடிவாகி சீட்டுப் போட்டுப் பாத்ததில இவர் இன்னைக்கு வருவார்னு உளவுத்துறை தகவல் சொல்லியிருக்கு. உன் முன்னாடி சொதப்பல்ஸ் கூடாதுனு அவர் கண்ணாடி முன்னாடி பூ குடுக்கிறாப்ல ரிஹர்சல் பாத்தத மொபைல்ல சுட்டு எனக்கு அனுப்பி இருக்காங்க. நேத்து மாதிரி முழிக்காம சமத்தா நடந்துக்கோ.  ஓக்கேவா.. ரெடியா இரு மினிம்மா..”

அவளோட பதில் மெயில்ல இருந்த திட்டுக்கள் பப்ளிக்கா நாட் அப்ளிக்கபிள்.. அதனால கடைசி லைன மட்டும் எழுதறேன்.

“.. இருந்தாலும் உனக்கு இவ்வ்வ்வ்வ்வ்வ்வ்ளோ வயித்தெரிச்சல் ஆகாதுடீஈஈஈஈஈ.. நல்லாரு!!!”

நான் என்ன சொல்ல.. நல்லதுக்கு காலமில்லாத நானிலத்துல பிறந்து தொலைச்சிட்டேன். ஹூம்.. சரி போகட்டும் விடுங்க. அப்டியே நீங்க இங்க போய் அந்த பூக்காரன் யாருன்னு பாத்துக்கோங்க.

# # # # # # # # # #

இளைய தளபதி விஜய்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் பிறந்த நாள் பரிசா எங்க ஊர்ல முதல் முதலா உள்ளூர் ரயில் சேவை ஆரம்பமாகுது. இந்த நாட்டு ராணி சோன்யா வந்து ஆரம்பிச்சு வைக்கப் போறாங்க. நிகழ்வுகள் பகல் பனிரெண்டு மணிக்கு ஆரம்பமாகுது. எல்லாரையும் திருட்டு ஃப்ளைட் ஏறியாவது வந்து கலந்து சிறப்பிக்குமாறு யாவரும் நலம் சார்பாக அன்பாகவும், பண்பாகவும், தாழ்மையாகவும் வேண்டிக் கொள்கிறேன்.

வர்ட்டா..

05 May, 2010

டொட்டொடொய்ங்..

சனிக்கிழமை.. 01.05.10. என்னவரும் நானும் படம் பார்க்க உக்காந்தோம். பசங்களுக்கு படத்தோட பேர் சொன்னேன். யார் நடிச்சதுன்னாங்க சொன்னேன். அப்புறமா வரோம்னாங்க. கடைசி வரை வர்ல. போன ஞாயிறுக்கு முதல் ஞாயிறு (தேதி நீங்களே காலண்டர்ல பாத்துக்கோங்க) டிவி முன்னாடி உக்காந்திருந்த என்னவர் கூப்டார்.

”ஏய் இங்க கொஞ்சம் வாயேன்.. புது படமாம்”

கிச்சன்ல இருந்து நான் வரத்துக்குள்ள (பதினஞ்சு அடி தூ..ரம் நடந்து வந்தா) ட்ரெய்லர் போயிடுச்சு. எஸ்.கே நாதன் கடை சூரிச்ல சேல்னு ஸ்நேகா ஆடிட்டு இருந்தாங்க. மறுபடி ஆட் போட ஆரம்பிச்சதும் கூப்டார். மூணாவதா இது வரவும் நான் கிச்சன்ல இருந்து வரவும் சரியா இருந்துது.

நமது கலைஞர் தொலைக்காட்சியில்..

புத்தம் புதிய திரைப்படம்..

வரும் சனிக்கிழமை இரவு 8 மணிக்கு..

’…..’ நடித்த புத்தம் புதிய திரைப்படம் ’…..’

நமது கலைஞர் தொலைக்காட்சியில்..

ன்னு சொல்லிட்டு இருந்தாங்க.

”இது புதுப் படம் இல்லை.. நீ கூட தியேட்டர்ல பாக்கலாமான்னு கேட்டேல்ல.. நல்ல வேளை இந்த சனி எந்த ப்ரோக்ராமும் இல்லை. நிம்மதியா பாக்கலாம்”

ன்னு சொல்லி, ரொம்ப எதிர்பார்ப்போட இருந்தார். சனியும் வந்தது. ரெண்டு பேரும் இருக்கோம் படம் பாத்துட்டு. என்னடி இது.. ரொம்ப முக்கியம்.. இது வேறயானு அப்பப்போ சொல்லிட்டு இருந்தவர் அப்புறம் சைலண்டா பாத்துட்டு இருந்தார். நான் போஸ்ட் படிச்சுட்டு கமண்ட் போடாம போற வாசகியா பேசாமலே இருந்தேன். படமும் முடிஞ்சுது.  கமண்ட் போட்டுட்டு பிளாகர் என்ன சொல்லப் போறார்னு மறுபடி கமண்ட் போட்ட பிளாக் போய் பாக்கிற வாசகியா அவர் முகத்த பாத்தேன்.

”என்னடி இது..”

”ஏம்பா..”

”நல்லவேளை அன்னிக்கு உன் பேச்ச கேட்டு நான் தியேட்டர் வர்லை”

”அதான் நானும் போல இல்லை.. எனக்கென்ன தெரியும். நான் கூட இப்டி இருக்கும்னு நினைக்கல”

ஒரு பாட்டாவது நல்லா இருந்திருக்கலாம்.. இவருக்கு விஜய் மாதிரி டான்சும் வராது.. காமெடியும் சொதப்பல்.. நல்ல வேளை தப்பிச்சேண்டா சாமி.. இன்னைக்கு யாராவது ஃப்ரெண்ட்ஸ் வீட்டுக்காச்சும் போயிருக்கலாம். ஒரு சனிக்கிழமை அநியாயமா போச்சு போ..”

அதான் பாவனா ஷமீரானு ஒண்ணுக்கு ரெண்டு பேர் இருந்தாங்களேஏனு கேக்க நினைச்சுட்டு நினைச்சதோட விட்டுட்டேன். எனக்கு தெரியும் அவங்கள அவருக்கு பிடிக்கலைன்னு. ஷமீரா வா ஆ தில வந்த மாதிரி இதுல இல்லை. பாவனா டொட்டொடொய்ங் பாட்டுல கொஞ்சூண்டு நதியாவ என் நினைவுக்கு கொண்டு வந்தாங்க. அஜித்.. அவ்வ்வ்..

லேட்டான்னாலும் லேட்ட்ட்டஸ்டா நாங்க பாத்த படம்..

Bilde006 (2)

டொட்டொடொய்ங்.. டொட்டொடொய்ங்..

ஞாயிற்றுக்கிழமை. 02.05.10. நானும் சதுவும் கார்ல வெயிட் பண்ணிட்டு இருந்தோம். அம்முவுக்கு 4 மணிக்கு முடிய வேண்டிய டான்ஸ் கிளாஸ் 4.11 ஆகியும் முடியிறதா காணோம். x-box game விளாடிட்டு இருந்தவர கூட்டி வந்துட்டேங்கிற கடுப்பில இருந்தார். வெளிய வெயில்னாலும் குளிர். கார்லவே இருக்க வேண்டியதா போச்சு. முடிஞ்ச வரைக்கும் முயற்சி செஞ்சும் அவர் இந்த ரேஞ்சுக்கு போய்ட்டார்.

Bilde003 (2)

கடைசியா ஒண்ணு சொன்னேன். போட்டாரு பாருங்க ஒரு குதியாட்டம். நீங்களே பாருங்களேன்..

Bilde005

அப்புறம் அம்மு வந்ததும்தான் நேரம் 4.49 ன்னு தெரிஞ்சுது. அது வரைக்கும்

“அம்மா.. விஜய், வில்லு, வேட்டைக்காரன் எல்லாமே ’வி’ல தொடங்குது இல்லை..”

“வடிவேலும் இருக்காரா அய் ஜாலி..” ”

”இனிமே என் ஃபேவரிட் லிஸ்ட்ல சுறாதான் ஃபர்ஸ்ட்..”

இப்டியே பேசிட்டு இருந்தார். வேற ஒண்ணுமில்லிங்க.. செவ்வாய்க்கிழமை சுறா பாக்க தியேட்டர் போறோம்.. அப்பா டிக்கட் புக் பண்ணிட்டார்.. இந்த ரெண்டு வசனமும் தாங்க நான் சொன்னேன். இத முன்னாடியே சொல்லி இருக்கலாம்னு சொல்றீங்களா?? அததாங்க நானும் நினைச்சேன்..

டொட்டொடொய்ங்.. டொட்டொடொய்ங்..

இன்னைக்கு செவ்வாய்க்கிழமை. 04.05.10. ஆஃபீஸ்லருந்து 2:30 க்கே கிளம்ப நினைச்ச என் திட்டம் டமால்.. திடீர் மீட்டிங். ஏமாற்றம் நெம்பர் ஒன்.

ஃப்ரெண்ட் கூட ஒரு சின்ன மிஸ்அண்டர்ஸ்டாண்டிங். அது கிட்ட பேசிட்டு போலாம்னு நினைச்சேன் லைன் என்கேஜ்ட். ஏமாற்றம் டூவு.

அடுத்து சமையலையாவது சீக்கிரம் முடிக்கலாம்னா ஃப்ரிஜ் லைட் எரியுது வேலை செய்யல. நைட் வெட்டி ரெடியா சுத்தம் பண்ணி வச்ச மீன் மறுபடி செத்துப் போச்சு. மூணாவது ஏமாற்றம்.

ஒரு வழியா புறப்பட்டு போனா பார்க்கிங் கிடைக்கல. நாங்க மட்டும் உள்ள போக அவர் தேடி பார்க் பண்ணி வரேன்னுட்டு போய்ட்டார். ஏமாற்றம் நான்கு.

டிக்கட் வாங்கி பாத்தா 5 வது ரோல 1-4 சீட். முன்னாடி அதுவும் செண்டர் சீட் இல்லாம ஓரத்தில உக்கார வேண்டியதா போச்சு. என்னதான் 5 எனக்கு பிடிச்ச நம்பர்னாலும் அந்த ஏமாற்றம் அஞ்சேய்.

சர்டிபிக்கேட் போட ஆரம்பிச்சும் கண்ணாளன் வர்ல. அப்பப்போ வராரான்னு திரும்பி திரும்பி பாத்ததுல கரெக்டா பாக்க வேண்டிய பேர் போயி தமன்னானு வந்திடுச்சு. எத்தனாவது ஏமாற்றம்? ஆறு.

ஆனா ‘தள’ மட்டும் என்ன ஏமாத்தலிங்க. என்ன டான்ஸு, என்ன பாட்டு, என்ன காமெடி, அடடடடா.. நல்லா எழுதுற பதிவர்களோட பதிவுல நல்லா இருக்குன்னு கமண்ட் போட்டு அலுத்துப்போனா மாதிரி எனக்கும் அவர் படத்தப் பத்தி நல்லாருக்குன்னு சொல்லி சொல்லி அலுத்துப் போச்சுங்க.

எனக்கு கவலையெல்லாம் விசில் சத்தம் பாக்ரவுண்ட்ல கேக்காம பாத்ததுதான். டிக்கட் புக் செய்யும்போது நார்மலாவும், தியேட்டர் உள்ள போம்போது ஸ்ட்ரிக்டாவும் சொல்லிட்டாங்க. விசில், இல்லை ஆனந்தக் கூச்சல், கைதட்டல் கூடாதுன்னு. இருந்தாலும் அப்பப்போ கேட்டுட்டு இருந்துது. லைட்டா. இருந்தாலும்..

இதான் முத தடவையா ஊர்ல சினிமா டிக்கட் பாத்த ஒரு ஃபீல் வந்துது. டிக்கட் செலவ சரி செய்யவோ என்னமோ விலைய 110kr இல இருந்து 130 kr க்கு ஏத்திட்டாங்க.

பாருங்க என் கைல ஒண்ணில்ல நாலு Sunrise :))))

Bilde035

வர்ட்டா..

13 January, 2010

வேட்டை இன்னும் முடியல டோய்..

அன்பர்கள், ஆதரவாளர்கள் அனைவருக்கும் எனது இனிய புது வருட வாழ்த்துக்கள். இதை நான் அடுத்த வருஷத்துக்கு அட்வான்ஸா சொல்லலீங்கோ.

யார் கண்ணு பட்டுச்சோ.. இந்த வருஷம் இங்க கு..ளி..ர்.. வதைக்குதுங்க. டெம்பரேச்சர் -22 வரைக்கும் போச்சுதுங்க. கை சும்மாவே டைப்படிக்கும்போது எக்குத்தப்பா எதுனா எழுதிடுவேனோன்னு பயமா இருந்துதா, அதான் உங்க பதிவுகள படிக்கிறதோட நிறுத்திட்டேன். இப்போ -5 க்கு குறைஞ்சிருக்கு. உடன எழுத ஆரம்பிச்சுட்டேன்.

கடைசியா இந்தியால 2007 மார்ச், ஏப்ரல் காலப் பகுதியில தியேட்டர்ல பாத்ததுக்கு அப்புறம், தியேட்டர்ல பாத்த முதல் தமிழ் படம் இதுதான். கண்ணாளன் கேட்டதெல்லாம் உடனவே செய்யலேன்னா படம் பாக்க கூட்டிட்டு போக மாட்டேன்னு மிரட்டி வேலை வாங்கிட்டார். இந்த ஸ்னோ வேற விடுவேனா பார்னு கொட்டித் தள்ளிடுச்சு. அன்னிக்கு காலையில இருந்து நான் மட்டுமில்ல பசங்களும் அவர் எள்ளுன்ன முன்னம் எண்ணெயா இருந்தோம். வேலைக்கு போனவருக்கு மணிக்கொருதரம் ஃபோன் பண்ணி படம் பாக்க போகணும் ஞாபகம் இருக்கில்லன்னு சொல்லிக்கிட்டே இருந்தோம். வந்த உடனே சொன்னார். அம்மாவும் புள்ளேங்களும் ஒரு கோயில், கொண்டாட்டம் போணும்னா என்னிக்காவது இப்டி சீக்கிரம் ரெடி ஆயிருப்பீங்களா. இருங்கடி கவனிச்சுக்கிறேன்னு.

நாமதான் இப்டீன்னு நினைச்சுக்கிட்டு அங்கபோனா நமக்கு முன்னாடி அத்தனை பேரும் ஆஜர். ஸ்நோல கார் சிக்கிட்டதால டிக்கட் வர கொஞ்சம் லேட்டாயிடுச்சு. நொறுக்ஸ், கொறிக்ஸ் எல்லாம் வாங்கிட்டு எங்க நெருங்கிய நண்பர்கள் குடும்பங்கள் ரெண்டும் நாங்களுமா பேசிட்டு நின்னோம். கிட்டத்தட்ட சென்டர் ரோல சீட் கிடைச்சுது. அதிலயும் சென்டர் பாத்து நான் உக்காந்துட்டேன். எனக்கு இடது பொண்ணு, வலது பையன். என்னவர் ஓரத்துல, அஞ்சு சீட் தள்ளி உக்காந்திருந்தார். நல்ல வேளைங்க அவர் தள்ளி இருக்கிறது. பக்கத்தில உக்காந்திருந்தா உறுத்தலோட விஜய ரசிச்சிருக்கணுமேன்னு நான் ஃப்ரெண்டு கிட்ட சொன்னதோட படம் களை கட்ட ஆரம்பிச்சிடுச்சு. இருந்தாலும் என் கண்ணன் என் பக்கத்தில இல்லாதது கொஞ்சம் கஷ்டமாதாங்க இருந்துது.

ஒவொரு சண்டை காட்சிகள்லேம் பையன் சிலை மாதிரி உக்காந்து பாத்திட்டிருந்தார். விஜயோட ஒவொரு குறும்பையும் உடனவே எனக்கு செஞ்சு காட்டினார். பொண்ணு தன பங்குக்கு பாடல்கள், டான்ஸ பாராட்டினா. சின்னத்தாமரை.. அவ ஃபேவரிட். அதில விஜய்  கெட்டப் சூப்பர்னா. எனக்கு வலது எல்லையில என்னவரும் ஃப்ரெண்டும் அவ்ளோ நல்லா சிரிச்சு என்ஜாய் பண்ணி பாத்தாங்க. இடது எல்லையில இருந்தவர் மட்டும் சைலண்டாவே இருந்தார். அவர் பக்கத்தில கொஞ்சம் ஸ்வீட் சிக்ஸ்டீன்ஸ். அவங்க போட்ட சவுண்டுல மிரண்டுட்டார்ங்க. நான்.. என்னோட பங்கு நொறுக்ஸ் மட்டும் அப்டியே இருந்துது.. எப்டி சாப்ட முடியும்? சுசின்னு விஜய் கூப்டத்துக்கு அப்புறமும்.. அவ்வ்வ்வ்.. என் பேர மாத்திடலாமான்னு யோசிச்சு கிட்டு இருக்கேன் ஆவ்வ்வ்வ்..

விசில் சத்தம் தியேட்டர் அதிர்ந்துது. இதுக்கு முன்னாடியும் இங்க தமிழ் படங்கள் பாத்திருக்கேன். இப்டி ஒரு விசில் சத்தம் இதுவரை கேட்டதில்ல. கைக்காச போட்டு படத்த போட்டவர் சொன்னார் இத்தனை நாள் படம் போட்டிருக்கோம். இவ்ளோ கூட்டத்த பாத்ததில்லன்னு. ஹவுஸ் ஃபுல். லேட்டா வந்த சிலர் படீல இருந்தும் பாத்தாங்க. இங்க இன்டர்வல்லாம் கிடையாதுங்க. இருந்தும் அவ்ளோ நேரம் எப்டி போச்சுன்னே தெரீல.

வெளிய வந்ததும் எல்லாரும் சொன்னாங்க. ஏன் கண்ணாளன் கூட சொன்னார். ரொம்ப நாளைக்கப்புறம் ஒரு நல்ல படம் பாத்திருக்கோம்னு. பையன் கேட்டார் ஏம்மா இவ்ளோ சத்தமா விசில் அடிச்சாங்கன்னு. நான் சொன்னேன் நீங்களும் அவங்க வயசு வர இப்டிதாம்பா செய்வீங்கன்னு. இதில கடுப்பான சில முன்னாள் யூத்துங்க சொல்லிக்கிட்டது. என்ன இது விஜய் நின்னா விசில், நடந்தா விசில்னு பாத்தா யூரோப்ல இருந்துக்கிட்டு அனுஷ்காவுக்கு கிஸ் அடிச்சாக் கூட விசிலடிக்கணுமா?? பாவம் அவங்க கடுப்பு அவங்களுக்கு.

அனுஷ்கா அழகா இருந்தாங்களாம். சொன்னாங்க. (நான் அவர மட்டுந்தேன் பாத்தேனுங்க) தெரிஞ்சவங்க ஒருத்தங்க என்னவர என்ன நீங்களும் விஜய் ரசிகரான்னு கேட்டத்துக்கு இல்ல அவங்க ஜோடியோட ரசிகன்னு சொன்னார். எனக்கு பிடிக்காத நடிகைகள் லிஸ்ட்ல ஒண்ண சேத்துக்கிட்டேன். பசங்க கேட்டாங்க அம்மா உங்களுக்கு மறுபடி பாக்கணும் போல இல்லையான்னு. கண்டிப்பான்னேன். என்ன பண்ண.. இங்க ஒரு ஷோதான் போட முடியும்னுட்டாங்க. சிடி வந்ததும் வாங்கி பாக்கலாம்னேன். ஆளுக்கொண்ணு வாங்கி குடுக்கணும்னாங்க. கண்டிப்பா மூணு வாங்கிடலாம்னேன்.

அப்புறம் என்னோட சொந்த பந்தங்கள், அறிஞ்ச தெரிஞ்சவங்க கிட்டல்லாம் கேட்டுட்டேன். அனேகமா எல்லாருக்கும் பிடிச்சிருக்காம். அப்பா மட்டும் என்ன வழக்கமான ஒரு விஜய் படம்னார். வேணும்னு எனக்காக.

அப்புறம் என்னங்க. இத்தனை நாளா நினைச்சு நினைச்சு எழுதினதுல வழக்கம்போல நிறைய எழுதிட்டேன். நீங்க படிப்பீங்கங்கிற நம்பிக்கையும் ஒரு காரணம். (ஏன் அவங்க வருஷம் பிறந்து இவ்ளோ நாளா நிம்மதியா இருந்தது உனக்கு பொறுக்கலேன்னு சொல்லேன்) அப்டியே பொங்கல நல்லா கொண்டாடுங்க.

எல்லோருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்.
வர்ட்டா..

22 June, 2009

விஜய் வாழ்த்து மழையில் - சுசி வருத்த மழையில்....


சுசிக்கு கண்ணு பட்டு போச்சுங்க! குளிர் ஜூரம், உடம்பு பூரா வலி, தலை வலி, தொண்டை நோவு, லைட்டா ஜலதோஷம் அப்புறம் ரொம்ப பசிக்குது, கொடுமை சாப்ட முடில. சிக் லீவ்ல இருந்தாலும் நம்ம விஜய்க்கு சின்னதா ஒரு வாழ்த்து சொல்லிடலாமேன்னு நினச்சேன். சொந்தமா எழுத உடம்பில தெம்பில்ல. அதனால விடுப்பு.காம்ல ஆட்டைய போட்டுட்டேன்.

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் விஜய். உங்க கொள்கைகள்ல அரசியல்+சினிமாத்தனம் புகாம பாத்துக்கோங்க. வாழ்க நலமுடனும் வளமுடனும்.

இனி சுட்ட பழம்.....



விஜய் பிறந்தநாள் செய்தி !!!

எதிர்பார்த்தபடியே தனது நற்பணி இயக்கத்தை மக்களின் இயக்கம் என அறிவித்துவிட்டார் விஜய்.
விஜய்க்கு இன்று பிறந்தநாள். தமிழ்நாடு முழுவதும் ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு பஞ்சமில்லாமல் நடந்துகொண்டிருக்க, தனது பிறந்தநாள் செய்தியாக விஜய் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

"எனது முதல் படம் வெளியானபோது ரசிகர் மன்றம் ஆரம்பித்து, படிப்படியாக சினிமாவையும் தாண்டிய நற்பணி இயக்கமாக வளர்த்தீர்கள். ஏழைகளுக்கு இலவச வேட்டி,சேலை கொடுப்பதில் ஆரம்பித்த உங்கள் நற்பணி, இலவச திருமணம் நடத்தி வைப்பது, பள்ளிக்கூடங்கள் கட்டிக்கொடுப்பது, ஏழை பிள்ளைகளை படிக்க வைப்பது போன்ற பணிகளை செய்து சமூக தொண்டர்களாக உயர்ந்து இருக்கிறீர்கள்.

நாடு முன்னேற முதுகெலும்பாக இருப்பது கல்வி. அதனால் நான் கல்விப் பணியில் அதிக அக்கறை எடுத்துக்கொள்கிறேன். பல நூறு ஏழை குழந்தைகளை படிக்க வைப்பதுடன் அவர்களுக்கு ஆண்டுதோறும் இலவச நோட்டு புத்தகங்களை வழங்கி வருகிறேன். இந்த ஆண்டு என் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னையில் 2 இடங்களில் இலவச கம்ப்யூட்டர் பயிற்சிப் பள்ளி தொடங்குகிறேன். இந்த கம்ப்யூட்டர் பயிற்சிப் பள்ளி தமிழகம் முழுவதும் உருவாக வேண்டும். இரண்டு இருபதாகி, இருபது இரண்டாயிரமாக வளர்வது உங்கள் கையில்தான் இருக்கிறது. இதைத்தான் பிறந்தநாள் பரிசாக உங்களிடம் கேட்கிறேன்.

நேற்றைய தொண்டன், இன்றைய தலைவனாக இருக்கிறான். அதேபோல இன்றைய தொண்டன் நாளைய தலைவனாக மாறலாம். இந்த விதி உங்களுக்கும் பொருந்தும். இது சமூகம் தரும் நாளைய தீர்ப்பு. இதை ஆழமாக மனதில் பதிய வைத்து மேலும் உங்கள் சமூக பணியை வளர்த்துக் கொள்ள வேண்டும். இனிவரும் காலத்தில் தமிழ் மக்களின் நன்மைக்காக பாடுபடும் ஒரு மக்கள் இயக்கமாக செயல்பட்டு, வளமிக்க இளைஞர் சக்தியாக உருவெடுப்போம்.

முக்கியமா இவ்ளோ உடம்புக்கு முடியாம போன நெலமேலேம் எனக்கு வாழ்த்து சொன்ன சுசிக்கு என்னோட மனம் நிறைந்த நன்றிகளை தெரிவிச்சுக்கிறேன். அவங்க சீக்கிரம் குணமடைய பிரார்த்திப்போம்."

ஏன்.... ஏன்... ஏம்பா.... ஏன் இந்த கொலைவெறி? நமக்குள்ள என்ன. சத்தியம்மா விஜய் இத சொன்னாருங்க. ( என் கனவுல)