சுள்ளிடும் உன் வார்த்தைகள்
ஒரு சிலதான்
என் மனதில் வலிகள்
வலிகள் மட்டும்??
***** ***** ***** ****** *****
எங்கு வரம் வாங்கி வந்தது
தொலை நீண்ட நீல வானம்
ஒன்று கடக்க இன்னொன்றாய்
ஒட்டி உறவாடிக் கொள்கின்றன
வெண் பஞ்சு மேகங்கள்..
***** ***** ***** ***** *****
எனக்கான சொர்க்கம்
இரண்டே வார்த்தையில்..
”கிட்ட வா”
***** ***** ***** ***** *****
தொடர் கதைய மறந்துட்டேன்னு நினைச்சிங்களா?? இதுவும் பயணத்தில பார்த்ததுதான். என் கண்ணனுக்கும் எனக்குமான சொத்து. சோகம், சுகம், ஏக்கம், கண்ணீர், காதல் அத்தனையையும் இரு மனங்களுக்கும் கண் வழி கடத்தும் மாய மருந்து. எல்லாம் மறந்து விரிந்த அவன் கைகளுக்குள் அணைந்து, அணைத்து அங்கேயே இருந்திட முடியாமல் நடப்பு வாழ்க்கை இழுத்து வருவது போல்தான் இதுவும். எதுவோ ஒரு ஜெர்மன் தெருவில.. 160 கி.மீ வேகத்துல வண்டி போய்க்கொண்டு இருந்த போதுதான் பார்த்தேன்..
KVS. யாரோ ஒரு புண்ணியவான். கோதுமையோ எதுவோ விளைச்ச ஒரு தானிய வயல்ல, அறுவடைக்குத் தயாரான பழுப்புப் பயிர்களுக்கு மத்தியில பசேல்னு எழுதி வச்சிருந்தார். கிட்ட வா.. கூடவே சுசியும் சேர்த்து சொல்வது போல.. அரக்கப் பரக்க காமிரா எடுத்து ஒரு கிளிக்.. வெறும் பழுப்புப் பயிர்.. அடுத்த கிளிக்.. இந்தப் படம்.. அப்படியும் ஒரு குட்டிச் செடி குறுக்கே.. V மறைஞ்சு போச்சு.
வண்டிய உடனே திருப்ப முடியாத படி நேர்ப் பாதை.. அகலம் குறைந்த சாலையோரம் ஒதுக்கி நிறுத்துவது உயிராபத்தில் முடியும். இன்னொரு முறை பார்க்கலாம் என்ற ஆறுதலோட இதாவது கிடைச்சதே என்ற திருப்தியோட வந்தாச்சு. அப்போ இருந்த படபடப்பில தோணலை. எந்த இடம்னாவது பார்த்து வைக்கணும்னு. அப்படியே எப்பவோ ஒரு தலைவலி நாளில் எழுதி வச்ச இன்னொரு ”கிட்ட வா”வும் இலவச இணைப்பா.. பாவம் நீங்க.
***** ***** ***** ***** *****
இச் என்று ஒரு சத்தம்
இறுக்காத ஓர் அணைப்பு
”ஆமா இவ ஒருத்தி”
பட்டென்று நனவுக்கு வந்தேன்
”இத்தனை நேரம் தலைவலியோட
ஏன் கஷ்டப்படறே??”
”வீட்டுக்குப் போய்தான் டாப்லட் போடணும்னு
அப்டி என்ன வேண்டுதல் உனக்கு??”
”அவ வீட்ல காயகல்பம் வச்சிருக்காளாம்”
குறைப்படுவார்கள் அலுவலகத்தில்
போகாத பொழுதை நெட்டித் தள்ளி
வேலை முடிந்து வீடு வந்தால்
என் முகம் பார்த்த அடுத்த நொடி
இரு கை நீட்டி
என் கண்ணன் கூப்பிடுவான்
”தலைவலியா..
கிட்ட வா..”
இச் என்று ஒரு சத்தம்..
இறுக்காத ஓர் அணைப்பு..
உயிரின் அணுவரை சுகித்துப் போகும்
யாருக்கு வேண்டும் மருந்தும் மாத்திரையும்??
***** ***** ***** ***** *****