Pages

  • RSS

27 March, 2011

வெற்று வார்த்தைகள்..

writing அறியாமல் வந்தது காதல்

உன்னைப் பற்றி

உன் மேல்

 

 

--

வலைகள் வேறு

ஆண் வேடர்கள்

பெண் மான்கள்

--

 

glemt உண்மைதான்

உன் போல் நான் இல்லை

இதில் கூட

 

 

 

--

கிணற்று நீர்

வெள்ளம் அள்ளாது

வற்றிப் போகும்

 

--

 

jeg savner deg உன் பெயர்

பேச்சில் அனிச்சையாய் வருகிறது

உன்னவள் பெயரும்

23 March, 2011

வேண்டும்போது வராத மழை..

ஊரில் எல்லாத் தொல்லையும் ஓய்ந்தாலும் மழை விட்டபாடாய் இல்லை. ஊரே வெள்ளக்காடாய். கடல் மட்டமும் உயர்ந்து உள்ளதால் ஆற்று நீர் கடலுக்குள் கலக்க முடியாமல் ஊருக்குள்ளேயே நிறைந்துவிட்டது. கொடும் குளிர். ரஜி வீடு கொஞ்சம் உயரமான இடத்தில் இருப்பதால் வீட்டுக்குள் தண்ணீர் வரவில்லை. அண்ணா முன் பக்கத்துக்கு சுற்று மதில் கட்டிவிட்டதால் வயற் பிரதேசமான இடத்தில் இருக்கும் அவர் வீட்டுக்குள் தண்ணீர் குறைவாகவே புகுந்துள்ளது. பலர் பாடசாலைகளில் தஞ்சம். சொந்த நாடு மட்டுமல்ல, சொந்த வீடு கூட தமிழனுக்கு..

DSC05448 DSC05449

அண்ணா ஐந்து மாடுகள் வாங்கினார். சீமைப்பசுக்கள். எங்கள் ஊரில் கேப்பை மாடு என்பார்கள். அத்தனை அன்பாகப் பார்த்துக்கொண்டார்கள். போன வாரம் அண்ணா ‘வெள்ளை மாடு படுத்திட்டுது அப்பா’ என்று ஸ்கைப்பில் சொன்னபோது கூட இருந்து கேட்டுக்கொண்டு இருந்த அம்மு கேட்டார் ‘மாடு படுத்தா தப்பாம்மா.. தூங்கிறதுன்னா அது படுத்து தானே ஆகணும்’ கவலை மீறி அண்ணா சிரித்தார். மாடுகள் சீக்காகிப் போவதை அப்படிச் சொல்வது எங்கள் வழக்கம் என்று அவளுக்குப் புரிய வைத்தேன். இரண்டு நாள் முன்னர் எந்த வைத்தியமும் சேராமல் செத்துவிட்டது. டவுன் கவுன்சிலில் சொல்லி, ட்ராக்டரில் வந்து, புதைந்து, மதில் சுவரையும் சற்றே இடித்து, ஏற்றிக் கொண்டு போனார்களாம். இப்போது அடுத்த மாடுகளும் வரிசையாய் நோயில்..

பொங்கல் சமயமே பெருவெள்ளம். அண்ணா, ரஜி, மச்சினர், மாமியார் உட்பட பலர் வீட்டுக்குள்ளேயே பொங்கி வராத சூரியனுக்கு சம்பிரதாயமாகப் படைத்தார்கள். வெடி கூட வீட்டுக்குள்தான். அதிலும் எங்களுக்காக, ஒற்றை மத்தாப்பு கூட சுட்டுப் போடாத துர்ப்பாக்கியசாலிகளுக்காக முதல் நாள் இரவே சக்கரவாணம் வெடித்துக் காட்டினார் அண்ணா. எத்தனையோ வருடங்களின் பின் பட்டாசுச் சத்தத்தோடு பொங்கல். இந்த மழை மட்டும் அன்று நின்றிருந்தால்..

DSC05400 DSC05422

பயிர்கள் எல்லாம் அழிந்துபோய், அழுகிப்போய், குளம்போல் தோன்றும் வயல்கள், எப்போதும் உடைப்பெடுக்கும் என மிரட்டும் குளங்கள், பாடசாலைகளுக்கு மூடுவிழா. பள்ளிப் பருவத்தில் அவ்வளவு ஆனந்தம் தந்த மழைக்கால விடுமுறை. இன்னமும் ஊரோடு அதே பள்ளிப் பிள்ளையாய் இருந்திருந்தால்..

90ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து கிராமம் ஒன்றில் இருந்தோம். வீட்டின் பின் பக்கம் குளம். பெரிய குளம். ஊரில் எப்போதாவது குளங்கள் வான் பாய்வதை வேடிக்கை பார்த்தபோது இருந்த சந்தோஷம் அப்போது இருக்கவில்லை. சில இடங்களில் உடைந்துவிடத் தயாராய் இருந்த குளக்கட்டு ரொம்பவே மிரட்டியது. அரிசி மூட்டைகளை உயரமாக அடுக்கி வைத்து அதன் மேல் ஏறி விழிப்போடு கழித்த இரவு. வீட்டுப் படி மேவி நில்லாது ஓடிய வெள்ளத்தோடு அடித்துச் செல்லப்படும் பாம்புகள், தேள்கள். நீர் வடிந்து போக வழியில்லாத களிமண் பூமி. இருந்த அரிசியையும், ஈர விறகையும் வைத்து பசி போக்கியதோடு இரவில் குளிரும் விரட்ட வேண்டிய கட்டாயத்தில் இருந்த அகதிகளிடம் குளிர்ச்சட்டை ஏது. அம்மம்மாவின் காட்டன் சேலையால் சுற்றிக் கொண்டு சுருண்டு போய் இருப்போம்.

அப்போது எங்களிடம் மாமாவின் மாடுகள் இரண்டும், முன் வீட்டுப் பாட்டி தந்த மாடு ஒன்றும் இருந்தது. மழையில் அவை பட்ட அவஸ்தை. அந்த மழையிலும் விறகு தறித்து வந்து இரவில் இரண்டு விறகை அவற்றுக்கும் எரித்துவிட்டுக் கூதல் விரட்டுவான் ரஜி. மாடு மீட்கப் போய் புதைகுழியில் மாளப் பார்த்த அக்காச்சி நேற்று ஸ்கைப்பில் சொன்னாள் ’உடம்பெல்லாம் மூழ்க ஆரம்பிச்சு கடைசில கண் வரைக்கும் சேறு மூடினப்போ சிவப்பியோட கண்ல தெரிஞ்சுதே ஒரு மரண பயம்.. என் வாழ்க்கேல மறக்கமாட்டேன்பா’

hund 94இல் இருந்த வீட்டின் பின்பக்க ஒழுங்கை மழை பெய்யும் நாட்களில் ஆறு. இல்லாத நாட்களில் மறுபடி ஒழுங்கை. எங்கிருந்துதான் அவளவு வெள்ளம் வருமோ. மாரிகாலம், தொடர் மழை தவிர மீதி நாளில் வந்த வேகத்திலேயே வடிந்து விடும் மணல் பூமி. அப்போது நாங்கள் வளர்த்த செல்லம் லஸி. Alsatian நாய். ஆனந்தமாய் குளியல் போடும். வெள்ளத்தோடு அடித்துச் செல்லப்படும் தடிகளையும், நாங்கள் தூக்கிப் போடும் பந்துகளையும் நீந்தியபடியே தேடி எடுத்து வரும். உபரியாய் தேங்காய்களும் கவ்வி வரும். நாங்களும் சேர்ந்து நனைந்தபடி வெள்ளத்தில் விளையாடிய நாட்கள் இன்னமும் ஏங்க வைப்பவை.

சின்ன மச்சினர் புகுந்த ஊரில் அவளவு சேறாக இருக்கும். நிலத்தில் கால் வைத்தால் சர்ர்ர்ர். ஸ்கேட்டிங் தான். நடை கிடையாது. அப்பாவின் கிராமத்துக்கு மழைக்காலத்தில் போவதென்றால் எங்களுக்கு அவளவு கொண்டாட்டம். காடும், மழையும், புதுவிதமான பூச்சிகளின் ஒலியும், மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சமும் இரவில் ஒரு பயம் கலந்த தூக்கத்தைத் தரும். போர்க் காரணத்தால் தார் ரோடே இல்லாத காலத்தில் மண் ரோடுகளும், வண்டிகளும், நாங்களும் போக்குவரத்தில் பட்ட அவஸ்தைகள்.. அப்பப்பா..

வேண்டுமென்றே மறந்த குடை, மழை வெள்ளத்தில் ஆட்டம், பல் கிட்டும் குளிர்,  போர்வைக்குள் ஒளிந்தபடி கால் மடித்து அமர்ந்து, அம்மாவின் திட்டோடு ஈரத் தலை உலர, கை சுடும் தேநீர் இதமாய் குளிர் விரட்ட.. ஹூம்.. இங்கேயும் எல்லாம் உண்டு. என்ன இருந்து அனுபவிக்க நேரம்தான் இல்லை. அப்படியே இருந்தாலும் இங்கே பெய்யும் மழை மட்டும் ஏன் தான் அநியாயத்துக்குக் குளிர்ர்ர்ர்ந்து தொலைக்கிறதோ தெரியவில்லை. மழைக் காதலனான என் நண்பனுக்கு அடிக்கடி சொல்வேன் ‘இங்க வந்து இந்த மழையில நனைஞ்சிட்டு அப்புறமும் சின்ன சின்ன மழைத் துளிகள்னு பாடு.. அப்போ ஒத்துக்கறேன் உன் மழைக் காதலை’ என்று.

21 March, 2011

கலந்துகட்டிய தமிழ்.

என் நண்பி வந்திருக்கிறார். ஒரு வாரம் எங்களோடு இருப்பார். அந்த ஒரு வாரத்திலும் இன்னும் இரண்டே நாட்களே மீதம் இருக்கிறது. ஏர்போர்ட்டில் இருந்து வீட்டுக்கு உள்ளே வந்ததுமே படி இறங்கி வந்த அம்மாவின் கால் தொட்டு அவர் ஆசீர்வாதம் வாங்கியபோது கலங்கிய என் கண்கள் அடிக்கடி கலங்கிப் போகும் என்று அப்போது நான் நினைக்கவில்லை. அவர் அன்பால் அவ்வப்போது கண்கலங்குவதைத் தவிர்க்கவே முடியவில்லை. ‘நான் காஃபி சாப்ட போறேன். யாருக்கெல்லாம் வேணும்’ என்று உரிமையோடு வீட்டுப் பெண்ணாக ஆகிவிட்டார். எங்கள் அன்பில் அவருக்கு அந்நிய உணர்வே தோன்றவில்லையாம். அது உண்மை என்பதை அவரின் சிரித்த முகமும், பேச்சும் உறுதிப்படுத்துகிறது. பிள்ளைகளை தட்டித் தூங்க வைக்கும் அளவுக்கு அவர்களோடு ஒன்றிவிட்டார்.

நாடு கடந்த நட்பு இப்போது என்னை அக்காச்சி என்று அழைக்கும் அளவுக்குப் பாசமாக வடிவம் கொண்டுள்ளது. லீவு கிடைக்காத கவலையோடு நேரத்தை நெட்டித் தள்ளிவிட்டு வீட்டுக்கு ஓடி வருகிறேன். இங்கே சுற்றிப் பார்க்க எதுவும் சிறப்பாக இல்லையென்றாலும் பேசித் தீர்த்துக் கொள்கிறோம். இலங்கைச் சமையலை அம்மாவிடம் கற்றுக் கொள்கிறார். ’பப்பிம்மா.. அக்காச்சி கிட்ட பொட்டுக்கடலை இருக்குமா தெரியலை கேட்டுப் பார்த்து நீங்க சொன்ன மாதிரியே தேங்கா சட்னி செஞ்சுகுடுக்கறேன்’ என்று அவர் அம்மாவிடம் கேட்டு இந்தியச் சமையல் செய்து தருகிறார்.

‘நீயே ஒரு திருடி. உன்னை நம்பி இந்தப் பொண்ணை இங்க அனுப்பி வச்சாங்க பாரு.. அவ அம்மா அப்பாவுக்கு பூப் போட்டு கும்பிடணும்’னு கண்ஸ் சொல்லும் அளவுக்கு அன்பான பெண். வேகத்தோடு தூய இலங்கைத் தமிழ் பேசும் கண்ஸின் பேச்சு சட்டென்று புரியாமல் அவர் முழிக்கும்போதும், இவரின் இந்தியத் தமிழ் புரியாமல் கண்ஸ் முழிக்கும்போதும் நான் தமிழுக்கே மொழிபெயர்ப்பாளராக மாறி இருவரையும் கலாய்த்துக் கொண்டிருக்கிறேன். இப்போது எங்கள் வீட்டில் கலந்து கட்டிய தமிழ் துள்ளி விளையாடுகிறது. உதாரணத்துக்கு சில..

நுளம்புன்னா என்னக்கா?? ஒரு வகை இன்செக்டா??

நுளம்புன்னா கொசு.

--

இதில என்ன சேர்த்திருக்குன்னு சொன்னிங்க..

கறுவாவும், சீனியும், பட்டரும்.

கறுவான்னா??

பட்டை.

--

ஃப்ரெண்ட்ஸ் கூட கதைச்சேனான்னு கேட்டிங்களே.. கதைக்கிறதுன்னா??

பேசுறது.

--

பேசிப்போடுவன்னு சொன்னிங்களே.. பேசுறதுன்னா??

திட்றது.

இன்று Aquarium போய் வந்தோம். சில படங்கள் உங்கள் பார்வைக்கும்.

083 முட்டையை அடைகாக்கும் ஒரு பென்குயின் பார்த்து நெகிழ்ந்து போய்விட்டோம்.

 

 

 

 

 

126 பேய் போல இருந்தது கண்ணாடியோடு ஒட்டியபடி பயமுறுத்திய திருக்கை வகை மீன். பயத்தில் பெயர் மறந்துவிட்டது. இரவுத் தூக்கம் சந்தேகமே.

 

 

 

163 அழகாய்த்தான் இருக்கு அனகொண்டாவும்.

 

 

 

 

 

158 கொடுத்து வச்ச மனுஷன்/ஷி.

 

 

 

 

 

172 Green tree python ன்னு போட்டிருந்தது. எங்கடா காணம்னு தேஏஏஏடிப் பார்த்தா ஒற்றைக் கொம்பில ரெண்டு பச்சைக் கலர் ஜாங்கிரி.

 

 

 

அப்படியே மீன்களையும் சுட்டுத் தள்ளினோம்.

090  110 113 116 125 134 025 040

13 March, 2011

சுனாமியும் உண்டா??

ஜப்பானில் சுனாமி, நிலநடுக்கத்தில் உயிரை பறிகொடுத்த அத்தனை பேருக்கும் எல்லோரும் செலுத்திய அஞ்சலிகளோடு என்னதையும் சேர்த்துக் கொள்கிறேன். காட்சிகள் தந்த மலைப்பும், வேதனையும் போக நாள் பல ஆகும்.

japan-tsunami

ஆஃபீஸில் இருந்து அடிக்கடி நிலமையை அறிந்து கொண்டும், கடவுளை வேண்டிக் கொண்டும் இருந்தபோது இன்னும் கொஞ்சம் காலம் போனதும் மழையை, ஸ்னோவைப் போல சுனாமியும் பூகம்பமும் கூட எமக்கு ஆச்சரியம் தராத ஒன்றாய் போய்விடும் என்று சொன்னேன். கேட்கவே பயமாக இருந்தாலும் நாம் இயற்கையை அழித்துக் கொண்டிருக்கும் வேகத்தில் இப்படி ஆனாலும் ஆகலாம் என்று கலீக்ஸ் ஆமோதித்தார்கள். ஜப்பான்காரர்கள் எமக்கு செய்த கொடுமைக்குத்தான் இப்படி ஆகி இருக்கு அங்கே என்று ஒரு நண்பர் சொன்னார். எனக்கும் எங்கேயோ மெலிதாக அந்த எண்ணம் ஒரே ஒரு தரம் தலை தூக்கி இருந்தது. அரசாங்கம் செய்யும் அட்டூழியத்துக்கு அப்பாவி மக்களை ஏன் பலி ஆக்க வேண்டும்?? கடவுளிடம் என் நினைப்புக்கு மானசீகமாக மன்னிப்புக் கேட்டுக் கொண்டேன்.

இரண்டு வாரம் முன்னர் அம்மாவின் பிறந்தநாளுக்கு சின்னதாக ஒரு பார்ட்டி வைத்தோம். அப்பா உடன் இல்லாத கவலையை ஒரு நண்பர் கிளறிவிட சின்னதாய் ஒரு அழுகையோடு சந்தோஷமாகவே கேக் கட் செய்தார் அம்மா. சாப்பாடு முடிந்ததும் சுனாமியும் உண்டா என்று தங்கா அக்கா கேட்டார். என்னதான் சிரித்தாலும் பிள்ளையாரே என்று மனதுக்குள் வேண்டிக்கொண்டேன்.

2004 அக்டோபரில் இலங்கைக்குப் போய் வந்தோம். டிசம்பரில் சுனாமி. காலையில் குண்டு வெடித்தது போல் ஏதோ சத்தம் கேட்டு எல்லோரும் வெளியே வந்து பார்த்தார்களாம். வீட்டில் அம்மா, அப்பா, ரஜி, சின்னண்ணி, இரண்டு மாதக் குழந்தையாக சாத்வி, அத்தை பையன் ஒருவன் என எல்லோரும் இருந்தார்கள். ஓரிரு நிமிடங்களில் ‘ஓடுங்கோ தண்ணி வருது, தண்ணி வருது’ என்று ஓலமிட்டபடி தெருவால் ஆட்கள் ஓடுவதும், இரைச்சலாய் ஒரு சத்தம் கேட்பதுமாய் என்னவென்று தெரியாமல் இவர்களும் கூட்டத்தோடு ஓடி இருக்கிறார்கள். ஊரின் மத்தியில் எங்கள் வீடு. வீட்டிலிருந்து அரை கி.மீ தூரத்தில் கடல். ஆனாலும் எங்கிருந்து தண்ணீர், என்ன ஏது என அறியாமல் பயமும், பதட்டமுமாய் ஓடியவர்களை பத்தடி போவதற்குள் விரட்டிப் பிடித்தது வெள்ளம்.

எங்கள் வீடு உயரமாகக் கட்டப்பட்டிருக்கிறது. பக்கத்தில் இரண்டு மாடிக் கட்டடத்தில் ஒரு கடை. அதன் அருகில் உயரமான சந்தைக் கட்டடங்கள், கடைகள். என்னவென்று தெரியாததால் தூர ஓடினால் தப்பிக்கலாம் என்று நினைத்து வயற் பிரதேசம் நோக்கி ஓடி இருக்கிறார்கள்.  அங்கே  அவர்களுக்கு முன்னராகவே வெள்ளம் நிறைந்து நீர்மட்டம் உயர அங்கே இருந்த ஒரு பழைய வீட்டின் மேல் ஏறி இருக்கிறார்கள். கடைசியாக கையில் குழந்தையோடு ரஜி ஏற முயன்ற சமயம் தண்ணீரின் வேகமும் கூட, ஒரு குட்டிப் பனை மரத்தின் கருக்கை எட்டிப் பிடித்துக்கொண்டு அவன் போராடிய கணங்கள். கை கிழிந்து இரத்தம் வழிய கைக்குழந்தையையாவது காப்பற்ற வேண்டுமே என்று அவன் பட்டபாடு இன்று சொன்ன போதும் அம்மாவின் கண்களில் தெரிந்தது.

பழைய கட்டடம் பத்துப் பதினைந்து பேர் பாரமும், தண்ணீரின் வேகமும் தாங்காது இடிந்து விழ ஆரம்பித்ததும்தான் மீண்டும் கடைத்தெருப் பக்கம் போகலாம் என்று நினைத்து இன்னொரு பக்கத்தால் கீழே இறங்கி நீரோட்டத்துக்கு எதிராக ஒருவர் கை ஒருவர் கோர்த்தபடி போயிருக்கிறார்கள். அம்மா ஒரு கட்டத்தில் முடியாது போகவே அப்பாவை கெஞ்சினாராம் தன்னை விட்டு அவர்கள் உயிரைக் காத்துக் கொள்ளச் சொல்லி. சின்னண்ணியின் தம்பி விஷயம் கேட்டு பக்கத்து ஊரிலிருந்து வந்தவர் கயிறொன்றை மரத்தில் கட்டித் தூக்கிப் போட அதன் உதவியோடு எல்லோருமாக உயரமான ஒரு கடையின் மொட்டை மாடியில் ஏறி நின்றிருக்கிறார்கள். இவர்கள் போராட்டத்தோடு வந்து கொண்டிருக்கும்போதே முடியாமல் போய் தண்ணீரோடு அடித்துச் செல்லப்பட்டவர்கள் பலர். மூன்றாவது அலையின் வேகமும் குறைந்த பின்தான் கீழே இறங்கி வந்திருக்கிறார்கள். உயிர்ப் பயம், உடை கிழிந்து எல்லோர் முன்னும் இருந்த நிலை என எல்லாம் தந்த அதிர்வு போக அம்மாவுக்கு நெடுநாட்கள் ஆயிற்று.

அண்ணா அப்போது பக்கத்து ஊரில் இருந்தார். அம்மா வீட்டுக்கு வந்து இது நடப்பதற்கு சற்று முன்னர்தான் கிளம்பி பைக்கில் தன் வீடு போய்க் கொண்டிருந்தவர் விஷயம் அறிந்து திரும்பி வந்திருக்கிறார். அம்மா வீட்டுப் பக்கம் போகமுடியாது என்று தெரிந்ததும் தன்னால் இயன்ற அளவு வெள்ளத்தில் போராடிக் கொண்டிருந்த மக்களை காப்பாற்றி இருக்கிறார். கால் முழுவதும் பனை மட்டைகளும், இன்னும் தண்ணீரோடு வந்த என்னவெல்லாமோ உடல் முழுவதும் கிழித்துப் போட்ட காயங்கள். அண்ணா போலவே இன்னும் நிறைய இளைஞர்களும், ஆண்களும் எத்தனையோ பேரைக் காப்பாற்றினாலும் இழப்பு அதிகம்தான். ரஜியும், அண்ணியின் தம்பியும் கூட எல்லோரையும் பாதுகாப்பாக விட்டுவிட்டு மற்றவர்கள் உதவிக்குப் போயிருக்கிறார்கள். போனதில் கடைசி மாமா குடும்பத்தை மீட்க முடிந்தது. அண்ணா தண்ணீருக்குள் எட்டிப் பிடித்த சிறுவர்களும், பெரியவர்களும் மீண்டும் தண்ணீரால் இழுத்துச் செல்லப்பட்டபோது எப்படி இருந்திருக்கும் அண்ணாவுக்கு. 

எங்கள் வீட்டுக்குள் அரைச் சுவர் உயரத்துக்கு நீர்மட்டம் வந்து போயிருக்கிறது. அழிவென்று எதுவும் இல்லாவிட்டாலும் எங்களின் பழைய ஃபோட்டோ ஆல்பங்கள், ஆவணங்கள் உட்பட எல்லாம் நீரோடு போய்விட்டன. உயிர் இழப்பின் முன் இதெல்லாம் ஒன்றும் இல்லை என்றாலும் கவலை இருக்கத்தான் செய்கிறது. மாமியார் வீடு பக்கத்து ஊரில். கடலில் இருந்து மூன்று மைல் உள்ளே இருந்ததோடு இயற்கையாகவே அரண் போல சேர்ந்திருந்த பெரிய மண் திட்டு ஊருக்குள் வெள்ளம் அதிகளவில் வராமல் காத்துக் கொண்டது.

அப்போதுதான் போய் பார்த்து வந்த ஊரவர்கள், உறவினர்கள், நண்பர்கள் எத்தனை பேரை இழந்துவிடப் போகிறோம் என்று தெரியாத நாங்கள், அந்த வருடம் கிறிஸ்மஸ் ஒன்றுகூடல் எங்கள் வீட்டில் என்பதால் கொண்டாட்டமாக இருந்தோம். அன்று நான் செய்த டெசர்ட் ஃப்ரூட் சலட். அளவு சொன்ன நண்பி ’என்னங்க இவ்வ்வ்வ்வ்வ்ளோ வந்திடிச்சு’ன்னு ஒரு பெரிய்ய்ய பாத்திரம் நிறைந்திருந்த சாலட்டை பார்த்து மிரண்டு போய் நான் கேட்டபோது தான் சொன்னார் ’அய்யோ.. அது 100 பேருக்கான அளவுங்க’ என்று. தங்கா அக்கா, அவரின் அக்கா, நாங்கள் என மூன்று குடும்பங்கள்தான் என்றாலும் பேச்சும், கும்மாளம் அவ்வப்போது சாலட்டுமாய் முழுவதும் காலி பண்ணிவிட்டோம். 26 பகல் ஒரு நண்பரின் ஃபோனில் கண் விழித்து விஷயம் அறிந்து.. அப்பா.. அன்று பட்ட வேதனை. அண்ணா எல்லாம் முடிந்து மூன்று ஊர் தள்ளி வந்து இயங்கிக் கொண்டிருந்த ஒரே கமியூனிகேஷன் செண்டரில் வரிசையில் காத்து நின்று கால் செய்த போதுதான் உயிர் வந்தது.

அன்றிலிருந்து நண்பர்கள் வீட்டு விசேஷங்களுக்குச் செய்து கொடுத்தாலும் எங்கள் வீட்டில் எதுவும் விருந்தென்றால் நான் ஃப்ரூட் சாலட் செய்வதே இல்லை. எதுவும் கடந்து போகும் என்பது போல் நாங்கள் ஃப்ரூட் சாலட்டுக்கு வைத்த பெயர்தான் சுனாமி. ஊரில் இருந்த சமயம் தினமும் மாலையில் ரஜி சகிதம் நண்பர்கள் புடைசூழ, அம்மா செய்து கொடுக்கும் சைட் டிஷ்ஷோடு கண்ஸ் கடற்கரை சென்றுவிடுவார். பாட்டில் எல்லாம் காலி செய்து, சிரிதுப் பேசி(?) அப்படியே என்னையும் பிக்கப் பண்ணிக்கொண்டு ஒரு ஒன்பது மணி அளவில் மாமியார் வீட்டுக்குப் போவோம். சது என்னோடு வருவார். லச்சு இந்த யாகசாந்தியில் கலந்து கொள்ளும் வழக்கம் இல்லாத மச்சினரோடு முன்னாடியே போய்விடுவார். ’அண்ணா நீங்க கடல்ல போய் போட்ட ஆட்டம் தாங்க முடியாம தான் சுனாமி வந்திருக்கு’ என்று அக்காச்சி இப்போதும் சொல்வாள்.

என்னதான் இயற்கையை வெல்ல முடியாது என்றாலும் அழிப்பதையாவது மனிதன் நிறுத்தும்வரை சுனாமிகளும், பூகம்பங்களும் தொடரும். இனிமேல் ஜப்பானியர்களின் அணுக்கதிர்களின் பாதிப்பு என்னென்ன கொடுமைகளை கொண்டுவரப் போகிறதோ என்று இப்போதே மனம் பதைக்கிறது. பேரப் பிள்ளைகள், பூட்டப் பிள்ளைகளோடு வாழாவிட்டாலும், எம் பிள்ளைகளோடாவது வாழ்ந்து விட்டு சாக பிள்ளையாரப்பா வழி விடட்டும்.

10 March, 2011

டார்லிங்ங்ங்..

முதல்ல என்னை தொடர் பதிவுக்கு அழைத்த கோபிக்கு நன்றியை.. இல்லை இல்லை.. நன்றிகளை சொல்லிக்கொள்கிறேன். என்னைப் பொறுத்தவரை தொடர்பதிவு எழுதுவதை விட தொடர யாரையாவது அழைப்பதுதான் அவ்வ்வ்வ்.. அப்படியே கோபி தன் பெயர்க்காரணம் சொன்ன பதிவை இங்கே சென்று படித்துப் பாருங்கள். சிரிப்புச் சுவை தூக்கலாக எழுதி இருக்கின்றார். மீண்டும் நன்றி கோபி.

இனி என் விஷயத்துக்கு வருவோம்.

navn

நான் பிறந்தது நவராத்ரி நேரம். அதுவும் சரஸ்வதிக்குரிய நாளில் பிறந்தேனாம். சரஸ்வதி கடாட்சம் கிடைக்கட்டும் என்று அம்மாவுக்கு கொள்ளை ஆசையாம். நல்லவேளை சரஸ்வதி என்று வைக்காமல் விட்டார்கள். நியூமராலஜியும் பார்க்கவில்லையாம். ஆனால் பின்னாளில் கூட்டெண் 5 வரும்படியாக எழுது என்று அப்பா சொல்லித் தந்தார். கல்யாணத்தின் பின் இனிஷியல் மாறியபோது அதையும் விட்டுவிட்டேன்.

எனக்கு என் பெயர் தவிர்த்து யாராவது செல்லப் பெயர் சொல்லிக் கூப்பிடுவது நினைவு தெரிந்த நாளில் இருந்து பிடிக்காது. எனக்கு நினைவு தெரியாத வயதுகளில் என்னை ச்செல்லமாக.. ரொம்பச் ச்செல்லமாக கூப்பிடுவார்களாம். ஒரு தடவை க மு வில் கண்ஸ் அம்மாவிடம் என் கூட சண்டை போட மேட்டர் சிக்காத நாளில் இது பற்றிக் கேட்டபோது அம்மா சொன்னார். ‘கூப்டோமே.. ஆனா நீங்க அதை சொல்லி கூப்ட முடியாதே’ன்னு. அப்போ கண்ஸ் வெக்கத்தோட சிரித்ததும், நான் அம்மாவை முறைத்த்த்ததும் இப்போதும் எனக்கு நினைவிருந்தாலும் கூடவே அவர் விதியும் சிரித்தது அப்போது யாருக்கும் தெரியவில்லை.

பக்கத்து வீட்டில் அம்மா உறவுமுறைப் பாட்டி ஒருவர். என்னை வெள்ளை ஆப்பம்னு கூப்பிடுவார். விடுங்க மக்கள்ஸ். அதான் பாட்டி என்று சொன்னேனே. அவர் கண்ணாடி கூட போட்டதில்லை. நான்காவது படிக்கும்போது போய்விட்ட பாட்டியோடு அந்தப் பெயரும் போய்விட்டது.

அம்மா வழி, அப்பா வழி உறவுகளில் அம்மாச்சி, செல்லம், ராசாத்தி இப்படியாக கூப்பிடுவார்கள். என் முன்னே பிறந்தவர்கள் அதிலும் குறிப்பாக ரஜி.. மாடு, எருமை, மூதேவி, சிலோங்கி (எதிலும் ஸ்லோ), சாக்குமூட்டை, நாய், பேய், பிசாசு, குரங்கு, சனியன் இப்படியாக இன்னும் பல பெயர்கள் சொல்லி அன்ன்ன்ன்ன்பா கூப்பிடுவார்கள்.

நண்பர்கள் நான் மேலே சொன்ன காரணத்தால் வேறு பெயர் சொன்னதில்லை. ஆனால் கஸின்ஸ், நண்பர்ஸ் அவ்வப்போது நான் இருக்கும் கெட்டப்புக்கு ஏற்ப வனிதா, மனிஷா, சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன், நயன் தாரா, ஷாலினி, ஜெனிலியா இப்போ லேட்டஸ்ட்டா டப்சி என்பது வரைக்கும் கூப்பிடுவார்கள். எல்லோரும் ஒரு தடவை உஸ்ஸ்ஸ்ஸ் சொல்லி கொண்டீர்கள்தானே. என்னுடைய ஒரு ஃபோட்டோ பார்த்த அப்பா லைட்டா ஐஷ்வர்யா ராய் ஜாடை தெரிவதாகச் சொல்லி ஐஷ் என்று கூப்பிட்டதைக் கேட்டும் இன்னமும் நான் உயிரோடு இருக்கிறேன் மக்கள்ஸ். எனவே அழுகை வேண்டாம். கொலைவெறி வேண்டவே வேண்டாம்.

ஐந்தாவது வரை என் பெயரில் யாரும் பள்ளியில் படித்ததில்லை. ஆறாவதுக்கு போனபோது அந்தப் பள்ளியில் எட்டாவதில் ஒருத்தர் இருந்தாங்க. எங்கள் ஊரில், சொந்தங்களில் மூவர் என் பெயரில் இருந்ததாக நினைவு. இங்கே வந்ததும் என் கலர் காரணமாக சாக்லெட் என்று கூப்பிடுகிறார்கள். அதை விட என் பெயர் இவர்கள் வாயில் படும்பாடு இருக்கிறதே.. கொடும்ம்மை.. இந்த ஊரில் என் பெயரில் யாருமே இல்லை. நான் மட்டும்தான். இங்கே இருப்பதே கொஞ்சம் தமிழர் என்பதால் இனிப் பிறக்கப்போகும் குழந்தைக்கு என் பெயர் யாரும் வைக்க மாட்டார்கள் என்ற பெரும் ஆறுதல் எனக்கு இருக்கிறது.

கண்ஸ் வீட்டில் இரண்டாவது பிள்ளை என்பதால் பெரியண்ணன் பேருக்குப் பொருத்தமாய் வைத்ததாக மாமியார் சொன்னார். அம்மு பிறந்தபோது எல்லாப் பொருத்தமும் பார்த்து மாமியாரே பெயர் வைத்தார். அழகு, லட்ஷணம் என்பதாகப் பொருள் வரும் அவர் பெயருக்கு. சதுவுக்கு என் சித்தப்பா வைத்த பெயர். எதிர்பாராமல் என் பிள்ளையாரின் பெயரே அமைந்ததில் அவ்வளவு சந்தோஷம் என்பதை விட எங்களோடு இப்போது இல்லாத சித்தப்பா நினைவாக அவர் பெயர் இருப்பது வரம்.

அம்முவும் சதுவும் என்னை அம்மா என்றுதான் கூப்பிடுவார்கள். அதிலும் அம்மு அம்ம்ம்மா என்று அழுத்திச் சொல்லும்போதும், என்னாம்மா என்று சதுர் அடிக்குரலில் சொல்லும்போதும் நான் சரணாகதி. என் கண்ணன் என்னை கண்ணம்மா, தங்கம்மா என்று உருக வைப்பான். உபரியாக டா, டி வேறு. கோவம் வந்தால் மட்டும் கண்ணாளனாகி முழுதாகப் பெயர் சொல்வான்.

இப்பொழுது நானும் சிலரை தொடருக்கு அழைக்கலாம் என்றால் கடைசிப் பத்தி தரும் இதம் வேறு யோசிக்க விடவில்லை. சும்மாவே கைகாட்டிவிடுவது சுலபமில்லை. அத்தோடு ஓரளவுக்கு எல்லோரும் எழுதி வேறு ஆகிவிட்டது. தொடர அழைப்பவர்கள் முன்பே எழுதி இருந்தால் எனக்கு அல்ல கோபிக்கு ஆட்டோவோ லாரியோ அனுப்பிக் கொள்ளுங்கள். என்னை மன்னித்துக் கொல்லுங்கள். விருப்பமும் நேரமும் இருந்தால் தொடர்ந்து எழுதுங்கள்.

என் உடன் பிறப்பு ப்ரியமுடன் வசந்த்

என் மனதிலிருந்து ப்ரியா

வெறும்பய ஜெயந்த்

வினு வினோத்

கூர்வாள் கயல்

மாணவன்

அக்கம் பக்கம் அமுதா கிருஷ்ணா

மனசு சே. குமார்

வர்ட்டா..