Pages

  • RSS

21 April, 2014

நலமா??

ஆத்தா எனக்கு லீவ் உட்டாச்சேய்ய்ய்ய்ய்.. புதன்கிழமை இப்படித்தான் குதித்தது மனம்.. அன்றே இதை எழுதி வைத்துவிட்டாலும் இன்றுதான் பகிர்ந்துகொள்கிறேன்.. இதனை மனதில் கொண்டு நாளைக் கணித்துத் தொடர்ந்து வாசியுங்கள்.. இது கட்டளை அல்ல.. வேண்டுகோள்..

வெள்ளியே ஈஸ்ரருக்காகப் பலர் விடுப்பில் போக ஆஃபீஸில் ஈயாடியது.. ஒரு கலீக் பிள்ளைக்கு சுகமில்லையென்று வரவில்லை.. 'சீக்கிரமா ஆணியப் புடுங்கினிங்கனா சீக்கிரமா ஊட்டுக்குப் போகலாம்'என்று டீம் லீடர் சொன்னது காதில் தேனாய்ப் பாய்ந்தது.. நானும் மற்ற கலீகும் பம்பரமாகி பனிரெண்டுக்கெல்லாம் கிளம்பிவிட்டோம்.. இன்று வேலை நேரம் 8 - 13 என 5 மணி தான்.. ஆனால் நான் 7:30க்கே அட்டென்ஸைப் போட்டுவிட்டேன்.. லேட்டாக வந்த டீலீ அதே தேனைக் காதில் பாயவிட்டாள்.. என்னைப் போலவே சுறுசுறுப்பான கலீக் லீவ்.. மற்றவன் சாக்குமாடு அரக்க்க்கி அரக்கி வேலையை இழுத்ததில் ஆணிகள் தேங்கிவிட்டன.. 

80%ஐ நானே முடித்ததில் ஒருவழியாகப் 11 மணிக்கு ஒழிந்தன ஆணிகள்.. அப்படியே டீலி தந்த ஈஸ்ரர் சாக்லெட்டையும் வாங்கிக் கொண்டு க்ரோஸரிக்கு வண்டியைக் கட்டினேன்.. அங்கே போனால் பிதுங்குது கூட்டம்.. மூடி இருந்த ஒரு கவுண்டரில் வந்தவர் கார்ட் பேமெண்ட் மட்டும் இங்க வாங்க என்றதும் மறுபடி காதில் தேன்.. டர்ர்ர்ர்ரென்று இரண்டு ட்ரொலிகளையும் பலம் கொண்ட மட்டும் தள்ளிக்கொண்டு முதல் ஆளாய்ப் போனேன்..
 
வாங்கிய எல்லாம் வண்டிக்குள் திணித்துவிட்டுப் பார்த்தால் பிள்ளைகளுக்கு ஈஸ்ரர் கேண்டிக்கான முட்டை வாங்கவில்லை.. பொலிதீன் பையில் போட்டு சமாளிப்போம் என்றால் 'அம்மா.. påskeeggக்குள்ள masssse snop வாங்கிப் போட்டுத் தாங்கோ' என்று முட்டை போலவும் நிறைப்பது போலவும் பிள்ளை அபிநயித்தது நினைவு வந்தது.. அங்கு போய் பார்க்கிங் இல்லாது போனால் மீண்டும் இந்த இடம் கிடைப்பது உறுதி இல்லை என்றது மூளை.. சரி என்று காரை க்ரோஸரி முன்னேயே காரை விட்டுவிட்டுப் பக்கத்து மோலுக்கு நடையைக் கட்டினேன்.. வழியில் சுழட்டி அடித்த காற்றின் குளிர் எலும்பு வரை துளைத்தது.. 
அங்கே போனால் எல்லாக் கடைகளும் அட்டையில் செய்த முட்டை விற்றுத் தீர்ந்ததாய்க் கையை விரித்தார்கள்.. வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள மோலுக்குப் போகும் எண்ணத்தைக் கூட்ட/வாகன நெரிசல் விரட்டி அடித்தது.. ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூத் துவையலாகக் கண்ணில்பட்ட இரண்டு மஞ்சள் நிறப் ப்ளாஸ்ரிக் கிண்ணங்களை வாங்கி வந்தேன்.. 

ஈஸ்ரருக்கு நான் அவளவாக வீட்டை அலங்காரம் செய்வதில்லை என்றாலும் மஞ்சள்ப்பூ மட்டும் வாங்க ஆசையாக இருந்தது.. 
5 நாள் விடுமுறை இப்போதிருந்தே ஆரம்பித்துவிட்டது.. இவ் வருடமும் எங்காவது ஒரு காட்டேஜ் வாடகைக்கு எடுத்துக்கொண்டு ஈஸ்ரர் விடுமுறைக்குப் போகவேண்டுமென்ற நினைப்பு மட்டும் இருந்தது.. இந்த விடுமுறைக்குச் செய்து முடிக்கவேண்டுமென்று பலதிட்டங்கள் போட்டாயிற்று.. ஆனால் அலாரம் இல்லாமல் நிறைய நேரம் தூங்குவதென்பதை மட்டும் ஒழுங்காகச் செய்துவிடுவேன்.. 

நீண்ண்ண்ண்ட இடைவெளியின் பின் இங்கே வந்ததையிட்டு மிக மகிழ்வாக உணர்கிறேன்.. இனி வாரம் ஒருமுறையேனும் ஏதாவது பகிர்ந்துகொள்ள வேண்டுமென்று நினைத்திருக்கிறேன்.. எவளவுக்கு சாத்தியம் ஆகிறதென்று பார்ப்போம்..


எல்லோருக்கும் ஈஸ்ரர் விடுமுறை இனிதே அமையட்டும்.. இறை அருள் நிறையட்டும்!!

27 November, 2012

வெள்ளைப் பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே..

என்னவோ ஒரு எரிச்சல்.. கோவம்.. தேவை இல்லாத பதட்டம்.. அது பயமோன்னு கூட சமயத்தில டவுட்டா இருக்கும்.. இத்தனூண்டு விஷயத்துக்குக் கூட கத்தணும் போல.. எதுவுமே பேசாம இருந்தா தேவலை போல.. ஒருவித ஆற்றாமை அழுத்த..

இப்டியெல்லாம் எனக்கு மட்டும் தான் இருந்ததுன்னு நினைச்சேன்.. நேத்து அக்காச்சிட்ட பேசினப்ப அவளுக்கும் இதே போல இருந்ததா சொன்னா.. எல்லாத்துக்கும் விடை தலைவரின் பிறந்தநாளும் தொடர்ந்து வந்த மாவீரர் தினமும்னு புரிஞ்சது.. கடகடன்னு நடந்து முடிஞ்ச அத்தனையையும் மீட்டுப் பார்த்தோம்.. உலகம் போற்றியவர் இறப்பென்றது பலர் தூற்றும்படி ஆகி இருக்க வேணாமேன்னு இருந்திச்சு.. என்ன இருந்தாலும் எங்க தலைவர் போல இனி ஒருத்தர் எங்களுக்குக் கிடைக்கவேமாட்டார்னு உறுதியா சொல்லிக்கிட்டோம்.. அதுவரைக்கும் அலைஞ்சுட்டு இருந்த மனசு கொஞ்சம் அமைதியாச்சு.. ஆனாலும் சரியா தூங்கமுடியலை..

அப்படியே உறக்கமும் விழிப்புமா புரண்டு புரண்டு படுதிட்டிருந்தவ கடைசியா நேரம் பாத்தப்ப ரெண்டு பதினாலு.. திடீர்னு கேட்ட சத்தம் மாம்சோட மொபைல்னு அடையாளம் புரிஞ்சப்ப பதைப்போட முழு விழிப்பு வந்திடிச்சு.. நேரம் நாலேகால்.. அவருக்குத் தெரிஞ்சவங்க.. புகலிடம் தேடி வந்தவங்க.. இலங்கைக்குத் திருப்ப அனுப்பறதுக்காக போலீஸ் கூட்டிப் போயிருக்காம்.. அப்பறம் அவங்களுக்கு வேண்டியவங்களோட பேசி விஷயம் சொன்னார்.. அஞ்சு மணி போல தூங்க ட்ரை பண்ணா தூக்கத்துக்குப் பதில் கண் எரிச்சல்ல கண்ணீர்தான் வந்துது.. கொஞ்ச நேரம் அவங்களப் பத்திப் பேசிட்டு அப்பறம் மௌனமா அலாரம் வரைக்கும் காத்திருந்தோம்..

இன்றும் மாவீரர் அஞ்சலி நிகழ்வுல கலந்துக்கலை.. அவர போறீங்களான்னு கேட்டேன்.. 'இல்லை.. வீட்ல நீ மெழுகுவத்தி ஏத்துவல்ல அது போதும்.. நான் போலை'ன்னார்.. ஆறுமணிக்கு மெழுகுவத்தி ஏத்தி வச்சிட்டு ஈழத்துக்காக உயிர் இழந்த அத்தனை பேருக்குமாக வேண்டிக்கிட்டேன்.. கூடவே இனியாவது எம்மை நிம்மதியாக வாழ வை இறைவான்னு கேக்கவும் தவறலை..

ஈழம்னு இல்லை.. இலங்கைன்னு இல்லை.. எங்கல்லாம் போரும் அழிவும் இருந்ததோ.. இருக்குதோ.. அந்த மக்களுக்காக.. அவங்க நிம்மதிக்காக.. அவங்க வாழ்க்கைக்காக.. ஒரே ஒரு நிமிடம்.. மனதார அஞ்சலி செய்யுங்க.. நம்மால முடிஞ்சதா இருக்கட்டும்..

அப்படியே இந்தப் பாடலை எல்லாருக்குமா கேக்கணும்னு தோணிச்சு.. ஏஆர் ரகுமானின் இசையிலும் குரலிலும் அற்புதமான பாடல்.. 2002இல் வெளிவந்த கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில.. வைரமுத்துவின் வரிகள்ல.. கேட்டு முடிச்சதும் ஒரு ஏக்கப் பெருமூச்சு இல்லேன்னா ஒரு பெரிய மூச்சு வந்திச்சுன்னா.. நீங்க என் இனம்..
--

வெள்ளைப் பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே
விடியும் பூமி அமைதிக்காக விடிகவே
மண்மேல் மஞ்சள் வெளிச்சம் விழுகவே
மலரே சோம்பல் முறித்து எழுகவே
குழந்தை விழிக்கட்டுமே தாயின் கதகதப்பில்
உலகம் விடியட்டுமே பிள்ளையின் சிறுமுதல் சிரிப்பில்..

காற்றின் பேரிசையும் மழை பாடும் பாடல்களும்
ஒரு மௌனம் போல் இன்பம் தருமோ
கோடிக் கீர்த்தனமும் கவி கோர்த்த வார்த்தைகளும்
துளிக் கண்ணீர் போல் அர்த்தம் தருமோ..

எங்கு சிறுகுழந்தை தன் கைகள் நீட்டிடுமோ
அங்கு தோன்றாயோ கொள்ளை நிலவே
எங்கு மனித இனம் போர் ஓய்ந்து சாய்ந்திடுமோ
அங்கு கூவாயோ வெள்ளைக் குயிலே..

இங்க இசைப்புயல் வரும் வீடியோ இருக்கு..

இங்க படத்தில் வரும் காட்சி இருக்கு..

இங்க முழுமையான பாடல் இருக்கு..
26 August, 2012

பழையன பகிர்தல்..

இப்பொழுதெல்லாம் பதிவு எழுதுவதற்கான பொறுமையும், மனமும் இல்லாமலே போய்விட்டது. எதுவாக இருந்தாலும் கூகிள் ப்ளஸ்ஸில் உடனுக்குடன் பகிர்ந்து கொள்வது மிக இலகுவாக இருக்கிறது. இல்லாத மூளையை உருட்டிப் பிரட்டி அதே விஷயத்தை 140 எழுத்துகளுக்குள் அடக்கி ட்விட்டரில் பகிர்ந்து கொள்வது மிகப் பிடித்திருக்கிறது. அப்படியே அங்கே பகிரப்படுபவற்றை படித்து கருத்துகளைச் சொல்வதில் நேரம் போய்விடுவதால் பதிவுகளை படிப்பதையும் குறைத்துவிட்டேன். முன் போல எப்படியாவது வாரம் இரண்டு இடுகைகளை எழுதி விட வேண்டுமென்று போன வாரம் முடிவு எடுத்தேன். அதை செயலாக்குவது முயற்கொம்பாகவே இருக்கிறது.

விருப்பமானவர்கள் என்னை @susiguna என்ற ஐடியில் ட்விட்டரில் தொடருங்கள். அதிகமாக அவ்வப்போது கேட்கும் பாடல்களின் வரிகளையே பகிர்ந்து கொள்வேன். அதனால் தைரியமாகத் தொடரலாம். நானும் தப்பித்துக்கொள்வேன். ட்விட்டரிலும் கூகிள் ப்ளஸ்ஸிலுமாய் அவ்வப்போது பகிர்ந்து கொள்வதில் பிடித்தவற்றில் சில இங்கேயும்.

--

சொன்ன சொல்லின் விலை.. கொடுக்கக் கொடுக்கத் தீரவில்லை.. தீர்வதாய் இல்லை..

--

பிறந்தநாள் வாழ்த்துகளின் போது சந்தோஷமாய் சிரிப்பவர்களை பார்த்தால் குட்டியாய் ஒரு வலி எட்டிப் பார்க்கிறது..

--

டைப்பும்போது கவனிப்பதில்லை
கவனிக்கும்போது எண்டர் தட்டியிருப்போம்
# எண்டர் தட்டிய சாட்

--

சொன்ன சொல்லையும் எண்டர் தட்டிய சாட்டையும் திருப்ப வாங்க முடியாது.. இரண்டிலும் பழிவாங்கப்படும்போது அழாம இருக்க கத்துக்கணும்..

--

காதலுக்குள் நட்பையும் உறவையும் சேர்த்து நரகமாக்குபவனும் நண்பன் தான்..

--

தானாய் அமைந்தது சொந்தம்.. நானாய் அமைத்தது நட்பு..

--

கையை ஆட்டியபடி பள்ளிக்குள் செல்லும் பிள்ளையின் சிரித்த முகத்தின் முன் ட்ராபிக்கும் பார்க்கிங் அலைச்சலும் ஒன்றுமே இல்லை.. 
--
படுத்தவுடன் தூங்கும் வரத்தை சிலருக்கு மட்டும் கொடுத்தது கடவுளின் மிகப் பெரிய ஓரவஞ்சனை..
--
வெயில், மழை, ஆலங்கட்டி மழை, பனியென மாறி மாறி வரும் காலநிலையும் என்னைப் போல இன்று ஒருநிலையில் இல்லைப் போல..

--

காலையில் நான் தலைவாரும்பொழுது சது ஸ்கூலுக்கு ரெடியாகிட்டு இருந்தார்.. நான் தலைவாரிய சத்தம் அவருக்கு ஆப்பிளை கடிச்சு சாப்டுறது போல இருந்திச்சாம்.. பிள்ளைகளுக்குத் தான் எப்டிலாம் யோசிக்க முடியுது..

22 August, 2012

மழையும் மழை சார்ந்த கவலையும்..

IMG_6967குடும்ப இஸ்திரி ட்ரைவிங் லைசன்ஸ் மட்டும் எடுக்கக்கூடாது என்ற எண்ணத்தோடு விடிந்தது கடந்த ஞாயிறு காலை. சதுவுக்கு ஃபுட்பால் மேச். திருவிழா போல கூட்டம் கூட்டமாய் இல்லாவிட்டாலும் குடும்பம் குடும்பமாய் நடந்து வந்த மக்களைக் கடந்து வந்து காவலுக்கு நின்றவர் கை காட்டிய இடத்தில் பார்க் செய்தேன். நாங்கள் காரிலிருந்து இறங்கி வரவும் கோச் எங்கள் காருக்குப் பக்கத்தில் பார்க் செய்யவும் 'பாத்திங்களா நாங்க முன்னாடி வந்துட்டோம்' என்பதன் மூலம் அவர் ரெடியாக லேட்டானதற்காக நான் கடிந்து கொண்டிருக்க வேண்டியதில்லை என்பது சதுவால் சுட்டிக்காட்டப்பட்டது. 'உங்களுக்கு சுலபமா பார்க்கிங்குக்கு பெரிய இடம் கிடைச்சுதும்மா' என்றவர் தொடர்ந்து இந்தக் குறுக்கு வழி ஏறி இறங்குவது எனக்கு முடியாத காரியமென்றால் சுற்றுப் பாதையில் போகலாம் என்றார். குறுக்கு வழியைப் படம் எடுக்க மறந்துவிட்டேன். ஒரு குட்ட்ட்டி மலையை ஏறி இறங்கினோம்.

IMG_6969காலையிலே போட்டிகள் ஆரம்பித்து விட்டாலும் இவருக்கு முதல் மேச் 2 மணிக்கும் தொடர்ந்து 4:20, 5:10 என மூன்று மேச்கள். அம்மா முழு விருப்போடு வரவில்லை என்பதைப் புரிந்துகொண்டவர் போல வரவேற்பு பேனர், வந்திருந்த கூட்டம், மழை நின்ற வெதர், க்ரவுண்டின் அளவு எனப் பலதும்  பேசிக்கொண்டு வந்தார்.  விடுமுறையின் கடைசி வாரத்தில் ஃபுட்பால் ஸ்கூல் இருந்ததால் பயிற்சிவிட்டுப்போகவில்லை என்றாலும் முதல் மேச்சில் 6:2 இல் தோற்றார்கள். இந்த இரண்டு மாத காலத்துக்குள்ளேயே பிள்ளைகள் வளர்ந்திருந்தார்கள்.

IMG_6971இடைப்பட்ட நேரங்களில் அரட்டையோடு கூடவே தலைக்கு மேலே தாழப் பறந்து கொண்டிருந்த விமானங்களிடம் தவ்விய மனம் கனடாவுக்குப் பறந்து போக அதைத் தரை இறக்குவது பெரும்பாடாகிப் போனது. அன்று இங்கே ரமலான் தினம் ஆகையால் பாகிஸ்தானியர் ஒருவர் கொண்டாட்ட வேலைகள் இருப்பதால் கிளம்புவதாகவும் அவர் மகனை வீட்டில் விட முடியுமாவெனவும் கேட்டார். வாழ்த்தைச் சொல்லி நன்றியை வாங்கிக்கொண்டு பிரியாணி கிடைக்குமாவெனக் கேட்க நினைத்ததை மூட்டை கட்டி வைத்தேன். இரண்டாவது மேச் 7:2 இல் தோற்றார்கள். எதிரணி போங்காட்டம் ஆடியதில் 3 பேருக்கு அடிபட்டுவிட்டது. கூடவே தொடர் தோல்வியில் சோர்ந்துபோய்விட்டதால் கடைசி மேச்சில் எப்படி விளையாடுவார்களோ என்ற கவலைபிடித்துக்கொண்டது. நினைத்ததை விட இடைவேளை வரை நன்றாக விளையாடி 2 கோல் போட்டார்கள். பின்னர் எதிரணி 4 கோல்களைத்தாண்டியதும் தளர்ந்து போய் 7:2 இல் தோற்றார்கள்.

IMG_6981பரிசளிப்பை மிக வித்தியாசமாக ஒழுங்கு செய்திருந்தார்கள். எல்லோரையும் உட்கார வைத்து ஒரே சமயல் 6 அணிகளை அழைத்து அரங்கம் நிறைந்த கரகோஷமும், எழுந்து நின்று வரவேற்புமெனப் பிள்ளைகள் மிக மகிழ்ந்ததில் பெற்றவர் அகம் மகிழ்ந்தது. வழக்கம் போல ஒரு குட்டி ஷீல்டும், டீ ஷர்ட்டும், கிஃப்ட் வவுச்சரும் கிடைத்தது. மேலதிக பரிசாக அன்று மீதி நாள் முழுவதும் டீவி ரிமோட் பிள்ளையின் கையில் இருக்க வேண்டுமென்று அறிவிக்கப்பட்டதும் அத்தனை குஷி பிள்ளைகளுக்கு. அம்மாவை இலவச டாக்ஸியாக்கிய சதுவின் புண்ணியத்தால் கூட வந்தவர்களை வீடுகளில் விட்டுவிட்டு நாங்கள் வீடு வர எட்டு மணி ஆகிவிட்டது. வந்ததுமே அப்பாவிடமிருந்து ரிமோட் பறிமுதல் செய்யப்பட்டது.

--

சம்மர் வெகேஷன் முடிந்ததுமே விண்டரையும் ஸ்னோவையும் மனம் தானாக நினைக்கத் தொடங்கிவிடுகிறது. அதற்குத் தொடர் மழையும், இருட்டும், எப்போதாவது எட்டிப்பார்க்கும் சூர்யாவும் கூட காரணமாக இருக்கலாம். ”கிணறெல்லாம் வத்திப் போகுதம்மாச்சி.. எட்டிப் பாத்தா அடியில எப்பன் தண்ணி தெரியுது.. அனல் வெயில் தாங்கேலாதாம்.. தம்பி (என்னோட அண்ணன்) அண்ணேன்ர (என்னோட அப்பா) காணிக்குள்ள கிணறு வெட்டுறார்.. வெயில்ல பிள்ளை படுற கஸ்ரம் பாக்கக் கவலையாக்கிடக்கம்மா”ன்னு ரெண்டு நாள் முன்னாடி அத்தை சொன்னதிலிருந்து மழையைப் பார்க்க/கேட்க நேரும்போதெல்லாம் பெருமூச்சே மிஞ்சுகிறது. இதில் கொஞ்சமேனும் ஊரில் போய்ப் பொழியக்கூடாதா என ஏக்கம் எட்டிப் பார்க்கிறது.

--

பள்ளிகள்  மீண்டும் தொடங்கிவிட்டன. புதிய வகுப்பு, புதுப் புத்தகங்கள், புதிய ஆசிரியர்கள் என்று பிள்ளைகளின் பரபரப்பு எங்களையும் தொற்றிக்கொண்டது. புதுப்புத்தக வாசனையை மோந்து பார்த்த நாட்களும், போரினால் பழைய புத்தகங்களை ஏக்கத்தோடு பெற்றுக்கொண்ட நாட்களும், கொப்பி, பென்சில், பேனை வாங்கக் கூட முடியாமல் தவித்த நாட்களும் என மனம் அதன் போக்கில் கொசுவத்தி சுற்றிக்கொண்டிருக்கிறது. எனக்கு எப்போதும் அம்மாவே அட்டை போட்டு பெயர் எழுதித் தர வேண்டும். அம்மாவின் அழகான கையெழுத்து ஒரு காரணமென்றாலும் அது ஏனோ நான் அந்த வழக்கத்தைக் கடைசி வரை மாற்றவில்லை. இன்று அம்முவின் புத்தகப்பையைத் தூக்கிவிட்டுப் பயந்துவிட்டேன். எவளவு பெரிய்ய்ய்ய புத்தகங்கள். நல்லவேளை வீட்டுவேலை இல்லாத நாட்களில் பள்ளியிலேயே புத்தகங்களை வைக்க வேண்டும் என்ற நடைமுறை இங்கே இருக்கிறது.

அப்படியே தமிழ்ப்பள்ளியும் ஆரம்பித்துவிட்டது. நாங்கள் இதுவரை பாவித்து வந்த நோர்வேஜியப் பள்ளியில் திருத்த வேலைகள் தொடங்குவதால் புதிதாக வேறொரு பள்ளியில் இடம் தரப்பட்டது. அங்கே ஏகப்பட்ட கெடுபிடிகள். எங்கள் வீட்டைத் திடீரென ஒரு நாளைக்கு யாராவது பாவிக்கத் தொடங்கினால் எப்படி இருக்குமோ அப்படி ஒரு நிலையில் புதிய பள்ளியின் ஆசிரியர்கள் இருக்கிறார்கள். என்னதான் அவர்களின் நிலையை நாம் புரிந்துகொண்டாலும் ஏகப்பட்ட நிபந்தனைகளோடு அங்கே போய் வருவது எங்களுக்கும் சிரமமானதே. என் பிள்ளைகளின் ஆசிரியர்களைப் பார்த்ததுமே இந்த வருடம் வீட்டில் அதிக கவனம் எடுத்தே ஆகவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். என் வகுப்பில் பதினாறு பிள்ளைகள். முதல்நாளே இலகுவாகப் பேச ஆரம்பித்துவிட்டார்கள். என் முகராசி அப்படியென்றாலும் கூடவே நான் நினைத்தது போல இந்தப் பதினாறையும் பெற்றதில் எத்தனை பேர் நான் தான் ஆசிரியை என்றதும் கவனம் எடுக்க வேண்டுமென நினைத்தார்களோ என்றும் எண்ணத் தோன்றியது.

19 June, 2012

ரொம்ப நாள் ஆச்சு..

கன்னம் காது மீசை உதடு k l

இடம் பொருள் பாராது முத்தம் பதித்துவிட்டேன்

சாமி குற்றம் ஆகிடுமோ..

 

 

 

-----------------------------------------------------------------------------------------------------------------

134 உன் போக்கில் அலையும் மேகம் ஆகிவிட்டேன்

இன்னும் என்னை என்ன செய்யப் போகிறாய் காற்றே..

 

 

-----------------------------------------------------------------------------------------------------------------

அங்கும் இங்கும் பார்த்துவிட்டு i_kiss_you

என்னை நீ பார்க்கும் பார்வையில்

ஆயிரம் முத்தப் பூக்களை

என் உதடுகள் பூக்கின்றன..

 

-----------------------------------------------------------------------------------------------------------------

sommerfugler

 

உன் நினைவுகளையெல்லாம்

வெற்றுத் தாளில் எழுதிப் பார்த்தேன்

பட்டாம்பூச்சிகள் வந்து மொய்த்துக் கொண்டன..

 

 

-----------------------------------------------------------------------------------------------------------------

உனக்கான முத்தங்களையெல்லாம் ps

இரக்கமில்லாமல் பறித்துச் செல்கிறது

காற்று..

03 June, 2012

தீர்ந்தது சோதனை!!

பசங்களுக்கு நேற்று தமிழ்ப் பரீட்சை முடிந்தது.. இது ஐரோப்பிய ரீதியில் நடக்கும் ஆண்டிறுதிப் பொதுத் தமிழ்ப் பரீட்சை.. இனிமேல் அடுத்த அரையாண்டு பரீட்சை மார்கழியில் வரும் வரை.. அதிலும் பரீட்சைக்கு 2 நாட்கள் முன்னது வரை தமிழ் புத்தகத்துக்கு ஓய்வு.. என் ஷவுண்டும் வீட்டில் கம்மியா இருக்கும்..

என் வகுப்புக்கு பேப்பர் இலகுவா இருந்துது.. பசங்க படிச்சிட்டு வர்லை.. அங்க வந்து ங்ஙேஏஏஏஏ.. அம்மு நான் எதிர்பார்த்தத விட செஞ்சிருக்கா.. கட்டுரை தலைப்புகள் நல்லதாக இருக்கலை.. அதில எப்டியும் அவளுக்கு 10 புள்ளி புஸ்ஸ்ஸ்..

சதுவ அப்பப்ப நோட்டம் விட்டதில அவர் டீச்சருக்கு தொல்லை குடுக்காம ஷமத்தா எழுதிட்டே இருந்தார்.. போன வருஷம் டீச்சர்ட்ட ஹெல்ப் கேக்க கூடாதுன்னு சொன்னத தப்பா புரிஞ்சிட்டு.. அதாகப்பட்டது கேள்விய வாசிச்சு விட மட்டும் தான் ஹெல்ப் கேக்கணும்.. தவிர அதுக்கு அர்த்தம் கேக்க கூடாதுன்னு சொன்னத கேக்கவே கூடாதுன்னு புரிஞ்சிட்டு 3 பெரிய்ய கேள்விய செய்யாமலே வந்திட்டார்.. இந்த வருஷம் எல்லாம் புரிஞ்சதாம்.. எல்லாம் செஞ்சாராம்.. கட்டுரை 60 சொல் கேட்டதுக்கு 40 எழுதினாராம்.. நான் அத கேட்டு அப்டியே ஷாக் ஆஆஆஆஆஆஆகிட்டேன்.. அதிகபட்சம் ஒரு பத்து சொல் எழுதுவார்னு நினைச்சேன்.. அவரோட பேப்பரும் நான் கடைசி 2 நாள் சொல்லிக்குடுத்த அவ்ளோ விஷயத்தையும் உள்ளடக்கி வந்திருந்துது..

057சது பேப்பர்ல 6வது கேள்விய நான் கதிரவன் காதலித்தான்.. இதில் காதலித்தல் என்பது.. அப்டின்னு படிச்சிட்டு மிரண்டுட்டேன்.. மறுக்கா படிச்சு பாத்திட்டு மத்த டீச்சர்சுக்கும் விஷயத்தை சொன்னேன்.. அதுக்கு ஒருத்தங்க அவங்க ‘அப்படித்தான்’றத அத்தான்னு படிச்சிட்டதா சொன்னாங்க.. அப்டியே சில மோட்டுத்தனமான கேள்விகள் எதுக்கு செட் பண்ணாங்க.. இத நான் சொல்லிக்குடுக்கலை.. கேள்வி போட்டுட்டான்.. இந்த கேள்வி சிலபஸ்லயே இல்லை.. சூர்யா ரெண்டு வாரமா ஆன்லைன்ல செமயா இருக்கார்ல.. என்பதாய் பல பொது அறிவு விடயங்களையும் அலசி ஆராய்தலும் சிரிப்புமா அப்பப்ப டீச்சருங்களே இப்டி கதைச்சான்னு தமிழ் பொறுப்பாசிரியர்ட்ட திட்டும் வாங்கி சந்தோஷமாய் கழிந்தது நாள்..

மூன்றிலிருந்து பத்தாம் வகுப்பு வரையான பிள்ளைகளுக்கே சோதினை.. எங்கூர்ல பரீட்சைய இப்டித்தான் சொல்வோம்.. பொருத்தமாருக்குல்ல?? பேப்பர்ல சில சின்ன தவறுகள் இருந்ததாலயும் இட ஒழுங்கமைப்புக்கு நேரம் ஆனதாலயும் அரை மணி பிந்தியே சோதினை ஆரம்பிச்சது.. அந்த காப்ல படிங்களேன்னு சொன்னா பலர் புக்கை விட்டிட்டு வந்திருந்தாங்க.. சிலர் அப்பதான் பரபரன்னு படிச்சிட்டு இருந்தாங்க.. சிலர் ஃபங்ஷனுக்கு வந்தது போல ஜாலியா பேசிட்டு இருந்தாங்க.. சிலர் எதுவுமேஏஏஏ பேசாம தலையசைச்சா கூட படிச்சது மறந்திடும் போல அசையாம இருந்தாங்க.. சிலர் கடவுளை வேண்டிட்டு இருந்தாங்க.. சிலர் டீச்சர் படிச்சது வருமா பயமாருக்குன்னு சொல்லிட்டு இருந்தாங்க.. என்னட்ட முன்னாடி படிச்ச வேற வகுப்பு பசங்க அவங்களுக்கு டவுட் வந்தா நான் ஹெல்ப் பண்ணும்னு சொல்லி வச்சாங்க..

எல்லாம் தயாராகி பார்சல் ஓபன் பண்ணி பேப்பர்ஸ் வெளிய எடுத்ததும் எக்ஸாம் ஹால் கப்சிப்னு ஆகிப் போச்சு.. ஒவொரு பிள்ளையும் அப்டி ஒரு எதிர்பார்ப்பும் பதட்டமுமா கையில பேப்பர வாங்கினாங்க.. பேப்பர் வாங்கின நேரம் தொடக்கம் நிலமை மாறிப் போச்சு.. தலையே நிமிர்த்தாம எழுதிட்ட்ட்டே இருந்தவங்க.. எக்ஸ்ட்ரா பேப்பர் கட்டுரைக்கு கேட்டவங்க.. பேப்பரையே வெறிச்ச்ச்ச்சு பாத்திட்டு இருந்தவங்க.. அதான் நான் படிக்கலையே வந்ததுக்கு இருந்திட்டு போவம்னு இருந்தவங்க.. சைகையில ஹெல்ப் கேட்டுக்கிட்டவங்க.. இது படிச்சேன் டீச்சர் ஆனா இப்ப நினைவே வர்லன்னவங்க.. கடகடன்னு ஷமத்தா எழுதிட்டு கைய தூக்கினவங்க.. சரியான விடையின் கீழ் கோட்ட போட்டுட்டு எனக்கு இவ்ளோதான் தெரியும் டீச்சர் பேப்பர வாங்குங்கன்னவங்க.. இந்த ரெண்டுல எது டீச்சர் விடைன்னவங்க.. இப்டி இன்னும் பல ங்கவ பாக்க முடிஞ்சது..

சோதினை ஒரு வழியா முடிஞ்சாச்சு.. என்னால முடிஞ்சத பசங்களுக்கு சொல்லி குடுத்திட்டேன்.. படிச்சிட்டு வந்ததும் வராததும் அவங்க பொறுப்பு.. பாவம் பசங்க.. நோர்வேஜியன் பள்ளிகள்லயும் இப்பதான் பரீட்சை சமயம்.. இதில தமிழுக்கும் நேரம் ஒதுக்கி அவங்க படிக்கறது கொஞ்சம் கஷ்டம் இல்லையா..  இடையில ஆண்டுவிழாவுக்கான ஆயத்தம் செய்ததில சில வகுப்புகள் படிக்க முடியாம போனதால பயிற்சிகளை வகுப்பில பாக்க முடியல.. ஆனா எல்லாம் பக்காவா ஜெராக்ஸ் எடுத்து வீட்ல படிக்கும்படியா குடுத்துவிட்டேன்.. சிலர் கால் பண்ணி டவுட் கேட்டாங்க.. அம்மு இந்த தடவை ஷமத்தா சொல்லி குடுத்தப்ப படிச்சாங்க.. பாஸ்பேப்பர்ஸ்லாம் நான் ஆஃபீஸ்லருந்து வர செஞ்சு ரெடியா வச்சிருந்தாங்க.. சது சூர்யா ஆன்லைன்ல இருக்கும்போதுதானே வெளிய போய் விளையாட முடியும்ன்ற காரணம் காட்டி கொஞ்சம் அடம்பிடிச்சாலும் வெள்ளி இரவும் சனி காலையும் அவராவே ’ஏற்றுமதின்னா ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டுக்கு பொருட்களை அனுப்புவது.. இது சரியாம்மா’ன்னு சொல்லியும் என்னை கேள்விகளை கேட்கச் சொல்லி அவர் பதிலியும் என ஷமத்தாக மாறினார்..

பார்க்கலாம்.. முடிவுகள் எப்டி வருதுன்னு.. ஆனா என்னவோ பெரியதொரு பாரம் குறைஞ்சது போல ஒரு உணர்வு.. எனக்கே இப்டின்னா அவங்களுக்கு எப்டி இருக்கும்.. பிள்ளையாரே..

24 April, 2012

God decides something!!

“யார் கையில் வந்து யார் சேர்ந்திருப்போம்

யார் சொல்வதிதை காட் டிசைட்ஸ் சம்திங்..”

காலேல ஒரு பாடல் பகிர்ந்து கொள்ளலாம்னு சம்திங் சம்திங் படப் பாடலை தேர்வு செஞ்சப்ப பிடித்த வரிகளா அமைஞ்ச வரிகள் இவை. எனக்கு கடவுள் நம்பிக்கை நிறையவே இருக்கறதால எங்கள் இருவருக்கும் பெற்றோர்கள் நிச்சயித்த திருமண பந்தத்துக்கு முதல் முடிவு எடுத்தது கடவுள்தான்னு பல சமயங்கள்ல இந்தப் பதின்மூன்று வருடங்கள்ல நினைச்சிருக்கேன். இதற்காகத்தான் என்னையும் இவரையும் இந்தப் பந்தம் இணைச்சதுன்னு உணர்ந்திருக்கேன். மனப்பூர்வமா உணர்ந்தேன்னு சொல்லணும்.

போன மாதம் மாம்ஸ்க்கு ஒரு வகையான இருமல் பிடிச்சது. பகல்ல எல்லாம் அளவாக இருக்கும். இரவானால் அளவே இல்லாமல் இருமும். அனைத்து நாடுகளின் பாட்டி வைத்தியங்கள் பார்த்தும் அடங்கவில்லை. சாதாரண இருமலுக்கு டாக்டரான்னு அவரிடம் என் பேச்சு எடுபடவில்லை. என்ன ஆனாலும் அடுத்த கணமே மறுபடி தூங்கிப் போய்டுறது அவர் வழக்கம். எனக்கு?? தொடர் சிவராத்திரிகளும், குறைத் தூக்கமுமா போக வண்டி ஓட்டும்போது தலைசுற்ற ஆரம்பிச்சிடிச்சு. ஒரு நாள் இரவு முடியாமல் போக எழுந்து கெஸ்ட் ரூமில் போய் படுத்துவிட்டேன். அது கூட நாலரை மணிக்குத்தான். ஆஃபீஸ்க்கு வழக்கம் போல் ஃபோன் பண்ணியவர் கேட்ட முதல் கேள்வி

‘என்னடி இப்டி பண்ணிட்டே??’

’நீங்க டாக்டர்ட்டவும் போக மாட்றிங்க என்னால தூங்காம ஆஃபீஸ் வர முடியல. அதான் எந்திரிச்சு போய்ட்டேன்`னேன்.

’டாக்டர்ட்ட அப்பாயின்மெண்ட் எடுத்திட்டேன். மவளே அவர் நான் சொன்னது போல வெறும் வைரஸ் இருமல்னு சொல்லட்டும் இருக்கு உனக்கு’ன்னார்.

என்னதான் ஆண் தான் உறுதியானவன்னு காட்டிக் கொண்டாலும் சில சின்ன விஷயங்கள்ல அப்படிக் காட்டிக்கொண்டு மட்டும்தான் இருக்கிறான். இருமல் சரியாகற வரைக்கும் நீ அம்மு ரூம்ல தூங்குன்னு சொன்னார். தனியாகத் தூங்க அவ்ளோ பயப்படற நான் திடீர்னு எழுந்து போனது அவருக்கு ஏதோ ஒரு வகையில் அதிர்ச்சி என்பது நல்லாவே புரிஞ்சது.

நான் அவர்ட்ட அவளவா கேள்வி கேக்கமாட்டேன். எங்க போறிங்க.. வரிங்க.. ஏன் லேட்.. அது ஏன் செஞ்சிங்க.. இத ஏன் செய்லைன்றது போல சின்ன விஷயங்கள் தொடங்கி பெரிய விஷயங்களிலும் மூக்கு நுழைக்கமாட்டேன். எல்லாம் அவர் பார்த்துப்பார்ன்ற நம்பிக்கை. அவரும் எதா இருந்தாலும் இன்ன முடிவு எடுத்தேன்/எடுக்கலாமான்னு கலந்துகொள்வார். போன வாரம் என்னவோ மூட் சரியா இல்லை. அவர் வீட்டுக்கு வந்து ஆசுவாசப்படுத்தினதும் ‘காலேல போனவர் இப்பதான் வரிங்க’ன்னு ஒரு வரிதான் சொன்னேன். கேள்வியாகக் கூட. அன்று தூங்கும்வரை பலமுறையும் தொடர்ந்து சில நாட்களும் அதற்கான விளக்கத்தை சொல்லிக்கொண்டிருந்தார். இந்த சின்ன விஷயத்துக்கு போயான்னு தோணினாலும் அவருக்குள் அதன் தாக்கம் பெரிதாக இருந்திருக்கும்போலன்னு தோணிச்சு.

எங்கேயோ கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருந்த வாழ்க்கையின் சில தத்துவங்கள் மெதுவா மிக மெதுவா புரிபட ஆரம்பிக்கிறது. அதற்கு வயதும், பிள்ளைகளின் வளர்ச்சியும், காலமும் கூடவே உலகமும் காரணமாக இருக்கலாம். ஒரு நாள் காரில் போய்க்கொண்டிருந்தபோது ஊர் சுற்றிய பேச்சு கடைசியில் இப்படி ஒரு குடும்பம் அமைய நான் என்ன தவம் செய்தேன்னு நினைக்கும்படியா வந்து முடிஞ்சது. காருக்குள் வந்த திடீர் அமைதி எனக்கும் அவருக்கும் இதை நல்லாவே உணர்த்திச்சு. பிள்ளைகளால அத மொழிப்படுத்த முடியலைன்னாலும் உணர முடிஞ்சதென்பது அவங்க முகத்திலும் ‘பாவம்ல அவங்கல்லாம்’ன்னு சொன்ன விதத்திலும் தெரிஞ்சது.

பிள்ளையாரப்பா.. உன்னட்ட எப்போதும் கேக்கறததான் இப்பவும் கேக்கறேன். நீ எல்லாரையும் நல்லா பாத்துக்கோ. அப்போ தான் நான் நல்லா இருப்பேன்.

ஃபீலிங்க்ஸ் ஆஃப் நோர்வே போதும்னு நினைக்கறேன்.. இதோ.. அடுத்த ஒரு புது வருஷத்துக்குள்ள போருக்கு கிளம்பிட்டோம்.. வந்து எங்கள் திருமணநாளுக்கு வாழ்த்திட்டு ஆசி வாங்கிட்டு போங்க மக்கள்ஸ்..

j 039