Pages

  • RSS
Showing posts with label குட்டி அம்மிணி. Show all posts
Showing posts with label குட்டி அம்மிணி. Show all posts

26 October, 2011

காஃபி வித் அம்மு.

முன்னை விட ரொம்பவே மாறிவிட்டார் அம்மு. முதல் மாற்றம் ஷாப்பிங். முன்பென்றால் என் கையைப் பிடித்து இழுத்து, காலைக் கட்டி கடைக்கு உள்ளே போக விடமாட்டார். ஆனால் ஒரு போதும் அழுது அளிச்சாட்டியம் பண்ணியதில்லை. முடிந்த வரை தடுக்க முயற்சி செய்வார். அதனாலேயே நான் ஷாப்பிங் தனியாகப் போவதுண்டு. இப்போது எப்போது கடைக்குப் போவதென்றாலும் உடனேயே வருகிறார். உடையைப் பொறுத்தவரை முன்பு அவருக்கு வேண்டியதை நானே வாங்கி வரவேண்டும். ’எப்டிம்மா எனக்குப் பிடிச்சதை வாங்கினிங்க’ என்பதோடு சரி. இப்போது நான் ட்ரையல் ரூம் ஸ்டூலில் உக்கார்ந்திருக்க வேண்டியதுதான். அலுக்காமல் இதை போடவா, அது பொருந்துமா, எது நல்லாருக்கும் என்று தனக்கு வேண்டியதைத் தானே போட்டுப் பார்த்துத் தேர்வு செய்கிறார். என் கை கோர்த்து, தனக்குத் தெரிந்த ஃபாஷன் டிப்ஸை அள்ளி வீசியபடி அல்லது எதுவோ பேசியபடி கூட வரும் குட்டிப் பெண்ணோடு ஷாப்பிங் போவதென்பது எனக்கும் பிடித்த மிகவும் புதிய அனுபவமே.

104 ஐஸ்க்ரீம், hot dog, burger, hot chocolate இப்படி எதுவோ ஒன்றால் ஷாப்பிங்குக்கு சுபம் போடப்படும். நான் இருக்கும் மூடைப் பொறுத்து எனக்கு காஃபி ஆர்டர் செய்வேன். ’இன்னைக்கு நானும் காஃபி குடிக்கட்டுமா’ என்று கேட்டவர் தனியாக வேண்டாம் உங்களதில் டேஸ்ட் பார்த்துவிட்டு ஆர்டர் செய்கிறேன் என்றார். கூடவே ஒரு கேக்கும் வாங்கிக்கொண்டு உட்கார்ந்தோம். டேஸ்ட் பிடித்திருந்தாலும் அவ்ளோ பெரிய கிளாஸ் தனியாக குடிக்க முடியாதென்று சொன்னதால் இருவரும் ஷேர் செய்து கொண்டோம். இங்கு வந்ததுக்கு என் குட்டித்தோழியோடு தான் முதல் முதல் காஃபி குடித்திருக்கிறேன்.

போன வாரம் பள்ளியில் ஃபோட்டோ எடுத்தார்களாம். பாவம் என் செல்லத்துக்கு நல்லதாக ஒரு ட்ரஸ் கூட இல்லையாம். சரி என்று என் டீஷர்ட்டில் ஒன்றை குடுத்துவிட்டு இனிமேல உங்களுக்குத்தான் என்றேன். ஓடி வந்து கட்டிக்கொண்டார். இந்த சம்மரில் இருந்தே நான் போடாத என் டீஷர்ட்ஸ் சலவைக்கு வந்தது. கேட்டபோது பிடிச்சிருந்ததாம் எடுத்துப் போட்டுக்கொண்டாராம். என்னுடைய accessoriesக்கும் இதே கதிதான். ஆனால் அதிகமானவை ஏதோ ஒரு காரணத்தோடு உடைந்தே திரும்பி வருகின்றன. எங்காவது கிளம்பும்போது என் காலணிகளில் எதைப் போடலாம் என்று நான் நினைத்திருப்பேனோ எனக்கு முன்னே அது அம்மு கால்களில்.

எனக்கு கோவம் வரும்படியாக ஏதாவது சொல்கிறார்/செய்கிறார். அடுத்த நொடி ‘என் மேல கோவமா.. ஸாரிம்மா’ என்று ஓடி வந்து கட்டிக்கொண்டு உம்மா கொடுக்கிறார். முன்பை விட பொறுமை, புரிந்துணர்வு, விட்டுக் கொடுத்தல் போன்றவை கூடி இருந்தாலும் அவர் ரூமை ஒதுங்க வைப்பது மட்டும் இன்னமும் வரக் காணோம். சின்னச் சின்ன சமையல் கூட செய்து அசத்துகிறார். ’அச்சாக் குட்டியடி நீ’ என்று பொறுப்புணர்வைப் பாராட்டி சர்ட்டிஃபிக்கேட் கொடுத்த சில மணி நேரத்திலேயே ‘என்ன பிள்ளையம்மா நீங்கள்.. அம்மா இவளவு சத்தமா கத்துறன்.. கேக்காம இருக்குறிங்கள்’ என்றும் சொல்ல வைக்க அவரால் மட்டுமே முடிகிறது. இது சில சமயம் மாறியும் நடக்கிறது.

111 எங்கள் காரில் உறைந்திருந்த பனியில் அவர் எழுதியது இது. தமிழ் கற்பதில் நிறைய முன்னேற்றம். தானாகவே வீட்டுவேலை செய்துவிடுவார்.  புரியாதவற்றுக்கு மட்டுமே என்னிடம் உதவி கேட்பார். மீதி எல்லாம் தனக்குத் தெரிந்த வரையில் சமத்தாகச் செய்துவிடுவார். நாளை எல்லோர் வாழ்த்துகளையும் படித்துப் பார்க்க ஆவலாக இருக்கிறாராம் என்றும் எழுதச் சொன்னார்.

அவ்வப்போது எங்களை நிறுத்தி வைத்து உயரம் அளந்து பார்க்கிறார். இதில் அதிகம் மாட்டிக்கொள்வது நான் தான். அடுத்தபடியாக சதுவின் கன்னம். அது என்னவோ என்/சதுவின் கன்னத்தை கிள்ளி/வருடிப் பார்ப்பதில் இன்னமும் அலாதி இன்பம் என் தங்கத்துக்கு. இம் முறை நண்பர்களோடு பார்ட்டி வேண்டாமாம். யாருமே அவர் வகுப்பில் இந்த வருஷம் பார்ட்டி வைக்கவில்லையாம். அதனால் தனக்கும் தேவை இல்லை என்றார். இப்பொழுது குட்நைட் ஹக் கொடுக்க வந்தவர் ‘நீங்க எப்டித்தான் எழுப்பினாலும் சில சமயம் எந்திரிக்க மாட்டேன். அதனால எல்லாம் விட்டிட கூடாது. எப்டியாவது எழுப்பி கரெக்ட்டா பனெண்டு மணிக்கு விஷ் பண்ணணும்’ என்று சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்.

என் அம்மு இன்று போல் என்றும் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ என் அப்பன் துணை இருக்கட்டும்.

ஹாப்பி பர்த்டே லச்சு. லவ் யூ அம்மாச்சி.

27 June, 2010

ஆகஸ்ட் 18..

நான் நடந்தால் அதிரடி.. போன புதன் கிழமை. 12:20 க்கு ஆஃபீஸ்ல வேலையில மூழ்கி இருந்த என் மொபைல் பாடிச்சு.

”என்னம்மா..”

“அம்மா நாங்க அரோஷா (பாகிஸ்தான் பொண்ணு, அம்மு க்ளாஸ் மேட்) வீட்டுக்கு போலாமா.. அப்பா கேக்க சொன்னார்”

“அப்பாவும் சரினு சொன்னா போங்க. சேர்ந்து போய்.. சேர்ந்து வரணும். சரியா”

12:50 க்கு மறுபடி நான் நடந்தா..

”அம்மா நாங்க அரோஷா வீட்டுக்கு வந்திட்டோம்”

போய் சேர்ந்ததும் சொல்லணும்கிறது எழுதாத சட்டம்.

14:06 நான் நடந்தா..

“என்னடாம்மா”

”அம்மா நான் சது பேசறேன். அரோஷா இல்லை.. அவங்க என்ன விளாட்டுல சேர்த்துக்க மாட்டாங்களாம். என் கூட சண்டை போடறாங்க”

“ஓ.. அக்காச்சி எங்கப்பா”

“அவங்க அரோஷா கூட இருக்காங்க”

“சரி. அவங்க கிட்ட ஃபோன குடுங்க”

கரபுர கரபுர சத்தம் + பேச்சு சத்தம்.

“அம்மா.. என்னம்மா”

“தம்பி கூட அரோஷா சண்டை போடறாங்களாம். என்னாச்சு”

“இல்லம்மா.. அவங்க சண்டை போடலை.. தம்பிதான் அவ,,”

ஃபோன் பிடுங்கப்பட்டு..

“இல்லம்மா.. அக்காச்சி பொய் சொல்றாங்க. அரோஷாதான் முதல்ல திட்னா”

பின்னணியில அரோஷா + அம்மு குரல் மறுப்பாய்..

நேரம் பார்க்கறேன்.. 14:20. ஆணிய பார்க்கறேன். கொஞ்சம் குவியல்தான்.

“தம்பி. அம்மா ஒண்ணு சொல்றேன். கேக்கரிங்களா. அப்டியே ஃபோன கட் பண்ணிட்டு ரெண்டு பேரும் முதல்ல வீட்டுக்கு போங்க. சரியா”

”சரிம்மா”

14:26. நான் நடந்தா..

“என்னம்மா”

“அம்மா.. தம்பி அரோஷா கூட ஃப்ரெண்ட் ஆயிட்டார். நாங்க இன்னும் கொஞ்ச நேரம் விளையாடவா. ப்ளீஈஈஸ்..”

“ம்ம்”

14:31. நான் நடந்த்..

”என்ன்னம்மா”

“அம்மா நான் தம்பி.. அரோஷா இல்லை.. அவ மறுபடி சண்டை போடறா”

“தம்பி.. முதல்ல ரெண்டு பேரும் வீட்டுக்கு கிளம்புங்க சரியா.. அம்மா வேலை முடிக்கணும். ஓக்கே.. கிளம்புங்க.. பை”

14:36. நான் ந..

“வீட்டுக்கு போயாச்சா. சைக்கிள்ள போனிங்களா என்ன”

“இல்லம்மா நாங்க இன்னும் போல. அரோஷா அவ அண்ணா கிட்ட சொல்லி எனக்கு அடிக்க சொல்வாங்களாம்”

அவருக்கு 20 வயசு. Polandல படிச்சிட்டு இருக்கார்.

“தம்பி இன்னும் நீங்க வீட்டுக்கு போலையா.. அம்மால்ல போக சொன்னேன்”

“இல்லம்மா.. நாங்க எப்டி போறது. சாவி கொண்டு வர்லையே”

“எதுக்கு சாவி விட்டு போனிங்க. சரி அப்பா வந்திருப்பார்ல. போங்க”

“அப்பா இன்னும் வர்லையாம். கடைக்கு போயிருக்காராம்”

“சரி பரவால்ல. அம்மா வந்திடுவேன். நீங்க முதல்ல கிளம்”

“நீங்க வர ட்ராஃபிக்ல லேட்டானா??”

“லேட்டானா என்ன. வெளிய ரெண்டு பேரும் வெயிட் பண்ணுங்க. அம்மா இல்லை அப்பா வந்துடுவோம்”

“அதெப்டி.. வெளிய வெயிட் பண்ணா கால் வலிக்கும்”

“அதான் வெளிய பெஞ்ச் இருக்கில்ல அதில உக்காருங்க”

“அதில எவ்ளோ நேரம்னு உக்கார்ரது.. போர்மா”

”இதோ பாருங்க.. முதல்ல.. ரெண்டு பேரும்.. வீட்டுக்கு.. கிளம்புங்க.. புரியுதா..”

“அம்மா.. இல்லம்மா..”

“அம்மாச்சி.. அம்மா வேலை முடிச்சு மூணு மணிக்கு கிளம்பிறதா இருக்கேன். ஓக்கே.. வீட்டுக்கு போங்க.. வேற பேச்சு வேண்டாம். நாங்க வர வரைக்கும் ஒண்ணு பெஞ்ச்ல இருங்க.. இல்லை சைக்கிள் ஓட்டுங்க.. அம்மா சொல்றது கேக்குதில்ல.. ஃபோன வச்சிட்டு அம்மா சொன்னத செய்ங்க”

கட் பண்ணிட்டு, மொபைல டெஸ்க்ல வைக்கிறத்துக்குள்ள கலீக்ஸ் சிரிக்க ஆரம்பிச்சிட்டாங்க. நான் ங்ஙேஏஏஏ..

“பரவால்லையே இன்னைக்குத்தான் ஒரு அம்மா ஸ்ட்ரிக்டா நடந்துக்கிட்டத நாங்களும் கேட்டோம்”

“ஹிஹிஹி.. கேட்டிங்களா”

”ஆமாம்.. முதல் நாளே இப்டின்னா ஆகஸ்ட் 18 வரைக்கும் என்ன பண்ண போறே”

அவ்வ்வ்வ்..

போன வெள்ளிக்கிழமை. இரவு 8 மணிக்கு பக்கத்து வீட்டு பொண்ணு அமாலிய வந்தாங்க.

“நான் உங்க வீட்ல இன்னைக்கு தூங்கலாமா”

“ஓ.. தாரளமா”

உடனவே என் வாரிசுங்க..

“எத்தன நாள் அவங்க இங்க தூங்கலாம்??”

நான் கிர்ர்ர்ர்ர்..

“இல்லம்மா. ஆகஸ்ட் 18 வரைக்கும் நிறைய்ய்ய நாள் இருக்கே. சொல்லுங்க.. எத்தன நாள்??”

ஆவ்வ்வ்வ்

~~  ~~  ~~  ~~  ~~

boy-girl-balloons

வேற ஒண்ணும் இல்லைங்க.

ஆத்தா எங்களுக்கு லீவு உட்டாச்சூஊஊஊஊஊ..ங்கிறத பசங்க கோரசா இப்டி ஃபோன்ல சொன்னாங்க.. ”அம்மாஆஆஆ.. எங்களுக்கு லீவு விட்டாச்சு.. வீட்டுக்கு போயிட்டிருக்கோம்” காதுல புகையோட கேட்டுட்டு இருந்தேன். அவங்களுக்கு போன புதன் ஸ்கூல் லீவு விட்டாச்சு.. இன்னும் எத்தனை மாசம், வாரம், நாள், மணி, நிமிஷம், செக்கன் இருக்கு லீவுக்குன்னு எண்ணிப் பாத்து என்னய நொந்து போக வச்சிட்டாங்க. அன்னிக்கு.. அதாங்க புதன் கிழமை.. பதினோரு மணியோட பள்ளி முடிஞ்சுது. எனக்கு ஃபோன் வந்தது 11:10 க்கு. அதுக்கப்புறம் நடந்தது தான் மேல சொன்னது.

என்ன செய்ய. பள்ளி விடுமுறைன்னா பாட்டி வீட்டுக்கோ, உறவுக்காரங்க வீட்டுக்கோ அனுப்பி வைக்க முடியுமா எங்களால. இப்டித்தான் சமாளிக்க வேண்டியதா இருக்கு. இங்க சம்மர்ல ஸ்கேட்டிங், கராத்தே, ஸ்விம்மிங்னு  எந்த அக்டிவிட்டிசும் கிடையாது. இனி ஸ்கூல் தொடங்கும்போதுதான் எல்லாம் தொடங்கும். சம்மர் காம்ப் கூட கிடையாது. நான் வீட்டுக்கு வரதுக்கும் அவர் வேலைக்கு கிளம்புறதுக்குமான இடைவெளியில பக்கத்து வீட்டு பசங்க கூட இருக்காங்க. கொஞ்சம் வளந்துட்டதால பயமில்லாம நிம்மதியா இருக்கு.

மக்கள்ஸ்.. வெயிட் பிளீஸ்.. பசங்களுக்கு லீவு விட்டாச்சுங்கிற ஒற்றை வரிய.. இவ்ளோ பத்தி பத்தியா எழுதின என்ன திட்ட முடியாது நீங்க. எல்லாத்துக்கும் காரணம் சின்ன அம்மிணிதான். இல்லையா அம்மிணி.. நீங்கதானே கமண்ட்ல சொன்னிங்க

//இதையெல்லாம் சேமிச்சு வையுங்க. பெரியவங்க ஆனப்பறம் அவங்களாலயே நம்ப முடியாது.//

அப்டின்னு. இப்டி சேமிச்சா கரெக்டுங்களா?? இல்லைன்னா சொல்லுங்க. இன்னும் ரெண்டு பத்தி சேர்த்துடலாம்.

வர்ட்டா..

07 April, 2010

ஒரு யுகமாய் ஒரு மணித்துளி..

திங்களும் இங்க ஈஸ்டர் லீவுங்கிரதால வழக்க விரோதமா ஞாயிறு அதுவுமா முழுக் குடும்பமும் சீக்கிரமே எந்திரிச்சோம். மலைக்கு ஒரு டூர் போய்ட்டு வரலாம்னு கண்ணாளன் முத நாளே சொல்லி இருந்தார். நான் வீட்ல தலைக்கு மேல வேலை இருந்ததால போகல. ஒரு பத்தரை மணி போல புறப்பட்டாங்க. நான் அப்பப்போ ஃப்ரெண்ட்ஸ் கிட்ட பேசிக்கிட்டே வேலை செஞ்சுட்டு இருந்தேன். ஒரு மணி இருக்கும். என் மொபைல் திடீர்னு துளி துளி துளி மழையாய் வந்தாளேனு பாடிச்சு.. டிஸ்ப்ளேல என்னவர் பெயர பாத்ததுமே இன்னைக்கு சமையல் பண்ணாத வெளிய சாப்டலாம்னு சொல்ல போறாரோன்னு சந்தோஷமா ஹலோன்னேன்..

 

இப்போ நாங்க மலைக்கு டூர் போறது பத்தி சின்னதா சொல்றேங்க.. என்னோட ஒரு ஃப்ரெண்டு கேட்டுது ”எப்டி? பார்க்குக்கு போறா மாதிரி மலை மேல டூர் போவீங்களா”னு. அதே தாங்க. இங்க எங்க ஊர்ல மொத்தம் ஏழு மலை இருக்கு. அப்டியே ஊர சுத்தி, தொடரா. அதில ஒண்ணு எங்க வீட்டுக்கு எதிர்க்க இருக்கு. போன வருஷம் சம்மர்க்கு நாங்களும்  ஏறிப் பாக்கலாம்னு போனோம். அவ்ளோ நல்லா இருந்துது. (கஷ்ட நஷ்டங்கள் இன்னொரு பதிவில கண்டிப்பா சொல்வா பாருங்க)

 

ஹலோ..

லச்சு வீட்டுக்கு வந்திட்டாளா?

என்னப்பா.. நீங்க கூட்டிட்டு போய்ட்டு வீட்டுக்கு வந்துட்டாளான்னா..

இல்லடி.. பாதி வழி வந்ததும் முன்னாடி இறங்கட்டுமான்னா.. சரி போயி கீழ கார் பக்கத்துல வெயிட் பண்ணுங்கனு சொன்னேன். இங்க வந்து பாத்தா காணோம்டி..

என்னப்பா சொல்றீங்க.. எதுக்கு அவள தனியா விட்டீங்க.. என்னப்பா இது ஏன்..

சரி சரி ஃபோன வை. நான் மறுபடி ஏறிப் பார்க்கறேன்..

 

கடவுளே.. எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல.. பேசிக் கிட்டு இருந்த ஃப்ரெண்ட் கிட்ட விஷயத்த சொன்னேன். அதுக்கு என்ன பத்தி நல்லாவே தெரியும்கிறதால சொல்லிச்சு. “ஒண்ணும் ஆகாது. பயப்படாத. அவ அங்கதான் நிப்பா.. அவர் பாத்துப்பார்”னு.  இருந்தாலும் வெளிய மலைய பார்க்கிறதும் அது கிட்ட எதுனா சொல்றதும்னு ஜன்னலுக்கும் பால்கனிக்குமா ஒரு பத்து நிமிஷம் ஓடினேன்.. அவருக்கு கால் பண்ணேன்..

 

என்னப்பா..

இரு.. பாக்கறேன்..

சத்தமா கூப்டு பாருங்களேன்..

இல்லடி.. இரு.. அதான் நான் ஏறிட்டு இருக்கேன்ல.. சந்திரன் அடுத்த வழியால ஏறிட்டு இருக்கார்..

ஐயோ.. மழை வேற பெய்ய போதுப்பா.. யாரும் கூட ஏறிட்டு இருக்கிறவங்க கிட்ட ஹெல்ப் கேளுங்களேன்.. இல்லேன்னா  நான் வரட்டா..

நீ இங்க எங்கனு வருவே.. நான் பாத்துக்கறேன். இரு..

 

மறுபடி மனசு அடிச்சுக்க ஆரம்பிச்சுது. பிள்ளையாரே.. என் குழந்தை பாவம் தவிக்கப் போறாளே.. மழையும் தன் பங்குக்கு மிரட்ட ஆரம்பிச்சுது. என் தங்கம் தவிச்சுக்கிட்டே ஓடறா மாதிரி ஒரு எண்ணம் வந்துது.. அடி வயித்தில இருந்து ஒரு வலி வந்துது பாருங்க.. என் ஃப்ரெண்டு மட்டும் இல்லேன்னா என் இதயம் நின்னு போயிருக்கும். அழுது கிட்டே எல்லா கடவுளையும் வேண்டிக்கிட்டு மறுபடி ஃபோன்..

 

என்னடி.. இன்னும் காணல..

என் தங்கம் பயந்துடப் போறாப்பா.. போலீஸ்ல சொல்லிடலாமா.. எனக்கு பயமா இருக்குப்பா..

இல்ல.. இரு பாக்கலாம். இங்க ஒருத்தர் கிட்ட வழி கேட்டிருக்கா.. அவரும் தேடிட்டு இருக்கார். வை ஃபோன.. பாக்கலாம்..

 

இப்போ அரைமணி போயாச்சு. இன்னொரு ஃப்ரெண்டுக்கு ஃபோன் பண்ணேன். அவர் உடனவே என்னவர் கிட்ட பேச அவர இன்னொரு வழியால வர சொல்லி சொல்லி இருக்கார். அவர் ”பயப்பிடாதீங்க.. இதோ நான் போயிட்டே இருக்கேன். போலீஸ்லாம். வேணாம். நாங்க பாத்துக்கறோம்”னார். இதுக்குள்ள இன்னும் ரெண்டு தரம் கண்ணாளன் கிட்ட பேசிட்டேன். இது மூணாவது கால்..

 

என்னப்பா..

என்ன.. மலை உச்சிக்கு வந்துட்டேன். காணோம்.. இரு..

இல்லைப்பா.. இப்பவாவது போலீசுக்கு ஃபோன் பண்ணுங்க.. என்னால தாங்க முடியலைப்பா..

சரி நீயே பண்ணு.. நான் இன்னும் கொஞ்சம் தேடறேன்.

 

கை நடுங்க 112 அழுத்திட்டு அவங்க லைனுக்காக வெயிட் பண்றேன் டிங் டாங்.. காலிங் பெல்.. பால்கனி கதவ திறந்து ”லச்சும்மாஆஆஆஆ”ன்னேன் ஒரு எதிர்பார்ப்பில.. ”அம்மா அப்பா என்னய வெயிட் பண்ண சொல்லிட்டு தனியா விட்டிட்டு வந்திட்டார்”னு விசும்பலோட சொன்னா.. உங்க பொண்ணு பேச ஆரம்பிச்சதும் முத முதலா பேசினது என்னன்னு தூக்கத்தில எழுப்பி கேட்டாக் கூட இனிமே இத தாங்க சொல்வேன். எப்டியோ படி இறங்கி கீழ போயி கதவு திறந்து என் செல்லத்த அணைச்சதும் தான் என் உயிர் திரும்பி வந்துது.. உடனவே அவருக்கும் ஃப்ரெண்டுக்கும் சொல்லிட்டு, அவங்க ஈர உடுப்பெல்லாம் மாத்த வச்சு, மூஞ்சி கழுவி, சாமி கும்பிட வச்சு, சாமி முன்னாடி பணமும் எடுத்து வச்சேன். அவ அப்பா மாதிரி தைரியசாலி. இத்தனைக்கும் அவ பயப்பிடல. எப்டியாவது தான் வந்திடுவேங்கிற மனத் திடம் இருந்திருக்கு. அது படியே வீட்டுக்கு தனியா வந்தும் விட்டா. ஏற்கனவே ஸ்கூலால + அப்பா கூடனு நிறைய தடவ அதே மலையில ஏறி இருக்கா. அதனாலதான் அவர் தனியா இறங்க சம்மதிச்சதே.

 

ஒரே மலைக்கு ஏற இறங்க நிறைய வழிகள் இருக்குங்க. ஏழு மலையும் தொடரா இருக்கிறதால வழி தப்பி பக்கத்து மலைக்கு போகவும் வாய்ப்பு இருக்கு. நானும் அவரும் ஒரு தடவை அப்டி போயிருக்கோம். ப்ராப்ளம் என்னன்னா எல்லா வழியும் பெரும்பாலும் ஒரே மாதிரி இருக்கும். சில இடங்கள்ள வெறும் பாறையா இருக்கும். நாமதான் கரெக்டா போகணும். இவங்களும் இறங்கும் போது வேற இடத்துக்கு போயிட்டாங்க. அப்புறம் மறுபடி மேல ஏறி கரெக்டா இறங்கிட்டாங்க. அப்போதான் ஒருத்தர் கிட்ட வழி கேட்டது. பக்கத்து வீட்டுக்கு போறாங்கன்னாலே மொபைல் கொண்டு போங்கம்மான்னு சொல்வேன். அன்னிக்கு என்னமோ எனக்கு அது தோணவே இல்லை. அவங்க மொபைலும் எடுத்து போகல. என்னவரும் ரொம்ம்ம்ம்ம்ப பயந்துட்டார். ஒரு மணி நேரம்.. நாங்க பட்ட அவஸ்தை இருக்கே.. யாருக்கும் அது வரக் கூடாதுங்க. குட்டித் தளபதி சொன்னார் ”அக்கா இனிமே நீங்க எங்கள விட்டு போக கூடாது. எனக்கு பயத்தில அழுகையே வந்துச்சு தெரியுமா”ன்னு. பாவம் இவர் கூட போன ஃப்ரெண்ட் சந்திரன் பசங்க ரெண்டு பேர் + சது இவ்ளோ கூத்துக்கும் வண்டில தனியா உக்காந்திருந்தாங்க.

 

ஒரு தடவை இப்டி ஆனத்துக்காக அவங்க தைரியத்த கெடுக்க வேணாமேன்னுட்டு இதோ இன்னைக்கும் அவரும் பசங்களும் டூர் போனாங்க.  ”மொபைல் எடுத்தீங்களாம்மா, அப்பா கூடவே போகணும், தனியா போயிட கூடாது”ன்னு சொன்னத்துக்கு சரிம்மான்னு சமத்தா தலை ஆட்டிட்டு போய் வந்து இதோ இப்போ எப்டி இருந்தது டூர்னு சொல்லிட்டு இருக்காங்க. பனையால விழுந்தவன மாடேறி மிதிச்சா மாதிரி என் அம்மாவும் அக்காவும் என்னய போட்டு கிழி கிழினு கிழிச்சுட்டாங்

 

-சரியா இந்த இடத்தில என் மொபைல் திடீர்னு துளி துளி துளி மழையாய் வந்தாளேனு பாடிச்சு.. எங்க நேரம் இரவு 22:00. டிஸ்ப்ளேல என்னவர் பெயர பாத்ததுமே பரபரப்போட  ஹலோன்னு சொன்னேன்.. விபரம் அடுத்த பதிவில..

 

இப்போ நேரம் எங்க நேரம் அதிகாலை 02:35. தொடர்ந்து படிங்க. இத எங்க விட்டேன்.. ஆங்.. கிழிச்சுட்டாங்க. அம்மா சொன்னாங்க ”உன் அக்காவுக்கு பெண் குழந்தை இல்லையேங்கிர கவலை இனிமே எனக்கு இல்லடிம்மா. இருக்கிறத பாத்துக்க முடியாம நீ பண்ணுறதே போதும் எனக்கு”னு. அக்கா அதுக்கும் மேல போயி “இதோ பாரு இது ரெண்டாவது தடவை. (ஓ.. அப்போ முதல் தடவை என்ன ஆச்சுன்னும் இன்னொரு போஸ்ட்ல சொல்லப் பேறியாஆ?) உன்னால வளர்க்க முடியலைன்னா குடுடி. என் செல்லத்த நான் வளர்த்துக்கறேன்”னு மிரட்டறா. செலவப் பாக்காம டிக்கட்ட போட்டு வந்து கூட்டிட்டுப் போயிடுவாளோன்னு பயந்து வருது எனக்கு.  அண்ணன்கள் ”என்னடி இது கவனமா பாத்துக்கோ”ன்னாங்க. மாமியார், மச்சினர்கள் கிட்ட பேசவே பயமா இருக்கு. அப்பா சொன்னார் ”நீ ஏற்கனவே நொந்து போய் இருக்கேன்னுட்டு நான் எதுவும் சொல்லலைம்மா.. ஆனா எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு, கோவமாவும்”னார்.

 

நான் என்னங்க வேணும்னா செஞ்சேன்.. அவங்க பயம் கோவமாகி திட்டிட்டாங்க. இனிமே என்ன.. உங்க பங்கையும் தீர்த்திடுங்க.

 

வர்ட்டா..