Pages

  • RSS
Showing posts with label அவரும் நானும். Show all posts
Showing posts with label அவரும் நானும். Show all posts

24 April, 2012

God decides something!!

“யார் கையில் வந்து யார் சேர்ந்திருப்போம்

யார் சொல்வதிதை காட் டிசைட்ஸ் சம்திங்..”

காலேல ஒரு பாடல் பகிர்ந்து கொள்ளலாம்னு சம்திங் சம்திங் படப் பாடலை தேர்வு செஞ்சப்ப பிடித்த வரிகளா அமைஞ்ச வரிகள் இவை. எனக்கு கடவுள் நம்பிக்கை நிறையவே இருக்கறதால எங்கள் இருவருக்கும் பெற்றோர்கள் நிச்சயித்த திருமண பந்தத்துக்கு முதல் முடிவு எடுத்தது கடவுள்தான்னு பல சமயங்கள்ல இந்தப் பதின்மூன்று வருடங்கள்ல நினைச்சிருக்கேன். இதற்காகத்தான் என்னையும் இவரையும் இந்தப் பந்தம் இணைச்சதுன்னு உணர்ந்திருக்கேன். மனப்பூர்வமா உணர்ந்தேன்னு சொல்லணும்.

போன மாதம் மாம்ஸ்க்கு ஒரு வகையான இருமல் பிடிச்சது. பகல்ல எல்லாம் அளவாக இருக்கும். இரவானால் அளவே இல்லாமல் இருமும். அனைத்து நாடுகளின் பாட்டி வைத்தியங்கள் பார்த்தும் அடங்கவில்லை. சாதாரண இருமலுக்கு டாக்டரான்னு அவரிடம் என் பேச்சு எடுபடவில்லை. என்ன ஆனாலும் அடுத்த கணமே மறுபடி தூங்கிப் போய்டுறது அவர் வழக்கம். எனக்கு?? தொடர் சிவராத்திரிகளும், குறைத் தூக்கமுமா போக வண்டி ஓட்டும்போது தலைசுற்ற ஆரம்பிச்சிடிச்சு. ஒரு நாள் இரவு முடியாமல் போக எழுந்து கெஸ்ட் ரூமில் போய் படுத்துவிட்டேன். அது கூட நாலரை மணிக்குத்தான். ஆஃபீஸ்க்கு வழக்கம் போல் ஃபோன் பண்ணியவர் கேட்ட முதல் கேள்வி

‘என்னடி இப்டி பண்ணிட்டே??’

’நீங்க டாக்டர்ட்டவும் போக மாட்றிங்க என்னால தூங்காம ஆஃபீஸ் வர முடியல. அதான் எந்திரிச்சு போய்ட்டேன்`னேன்.

’டாக்டர்ட்ட அப்பாயின்மெண்ட் எடுத்திட்டேன். மவளே அவர் நான் சொன்னது போல வெறும் வைரஸ் இருமல்னு சொல்லட்டும் இருக்கு உனக்கு’ன்னார்.

என்னதான் ஆண் தான் உறுதியானவன்னு காட்டிக் கொண்டாலும் சில சின்ன விஷயங்கள்ல அப்படிக் காட்டிக்கொண்டு மட்டும்தான் இருக்கிறான். இருமல் சரியாகற வரைக்கும் நீ அம்மு ரூம்ல தூங்குன்னு சொன்னார். தனியாகத் தூங்க அவ்ளோ பயப்படற நான் திடீர்னு எழுந்து போனது அவருக்கு ஏதோ ஒரு வகையில் அதிர்ச்சி என்பது நல்லாவே புரிஞ்சது.

நான் அவர்ட்ட அவளவா கேள்வி கேக்கமாட்டேன். எங்க போறிங்க.. வரிங்க.. ஏன் லேட்.. அது ஏன் செஞ்சிங்க.. இத ஏன் செய்லைன்றது போல சின்ன விஷயங்கள் தொடங்கி பெரிய விஷயங்களிலும் மூக்கு நுழைக்கமாட்டேன். எல்லாம் அவர் பார்த்துப்பார்ன்ற நம்பிக்கை. அவரும் எதா இருந்தாலும் இன்ன முடிவு எடுத்தேன்/எடுக்கலாமான்னு கலந்துகொள்வார். போன வாரம் என்னவோ மூட் சரியா இல்லை. அவர் வீட்டுக்கு வந்து ஆசுவாசப்படுத்தினதும் ‘காலேல போனவர் இப்பதான் வரிங்க’ன்னு ஒரு வரிதான் சொன்னேன். கேள்வியாகக் கூட. அன்று தூங்கும்வரை பலமுறையும் தொடர்ந்து சில நாட்களும் அதற்கான விளக்கத்தை சொல்லிக்கொண்டிருந்தார். இந்த சின்ன விஷயத்துக்கு போயான்னு தோணினாலும் அவருக்குள் அதன் தாக்கம் பெரிதாக இருந்திருக்கும்போலன்னு தோணிச்சு.

எங்கேயோ கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருந்த வாழ்க்கையின் சில தத்துவங்கள் மெதுவா மிக மெதுவா புரிபட ஆரம்பிக்கிறது. அதற்கு வயதும், பிள்ளைகளின் வளர்ச்சியும், காலமும் கூடவே உலகமும் காரணமாக இருக்கலாம். ஒரு நாள் காரில் போய்க்கொண்டிருந்தபோது ஊர் சுற்றிய பேச்சு கடைசியில் இப்படி ஒரு குடும்பம் அமைய நான் என்ன தவம் செய்தேன்னு நினைக்கும்படியா வந்து முடிஞ்சது. காருக்குள் வந்த திடீர் அமைதி எனக்கும் அவருக்கும் இதை நல்லாவே உணர்த்திச்சு. பிள்ளைகளால அத மொழிப்படுத்த முடியலைன்னாலும் உணர முடிஞ்சதென்பது அவங்க முகத்திலும் ‘பாவம்ல அவங்கல்லாம்’ன்னு சொன்ன விதத்திலும் தெரிஞ்சது.

பிள்ளையாரப்பா.. உன்னட்ட எப்போதும் கேக்கறததான் இப்பவும் கேக்கறேன். நீ எல்லாரையும் நல்லா பாத்துக்கோ. அப்போ தான் நான் நல்லா இருப்பேன்.

ஃபீலிங்க்ஸ் ஆஃப் நோர்வே போதும்னு நினைக்கறேன்.. இதோ.. அடுத்த ஒரு புது வருஷத்துக்குள்ள போருக்கு கிளம்பிட்டோம்.. வந்து எங்கள் திருமணநாளுக்கு வாழ்த்திட்டு ஆசி வாங்கிட்டு போங்க மக்கள்ஸ்..

j 039

28 October, 2011

என் சிங்கம்!

எல்லாரும் கண் வைக்கிறார்கள் என் கண்ணாளன் மீது. காதில் புகையோடு பெருமையாகவும் உணர முடிகிறது. அக்காச்சியுடன் ஃபேஸ்புக் வழி இணைந்த பழைய நட்புகள் சில ’என்ன உங்க அத்தான் அப்ப பாத்தது போலவே இருக்கார். அவருக்கு வயசே ஆகிறதில்லையா’ என்றார்களாம். அரைக்கிலோ எடை கூடினாலே அரை மணி நேரம் ஜாக்கிங்கை கூட்டிவிடுவார். எப்படித்தான் முடிகிறதோ. ஒரு நாள் மழை காற்றென்று கூட ஜாக்கிங் போவதை நிறுத்தமாட்டார். இவரைப் பார்த்து இப்போது ஒரு கூட்டமே ஜாக்கிங் கிளம்பியுள்ளது.

என் தொப்பை பற்றி சிறிதளவு வருத்தம் அவருக்கு. ’என் கூட ஜாக்கிங் வேண்டாம் அட்லீஸ்ட் வாக்கிங் வாயேன்’ என்பார். ’எதுக்குப்பா.. அதான் எனக்கும் சேர்த்து நீங்க அழகாவும், ஸ்லிம்மாவும் இருக்கிங்களே அது போதும் எனக்கு’ என்பேன். முறைத்தால் ‘என் ஸ்பீடுக்கு உங்களால நடக்க முடியும்னா சொல்லுங்க.. தினமும் வரேன்’ என்பேன். ’ராசாத்தி.. நீ இப்டியே சோஃபால இரு.. நான் போறேன்’னுட்டு போய்விடுவார்.

இப்போதெல்லாம் அவர் மேல் அடிக்கடி எரிஞ்சு விழறேனாம். அவர் சொல்லும் வரை எனக்கே தெரியவில்லை. என் இயல்பான பொறுமை ஓடிப் போய் அவரிடம் சேர்ந்து அவரை பொறுமைசாலி ஆக்கிவிடுகிறது.  நேற்றும் எதுவோ சொன்னபோது சுள்ளென்ற என் கோபம் பார்த்து சிரித்தார். ‘எதுக்கு சிரிக்கறிங்க இப்போ’ என்றேன். இன்னமும் சிரித்து ‘உன் கோவத்தை பாத்தா சிரிப்பா வருது’ என்றதோடு விடாமல் அக்காச்சிக்கு கால் பண்ணி ‘உங்க தங்கச்சிக்கு சொல்லி வைங்க.. என் மேல ரொம்ப கோச்சுக்கறா இப்பலாம்’னு சொல்லி என்னை இருவருமாக வாரிக் கொண்டிருந்தார்கள்.

மாமியார் மேல அவருக்கு இருக்கும் பாசம். எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து இன்றுவரை கூடிக் கொண்டே போகிறது. இப்படி ஒரு பிள்ளை கிடைக்க கண்டிப்பாக மாமி புண்ணியம் செய்துதான் இருக்கிறார்கள்.

‘அம்மா.. நோர்பேர்ட் அண்ணா கண் முழிச்சிட்டார்’

‘ஓ.. கடவுளே காப்பாத்திட்டே.. சிரிச்சாரா??’

‘ஏம்மா.. நான் என்ன ஃபோட்டோவா எடுக்கப் போனேன்.. சிரிச்சாரான்றிங்க??’

இடையில் புகுந்த நான் ‘இல்லைப்பா மாமி அவர் உங்களை அடையாளம் தெரிஞ்சு சிரிச்சாரானு கேக்கறாங்கப்பா’

‘ஆமா.. நீதானே அவங்க பக்கப்பாட்டு.. எங்கடா இன்னமும் ஒண்ணும் சொல்லையேனு பார்த்தேன்’

என்பதாய் அவர்கள் இருவர் மொக்கையில் நானும் பல்ப் வாங்கி வீடு எப்போதும் பிரகாசமாய் இருக்கிறது. இருவரும் பேசுவதை கேட்டுச் சிரிப்பதிலேயே என் பொழுது போய்விடும். நண்பர்களுக்கும் இவர்களின் இந்த வாரல் பேச்சு மிகவும் பிடிக்கும்.

இவருடைய பழைய பாஸ் ஒரு தமிழர். தினமும் அவரைப் பார்த்து மொக்கை போடுவது இவரது மிகப்பெரிய பொழுதுபோக்கு. இவர் முன்னே யாரோ ஒரு நோர்வேஜியனுக்கு ஊரில் அவர் ஆடாத வேட்டை பற்றி வெடித்துக்கொண்டு இருந்தாராம். எல்லாம் கேட்டுவிட்டு கடைசியில் இவர் சொன்னாராம். ‘நான் இவர் சொல்றது போல வேட்டைக்கு போறதில்லை.. ஏன் தெரியுமா? சிங்கம் புலில்லாம் கைல துப்பாக்கியோடையா வருது? அதேபோல வெறுங்கையோட போய் என் வீரத்தால வேட்டையாடுறதுதான் என் வழக்கம்’ என்றதை அந்த அப்பாவி நம்பிக்கொண்டு போயிருக்கிறார்.

ஒரு பார்ட்டிக்கு போய்விட்டு இன்னொன்றுக்கு போய்க்கொண்டிருந்தோம். ஒரு நாளும் அந்த ஹால் இருந்த் இடத்துக்குப் போனதில்லை என்பதால் நண்பர் ஒருவரின் பின்னே போய்க்கொண்டிருந்தோம். அவர்களும் எங்களைப்போல் இரண்டு வண்டி வாங்கி இருக்கிறார்கள்.

‘புவனா பெரிய வண்டி ஓட்டி நான் பாத்ததில்லை’

‘ஆமா.. அவங்க வேலைக்கு கூட சின்னதிலதான் போவாங்களாம்னு ரமணன் சொன்னான்’

‘ஏன்பா.. அவங்க தான் ரொம்ப தைரியமானவங்களாச்சே.. நானே பெரிய வண்டி ஓட்டறேன்.. அவங்களுக்கு என்ன?’

‘அடியேய்.. நீ பூனையா இருந்தாலும் சிங்கத்துக்கு வாழ்க்கைப்பட்டு பெண்சிங்கம் ஆயிட்ட.. அங்க அப்டி இல்லையே’

நான் சிரித்ததில் தூங்கிக் கொண்டிருந்த அம்மு எழுந்து சிணுங்கத் தொடங்கிவிட்டார்.

என்ன உங்க புருஷனுக்கு ரெண்டாவது பொண்டாட்டி வந்துட்டாங்களாமே என்று நண்பர்கள் கேலி செய்யும் அளவுக்கு அவரின் புது மொபைலோடு பொழுதைப் போக்குகிறார். ’இது வரை உனக்கு இத மாதிரி செமயா ஒரு காலர் ஐடி கிடைச்சதில்ல. கால் பண்ணி கேட்டுப்பாரு’ன்னார். அது warning it’s ur wife என்று அடித் தொண்டையில் அலறுது.

அப்பா மேல் அம்முவுக்கும் சதுவுக்கும் பயமும் இருக்கிறது. நான் என்னதான் கத்தினாலும்.. ம்ஹூம்.. ஆனால் அவர் கூப்பிடும் தொனி வைத்தே கோவத்தைப் புரிந்து கொள்வார்கள். அப்பாவிடம் பாசத்தோடு பயமும் இருப்பது நல்லதே. ஆனால் அதை பயம் என்று வரையறுக்க முடியாது. முடிவு அப்பாவுடையதென்பது போல, அப்பாவே எல்லாம் என்பது போல ஒரு வகையான.. எப்படிச் சொல்வதென்று தெரியவில்லை. உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள். அப்பாவை எப்படி உருக வைத்து காரியம் சாதிக்கலாம் என்று அவர்களுக்குத் தெரியும். சுருக்கமாகச் சொன்னால் அப்பா அவர்களுக்கு ஒரு தோழன்.

415 சம்மருக்கு சுவிஸ் போயிருந்த போது ’என்ன மச்சாள் அண்ணா கைல நீங்க வெள்ளில தாலி கட்டி விட்டிருக்கிங்களா’ன்னு நிலா கேட்டாள். இது அவர் கையில் எப்போதும் இருக்கும் செயின். இங்கே வந்த புதிதில் வாங்கினாராம். எப்போதும் கழுத்தில் ஒரு தங்கச் சங்கிலி போட்டிருப்பார்.

இன்னும் சரியாக ஒரு மணி நேரத்தின் பின் தூங்கிக் கொண்டிருப்பவரை எழுப்பி முதன்முதலாய் என் முகத்தில் முழிக்க வைத்து வாழ்த்துச் சொல்லி மிரட்டி அவருக்கான புது நாளைத் தொடங்க வைக்கப் போகிறேன். இம்முறை அவருக்கு அம்மாவின் ஆசீர்வாதமும் ஸ்பெஷலாக கிடைப்பது மனநிறைவாக இருக்கிறது.

லவ்யூப்பா.. பிள்ளையார் எனக்கு எல்லாமும் ஆன உங்கள் வழி எங்களைக் காத்துக்கொள்ளட்டும். என்றும் நீங்கள் இனிதே வாழ எல்லா வளமும் நலனும் துணை வரட்டும்.

23 April, 2011

எப்படி மறந்தேன்??

’எல்லாம் எடுத்து வச்சிட்டியா?’

கிளம்பும்போதும் அக்காச்சி நினைவாகக் கேட்டாள்.

‘வச்சிட்டேன் அக்காச்சி. கொஞ்சம் இருட்டா இருக்கு தனியா போறது பயமில்லையா’

1998. இதே திகதி. அதிகாலையில் ப்ரசிடண்ட் ஹோட்டல் நோக்கிப் போய்க் கொண்டிருந்த காருக்குள் நான் கேட்ட கேள்விக்கு ஒரு சிரிப்பையே பதிலாய்த் தந்தாள். அங்கே ஹோட்டலில் எங்களுக்காக புக் செய்த அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டோம். அறை எண் நினைவில்லை. ஒரு காஃபி ஆர்டர் செய்து குடித்து முடிக்கவும் மேக் அப் உமன் வரவும் சரியாக இருந்தது. படபடவென்று அவர் மேக் அப்பை ஆரம்பிக்கப் பொழுதும் புலர்ந்தது.

இமை த்ரெட்டிங் செய்த போது பாதியிலேயே அழ ஆரம்பித்து அக்காச்சியிடம் கெஞ்சினேன். ’கொஞ்சம் பொறுத்துக்கடி’ என்றாள். முதல் நாள் மேக் அப் பற்றிப் பேச்சு வந்தபோது நடுவில் சேர்ந்திருக்கும் என் இமைகளை ஒரு கணம் பார்த்துவிட்டு ’அதை ஒண்ணும் பண்ணாதிங்க’ன்னு அவர் சொன்னதையும் சொல்லிப் பார்த்தேன்.’இப்டி பாதி இமையோட நீ இருக்க முடியாது’ என்று கண்ணாடியில் காட்டி சமாதானம் செய்தாள். இதைச் சொல்லி இப்போதும் சிரிக்கத் தவறுவதில்லை அவள். என் வாழ்க்கையில் நான் செய்த முதலும் கடைசியுமான த்ரெட்டிங் அதுதான்.

மீண்டும் காஃபி ஆர்டர் செய்தோம். புதியதான ஓர் உணர்வுப் பிசையல் வயிற்றுக்குள். பசித்தாலும் சாப்பிடப் பிடிக்கவில்லை. சாப்பிடச் சொல்லி அவளும் அடம்பிடிக்கவில்லை. இடைப்பட்ட நேரத்தில் தன் வேலையைத் தொடர்ந்து கொண்டிருந்தார் மேக் அப் உமன். நாள் போதாமல் இருந்ததால் எல்லா டிங்கரிங் வேலைகளும் அப்போதுதான் செய்தார். அவருக்கு ஒத்தாசையாக இருந்ததிலும், என் பதட்டத்தைக் குறைப்பதிலும் நேரம் போனதில் அக்காச்சி ரெடியாகவில்லை. எட்டு மணிக்குள் மணப்பெண் தயார்.  நல்ல நேரம் வந்ததும் அவர்கள் வந்து கூப்பிடும் வரை அறையிலேயே இருக்கச் சொல்லித்தான் காலையிலேயே அனுப்பி இருந்தார்கள். ஏன் இன்னும் யாரும் வரவில்லை என்ற பயமும் சேர்ந்து கொண்டது.

எட்டு மணி கடந்த சில நிமிடங்களில் தானும் ரெடி ஆகலாம் என்று அக்காச்சி சூட்கேஸைத் திறக்க கதவு தட்டப்பட்டது. மணப் பெண்ணை அழைத்துப் போகவென பெண்கள் வந்திருந்தனர். அவர்கள் மேக் அப் உமனின் திறமையை சரி பார்த்த நேரத்தில் நீ போ நான் இதோ வரேன் என்ற அக்காச்சி மீண்டும் சூட்கேஸ் பக்கம் திரும்பினாள். உடனேயே நான் எழுந்து இரண்டடி வைப்பதற்குள் ’அடியேய் எங்கடி என் ட்ரஸ்லாம்’ என்றவள் சூட்கேஸை கவிழ்த்துத் தேடியும் அதற்குள் அவளின் புடவை தவிர வேறெதுவும் இருக்கவில்லை. பரவிக் கிடந்த என் உடைகள் என்னைப் பார்த்துச் சிரிக்க, மலங்க விழித்த என்னை ’நீ போ நான் எப்டியாச்சும் வரேன்’ என்று விரட்டினாள்.

அக்காச்சி.. கல்யாண மேடை கண்ணில் படும்வரை எனக்கு நீ என்ன செய்யப் போகிறாயோ என்று அழுகையாய் வந்தது. பதிவுலகம் மேல் சத்தியமாகச் சொல்கிறேன்.. இது உண்மை. நான் ஒன்றும் உன்னை அடியோடு மறந்துவிட்டு அவரிடம் ஓடவில்லை. அதன் பின் சடங்குகளுக்கிடையே தலை உயர்த்தி உன்னைத் தேடியபோது, உன் வழக்கமான சிரிப்போடு என் கண்ணில் நீ பட்ட பின்னர்தான் எனக்கு முழுமையான சந்தோஷம் வந்தது. மேக் அப் லேடியும் லேட்டாகிவிட்டதால் அடுத்த வேலை என்று போய் விட கூறைப் புடவையை எனக்கு நீயே கட்டிவிட்டு, தலை அலங்காரம் எல்லாம் மாற்றிவிட்டாய். அதுவும் அவர்கள் கொடுத்த பத்தே நிமிடத்துக்குள். ’ஏண்டி என் பொட்டைக் கூடவா மறந்துட்டு வருவே’ என்றபடி காஜலால் பொட்டு வைத்துக் கொண்ட உன்னைப் பார்த்து மறுபடி அசடாகச் சிரித்தேன்.

கல்யாணம் என்று முடிவாகியும் கண்ஸ் நோர்வேயில் அகதியாகத் தஞ்சம் புகுந்து இருந்ததால் இலங்கை வர முடியவில்லை. இந்தச் சிக்கல் உள்ள எல்லோருக்கும் இருந்த ஒரே தீர்வு இந்தியா அல்லது சிங்கப்பூர் சென்று கல்யாணம் செய்வதுதான். எங்களுக்கு இந்தியா தேர்வானது. நாட்டிலிருந்த பாதுகாப்புக் கெடுபிடிகள் காரணமாக இலங்கையிலிருந்து வரவே மாட்ட்ட்டோம் என்று நினைத்துக் கடைசி நேரத்தில் எல்லாம் சரியாகி ஏப்ரல் 19ஆம் திகதி மாமியார், மச்சினர்கள் சகிதம் இந்தியா வந்து சென்னையில், பாலவாக்கத்தில்  ஒரு தூரத்து உறவினர் வீட்டில் தங்கி இருந்தோம். 21ஆம் திகதி கண்ஸ் நோர்வேயிலிருந்து வந்தார். நாள் பார்த்து, தாலிப் பொன்னுருக்குவது தொடங்கி, கல்யாணத்துக்கு வேண்டிய அத்தனை ஏற்பாடுகளும், ஷாப்பிங்கும் அன்று மாலையே ஆரம்பித்து 23ஆம் திகதி மாலைக்குள் முடித்தோம். மாலை ஐந்து மணிக்கு அக்காச்சி, அம்மா, அப்பா வந்து சேர்ந்தார்கள். அண்ணா, ரஜி வரவே முடியவில்லை. நாங்கள் கடைசிக் கட்ட ஷாப்பிங் முடித்து வர அவர்கள் வந்து பசியாறிக் காத்திருந்தார்கள்.

கல்யாணப் பொண்ணு பர்த்டேப் பொண்ணுக்கு என்ன பரிசு வாங்கி வந்தீங்க என்று யாரோ கேட்டதும்தான் எனக்கு அன்று அவளின் பிறந்த நாள் என்பதே நினைவு வந்தது. ‘அட.. ஏன் நீங்கள் சொல்லேல்ல’ என்ற கண்ஸை அசட்டுச் சிரிப்போடு பார்த்தேன். உடனேயே எனக்கென வாங்கிய புடவைகளில் ஒன்றை அவளுக்குக் கொடுக்கச் சொன்னார். சாம்பல் நிறத்தில் வானவில் வண்ணங்களோடு இருந்த பனாரஸைக் கொடுத்தேன். அதையே கல்யாணத்துக்கும் கட்டலாம் என்று வீட்டுக்கார அக்காவோடு உடனே போய் ரெடிமேட் பிளவுஸ் வாங்கி வந்தாள். என் சூட்கேஸில் அவளதையும் வைக்கச் சொல்லிக் கொடுத்தாள். எப்படி மீதியெல்லாம் மறந்து, புடவையை மட்டும் மறக்காமல் வைத்தேனென்று இன்று வரை எனக்குத் தெரியவில்லை.

என்னை மணவறைக்கு அனுப்பிவிட்டு, அவள் யாரையோ கடைக்கு அனுப்பி, ஒருவழியாக ரெடியாகித் தானும் வந்து கலந்துகொண்டாள். இன்று வரை அவளின் பிறந்தநாளோடு ஆரம்பிக்கும் கிண்டல் எங்கள் திருமண நாள் வாழ்த்தில் முடியும்.

’அண்ணா இவள் என் பர்த்டேவ மறந்தா கூட பரவால்லை. பொண்ணு வாங்கன்னு சொன்னதும் என்னையும் மறந்துட்டு எடுத்தா பாருங்க ஒரு ஓட்டம்’

’அதில்லைங்க.. அவளுக்கு பயம். எங்க கடைசி நேரத்திலை பொண்ண மாத்திடுவாங்களோன்னு. அதான் வேணும்னே மறந்திருக்கா’

‘அது மட்டுமில்லைண்ணா. அவ ரொம்ப ஆசப்பட்டு வாங்கின புடவையாம் அது. அத எனக்கு குடுக்க வேண்டியதாச்சேன்னு வேணும்னே செய்த சதி இது’

இப்படியாக வருஷா வருஷம் அலுக்காமல் அந்த நினைவுகளை மீட்டெடுப்போம். 1998 இல் இதே நாட்களில் நாம் இந்தியாவில் இருந்தது. குடும்ப நண்பர்களாய் இருந்தவர்கள் கல்யாண பந்தத்தாலும் இணைக்கப்பட்டது. இன்று நினைத்தாலும் என்றுமே திரும்பக் கிடைக்க முடியாத நாட்கள் அவை. கிண்டலும் கேலியுமாய்ப் பறந்தோடிய பொன்னான நாட்கள்.

꽃배경04 உனக்காக வந்த ஸ்பெஷல் வாழ்த்து.

பாசக்கார உறவுக்கு நன்றிகள்.

 

 

 

 

என் ச்செல்ல அக்காச்சிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். என்றும் நாங்கள் உன்னோடு. உன் வீட்டில் நீ ராணியானாலும் நம் வீட்டின் இளவரசி இன்றும் நீதான். குட்டிப் பெண்ணாய் உன்னை அண்ணாந்து பார்த்து அன்று மலைத்தது போலவே இன்றும் இருக்கிறேன். உன் வழிநடத்தல் என் பலம். எனக்கு எது நல்லது என்று என்னைவிட உனக்குத் தெரியும். எதுவாக இருந்தாலும் உன்னிடம் பகிர்ந்த பின் தான் அது முழுமை பெறும். எதையும் இலகுவாகப் பார்க்கப் பழகும்படி எனக்கு எப்போதும் நீ சொல்வாய். இந்தப் பாடல் கேட்டிருக்கியா?

..உலகத்தின் ஓரம் நின்று அத்தனையும் பார்த்திருப்போம்
நடப்பவை நாடகம் என்று நாமும் சேர்ந்து நடித்திருப்போம்
பல முகங்கள் வேண்டும் சரி மாட்டிக்கொள்வோம்,
பல திருப்பம் தெரியும் அதில் திரும்பிக்கொள்வோம் கதை முடியும் போக்கில் அதை முடித்துக்கொள்வோம்..

ஒரு நாளில் வாழ்க்கை இங்கே எங்கும் ஓடி போகாது
மறு நாளும் வந்து விட்டால் துன்பம் தேயும் தொடராது
எத்தனை கோடி கண்ணீர் மண் மீது விழுந்திருக்கும்
அத்தனை கண்ட பின்னும் பூமி இங்கு பூ பூக்கும்..

இனியாவது ஊரில் வசந்தம் வரட்டும். எல்லார் வாழ்வும் செழிக்கட்டும். லவ் யூ அக்காச்சி.

 

par j இப்போதும் அநேகமானவர்கள் நம்பாத ஒரே விஷயம் எங்கள் திருமணம் பெற்றவர்களால் முடிவு செய்யப்பட்டது என்பது. கண்ஸிடம் சொல்லி இருக்கிறேன். அடுத்த பிறவியில் எப்படியாச்சும் காதலிச்சுத்தான்பா நாங்க கல்யாணம் பண்ணிக்கணும். அண்ணன்கள் தடுக்க, மச்சினர் கொதிக்க, பெற்றவர்கள் திட்டித் தள்ள ஓர் அதிரடிக் கல்யாணம் பண்ணணும். ஒரு திருட்டு முத்தமாவது காதலர்களாய் நாம் கொடுக்க வேண்டும். ஒருவரை ஒருவர் பார்க்க முடியாமல் ஒரு நாளாவது அழ வேண்டும். கல்யாணத்தின் பின் காதல் என்பதைவிட கல்யாணத்தின் முன்னும் காதலித்துப் பார்க்க வேண்டும். அவர் ஒரு சிரிப்போடு அடுத்த பிறவியலும் எனக்குத் தண்டனையா என்றாலும் எனக்கு என்னவோ அந்த ஆசை இப்போதும் இருக்கிறது. இருக்கும்.

எங்கள் பத்தாவது திருமண நாளுக்கு நண்பர்களுக்குப் பெரிதாக விருந்து வைத்தோம். கேக் கட் செய்யும் முன்னர் எங்களை பார்ட்டி ஹாலில் இருந்த மாடிப்படி வழியாக இறங்கி வரச் சொல்லிக் கட்டாயப்படுத்தி அனுப்பி வைத்தார்கள். முன்னே அம்மு, அடுத்து அவர், நான், கடைசியில் சதுவென்று கை கோர்த்தபடி இறங்கி வந்தோம். கிட்டத்தட்டப் பதினைந்து படிகள் இறங்கி வரும்போது, நண்பர்களின் வாழ்த்துப் பாடல்களோடு பத்து வருட மண வாழ்க்கையைப் பட்டென்று திரும்பிப் பார்த்து வந்த உணர்வு, உறவென்று ஒருவரும் இல்லாத இடத்தில் அத்தனைக்கும் உடன் வரும் நண்பர்கள். அத்தனை பேருக்கும் கண்ஸ் மனதார நன்றி சொன்னபோது அதிகம் பேர் கண்கள் கலங்கிப்போய் இருந்தது.

வாழ்த்திய கையோடு என்ன விசேஷம் இன்னைக்கு என்று கேட்பவர்களுக்கு எதுவுமே இல்லை எல்லாம் வழக்கம் போல்தான் என்று பதில் சொன்னாலும் இந்த நாள் தரும் புத்துணர்வுக்கு இணையேதும் இல்லை. என் அன்புக் கண்ணாளா.. என் காதல் கணவா.. நீங்களில்லாது நான் வாழ்ந்திருப்பேன்.. ஆனால் இப்படி வாழ்ந்திருக்கமாட்டேன். லவ் யூ கண்ணா.

என் பிள்ளையாரப்பா.. எல்லோரையும் இன்பமாய் வாழ வை!!

28 October, 2010

கண(ள்)வரே..

நேற்று வீட்டுக்கு அவருடைய இரண்டு நண்பர்கள் வெவ்வேறு நேரத்தில் வந்தாங்க. வந்தவங்களுக்கு வீடெல்லாம் சுற்றிக் காட்டினார். இதிலென்ன அதிசயம் என்று நினைப்பவர்கள் (நினைக்காதவர்கள் அடுத்த பத்திக்கு எஸ்ஸாகாமல்) தொடர்ந்து படிக்கவும். இந்த வீடு ஒதுங்க வைப்பதென்பது எனக்கு மட்டும்.. ம்ஹூம்.. முடியவில்லை. ’ஒரு ஃப்ரெண்டு வந்தா கூட வாசலோட அனுப்ப வேண்டியது இருக்கு’ ‘நான் மட்டும் அசையாம இருந்தேன்னா என் தலை மேலவும் எதையாவது வச்சிட்டு போயிடுவேடி நீ’ இப்படியான வசனங்கள் அடிக்கடி கேட்கும் எங்கள் வீட்டில். பொறுத்துப் பார்த்துப் பொங்கி விட்டார் கண்ணாளன். திடீரென்று வீடு பெரியதாகிவிட்டது போன்ற உணர்வு. நடக்கும் போது எதுவும் காலை இடறவைல்லை. இருக்கும்போது இல்லை.. இருக்க இடம் தேட வேண்டியதில்லை சோஃபாவில். தேவையில்லாததென்று தான் கருதிய அத்தனை பொருட்களையும், (கவனிக்க.. பொருட்கள்) கடாசிவிட்டார். ஒவொரு நாளும் நான் வேலை முடிந்து வீட்டுக்கு வரும்போதும் வீடு எம்ப்ட்டியாகும் வேகத்தை கண்டு திகைத்துப்போவேன். எடுத்தது எடுத்த இடத்தில் வைக்கப்பட வேண்டும் என்பதில் தொடங்கி ஏகப்பட்ட ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸ். ’இப்போ பாத்தியா வீட்டை’ பெருமையோடு சொன்னவரிடம் ‘இதெல்லாம் முன்னாடி நான் செஞ்சப்போ கவலையே இல்லாம கிளறி வச்ச ஆள், இப்போ தான் அடுக்கி வைக்க ஆரம்பிச்சதும் அலப்பரைய பாரு’ என்றேன். ஒத்துக் கொள்வதற்கும் கொள்ளாததற்கும் இடைப்பட்டதாய் ஒரு ரீயாக்‌ஷன் கணவனால் மட்டுமே முகத்தில் காட்ட முடியும் போல.

ஒரு பர்த்டே பார்ட்டிக்குப் போயிருந்தோம். கை தவறி டீயைக் கொட்டி விட்டேன். சாரி (இது அந்த சாரி இல்லைங்க) ரொம்ப பிடிச்ச சாரி. ஆவ்வ்வ்வ்.. பாழாகிய கவலையில் அருகில் இருந்தவர்களின் ஆடைகளையும் அது நனைத்து வைத்ததை கவனிக்கவில்லை. அவர்கள் பலகாரங்கள் (உங்க ஊர்ல பட்ஷணமானா ஸ்வீட் காரம்னா சொல்விங்க?) எடுக்க போய்விட்டதால் தர்ம அடியிலிருந்து தப்பிவிட்டேன். விடுவாரா என்னவர். சாரிக்கு முதலுதவி செய்துவிட்டு சோகத்தோடு வந்தவளைக் கை காட்டி ‘பாலன்.. இதோ வரா உங்க  லெதர் ஜாக்கெட்ட நாசம் பண்ணவ’ என்று போட்டுக்கொடுத்துவிட்டு ஜூன் போனால் ஜூலை காற்றே என்று பாடிக் கொண்டிருந்தவரை ரசிக்க ஆரம்பித்தார். அதாவது அவர் பாடிய பாடலை.

ஒரு தடவை தங்கா அக்கா வீட்டில் பேசிக் கொண்டிருந்த பொழுது விஜய் அண்ணா சொன்னார்.

’நான் எப்போதும் தங்கா கிட்ட சொல்லி ஆச்சரியப்படுவேன். குணா கிட்ட எத கேட்டாலும் இருங்கண்ணா.. அவ கிட்ட கேட்டுட்டு சொல்றேன்னுதான் சொல்வார். நான் தங்கா கிட்ட கேட்டு சொல்றேன்னு சொன்னதில்லை’

’எப்டி என்கிட்ட சொல்விங்க. சொன்னாலும் நான் ஒத்துக்கணுமே. சுசி அப்டி இல்லை. அவர் என்ன சொன்னாலும் சரிம்பா. அந்த நம்பிக்கைல அவர் கேக்கறார்’

என்று தங்கா அக்கா பதில் சொன்னபோது மறுபடியும் முதல் பத்தியில் நான் சொன்ன ரீயாக்‌ஷன் அவர் முகத்தில். எதுவாக இருந்தாலும் என்னிடம் கேட்பார். இதை செய்யலாமா, இங்கே போகலாமா, அதை வாங்கலாமா என்று அவர் கேட்கும்போதே எனக்கு புரிந்துவிடும். அவருக்கு அதில் எவளவு விருப்பம் இருக்கிறதென்று. அதற்கேற்ப பதில் சொல்வேன். பிடிக்காவிட்டால் இன்ன காரணம் என்று சொல்லி அதன் பின் உங்கள் இஷ்டம் என்று முடித்துவிடுவேன். நான் மறுத்த,  தடுத்த  சந்தர்ப்பங்களை எண்ணித்தான் பார்க்க வேண்டும்.

கடையில் நின்று கொண்டு கால் பண்ணுவேன். ‘என்னப்பா கார்ட்ல காசே இல்லை’ என்று. இன்னொரு கார்ட் பேரை சொல்லி அதில இருக்கும் எடுத்துக்கோ என்பார். மறுபடி கால் பண்ணி அதோட கோட் சொல்லுங்க என்பேன். ’இவ கிட்ட கொஞ்சம் பொறுப்பா இருக்க சொல்லுங்களேன். செல்லப் பிள்ளை. குடுத்து வைச்சவ. மாசம் மாசம் பில்ஸ் செட்டில் பண்ண நான் படும்பாடு எதுவும் இவளுக்குத் தெரியாது. கடைல நின்னுட்டு கால் பண்றா. அவ கார்டோட கோட் கூட என் கிட்ட கேக்கறா’ தங்கா அக்காவிடமோ அக்காச்சியிடமோ குறைப்பட்டுக் கொள்வார். அவ்வப்போது எங்களின் நிதிப்பிரிவு பற்றி புரிய வைப்பார். கேட்டுவிட்டு மறந்துவிடுவேன். எப்படி அப்பாவின் பிள்ளையாய் வளர்ந்தேனோ அப்படி என்னவரின் முதல் பிள்ளையாய் வளர்ந்து கொண்டிருக்கிறேன். இப்படி இருப்பது தப்பென்று அதிலும் என்ன லோன், எங்கே, எவளவு போன்ற வீட்டின் நிதி நிலைமை கூடத் தெரியாத அளவுக்கு இருப்பது மிகவும் தப்பென்று தெரிந்தாலும் எல்லாம் அவர் பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கை பெரிதாக இருக்கிறது.

எங்கள் வீட்டிலிருந்து நாங்கள் செல்லும் அதிகபட்சமான தூரம் தங்கா அக்கா வீடு. அரைமணி நேர ட்ரைவிங். வரும்போது அவர் வண்டி ஓட்டும் நிலைமையில் இருந்தால் (!) இப்போதெல்லாம்  தூங்கிப்போகிறேன்.  ’என்னடி அங்க இருந்து வரும்போது தூங்கிடறே பரவால்லை. தூரம். உனக்கும் வயசாயிடுச்சு. அதுக்குன்னு பத்தே நிமிஷத்தில இருக்கிற ரஞ்சன் வீட்டுக்கு போயிட்டு வரும்போது கூடவா தூங்குவே’ தட்டி எழுப்பிக் கேட்டார். முன்பெல்லாம் தூங்கும்போது நான் ஏதாவது சொல்லிக்கொண்டே இருப்பேன். ம் கொட்டியபடி தூங்கிப் போவார். இப்போதெல்லாம் அவர் பேச ம் கொட்டுவது நானாகிப் போயிற்று. கேக்கரியான்னு கொஞ்சம் சத்தமாய் கேட்கும்போதுதான் உறங்கிவிட்டேன் என்று தெரிகிறது.

‘என்னடி நீ. எனக்கு முன்னாடி தூங்கிப் போறே. எனக்கு தூக்கமே இல்லை நைட் பூரா தெரியுமா’

‘இல்லப்பா நீங்க பேசினத கேட்டுட்டு தானே இருந்தேன். தூங்கலை நானு’

அவர் பின் தான் தூங்கினேன் என்பதில் உறுதியாக இருந்தேன். பிறிதொரு நாள் தட்டி எழுப்பி ‘இதோ பாரு.. தலைய கோது, முதுகை வருடு.. எதுனா செய்து என்ன தூங்க வச்சிட்டு நீ தூங்கு. இப்டி நீ முன்னாடியே தூங்கிப் போனா எனக்கு தூக்கமே வர்லடி’ என்று குழந்தையாய் சிணுங்கிய போது இனிமேல் முதலில் தூங்கக் கூடாது என்று நினைத்துக் கொண்டேன். இதனால்தான் முன்னோர்கள் முன் தூங்கி பின் எழச் சொன்னார்கள் போல. பாவம் என் கண்ணாளன். 

இன்று முதல் முதலாக அவர் என் அருகில் இல்லாத அவரின் பிறந்தநாள். லண்டனில் இருக்கும் மச்சினர் ஊருக்குப் போகப் போவதால் அவரை வழி அனுப்பப் போக வேண்டிய கட்டாயம். அதிகாலை ஃப்ளைட்டுக்குக் கிளம்புகையில், வாசலில் கிடைத்த அணைப்பில் ’தம்பிக்காகத்தான் போறேன் குஞ்சு (உங்க ஊர்ல செல்லம்) கவலைப்படாம இரு’ என்பதாய் அவர் மனம் தெரிந்தது. எனக்கு நேர் எதிர். உணர்வுகளை அதிகம் வெளிக்காட்ட மாட்டார்.

எல்லாரும் அவரை என்றும் இதுபோல் இன்பமாய் வாழ மனமார வாழ்த்துங்கள். அவருக்கு பிடிச்ச Manchester United சாங் ஒண்ணு பாத்திடலாம்.

அப்படியே இங்க போய் எனக்கு பிடிச்ச, இப்போ நான் கேட்டுட்டு இருக்கிற பாட்டையும் பாருங்க.

வர்ட்டா..

25 August, 2010

லுக்கு விடாதிங்கப்பா..

குடும்பமா வாக்கிங் போயிட்டு இருந்தோம். எப்போதுமே பாதிக் குடும்பம் முன்னாடி போயிட்டு இருக்கும். பின்னாடி வர பாதிக் குடும்பத்துல எப்ப்ப்ப்போதும் நானிருப்பேன். நம்ம நடையோட ஸ்பீடு அப்டி. என் ஸ்பீடுக்கு ஈடு கொடுத்து அப்பப்போ யாராவது கூட வருவாங்க. என்னவர் சொல்வார் ஒரு ஸ்டெப் வச்சிட்டு அடுத்தது வைக்க நீ தேட வேண்டியதில்ல.. தரை அங்கதான் இருக்கும்.. தைரியமா கால வைனு. இப்போ என் கூட அவர்தான் வந்திட்டு இருந்தார்.

“எனக்கு புது ஜாக்கிங் ஷூஸ் வாங்கணும்பா”

“இதுவே நல்ல புதுசா தானே இருக்கு”

“என்ன சொல்றிங்க நீங்க.. இது நான் இங்க வந்த வருஷம் வாங்கினது. இதோட பனெண்டாவது வருஷமா பாவிச்சுட்டு இருக்கேன். அதான் என்னால ஸ்பீடா நடக்க முடியலை தெரியுமா..”

இதுக்கு அவர் பதில் சொல்லைன்னாலும் பரவால்ல. இல்லைன்னா ஒரு ஜாக்கிங் ஷூவ பனெண்டு வருஷமா பாவிச்ச ஒரே ஆள் நீதாண்டின்னு சொல்லி இருந்தாலும் கூட பரவால்ல. ஒரு லுக்கு விட்டார் பாருங்க.. அதான்..

joggesko

<<<<<     >>>>>

இந்தியால இருந்து ஒரு பார்சல் வந்திருக்கிறதாவும், சைஸ் கொஞ்சம் பெருசா இருக்கிறதால் போஸ்ட் ஆஃபீஸ்ல வந்து தகுந்த ஆதாரம் காட்டி கலெக்ட் பண்ண சொல்லியும், ரெண்டு வாரத்துக்குள்ள எடுக்கலேன்னா உடமைக்கு நாங்க பொறுப்பு கிடையாது.. அப்டி ஒண்ணு இங்க வரவே இல்லைன்னு சொல்லிடுவோம்னும் ஒரு கார்ட் வந்திருந்துது எங்க ஊர் போஸ்ட் ஆஃபீஸ்ல இருந்து. அட நம்ம பதிவுலகவாசிங்க யாரோ தான் நமக்கு பார்ஸேல் அனுப்பி வைச்சிருக்காங்களோனு சட்னு குதிச்ச மனச அடக்கிட்டேன். நமக்கு யாரு.. வேணாம் விட்டுடலாம். ஒரு வேளை மாமா?? சான்ஸே இல்லை. கேக்காம அனுப்ப மாட்டார். அப்போ.. அதானா.. கண்ணாளனோட சர்ப்ரைஸாஆஆ.. திருவிழா வருது, ரெண்டு மூணு பார்ட்டிக்கும் போணும்.. நல்லதா சாரி இல்லை.. எல்லாம் அநேகமா ஒரு தடவை கட்டினதாதான் இருக்கு.. இல்லேன்னா பிளவுஸ் தைக்கலன்னு கொஞ்சம் ஓவராதான் புலம்பிட்டோமோ.. சரி.. அதான் வந்திடுச்சே இனிமே குதிச்சுக்கோன்னு மனச குதிக்க விட்டேன். அப்டியே ஃபோன் பண்ணி அவர் காதில விஷயத்தை விட்டேன். அவர் பேர்லதான் பார்ஸல் வந்திருக்கு. அவர் தான் போய் எடுக்கணும்.

பார்ஸல ஓபன் பண்ணா பெருசா ஒரு பாக்ஸ் முதல்ல எட்டிப் பாத்துச்சு.. புடவைக்கு எதுக்கு பாக்ஸ்லாம்.. ஓஹோ.. பொருத்தமா வளையல் கூடவே இருக்கும்போல.. அதான் உடையாம இருக்க பாக்ஸ்ன்னு நான் நினைக்குறத்துக்குள்ள குட்டியா ஒரு புக் ப்ரீத்தி புளூ லீஃப்னு எழுதினாப்ல.. அதேதாங்க.. டேபிள் டாப் கிறைண்டர்.. என் சோகத்தை அப்புறம் வச்சுக்கலாம்.. இப்போ மேல படிங்க.. இருந்தாலும் சின்னதா ஒரு ஆவ்வ்வ்..

”இது எப்போப்பா ஆர்டர் பண்ணிங்க..”

“போன மாசம் நம்ம விவேகானந்தன் அண்ணா இந்தியா போனார்ல.. அவர் கிட்ட சொல்லிவிட்டேன்”

”ஓ.. நான் கூட என்னமோ புடவைன்னு நினைச்சேன்பா. (காதில புகை தெரிஞ்சுது உங்களுக்கு?? அவர் கிரைண்டர்ல பிஸியா இருந்ததுல என்ன கவனிக்கல.. நான் சொன்னதையும் வ போ கவனிக்கல) இது நல்ல ப்ராண்டாப்பா”

”அப்டின்னுதான் அவர் சொன்னார்டி”

“இல்லப்பா பழசு ஸ்மித் கிரைண்டர்.. நான் இங்க வந்த வருஷம் வாங்கினது.. பனெண்டு வருஷமா பாவிச்சேன்ல. இதுவும் அப்டி இருக்கணுமே”

இதுக்கு அவர் பதில் சொல்லைன்னாலும் பரவால்ல. இல்லை ஒரு கிரைண்டர பனெண்டு வருஷமா பாவிச்ச ஒரே ஆள் நீதாண்டின்னு சொல்லி இருந்தாலும் கூட பரவால்ல. ஒரு லுக்கு விட்டார் பாருங்க.. அதான்..

Preethi_Blue_Leaf_Platinum

<<<<<     >>>>>

இது இங்க டிவில வந்த ஒரு ஆட்.. எனக்கு ரொம்ப பிடிச்சுதுங்க. குழந்தை அவ்ளோ க்யூட்டா இருக்கு.. நீங்களும் பாருங்க. இங்க caviar அவிச்சு.. bacon கூட லைட்டா பொறிச்சு ஒரு சாப்பாடு செய்வாங்க.. ம்ம்ம்ம்ம்.. ஊர்ல அம்மா மிளகாய்த்தூள், உப்பு கலந்து செஞ்சு குடுக்கிற பொறியல அடிச்சிக்க முடியாதுன்னாலும்.. இதுவும் நல்லா இருக்கும். அத விட ப்ரேக்ஃபாஸ்ட், லன்ச்கு சேர்த்துப்பாங்க முழு caviar.. வாயில கடுகாட்டம் கடக் கடக்னு கடிபடும். இப்போ நீங்க பல்லக் கடிக்கிற சத்தம் எனக்கு கேக்குது.. அதனால.. லுக்குகள் தொடரும்..

வர்ட்டா..

13 June, 2010

பரம ஃபுட்பால் ரசிகர்!!

mann ser fotball

- மேச் இருக்கிற நாள்ல குத்துக்கல்லாட்டம் இருக்கிற எனக்கு உடம்புக்கு முடியாம போய்டும். அதனால அவர் லீவ் போட்டுட்டு என்னையும் பசங்களையும் கவனிச்சுக்கணும்.

- கோல்னு கத்தற சத்தத்தில தூங்கிட்டு இருக்கிற பசங்க அலறி அடிச்சுட்டு எந்திரிச்சு என் தூக்கம், இல்லை வேலை கெட்டுப் போகும்.

- அப்டியே ஸ்லோமோஷன்ல எந்திரிச்சுட்டு கோல்னா ஒரு குதி குதிக்கிறது, மிஸ்ஸாச்சுன்னா அதையும் விட ஸ்லோவா உக்காந்துக்கிறது.

- சோஃபா நுனிக்கு வரதும் போறதும் பத்தாதுனு முகத்தில எக்கச்சக்க எக்ஸ்பிரஷன்ஸ் வேற.

- கீழே உள்ளது மாதிரியான சில பல காட்சிகள் மாமியார் வந்து நிக்கும்போது நடந்திருக்கு.

காட்சி 1 : யாருக்கோ எதுவோ ஆய்டுச்சாம்மா.. இல்லையே மாமி. ஏன் கேக்கறிங்க? இல்லம்மா.. இவன பாரு,, ஃபோன்ல யார் கிட்டவோ சோகமா பேசிட்டு இருக்கான்.

காட்சி 2 : நீ என் கிட்ட எதுவுமே சொல்றதில்லை. என்ன மாமி சொல்றிங்க? பாரு.. அவனுக்கு எதுவோ பிரச்னை. சண்டை போட்டுட்டு இருக்கான் ஃபோன்ல.

காட்சி 3 : உனக்கு நான் இங்க வந்தது ரொம்ப செலவாயிடுச்சு இல்லைப்பா.. அதோட இப்போ இந்த மருந்து செலவு வேற.. என்னம்மா சொல்றிங்க? நீங்க வரது எனக்கு செலவா என்ன?? பின்ன.. நேத்துலருந்து ஒரு மாதிரியா இருக்கே.. நீ சரியா பேசவும் மாட்றே.. என் பேச்சையும் சரியா கேக்க மாட்றே..

காட்சி 4 : ரூம்ல தூங்கிட்டு இருக்கிற மாமியார் அலறி அடிச்சுக்கிட்டு மாடிக்கு ஓடி வருவாங்க.. என்னம்மா, என்னப்பா ஆச்சு.. வீட்ல திருடன் வந்துட்டானான்னு கேட்டுக்கிட்டே.

- நாம யாரு.. கிங்குல்ல.. ரேஞ்சுக்கு நூற்றுக் கணக்கான ஃபோன்கள்.. சிரிப்பு + சத்தமா. அதுவே தோத்துட்டாலும் நூற்றுக் கணக்கான ஃபோன்கள். சோகம் + சத்தம் கம்மியா. இப்போ என்ன ஆச்சு?? இதில்லன்னா அடுத்த மேச்ல பாத்துக்கலாம்னு. தோக்கணும்.. அப்போதான் இன்னும் நல்லா விளாடுவாங்க. விளையாட்டுன்னா வெற்றி தோல்வி ஜகஜமப்பானு தத்ஸ் வேற.

- மேச் பாத்துட்டு இருக்கும்போது நானோ, பசங்களோ எது கேட்டாலும் மண்டைய ஆட்டிட்டு.. அப்புறமா நான் எப்போ சொன்னேன்னு அப்பாவியாட்டம் முழிக்கிறது.

- இவங்க (சமயத்தில நண்பர் குழாமும் கூட்டு சேர்ந்துக்கும்) கூச்சல் போதாதுனு டிவி சத்தம் அடுத்த ஊருக்கே கேக்கும்.

- ஃபுட்பால் பிடிக்காதவங்க மேச் டைம்ல வீட்டுக்கு வந்தா வேற வழியில்லாம அவங்களும் மேச் பாக்கணும்.

- நாங்க விசிட் போற வீட்டுக்காரங்க ஃபுட்பால் பிடிக்காதவங்கன்னா அன்னிக்கு நான் எவ்ளோ லேட்டா ரெடியானாலும் நோ கமண்ட்ஸ். இல்லைன்னா தெரியாதா இவ ரெடியாக லேட்டாச்சு, பசங்க கொஞ்சம் டயர்டா இருந்தாங்கன்னு  லேட்டா வந்தத்துக்கு சமாளிஃபிக்கேஷன்.

- டிவி ரிமோட் அவர் கண்ட்ரோல்லவே இருக்கும்.

- லைவ் மேச், ஹைலைட்ஸ், டெக்ஸ்ட்னு ஒரே மேச் பத்தி வித விதமா அலுக்காம பாக்குறது.

- மொபைல், லேண்ட்ஃபோன் எல்லாம் சுத்தி வச்சுக்கிட்டு ஃப்ரெண்ட்ஸ் கூட அப்பப்போ பேச்சு. அப்போ எனக்கு கால் வந்தா ஒண்ணு நான் வீட்ல இருக்கமாட்டேன் இல்லை குளிச்சிட்டு இல்லை தூங்கிட்டு இருப்பேன்னு சொல்லப்படும்.

- யார் பெத்த பிள்ளைங்களோ.. சரியா ஆடலேன்னா அநியாயத்துக்கு திட்டு வாங்குங்க. (கெ வா லாம் அள்ளு கொள்ளையா கேக்கும்)

- என்னமோ நான் அவர் பக்கத்துல உக்காந்த ராசிதான் அவங்க தோத்துட்டாங்கங்கிர மாதிரி என் கிட்ட மூஞ்சிய தூக்கி வச்சுக்கிறது.

- நான் மேச் ரிசல்ட் பத்தி பேசும்போது மட்டும் அட என் பொண்டாட்டி சமத்துங்கிறா மாதிரி பெருமையா ஒரு லுக்கு.

- ஃபுட்பால் மேச் டெலிகாஸ்ட் பண்ற அத்தனை  டிவி சானலும் வச்சிருக்கிறது பத்தாதுனு செண்டிங் க்ளியரா இல்லைன்னா கொடும் காலநிலைலவும் பப்ல போயி பாக்கிறது.

- மேச் பாத்துட்டு சமயத்தில டிவி ஆஃப் பண்ணாம தூங்கிடுறது, பல சமயம் நான் தூங்கிட்டு இருக்கும் போது மேச் போயிட்டு இருக்கும். அவங்க கமண்ட்ரி ஹை பிச்ல போம்போது கனவில நம்மள யாரோ கொலைவெறியோட துரத்திட்டு வர மாதிரியே இருக்கும்.

- வேலைல இருந்து அக்கறையா கால் பண்ணி சொன்னபடி மேச் டீகோடர்ல ரெக்கார்ட் பண்ண போட்டேனா, இல்லை அவர் செட் பண்ணிட்டு போன டைமர் வொர்க் ஆகுதா, இல்லை சானல் ஒழுங்கா வருதான்னு கேக்கிறது.

man-united

[ [ [ [ [ O ] ] ] ] ]

அன்பே.. ஆருயிரே.. என் அத்தான்.. முழுக்க முழுக்க உங்களுக்காகவே இன்றைய பதிவ எழுதி இருக்கேன். Football World Cup ஆரம்பிச்சும் நீ எனக்கு பிடிச்சது பத்தி எழுதலையேடின்னு நாளைக்கு நீங்க கேட்ர கூடாதுப்பா. அதான். சந்தோஷம்தானே.. எதோ நம்ம அறிவுக்கு எட்டின ஃபுட்பால் பத்தின விஷயங்கள எழுதி இருக்கேன்.

ManU-bilde இதானே ஃபுட்பால்.. மேச்னா இத சுத்தி ஆளுங்களும், அவங்கள சுத்தி இன்னும் நிறைய்ய்ய்ய்யா ஆளுங்களும் இருப்பாங்க. அவ்ளோதானே.. எனக்குத்தான் தெரியுமே..

 

எதாவது விட்டு போயிருந்தா சொல்லிடுங்க. இந்த வருஷம் மேல சொன்னதையும் விட புதுசா எதுனா நடந்தா அதையும் சேர்த்து இன்னொரு பதிவு எழுதிடறேன். அப்புறம் பாரதி அக்கா நேத்து ஃபோன் பண்ணி இருந்தாங்க.. நாளைக்கு ஈவ்னிங் ஷாப்பிங் போலாமான்னு.  உங்களுக்கே உங்களுக்கான இந்த ஸ்பெஷல் பதிவுக்கான அன்பு பரிசு எவ்ளோன்னு மட்டும் சொல்லிடுங்க. இவங்களுக்கு ஒரு பை சொல்லிட்டு வரேன் முதல்ல..

வர்ட்டா..

23 May, 2010

முறைக்காதிங்கப்பா..

காலேல எந்திரிக்க லேட்டாச்சேன்னு திட்டிக்கிட்டே (அட உங்கள இல்லேங்க.. அவளதான் திட்டிக்கிறா) ஒரு வழியா அரக்கப்பரக்க ரெடியாகி நான் கீழ வரவும் திறந்துடு சீசேம் சொல்லாமலே எங்க பெட்ரூம் கதவு திறந்து தூக்கம் வழியிற கண்ணோட கண்ணாளன் எட்டிப் பாக்கவும் சரியா இருந்துது. (யப்பா.. எம்மாம் பெரிய வசனம்.. அசத்திட்டேடி சுசி)

”என்னடி.. இன்னுமா நீ போகலை?????”

இவ்ளோ குட்டிக் கேள்விய எதுக்கு இப்டி அழுத்த்த்திக் கேக்கறார்னு பாக்கறிங்களா.. நான் வேலைக்குப் போய்ட்டேன்னு நினைச்சு ரூம விட்டு வெளிய வந்திருப்பார். என்ன பாத்ததும் ஷாக். (அதெல்லாம் இல்லை.. காலேலவே பேய் முகத்தில முழிச்சிட்டதால பயந்துட்டார்ங்க அவர்)

”அதில்லப்பா.. இப்போ இருட்டு ஆரம்பிச்சிடுச்சில்ல.. நான் வேற ஜன்னலாண்டை உக்காந்திருக்கேன்ல.. வெளிய இருட்டில இருந்து பாக்குறவங்களுக்கு வெளிச்சத்தில உக்காந்திருக்கிற என்ன அப்டியே  தெரியும்ல.. அதான் பாத்து பாத்து என்னய அழகுபடுத்திக்கிட்டதில கொஞ்சம் லேட்டாச்சு.. நாளைக்கு வழக்கத்த விட ஒரு ஒன் அவர் சீக்கிரம் எந்திரிக்கணும்.. எப்டிப்பா.. நான் அழக்கா இருக்கேனா??”

பதில எதிர்பார்க்காம கேள்விய அப்டியே விட்டுட்டு கார் கீய மட்டும் மறக்காம எடுத்துட்டு ஸ்டோர் ரூம் வழியா கராஜ்ஜுக்கு எஸ்ஸாகிட்டேன். கீ ஹால்டர் இருக்கிறது எங்க ரூம் பக்கத்தில. மறந்துட்டு மறுபடி போக முடியாதே.. ஏன்னா அவர் கண்டிப்பா முறைச்சிட்டு இருப்பார்னு எனக்குத் தான் தெரியுமே.

\\\\\/////          \\\\\/////          |||||          \\\\\/////          \\\\\/////         

தலைவலி, தொண்டைவலி, ஜலதோஷம், ஜூரம்.. எல்லாம் ஒண்ணா தாக்குதலை நடத்திடுச்சு. சோஃபால படுத்து ரெஸ்ட் எடுத்துட்டு இருந்தேன். என்னவர் டிவி பாத்துட்டு இருந்தார். அதாவது ஃபுட்பால் மேச்.

“சவுண்ட கம்மி பண்ணுங்கப்பா”

கம்மியாச்சு. அடுத்து ஃபோன் பேச ஆரம்பிச்சார்.

”அட.. இவ்ளோ ஒரு நல்ல சான்ஸ மிஸ் பண்ணிட்டாண்டா.. இரு.. அதான்.. அதான்.. அத்.. ஏய்.. எடு.. பாரு எங்க பாஸ் பண்ணுது லூசுன்னு.. இரு..அதான்.. அடி.. கோல்ல்ல்ல்.. செம கோல்டா மச்சான்.. இவன் இந்த கார்னர்ல இருந்து பாஸ் பண்ணும்போது மறுபடி சொதப்பிட்டான்னு நினைச்சேன்.. நல்லவேளை அவன் அங்க இருந்தான். ஹஹஹா.. ம்?? ஆமால்ல.. ஹொஹொஹோ.. இருந்தாலும் முத சான்ஸ் விட்டி..”

”ப்ச்”

தலை திருப்பி என்ன ஒரு லுக்கு..

“சரி மச்சான்.. வைக்கிறேன்.. சரி.. ஓக்கே ஒக்கே.. நீ சீக்கிரம் வா”

ஃபோன் வைக்கப்பட்டதும் நானும் நிம்மதியா உறங்க ஆரம்பிச்சே..

”அம்மாச்சி”

விலுக்னு முழிச்சுப் பாத்தேன். உறங்கல கிட்டத்தட்ட ஒரு பத்து நிமிஷம் தூங்கிட்டேன். அம்முவுக்கு இல்லை சதுருக்கு கம்பியூட்டர் கேம் விளாடும்போது என்னிக்கு ஒரே தடவைல காது கேட்டிருக்கு இன்னைக்கு கேக்க. நாலாவது அம்ம்ம்மாச்சிக்குத்தான் பதில் சவுண்டு விட்டா அவ கீழ இருந்து.

“என்னப்பா”

“அப்பா மொபைல் ரூம்ல இருக்கும் பாருங்க.. எடுத்துட்டு வாங்கம்மா..”

”என்னப்பா??”

போச்சுது போ. ஒண்ணு அவ கேம்ல அடுத்த லெவல் போக இன்னும் கொஞ்ச நேரம் இருக்கணும் இல்லை கேம சேவ் பண்ணிட்டு இருக்கா.

“அப்பா மொபைல்.. ரூம்ல.. இருக்கும் பாருங்க.. எடுத்துட்டு வாங்கடா..”

“எங்க இருக்குப்பா.. காணோம்”

“ரூம்ல தாண்டா.. டிவி முன்னாடி இல்லை பெட்ல.. இல்லேன்னா நைட் லாம்ப் பக்கத்..”

“ப்ப்ப்ச்ச்ச்.. எதுக்கு இங்க இருந்து கத்தறிங்க.. அதான் மத்த ஃபோன் இருக்கில்ல.. அதில இருந்து அவ மொபைல்க்கு கால் பண்ணி சொல்லலாம்ல”

“ஏய்.. என்ன சொல்றே.. மாடில இருந்து கீழ ரூம்ல இருக்கிற பொண்ணுக்கு ஃபோன் பண்ணணுமா நானு”

“அது கஷ்டம்னா நீங்களே கீழ போயி எடுத்துட்டு வாங்களேன். யாரு வேணாம்னா. உடம்புக்கு முடியலைன்னு படுத்துட்டு இருக்கிறவள கொஞ்ச நேரம் தூங்க விடறிங்களா பாருங்க”

“ஹலோ.. உடம்புக்கு முடியலைன்னா ரூம்ல போய் படுத்துக்கணும். இப்டி நடு ஹால்ல இல்லை. மறுபடி தூங்குறத்துக்கு முன்னாடி ரூம்ல போயி படுத்துக்கோ”

“நான் நோயாளி. எனக்கு முழு ரைட்ஸ் இருக்கு. இங்கதான் நான் படுத்துக்குவேன்”

“நல்லா படுத்துக்கோ.. யார் வேணாம்னா.. இன்னும் அஞ்சு நிமிஷத்தில ரமேஷ் வேற வரான்”

”எந்த குடை உங்களுக்கு பிடிக்குமோ அத எடுத்து வைங்க.. காலிங் பெல் சத்தம் கேட்டதும் உடனவே போயி பிடிச்சுடறேன்”

சொல்லிக்கிட்டே எந்திரிச்சு காஃபி டேபிள சுத்தி.. அவர் பக்கம் போகாம மாடிப் படிய நோக்கி மூவாயிட்டேன். ஏன்னா அவர் கண்டிப்பா முறைச்சிட்டு இருப்பார்னு எனக்குத் தான் தெரியுமே.

paraply

பி.கு:- யாராவது வீட்டுக்கு வராங்கன்னு சொன்னா

”அப்டியா.. ஓடிப் போயி குடையப் பிடி”

ன்னு சொல்றது எங்க வழக்கம். இப்போ அது கிண்டலா சொல்றதா ஆயிட்டாலும் அந்தக் காலத்தில ரெண்டு விஷயத்துக்காக இது வழக்கத்தில இருந்ததா அம்மம்மா சொல்வாங்க. ஒண்ணு பணம் படைச்சவங்க ஏழைங்க வீட்டுக்கு வரப்போ ஏழைங்க மரியாதைக்காக ஓடிப் போயி குடை பிடிச்சு ரோட்ல இருந்து வீட்டுக்கு கூட்டிட்டு வருவாங்களாம். ரெண்டாவது சில பணம் படைச்சவங்க குடை பிடிக்கன்னு கூடவே  ஒருத்தங்கள கூட்டிட்டும் வருவாங்களாம். இப்போ ரெண்டுமே  வழக்கத்தில இல்லாம போயிட்டாலும் நாங்க இன்னமும் பேச்சு வழக்கத்துல வச்சிருக்கோம்ல..

முறைப்புக்கள் தொடரும்..

வர்ட்டா..

24 April, 2010

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்..

அவன் நண்பன் வீட்ல இருந்தான். அவனைப் போலவே பட்டு வேஷ்டி சட்டையில இருந்த நண்பன் அப்பா கிட்ட பேசிட்டு இருந்தான். எல்லாரும் கோயிலுக்கு போக ரெடி ஆயிட்டு இருந்தாங்க. நண்பனோட ரெண்டாவது தங்கை அப்பா கிட்ட கையில ப்ரேஸ்லட் கட்டி விட சொல்லி ஹெல்ப் கேட்டா. அவரும் எந்திரிச்சு கொக்கிய மாட்டிக்கிட்டிருந்தார். அப்போதான் கவனிச்சான். இத்தனை நாளா எப்டி கவனிக்காம போனோம். தினமும் பாக்கிறதால தெரியலையா. குழப்பம். கொஞ்சம் அதிர்ச்சி. இல்ல. நம்பி பழக விட்டிருக்காங்க. இது தப்பு. கவனமா இருக்கணும் இனிமே. கட்டாயமாக பார்வையை அவளிடம் இருந்து திருப்பிக் கொண்டான். புது ட்ரஸ் போட்டுக் கிட்டு திருவிழாவுக்கு போற சந்தோஷம் அப்டியே முகத்தில தெரிய தேவதை ரேஞ்சுக்கு இல்லேன்னாலும்.. எதுவோ ஒண்ணு இவ கிட்டவும் இருக்கத்தான் செய்யுது. நினைத்துக் கொண்டான், அதன் பின் அவன் அதை மறந்தே போனான். (இருந்தாலும் காலம் அதை மறக்கல. தப்புக்கு தண்டனை வழங்க காத்துக்கிட்டு இருந்துது)

)()()()()(

பைக் சத்தம் கேட்டது.. வரார் ஹீரோ.. நினைத்துக் கொண்டாள். ஆமாம். இப்போ ஆள் இன்னும் அழகா வந்து ஹீரோ மாதிரித்தான் ஆயிட்டாரு. என்ன இது?? அண்ணன்களோட நண்பன்.. இப்டில்லாம் நினைக்க கூடாது. இது தப்பு. முதல்ல படிக்கணும். ஆனா அன்னிக்கு அவங்க மான் குட்டிய கொண்டு வந்து காட்னப்போ அது ஓடாம பிடிச்சுக்கன்னு என் கையையும் சேர்த்து அவர் பிடிச்சப்போ ஜில்லுன்னு எதுவோ ஆச்சுதே?? இனிமே கவனமா இருக்கணும். அவனுடன் பேசுவதை முடிந்த வரை குறைத்துக் கொண்டாள். போராட வேண்டிய தேவை எதுவும் இல்லாமல் தோன்றிய எண்ணம் தானாக மறைந்து போனது. அதன் பின் அவள் அதை மறந்தே போனாள். (இருந்தாலும் காலம் அதை மறக்கல. தப்புக்கு தண்டனை வழங்க காத்துக்கிட்டு இருந்துது)

)()()()()(

இந்தியாவுக்கு விடுமுறைக்கு வந்த அவன், அம்மாவையும் இலங்கையிலிருந்து கூப்பிட்டிருந்தான். அம்மா கேட்டாங்க.. “ஏம்பா அங்கிளோட ரெண்டாவது பொண்ண உனக்கு பேசி முடிக்கலாம்னு இருக்கேன். நல்ல பொண்ணுதானே. நீ என்ன சொல்றே..” “நீங்களா கேட்டிங்களா” “இல்லப்பா.. அவங்க உறவில யாராவது நல்ல பொண்ணு இருந்தா பாக்க சொல்லி உன் ஜாதகம் கொடுத்தேன். அவர் தன்னோட ரெண்டாவது பொண்ணுக்கு பாக்கலாமான்னார். நான் உன்ன கேட்டு சொல்றதா சொல்லி இருக்கேன்” “அவங்களுக்கு சம்மதம்னா எனக்கும் ஓக்கேதான்.” அவளுக்குன்னு ஒரு புடவை ஸ்பெஷலா அம்மா கிட்ட வாங்கி குடுத்தான். அம்மா சந்தோஷமா ஊருக்குத் திரும்பிப் போனாங்க.

)()()()()(

பள்ளியில அன்னிக்கு இலவச சீருடை வழங்கினதால அவ கிளாஸ்ல மொத்தமா வந்திருந்த முன்னூத்தி சொச்ச பசங்களையும் ஒரு வழியா உக்காத்தி வச்சிருந்தா. புது துணிய பாத்த சந்தோஷம் ஒவொரு பிஞ்சு முகத்திலேம். தலைவலியையும் மறந்து ரசிச்சுக்கிட்டே தொடர்ந்து வேலை பார்த்தவளை சக ஆசிரியர் கூப்டார். “எப்டித்தான் இந்த கஷ்டத்திலேம் சிரிச்சுட்டு உக்காந்திருக்கீங்களோ.. உங்க அப்பா வந்திருக்கார். போய்ப் பாருங்க.” “அய்.. டீச்சர் அப்பாஆஆஆஆ..” ஆரவாரம் போட்ட பசங்கள க்ளாஸ் லீடர பாத்துக்க சொல்லிட்டு அப்பா கிட்ட ஓடிப் போனா. “என்னப்பா இந்த நேரம்?? அண்ணா வந்திருக்காரா?? லீவ் போட்டுட்டு வரட்டுமா??” படபடத்தவளை சின்னச் சிரிப்பால அடக்கினவர் சொன்னார். “அதெல்லாம் இல்லம்மா. ஆண்டியோட ரெண்டாவது பையன உனக்கு பேசி முடிக்கலாம்னு இருக்கோம். நீ என்ன நினைக்கிறே..” நேரடியான கேள்வி. கொஞ்சம் கூட எதிர் பார்க்காததால அவள் அதிர்ச்சி வெளிப்படையாய் தெரிஞ்சது. தொடர்ந்தார் அவர்.. “அண்ணா அக்கா கிட்ட லெட்டர் மூலம் கேட்டாச்சு. அம்மா ரஜிக்கு முழு சம்மதம். நீ என்ன சொல்றே” “அவரு ரொம்ப கோவக்காரராச்சேப்பா. என் மேலயும் கோபப்பட்டுட்டார்னா??” சம்மதத்தை இந்த மாதிரியும் சொல்ல முடியும்னு காட்டிய சின்னப் பொண்ண நினைச்சு சிரிச்சுக்கிட்டே வீடு நோக்கி பைக்ல போயிட்டிருந்தார் அப்பா.

இண்டர்வல் முடிச்சு மறுபடி சீருடையில மூழ்கிப் போய் இருந்தவள தாய்மாமன் வகுப்பறைக்கே வந்து கூப்டார். முகம் பார்த்ததுமே அவளுக்கு புரிஞ்சிடுச்சு. “என்ன மாமா.. போற வழியில அப்பா சொல்லிட்டு போய்ட்டாரா??” “ம்ஹூம்.. இங்க வரும்போது சொன்னாரும்மா. அத்தையும் கூட வரேனாங்க. நாந்தான் இல்ல நான் பாத்துட்டு வரேன்னுட்டு வந்தேன். உன்ன பாக்கவே சம்மதம் சொல்லிட்டேனு தெரியுது. நான் இப்பவே போயி அத்தை கிட்ட சொல்றேன்”னு கிளம்பினார். “என்ன டீச்சர்.. முதல்ல அப்பங்காரன் வரார்.. இப்போ மாமங்காரன் வரார்.. என்ன நடக்குது இங்க” கிண்டல் பண்ண அதே சக ஆசிரியருக்கு “போங்க சார்.. நீங்க வேற.. முடிஞ்சா கொஞ்சம் வந்து ஹெல்ப் பண்ணுங்க.. ஸ்கூல் முடியிறத்துக்குள்ள மீதியையும் குடுத்து முடிச்சிடணும்”னு சொல்லிக் கிட்டே மறுபடி வேலையில் மூழ்கினாள். காலேலயே குண்டு விமானம் ரெண்டு சுத்து சுத்திட்டு போயிருக்கு. நாளை பள்ளி நடக்குமோ இல்லையோ.. கண்டபடி குழம்பிய மனச விட இன்னைக்கு நம்பி வந்த பிஞ்சு மனங்கள் வாடிப் போகாம சீருடை வழங்குறது முக்கியம்னு அவளுக்கு தோணிச்சு.

)()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()(

விதி வலியதுங்க. அதோட கூட்டு சேர்ந்து காலமும் காத்துட்டு இருந்துதா..

24.04.1998..

09:23 - 10:23 க்கு இடைப்பட்ட சுப நேரத்தில..

தண்டனைய நிறைவேத்திடுச்சு.

அதாங்க. நீங்க நினைச்சதேதான். அவனுக்கும் அவளுக்கும் கல்யாணம்.

சரியான தண்டனை தானுங்களே.. நீங்க என்ன சொல்றீங்க??

எனக்கும் என் அன்புக் கண்ணாளனுக்கும் இனிய திருமண நாள் வாழ்த்துக்கள சொல்லிக்கிறேன்.

பெற்றார், உற்றார், சுற்றம், சோதரம், நட்புனு சுத்திக்கிட்டு இருந்தவ, தன்னந்தனியா பக்கத்து வீட்டுக்கு போகக் கூட பயந்தவ என்னிக்கு தனியா ஃப்ளைட்டேறி வந்து இவர் கிட்ட சேர்ந்தேனோ அன்னிலேர்ந்து அத்தனையும் எனக்கு அவராய். கண்ணாளனாய், கண்ணனாய், பொறுக்கியாய், போக்கிரியாய், நண்பனாய், நாயகனாய் சமயத்துக்கேற்ப அவர் உறவு முறை மாறும். நண்பியோட அப்பா எப்போதும் சொல்வார். என் குணம்தான் அவருடைய பலம்னு. கேக்கும்போது பெருமையா இருந்தாலும் இதையும் நான் ஒத்துக் கிட்டுதான் ஆகணும். என்ன ஒவொரு படியா முன்னேற வச்ச முழுப் பொறுப்பும் அவரதுதான். நான் இருக்கேன்ல.. நீ செய். எப்போதும் எனக்கு அவர் சொல்றது. எங்களுக்கிடையான காதல், கோபம், குறும்பு, அன்பு எல்லாத்தையும் அப்பப்போ கொஞ்சம் கொஞ்சம் உங்க கூட பகிர்ந்துக்கிட்டேன்.. இனியும் அது தொடரும். 

j 055 

இந்த தடவை சனிக்கிழமைல வந்திருக்கிறதால கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கு. மாலை ஆறு மணிக்கு சின்னதா ஒரு பார்ட்டி.. எல்லாரும் வந்திருங்க. கண்டிப்பா சமையல் நான் தான். இதுக்கு அப்புறமும் வரவங்க நலத்துக்கு யாவரும் நலம் எந்த வகையிலேம் பொறுப்பு கிடையாது. இது எச்சரிக்கை இல்லை.. வேண்டுகோள்!!

வர்ட்டா..