Pages

  • RSS
Showing posts with label அம்மாச்சி. Show all posts
Showing posts with label அம்மாச்சி. Show all posts

26 October, 2011

காஃபி வித் அம்மு.

முன்னை விட ரொம்பவே மாறிவிட்டார் அம்மு. முதல் மாற்றம் ஷாப்பிங். முன்பென்றால் என் கையைப் பிடித்து இழுத்து, காலைக் கட்டி கடைக்கு உள்ளே போக விடமாட்டார். ஆனால் ஒரு போதும் அழுது அளிச்சாட்டியம் பண்ணியதில்லை. முடிந்த வரை தடுக்க முயற்சி செய்வார். அதனாலேயே நான் ஷாப்பிங் தனியாகப் போவதுண்டு. இப்போது எப்போது கடைக்குப் போவதென்றாலும் உடனேயே வருகிறார். உடையைப் பொறுத்தவரை முன்பு அவருக்கு வேண்டியதை நானே வாங்கி வரவேண்டும். ’எப்டிம்மா எனக்குப் பிடிச்சதை வாங்கினிங்க’ என்பதோடு சரி. இப்போது நான் ட்ரையல் ரூம் ஸ்டூலில் உக்கார்ந்திருக்க வேண்டியதுதான். அலுக்காமல் இதை போடவா, அது பொருந்துமா, எது நல்லாருக்கும் என்று தனக்கு வேண்டியதைத் தானே போட்டுப் பார்த்துத் தேர்வு செய்கிறார். என் கை கோர்த்து, தனக்குத் தெரிந்த ஃபாஷன் டிப்ஸை அள்ளி வீசியபடி அல்லது எதுவோ பேசியபடி கூட வரும் குட்டிப் பெண்ணோடு ஷாப்பிங் போவதென்பது எனக்கும் பிடித்த மிகவும் புதிய அனுபவமே.

104 ஐஸ்க்ரீம், hot dog, burger, hot chocolate இப்படி எதுவோ ஒன்றால் ஷாப்பிங்குக்கு சுபம் போடப்படும். நான் இருக்கும் மூடைப் பொறுத்து எனக்கு காஃபி ஆர்டர் செய்வேன். ’இன்னைக்கு நானும் காஃபி குடிக்கட்டுமா’ என்று கேட்டவர் தனியாக வேண்டாம் உங்களதில் டேஸ்ட் பார்த்துவிட்டு ஆர்டர் செய்கிறேன் என்றார். கூடவே ஒரு கேக்கும் வாங்கிக்கொண்டு உட்கார்ந்தோம். டேஸ்ட் பிடித்திருந்தாலும் அவ்ளோ பெரிய கிளாஸ் தனியாக குடிக்க முடியாதென்று சொன்னதால் இருவரும் ஷேர் செய்து கொண்டோம். இங்கு வந்ததுக்கு என் குட்டித்தோழியோடு தான் முதல் முதல் காஃபி குடித்திருக்கிறேன்.

போன வாரம் பள்ளியில் ஃபோட்டோ எடுத்தார்களாம். பாவம் என் செல்லத்துக்கு நல்லதாக ஒரு ட்ரஸ் கூட இல்லையாம். சரி என்று என் டீஷர்ட்டில் ஒன்றை குடுத்துவிட்டு இனிமேல உங்களுக்குத்தான் என்றேன். ஓடி வந்து கட்டிக்கொண்டார். இந்த சம்மரில் இருந்தே நான் போடாத என் டீஷர்ட்ஸ் சலவைக்கு வந்தது. கேட்டபோது பிடிச்சிருந்ததாம் எடுத்துப் போட்டுக்கொண்டாராம். என்னுடைய accessoriesக்கும் இதே கதிதான். ஆனால் அதிகமானவை ஏதோ ஒரு காரணத்தோடு உடைந்தே திரும்பி வருகின்றன. எங்காவது கிளம்பும்போது என் காலணிகளில் எதைப் போடலாம் என்று நான் நினைத்திருப்பேனோ எனக்கு முன்னே அது அம்மு கால்களில்.

எனக்கு கோவம் வரும்படியாக ஏதாவது சொல்கிறார்/செய்கிறார். அடுத்த நொடி ‘என் மேல கோவமா.. ஸாரிம்மா’ என்று ஓடி வந்து கட்டிக்கொண்டு உம்மா கொடுக்கிறார். முன்பை விட பொறுமை, புரிந்துணர்வு, விட்டுக் கொடுத்தல் போன்றவை கூடி இருந்தாலும் அவர் ரூமை ஒதுங்க வைப்பது மட்டும் இன்னமும் வரக் காணோம். சின்னச் சின்ன சமையல் கூட செய்து அசத்துகிறார். ’அச்சாக் குட்டியடி நீ’ என்று பொறுப்புணர்வைப் பாராட்டி சர்ட்டிஃபிக்கேட் கொடுத்த சில மணி நேரத்திலேயே ‘என்ன பிள்ளையம்மா நீங்கள்.. அம்மா இவளவு சத்தமா கத்துறன்.. கேக்காம இருக்குறிங்கள்’ என்றும் சொல்ல வைக்க அவரால் மட்டுமே முடிகிறது. இது சில சமயம் மாறியும் நடக்கிறது.

111 எங்கள் காரில் உறைந்திருந்த பனியில் அவர் எழுதியது இது. தமிழ் கற்பதில் நிறைய முன்னேற்றம். தானாகவே வீட்டுவேலை செய்துவிடுவார்.  புரியாதவற்றுக்கு மட்டுமே என்னிடம் உதவி கேட்பார். மீதி எல்லாம் தனக்குத் தெரிந்த வரையில் சமத்தாகச் செய்துவிடுவார். நாளை எல்லோர் வாழ்த்துகளையும் படித்துப் பார்க்க ஆவலாக இருக்கிறாராம் என்றும் எழுதச் சொன்னார்.

அவ்வப்போது எங்களை நிறுத்தி வைத்து உயரம் அளந்து பார்க்கிறார். இதில் அதிகம் மாட்டிக்கொள்வது நான் தான். அடுத்தபடியாக சதுவின் கன்னம். அது என்னவோ என்/சதுவின் கன்னத்தை கிள்ளி/வருடிப் பார்ப்பதில் இன்னமும் அலாதி இன்பம் என் தங்கத்துக்கு. இம் முறை நண்பர்களோடு பார்ட்டி வேண்டாமாம். யாருமே அவர் வகுப்பில் இந்த வருஷம் பார்ட்டி வைக்கவில்லையாம். அதனால் தனக்கும் தேவை இல்லை என்றார். இப்பொழுது குட்நைட் ஹக் கொடுக்க வந்தவர் ‘நீங்க எப்டித்தான் எழுப்பினாலும் சில சமயம் எந்திரிக்க மாட்டேன். அதனால எல்லாம் விட்டிட கூடாது. எப்டியாவது எழுப்பி கரெக்ட்டா பனெண்டு மணிக்கு விஷ் பண்ணணும்’ என்று சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்.

என் அம்மு இன்று போல் என்றும் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ என் அப்பன் துணை இருக்கட்டும்.

ஹாப்பி பர்த்டே லச்சு. லவ் யூ அம்மாச்சி.

26 October, 2010

என் குட்டித் தேவதை!!

’அம்மாச்சி.. இத வந்து இப்போ எடுத்து வைச்சிட்டு போறிங்களா இல்லையா.. எத்தனை தடவை சொல்றது கிச்சன்ல ஸ்கூல் பாக் வைக்காதிங்கன்னு’ என் சத்தம் வீடதிர ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு தடவையாவது கேக்கும். என் வாழ்க்கையில் நான் அதிகமா சண்டை போடும் ஒரே ஆள்.. என் அம்மாச்சி(உங்க ஊர்ல அம்மு). எங்களுக்கே சமயத்தில் சண்டை போடாதபோது சாப்பிட்டது செரிக்காதது போல் இருக்கும். கண்ணாளன் அடிக்கடி சொல்வது ’இதுங்க ரெண்டும் ஒரே நம்பர்ல இருக்கிறதும் போதும், போடற சண்டையும் போதும்’ ஆனால் என்னதான் சண்டையென்றாலும் அம்மா வேண்டும். எல்லாவற்றுக்கும்.

நவராத்ரி சமயம் கோயில் போனபோது வழக்கம் போல் என் முன்னே நின்றவரை வயிற்றை சுற்றி அணைத்தபடி சாமி கும்பிட்டேன். சாமி தெரியவில்லை. தன்னிச்சையாய் தலை உயர்த்தியும், பக்கவாட்டிலும் பார்த்து வணங்கினேன். எல்லோரும் அதையே சொன்னபோது தான் புரிந்தது. வளர்ந்துட்டாங்க. என் மூக்கு உயரம் வந்திட்டாங்க.

அப்படியே உருவத்தில் மட்டுமல்ல குணத்திலும் கண்ணாளன். பிடிவாதம், முன்கோபம், பொறுமையின்மை, எதையும் இலகுவாக எடுத்துக் கொள்வது. மீதிக்கு என் அக்காச்சி. நகைகள் பொன்னோ, பொய்யோ. பிடிக்காது. பொட்டு பிடிக்காது. அம்மா வாங்கும் உடைகள் பிடிக்கும், சொல்வதை போட பிடிக்காது. இருந்தாலும் தனியாக விளையாடும்போதோ, பாடும்போதோ, அம்மாவை சுற்றிச் சுற்றி வரும்போதோ அவரில் எங்காவது என்னையும் பார்த்துக் கொள்கிறேன்.

’அம்மா.. நீங்க போட்டிருக்கிற இந்த ட்ரஸ் ரொம்ப அழகா இருக்கு. இந்த தோடு, வளையல் எல்லாம். நான் வளந்ததும் அப்டியே எனக்கு குடுக்கறிங்களா??’

‘ஏம்மா.. இது பழசில்லை. அம்மா உங்களுக்கு புதுசா வாங்கி குடுக்கறேன்’

‘புதுசும் வாங்கி குடுங்க. பழசுன்னாலும் இதுவும் எனக்கு வேணும்’

கேட்டு வாங்கி வைப்பாரே தவிர எதுவும் போட்டுக்கமாட்டார். இந்த சம்மர் சமயம் என் டீஷர்ட்ஸ் நான் போடாமலே சலவைக்கு வந்தது. எப்படின்னு கேட்டால் ‘சும்மா போட்டுப் பாத்தேம்மா. சரியா இருந்திச்சு’ன்னு தன் அலமாரில எடுத்து அடுக்கி வைத்திருந்தா. என் காலணிகளும் தப்பவில்லை.

இப்போவே அக்காச்சி சொற்படி தம்பி நடக்க ஆரம்பித்தாயிற்று. அவருக்கு சாப்பாடு எடுத்து குடுப்பது, சாக்லேட் மில்க் செய்து கொடுப்பது போன்ற சின்ன சின்ன உதவிகள் செய்து கொடுப்பாங்க. அப்பாவிடம் ஐஸ் வைத்து காரியம் சாதிப்பதிலும் சமத்தோ சமத்து.

ஒரு நண்பி பொறுப்பே இல்லாம இருக்கா உங்க பொண்ணு என்பதாய் எதுவோ சொல்ல, பொறுப்பை வளர்ப்பதாய் நினைத்துக்கொண்டு நான் சிலபல அட்வைஸ்களை வாரி வழங்கியபோது சரியென்று நல்ல விதமாகத் தலையாட்டினார். என் பொண்ணுக்குப் பொறுப்பு வந்ததாய் எனக்கும் நிம்மதி. அடுத்த அரை மணியில் அதை சுக்கு நூறாக்கிவிட்டு ஓடியவரைப் பார்த்துக் கேட்டேன்.. இப்போதானே இவ்ளோ சொன்னேன்.. இப்டி பண்ணி வச்சிருக்கிங்க.. பொண்ணா நீங்க?? கேட்ட வாய் மூட முன்னர் பதில் வந்தது.. ஆமாம்.

குழந்தையாய் இருந்தபோது எடுத்த படங்கள், வீடியோக்கள் பார்ப்பதென்றால் கொள்ளைப் பிரியம். ஊர்க் கதைகள், என் சின்ன வயதுக் கதைகள் எல்லாம் கேட்டுக்கொண்டே இருப்பார். தோழிகளுக்குக் கூட அதை சொல்லச் சொல்லுவார். வகுப்பில் சமத்து. ஆசிரியர்களின் செல்லப் பெண். எதையும் முதலே செய்து முடித்துக் கொடுத்துவிடுவார். அது சரியா என்று திருப்பி பார்ப்பது கிடையாது. இந்த வகையிலாவது கொஞ்சம் பொறுமையை கற்றுக் கொடுக்கவென்று இன்னமும் முயன்று கொண்டு இருக்கிறேன்.

என் வீட்டுத் தேவதைக்கு இன்று பிறந்தாள். மனதார வாழ்த்துங்க.  என் அம்மாச்சி என்றும் இனிமையாய் வாழட்டும்.

தமிழில் இந்தப் பாட்டுத்தான் இப்போ அவங்க விருப்பம். ஐஷின் டான்சும் ஒரு காரணம்.