Pages

  • RSS
Showing posts with label தொடர் பதிவு... Show all posts
Showing posts with label தொடர் பதிவு... Show all posts

10 March, 2011

டார்லிங்ங்ங்..

முதல்ல என்னை தொடர் பதிவுக்கு அழைத்த கோபிக்கு நன்றியை.. இல்லை இல்லை.. நன்றிகளை சொல்லிக்கொள்கிறேன். என்னைப் பொறுத்தவரை தொடர்பதிவு எழுதுவதை விட தொடர யாரையாவது அழைப்பதுதான் அவ்வ்வ்வ்.. அப்படியே கோபி தன் பெயர்க்காரணம் சொன்ன பதிவை இங்கே சென்று படித்துப் பாருங்கள். சிரிப்புச் சுவை தூக்கலாக எழுதி இருக்கின்றார். மீண்டும் நன்றி கோபி.

இனி என் விஷயத்துக்கு வருவோம்.

navn

நான் பிறந்தது நவராத்ரி நேரம். அதுவும் சரஸ்வதிக்குரிய நாளில் பிறந்தேனாம். சரஸ்வதி கடாட்சம் கிடைக்கட்டும் என்று அம்மாவுக்கு கொள்ளை ஆசையாம். நல்லவேளை சரஸ்வதி என்று வைக்காமல் விட்டார்கள். நியூமராலஜியும் பார்க்கவில்லையாம். ஆனால் பின்னாளில் கூட்டெண் 5 வரும்படியாக எழுது என்று அப்பா சொல்லித் தந்தார். கல்யாணத்தின் பின் இனிஷியல் மாறியபோது அதையும் விட்டுவிட்டேன்.

எனக்கு என் பெயர் தவிர்த்து யாராவது செல்லப் பெயர் சொல்லிக் கூப்பிடுவது நினைவு தெரிந்த நாளில் இருந்து பிடிக்காது. எனக்கு நினைவு தெரியாத வயதுகளில் என்னை ச்செல்லமாக.. ரொம்பச் ச்செல்லமாக கூப்பிடுவார்களாம். ஒரு தடவை க மு வில் கண்ஸ் அம்மாவிடம் என் கூட சண்டை போட மேட்டர் சிக்காத நாளில் இது பற்றிக் கேட்டபோது அம்மா சொன்னார். ‘கூப்டோமே.. ஆனா நீங்க அதை சொல்லி கூப்ட முடியாதே’ன்னு. அப்போ கண்ஸ் வெக்கத்தோட சிரித்ததும், நான் அம்மாவை முறைத்த்த்ததும் இப்போதும் எனக்கு நினைவிருந்தாலும் கூடவே அவர் விதியும் சிரித்தது அப்போது யாருக்கும் தெரியவில்லை.

பக்கத்து வீட்டில் அம்மா உறவுமுறைப் பாட்டி ஒருவர். என்னை வெள்ளை ஆப்பம்னு கூப்பிடுவார். விடுங்க மக்கள்ஸ். அதான் பாட்டி என்று சொன்னேனே. அவர் கண்ணாடி கூட போட்டதில்லை. நான்காவது படிக்கும்போது போய்விட்ட பாட்டியோடு அந்தப் பெயரும் போய்விட்டது.

அம்மா வழி, அப்பா வழி உறவுகளில் அம்மாச்சி, செல்லம், ராசாத்தி இப்படியாக கூப்பிடுவார்கள். என் முன்னே பிறந்தவர்கள் அதிலும் குறிப்பாக ரஜி.. மாடு, எருமை, மூதேவி, சிலோங்கி (எதிலும் ஸ்லோ), சாக்குமூட்டை, நாய், பேய், பிசாசு, குரங்கு, சனியன் இப்படியாக இன்னும் பல பெயர்கள் சொல்லி அன்ன்ன்ன்ன்பா கூப்பிடுவார்கள்.

நண்பர்கள் நான் மேலே சொன்ன காரணத்தால் வேறு பெயர் சொன்னதில்லை. ஆனால் கஸின்ஸ், நண்பர்ஸ் அவ்வப்போது நான் இருக்கும் கெட்டப்புக்கு ஏற்ப வனிதா, மனிஷா, சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன், நயன் தாரா, ஷாலினி, ஜெனிலியா இப்போ லேட்டஸ்ட்டா டப்சி என்பது வரைக்கும் கூப்பிடுவார்கள். எல்லோரும் ஒரு தடவை உஸ்ஸ்ஸ்ஸ் சொல்லி கொண்டீர்கள்தானே. என்னுடைய ஒரு ஃபோட்டோ பார்த்த அப்பா லைட்டா ஐஷ்வர்யா ராய் ஜாடை தெரிவதாகச் சொல்லி ஐஷ் என்று கூப்பிட்டதைக் கேட்டும் இன்னமும் நான் உயிரோடு இருக்கிறேன் மக்கள்ஸ். எனவே அழுகை வேண்டாம். கொலைவெறி வேண்டவே வேண்டாம்.

ஐந்தாவது வரை என் பெயரில் யாரும் பள்ளியில் படித்ததில்லை. ஆறாவதுக்கு போனபோது அந்தப் பள்ளியில் எட்டாவதில் ஒருத்தர் இருந்தாங்க. எங்கள் ஊரில், சொந்தங்களில் மூவர் என் பெயரில் இருந்ததாக நினைவு. இங்கே வந்ததும் என் கலர் காரணமாக சாக்லெட் என்று கூப்பிடுகிறார்கள். அதை விட என் பெயர் இவர்கள் வாயில் படும்பாடு இருக்கிறதே.. கொடும்ம்மை.. இந்த ஊரில் என் பெயரில் யாருமே இல்லை. நான் மட்டும்தான். இங்கே இருப்பதே கொஞ்சம் தமிழர் என்பதால் இனிப் பிறக்கப்போகும் குழந்தைக்கு என் பெயர் யாரும் வைக்க மாட்டார்கள் என்ற பெரும் ஆறுதல் எனக்கு இருக்கிறது.

கண்ஸ் வீட்டில் இரண்டாவது பிள்ளை என்பதால் பெரியண்ணன் பேருக்குப் பொருத்தமாய் வைத்ததாக மாமியார் சொன்னார். அம்மு பிறந்தபோது எல்லாப் பொருத்தமும் பார்த்து மாமியாரே பெயர் வைத்தார். அழகு, லட்ஷணம் என்பதாகப் பொருள் வரும் அவர் பெயருக்கு. சதுவுக்கு என் சித்தப்பா வைத்த பெயர். எதிர்பாராமல் என் பிள்ளையாரின் பெயரே அமைந்ததில் அவ்வளவு சந்தோஷம் என்பதை விட எங்களோடு இப்போது இல்லாத சித்தப்பா நினைவாக அவர் பெயர் இருப்பது வரம்.

அம்முவும் சதுவும் என்னை அம்மா என்றுதான் கூப்பிடுவார்கள். அதிலும் அம்மு அம்ம்ம்மா என்று அழுத்திச் சொல்லும்போதும், என்னாம்மா என்று சதுர் அடிக்குரலில் சொல்லும்போதும் நான் சரணாகதி. என் கண்ணன் என்னை கண்ணம்மா, தங்கம்மா என்று உருக வைப்பான். உபரியாக டா, டி வேறு. கோவம் வந்தால் மட்டும் கண்ணாளனாகி முழுதாகப் பெயர் சொல்வான்.

இப்பொழுது நானும் சிலரை தொடருக்கு அழைக்கலாம் என்றால் கடைசிப் பத்தி தரும் இதம் வேறு யோசிக்க விடவில்லை. சும்மாவே கைகாட்டிவிடுவது சுலபமில்லை. அத்தோடு ஓரளவுக்கு எல்லோரும் எழுதி வேறு ஆகிவிட்டது. தொடர அழைப்பவர்கள் முன்பே எழுதி இருந்தால் எனக்கு அல்ல கோபிக்கு ஆட்டோவோ லாரியோ அனுப்பிக் கொள்ளுங்கள். என்னை மன்னித்துக் கொல்லுங்கள். விருப்பமும் நேரமும் இருந்தால் தொடர்ந்து எழுதுங்கள்.

என் உடன் பிறப்பு ப்ரியமுடன் வசந்த்

என் மனதிலிருந்து ப்ரியா

வெறும்பய ஜெயந்த்

வினு வினோத்

கூர்வாள் கயல்

மாணவன்

அக்கம் பக்கம் அமுதா கிருஷ்ணா

மனசு சே. குமார்

வர்ட்டா..

04 October, 2010

என் மன்னன் எங்கே!!

இலங்கையின் வன்னி மண்ணை ஆட்சி செய்த மன்னர்களில் கயிலைவன்னியனின் ஆட்சிக்காலத்தை வன்னி வரலாற்றின் பொற்காலமென்று சொல்லலாம். இவன் கயிலாயவன்னியன் என்றும் அழைக்கப்பட்டான். வன்னியர் என்றால் வலிமை மிக்கவர் என்று பொருள். வன்னியின் பனங்காமம் என்ற இடத்திலிருந்து 1644 ஆம் ஆண்டு முதல் 34 ஆண்டுகள் வலிமையான ஆட்சியை இம் மன்னன் நடத்தி வந்தான்.

இவன் ஆட்சிக்கு வந்ததில் இருந்து யாழ்ப்பாணத்தில் போர்த்துக்கேயரது ஆட்சியின் இறுதிக்காலம் வரை, 14 ஆண்டுகள் அவர்களுக்குப் பணியாது, திறை செலுத்தாது இருந்தான். அதேபோல் ஒல்லாந்தரது ஆட்சியிலும் தன் வாழ்வின் இறுதி வரை அவர்களுக்குத் தலை வணங்காது, திறை செலுத்தாது, யாழ்ப்பாணம் வருமாறு அவர்கள் விடுத்த கட்டளையை ஏற்காது உறுதியாக இருந்தான். இதனை ஒல்லாந்து ஆளுநர் Thomas Wantry தனது அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

வன்னிப்பகுதி ஏழு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு வெவ்வேறு மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்ட போதும் மாற்றாரினால் அச்சுறுத்தல் வந்த போதெல்லாம் இவன் தலைமையின் கீழ் அனைவரும் ஒன்று சேர்ந்து போரிட்டனர். ஏழு அரசுக்குள்ளும் இவன் அரசு பேரரசாக போற்றப்பட்டது. Robert Knox என்ற ஆங்கிலேயர் தமது இலங்கையின் வரைபடத்தில் இவனது ஆட்சிப்பகுதி தென்கிழக்கே கொட்டியாரம் என்ற இடத்தையும் உள்ளடக்கிப் பரந்து இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

கயிலைவன்னியன் தம் ஆட்சிப்பகுதியான யாழ்ப்பாணத்தின் மீது படையெடுக்கக் கூடுமென்று அஞ்சிய போர்த்துக்கேயர், வெற்றிலைக்கேணி என்ற இடத்தில் ‘பெங்சூற்றர்’ என்றும், ஆனையிறவு என்ற இடத்தில் ‘பைல்’ என்றும் இரண்டு கோட்டைகளைக் கட்டியதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இவன் கி.பி 1678 ஆம் ஆண்டு இயற்கைச் சாவு எய்தினான்.

hjemland k

O O O O O O O O O O O O O O O O O O O O

என்ன மக்கள்ஸ்?? அப்டி எல்லாம் நினைக்கக் கூடாது. நான் நல்லாத்தான் இருக்கேன். இது எப்பவோ ஒரு காலத்தில மரியாதைக்குரிய வெறும்பய அவர்கள் என்னை தொடர்ந்து எழுதச் சொல்லி கை கா(மா)ட்டி விட்ட ஒரு தொடர் பதிவு. அவர் அவரப் பத்தியே ”யோசிச்சு தான் சொல்லணும்... சீக்கிரமே சொல்றேன்..” அப்டின்றார். ஆனாலும் மன்னாதி மன்னன் என்று ஒரு தொடர் பதிவில பாபர் மன்னன் பத்தி நிறைய எழுதி இருக்கார். அப்படியே மன்னர்கள் வரலாறு மீண்டும் நினைவுபடுத்தப்படணும்னு இதை ஒரு தொடரா எழுதலாம்னு என்னையும் தொடரச் சொன்னார். அதுக்கு அவருக்கு மீண்டும் நன்றிகள். ஆவ்வ்வ்.. இனி நான் சிலரை தொடர வைக்கணும். அட.. அதுக்குள்ள அம்புட்டுப் பேரும் ஓடியே போய்ட்டாங்களே.. இருந்தாலும் ஓலை அனுப்புவோம்ல..

அதுக்கு முன்னாடி ஒரு விஷயம். என்ன செய்ய.. டிவின்னா யாரக் கூப்பிடப் போறேன்னு சொல்ல முன்னம் ஒரு ஆர்வத்தைக் குடுக்க ப்ரேக் விடலாம். பிளாக்ல.. இப்டித்தான். கொசுவத்தி சுத்தணும். இந்த மன்னன் ஆட்சி செய்ததா சொல்லப்பட்ட இடமான பனங்காமத்தில என் அத்தை ஒருத்தங்க கல்யாணம் செஞ்சு போயிருக்காங்க. வளர்ந்ததுக்கு அப்புறம் போர்ச் சூழ்நிலைகளால அதிகம் போக முடியலைன்னாலும் சின்ன வயசில அங்க போறப்போல்லாம் அரண்மனை சிதைவுகள் உள்ள ஒரு கோயிலுக்கு போவோம். பெரிய பெரிய தூண்கள், சுவர்கள் எல்லாம் காடு மூடி இருக்கும். அதுக்குள்ள ஒளிஞ்சு விளையாடுவோம். அதே போல மாபெரும் மன்னனான பண்டாரவன்னியனுக்கு அவனைக் கொன்ற ஆங்கிலேயத் தளபதியே அவன் வீரத்தைப் பாராட்டி வைத்த நடுகல் சின்னத்தை கற்சிலைமடு என்ற இடத்தில போய் பாத்திருக்கேன். இதை விட வன்னிப் பிரதேசத்தில ஆங்காங்கு குறு நில மன்னர்கள் ஆண்ட கோட்டைகளின் சிதைவாக கருதப்படுற இடங்களையும் பாத்திருக்கேன். சில இடங்கள் யாருமே போக முடியாத அளவுக்குப் பயங்கரக் காடா மாறிப் போச்சு. காடையே வீடாக்கி வாழ்ந்து வந்த விடுதலைப் புலி வீரர்கள் சில இடங்கள் பத்தி சொல்லி இருக்காங்க. இப்போ இதை எழுதும்போது அவ்வளவு பெருமையா இருக்கிறது அப்போ.. அங்க இருந்தப்போ தெரியலை எனக்கு. இனிமே போகும்போது படம் எடுத்துட்டு வரணும்.

சரி.. இப்போ நான் கை கா(மா)ட்டுறவங்க தொடர்ந்து எழுதுங்க.

சாளரம் கார்க்கி – குரு.. நின்று போன மொக்கை வர்மன் தொடர் நினைவிருக்காங்க??

பிரியமுடன் வசந்த் – ஸ்டார்ட் மீஜிக்.. கிளப்புங்கள் பட்டையை..

யாவரும் கேளிர் நர்சிம் – இலக்கியத்துக்கும் மன்னர்களுக்கும் நிறையத் தொடர்பு இருக்கு இல்லையா நர்சிம்.. அதான்..

வீட்டுப் புறா சக்தி – புறா விடு தூது.. தொடருங்க சக்தி.

கூர்வாள் கயல் – ஆவ்வ்வ்.. வாள்.. அதுவும் கூரா.. வீசுங்க பார்ப்போம்.

விஜி – சும்மா இல்லைங்க.. இவங்க இப்போ ’கிரேட்’ விஜியாம். வெல்கம் பேக் விஜி.. அசத்துங்க..

கண்டிப்பா எழுதுங்கப்பா.. ரொம்ப சுவாரசியமா இருக்கும். அனுபவம் சொல்லுது. சரியா..

வர்ட்டா..

29 July, 2010

நீ ரொம்ப கேள்வி கேக்கறே..

அல்லாரும் நல்லா இருக்கிங்களா மக்கள்ஸ்.. உங்க கிட்ட இப்டி கேட்டு எத்த்த்த்த்தனை நாளாச்சு.

விடுமுறை இன்னமும் ஒரு நாள் தான் பாக்கி இருக்கிறதால கொஞ்சம் மனசு சரியா இல்லை.. அதனாலதான் என் பயணம் பத்தி இன்னமும் எழுதல. கண்டிப்பா எழுதுவேன். அதுவும் தொடர் கதையா.  என் கிட்ட பத்து கேள்விகள அனுப்பி வச்சிருக்காங்க நம்ம சின்ன அம்மிணி ஒரு தொடர் பதிவு வடிவில. நான் தான் எப்போதும் கேள்வி கேப்பேன்னு ஒருத்தர் சொல்வார். இதுவும் கேள்விதானே. அதான் அவர் சொல்றத அப்டியே தலைப்பா வச்சேன். உங்கள சொல்லல அம்மிணி. இத தொடர நானும் சிலர கோத்து விடறேன். அம்மிணி சொன்னா மாதிரி நேரமும் விருப்பமும் இருந்தா தொடருங்க, தொடர வைங்க.

@சந்தியா.

@ப்ரியா.

@புன்னகை.

@சீமான்கனி

@கயல்.

1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

சுசி.

2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

சுசின்னு பேர் வைக்க பெருசா எந்த காரணமும் இல்லைங்க. அது என்னோட செல்ல பேரு மாதிரி. சின்ன வயசுல அப்டி கூப்பிடுவாங்க. அதனால் வச்சேன். அது உண்மையா என் பேருதான். ஆனா எனக்கு இன்னொரு பேரும் இருக்கு.. பாட்ஷா.. பாட்ஷா மாதிரி

3 )நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.

காலடி எங்க வச்சேன்.. சாளரம் வழியா என் ஃப்ரெண்டி புடிச்சு தள்ளி விட்டுட்டா.. தொபுக்கடீர்னு வந்து விழுந்துட்டேன்.

4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

ஒண்ணே ஒண்ணுதாங்க செய்தேன். போஸ்ட்டு போஸ்ட்ட்ட்ட்டா எழுதிப் போட்டேன்.

5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

உண்டு. ஏனாஆஆ.. என்னப் பத்தி மட்டும் எழுதணும்கிறதுதாங்க என் எண்ணமே. விளைவு.. நீங்க நலமா இருக்கிங்க தானே??

6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

என் மனத் திருப்திக்காக எழுதறேன். அது மூலமா உங்க அன்பை சம்பாதிக்க முடிஞ்சது நிறைவு.

7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

கண்ணே கண்ணு.. இப்போதைக்கு.   இன்னமும் ஒரு எட்டுப் பத்துக்கு சொந்தக்காரி ஆகும் எண்ணம் இருக்கு.

8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

உண்டு. எழுத தைரியம் இல்லை. அல்லாரும் என்னய பாருங்க.. பாத்திங்களா.. இப்போ சைகைல காட்னேனே.. அந்த பதிவர் தான்.  ஏன்னும் சொல்லணுமா.. இப்போ மறுபடி பாருங்க என்ன.. இதுக்குத்தான். யார் கிட்டவும் சொல்லிடாதிங்கப்பா.. நான் பாவம்.

9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..

அவ்வ்வ்.. பாராட்டலை. ஒருத்தங்க திட்டினாங்க. என் பதிவுக்குன்னா கூட பரவால்ல. அவங்க பதிவுக்கு கமண்ட் போட்டத்துக்கு. இங்க பாராட்டைப் பத்தி மட்டும் கேட்டிருக்கிறதால திட்டு பத்தி இதுக்கு மேல சொல்ல முடியாது.

10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...

ஆவ்வ்வ்வ்வ்.. இருங்க.. இன்னும் கொஞ்சம் அழுது மனச  தேத்திக்கிட்டு   சொல்றேன்.. முன்னாடி நான் குடுத்த டவல் வச்சிருக்கிங்க இல்லை.. என்னதும் எடுத்துட்டு வரேன்.. கிளம்பிடாதிங்க..

01 July, 2010

வித் அவுட் கரண்ட்..

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

.

26 May, 2010

கடவுளும் நானும்..

கடவுள் எனக்கு எப்ப பரிச்சயமானார்னு எனக்கு நினைவில்ல.. நினைவு தெரிஞ்ச நாள்ள இருந்தே எனக்கு அவர தெரியும். கோயில், கடவுள்னா  வெறும் கூட்டம், பஜனை, பிரசாதம் இல்லை. அதுக்கும் மேல எதுவோ  ஒண்ணுன்னு எப்ப இருந்து நினைக்க ஆரம்பிச்சேன்னு தெரில. எப்போதும் அம்மா கூடவே சுத்துனதால அவங்க செஞ்சத பாத்து நானும் சாமி கும்பிட ஆரம்பிச்சு அப்டியே வழக்கத்துல வந்துதா இதுன்னு எனக்கு புரியலை. ஆனா எனக்கு கடவுள் மேல நிறைய்ய்ய்ய்ய நம்பிக்கை இருக்கு. எப்போதும் என் வேண்டுதல் இதுவா தான் இருக்கும்.

கடவுளே.. எல்லாரும் நல்லா இருக்கோணும்.. ஒருத்தர்க்கும் ஒரு வருத்தமோ.. கஷ்டமோ வரக் கூடாது.. எல்லாரையும் நல்லபடியா பாத்துக்கோங்க.

இதுக்கு அப்புறம் தான் எனக்கான வேண்டுதல்  வரும். தேவை இருந்தா மட்டும். இல்லேன்னா நான் சாமி கிட்ட கேக்குறது இவ்ளோதான். இதனால தான் என் ப்ளாக் பேரு கூட யாவரும் நலமாச்சு.

எப்போதும் எங்க வீட்ல வெள்ளிக்கிழமை குடும்பமா கோயிலுக்கு போய் வருவோம். வந்து வீட்ல பஞ்சபுராணம் சொல்வோம். அப்பா தீபம் காட்டுவார். நான் இங்க  வர வரைக்கும் இது நடந்தது. தவிர விசேஷ நாட்கள்லவும் இது நடக்கும். பூஜை ரூம்ல ஒரு உண்டியல் இருக்கும். எதுனா வேண்டுதல்னா, யாருக்காவது உடம்புக்கு முடியலைன்னா உடன பணம் எடுத்து வைப்பாங்க அம்மா.

அம்மா வழி தாத்தாவ அப்புச்சின்னு சொல்வோம், அவர் குல தெய்வம் வைரவர். எங்க  வீட்டுக்கு  மூணாவது வீடு அப்புச்சி வீடு. அவங்க வீடு முன்னாடி வைரவர் கோயில். அங்க போம்போதும் வரும்போதும் ஒரு தடவை நின்னு வணக்கம் போட மறக்கிறதில்லை. பரீட்சைக்கோ, வெளியூருக்கோ, இல்லை எதுனா முக்கிய, நல்ல விஷயத்துக்கோ போக முன்னம் ஓடிப் போய் அவர ஒரு வணக்கம் வச்சுக்குவோம். அஞ்சாவது வரைக்கும் வைரவருக்கு பூமாலை கட்டி பாமாலை பாடுறது என் வழக்கம். அப்புச்சி எனக்காகவே நிறைய்ய பூக்கள் வளர்ப்பார். பக்கத்து வீடுகள்லயும் பூப்பறிக்க எனக்கு உரிமை கிடைச்சுது. அதனால அவருக்கு எப்போதும் பூவுக்கு குறைவில்லை. ஆறாவது வந்ததும் டியூஷன் போக ஆரம்பிச்சதால என் கோயில் தொண்டு குறைஞ்சாலும் நேரம் கிடைக்கும்போது மாலை கட்டி எடுத்துட்டு போக மறக்கிறதில்லை.

அப்பா கிராமத்தில அப்பப்பா குல தெய்வம் வீரபத்ரர். அப்பப்பா,அப்பாச்சி, இன்னும் சில அப்பா வழி உறவுக்காரங்களுக்கு சாமி வரும். வருஷத்தில ஒரு தடவை வீரபத்ரருக்கு திருவிழா நடக்கும். மடை போடுறதுன்னு சொல்வாங்க. நாலு ஜாம பூஜையோட காலேல பெரிய பூஜை நடக்கும். அங்கயே மரத்துக்கீழ நைட்டு பூரா இருப்போம். சமையலுக்கு பாவிக்கிற பானைங்க தொடக்கம் மீதமான அரிசி, காய்கறி, நேந்து விட்ட கோழி, ஆடுங்க வரைக்கும் மதியம் ஏலம் நடக்கும். அத்தனை உறவுக்காரங்களும் வந்து அவ்ளோ சந்தோஷமா இருக்கும். இப்போ அடுத்த தலைமுறையா அத்தை, சித்தப்பாவுக்கு சாமி வருது. அப்பாவுக்கும் ஒரே ஒரு தடவை வந்துதாம். நான் இங்க வந்ததுக்கு அப்புறம்.

எம் மதமும் சம்மதமே கொள்கை எங்களது. எங்க ஊர்ல முன்னாடி முஸ்லிம்கள் இருந்தப்போ பள்ளிவாசல் கடந்துதான் நாங்க நிறைய இடத்துக்குப் போக வேண்டி இருந்துது. அப்டி போம்போது அல்லானு மனசுக்குள்ள ஒவொரு தடவையும் நினைச்சுப்பேன். பீச்சுக்கு போறப்போல்லாம் தேவாலயம், மாதா கோயில் போய் மெழுகுவத்தி ஏத்த மறக்கிறதில்லை. குழந்தை யேசுவுக்கு வேண்டுதல் வச்சு அம்மா பன், பிஸ்கட்னு வாங்கிப்போய் குடுப்பாங்க. அதை விட கொஞ்சம் தூரத்தில பிள்ளையார் கோயில். அவரையும் அப்பப்போ போய் பார்ப்போம்.

ஊர விட்டு போய் வேற ஊர்ல இருக்க வேண்டி வந்தப்போல்லாம் அந்தந்த ஊர் கோயில்களுக்கு வெள்ளியானா போவோம். சாய்பாபா பஜனை.. ஒரு தடவை யெகோவா பிரார்த்தனை கூட போனோம். நான் பதினோராம் வகுப்பு வேற ஊர்ல அப்பா ஃப்ரெண்ட் வீட்ல தங்கி படிக்க வேண்டி வந்தப்போ எனக்கு துணையா இருந்தது நாகபூஷணி அம்மன். செவ்வாய்க் கிழமை விரதம் இருந்து ஸ்கூல் போய் வந்து சாயந்தரம் பூஜைக்கு போவேன்.  ஒரு அம்மாதான் பூஜை செய்வாங்க. அவங்க சாமி வந்து அருள் சொல்வாங்க. அது தவிர யார் கிட்டவும் பேச மாட்டாங்க. வேப்பிலை, மஞ்சள் அரைச்சு விட்ட தண்ணிய ஒரு சொம்பு தலைமேல வார்த்து, கைல பூ குடுப்பாங்க. கோவில சுத்தி வந்து அம்மனுக்கு பூவை வைக்கணும். என்னோட மனசில இருக்கிற அத்தனை விஷயங்களையும் அம்மன் கிட்ட சொல்ல ஆரம்பிச்சேன். அப்போதான் கடவுள் எனக்கு ஃப்ரெண்டாயும் ஆனது.

முதல்ல அக்காவும், அப்புறம் எல்லாருமா அதே ஊருக்கு வந்தப்போ வாரம் ஒரு கோயில் போய் வருவோம். அந்த சமயம் ஒரு பெரிய பிரச்சனை எனக்கு வந்தது. மனசுக்குள்ள அழுதிட்டே ஒருநாள் வேண்டிக்கிட்டு இருந்தப்போ திடீர்னு வந்து சொன்னாங்க ”எதுக்கு கலங்கறே.. தெளிவா இரு. இதுல உன் தப்பு எதுவும் இல்லை”ன்னு. எனக்கு சிலிர்த்துப் போச்சு. கல்யாணம் பேசி முடிவானதும் ஊர் எல்லையில இருந்த ஐய்யனாருக்கு அப்பா வாழைத்தார் நேந்து வச்சிருந்தார். அம்மா வர முடியாததால நான் ரஜி கூட போனேன். மனசுக்குள்ள ஆரம்பிச்ச அழுகை ஒரு கட்டத்தில கண் வழியா பொலபொலனு கொட்ட ஆரம்பிச்சிடுச்சு. அங்கேயும் ஒரு அம்மாதான் பூஜை பண்ணுவாங்க. உடம்புக்கு முடியலைன்னு அவங்க அன்னைக்கு கோயில் வர்லை. அவங்க மகன் பூஜை பண்ணிட்டு இருந்தார். திடீர்னு விபூதி குடுக்குற சமயம் வந்து என் கைல நூல் முடிஞ்சு கிட்டே சொன்னாங்க ”எதுக்கு இந்த கலக்கம்? எல்லாம் நல்லதே நடக்கும். தெளிவா போ. ஐய்யனார் இருக்கார்ல. அதுக்கும் மேல உன் அப்பா இருக்கார்”ன்னு. நாங்க வீட்டுக்கு போனதும் எதோ அலுவலா வெளியூர் போய்ட்டு லேட்டா போன அப்பா கிட்ட சொன்னாங்களாம் “உடம்பு சரி இல்லைடா தம்பி. இருந்தாலும் ஐய்யன் என்ன கோயில் போன்னு சொன்னார். வந்தேன். உன் பொண்ணுக்காகத்தான்  சொன்னார்னு வந்ததும் தெரிஞ்சுக்கிட்டேன்” ன்னு. இப்போ நினைச்சாலும் மயிர் சிலிர்க்கும். 

மாத விலக்கு சமயத்தில எங்களுக்கு பூஜை ரூம் தவிர வீடு பூரா போய் வர முழு சுதந்திரம் இருந்துது. கிணத்துல தண்ணி எடுக்க மாட்டோம். வீட்ல யாருமில்லாதப்போ எதுனா எடுக்க பூஜைரூம் போக வேண்டிய கட்டாயம் வந்தா போவோம். அப்புறம் அம்மா மஞ்சத்தண்ணி தெளிச்சு கழுவி சுத்தம் பண்ணுவாங்க. உள்ள போனோம்கிறத சொல்ல மறந்த சந்தர்ப்பங்களும் உண்டு. பொதுவாவே நான் பசி தாங்க மாட்டேன். அதனால சனி பகவானுக்காக சில சமயம், நவராத்ரி சமயம் தவிர நான் விரதம் இருந்ததில்லை. எனக்கும் சேர்த்து அப்பா, அம்மா, இப்போ மாமியார் இருப்பாங்க.

இங்க வந்ததுக்கு வீட்ல செஞ்ச அதே வெள்ளி பூஜை செஞ்சிட்டு வந்தேன். என்னவர் சில சமயம் வருவார். பல சமயம் தனியா. அத்தோட வெள்ளி, மற்றும் விசேஷ தினங்கள், விரத காலங்கள்ல வெஜிடேரியன் சாப்டேன். என்ன ப்ராப்ளம்னா இங்க பெரும்பாலும் நண்பர்களோட விருந்தோ, விசிட்டோ வெள்ளிக்கிழமைதான் நடக்கும். எனக்காக அவங்க மெனுவ எக்ஸ்ட்ராவா பண்ண வேண்டியதாச்சு. எதுக்கு தேவை இல்லாத கஷ்டம் அவங்களுக்குன்னுட்டு கோயில் போனா வெஜ் போகலேன்னா நான்வெஜ்ங்கிற பாலிசிக்கு வந்துட்டேன். தனியா இருந்த பூஜை ரூம் பசங்க தனி ரூம்கு ஷிஃப்ட்டானதும் ஸ்டோர் ரூம்கு ஷிஃப்ட் ஆயிடுச்சு. கெஸ்ட் ரூம பூஜை ரூமா பாவிக்கிறதில எங்களுக்கு உடன்பாடில்லை.  விசேஷ நாள்ல தேவாரம் சொல்லி வேண்டிக்குவோம் எல்லாருமா. மத்தபடி நாந்தான் தினமும் குளிச்சதும், தூங்க முன்னும் பூஜைரூம் போவேன். மாமியார் வரும்போது விரதம் இருந்தா சமைக்க, மாமனார் திதி, இல்லை கோயிலுக்கு எதுனா பிரசாதம் செஞ்சு எடுத்துட்டு போகன்னு கட்டிங் பிளேட் தொடக்கம் அத்தனையும் தனியா வெஜ் சமையலுக்குன்னு வச்சிருக்கேன்.

ஊருக்கு போனப்போ முதல்ல போறது கோயில்தான். இங்க ஒரு பிள்ளையார் இருக்கார். ஏழுமலை ஆனந்த சித்தி விநாயகர். இப்போ அவர்தான் எனக்கு எல்லாமே. 21ம் தேதில இருந்து அவருக்கு வருடாந்திர பத்து நாள் திருவிழா ஆரம்பம். நாங்க முதல் நாள் பூஜை உபயம் எடுத்திருக்கோம்.

pillaiyaar

என்னவருக்கும் நம்பிக்கை இருக்குன்னாலும் அவர் மனமுருகி கும்பிட்டு நான் பாத்ததில்லை. ஆனா புதுசா வண்டி வாங்கினா முதல்ல கோயில் தான் போவோம். கெட்ட கனவு கண்டேன் சாமிக்கு காசு எடுத்து வைக்கிறியாம்பார். எப்பவுமே பரீட்சை, தவிர முக்கியமான எதுனா, முதல்ல பிள்ளையார் சுழி போட்டு எழுத ஆரம்பிக்கிறது மட்டுமில்லாம சட்னு ஒரு தடவை கடவுளை மனசுக்குள்ள நினைச்சுக்கிறது என் வழக்கம். கோயில் போய் வந்தா என்னவோ ஒரு நிம்மதி. கொஞ்ச நேரம் பொறுப்பை எல்லாம் சாமி கிட்ட ஒப்படைச்சுட்டதா ஒரு இலகுவான மனநிலை. எல்லாம் அவர் பார்த்துப்பார்ன்ற திருப்தி. தலையணையில தலை சாய்க்கும்போது எப்போதும் சொல்வேன் அம்மாளாச்சி, தெய்வமே, முருகா, என் பிள்ளையாரப்பா எல்லாரையும் காப்பாத்து.. அதே வேண்டுதலோடவே எந்திரிப்பேன்.

கண்ணுக்குத் தெரியாத ஒரு சக்தி எனக்குத் துணையாய் எப்போதும் என் கூட இருக்கிறதான அந்த நினைவு எனக்கு வேண்டி இருக்கு. பசங்களுக்கு கோயில்னா பூஜை முடிஞ்சதும் ஓடி விளையாடுற,  ஃப்ரெண்ட்ஸ் யாரும் வராத நாட்கள்ல உலகத்திலயே போரான ஒரு இடம்.  அவ்ளோதான். நான் அவங்க கோயிலுக்கு வரணும்னு விரும்புவேன். சமயத்தில அப்பா கூட பிளான் பண்ணி முக்கா குடும்பமும் மட்டம் போட்றுவாங்க. நான் தனியா போய் வருவேன். என் கடவுள் நம்பிக்கை பத்தி அவங்களுக்கு சொல்வேன். பணம் எடுத்து வைக்கிறது உட்பட. ஆனா நம்புறதும் விடுறதும் அவங்க இஷ்டம்.

இம்மாம் பெருஸ்ஸா எழுதிட்டேன். திட்டணும்னா சின்ன அம்மிணிய திட்டுங்கப்பா.. அவங்கதான் தெரியாத்தனமா என்னய இத எழுத சொன்னாங்க. அம்மிணி.. எழுத ஆரம்பிச்சதும் நிறைய்ய விஷயங்கள் நினைவுக்கு வந்து தொடர் பதிவே தொடர் பதிவு ரேஞ்சுக்கு ஆகி போச்சு. இருந்தாலும் எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயத்தை எழுத வைச்சத்துக்கு நன்றி.

சீமான் கனி, , அப்பாவி தங்கமணி, இயற்கை ராஜி, மங்குனி அமைச்சர், ஜெய்லானி  நீங்க இந்த தொடர தொடரணும்னு கேட்டுக்கிறேன்.

வர்ட்டா..