Pages

  • RSS
Showing posts with label என் குடும்பம். Show all posts
Showing posts with label என் குடும்பம். Show all posts

27 November, 2012

வெள்ளைப் பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே..

என்னவோ ஒரு எரிச்சல்.. கோவம்.. தேவை இல்லாத பதட்டம்.. அது பயமோன்னு கூட சமயத்தில டவுட்டா இருக்கும்.. இத்தனூண்டு விஷயத்துக்குக் கூட கத்தணும் போல.. எதுவுமே பேசாம இருந்தா தேவலை போல.. ஒருவித ஆற்றாமை அழுத்த..

இப்டியெல்லாம் எனக்கு மட்டும் தான் இருந்ததுன்னு நினைச்சேன்.. நேத்து அக்காச்சிட்ட பேசினப்ப அவளுக்கும் இதே போல இருந்ததா சொன்னா.. எல்லாத்துக்கும் விடை தலைவரின் பிறந்தநாளும் தொடர்ந்து வந்த மாவீரர் தினமும்னு புரிஞ்சது.. கடகடன்னு நடந்து முடிஞ்ச அத்தனையையும் மீட்டுப் பார்த்தோம்.. உலகம் போற்றியவர் இறப்பென்றது பலர் தூற்றும்படி ஆகி இருக்க வேணாமேன்னு இருந்திச்சு.. என்ன இருந்தாலும் எங்க தலைவர் போல இனி ஒருத்தர் எங்களுக்குக் கிடைக்கவேமாட்டார்னு உறுதியா சொல்லிக்கிட்டோம்.. அதுவரைக்கும் அலைஞ்சுட்டு இருந்த மனசு கொஞ்சம் அமைதியாச்சு.. ஆனாலும் சரியா தூங்கமுடியலை..

அப்படியே உறக்கமும் விழிப்புமா புரண்டு புரண்டு படுதிட்டிருந்தவ கடைசியா நேரம் பாத்தப்ப ரெண்டு பதினாலு.. திடீர்னு கேட்ட சத்தம் மாம்சோட மொபைல்னு அடையாளம் புரிஞ்சப்ப பதைப்போட முழு விழிப்பு வந்திடிச்சு.. நேரம் நாலேகால்.. அவருக்குத் தெரிஞ்சவங்க.. புகலிடம் தேடி வந்தவங்க.. இலங்கைக்குத் திருப்ப அனுப்பறதுக்காக போலீஸ் கூட்டிப் போயிருக்காம்.. அப்பறம் அவங்களுக்கு வேண்டியவங்களோட பேசி விஷயம் சொன்னார்.. அஞ்சு மணி போல தூங்க ட்ரை பண்ணா தூக்கத்துக்குப் பதில் கண் எரிச்சல்ல கண்ணீர்தான் வந்துது.. கொஞ்ச நேரம் அவங்களப் பத்திப் பேசிட்டு அப்பறம் மௌனமா அலாரம் வரைக்கும் காத்திருந்தோம்..

இன்றும் மாவீரர் அஞ்சலி நிகழ்வுல கலந்துக்கலை.. அவர போறீங்களான்னு கேட்டேன்.. 'இல்லை.. வீட்ல நீ மெழுகுவத்தி ஏத்துவல்ல அது போதும்.. நான் போலை'ன்னார்.. ஆறுமணிக்கு மெழுகுவத்தி ஏத்தி வச்சிட்டு ஈழத்துக்காக உயிர் இழந்த அத்தனை பேருக்குமாக வேண்டிக்கிட்டேன்.. கூடவே இனியாவது எம்மை நிம்மதியாக வாழ வை இறைவான்னு கேக்கவும் தவறலை..

ஈழம்னு இல்லை.. இலங்கைன்னு இல்லை.. எங்கல்லாம் போரும் அழிவும் இருந்ததோ.. இருக்குதோ.. அந்த மக்களுக்காக.. அவங்க நிம்மதிக்காக.. அவங்க வாழ்க்கைக்காக.. ஒரே ஒரு நிமிடம்.. மனதார அஞ்சலி செய்யுங்க.. நம்மால முடிஞ்சதா இருக்கட்டும்..

அப்படியே இந்தப் பாடலை எல்லாருக்குமா கேக்கணும்னு தோணிச்சு.. ஏஆர் ரகுமானின் இசையிலும் குரலிலும் அற்புதமான பாடல்.. 2002இல் வெளிவந்த கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில.. வைரமுத்துவின் வரிகள்ல.. கேட்டு முடிச்சதும் ஒரு ஏக்கப் பெருமூச்சு இல்லேன்னா ஒரு பெரிய மூச்சு வந்திச்சுன்னா.. நீங்க என் இனம்..
--

வெள்ளைப் பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே
விடியும் பூமி அமைதிக்காக விடிகவே
மண்மேல் மஞ்சள் வெளிச்சம் விழுகவே
மலரே சோம்பல் முறித்து எழுகவே
குழந்தை விழிக்கட்டுமே தாயின் கதகதப்பில்
உலகம் விடியட்டுமே பிள்ளையின் சிறுமுதல் சிரிப்பில்..

காற்றின் பேரிசையும் மழை பாடும் பாடல்களும்
ஒரு மௌனம் போல் இன்பம் தருமோ
கோடிக் கீர்த்தனமும் கவி கோர்த்த வார்த்தைகளும்
துளிக் கண்ணீர் போல் அர்த்தம் தருமோ..

எங்கு சிறுகுழந்தை தன் கைகள் நீட்டிடுமோ
அங்கு தோன்றாயோ கொள்ளை நிலவே
எங்கு மனித இனம் போர் ஓய்ந்து சாய்ந்திடுமோ
அங்கு கூவாயோ வெள்ளைக் குயிலே..

இங்க இசைப்புயல் வரும் வீடியோ இருக்கு..

இங்க படத்தில் வரும் காட்சி இருக்கு..

இங்க முழுமையான பாடல் இருக்கு..








22 August, 2012

மழையும் மழை சார்ந்த கவலையும்..

IMG_6967குடும்ப இஸ்திரி ட்ரைவிங் லைசன்ஸ் மட்டும் எடுக்கக்கூடாது என்ற எண்ணத்தோடு விடிந்தது கடந்த ஞாயிறு காலை. சதுவுக்கு ஃபுட்பால் மேச். திருவிழா போல கூட்டம் கூட்டமாய் இல்லாவிட்டாலும் குடும்பம் குடும்பமாய் நடந்து வந்த மக்களைக் கடந்து வந்து காவலுக்கு நின்றவர் கை காட்டிய இடத்தில் பார்க் செய்தேன். நாங்கள் காரிலிருந்து இறங்கி வரவும் கோச் எங்கள் காருக்குப் பக்கத்தில் பார்க் செய்யவும் 'பாத்திங்களா நாங்க முன்னாடி வந்துட்டோம்' என்பதன் மூலம் அவர் ரெடியாக லேட்டானதற்காக நான் கடிந்து கொண்டிருக்க வேண்டியதில்லை என்பது சதுவால் சுட்டிக்காட்டப்பட்டது. 'உங்களுக்கு சுலபமா பார்க்கிங்குக்கு பெரிய இடம் கிடைச்சுதும்மா' என்றவர் தொடர்ந்து இந்தக் குறுக்கு வழி ஏறி இறங்குவது எனக்கு முடியாத காரியமென்றால் சுற்றுப் பாதையில் போகலாம் என்றார். குறுக்கு வழியைப் படம் எடுக்க மறந்துவிட்டேன். ஒரு குட்ட்ட்டி மலையை ஏறி இறங்கினோம்.

IMG_6969காலையிலே போட்டிகள் ஆரம்பித்து விட்டாலும் இவருக்கு முதல் மேச் 2 மணிக்கும் தொடர்ந்து 4:20, 5:10 என மூன்று மேச்கள். அம்மா முழு விருப்போடு வரவில்லை என்பதைப் புரிந்துகொண்டவர் போல வரவேற்பு பேனர், வந்திருந்த கூட்டம், மழை நின்ற வெதர், க்ரவுண்டின் அளவு எனப் பலதும்  பேசிக்கொண்டு வந்தார்.  விடுமுறையின் கடைசி வாரத்தில் ஃபுட்பால் ஸ்கூல் இருந்ததால் பயிற்சிவிட்டுப்போகவில்லை என்றாலும் முதல் மேச்சில் 6:2 இல் தோற்றார்கள். இந்த இரண்டு மாத காலத்துக்குள்ளேயே பிள்ளைகள் வளர்ந்திருந்தார்கள்.

IMG_6971இடைப்பட்ட நேரங்களில் அரட்டையோடு கூடவே தலைக்கு மேலே தாழப் பறந்து கொண்டிருந்த விமானங்களிடம் தவ்விய மனம் கனடாவுக்குப் பறந்து போக அதைத் தரை இறக்குவது பெரும்பாடாகிப் போனது. அன்று இங்கே ரமலான் தினம் ஆகையால் பாகிஸ்தானியர் ஒருவர் கொண்டாட்ட வேலைகள் இருப்பதால் கிளம்புவதாகவும் அவர் மகனை வீட்டில் விட முடியுமாவெனவும் கேட்டார். வாழ்த்தைச் சொல்லி நன்றியை வாங்கிக்கொண்டு பிரியாணி கிடைக்குமாவெனக் கேட்க நினைத்ததை மூட்டை கட்டி வைத்தேன். இரண்டாவது மேச் 7:2 இல் தோற்றார்கள். எதிரணி போங்காட்டம் ஆடியதில் 3 பேருக்கு அடிபட்டுவிட்டது. கூடவே தொடர் தோல்வியில் சோர்ந்துபோய்விட்டதால் கடைசி மேச்சில் எப்படி விளையாடுவார்களோ என்ற கவலைபிடித்துக்கொண்டது. நினைத்ததை விட இடைவேளை வரை நன்றாக விளையாடி 2 கோல் போட்டார்கள். பின்னர் எதிரணி 4 கோல்களைத்தாண்டியதும் தளர்ந்து போய் 7:2 இல் தோற்றார்கள்.

IMG_6981பரிசளிப்பை மிக வித்தியாசமாக ஒழுங்கு செய்திருந்தார்கள். எல்லோரையும் உட்கார வைத்து ஒரே சமயல் 6 அணிகளை அழைத்து அரங்கம் நிறைந்த கரகோஷமும், எழுந்து நின்று வரவேற்புமெனப் பிள்ளைகள் மிக மகிழ்ந்ததில் பெற்றவர் அகம் மகிழ்ந்தது. வழக்கம் போல ஒரு குட்டி ஷீல்டும், டீ ஷர்ட்டும், கிஃப்ட் வவுச்சரும் கிடைத்தது. மேலதிக பரிசாக அன்று மீதி நாள் முழுவதும் டீவி ரிமோட் பிள்ளையின் கையில் இருக்க வேண்டுமென்று அறிவிக்கப்பட்டதும் அத்தனை குஷி பிள்ளைகளுக்கு. அம்மாவை இலவச டாக்ஸியாக்கிய சதுவின் புண்ணியத்தால் கூட வந்தவர்களை வீடுகளில் விட்டுவிட்டு நாங்கள் வீடு வர எட்டு மணி ஆகிவிட்டது. வந்ததுமே அப்பாவிடமிருந்து ரிமோட் பறிமுதல் செய்யப்பட்டது.

--

சம்மர் வெகேஷன் முடிந்ததுமே விண்டரையும் ஸ்னோவையும் மனம் தானாக நினைக்கத் தொடங்கிவிடுகிறது. அதற்குத் தொடர் மழையும், இருட்டும், எப்போதாவது எட்டிப்பார்க்கும் சூர்யாவும் கூட காரணமாக இருக்கலாம். ”கிணறெல்லாம் வத்திப் போகுதம்மாச்சி.. எட்டிப் பாத்தா அடியில எப்பன் தண்ணி தெரியுது.. அனல் வெயில் தாங்கேலாதாம்.. தம்பி (என்னோட அண்ணன்) அண்ணேன்ர (என்னோட அப்பா) காணிக்குள்ள கிணறு வெட்டுறார்.. வெயில்ல பிள்ளை படுற கஸ்ரம் பாக்கக் கவலையாக்கிடக்கம்மா”ன்னு ரெண்டு நாள் முன்னாடி அத்தை சொன்னதிலிருந்து மழையைப் பார்க்க/கேட்க நேரும்போதெல்லாம் பெருமூச்சே மிஞ்சுகிறது. இதில் கொஞ்சமேனும் ஊரில் போய்ப் பொழியக்கூடாதா என ஏக்கம் எட்டிப் பார்க்கிறது.

--

பள்ளிகள்  மீண்டும் தொடங்கிவிட்டன. புதிய வகுப்பு, புதுப் புத்தகங்கள், புதிய ஆசிரியர்கள் என்று பிள்ளைகளின் பரபரப்பு எங்களையும் தொற்றிக்கொண்டது. புதுப்புத்தக வாசனையை மோந்து பார்த்த நாட்களும், போரினால் பழைய புத்தகங்களை ஏக்கத்தோடு பெற்றுக்கொண்ட நாட்களும், கொப்பி, பென்சில், பேனை வாங்கக் கூட முடியாமல் தவித்த நாட்களும் என மனம் அதன் போக்கில் கொசுவத்தி சுற்றிக்கொண்டிருக்கிறது. எனக்கு எப்போதும் அம்மாவே அட்டை போட்டு பெயர் எழுதித் தர வேண்டும். அம்மாவின் அழகான கையெழுத்து ஒரு காரணமென்றாலும் அது ஏனோ நான் அந்த வழக்கத்தைக் கடைசி வரை மாற்றவில்லை. இன்று அம்முவின் புத்தகப்பையைத் தூக்கிவிட்டுப் பயந்துவிட்டேன். எவளவு பெரிய்ய்ய்ய புத்தகங்கள். நல்லவேளை வீட்டுவேலை இல்லாத நாட்களில் பள்ளியிலேயே புத்தகங்களை வைக்க வேண்டும் என்ற நடைமுறை இங்கே இருக்கிறது.

அப்படியே தமிழ்ப்பள்ளியும் ஆரம்பித்துவிட்டது. நாங்கள் இதுவரை பாவித்து வந்த நோர்வேஜியப் பள்ளியில் திருத்த வேலைகள் தொடங்குவதால் புதிதாக வேறொரு பள்ளியில் இடம் தரப்பட்டது. அங்கே ஏகப்பட்ட கெடுபிடிகள். எங்கள் வீட்டைத் திடீரென ஒரு நாளைக்கு யாராவது பாவிக்கத் தொடங்கினால் எப்படி இருக்குமோ அப்படி ஒரு நிலையில் புதிய பள்ளியின் ஆசிரியர்கள் இருக்கிறார்கள். என்னதான் அவர்களின் நிலையை நாம் புரிந்துகொண்டாலும் ஏகப்பட்ட நிபந்தனைகளோடு அங்கே போய் வருவது எங்களுக்கும் சிரமமானதே. என் பிள்ளைகளின் ஆசிரியர்களைப் பார்த்ததுமே இந்த வருடம் வீட்டில் அதிக கவனம் எடுத்தே ஆகவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். என் வகுப்பில் பதினாறு பிள்ளைகள். முதல்நாளே இலகுவாகப் பேச ஆரம்பித்துவிட்டார்கள். என் முகராசி அப்படியென்றாலும் கூடவே நான் நினைத்தது போல இந்தப் பதினாறையும் பெற்றதில் எத்தனை பேர் நான் தான் ஆசிரியை என்றதும் கவனம் எடுக்க வேண்டுமென நினைத்தார்களோ என்றும் எண்ணத் தோன்றியது.

24 April, 2012

God decides something!!

“யார் கையில் வந்து யார் சேர்ந்திருப்போம்

யார் சொல்வதிதை காட் டிசைட்ஸ் சம்திங்..”

காலேல ஒரு பாடல் பகிர்ந்து கொள்ளலாம்னு சம்திங் சம்திங் படப் பாடலை தேர்வு செஞ்சப்ப பிடித்த வரிகளா அமைஞ்ச வரிகள் இவை. எனக்கு கடவுள் நம்பிக்கை நிறையவே இருக்கறதால எங்கள் இருவருக்கும் பெற்றோர்கள் நிச்சயித்த திருமண பந்தத்துக்கு முதல் முடிவு எடுத்தது கடவுள்தான்னு பல சமயங்கள்ல இந்தப் பதின்மூன்று வருடங்கள்ல நினைச்சிருக்கேன். இதற்காகத்தான் என்னையும் இவரையும் இந்தப் பந்தம் இணைச்சதுன்னு உணர்ந்திருக்கேன். மனப்பூர்வமா உணர்ந்தேன்னு சொல்லணும்.

போன மாதம் மாம்ஸ்க்கு ஒரு வகையான இருமல் பிடிச்சது. பகல்ல எல்லாம் அளவாக இருக்கும். இரவானால் அளவே இல்லாமல் இருமும். அனைத்து நாடுகளின் பாட்டி வைத்தியங்கள் பார்த்தும் அடங்கவில்லை. சாதாரண இருமலுக்கு டாக்டரான்னு அவரிடம் என் பேச்சு எடுபடவில்லை. என்ன ஆனாலும் அடுத்த கணமே மறுபடி தூங்கிப் போய்டுறது அவர் வழக்கம். எனக்கு?? தொடர் சிவராத்திரிகளும், குறைத் தூக்கமுமா போக வண்டி ஓட்டும்போது தலைசுற்ற ஆரம்பிச்சிடிச்சு. ஒரு நாள் இரவு முடியாமல் போக எழுந்து கெஸ்ட் ரூமில் போய் படுத்துவிட்டேன். அது கூட நாலரை மணிக்குத்தான். ஆஃபீஸ்க்கு வழக்கம் போல் ஃபோன் பண்ணியவர் கேட்ட முதல் கேள்வி

‘என்னடி இப்டி பண்ணிட்டே??’

’நீங்க டாக்டர்ட்டவும் போக மாட்றிங்க என்னால தூங்காம ஆஃபீஸ் வர முடியல. அதான் எந்திரிச்சு போய்ட்டேன்`னேன்.

’டாக்டர்ட்ட அப்பாயின்மெண்ட் எடுத்திட்டேன். மவளே அவர் நான் சொன்னது போல வெறும் வைரஸ் இருமல்னு சொல்லட்டும் இருக்கு உனக்கு’ன்னார்.

என்னதான் ஆண் தான் உறுதியானவன்னு காட்டிக் கொண்டாலும் சில சின்ன விஷயங்கள்ல அப்படிக் காட்டிக்கொண்டு மட்டும்தான் இருக்கிறான். இருமல் சரியாகற வரைக்கும் நீ அம்மு ரூம்ல தூங்குன்னு சொன்னார். தனியாகத் தூங்க அவ்ளோ பயப்படற நான் திடீர்னு எழுந்து போனது அவருக்கு ஏதோ ஒரு வகையில் அதிர்ச்சி என்பது நல்லாவே புரிஞ்சது.

நான் அவர்ட்ட அவளவா கேள்வி கேக்கமாட்டேன். எங்க போறிங்க.. வரிங்க.. ஏன் லேட்.. அது ஏன் செஞ்சிங்க.. இத ஏன் செய்லைன்றது போல சின்ன விஷயங்கள் தொடங்கி பெரிய விஷயங்களிலும் மூக்கு நுழைக்கமாட்டேன். எல்லாம் அவர் பார்த்துப்பார்ன்ற நம்பிக்கை. அவரும் எதா இருந்தாலும் இன்ன முடிவு எடுத்தேன்/எடுக்கலாமான்னு கலந்துகொள்வார். போன வாரம் என்னவோ மூட் சரியா இல்லை. அவர் வீட்டுக்கு வந்து ஆசுவாசப்படுத்தினதும் ‘காலேல போனவர் இப்பதான் வரிங்க’ன்னு ஒரு வரிதான் சொன்னேன். கேள்வியாகக் கூட. அன்று தூங்கும்வரை பலமுறையும் தொடர்ந்து சில நாட்களும் அதற்கான விளக்கத்தை சொல்லிக்கொண்டிருந்தார். இந்த சின்ன விஷயத்துக்கு போயான்னு தோணினாலும் அவருக்குள் அதன் தாக்கம் பெரிதாக இருந்திருக்கும்போலன்னு தோணிச்சு.

எங்கேயோ கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருந்த வாழ்க்கையின் சில தத்துவங்கள் மெதுவா மிக மெதுவா புரிபட ஆரம்பிக்கிறது. அதற்கு வயதும், பிள்ளைகளின் வளர்ச்சியும், காலமும் கூடவே உலகமும் காரணமாக இருக்கலாம். ஒரு நாள் காரில் போய்க்கொண்டிருந்தபோது ஊர் சுற்றிய பேச்சு கடைசியில் இப்படி ஒரு குடும்பம் அமைய நான் என்ன தவம் செய்தேன்னு நினைக்கும்படியா வந்து முடிஞ்சது. காருக்குள் வந்த திடீர் அமைதி எனக்கும் அவருக்கும் இதை நல்லாவே உணர்த்திச்சு. பிள்ளைகளால அத மொழிப்படுத்த முடியலைன்னாலும் உணர முடிஞ்சதென்பது அவங்க முகத்திலும் ‘பாவம்ல அவங்கல்லாம்’ன்னு சொன்ன விதத்திலும் தெரிஞ்சது.

பிள்ளையாரப்பா.. உன்னட்ட எப்போதும் கேக்கறததான் இப்பவும் கேக்கறேன். நீ எல்லாரையும் நல்லா பாத்துக்கோ. அப்போ தான் நான் நல்லா இருப்பேன்.

ஃபீலிங்க்ஸ் ஆஃப் நோர்வே போதும்னு நினைக்கறேன்.. இதோ.. அடுத்த ஒரு புது வருஷத்துக்குள்ள போருக்கு கிளம்பிட்டோம்.. வந்து எங்கள் திருமணநாளுக்கு வாழ்த்திட்டு ஆசி வாங்கிட்டு போங்க மக்கள்ஸ்..

j 039

23 April, 2012

எல்லாம் நலம்!!

அக்காச்சி வீட்டில் நண்பன் தினமும் பல காட்சிகள் ஓடிக் கொண்டிருக்கிறதாம். கூடவே அதில் வரும் காரக்டர்களின் பெயர் ஒவொருவருக்கும் வைக்கப்பட்டு அந்தப் பெயரிலேயே அழைக்கும்படியும் கட்டளை இடப்பட்டிருக்கிறார்களாம். ‘அப்ப சித்திக்கு என்ன பேர்டா’ன்னு அக்காச்சி கேட்க கடைக்குட்டி சேரன் ’ஷித்திதான் ரியா’ன்னு சொல்லிட்டார். ஒரே நிமிஷம் இருங்க. இங்கே அவ்வியே ஆகணும் நான். அவ்வ்வ்வ்வ்..

இரண்டாவது பையன் கருண் திடீரென்று சீரியசாக ‘எனக்கு ஃப்யூச்சர்ல என் வைஃப் கூட ட்ரபிள் வரும்னு நினைக்கறேன்மா’ என்றாராம். ஏனென்று கேட்டதற்கு ‘பேபி கிடைக்கறப்ப எனக்கும் எப்டி ஹேண்டில் பண்ணும்னு தெரியாதேம்மா. ஸ்வேதா போல கோவப்படுவாங்கன்னு நினைக்கறேன்மா’ன்னாராம். அது ஆரது ஸ்வேதான்னேன். அடியேய் நண்பன்ல வர ஸ்வேதாடி.. இலியானா அக்கான்னா. இங்க இன்னுமொரு அவ்வ்வ்வ்..

TWO SISTERS இப்போது ஒரு டிப்ளமா கோர்ஸ் படித்துக் கொண்டிருக்கிறாள் அக்காச்சி. அவள் என்னைப் போல இல்லை. தைரியம், அறிவு, விவேகம், அழகு என அத்தனையிலும் என்னைவிடப் பல படிகள் மேலானவள். அவளிடம் நான் கற்றுக் கொள்ள எப்போதும் எதுவாவது இருந்துகொண்டே இருக்கும். நானும் அவளும் ஒரே சாயலில் இல்லாததால் யாராவது பார்த்தால் சகோதரிகள் என்று சொல்லமாட்டார்கள். பேச்சும் அப்படியே இருக்கும். இன்று வரை அம்மாவை விட எனக்கு அக்காச்சி மீதுதான் பயம் அதிகம். முன்னெல்லாம் அக்கா என்ற அதிகாரம் இருக்கும். இதுக்கு அக்காச்சி என்ன சொன்னா என்று என்னவர் கேட்கும் அளவுக்கு அவள் எனக்கு இப்போது எல்லாமுமாய் ஆகி அன்பால் கட்டிப்போடுகிறாள்.

நான் பதிவுலகம் வந்ததை இரண்டு மாதங்களின் பின் சொன்னபோது அவளவு கோவப்பட்டாள். உன் மனத் திருப்திக்கு எழுது ஆனால் நட்புகள் எதுவும் வேண்டாம் என்று சொன்னாள். லிங்க் கொடுத்தேன். ஆனால் படித்தாளா இல்லையாவென்று ஒரு வார்த்தை சொல்லவில்லை. போன வருஷம் என் பிறந்தநாளுக்கு அவளிடமிருந்து வந்த மெயில் இது.

ithu thaan en pirantha naal parisu

scrolllllllllllllllllllllllldown (இங்கே எக்கச்சக்க இடைவெளி விட்டிருந்தாள்)

"nallaaave eluthuredi!!"

எனக்கு கிடைச்ச மிகப்பெரிய பரிசு இது. கூடவே என் ஃப்ரெண்ட் படமும் அனுப்பி இருந்தாள்.

இப்பொழுது பதிவில் நான் அதிகம் எழுதாததால் அவ்வப்போது மிரட்டல் மெயில் அனுப்புவாள். படிப்பின் இடையில் அவள் இளைப்பாறுவது என் பதிவில்தானாம்.

‘summaave irunthirukkalaam. intha blog vaasikkira peeelingu irukke atha ennaaatha solla’ என்று தொடங்கி தொடர்ந்து எழுதச் சொல்லித் திட்டி முடித்திருப்பாள். நேர வேறுபாட்டால் சமயத்தில் பேச முடியாமல் போய்விடும். உடனேயே மெயில் வரும்.

enna pulla seiyirai
phonukal ennaththukku irukku
ஏன் புள்ள சைலெண்டா இருக்கிறாய்
piraku parai. naalaikku thanks giving day leave. veeddai nippan. time irunthaaa edu.
happy thanks giving day, I am thankful to god b'se of u!

இப்படியாக நக்கலோடு சேர்த்து நளினமாக தன் அன்பைச் சொல்வதில் அவளுக்கு நிகர் அவள்தான். இந்த வருடம் கோடை விடுமுறைக்கு அவளிடம் வரப் போவதாக என்னவர் சொன்ன நாளில் இருந்து எப்பொழுதும் அதே நினைவாகவே இருக்கிறாள். ’ஏன்ரியப்பா முதலே சொன்னனிங்கள். இஞ்ச மனுசரால நிம்மதியா இருக்கேலாதாம். ஒரே பரபரப்பா கிடக்கு’ என்று சிரிப்பாள். ஆனால் அது உண்மை என்பதை அவள் குரல் சொல்லும். மூன்று வயதில் அம்முவைப் பார்த்தவள் இப்பொழுது பெரிய எதிர்பார்ப்பில் இருக்கிறாள். அவளின் குணங்களை அம்முவில் அவளே பார்த்து அறிந்து கொள்வது அவளுக்கு எவளவு ஆனந்தமாயிருக்கும்.

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அக்காச்சி. எப்போதும் உன்னோடு நாங்கள் இருப்போம். எல்லாம் நலம்!!

22 January, 2012

பழமொழி நண்பன்.

மாம்ஸ் முன் ஜென்மம் பாத்திட்டு இருந்தார். போன ஜென்மத்தில என்ன பாவம் பண்ணி இவள்ட்ட மாட்டிக்கிட்டம்னு தெரிஞ்சுக்க போறாரோன்னு நினைச்சன். நிகழ்ச்சி முடிய என்ன முடிவு எடுத்திருக்காருன்னு கேட்டேன். நான் இந்த ஜென்மம் போலவே போன ஜென்மமும் நல்லவனாத்தான் இருந்திருப்பேன். நீ வேணா போய் கேட்டுப்பாரு. போன ஜென்மத்தில பாம்பா பிறந்திருப்பாய்ன்னு சொன்னார். முறைச்சதும் உனக்கு தான் பூன்னா பிடிக்குமே தேனியா பிறந்திருப்பாய்னார். பாம்பு கொத்தும், தேனி கொட்டும். மாம்ஸ் பாவம்தான் இல்லை.

$$$$$

சஜோபன் யூ டியூபில் தங்க்லீஷ் லிரிக்சோடு பாடல்களை கேட்டு, அப்படியே அழகாகப் பாடுகிறார். மெலடி சாங்க்ஸ் அவருக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது. நேற்று முன் அந்திச் சாரல் நீ பாடினார். பிள்ளைத் தமிழில் ச்செல்லமாகப் பாடும்போது கேட்க அவளவு இனிமை. உடனே கருண் தானும் பாடிக் காட்டுவதாகச் சொல்லிப் பாடினார்.

‘முன் அன்பு பாரமே.. உன் நெஞ்சம் சாதமே’ நானும் அக்காச்சியும் சிரித்த சிரிப்பில் அங்கே சேரனதும், இங்கே மாம்சினதும் தூக்கம் கலைந்துவிட்டது.

$$$$$

அப்பா ஊருக்குப் போயிருக்கிறார். கனடா வந்ததுக்கு இதுதான் முதல் முறையா தாய்மண்ணை மிதித்திருக்கிறார். ஸ்கைப்பில் வந்ததுமே நான் கையில் துவாயோடு இருந்தேன். சிரிக்க ஆரம்பிச்சிட்டார். ஏன்னு தெரியாதவங்க இங்க போய் பாருங்க. வயலோட வாழ்ந்த எனக்கு அண்ணாவோட வயல சுத்திப் பாக்கிறப்ப வெறுங்காலோட நடக்கும்போது வலிக்குது, அவ்ளோ வேர்த்து கொட்டுது மோனைன்னு சிரித்தார். ஜெயாண்ணா ரஜிக்கு சொன்னாராம். வழக்கம்போல வாடா, போடான்னெல்லாம் என்னைய சொல்ல கூடாது. அங்கிள் இருக்கும்போது வாங்கோ ஜெயாண்ணா இருங்கோ ஜெயாண்ணான்னு மரியாதை குடுத்து பேசணும்னு. ஸ்கைப்ல வரதா சொன்ன அண்ணா வரலை. அடுத்தநாள் கேட்டப்ப நேத்து அப்பா ஒரு பாட்டில் குடுத்தார்டி. தூக்கம் விசுக்கிடிச்சு. அதான் வர்லைன்னார். பாட்டில்ல என்னண்ணா எழுதி இருந்திச்சுன்னேன். அது என்னமோ விசுக்கின்னு இருந்திச்சுடின்னார். 3 கறுவல் கொண்டு வந்திருக்கிறன் மோனை என்று சிரித்த அப்பாவின் முகத்தில் அவளவு நிறைவு.

$$$$$

அக்காச்சி ஃப்ரெண்ட் என்னோட ஒரு ஃபோட்டோவ பத்தி சொன்னாங்களாம். நீ அதில அழகாத்தாண்டி இருந்தாய்ன்னு சொன்னா. எங்க.. எல்லாம் காமராவோட மகிமையா இருந்திருக்கும். நேர்ல மட்டும் பாத்தாங்க.. என் வண்டவாளம் தண்டவாளம் ஏறிடும்னேன். அப்ப்ப்ப்டி சிரிச்சா. அவங்க என்னய நேர்ல பாத்து மிரள்றது போல நினைச்சிருப்பா போல. தெளிஞ்சு தெளிஞ்சு  சிரிச்சா. அடிப்பாவி. அப்ப இத்தனை நாள் பொய்தான் சொன்னியா நீயின்னு கேட்டா இல்லடி சித்தி கூட இப்டித்தான் நான் என் வெயிட் எவ்ளோன்னு சொன்னதும் விழுந்து விழுந்து சத்த்தமா சிரிச்சாங்க. இதெல்லாம் கிண்டல்ச் சிரிப்பில்ல. மனதார்ந்த சிரிப்புன்னா. கண்ணு வச்சிடாதிங்க மக்கள்ஸ். அம்மா, சித்தி, அக்காச்சி, மாம்ஸ், நான்னு வயசு வேறுபாடு இல்லாம அல்ல்லாரும் ஒத்துமையா ஒரே நிறையில இருக்கிறோம்.

$$$$$

தமிழ் படிக்கோணும். எல்லாம் மறந்திட்டன். மறந்ததெல்லாம் திரும்ப படிக்கோணும். தடக்காம வாசிக்க பழகோணும். ஒவொரு நாளும் காலமேல 4 குறள் பாடமாக்கோணும்.

இதச் சொன்னது சாட்சாத் மாம்ஸேதான். சொன்னதோட நிக்காம நீயெல்லாம் நான் சொன்னா கேக்க மாட்டாய். பார் இதில என்ன சொல்லி இருக்கிறாங்களெண்டுன்னு உடனவே எடுத்துக்காட்டோட பேசறார். அது மட்டுமில்ல தினமும் என் மெயிலுக்கு வந்திட்டு இருக்கு.

தங்கள் நண்பரிடமிருந்து ஒரு பழமொழி

pazamozi

மாம்ஸில் தொடங்கி மாம்ஸில் முடிச்சிட்டேன். வர்ட்டா..

16 January, 2012

’டை’பொங்கல்.

இந்த வருடமும் வழக்கம்போல சூரியன் ஆன்லைனில் வரவில்லை. பகலில் சிறிது வெளிச்சமாக இருந்தது. வழக்கமாக எடுக்கும் விடுப்பும் இல்லாமல் இம்முறை ஞாயிறில் ஞாயிறுக்கான விழா. விடுப்பில் இருந்து நான் காலையில் பொங்கினாலும் மாம்ஸ் வேலையாலும், பிள்ளைகள் பள்ளியாலும் வந்து மாலையில் படைக்கும் மாலைப் பொங்கலே இதுவரை இருந்திருக்கிறது. இம்முறை பகற்பொங்கல்.

வழக்கம்போல கடைசி நேரத்தில்தான் காய்ந்த திராட்சையும், தேங்காய் எண்ணெயும் இல்லையென்பதை கண்டுபிடித்தேன். மாம்சும் பொங்காமல் கடைக்குப் போய் வரவும் பால் பொங்கவும் சரியாக இருந்தது.

032 034 036 037

கூடவே வடையும், கொண்டைக்கடலையும் அவித்துப் படைத்து  பகற்பொங்கலை இனிதே முடித்தோம்.

043 046

நான் ஆறு மணிக்கே எழுந்துவிட்டேன். (ஞாயிற்றுக்கிழமையில் ஆறு மணி என்பது வரலாற்றில் குறிக்கப்பட வேண்டிய விஷயம் என்பதால் இங்கே பதிந்து வைத்துக்கொள்கிறேன்) மாம்ஸ் எழுந்து வந்து ‘உனக்கு நாளைக்கு தான் விஷ் பண்ணோணும். இருந்தாலும் அட்வான்ஸ் வாழ்த்துகள்’ என்றார். கிறிஸ்தியான் நேற்று இரவு இங்கே தங்கியதால் ஒன்பது மணிக்கு சது எழுந்து தயாராகிக் கீழிருந்து குரல் கொடுத்தார்.

‘அம்மா.. கிறிஸ்தியான் வீட்ட போட்டு வாறேன்’

’சாப்ட்டு போங்கோ தம்பி`

’இப்ப பசிக்கேல்ல. போட்டு வாறேன். என்னம்மா மணக்குது??’

‘இண்டைக்கு தைப்பொங்கல் எல்லே.. அதான் அம்மா புக்கை(பொங்கல்) செய்யிறன்’

‘அஷ்(உவ்வே)’ என்றுவிட்டுப் போனவரை படைக்கும் முன் கால் பண்ணி கூப்பிட்டுக் குளிக்க வைத்தேன்.

041 அம்முவை குளிக்கச் சொன்னபோது கட்டாயம் இவளவு சீக்கிரம் குளிக்க வேண்டுமாவென்று சிணுங்கியபடியே போகிற போக்கில் வடை மாவில் இரண்டு வரி வைத்துவிட்டுப் போய்க் குளித்தார். அவருக்கு அரைத்த உளுந்து பிடிக்கும். வடை பிடிக்காது.

 

காரை கழுவிவிட்டு வந்த மாம்ஸ் படைக்கும்போது கையை கட்டியபடி பின்னாடியே நின்றார். முறைத்த எனக்கு ’கார் கழுவினா நான் குளிச்சது போல தானே.. படைக்கிற வேலைய பாப்பியா.. பசிக்குதில்ல’ என்றார். தேவாரம் சொல்லிய குறையில் சது செருப்போடு நிற்பது மாம்சால் கவனிக்கப்பட்டது. ’அம்மா ரூமுக்கு வெளியில கழற்றி இருந்தா. எனக்கு குளிர்ந்துது. அதுதான் போட்டனான்’ என்றார்.

இவ்வாறு படையல் முடித்து சாப்பிட வந்தால் அம்முவுக்கு நான் ஊட்டிவிட்ட ஒரு வாய் பொங்கல். சது ஒரு நான்கைந்து வாய் பொங்கல். வடை வேண்டுமென்றார். மிளகாயின் காரம் தாங்காமல் விட்டுவிட்டார். வந்த நண்பர்களும் மாம்சும் நன்றாக இருப்பதாகச் சொல்லி சான்றிதழ் வழங்கி வயிறார உண்டார்கள். மாம்சின் பழைய முதலாளிக்கும், ஒரு நண்பனுக்கும் பொட்டலம் அனுப்பிவிட்டு நானும் உண்டேன்.

பின்னர் ஜெயாண்ணா, மாமி, அண்ணா, அப்பா, ரஜியோடு வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டோம். ஜெயாண்ணாவின் பிள்ளைகள் மாட்டுப் பொங்கலுக்கும் சேர்த்தே வாழ்த்தினார்கள். விதுர்ஜன் ஏன் மாட்டுப் பொங்கல் பொங்கவில்லை என்று கேட்டாராம். எங்களிடம் மாடில்லை என்றதும் ஒன்றை வாங்கி பொங்கல் முடிய விற்கலாமே என்றாராம்.

அண்ணா படங்களில் புதுச்சட்டை போட்டிருந்தார். நான் கேட்பதுக்குள்ளாகவே

‘இந்த வருஷம் எனக்கு ‘டை`பொங்கலடி’ என்றார். அக்காச்சியும் அம்மாவும் கொடுத்துவிட்ட இரண்டு சட்டைகளிலும் டை இருந்தது. இருவருக்கும் குறையில்லாமல் இரண்டு சட்டைகளையும், கூடவே அந்த டையோட ஃபோட்டோ இல்லையா என்று கேட்காமல் அதையும் சேர்த்தே போட்டிருந்தார்.

ரஜி வீட்டில் அனைவரும் தூங்கிப் போயிருக்க ரஜி மட்டும் தூக்கக் குரலில் பேசினான். அம்மா பொங்கல் செய்ய தயாரானபோது ஸ்கைப்பில் வந்தார். பொங்கல் பாதியில் அத்தை ஸ்கைப்பில் வந்தார். அக்காச்சியோடு இனிமேல்தான் பேசவேண்டும்.

ஸ்கைப்பில் ’இண்டைக்குத்தானடி நீ ஒரு நல்ல சட்டை(ஃப்ராக்) போட்டிருக்கிறாய்’ என்றார் அண்ணா. அது அம்மா 2004இல் ஊருக்குப் போனபோது தைத்துத் தந்தது. அன்றிலிருந்து பொங்கலுக்கு அதுதான். என்னவோ இன்னமும் பண்டிகைகளின்போது ஊர் பற்றிய ஏக்கம் விட்டுப் போவதாய் இல்லை. அதற்கு ஈடாக இந்த வழக்கம். ஒன்றை மறக்க இன்னொன்று. சரிதானே நான் சொல்வது??

எல்லோருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்!!

27 December, 2011

பாசக் கண்ணீர்!!

tenn lys ஊரில் சுனாமி நினைவு அஞ்சலி நிகழ்வுகளில் ரஜி(சின்னண்ணா), ஜெயாண்ணா(இளைய மச்சினர்) கலந்து கொண்டார்களாம். நினைவுகள் அலையடித்து மீண்டன. எல்லா மக்களதும் ஆத்ம சாந்திக்கு மனதார வேண்டிக்கொண்டேன். அடிக்கடி சுனாமி எச்சரிக்கை விடுகிறார்களாம். கடலின் ஆக்ரோஷம் பயங்கரமாக இருக்கிறதாம். மழையும் சூறைக்காற்றும் வேறு. அண்ணா முதல் முதலாக வயல் விதைத்திருந்தார். அவளவும் நீரில்.

dagmar இங்கேயும் நாட்டின் பல இடங்களில் 30 வருடங்களின் பின் அதிக அளவிலான புயல் தாக்கம். நேற்றைய கிறிஸ்துமஸ் நாளில் இருந்து ஒரு லட்சம் பேர் மின்சாரம் இல்லாமல் இருக்கிறார்கள். Dagmar என பெயரிடப்பட்ட புயலின் சீற்றம் இப்போது குறைந்துவிட்டாலும் சேதங்கள் அதிகம். எங்கள் ஊருக்கும் தாக்கம் வருமென அறிவிக்கப்பட்டு காற்றோடு கடந்துவிட்டது. ஆனாலும் காற்றின் வேகம் இன்னமும் அதிகமாகவே இருக்கிறது.

இந்த வருடம் கிறிஸ்துமஸ் வார இறுதியில் வந்தது போதாதென்று White Christmas இல்லையென்பது நோர்வேஜியருக்கு மிகவும் வருத்தமான ஒன்று. மழை. ஒரு துளி பனி இல்லை. நேற்று நண்பர் வீட்டில் விருந்தில் இருக்கும்பொழுது மின்சாரம் விட்டுவிட்டு வந்தது. வழக்கமாக அவர்கள் வீட்டில் இருந்து வரும்பொழுது திட்டிக்கொண்டே வண்டி ஓட்டுவேன். தண்ணியிலும் தள்ளாடாமல் இருக்கும் மாம்ஸுக்கும் சேர்த்து வண்டி தள்ளாடும். இம்முறை ஜாக்கெட் மறந்துவிட்ட சது ஷர்ட்டையும் கழட்டி விட்டு இருந்தார். அவளவுக்கு இருந்தது காற்றில் வெப்பம்.

001 நான் இங்கு வந்ததில் இருந்து மூன்று இந்துக் குடும்பங்கள் வருடம் ஒருத்தர் வீட்டில் கிறிஸ்துமசை கொண்டாடுவோம். 24ஆம் திகதி ஒன்றுகூடி அங்கேயே தங்கி 25ஆம் திகதி வீடு திரும்புவோம். இந்த வருடம் எங்கள் முறை. கூடவே இன்னொரு இந்துக் குடும்பமும் சேர்ந்து கொண்டார்கள். ஒரு பாட்டில் வைனும் ஒரு சில பியருமே செலவானதில் எல்லோரும் ஒன்றாக மிகவும் சந்தோஷமாகக் கழிந்தது நாள். உடனேயே குடிக்கு நான் எதிரி என்று நினைத்துவிட வேண்டாம். சந்தோஷத்துக்கு குடிக்கிறோம் சாமி என்று தீர்த்தமாடுவதில் ஆண்கள் சீக்கிரமே மட்டை. அடுத்த நாள் எழுந்து ப்ரேக்ஃபாஸ்ட்டுடன் பாஸ்ட்டையும் கேட்டு அறிந்து கொள்வார்கள். இம்முறை 2 மணி வரையும் ஒரே பேச்சும் சிரிப்பும் தான். எல்லோரும் வண்டி ஓட்டும் நிலமையில் இருந்ததால் அவர்கள் போய்விட அக்காச்சியோடு 5 மணி வரை பேசிவிட்டுத் தூங்கினோம். வருங்காலத்தில் இதையே கடைப்பிடிக்கலாம் என்று ஏகமனதாக முடிவாகி உள்ளது. அவர்களுக்கான யாகத்தை புது வருடத்துக்கு இடையில் வைத்துக்கொள்ளவும் முடிவாகி உள்ளது.

030 032 1

எங்களுக்கு ஒன்றிலும், அவர்களுக்கு ஒன்றிலும் என பிள்ளைகளே சாப்பாட்டு மேஜையை ஒழுங்கு செய்தார்கள். ட்ரடிஷனல் நோர்வேஜியன் உணவுடன் டின்னர் முடிய பிள்ளைகள் ஆவலோடு காத்திருக்கும் பரிசு வழங்கல் ஆரம்பம் ஆகும். அதுவரையும் பரிசை தூக்கிப் பார்ப்பதும், பெயரை வாசிப்பதுமாக ஆர்வத்தோடு இருப்பவர்கள் கையில் கிடைத்ததும் குதிக்கும் குதிப்புக்கு ஈடு இல்லை.

008 விஷ் லிஸ்ட் முன்னாடியே தந்துவிடுவார்கள் என்றாலும் பரிசு என்னவென்று தெரிந்து கொள்ள முடியாதபடி உருமறைப்புச் செய்துவிடுவேன். பிள்ளைகளோடு சேர்ந்து பெரியவர்களும் ஏமாந்து விடுவார்கள். நண்பி ஒருவருக்கு மேக் அப் பாக்ஸ் கொடுத்திருந்தேன். அவர் அதை வெகுசிரமப்பட்டு திறக்க முயன்று கொண்டிருந்தார். ‘அக்கா.. பிடிக்கலையா.. இவ்ளோ கஷ்டப்பட்டு எதுக்கு திறக்கறிங்க’ என்றபோது விழுந்து விழுந்து சிரித்தார். வழக்கம் போல் நான் அதற்குள் வேறு எதையோ வைத்து பாக் செய்திருக்கிறேன் என்று நினைத்தாராம். நண்பியின் மகள் காசாக வேண்டுமென்று சொல்லி இருந்தார். இரண்டு எம்ப்டி பாக்ஸில் ஒன்றுக்குள் காசை வைத்து பேக் செய்து கொடுத்தபோது கரெக்ட்டாக அதை திறந்து என்னை ஏமாற்றினார்.

007 சது ஏற்கனவே xbox இருந்தாலும் play staion வேண்டுமென்று கேட்டிருந்தார். ஒரு ஷூ பாக்ஸில் சிப்ஸ் பாக்கெட், பேரீச்சை பாக்ஸ் வைத்து கூடவே கட்டில் கீழே பரிசு இருக்கிறது என்று குட்டிக் குறிப்பு எழுதி வைத்தேன். கவரை பிரித்ததும் ’ஷூவா’ என்றார். அவர் விஷ் லிஸ்ட்டில் அது இல்லை. உள்ளே பார்த்துவிட்டு ’சிப்ஸ் எனக்கு பிடிச்சது. ஆனா பேரீச்சை எனக்கு வேணாம்’ என்று என்னிடம் தர எடுத்தவர் குறிப்பை பார்த்து ஓடிப்போய் பரிசோடு வந்து கழுத்து வலிக்கும் அளவுக்கு இறுக்கி நன்ன்ன்றி சொன்னார். அம்முவின் கட்டில் கிஃப்ட்டை மாம்ஸ் முன்னாடியே சொல்லி சொதப்பியதால் சுவாரசியம் இல்லாது போய்விட்டது. சதுவுக்கு மாம்ஸ் வாங்கிய xbox கேமை கவரில் போட மறந்து நான் சொதப்பிவிட்டேன்.

பரிசு வாங்குவதென்பதும் அவளவு சாதாரண விஷயம் அல்ல. எங்களுக்கு கிடைக்கும் பரிசில் 90% தேவையில்லாததே வந்துவிடும். அதை தவிர்க்கவே நான் கொடுக்கும்போது ஒன்று அவர்களிடம் என்ன விருப்பம் என்று கேட்டுவிடுவேன். அல்லது எக்ஸ்சேஞ்ச் கார்ட் வைத்துக் கொடுத்துவிடுவேன். பிடிக்காத ஒரு பரிசை பிரித்துப் பார்க்கும் பிள்ளை மட்டுமல்ல பெரியவர் மனமும் கஷ்டப்படுவதைப் பார்த்திருக்கிறேன். பரிசென்பது ஒரு சாக்லெட்டாக இருந்தாலும் பிடித்த சுவையில் இருக்க வேண்டுமென்பது என் பாலிஸி. ஆர்வமும் ஆசையுமாகப் பரபரவெனப் பிரித்துப் பார்த்த பின் மலர்ந்த சிரிப்போடு சொல்லப்படும் நன்றிக்கு முன்னே நான் அலையும் அலைச்சல் காணாது போய்விடும்.

முதல் முறையாக மாம்ஸ் எனக்கு கிறிஸ்மஸ் கிஃப்ட் தந்து அசத்தி இருக்கிறார். மாமியார் ஆர்டர் போட்டு விட்டார்களாம். ‘இனிமேல நீ அவளுக்கு ஒழுங்கா கிஃப்ட் வாங்கி குடுத்திடணும். என்னதான் அவள்ட்ட எல்லாம் இருக்குன்னாலும் நீ குடுக்கிறதுதான் சந்தோஷம். எல்லாரும் உங்க அவர் என்ன கிஃப்ட் குடுத்தார்னு அவள்ட்ட கேக்கிறப்ப எனக்கு கஷ்டமா இருக்குது பெடியா’ என்று என் பர்த்டே முடிய நானறியாது சொல்லி இருக்கிறார்கள். ஃபோனில் நன்றி சொன்ன பொழுது சிரித்தார்கள். அக்காச்சி ‘அடியேய்.. மாமியார் மெச்சிய மருமகள் கேள்விப்பட்டிருக்கிறனடி.. மருமகள் மெச்சிய மாமியாரை இப்பதானடி பார்க்கிறன்’ என்றாள்.

அக்காச்சி மாம்சுக்கு எங்கள் இருவரின் படங்களை யாத்தே யாத்தே பாடலுக்கும், அம்மு சதுவுக்கு அவர்களின் படங்களை Justin Bieber பாடலுக்கும் animoto.comஇல் வீடியோவாக்கி பரிசாக அனுப்பி இருந்தாள். எனக்கு ரத்தத்தின் ரத்தமே பாடலுக்கு என் படங்களோடு அவள் அன்பையும், பாசத்தையும் வார்த்தைகளாகச் சேர்த்து அனுப்பி அழ வைத்துவிட்டாள். ‘அதுக்கு எதுக்குடி அழுதனி.. இஞ்சையும் எல்லாரும் சொன்னவை நீ அழப்போறாய் பாத்தெண்டு’ என்றவளிடம் ‘சும்மாவே நான் அழு அழுன்னு அழுவன்.. இதில நீ அழூ அழூன்னு வேற அனுப்பி இருக்கிறாய்.. அது பாசக் கண்ணீர் அக்காச்சி’ என்று சொன்னேன்.

18 December, 2011

உ பி.. மன்னிச்சூ..

முதல்ல வாழ்த்து சொல்றதா மன்னிப்பு கேக்கிறதான்னு தெரியவில்லை. இரண்டையும் சேர்த்தே சொல்லிடறேன்.

பிந்திய பிறந்த நாள் வாழ்த்துகளுக்கு மன்னிச்சிடுங்க உ பி.

உ பினா என்னவென்று தெரியாதவர்களுக்கு முதலில் சொல்லிவிடுகிறேன். உ பி என்றால் உடன் பிறப்பு. என் உடன் பிறக்காத என் உடன் பிறப்பு.

நான் இலங்கையைச் சேர்ந்தவள்ன்றது இன்னமும் பலருக்குத் தெரியாது. நேரில் பார்ப்பவர்களே ’நீங்க இந்தியாவா’ன்னு கேக்கும்போது பாராதவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. ஒரு நாள் சாட்டில் பேசிக் கொண்டிருக்கும்போது ’நான் இலங்கை.. அதிலவும் வன்னி’என்றேன். அடுத்த பதில் ‘உடன் பிறப்பே’ என்று வந்தது. அன்றிலிருந்து அவரை நான் வசந்த் என்றது குறைந்து போக அவரும் சுசிக்கா, அக்கா என்பதை குறைத்து உ பி என்பதே அழைப்பாய் போயிற்று.

ஒற்றைப் பிள்ளையாய் அம்மா, அப்பாவைப் பிரிந்து ஊர் நினைவுகளோடும் ஏக்கத்தோடும் இருக்கும் (இங்கே இருந்த என்று சொல்லலாமா உ பி?? ‘ஜோ’ரா சொல்லலாம்ன்னு நினைக்கறேன்) வசந்த் போலவே என் கஸின் ஒருவனும் கத்தாரில் வேலையில் இருந்தான். நாங்கள் பேசுவதுதான் அவனுக்கான பூஸ்ட். அதுவே வசந்திடம் ஒரு தனிப் பாசத்தை எனக்குள் உருவாக்கியது எனலாம். யாரிடமும் அதிகம் மெயில்/சாட்டில் பேசாத நான் வசந்திடம் அவ்வப்போது அம்மா, அப்பா பற்றி விசாரிப்பேன். ‘இப்பதான் உ பி பேசினேன்’ என்றோ ‘இனிமேலதான் பேசப் போறேன்’ என்றோ சொல்லும்போது அந்த சந்தோஷம் என்னையும் தொற்றிக் கொள்ளும்.

பிரியமுடன் வசந்த் என்பது பேச்சளவில் மட்டுமில்லை. உடன் வேலை செய்யும் இலங்கைப் பையன்கள் மேல் அவருக்கு இருக்கும் பாசமும் அன்பும் உங்களுக்குத் தெரியாது இருக்கலாம். ஒவொருவரின் மீதும் போர் ஏற்படுத்திய காயங்களை அறிந்து அவர்களுக்குத் தன்னாலான உதவியை, அன்பை வழங்குகிறார்.

எங்காவது நான் எழுதியதில் கருத்து முரண் இருப்பின் உடனேயே ஓலை வந்துவிடும். அதே போல அவர் எழுதுவதில் ஏதாவது யாராவது சொல்வதனால் நெருடல் இருந்தால் கேட்பார். புரிந்துகொண்டு கருத்துக்கு மதிப்பளிக்கும் பக்குவம் இருப்பதால் எதுவாக இருந்தாலும் என்னாலும் உடனேயே கேட்டுவிட முடிகிறது.

வசந்தின் அப்பா, அம்மா சிரிப்பைப் பார்த்தவர்களுக்குத் தெரியும் இவரின் சிரிப்பு எங்கிருந்து வந்ததென்று. இதே சிரித்த முகத்தோடு, உங்கள் மனம்போல எல்லாமும் ‘ஜோ’ராக அமைந்து, ‘ஜோதி`மயமாக உங்கள் எதிர்காலம் விளங்க எங்கள் அனைவரதும் மனமார்ந்த வாழ்த்துகள் உ பி. என்றும் என்னப்பனிடம் உங்களுக்காகவும் வேண்டிக்கொள்கிறேன்.

முதல் முதலில் இந்தப் பாடலைக் கேட்டபோது உ பி பர்த்டேக்கு பரிசாகப் போடலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் என் பர்த்டே முதலில் வந்ததால் அவர் முந்திக்கொண்டார். என் ஞாபகசக்தியின் லட்சணத்தில் சரியான நேரத்துக்கு இல்லாவிட்டாலும் இப்போது இந்தப் பாடலை பரிசாக்கிக் கொள்கிறேன். மனதார மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறேன். மன்னிச்சூஊஊஊ உ பி :)

15 November, 2011

மீசை முகம் மறந்து போச்சே..

போன திங்கள் நான் லீவ் போட்டேன்னு கவலையா, சந்தோஷமா தெரியலை. தரை/தலை தொட்டுக்கொண்டே இருக்கிறது மேகம். அழகாகவும், பயமாகவும், ஆபத்தாகவும் கூட இருக்கிறது. நாள் முழுவதும் இருந்தாலும் நேரத்துக்கேற்ப அடர்த்தியும், இருளும் கூடிக்குறைகிறது. இந்த அழகில் வீதியில் கறுப்பு உடையில் செல்லும் மக்களை என்னதான் செய்ய. பிள்ளைகளை பள்ளி கூட்டிப் போகும்போதும், வரும்போதும் அவளவு கவனமாக இருக்க வேண்டி இருக்கிறது. பள்ளி போகும்போது சது எடுத்த படங்கள் கீழே.

002 003

006

பால்கனியில் இருந்து ரசிக்க மனமும் இல்லை, குளிரும் விடவில்லை. அவ்வப்போது ஜன்னல் வழி எட்டிப் பார்ப்பதோடு சரி.

045 046 

@@@@@

halloween. இப்போ இரண்டு வருஷமாகத்தான் பசங்க தாங்களாகவே கேண்டி கலெக்‌ஷன் கோதாவில் குதித்திருக்கிறார்கள். முன்னெல்லாம் நானும் கூடவே போக வேண்டும். புல்லுக்கும் ஆங்கே பொசியும் என்றாலும் எலும்பை உறைய வைக்கும் குளிரில் போவது கொஞ்சம் கஷ்டம்தான். ஒரே ஒரு தடவை கூட வந்த மாம்ஸ் பின்னர் எஸ். இப்போதும் வீட்டில் இருப்பதும் ஒன்றும் நிம்மதியான விஷயம் அல்ல. விதவிதமாக வந்து மிரட்டுவார்கள். சிலருக்கு தூர நின்றே கேண்டியை கொடுத்துவிட்டு ஓடி வந்து விடுவேன்.

வீட்டுக்கு வெளியே லைட் போட்டிருந்தாலோ, மெழுகுவர்த்தி ஏற்றி இருந்தாலோ அந்த வீட்டில் கேண்டி கிடைக்கும் என்று அர்த்தமாம். trick or treet என்ற கலெக்‌ஷன் மந்திரத்தை இங்கே knask eller knep என்கிறார்கள். இங்கு வந்த வருடம் விஷயம் தெரியாமல் வெளியே லைட்டை போட்டுவிட்டு பயத்தோடு பல்ப்பும் வாங்கிய நினைவு பசுமையாக இருக்கிறது. நாங்கள் கலெக்‌ஷனுக்கு போவது போலவே வருபவர்களைப் பார்த்து மிரள்வதும், கேண்டி கிடைத்த மகிழ்வில் குதிக்கும் குழந்தைகளைப் பார்ப்பதுவும் சந்தோஷமே. எங்கள் வால்கள் உரிமையோடு இரண்டு முறை கலெக்‌ஷனுக்கு வந்தார்கள். போகும்போது போணி. பின்னர் வீடுகளின் வரிசைக்கிரமம்.

077 நண்பர் மகனுக்கு அம்மு மேக்கப் போடுகிறார். நாலு மணிக்கு நான் ஆஃபீஸால் வர அனைவரும் ரெடி. ஆறு மணிக்குத்தான் (பேய்)உலா தொடங்கும் என்பதால் காத்திருந்து கலைந்த மேக்கப்பை மீண்டும் டச்சப் செய்து விட்டார்.

 

 

084 a நம் வீட்டு வால்கள் இருகரையும், நடுவில் நண்பர் பிள்ளைகள்.

 

 

 

 

 

026 எனக்கு கிடைத்த மிச்ச சொச்சம் இவளவே. பெஸ்ட் சாக்லெட் மாம்ஸ் லண்டன் போனபோது இதற்கென்றே நான் சொல்லிவிட்டு வாங்கி வந்ததுதானாம். என்ன செய்ய. இக்கரை சாக்லெட்டுக்கு அக்கரை சாக்லெட் இனிமை.

 

 

@@@@@

018 வேறொரு நண்பர் மகளின் பர்த்டேக்கு வழக்கம்போல் ஐஸிங் செய்தேன். கதவு திறந்து கேக்கை பார்த்த குட்டிம்மா சொன்னார் ‘கிக்கி’ (கிற்றி). அக்காச்சி சொன்னது போல் கேக் சக்ஸஸ். அதாகப்பட்டது பிள்ளை கேக்கில் உள்ள உருவத்தை அடையாளம் காணவேண்டும். கண்டுவிட்டது. இந்த வயது குழந்தைகளிடம் ஹலோ கிற்றி பிரபலமாக இருக்கும்வரை எனக்கும் வேலை குறைவு. கண், மூக்கு, வாய், தலையில் ஒரு பூவோ, ரிப்பனோ கட்டிவிட்டால் முடிந்தது ஐஸிங். ஆனால் வழக்கம்போல் கிற்றிக்கு இம்முறையும் மீசை வைக்க மறந்துவிட்டேன். நண்பியிடம் சொன்னபோது

‘அதானே அதெப்டி ஒவொரு தடவையும் மறக்கறிங்க’ என்றார்.

‘அதில்லைங்க.. இங்க மீசை இல்லாத ஆம்பளைங்களையே பாத்திட்டு இருக்கிறதுல மீசையே மறந்து போச்சுங்க’ என்றேன்.

சிரிப்பில் வீடு ஆடி அடங்கியது. அங்கே நாங்கள் இருந்த அவளவு நேரமும் பர்த்டேக்குட்டி ஒவொரு செருப்பாகப் போட்டு நடப்பதும், விழுந்து எழுவதுமாக இருந்தார். இந்தக் குழந்தைகளுக்கு பெரியவர் செருப்புகளில்தான் எவளவு ஆசை. இத்தனூண்டு காலுக்குள் பென்னாம்பெரிய செருப்பையோ ஷூவையோ மாட்டிக்கொண்டு தானே நடக்கமாட்டாமல், அதையும் இழுத்துக்கொண்டு விழுந்தெழுந்து அவர்கள் போடும் கூத்து இருக்கிறதே. செம சிரிப்பு. நாங்கள் சிரிக்கிறோம் என்று தெரிந்ததும் இன்னமும் நடையின் வேகம் கூடும். கடைசியில் என் செருப்பை அவரிடம் இருந்து வாங்கி வர கொஞ்சம் கெஞ்ச வேண்டி இருந்தது.

028

06 November, 2011

மாமி ராக்ஸ்ஸ்ஸ்..

’ஃபோன் ஃபோன்.. புள்ளை எடூஊஊஊஊ.. லச்சு ஃபோன் எடூஊஊஊ.. எட ஃபோன் அடிக்குது எங்கயெண்டும் தெரியேல்ல.. புள்ளை.. எந்த ஃபோன் அடிக்குது.. தம்பீஈஈஈஈஈஈஈ (சதுவ).. புள்ளை எடுக்கிறியளே..’

மாம்ஸ் தவிர வீட்டில் இருக்கும் அனைவருக்கும் இப்படியாகச் சொல்லிக்கொண்டே ஃபோன் வரும் ஒவொரு சமயத்திலும் மாமியார் கீழுக்கும் மேலுக்குமாக ஓடித் திரிவார்கள். நான் எப்போதும் என் பக்கத்தில் இதற்காகவே ஒரு ஃபோனை வைத்திருப்பேன். குளிக்கும்போதோ, எங்காவது பசங்க தூக்கிப்போய் வைத்துவிடும்போதோ இப்படி ஆகி விடுகிறது. யாராவது எதுவும் முக்கிய விஷயம் சொல்ல கூப்பிடுவார்களாம். ஒரு தடவை வந்திருந்தபோது படியேறி ஓடி வந்து தடுக்கி வீழ்ந்து காலில் காயம். மாம்ஸ் வீட்டிலிருக்கும் போது சமத்தாக இருந்துவிட்டு அவர் தலை மறைந்ததும் மீண்டும் ‘ஃபோன் ஃபோன்..

#####

அலாரத்தில் அலறி எழுந்தேன். அசந்து தூங்கும் அரிதான நாட்களில் எல்லாம் அலாரச் சத்தத்தில் இப்படியாகத்தான் எழ நேர்கிறது. படபடத்த இதயத் துடிப்பை ஆழ் மூச்செடுத்து ஆசுவாசப்படுத்தியபடி வலப்பக்கம் கையை நீட்டினேன். பதட்டம் போக பக்கத்தில் படுத்திருப்பவரை தொட்டுப்பார்ப்பது க.முவிலும், அணைப்பது க.பியிலும் வழக்கமான ஒன்று. தேடிய கையில் யாரும் தட்டுப்படவில்லை என்றதும் தள்ளிப் படுத்திருக்கிறாரோ என்று எட்டித் துளாவினேன். இல்லையென்றது கை. திடீர் விழிப்பால் எரிந்த கண்களில் வலக்கண்ணை பாதி விரித்துப் பார்த்ததில் அய்.. ஜாலி.. மாம்சை யாரோ மோகினி கட்டிலோட ச்சே.. போர்வை தலையணை சகிதம் தூக்கிட்டு போய்ட்டா என்றது காட்சி. சரி பொழுது விடிஞ்சாச்சு திரும்ப கொண்டு வந்து படுக்கையில விட்டிட்டு போகத்தானே போறா. அவங்களுக்கு இடைஞ்சல் இல்லாமல் நான் இன்றாவது ட்ராஃபிக்கில் நெரியாமல் ஆஃபீஸ் போவோம் என்று வெளியே வந்தேன். கைப்பைக்குள் மொபைல் வைக்கப் போனவளுக்கு அடுத்த அதிர்ச்சி. சோஃபாவில் மாம்ஸ்.

'நைட்டு மூணு மணிக்கே வெக்கையில தூங்க முடியாம நான் இங்க வந்து படுத்திட்டேன். நீ நல்ல்ல்லா தூங்கினே போல' என்றார்.

அப்போ காபி ஆர்டர் பண்ணியதும், வாசம் வந்ததும், கம்பியூட்டர்ல லைட் எரிஞ்சா என்னம்மா நீங்க பாட்டுக்கு தூங்குங்க அதுவும் ஸ்லீப்பிங் மோட்ல போய் தூங்கிடும், மத்த லைட் இன்டர்நெட் சிக்னல்மா அத ஒண்ணும் பண்ணமுடியாதுனு பேச்சு சத்தம் கேட்டதெல்லாம் கனவாஆவ்வ்வ்வ். காலையிலேயே இரண்டு ஏமாற்றம்!!

#####

தீபாவளிக்கு முதல் நாள் மாமியார் பெட்டுக்கு கவர் மாற்றிக் கொண்டிருந்தேன். சீரியல் இடையே ஆட். நாளை தீபாவளி தினத்தை முன்னிட்டு.. என்று தொடங்கி அன்றைய ஸ்பெஷல் நிகழ்ச்சிகள் என்னவென்று அவர்கள் சொல்ல எது எது பார்க்கும்படியாக இருக்கும் என்று மாமியார் சொல்லிக் கொண்டு வந்தார்கள்.

'நல்லா பாடுவாள் போல கிடக்கு ஆனா ஆறு மணிக்கு ஆர் எழும்பி பாக்கிற' இது மகதியின் கச்சேரி.

'ம்ம்.. இது பாக்கலாம் நல்லாருக்கும்.. பாப்பான்ர பிரசங்கம்' இது சாலமன் பாப்பையாவின் பட்டிமன்றம்.

'அடப் போங்கடா பேயன்களே.. சும்மா புதுப்படம் புதுப்படம் எண்டிட்டு பழைய படத்தையே போடுங்கோ' என்றார்கள்.

'புதுப் படத்தை இப்பவே போட்டா அவங்களுக்கு நட்டம் வந்திடுமெல்லே.. அதான் தியேட்டர்ல ஓடி முடியப் போடுவாங்கள் மாமி' என்றேன்.

'ம்க்கும்.. பின்ன ஏன் புள்ளை உலகத்திலையே முதல் முறையா புதுப்படம் எண்டு சொல்ல வேணும்.. எங்களை ஆகலும் பேக்காட்டக் கூடாது கண்டியோ' என்றார்கள். அவ்வ்வ்வவ்.. அன்று காலை சிங்கம். நைட் வேட்டைக்காரன் போட்டார்கள்.

*பேயன்கள் = முட்டாள்கள். பேக்காட்டல் = ஏமாற்றல்.

#####

மாமியார் வந்த நாள் முதல் அவ்வப்போதும் இப்போது எப்போதும் ஹீட்டர் வேலை செய்கிறது. இன்னமும் விண்டரே வரவில்லை இப்பவே குளிர்ர்ர்ருது என்றால் கொஞ்சம் கண்ணைக்கட்டத்தான் செய்கிறது. சமயத்தில் வீடு சூடாகி நாங்கள் அவனில் வைத்த கோழி போல வேகிப் போகிறோம். சாக்ஸ், ஸ்வெட்டர் எல்லாம் குளிர் விரட்டும் என்று சொன்ன பின்தான் எடுத்துப் போடுகிறார். அவ்வப்போது திருட்டுத்தனமாக ஹீட்டரை ஆஃப் செய்த ஐந்தாவது நிமிஷம்

'என்ன புள்ளை.. இண்டைக்கு இவளவு குளிரா கிடக்கு'

என்பவர் காதுக்கு சீரியலையும் மீறி ஹீட்டர் வேலை செய்யாத சத்தம் எப்படித்தான் கேட்கிறதோ. இது கூடப் பரவாயில்லை தலைக்கு/குளித்து விட்டு வெளியில் நின்று உலர்த்திவிட்டு ஒரு மணி நேரம் குளிரால் போர்வைக்குள் சுருண்டு படுக்கிறார். சற்றே சூர்யா எட்டிப் பார்த்ததும் ஜன்னல் திறந்து வரவேற்றுவிட்டு மூட மறந்துவிடுகிறார். ஹீட்டர் அப்பீட்டாவென்று சந்தேகத்தோடு குளிர் காற்று வரும் வழி பிடித்துப் போனால் திறந்த ஜன்னல் ஜில்லென்று வரவேற்கிறது. நேற்றும் கால்வலியால் அவஸ்தைப்பாட்டார்கள். சாக்ஸ் போடாததும் காரணம். என்று சொன்னதும்

'அவனிட்ட சொல்லிப் போடாதை பேசுவான்'

என்றவர் ஓடிப் போய் எடுத்துப் போட்டுக் கொண்டார். அவரிடம் சொல்லமாட்டேன் ஆனால் இப்படியே சாக்ஸ் போடாமல் கால் வலித்தால் டாக்டர்ட்ட போறது தவிர வேற வழி இல்லையென்று சொல்லி(மிரட்டி) இருக்கிறேன். அவர்களுக்கு ஹாஸ்பிடல்/டாக்டர் அலர்ஜி என்று தெரிந்ததாலும் வேறு வழி இல்லாமலும்.

02 November, 2011

மஷ்ரூம் பீஃபும் சோயா மட்டனும்.

'அம்மா.. தங்கா பெரியம்மா வீட்ல ஃபோறிகோல் சாப்டோம்மா.. அவ்வ்வவ்ளோ டேஸ்ட்ட்ட்ட்டா இருந்ததும்மா.. நீங்களும் செஞ்சு குடுக்கரிங்களா'

அப்டின்னு பசங்க ஒரு சேரக் கூறி(வி)னார்கள். அது ஒண்ணும் அவளவு கஷ்டமான ரெசிப்பி இல்லைங்க. கஷ்டம்னா கூட அது சாப்டுறவங்களுக்குதானே, செய்ற எனக்கு என்ன வந்தது. ஆனால் கோவா (முட்டைக்கோஸ்) + மட்டன்.. பார்க்க சூப் போல இருந்தாலும் மெயின் டிஷ்ஷே அதுதானாம். காம்பினேஷன் நல்லா இல்லையேன்னு விட்டிட்டன். இவங்க கேட்டதும் சரின்னு கூகிளாண்டவரிட்ட matpirat.no என்று வேண்டினேன்.. அவர் இதையா வேண்டினே சரியா பாருன்னு குட்டினதும் பார்த்தா pratக்கு பதில் piratனு டைப்பிட்டன். சரின்னு வேண்டப்பட்ட பொருளெல்லாம் லிஸ்ட் எழுத வேண்டியது இல்லாம ரோல்ஸ் செய்ய வாங்கி வச்ச மட்டன் கூடவே கோவான்னு பிரிஜ்ஜை திறந்ததும் சிரித்தன. வேறென்ன வேண்டும்?? ஓ.. என்னென்ன வேண்டும் என்று சொல்ல வேண்டுமோ?? நோட்டிக்குங்க.

fårikål (எ) mutton stew.

நாலு பேருக்கு.

1 1/2 கிலோ மட்டன்

1 1/2 கிலோ கோவா

4 ts முழு மிளகு

2 ts உப்பு

3 dl தண்ணீர்

உருளைக்கிழங்கு தேவைக்கு ஏற்ப.

 

063 பாத்திரம் கொஞ்சம் பெருசா இருக்கட்டும். இப்டிக்கா பெரிய துண்டா, எலும்பு இருக்கிறதா இருக்கணும் மட்டன். இங்க இப்டியே கிடைக்குது. கோவாவையும் இப்படியே பெரிய துண்டாக வெட்டிக்கொள்ளுங்க.

 

 

 

 

064 இடையிடையே மிளகையும் தூவிக்கணும். நான் 4 க்கு பதில் 8 டீ ஸ்பூன் சேர்த்தேன்.

 

 

 

 

 

 

067 அப்படியே முழுவதையும் கலந்து கட்டி அடுக்கிவிட்டு உப்பு சேர்த்து, தண்ணீரையும் ஊத்திக்கணும். இனி அதுபாட்டுக்கு  இரண்டு மணி நேரம் குறைஞ்ச தீயில வேகட்டும். இப்போ உருளைக்கிழங்கை தனியா வேக வைத்துக் கொள்ளுங்க. அது முடிய நீங்க வேற வேலை இருந்தா பாத்திட்டு வாங்க. சிம்ல இருக்கிறதால அடிப்பிடிக்க வாய்ப்புகள் குறைவு.

 

070 ஒன்றரை மணி நேரம் அவிந்ததும் நான் மேலும் காலிஃப்ளவர், புரோக்கலி, காரட் என சில பல சேர்த்துவிட்டேன். ஆனால் இவற்றை இறக்குவதற்கு ஒரு பத்து நிமிடம் இருக்கும்போது சேர்த்தாலே போதும். அரைமணி நேரமாக ஓவர் குக் ஆகிவிட்டது.

 

 

073 நம்பி சாப்பிடலாம்!! சுள்ளென்று மிளகு அவ்வப்போது கடிபட ம்ம்..

பாதியிலவே வாசனை வாயூற வைத்தது. வீட்டில் ஆரும் இல்லை. ஆசையாகக் கேட்ட பசங்க இல்லாமல் தனியே சாப்பிட மனமில்லாமல் அடிக்கடி கிச்சனுக்குப் போய் வாசனை பிடித்துக்கொண்டு மட்டும் இருந்தேன். நாலு மணிக்கு மேல் ஓவர் பசியாகி பாதி சாப்பிடும்போது வந்தார்கள். மீண்டும் வெளியே போக வேண்டி இருந்ததாலும், போன இடத்தில் எதுவோ சாப்பிட்டு விட்டதாலும் வந்து சாப்பிடுவதென்று மாம்ஸ் தீர்ப்பை வழங்கினார். திடீரென தடதடவென்று படியேறினார் அம்மு.

'எங்கம்மா போறீங்க.. கிளம்பலாம்' என்ற மாம்ஸ்க்கு

'அப்பா ஃபோறிகோல் மறந்திட்டேன்' என்ற பதில்தான் படியிறங்கிப் போனது. தடதடவென்று சது படியேறி வந்த சத்தத்தில் அம்முவின் 'ம்ம்..' கரைந்து போனது. இருவருக்குமே மீதியை ஊட்டிவிட்டு

'யம்மன் கொத் அம்மா.. நீங்கதான் ஃபோறிகோல் செய்றதில பெஸ்ட்' என்ற சர்ட்டிபிக்கேட்டோடு கிளம்பினோம். வரும்போது

'அது என்னடி ரெண்டு மணி நேரம் சமைச்சதா சொன்னே.. சூப் போல இருக்கு.. அதான் சாப்பாடா இன்னைக்கு' என்ற மாம்சுக்கு

'உங்கூர்ல சூப் ரெண்டு மணி நேரமா சமைப்பாங்களா' என்றதோடு நான் நிறுத்த சுவையின் புகழ் பரப்பினார்கள் நான் பெற்ற மக்கள். வந்து சாப்பிட ஆரம்பித்தார்கள்.

'அடியே.. பெரிய பீசா தூக்கிட்டு வந்தா அது கோவா.. இப்டியா என்ன ஏமாத்துவே நீ' என்று மாம்ஸின் குரல் கேட்டது.

நான் போன போது எனக்கு நிறைய்ய்ய முழு பெப்பரும், நான்கைந்து கோவா பீசும், பாதி பொட்டாட்டோவுமே இருந்தது. அப்பாவியாய் பார்த்த எனக்கு

'அதான் நீங்க அப்போவே சாப்டிங்களே' என்று பதில் வந்தது அதே நான் பெற்ற மக்களிடம் இருந்து. இங்கே இலையுதிர்காலக் குளிருக்கு இதமாகவும், பனிக்காலக் குளிருக்கு உடலைத் தயார்ப்படுத்தத்  தேவையான கொழுப்பைச் சேர்க்கவும் என இது ஃபோறிகோல்  சீஸனாகிவிடுகிறது. அக்காச்சிக்கு இந்த ரிசிப்பி சொன்னேன்.

’செய்லாம்டி எங்க.. சஜோபனுக்கு இப்டியான டிஷஸ் பிடிக்காது. கருண் குட்டிமாமா செஞ்சு குடுத்த பிளாக் சிக்கன் தவிர வேற சாப்டாது. சேரன் எடுவை எடுத்திட்டு இருக்கும். அப்பாவுக்கு செஞ்சு குடுக்கறேன்’ என்றார்.

‘அது என்ன குட்டிமாமா செஞ்ச ப்ளாக் சிக்கன்?? ரஜி எப்போ இப்டிலாம் சமைக்க ஆரம்பிச்சான்??’ என்று ஆச்சரியமானேன்.

’அது நாங்க அங்க போயிருந்தப்போ ரஜி பறவை மீன பொரிச்சுக் குடுத்தான். மீன்னு சொன்னா கருண் சாப்டாரேனுட்டு சிக்கன்னு சொன்னேன்.. அது கருப்பா இருந்ததால அதுக்கு பிளாக் சிக்கன்னு கருண் பேர் வச்சிட்டார்' அப்டின்னா.

நான் கூட மஷ்ரூம் சமைச்சுட்டு பீஃப்னு சொல்லி வெள்ளிக்கிழமைல இவங்களுக்கு குடுத்திட்டு இருந்தேன். மாமியார் இது மஷ்ரூம் ஆனா பீஃப்னு சொல்லி அம்மா தருவாங்கன்னு சொல்லின நாளில இருந்து அவங்க உஷாராயிட்டாங்க. சமைக்க முடியலை. அப்புறம்தான் தெரிஞ்சது மாமியாருக்கு மஷ்ரூம் உவ்வேன்னு. ஆனால் சோயாமீட் மாமியாருக்கு பிடித்தம்ன்றதால இன்றுவரை வெள்ளில மட்டன்னு போயிட்டு இருக்கு.

28 October, 2011

என் சிங்கம்!

எல்லாரும் கண் வைக்கிறார்கள் என் கண்ணாளன் மீது. காதில் புகையோடு பெருமையாகவும் உணர முடிகிறது. அக்காச்சியுடன் ஃபேஸ்புக் வழி இணைந்த பழைய நட்புகள் சில ’என்ன உங்க அத்தான் அப்ப பாத்தது போலவே இருக்கார். அவருக்கு வயசே ஆகிறதில்லையா’ என்றார்களாம். அரைக்கிலோ எடை கூடினாலே அரை மணி நேரம் ஜாக்கிங்கை கூட்டிவிடுவார். எப்படித்தான் முடிகிறதோ. ஒரு நாள் மழை காற்றென்று கூட ஜாக்கிங் போவதை நிறுத்தமாட்டார். இவரைப் பார்த்து இப்போது ஒரு கூட்டமே ஜாக்கிங் கிளம்பியுள்ளது.

என் தொப்பை பற்றி சிறிதளவு வருத்தம் அவருக்கு. ’என் கூட ஜாக்கிங் வேண்டாம் அட்லீஸ்ட் வாக்கிங் வாயேன்’ என்பார். ’எதுக்குப்பா.. அதான் எனக்கும் சேர்த்து நீங்க அழகாவும், ஸ்லிம்மாவும் இருக்கிங்களே அது போதும் எனக்கு’ என்பேன். முறைத்தால் ‘என் ஸ்பீடுக்கு உங்களால நடக்க முடியும்னா சொல்லுங்க.. தினமும் வரேன்’ என்பேன். ’ராசாத்தி.. நீ இப்டியே சோஃபால இரு.. நான் போறேன்’னுட்டு போய்விடுவார்.

இப்போதெல்லாம் அவர் மேல் அடிக்கடி எரிஞ்சு விழறேனாம். அவர் சொல்லும் வரை எனக்கே தெரியவில்லை. என் இயல்பான பொறுமை ஓடிப் போய் அவரிடம் சேர்ந்து அவரை பொறுமைசாலி ஆக்கிவிடுகிறது.  நேற்றும் எதுவோ சொன்னபோது சுள்ளென்ற என் கோபம் பார்த்து சிரித்தார். ‘எதுக்கு சிரிக்கறிங்க இப்போ’ என்றேன். இன்னமும் சிரித்து ‘உன் கோவத்தை பாத்தா சிரிப்பா வருது’ என்றதோடு விடாமல் அக்காச்சிக்கு கால் பண்ணி ‘உங்க தங்கச்சிக்கு சொல்லி வைங்க.. என் மேல ரொம்ப கோச்சுக்கறா இப்பலாம்’னு சொல்லி என்னை இருவருமாக வாரிக் கொண்டிருந்தார்கள்.

மாமியார் மேல அவருக்கு இருக்கும் பாசம். எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து இன்றுவரை கூடிக் கொண்டே போகிறது. இப்படி ஒரு பிள்ளை கிடைக்க கண்டிப்பாக மாமி புண்ணியம் செய்துதான் இருக்கிறார்கள்.

‘அம்மா.. நோர்பேர்ட் அண்ணா கண் முழிச்சிட்டார்’

‘ஓ.. கடவுளே காப்பாத்திட்டே.. சிரிச்சாரா??’

‘ஏம்மா.. நான் என்ன ஃபோட்டோவா எடுக்கப் போனேன்.. சிரிச்சாரான்றிங்க??’

இடையில் புகுந்த நான் ‘இல்லைப்பா மாமி அவர் உங்களை அடையாளம் தெரிஞ்சு சிரிச்சாரானு கேக்கறாங்கப்பா’

‘ஆமா.. நீதானே அவங்க பக்கப்பாட்டு.. எங்கடா இன்னமும் ஒண்ணும் சொல்லையேனு பார்த்தேன்’

என்பதாய் அவர்கள் இருவர் மொக்கையில் நானும் பல்ப் வாங்கி வீடு எப்போதும் பிரகாசமாய் இருக்கிறது. இருவரும் பேசுவதை கேட்டுச் சிரிப்பதிலேயே என் பொழுது போய்விடும். நண்பர்களுக்கும் இவர்களின் இந்த வாரல் பேச்சு மிகவும் பிடிக்கும்.

இவருடைய பழைய பாஸ் ஒரு தமிழர். தினமும் அவரைப் பார்த்து மொக்கை போடுவது இவரது மிகப்பெரிய பொழுதுபோக்கு. இவர் முன்னே யாரோ ஒரு நோர்வேஜியனுக்கு ஊரில் அவர் ஆடாத வேட்டை பற்றி வெடித்துக்கொண்டு இருந்தாராம். எல்லாம் கேட்டுவிட்டு கடைசியில் இவர் சொன்னாராம். ‘நான் இவர் சொல்றது போல வேட்டைக்கு போறதில்லை.. ஏன் தெரியுமா? சிங்கம் புலில்லாம் கைல துப்பாக்கியோடையா வருது? அதேபோல வெறுங்கையோட போய் என் வீரத்தால வேட்டையாடுறதுதான் என் வழக்கம்’ என்றதை அந்த அப்பாவி நம்பிக்கொண்டு போயிருக்கிறார்.

ஒரு பார்ட்டிக்கு போய்விட்டு இன்னொன்றுக்கு போய்க்கொண்டிருந்தோம். ஒரு நாளும் அந்த ஹால் இருந்த் இடத்துக்குப் போனதில்லை என்பதால் நண்பர் ஒருவரின் பின்னே போய்க்கொண்டிருந்தோம். அவர்களும் எங்களைப்போல் இரண்டு வண்டி வாங்கி இருக்கிறார்கள்.

‘புவனா பெரிய வண்டி ஓட்டி நான் பாத்ததில்லை’

‘ஆமா.. அவங்க வேலைக்கு கூட சின்னதிலதான் போவாங்களாம்னு ரமணன் சொன்னான்’

‘ஏன்பா.. அவங்க தான் ரொம்ப தைரியமானவங்களாச்சே.. நானே பெரிய வண்டி ஓட்டறேன்.. அவங்களுக்கு என்ன?’

‘அடியேய்.. நீ பூனையா இருந்தாலும் சிங்கத்துக்கு வாழ்க்கைப்பட்டு பெண்சிங்கம் ஆயிட்ட.. அங்க அப்டி இல்லையே’

நான் சிரித்ததில் தூங்கிக் கொண்டிருந்த அம்மு எழுந்து சிணுங்கத் தொடங்கிவிட்டார்.

என்ன உங்க புருஷனுக்கு ரெண்டாவது பொண்டாட்டி வந்துட்டாங்களாமே என்று நண்பர்கள் கேலி செய்யும் அளவுக்கு அவரின் புது மொபைலோடு பொழுதைப் போக்குகிறார். ’இது வரை உனக்கு இத மாதிரி செமயா ஒரு காலர் ஐடி கிடைச்சதில்ல. கால் பண்ணி கேட்டுப்பாரு’ன்னார். அது warning it’s ur wife என்று அடித் தொண்டையில் அலறுது.

அப்பா மேல் அம்முவுக்கும் சதுவுக்கும் பயமும் இருக்கிறது. நான் என்னதான் கத்தினாலும்.. ம்ஹூம்.. ஆனால் அவர் கூப்பிடும் தொனி வைத்தே கோவத்தைப் புரிந்து கொள்வார்கள். அப்பாவிடம் பாசத்தோடு பயமும் இருப்பது நல்லதே. ஆனால் அதை பயம் என்று வரையறுக்க முடியாது. முடிவு அப்பாவுடையதென்பது போல, அப்பாவே எல்லாம் என்பது போல ஒரு வகையான.. எப்படிச் சொல்வதென்று தெரியவில்லை. உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள். அப்பாவை எப்படி உருக வைத்து காரியம் சாதிக்கலாம் என்று அவர்களுக்குத் தெரியும். சுருக்கமாகச் சொன்னால் அப்பா அவர்களுக்கு ஒரு தோழன்.

415 சம்மருக்கு சுவிஸ் போயிருந்த போது ’என்ன மச்சாள் அண்ணா கைல நீங்க வெள்ளில தாலி கட்டி விட்டிருக்கிங்களா’ன்னு நிலா கேட்டாள். இது அவர் கையில் எப்போதும் இருக்கும் செயின். இங்கே வந்த புதிதில் வாங்கினாராம். எப்போதும் கழுத்தில் ஒரு தங்கச் சங்கிலி போட்டிருப்பார்.

இன்னும் சரியாக ஒரு மணி நேரத்தின் பின் தூங்கிக் கொண்டிருப்பவரை எழுப்பி முதன்முதலாய் என் முகத்தில் முழிக்க வைத்து வாழ்த்துச் சொல்லி மிரட்டி அவருக்கான புது நாளைத் தொடங்க வைக்கப் போகிறேன். இம்முறை அவருக்கு அம்மாவின் ஆசீர்வாதமும் ஸ்பெஷலாக கிடைப்பது மனநிறைவாக இருக்கிறது.

லவ்யூப்பா.. பிள்ளையார் எனக்கு எல்லாமும் ஆன உங்கள் வழி எங்களைக் காத்துக்கொள்ளட்டும். என்றும் நீங்கள் இனிதே வாழ எல்லா வளமும் நலனும் துணை வரட்டும்.

26 October, 2011

காஃபி வித் அம்மு.

முன்னை விட ரொம்பவே மாறிவிட்டார் அம்மு. முதல் மாற்றம் ஷாப்பிங். முன்பென்றால் என் கையைப் பிடித்து இழுத்து, காலைக் கட்டி கடைக்கு உள்ளே போக விடமாட்டார். ஆனால் ஒரு போதும் அழுது அளிச்சாட்டியம் பண்ணியதில்லை. முடிந்த வரை தடுக்க முயற்சி செய்வார். அதனாலேயே நான் ஷாப்பிங் தனியாகப் போவதுண்டு. இப்போது எப்போது கடைக்குப் போவதென்றாலும் உடனேயே வருகிறார். உடையைப் பொறுத்தவரை முன்பு அவருக்கு வேண்டியதை நானே வாங்கி வரவேண்டும். ’எப்டிம்மா எனக்குப் பிடிச்சதை வாங்கினிங்க’ என்பதோடு சரி. இப்போது நான் ட்ரையல் ரூம் ஸ்டூலில் உக்கார்ந்திருக்க வேண்டியதுதான். அலுக்காமல் இதை போடவா, அது பொருந்துமா, எது நல்லாருக்கும் என்று தனக்கு வேண்டியதைத் தானே போட்டுப் பார்த்துத் தேர்வு செய்கிறார். என் கை கோர்த்து, தனக்குத் தெரிந்த ஃபாஷன் டிப்ஸை அள்ளி வீசியபடி அல்லது எதுவோ பேசியபடி கூட வரும் குட்டிப் பெண்ணோடு ஷாப்பிங் போவதென்பது எனக்கும் பிடித்த மிகவும் புதிய அனுபவமே.

104 ஐஸ்க்ரீம், hot dog, burger, hot chocolate இப்படி எதுவோ ஒன்றால் ஷாப்பிங்குக்கு சுபம் போடப்படும். நான் இருக்கும் மூடைப் பொறுத்து எனக்கு காஃபி ஆர்டர் செய்வேன். ’இன்னைக்கு நானும் காஃபி குடிக்கட்டுமா’ என்று கேட்டவர் தனியாக வேண்டாம் உங்களதில் டேஸ்ட் பார்த்துவிட்டு ஆர்டர் செய்கிறேன் என்றார். கூடவே ஒரு கேக்கும் வாங்கிக்கொண்டு உட்கார்ந்தோம். டேஸ்ட் பிடித்திருந்தாலும் அவ்ளோ பெரிய கிளாஸ் தனியாக குடிக்க முடியாதென்று சொன்னதால் இருவரும் ஷேர் செய்து கொண்டோம். இங்கு வந்ததுக்கு என் குட்டித்தோழியோடு தான் முதல் முதல் காஃபி குடித்திருக்கிறேன்.

போன வாரம் பள்ளியில் ஃபோட்டோ எடுத்தார்களாம். பாவம் என் செல்லத்துக்கு நல்லதாக ஒரு ட்ரஸ் கூட இல்லையாம். சரி என்று என் டீஷர்ட்டில் ஒன்றை குடுத்துவிட்டு இனிமேல உங்களுக்குத்தான் என்றேன். ஓடி வந்து கட்டிக்கொண்டார். இந்த சம்மரில் இருந்தே நான் போடாத என் டீஷர்ட்ஸ் சலவைக்கு வந்தது. கேட்டபோது பிடிச்சிருந்ததாம் எடுத்துப் போட்டுக்கொண்டாராம். என்னுடைய accessoriesக்கும் இதே கதிதான். ஆனால் அதிகமானவை ஏதோ ஒரு காரணத்தோடு உடைந்தே திரும்பி வருகின்றன. எங்காவது கிளம்பும்போது என் காலணிகளில் எதைப் போடலாம் என்று நான் நினைத்திருப்பேனோ எனக்கு முன்னே அது அம்மு கால்களில்.

எனக்கு கோவம் வரும்படியாக ஏதாவது சொல்கிறார்/செய்கிறார். அடுத்த நொடி ‘என் மேல கோவமா.. ஸாரிம்மா’ என்று ஓடி வந்து கட்டிக்கொண்டு உம்மா கொடுக்கிறார். முன்பை விட பொறுமை, புரிந்துணர்வு, விட்டுக் கொடுத்தல் போன்றவை கூடி இருந்தாலும் அவர் ரூமை ஒதுங்க வைப்பது மட்டும் இன்னமும் வரக் காணோம். சின்னச் சின்ன சமையல் கூட செய்து அசத்துகிறார். ’அச்சாக் குட்டியடி நீ’ என்று பொறுப்புணர்வைப் பாராட்டி சர்ட்டிஃபிக்கேட் கொடுத்த சில மணி நேரத்திலேயே ‘என்ன பிள்ளையம்மா நீங்கள்.. அம்மா இவளவு சத்தமா கத்துறன்.. கேக்காம இருக்குறிங்கள்’ என்றும் சொல்ல வைக்க அவரால் மட்டுமே முடிகிறது. இது சில சமயம் மாறியும் நடக்கிறது.

111 எங்கள் காரில் உறைந்திருந்த பனியில் அவர் எழுதியது இது. தமிழ் கற்பதில் நிறைய முன்னேற்றம். தானாகவே வீட்டுவேலை செய்துவிடுவார்.  புரியாதவற்றுக்கு மட்டுமே என்னிடம் உதவி கேட்பார். மீதி எல்லாம் தனக்குத் தெரிந்த வரையில் சமத்தாகச் செய்துவிடுவார். நாளை எல்லோர் வாழ்த்துகளையும் படித்துப் பார்க்க ஆவலாக இருக்கிறாராம் என்றும் எழுதச் சொன்னார்.

அவ்வப்போது எங்களை நிறுத்தி வைத்து உயரம் அளந்து பார்க்கிறார். இதில் அதிகம் மாட்டிக்கொள்வது நான் தான். அடுத்தபடியாக சதுவின் கன்னம். அது என்னவோ என்/சதுவின் கன்னத்தை கிள்ளி/வருடிப் பார்ப்பதில் இன்னமும் அலாதி இன்பம் என் தங்கத்துக்கு. இம் முறை நண்பர்களோடு பார்ட்டி வேண்டாமாம். யாருமே அவர் வகுப்பில் இந்த வருஷம் பார்ட்டி வைக்கவில்லையாம். அதனால் தனக்கும் தேவை இல்லை என்றார். இப்பொழுது குட்நைட் ஹக் கொடுக்க வந்தவர் ‘நீங்க எப்டித்தான் எழுப்பினாலும் சில சமயம் எந்திரிக்க மாட்டேன். அதனால எல்லாம் விட்டிட கூடாது. எப்டியாவது எழுப்பி கரெக்ட்டா பனெண்டு மணிக்கு விஷ் பண்ணணும்’ என்று சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்.

என் அம்மு இன்று போல் என்றும் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ என் அப்பன் துணை இருக்கட்டும்.

ஹாப்பி பர்த்டே லச்சு. லவ் யூ அம்மாச்சி.

29 September, 2011

சது இல்லைனா சத்.

‘அம்மா மங்கா தா படமா பார்க்கறிங்க??’

என்ற சது என் சிரிப்பில் வழக்கம் போல் மிரண்டு போனார்.

‘ஓம்.. எப்பிடித் தெரியும் உங்களுக்கு??’ என்றேன்.

‘அப்பம்மா கூட தூங்கறப்போ டிவில மங்கா தா 50ன்னு  வந்திச்சு’ என்றார்.

அவர் Mankatha வை அப்படி படித்திருக்கிறார். இன்னும் கொஞ்சம் வளர்ந்திருந்தால் மாங்கா தா என்று படித்திருப்பாரோ??

தமிழ் சொல்லிக்கொடுத்துக் கொண்டிருந்தேன். கண்ணன் வந்தது என்றார். திணை என்று மிரட்டாமல் இலகுவாகப் புரியவைத்தேன். புரிந்ததை சரி பார்க்க சில உதாரணங்கள் கேட்டேன். இந்த உதாரணம் கேட்டல் சரி பார்த்தல் என்பது சமயங்களில் பல சிக்கல்களில்/சிரிப்புகளில் விட்டுவிடும் என்பது நீங்களும் அறிந்ததே. திருடன் என்றதும் வந்தது என்றார். ஏனென்று கேட்காமலே அவங்க தான் கெட்டவங்க ஆச்சே அவங்களுக்கு எதுக்கு மரியாதை. அதுவே போதும் என்றார். பிள்ளைக்குப் புரிவது திருடனுக்குப் புரிந்தால் எவளவு நன்றாக இருக்கும்.

ஒழுங்காக விளையாடிக்கொண்டு இருந்தார்கள். என் கண்ணே பட்டுவிட்டது போல. அம்மு திடீரென்று பஞ்சாயத்துக்கு கூப்பிட்டார். இருங்கம்மா நான் சொல்றேன் என்று சதுவே ஆரம்பித்தார். அதாகப்பட்டது ஞாயிறன்று டிவி பார்க்கும்போது கொறிக்க வாங்கலாம் என்று அவர் சொன்ன சிப்ஸ் ப(b)ஷ் (அதாங்க.. ஆய்) டேஸ்ட்டா இருக்கும் வேற வாங்கலாம்னு அம்மு சொன்னாங்களாம். அப்டினா அக்காச்சி பஷ் சாப்டிருக்காங்களா?? அப்டி இல்லைனா அவங்களுக்கு எப்டி அந்த டேஸ்ட் தெரிய வந்தது?? இதுக்கு என்ன தீர்ப்பு சொல்ல முடியும்??

அம்முக்கு ஸ்கூல் லேட்டாக முடியும் நாட்களில் வழக்கமாக தனியே வருவேன் அதான் வளந்துட்டோம்ல என்பவர் அன்று முடியாது என்றதால் அவரை ஆஃபீஸில் விட்டுப் போனார் மாம்ஸ். நான் வாங்கி வைத்திருந்த சான்விச், ஜோடா, கேண்டி என நொருக்கியவர் வீடு வரும் வழியில் அதிகம் பேசாது வந்தார். உண்ட களையோ என நானும் கையை வருடிவிட்டபடி பேசாமலே வண்டியை ஓட்டினேன்.

‘அம்மா.. உங்களுக்கு சிறீலங்கா போணும்னு ஆசை இல்லையாம்மா??’

திடீரென்று கேட்டதும் மலைத்து சுதாரித்து ‘ம்ம்.. இருக்குப்பா.. ஏன் கேக்கறிங்க’ என்றேன்.

‘இல்லை எனக்கென்னவோ உங்களுக்கு அங்க போய் எல்லாரையும் பாக்கணும்னு ஆசையா இருக்குமோன்னு தோணிச்சு.. அதான் கேட்டேன்’ என்றார். ஆசை இல்லை பேராஆஆஆசையே இருப்பதைச் சொன்னேன்.

‘அங்க சண்டை இல்லைனா இங்க நீங்க வந்திருக்கமாட்டிங்க இல்லை. நானும் அங்கவே பிறந்திருப்பேன். நான் அங்க பிறந்திருந்தா நீங்க என்ன தமிழ் பேசு, தமிழ் படின்னு சொல்லி இருக்கமாட்டிங்க இல்லை’ என்றார்.

வெயிட்ட்ட்ட்ட்.. நீங்கள் நினைத்ததையே நானும் நினைத்தேன். ஆனால் அவர் தொடர்ந்து சொன்னதை கேளுங்கள்.

‘அதுக்கு பதிலா இங்லிஷ் படி, இங்லிஷ் பேசுன்னு சொல்லி இருப்பிங்க’ என்றார். நான் வேறென்ன சொல்வேன்??அவ்வ்வ்வ் தான்.

முன்போல் ஹக், கிஸ் கேட்டதுமே/கேக்காமலே எல்லாம் இப்போது கிடைப்பதில்லை. தூங்கச் செல்லும்முன் குட்நைட் ஹக் வேணும்னா கீழ வாங்க என்கிறார். இல்லையென்றால் இதோ இப்போது போல குளிச்சிட்டு அப்படியே கீழ தூங்கிடுவேன். மறுபடி மேல வரமாட்டேன் அதான் இப்பவே ஹக் என்று கொடுக்கிறார். சரி அவர் போக்கிலேயே விட்டுவிடலாம் என்றால் கள்ளச்சிரிப்போடு உங்களுக்கு இப்போ என்னவோ வேணும் போல இருக்கே என்று இறுக்கி அணைத்து பெற்ற மனதை இன்னமும் பித்தாக்குகிறார்.

இதை சொல்ல மறந்துவிட்டேன். எப்போதும் இருவர் பெயரையும் முழுதாகவே நானும் மாம்சும் கூப்பிடுவோம். காரணம் அப்போதுதான் பெயரின் பலன் கிடைக்கும் என்பதாயும் இருக்கலாம். அவரை சது என்றோ இல்லை சத் என்றோ கூப்பிட வேண்டுமாம். அவருக்கு அதுதான் பிடிக்குமாம். எனக்கென்னவோ தம்பி, கண்ணா, ஐயா, ஐயாச்சி, ராசா, கண்டுக்குட்டி, செல்லக்குட்டி என்றுதான் வருகிறதே தவிர அந்த சது அல்லது சத் வரவே மாட்டேன் என்கிறது. பார்ப்போம்.

 121 126

002

இந்தப் பிறந்தநாளை ஸ்விம்மிங் பூலில் ஃப்ரெண்டன்களோடு கொண்டாடப் போகிறார். அவரே வந்து தனக்குப் பிடித்த கேண்டீஸ் வாங்கி, தானே பேக் செய்தும் வைத்திருக்கிறார். இதுவரை இது என் வேலையாக இருந்தது. அவர் கேட்ட brownies செய்தாயிற்று. வீட்டில் பார்ட்டி ஒழுங்கு செய்த பின் எல்லாரையும் அழைக்கிறேன்.

என் கண்ணன் என்றும் நலமாய் வாழ என் அப்பன் துணை இருக்கட்டும்.

ஹாப்பி பர்த்டே சத். லவ் யூ கண்ணா.

24 August, 2011

மாமி வந்தாச்சு.

ஊரிலிருந்து மாமியார் வந்திருக்கிறார்கள். மூன்று மாத விசா. விசா 20,000/-இன்ஷூரன்ஸ் 38,,000/-, டிக்கட் 190,000ரூபா. வந்ததும் ’வேற ஒண்ணுமில்லை பாசத்துக்கு விலை ஏறிப்போச்சு. இவ்ளோ செலவு செஞ்சுதான் என்ன கூப்டணும்னா இனிமேல நான் வரமாட்டேன்’ன்னு சொன்னார்கள். மாமியாரிடம் குண்டாயிட்டேன்னு கொஞ்சம் அதிகமாக சொல்லிவிட்டேன் என்பது அவங்க வாங்கி வந்த XL சைஸ் சுடிதாரைப் பார்த்ததும் புரிந்தது. போட்டுக்கொண்டு சதுரிடம் எப்படி என்று கேட்டேன். ‘இதான் அப்பம்மா உங்களுக்கு வாங்கிட்டு வந்த nattkjole (நைட்டி) வா??’ என்றார். பத்திரமாக மடித்து வைத்துவிட்டேன். இங்கே இருக்கும் தையல் அக்காவிடம் கொடுத்து டிங்கரிங் செய்தால் சுண்டக்கா காற்பணம் கதையாகிவிடும். அவ்ளோதான். சொக்கா.. அது உனக்கு இல்லை!!

மாம்ஸ்க்கு அழகாக எம்ப்ராய்டரி செய்த ஒரு சட்டை வாங்கியிருக்கிறார்கள். கொஞ்சம் லூசாக இருந்தது. டைட்டாக ஷர்ட்/டீஷர்ட் போட்டுப் பழகியவர் ‘என்னம்மா இது கொஞ்சம் பெருசா இருக்கே’ என்றார். ‘பரவால்ல.. நீ கொஞ்சம் குண்டாயிடு அப்போ சைஸ் சரியாய்டும்’ என்று மாமியார் சொன்னார். மொக்கைசாமி s/o மொக்கை மம்மி என்று நான் சொன்னேன்.

மாமியார் வந்த அன்று இடியப்பம் செய்தேன். மாம்ஸுக்கு புட்டு பிடிக்கும் என்பதால் இடியப்பம் எப்போதாவது அவருக்கு காய்ச்சல், சளிப்பிடிக்கும் சமயம் அவிப்பதோடு சரி. மாம்ஸ் இன்றுவரை அம்மா வந்ததுனாலதான் எனக்கு இடியப்பம் கிடைச்சுதென்று எல்லோரிடமும் சொல்லிக்கொண்டே இருக்கிறார்.

011 எனக்கு நினைவு  தெரிந்த நாளிலிருந்து அம்மா இடியப்பம் அவிக்கும் போதெல்லாம் நானும் கொஞ்சம் மாவை வாங்கி அதில் உருண்டைகளில் ஆரம்பித்து பின் படிப்படியாக பூ, குருவி, மீன் என விதவிதமாக செய்து கொடுப்பேன். அம்மா அதை இடியப்பத்தின் அருகில் வைத்து அவித்துக்கொடுப்பார். கையில் சுடாமல் ஊதியும், நேரமின்மைக்கு ஏற்ப ஒரு தட்டில் ஆவி பறக்கவுமென என் கைவண்ணம் கிடைக்கும். நசுங்காமல் இருக்கவென முதல் தட்டில் வைப்பதால் மூடியிலிருந்து நீர் சொட்டி மெல்லிய ஈரப்பதத்தோடு அவளவு சுவையாக இருக்கும். இன்று என்னவோ ஆசை வந்தாலும் குருவியோ மீனோ செய்ய வராததால் உருண்டைகளே செய்தேன். சுவை பார்த்த சது அடுத்த தடவை இடியப்பம் செய்யும்போது சொல்லச் சொல்லி இருக்கிறார்.

ஊரில் எங்கள் வீட்டின் எதிரில் அம்மாவின் அத்தான் வீடு. அவரும் மனைவியும் அம்மாவுக்குப் போலவே எங்களுக்கும் பெரியத்தான், சின்னாச்சி அக்காதான். யாரோ அவரை சின்னாச்சன் என்று சொல்லப்போய் எங்களுக்குள் இப்போதும் சின்னாச்சன் என்றே சொல்லிக்கொள்வோம். சின்னாச்சி அக்கா வீட்டில் மூன்று வேளை சாப்பாடும் சமைத்துக்கொடுப்பார். நாங்கள் மதிய, இரவுச் சாப்பாடு வாங்கியதாய் நினைவில்லை. ஆனால் காலைச்சாப்பாடு அதிகம் வாங்கி இருக்கிறோம். ஆரம்பத்தில் எவளவென்று சரியாக நினைவில்லை ஆனால் கடைசியாக 1990 இடப்பெயர்வின் முன் ஐம்பது ரூபாய் கொடுத்து வாங்கிய நினைவு. காலை மெனுவில் இடியப்பம், புட்டு இருந்தாலும் இடியப்பமே எங்கள் தேர்வு.

இடியப்பம் வாங்க ’குட்டிக்காலால போய்ட்டுவாம்மாச்சி’ என்ற ஐஸோடு நானே காலையில் அனுப்பி வைக்கப்படுவேன். குட்டிக்கால் வளர்ந்து விட்டதாய் சொன்னபோது கடைக்குட்டி சின்னப்பொண்ணு நீதான் போகணும் என்று விரட்டப்பட்டேன். ஓலைக்குசினி. இருட்டாக இருக்கும். உள்ளே போய் சிறிது நேரத்திலேயே கண்ணுக்கு எதுவும் தெரியும். ஆனால் எப்போதும் எல்லாம் அதனதன் இடத்தில் இருப்பதால் நேராகப் போய் வழக்கமாக இருக்கும் பலகைமீது அமர்ந்துவிடுவேன். அடுப்பின் வெளிச்சம் விளக்கின் தேவையை இல்லாது ஆக்கினாலும் அடுப்பின் ஓரத்தில் ஒரு மண்ணெண்ணெய் விளக்கு மங்கலாக எரிந்து கொண்டிருக்கும். சின்னாச்சி அக்காவின் தங்கை மகள் பிரேமாக்கா உதவியோடு வேலை மும்முரமாக நடந்துகொண்டிருக்கும். சும்மாவே இருட்டு மழைநாட்களில் கும்மிருட்டாகிப் போக ஈர விறகோடு அவர்கள் போராடுவதும்,  மழைக்குளிருக்கு இதமாய் குசினியின் கதகதப்பும் இப்போதும் நினைவிருக்கிறது.

ஒரு பெரிய ஓலைப் பெட்டிக்குள் மாவைக்கொட்டி முழுவதும் குழைத்தால் காய்ந்துவிடுமென்று ஒரு ஓரத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாகப் பதமாகக் குழைப்பார்கள். மர உரலால் இடியப்பத்தட்டில் பிழிந்துவிடும் வேகத்தை விட அவிந்த இடியப்பத்தை உலைப்பானையிலிருந்து இறக்கி ஒரு பெரிய சுளகில் அடுக்கி வைக்கும் வேகம் அதிகம். அதிசயமாய் பார்த்தபடி இருக்கும் என்னோடு பேசியபடியே பிரேமாக்கா வேலை செய்வார். இன்னொரு  மூலையில்  அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் பேப்பர் கிழித்து, லாவகமாக டிஷ்யூவை வாழை இலைக்குப் பதிலாக வைத்து சம்பலும் சேர்த்து பார்சலாகக் கொடுப்பார். சொதிக்கு ஏற்ற ஒரு பாத்திரமோ ஹார்லிக்ஸ் போத்தலோ நான் கொண்டு போவேன்.

சின்னாச்சி அக்கா நெற்றியில் ஒரு ரூபா அளவில் எப்போதும் குங்குமம் இருக்கும். கவுன் அழுக்காகாமல், வேலைக்கு இடைஞ்சலில்லாமல் இருக்கவென பிரேமாக்கா இடுப்பில் சறம் கட்டி இருப்பா. தாய், தங்கைகள் குடும்பமாக வந்து அங்கேயே இருந்து அவர்களும் சமையல் செய்து கொடுக்க ஆரம்பித்த போது கூட பிரேமாக்கா சின்னாச்சி அக்காவுக்கே உதவியாக இருந்தார்.

உள்ளங்கை அளவில் குட்டிக்குட்டியாய் இடியப்பம். ஒரு தடவை பிழிந்து பாலெடுத்த தேங்காய்ப்பூவில் சம்பல், மூன்றாவது பாலில் நீரோட்டமாய் இருக்கும் சொதி. ஆனால் எங்கிருந்து அந்தச் சுவையைச் சேர்த்தார்கள் என்று இன்றுவரை தெரியவில்லை.

சின்னாச்சி அக்காவின் ஒரே மகனுக்கு என் வயது. அவன் முழுப் பெயர் தெரியாது. வீட்டில் லகு என்று கூப்பிடுவார்கள். அம்மாவுக்கு அந்த அத்தானைக் கட்டி வைக்கக் கேட்டார்களாம். அம்மா தப்பியதால் என்னை லகுவுக்கு கொடுத்து அவரின் கவலையை போக்கிவிடலாமென்று கேலி பண்ணுவார்கள். என் தலை தெரிந்தாலே வீட்டுக்கோடியில் போய் ஒளிந்து கொள்ளும் லகு என்னிடமிருந்து தப்பிவிட்டான் பாவம். இப்போது சின்னாச்சி அக்கா சமைத்துக்கொடுப்பதில்லையாம். 2002 ஊருக்குப் போன சமயம் பார்த்துவிட்டு வந்தேன். அம்முவைத் தூக்கி அப்படியே என்னைப் பார்த்த நினைவு வருவதாகச் சொல்லிக் கொஞ்சினார். பெரியத்தான் அதே சிரிப்போடு தள்ளி இருந்து பார்த்துக்கொண்டிருந்தார். பிரேமாக்கா நர்ஸிங் கோர்ஸ் முடித்து அண்ணாவின் ஹாஸ்பிடலில் நர்ஸாக இருந்தார்.

idiyappam இணையத்தில் எடுத்த படம் இது. தனியாக இடியப்ப உரலென்றும், அதிலேயே முறுக்கு அச்சு போடக்கூடியது போலவும் கிடைக்கும். பூவரச மரத்தில் செய்த உரலும், பனை ஈர்க்கில் செய்த தட்டும் வெகுகாலம் இருக்கும். மாமி ஒரு முறை வரும்போது மர உரல் வாங்கிக்கொண்டு வந்தார். அதில் இடியப்பம் பிழிவதென்பது அவளவு இலகுவானதல்ல. கையில் நல்ல பலம் இருக்கவேண்டும். என்னால் இரண்டுக்கு மேல் அழுத்திப் பிழிய முடியவில்லை. இலகுவாக இருக்கவென்று மாவுக்கு நீரை அதிகம் சேர்த்தால் இடியப்பம் சாஃப்ட்டாக வரவில்லை.

278

அப்படியே பத்திரமாக அதை மாமியிடம் கொடுத்து அனுப்பிவிட்டு கன் டைப் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் உரலும், பிளாஸ்டிக் தட்டும் வாங்கிவிட்டேன்.

 

 

இப்போது இதற்கென்று மெஷினே வந்துவிட்டதாம். முன்பென்றால் சின்னாச்சி அக்காவுக்கு வாங்கிக் கொடுத்திருக்கலாம்.

21 August, 2011

எங்க ஊர் கோமாதா.

tine இங்கு வந்ததில் இருந்து நான் பாவிக்கும் dairy products எல்லாமே Tine என்கிற ஒரே ப்ராண்ட்தான். எனக்குத் தெரிந்து அநேகமானவரின் தேர்வும் இதுவே.

skolemelk பள்ளியில் பிள்ளைகளுக்கு பணம் கட்டிவிட்டால் பால் கிடைக்கும். அதனால் லஞ்ச் சரியாக சாப்பிடவில்லையே என்ற கவலை பாதி குறையும்.

 

 

 

003 - Kopi ஒவொரு வருஷமும் Tine யினால் 7 – 14 வயது வரையான பிள்ளைகளுக்காக football school காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை நடாத்தப்படுகிறது. இம்முறை நாடு முழுவதும் 403 கிளப்கள் பங்கேற்றிருக்கின்றன. இடத்துக்கு இடம் நேரம், நாள் வேறுபடும். பள்ளி விடுமுறையின் கடைசி வாரத்தை சதுரின் கிளப் தேர்வு செய்வது எல்லாருக்கும் வசதியான ஒன்று. கட்டணம் ஒரு பிள்ளைக்கு 900குரோனர். இங்கே பொதுவாகவே சம்மர் கேம்ப்/ஆக்டிவிட்டீஸ் குறைவு. இருக்கும் சிலவற்றுக்கும் கூட அனுப்ப முடிவதில்லை. ஆனால் சது ஃபுட்பால் ட்ரெய்னிங் தொடங்கியதில் இருந்து இதை மட்டும் தவற விடுவதில்லை. இரண்டு தடவை அம்முவும் போனார்.

006 - Kopi வீட்டின் முன்னே இருக்கும் கிரவுண்டில் நடப்பதால் தனியாகப் போய் வருவார். காலை அல்லது மதிய உணவு, ஜூஸ், ball, bag, டீஷர்ட்டோடு கடைசி நாள் பீஸா பார்ட்டியில் முடிப்பார்கள்.

 

 

 

013 - Kopi டெக்னிக்ஸ், ட்ரிக்ஸ் என்பதோடு நிறைய நிறைய ஜாலியையும் இந்த ஒரு வாரத்தில் சேர்த்துக்கொண்டு வருவார். இம்முறை முதல் நாள் சோ மழையும் கடைசி நாள் தூறலும் என ஜாலி இன்னும் கூடி இருந்தது.

 

 

 

Christian Kalvenes இடையில் ஒரு நாள் Brann என்ற ஃபுட்பால் டீம் வீரர் ஒருவர் வந்து அவர்களின் அனுபவங்கள்/ஆட்டோகிராஃப் பகிர்ந்து கொள்வதுதான் ஹைலைட். இம்முறை வந்தவர் Christian Kalvenes.

 

 

அப்படியே Tine யின் விளம்பரங்கள் சில. இவர் கவசகுண்டல கர்ணன்போல காலில் ski யோடு பிறந்தவராம். இந்த விளம்பரம் எனக்குப் பிடிக்க இதுவும் ஒரு காரணம்.

இது மிகவும் பிரபலமானது. அம்மு, சதுவுக்கும் பிடித்தது,

வாழ்க்கையில் சில சின்ன விஷயங்கள் பெரிய்ய்ய்ய மாறுதலை தருமென்று சொல்லும் தத்துவ விளம்பரம் இது.