Pages

  • RSS

27 November, 2010

என்ன சொல்லி உமை போற்ற!!

நவம்பர் இருபத்தோராம் திகதியே தொடங்கிவிடும். ஊரெல்லாம் மஞ்சளும் சிவப்புமாய் தோரணம். வீதியின் முக்கிய இடங்களில் அலங்கார வளைவுகள். அத்தனை பூ மரங்களுக்கும் சுமை குறையும். ஒற்றைப் பூ விட்டு மீதி பறித்து அழகான மாலைகள்.

சாவை கழுத்திலே சுமந்தபடி, எந்த நொடியும் அதனை எதிர் நோக்கியபடி, அதன் சாயலே இல்லாமல் சிரித்தபடி சுழன்று வரும் புலி வீரர்கள் ஒருபுறம். உண்ண உணவில்லையென்றாலும் என்னால் முடிந்தது செய்வேன் என்ற எண்ணத்தில் பொதுமக்கள் மறுபுறம். எந்தளவு முடியுமோ அந்தளவுக்கு ஊரையே அலங்காரத்தால் திருவிழாக் காண வைப்பார்கள். யார் எந்தப் பகுதி அலங்காரப் பொறுப்பு, உணவு, தேநீர் பொறுப்பு, தங்குமிடப் பொறுப்பு என்று பிரித்துக்கொடுக்கப்படும். துயிலும் இல்லங்களில் உறங்கும் கண்மணிகளின் தூக்கம் கலைக்காமல் அத்தனை வேலைகளும் கச்சிதமாய் முடிக்கப்படும். தூர இடங்களில் இருக்கும் மாவீரர்களின் பெற்றோர் வரவழைக்கப்பட்டு எங்காவது தங்க வைக்கப்படுவர்.

நவம்பர் 27. மாவீரர் நாள். எப்படியும் அன்று பகைவனின் ஷெல் வீச்சு, விமானக் குண்டு வீச்சு இருக்கும் என்பதால் எங்கள் வீட்டில் தைரியசாலிகள் மட்டுமே போக அனுமதிக்கப்படுவர். ரஜியும் அக்காச்சியும் நான் கட்டிக் கொடுக்கும் மாலைகளை அலுங்காமல் எடுத்துக்கொண்டு போவார்கள். கல்லறைகளின் முன்னே ஊரே அமைதியாய், ஒன்றாகக் கூடி இருக்கும். அத்தனை முகங்களிலும் வலியின் சாயல். வேதனைகளின் விம்மல். வீரர்கள் அழுவதில்லை. வலியை மறைத்து கன்ணீரை விழுங்கும் மனத்திடக்காரர் அவர்கள். சரியாக மாலை ஆறு மணி ஐந்து நிமிடத்துக்கு பிரதான சுடர் ஏற்றப்பட, தொடர்ந்து அத்தனை சுடர்களும் ஏற்றப்படும். 1989இன் பின்னர் இது தான் எங்கள் கார்த்திகை விளக்கீடு. சரியாக அதே நேரம் ஒலிக்கத் தொடங்கும் மாவீரர் பாடல். கலங்காத அத்தனை கண்களும் கண்ணீர் மழையில். நெஞ்சு வெடிக்கும் வலி. உயிரைப் பிசையும் சோகம்.  சோவெனப் பெய்யும் மழை, சமயத்தில் கூடவே குண்டு மழை எதுவாயினும் அஞ்சலி அமைதியாய் நடந்து முடியும். நாங்கள் கோயிலாய் போற்றிப் பாதுகாத்த துயிலும் இல்லங்கள் இன்று..

இங்கு வந்த பின்னர் சரியாக ஆறு மணி ஐந்து நிமிடத்துக்கு எல்லோரும் ஒன்றுகூடி மெழுகுவர்த்தி ஏற்றுவோம். கலந்துகொள்ள முடியாதவர்கள் வீடுகளிலும். பாடல் ஒலிக்க எல்லோரும் சேர்ந்து உரக்கப் பாடுவோம். எம் மண்ணின் மைந்தருக்கு மலர்கள், தீபங்களோடு கண்ணீராலும் அஞ்சலி. பிறிதொரு நாளில் கலைநிகழ்வுகள்.

போன வருடத்தை விட இந்த வருடம் மனம் இன்னமும் கலக்கமாக.  ஆற்றாமை, ஆதங்கம், கோவம், வேதனையோடு சேர்ந்து இம் முறையும் அஞ்சலிக்குப் போகத் தோன்றவில்லை. வீட்டிலேயே ஏற்றி வைப்பேன் எல்லோருக்குமாய் ஒரு மெழுகுவர்த்தி.

என்னதான் ஆகட்டும். எங்கள் மண்ணுக்காய் இன்னுயிர் ஈந்து வித்தாகிப் போன எம் மாவீரர்களதும், மக்களதும் நினைவுகளை எம்மிடம் இருந்து பிரித்தெடுக்க எவராலும் முடியாது. உண்மைகளைப் புதைத்துவிட்டாலும் வித்தாக மனதில் நாம் புதைத்த தமிழுணர்வு என்றும் விழுதோடு மரமாக வியாபித்து இருக்கும்.

இந்த மாவீரர் நாள் பாடல் மாவீரர் தினத்தன்றும், மரணித்த வீரர்களை புதைகுழியில் புதைக்குமுன் அஞ்சலி செய்யும்போதும் மட்டுமே ஒலிக்கப்படும். புதுவை இரத்தினதுரையால் இயற்றப்பட்டு, வர்ணராமேஸ்வரனால் பாடப்பட்டது. எங்கே எங்கே ஒரு தரம் விழிகளை இங்கே திறவுங்கள் எனும் வரிகள் வரும்போது கல்லும் கரைந்துதான் போகும்.

முடிந்தால்.. விழி மூடி ஒரு நிமிடம் மனதார அஞ்சலி செய்யுங்கள். கல்லறைக் காவியங்கள் அமைதியாய் உறங்கட்டும்!!

தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய
சந்தனப் பேழைகளே – இங்கு
கூவிடும் எங்களின் குரல்மொழி கேட்குதா
குழியினுள் வாழ்பவரே
உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள்
உறவினர் வந்துள்ளோம் – அன்று
செங்களம் மீதிலே உங்களோடாடிய
தோழர்கள் வந்துள்ளோம்

எங்கே எங்கே ஒருதரம் விழிகளை
இங்கே திறவுங்கள்
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே
மறுபடி உறங்குங்கள்.


வல்லமை தாருமென்றுங்களின் வாசலில்
வந்துமே வணங்குகின்றோம் –  உங்கள்
கல்லறை மீதிலெம் கைகளை வைத்தொரு
சத்தியம் செய்கின்றோம்
சாவரும் போதிலும் தணலிடை வேகிலும்
சந்ததி தூங்காது – எங்கள்
தாயகம் வரும் வரை தாவிடும் புலிகளின்
தாகங்கள் தீராது.


உயிர்விடும் வேளையில் உங்களின் வாயது
உரைத்தது தமிழீழம் – அதை
நிரை நிரையாகவே நின்றினி விரைவினில்
நிச்சயம் எடுத்தாள்வோம்
தலைவனின் பாதையில் தமிழினம் உயிர்பெறும்
தனி அரசென்றிடுவோம் – எந்த
நிலைவரும் போதிலும் நிமிருவோம் உங்களின்
நினைவுடன் வென்றிடுவோம்

16 நல்லவங்க படிச்சாங்களாம்:

பித்தனின் வாக்கு said...

மிக வலியான ஆனால் வலிமையான கவிதை. படமும் அருமை.

Chitra said...

முடிந்தால்.. விழி மூடி ஒரு நிமிடம் மனதார அஞ்சலி செய்யுங்கள். கல்லறைக் காவியங்கள் அமைதியாய் உறங்கட்டும்!!


...... கண்ணீருடன் அஞ்சலிகள்!

அமுதா கிருஷ்ணா said...

அஞ்சலி செய்தாச்சு சுசி..

ராமலக்ஷ்மி said...

உருக்கம் சுசி. என் மனமார்ந்த அஞ்சலிகளும்.

Anonymous said...

உயிர் நீத்த அந்த மண்ணின் மாவீரர்களுக்கு எனது வீர வணக்கங்கள்!

எஸ்.கே said...

அவர்களுக்கு வீர வணக்கங்கள்!

sakthi said...

வீரர்கள் புதைக்கப்படுவதில்லை விதைக்கப்படுகின்றார்கள்!!!

மாவீரர்களுக்கு என் வீர வணக்கங்கள்!!!!

கோபிநாத் said...

என் மனமார்ந்த அஞ்சலிகளும்!

Unknown said...

மாவீரர்களுக்கு எனது வீரவணக்கங்கள்

Unknown said...

எமது வீர வணக்கங்கள்.

'பரிவை' சே.குமார் said...

'வலி'மையான கவிதை

S Maharajan said...

என் மனமார்ந்த அஞ்சலிகளும்!

கார்க்கிபவா said...

:((((


தமிழனை எதிக்கும் பீரங்கி குண்டு
சமையலறையின் முள்ளங்கித்தண்டு என்ற காசி ஆனந்தனின் வரிகளை இப்போது சொல்ல முடியவில்லை.

R. Gopi said...

:(((

என் ஆத்மார்த்தமான அஞ்சலிகள்

சுசி said...

அஞ்சலி செய்த அனைவருக்கும் நன்றிகள்.

எல் கே said...

உங்களுக்கு ஒரு விருதுக் கொடுத்துள்ளேன்

http://lksthoughts.blogspot.com/2010/11/blog-post_3321.html