இந்த வாரம் புதன் அரை நாளோடு தொடங்கி செவ்வாய் வரை நீடிக்கும் ஈஸ்டர் கால விடுமுறை. பிள்ளைகளுக்கு திங்களில் இருந்து பள்ளி விடுமுறை விட்டதால் வழக்கம்போல் எதற்கு வளர்ந்து தொலைத்தோம் என்ற ஏக்கத்தோடு திங்கள் ஆஃபீசுக்கு கிளம்பினேன்.
இந்த விடுமுறை நாட்களில் ஆஃபீஸ் போகும் கொடுமையை குறைக்கும் முதல் விஷயம் my car, my petrol, my road தான். ஆளே இல்லாத வீதிகளில் எந்த டென்ஷனும் இல்லாமல் ட்ரைவ் பண்ணும் சுகம் இருக்கே.. அடடடடடடா..
என் மேஜையில் எனக்காகக் காத்திருந்த ஈஸ்டர் சாக்லெட் கொஞ்சம் சிரிப்பைக் கொடுத்தது. மேலிட தந்திரம்.
வெள்ளியோடு விடுப்பெடுத்து பாதி ஆஃபீஸ் திங்களன்று காலியாக இருக்கும். செவ்வாய் வந்ததும் கொஞ்சம் கடுப்பேறும். கலீக்ஸ் ஒவொருவராக விடைபெறுவார்கள். அதில் சிலர் அவர்கள் பயணம் பற்றிச் சொல்லும்போது. ம்ம்.. ஒருவழியாக புதன் கிழமை வந்தால் அன்று அரைநாள். ஆளே இல்லாத கடையில் டீ ஆற்றும் சுகம் இருக்கே?? அடடடடடா..
அநேகமானோர் இந்த ஈஸ்டர் விடுமுறைக்கு இந்த வருடத்தின் இறுதிப் பனியை அனுபவிக்கவென மலைப் பகுதிகளில் உள்ள அவர்களின் சொந்தமான/வாடகை காட்டேஜ்களுக்குப் போய்விடுவார்கள். எங்கள் அயலில் ஓரிண்டு வீடுகளில் தான் ஆட்கள் உண்டு. கிட்டத்தட்ட ஊரே காலியாக இருக்கும் காலம் இது. எங்கள் பழைய வீட்டில் நான் வந்த புதிதில் ஜன்னலில் நின்று வேடிக்கை பார்த்துக் கழித்த காலங்களில் ஒரு நாள் அது. வீதிக்கு எதிரே ஒரு வரிசை வீடு. அடுத்து ஒரு உள்வீதியோடு சில வீடுகள். அதில் ஒரு வீட்டில் யாரோ வண்டி வைத்து பொருட்களை ஏற்றிக் கொண்டிருந்தார்கள். பின்னர்தான் தெரிந்தது அது திருட்டென்று. போலவே காட்டேஜ்களில் தங்கி இருப்போருக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும் பிரபல திருடர்களும் ஒவொரு வருடமும் அவர்கள் கைவேலையை காட்டிக் கொண்டுதானிருக்கிறார்கள். போன வாரம் பக்கத்து ஊரில் ஒரு பெண் ஃபேஸ்புக்கில் ‘லீவு விட்டாச்சேய்ய்ய்ய்.. நான் காட்டேஜ் போறேனே’ என்று பொங்கிவிட அடுத்த நாளே வீட்டில் திருட்டு.
இதற்கிடையில் எங்கள் தமிழ்ப் பள்ளியின் பத்தாவது ஆண்டுவிழா வருகிறது. அதற்கென்று என் வகுப்புப் பிள்ளைகளுக்கு நாடகம் ஒன்று பழக்க ஆரம்பித்திருக்கிறேன். அற்புதமாகக் கழிகிறது நேரம். ஒவ்வொரு பிள்ளைக்குள்ளும் ஒழிந்திருக்கும் நடிகனையும் நடிகையையும் வெளிக்கொண்டு வருவதென்பது அபரிமிதமான ஒரு அனுபவம். ஓரளவுக்கு நன்றாக நடிப்பார்கள் என்ற நம்பிக்கை வந்திருக்கிறது. அதனால் இந்த விடுமுறை நாட்களில் 2 நாட்கள் மட்டும் பயிற்சி எடுத்துக்கொள்ளவுள்ளோம்.
மலைப்பிரதேசம் போகாதவர்களே அனுபவியுங்கள் என்பதாய் திங்கள் பனி கொட்டித் தள்ளியது. கண்ணாளன் வேறு சின்ன வண்டிக்கு சம்மர் டயரை மாற்றிவிட்டார். ஒரு வழியாக பெரிய வண்டியை உருட்டிக்கொண்டு போய்வந்தேன். புதன் கிழமை அவரே போக்குவரத்துப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். சதுவுக்கு ஆண்டுவிழா பயிற்சி இருந்ததால் அம்மு என்னோடு ஆஃபீஸ் வந்து அவ விருப்பப்படி இருவரும் லஞ்சுக்கு இலை தழைகளை உண்டோம்.
கிளம்பும் நேரம் திடீரென்று ஃபயர் அலாரம் அலறத் தொடங்கியதில் மொபைலை மட்டும் கையில் எடுத்துக்கொண்டு கட்டடத்தை விட்டு வெளியே வந்த என்னைப் பார்த்து அம்மு சிரித்தார். அவர் கையில் படித்துக்கொண்டிருந்த புத்தகத்தோடு வந்து தொடர்ந்து படித்ததைப் பார்த்து நான் சிரித்தேன். தீயணைப்புப் படையினர் வந்து அரைமணி நேர காத்திருத்தலின் பின் எங்கேயும் தீப்பிடிக்கவில்லை உள்ளே போகலாம் என்றார்கள். காரணம் என்னவென்று செவ்வாய் போனால்தான் தெரியும்.
இரண்டு நண்பர்கள் வீட்டில் விருந்துக்கு நாங்கள் போய், ஒரு நண்பர் குடும்பத்தை விருந்துக்கு அழைத்து தண்டனை கொடுப்பது, சதுவின் இரண்டு நண்பர்கள் இரண்டு நாட்கள் இங்கே டேரா, ஆண்டுவிழா நாடகப் பயிற்சி, சனிக்கிழமை ஊர் சுற்றல் என்ற அளவில் மட்டும் இப்போதைக்கு 5 நாள் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
9 நல்லவங்க படிச்சாங்களாம்:
அட அட அக்கா குடும்பம் எப்போதும் பிசியோ பிசிதான் ;-)))
அனைவருக்கும் இனிய ஈஸ்டர் வாழ்த்துகள். ;-)
ஹிஹீஹீ.. நன்றி கோப்ஸ் :)
இனிய ஈஸ்டர் வாழ்த்துகள்.
ஐந்து நாட்களும் இனிதாக அட்டகாசமாக அமையட்டும்:)!
தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஈஸ்டர் நல்வாழ்த்துகள்!
சந்தோசமா இரு அம்மினி :))
தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஈஸ்டர் நல்வாழ்த்துகள்!
நன்றி இராஜராஜேஸ்வரி.
--
ரொம்ப நன்றி அக்கா.
--
தேங்கிஸ்டா.
நன்றிங்க குமார்.
நன்றிகள் krishy :)
Post a Comment