என்னவரின் நண்பர் ஒருவர். என்னவர் இங்கு வந்ததில் இருந்து நட்பானவர். எங்கள் கல்யாணத்தின் பின் அவருக்கும் கல்யாணம் ஆகி நான் இங்கு வந்த இரண்டு மாதங்களின் பின் அவர் மனைவியும் வந்தார். அப்படியே நாங்களும் நட்பாகி, ஒரே வயதில் குழந்தைகளும் பிறந்து இப்போது குடும்ப நண்பர்கள் ஆகிவிட்டோம். அவருக்கு இடையிடையே முதுகுவலி இருந்தது. சில நாட்களாக தலைச்சுற்றலும் இருந்தது. மாம்ஸ் கூட ‘என்னடா விசேஷமா உனக்கு’ன்னு கேலி செய்வார். நேற்று வேலையில் மயக்கமாகிக் கிடந்தவரைக் கண்ட அவரின் கலீக்ஸ் உடனேயே ஆம்புலன்ஸ் மூலம் ஹாஸ்பிடல் கொண்டு சென்றிருக்கிறார்கள். எல்லா செக்கப்பும் முடித்து இப்பொழுது அவர் நலமே. எல்லாமே நார்மலாக இருப்பதாக ரிப்போர்ட் வந்தாலும் ஆறு மாதத்துக்கு ட்ரைவிங் தடை செய்திருக்கிறார்கள். இரண்டரை மணி நேரம் மயக்கத்தில் இருந்தாராம். ஓய்வின்மை, சரியான தூக்கமின்மை காரணமாம். மூளைக்குத் தேவையான ஓய்வு கொடுக்கவே இந்த முயற்சி. இன்னும் இரண்டு மாதங்களில் மீண்டும் ஒரு செக்கப் எடுத்த பின் கட்டுப்பாடு தளர்த்தப்படலாம். பார்த்ததும் குரல் தழுதழுக்க அவர் பேசியபோது.. பிள்ளையாரே.. நண்பர்களை கஷ்டத்தில் காணுவது என்பது எவளவு கொடுமை!!
ஒரு இறுக்கமான மனநிலையோடு எல்லோரும் பேசிக்கொண்டிருந்தோம். நண்பரின் இரண்டு வயது கடைக்குட்டி எல்லோரையும் தன்வசமாக்கி மனங்களை இலகுவாக்கினார். என் செயினின் டாலரை பார்த்தவர் நான் எதுவும் சொல்லாமலே தானாக கடவுள் என்று புரிந்துகொண்டு அதில் இருந்த அம்மனைத் தொட்டு எல்லோருக்கும் ஆசீர்வாதம் வழங்கினார். இத்தனைக்கும் அவர்கள் கிறிஸ்தவர்கள். ஃபாதரைப்போல நெற்றியில் சிலுவைக் குறியிட்டு ஆசீர்வதிப்பதுபோல அவர் செய்யவும் எல்லோரையும் சந்தோஷம் தொற்றிக்கொண்டது. கலகலப்பாகக் கழிந்த மணித் துளிகளின் இடையே நிறையவே தைரியம் சொல்லிவிட்டு வந்தோம்.
-----
ஃபுட்பால் விளையாடும்போது தலையில் அடிபட்ட இன்னொரு நண்பர் இன்னமும் சிகிச்சையுடனேயே ஹாஸ்பிடலில் இருக்கிறார். ஐந்து மாதங்கள் ஆகியும் இன்னமும் முழுமையாகக் குணமாகவில்லை. தலையில் நடந்த ஆபரேஷன் வெற்றியளித்தாலும் அவர் நினைவுகளை மீட்டெடுப்பதற்கான பயிற்சிகளைக் கொடுக்கமுடியவில்லையாம். விண்டர் என்பதால் சளித் தொல்லைகள் அடிக்கடி வந்து போய்க்கொண்டிருப்பதால் உடல் பலவீனமாக இருக்கிறதாம். அவரும் மேலே சொன்ன நண்பர் போலவே எங்கள் குடும்ப நண்பர். இரண்டுமுறைதான் ஹாஸ்பிடல் போய் அவரைப் பார்த்தேன். வாழ்க்கையில் மறக்க முடியாத வலியைத் தந்தது அவரை ஹாஸ்பிடலில் பார்த்த அந்த நாள்.
நாங்கள் போனபோது MR செக்கப் எடுக்கக் கூட்டிப் போயிருப்பதாக அவரின் மனைவி, என் நண்பி சொன்னார். காத்துக்கொண்டிருந்தோம். மணி நள்ளிரவு பனிரண்டை நெருங்க நெருங்க அங்கே இருந்த பெரிய கடிகாரத்தின் முட்கம்பிகள் என் நெஞ்சைக் குத்திக் கிழிப்பதுபோலிருந்தது. அவருக்கு அடிபட்டது அக்டோபர் 16 மாலை. அக்டோபர் 17 என் பிறந்தநாள். என்றுமே என் பிறந்தநாளை அவளவு ஆவலோடு வரவேற்கும் நான் அன்று அப்படி ஒரு நாளே இல்லாது போய்விடக் கூடாதா என்று நினைக்கும்படி ஆயிற்று. உறவென்று யாருமே இல்லாத இடத்தில் எதுவானாலும் முதலில் ஓடி வருவது இவர்தான். மாம்ஸ் வந்த புதிதில் ஃபுட்பால் விளையாடப் போனபோது பழக்கமாகி நட்பானவர். அவர்கள் கிறிஸ்தவர்கள். பொங்கல், தமிழ்ப் புதுவருடம், தீபாவளி தொடங்கி பிறந்தநாள், திருமணநாள் என அனைத்துக்கும் மறக்காமல் வாழ்த்துவார்.
மணி பனிரெண்டு பத்தைத் தாண்டியபோது குப்பறப் படுத்திருந்தவரை கட்டிலோடு தள்ளிக்கொண்டு வந்தார்கள். அனுமதியோடு அறைக்குள் போனபோது மூக்கிலிருந்து வழிந்த இரத்தம் காய்ந்து போய் இருக்க தூங்கிக் கொண்டிருந்தார். நண்பி நான் வந்திருப்பதைச் சொன்னபோது சட்டென்று எழுந்தவர் என்னைப் பார்த்தபடியே சுற்றுமுற்றும் தேடினார். கட்டிலில் இருந்து இறங்க முனைந்தார். ‘அண்ணா இங்க இருக்கேண்ணா. நீங்க படுங்க. ரொம்ப நேரம் தூங்காதிங்க’ என்று கண்ணீரை மறைத்தபடி சொன்னேன். அதிக நேரம் தூங்க விடாமல் விழிப்பாக வைத்திருக்க வேண்டும் என்று சொல்லியிருந்தார்கள். என் முகத்தைப் பார்த்தவர் என் கண்ணைப் பார்த்தபோதும் அங்கே என்னை அடையாளம் கண்டதற்கான அறிகுறி இருக்கவில்லை. மீண்டும் தூங்குவதும் விழித்து எங்களை மலங்க மலங்கப் பார்ப்பதுமாக இருந்தவரைப் பார்த்தபோது ஹோவென்று மனம் அழுதாலும் நண்பியின் தைரியம் போகக் கூடாதென்று வெளியேகாட்டாது இருந்தேன். மூளையில் தாக்கம் ஏற்பட்டதால் நினைவு திரும்ப நாளாகும் என்றார்கள். அதிக இரத்தப்போக்கு கூடவே மூளை வீங்க ஆரம்பித்ததால் தேவையில்லையென்று சொன்ன ஆபரேஷனை இரண்டு நாட்களின் பின் செய்தார்கள்.
இதுவரை காய்ச்சல், சளித்தொல்லை என்று ஒரு தடவை கூட ஹாஸ்பிடல் போகாதவர். நான் பார்த்த முதல் நாளில் இருந்து அடிபடும்வரை உருவத்தில் ஒரே மாதிரியே இருந்தார். என் மாமியார் மேல் அவளவு பாசம் அவருக்கு. ’என்ன தம்பி நீ.. கோடை எண்டு மெலிஞ்சதும் இல்ல.. மாரி எண்டு கொழுத்ததும் இல்லை.. எப்போதும் அப்பிடியே இருக்கிறாய்` என்று மாமியார் ஒவொரு முறை வரும்போதும் கிண்டல் செய்வார். இப்போது ஹாஸ்பிடலே வீடாக ஆகிவிட்டது. இரண்டாவது முறை பார்க்கப்போனபோது தூங்கிக்கொண்டிருந்தார். அதன் பின் இன்னமும் போய்ப் பார்க்கும் தைரியம் வரவில்லை. பார்த்துவிட்டு வரும் என்னவரிடம் கேட்பதோடு சரி.
மூளையில் பலத்த அடி, ஆபரேஷன் என்பதால் பயந்ததுபோல உடலில் எந்தத் தாக்கமும் ஏற்படவில்லை. நினைவும் கொஞ்சம் திரும்பியுள்ளது. எல்லோரையும் அடையாளம் காண்பதோடு சிறிது பேசவும் செய்கிறார். ஆனால் இன்னமும் அவருக்கு என்ன ஆயிற்று எங்கே இருக்கிறார் என்று எதையும் தெரிந்துகொள்ள முடியாது இருக்கிறார். கொஞ்சம் யோசனையோடு இருப்பது போல் இருந்தால் அன்று தூங்காமல் இருப்பாராம். அது மூளைக்கு நல்லதில்லையாம். அதனால் மெதுவாக நினைவுகளை மீட்டெடுக்க வேண்டுமென்று சொல்லியிருக்கிறார்கள். முழுமையான பயிற்சி கொடுக்க முடியாதபடி சளித்தொல்லை அடிக்கடி வருகிறது. சம்மர் வந்ததும் எல்லாம் சரியாகி நல்லபடி அவர் முழுநினைவு பெற வேண்டுமென்றே எல்லோரும் பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறோம்.
-----
என்னவரின் இன்னொரு நண்பர். எங்கள் திருமணம் நடந்த அதே வருடம் அவர்களுக்கும் திருமணமாகி இங்கே வந்த மனைவி என் நண்பியானார். சதுவில் அவளவு விருப்பம் அவருக்கு. எங்கே பார்த்தாலும் அவரின் கன்னத்தைக் கிள்ளாமல் விடமாட்டார். இரண்டு வருடங்களின் முன் இரட்டை ஆண்குழந்தைகளை ஆறு மாதக் கருவிலேயே இழந்தார்கள். அப்போது பார்க்கப்போனபோது என் தோள் நனைத்த நண்பியின் கண்ணீரை என்றும் மறக்க முடியாது. அவர்களின் வேண்டுதலுக்கு செவிசாய்த்த இறைவன் போன மாதம் ஒரு தேவதையைப் பரிசாகக் கொடுத்திருக்கிறான். தொலைபேசி வாழ்த்தியபோது ‘அண்ணாவின்(என்னவர்) நம்பர்ல பிறந்திருக்கா. உங்க நம்பர்தான் கூட்டெண்’ என்று சிரித்தார். தெய்விகா என்று செல்லமாக அவர் அழைக்கும் தேவதையைப் படத்தில் மட்டுமே பார்த்தேன். குழந்தைகளைப் பார்த்து வெகு காலம் ஆகிவிட்டதால் உடனேயே தூக்க வேண்டும்போல் இருந்தது. நண்பிக்கு காய்ச்சல், வெளிநாடுகளில் இருந்து வந்து குவிந்த அவர்களின் உறவுகள், இப்போது எங்களுக்கு இருக்கும் சளித் தொல்லைகள் என தடைகள் வந்துகொண்டே இருக்கிறது. அடுத்த வார இறுதியிலாவது போய்ப் பார்க்க வழி வர வேண்டும்.
11 நல்லவங்க படிச்சாங்களாம்:
விரைவில் நலம் பெற பிராத்தனைகள் !
குட்டி தேவதைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ;-))
நண்பர்கள் நலமடைய இறைவனை வேண்டுகிறேன்
நண்பர்களை கஷ்டத்தில் காணுவது என்பது எவளவு கொடுமை!!
அவர்கள் நலமடைய வாழ்த்துக்கள் சுசி
துன்பங்கள் நம் மன உறுதியை சோதிக்கும் கருவிகள். எல்லாம் கடந்து போகும்.
wishing them for a speedy recovery
/நண்பர்களை கஷ்டத்தில் காணுவது என்பது எவளவு கொடுமை!!/
உண்மைதான் சுசி.
தலையில் காயமடைந்தவர் விரைவில் குணமாகவும், முதலாவது நண்பர் நல்ல ஓய்வெடுத்து ஆரோக்கிய வாழ்வுக்கு திரும்பவும் என் பிரார்த்தனைகள்.
குழந்தைக்கு என் வாழ்த்துகள்!
எல்லாரோட ஆசீர்வாதங்களும் பிரார்த்தனைகளும் பலன் குடுக்கட்டும்!!
தங்கள் பதிவை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன். நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்கள். நன்றி.
http://blogintamil.blogspot.com.au/2012/03/blog-post_16.html
பிரார்த்திக்கிறோம்.
ரொம்ப நன்றிங்க கீதமஞ்சரி :)
நண்பர்கள் நலமடைய இறைவனை வேண்டுகிறேன்
enna aachu ora hospital stories ah irukku?.
how are you and your family.
Post a Comment