Pages

  • RSS

22 January, 2012

பழமொழி நண்பன்.

மாம்ஸ் முன் ஜென்மம் பாத்திட்டு இருந்தார். போன ஜென்மத்தில என்ன பாவம் பண்ணி இவள்ட்ட மாட்டிக்கிட்டம்னு தெரிஞ்சுக்க போறாரோன்னு நினைச்சன். நிகழ்ச்சி முடிய என்ன முடிவு எடுத்திருக்காருன்னு கேட்டேன். நான் இந்த ஜென்மம் போலவே போன ஜென்மமும் நல்லவனாத்தான் இருந்திருப்பேன். நீ வேணா போய் கேட்டுப்பாரு. போன ஜென்மத்தில பாம்பா பிறந்திருப்பாய்ன்னு சொன்னார். முறைச்சதும் உனக்கு தான் பூன்னா பிடிக்குமே தேனியா பிறந்திருப்பாய்னார். பாம்பு கொத்தும், தேனி கொட்டும். மாம்ஸ் பாவம்தான் இல்லை.

$$$$$

சஜோபன் யூ டியூபில் தங்க்லீஷ் லிரிக்சோடு பாடல்களை கேட்டு, அப்படியே அழகாகப் பாடுகிறார். மெலடி சாங்க்ஸ் அவருக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது. நேற்று முன் அந்திச் சாரல் நீ பாடினார். பிள்ளைத் தமிழில் ச்செல்லமாகப் பாடும்போது கேட்க அவளவு இனிமை. உடனே கருண் தானும் பாடிக் காட்டுவதாகச் சொல்லிப் பாடினார்.

‘முன் அன்பு பாரமே.. உன் நெஞ்சம் சாதமே’ நானும் அக்காச்சியும் சிரித்த சிரிப்பில் அங்கே சேரனதும், இங்கே மாம்சினதும் தூக்கம் கலைந்துவிட்டது.

$$$$$

அப்பா ஊருக்குப் போயிருக்கிறார். கனடா வந்ததுக்கு இதுதான் முதல் முறையா தாய்மண்ணை மிதித்திருக்கிறார். ஸ்கைப்பில் வந்ததுமே நான் கையில் துவாயோடு இருந்தேன். சிரிக்க ஆரம்பிச்சிட்டார். ஏன்னு தெரியாதவங்க இங்க போய் பாருங்க. வயலோட வாழ்ந்த எனக்கு அண்ணாவோட வயல சுத்திப் பாக்கிறப்ப வெறுங்காலோட நடக்கும்போது வலிக்குது, அவ்ளோ வேர்த்து கொட்டுது மோனைன்னு சிரித்தார். ஜெயாண்ணா ரஜிக்கு சொன்னாராம். வழக்கம்போல வாடா, போடான்னெல்லாம் என்னைய சொல்ல கூடாது. அங்கிள் இருக்கும்போது வாங்கோ ஜெயாண்ணா இருங்கோ ஜெயாண்ணான்னு மரியாதை குடுத்து பேசணும்னு. ஸ்கைப்ல வரதா சொன்ன அண்ணா வரலை. அடுத்தநாள் கேட்டப்ப நேத்து அப்பா ஒரு பாட்டில் குடுத்தார்டி. தூக்கம் விசுக்கிடிச்சு. அதான் வர்லைன்னார். பாட்டில்ல என்னண்ணா எழுதி இருந்திச்சுன்னேன். அது என்னமோ விசுக்கின்னு இருந்திச்சுடின்னார். 3 கறுவல் கொண்டு வந்திருக்கிறன் மோனை என்று சிரித்த அப்பாவின் முகத்தில் அவளவு நிறைவு.

$$$$$

அக்காச்சி ஃப்ரெண்ட் என்னோட ஒரு ஃபோட்டோவ பத்தி சொன்னாங்களாம். நீ அதில அழகாத்தாண்டி இருந்தாய்ன்னு சொன்னா. எங்க.. எல்லாம் காமராவோட மகிமையா இருந்திருக்கும். நேர்ல மட்டும் பாத்தாங்க.. என் வண்டவாளம் தண்டவாளம் ஏறிடும்னேன். அப்ப்ப்ப்டி சிரிச்சா. அவங்க என்னய நேர்ல பாத்து மிரள்றது போல நினைச்சிருப்பா போல. தெளிஞ்சு தெளிஞ்சு  சிரிச்சா. அடிப்பாவி. அப்ப இத்தனை நாள் பொய்தான் சொன்னியா நீயின்னு கேட்டா இல்லடி சித்தி கூட இப்டித்தான் நான் என் வெயிட் எவ்ளோன்னு சொன்னதும் விழுந்து விழுந்து சத்த்தமா சிரிச்சாங்க. இதெல்லாம் கிண்டல்ச் சிரிப்பில்ல. மனதார்ந்த சிரிப்புன்னா. கண்ணு வச்சிடாதிங்க மக்கள்ஸ். அம்மா, சித்தி, அக்காச்சி, மாம்ஸ், நான்னு வயசு வேறுபாடு இல்லாம அல்ல்லாரும் ஒத்துமையா ஒரே நிறையில இருக்கிறோம்.

$$$$$

தமிழ் படிக்கோணும். எல்லாம் மறந்திட்டன். மறந்ததெல்லாம் திரும்ப படிக்கோணும். தடக்காம வாசிக்க பழகோணும். ஒவொரு நாளும் காலமேல 4 குறள் பாடமாக்கோணும்.

இதச் சொன்னது சாட்சாத் மாம்ஸேதான். சொன்னதோட நிக்காம நீயெல்லாம் நான் சொன்னா கேக்க மாட்டாய். பார் இதில என்ன சொல்லி இருக்கிறாங்களெண்டுன்னு உடனவே எடுத்துக்காட்டோட பேசறார். அது மட்டுமில்ல தினமும் என் மெயிலுக்கு வந்திட்டு இருக்கு.

தங்கள் நண்பரிடமிருந்து ஒரு பழமொழி

pazamozi

மாம்ஸில் தொடங்கி மாம்ஸில் முடிச்சிட்டேன். வர்ட்டா..

18 January, 2012

நதி மனிதர்.

vente காத்திருத்தலின் அவசியமின்மையை

உணர்த்திப் போகின்றன

ஒப்புக்காய் ஆகிவிட்ட சந்திப்புகள். 

 

--------------------------------------------------------------------------------------------------------------

Whats-love இயல்பை மாற்றிப் போடும் காதலே

ஒரு கட்டத்தில்

இயல்பை எதிர்பார்க்கிறது.

 

----------------------------------------------------------------------------------------------------------------

elv கரையை அரித்துச் செல்வது தெரிந்தும்

ஓடிக் கொண்டிருக்கிறது நதி

மனங்களை அறுத்து

கடந்து செல்கின்றனர் மனிதர்.

 

-------------------------------------------------------------------------------------------------------------

THE VAMPIRE DIARIES கதகதப்பான உன் அணைப்பில்

இன்னமும் சுடுகின்றது

நீயறியாத என் கண்ணீர்.

 

---------------------------------------------------------------------------------------------------------------

kjærlighet-1 அன்பே இல்லாத இதயம்

என்னுள் தன் இருப்பை

உறுதி செய்து கொள்கிறது

அவ்வப்போது.

16 January, 2012

’டை’பொங்கல்.

இந்த வருடமும் வழக்கம்போல சூரியன் ஆன்லைனில் வரவில்லை. பகலில் சிறிது வெளிச்சமாக இருந்தது. வழக்கமாக எடுக்கும் விடுப்பும் இல்லாமல் இம்முறை ஞாயிறில் ஞாயிறுக்கான விழா. விடுப்பில் இருந்து நான் காலையில் பொங்கினாலும் மாம்ஸ் வேலையாலும், பிள்ளைகள் பள்ளியாலும் வந்து மாலையில் படைக்கும் மாலைப் பொங்கலே இதுவரை இருந்திருக்கிறது. இம்முறை பகற்பொங்கல்.

வழக்கம்போல கடைசி நேரத்தில்தான் காய்ந்த திராட்சையும், தேங்காய் எண்ணெயும் இல்லையென்பதை கண்டுபிடித்தேன். மாம்சும் பொங்காமல் கடைக்குப் போய் வரவும் பால் பொங்கவும் சரியாக இருந்தது.

032 034 036 037

கூடவே வடையும், கொண்டைக்கடலையும் அவித்துப் படைத்து  பகற்பொங்கலை இனிதே முடித்தோம்.

043 046

நான் ஆறு மணிக்கே எழுந்துவிட்டேன். (ஞாயிற்றுக்கிழமையில் ஆறு மணி என்பது வரலாற்றில் குறிக்கப்பட வேண்டிய விஷயம் என்பதால் இங்கே பதிந்து வைத்துக்கொள்கிறேன்) மாம்ஸ் எழுந்து வந்து ‘உனக்கு நாளைக்கு தான் விஷ் பண்ணோணும். இருந்தாலும் அட்வான்ஸ் வாழ்த்துகள்’ என்றார். கிறிஸ்தியான் நேற்று இரவு இங்கே தங்கியதால் ஒன்பது மணிக்கு சது எழுந்து தயாராகிக் கீழிருந்து குரல் கொடுத்தார்.

‘அம்மா.. கிறிஸ்தியான் வீட்ட போட்டு வாறேன்’

’சாப்ட்டு போங்கோ தம்பி`

’இப்ப பசிக்கேல்ல. போட்டு வாறேன். என்னம்மா மணக்குது??’

‘இண்டைக்கு தைப்பொங்கல் எல்லே.. அதான் அம்மா புக்கை(பொங்கல்) செய்யிறன்’

‘அஷ்(உவ்வே)’ என்றுவிட்டுப் போனவரை படைக்கும் முன் கால் பண்ணி கூப்பிட்டுக் குளிக்க வைத்தேன்.

041 அம்முவை குளிக்கச் சொன்னபோது கட்டாயம் இவளவு சீக்கிரம் குளிக்க வேண்டுமாவென்று சிணுங்கியபடியே போகிற போக்கில் வடை மாவில் இரண்டு வரி வைத்துவிட்டுப் போய்க் குளித்தார். அவருக்கு அரைத்த உளுந்து பிடிக்கும். வடை பிடிக்காது.

 

காரை கழுவிவிட்டு வந்த மாம்ஸ் படைக்கும்போது கையை கட்டியபடி பின்னாடியே நின்றார். முறைத்த எனக்கு ’கார் கழுவினா நான் குளிச்சது போல தானே.. படைக்கிற வேலைய பாப்பியா.. பசிக்குதில்ல’ என்றார். தேவாரம் சொல்லிய குறையில் சது செருப்போடு நிற்பது மாம்சால் கவனிக்கப்பட்டது. ’அம்மா ரூமுக்கு வெளியில கழற்றி இருந்தா. எனக்கு குளிர்ந்துது. அதுதான் போட்டனான்’ என்றார்.

இவ்வாறு படையல் முடித்து சாப்பிட வந்தால் அம்முவுக்கு நான் ஊட்டிவிட்ட ஒரு வாய் பொங்கல். சது ஒரு நான்கைந்து வாய் பொங்கல். வடை வேண்டுமென்றார். மிளகாயின் காரம் தாங்காமல் விட்டுவிட்டார். வந்த நண்பர்களும் மாம்சும் நன்றாக இருப்பதாகச் சொல்லி சான்றிதழ் வழங்கி வயிறார உண்டார்கள். மாம்சின் பழைய முதலாளிக்கும், ஒரு நண்பனுக்கும் பொட்டலம் அனுப்பிவிட்டு நானும் உண்டேன்.

பின்னர் ஜெயாண்ணா, மாமி, அண்ணா, அப்பா, ரஜியோடு வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டோம். ஜெயாண்ணாவின் பிள்ளைகள் மாட்டுப் பொங்கலுக்கும் சேர்த்தே வாழ்த்தினார்கள். விதுர்ஜன் ஏன் மாட்டுப் பொங்கல் பொங்கவில்லை என்று கேட்டாராம். எங்களிடம் மாடில்லை என்றதும் ஒன்றை வாங்கி பொங்கல் முடிய விற்கலாமே என்றாராம்.

அண்ணா படங்களில் புதுச்சட்டை போட்டிருந்தார். நான் கேட்பதுக்குள்ளாகவே

‘இந்த வருஷம் எனக்கு ‘டை`பொங்கலடி’ என்றார். அக்காச்சியும் அம்மாவும் கொடுத்துவிட்ட இரண்டு சட்டைகளிலும் டை இருந்தது. இருவருக்கும் குறையில்லாமல் இரண்டு சட்டைகளையும், கூடவே அந்த டையோட ஃபோட்டோ இல்லையா என்று கேட்காமல் அதையும் சேர்த்தே போட்டிருந்தார்.

ரஜி வீட்டில் அனைவரும் தூங்கிப் போயிருக்க ரஜி மட்டும் தூக்கக் குரலில் பேசினான். அம்மா பொங்கல் செய்ய தயாரானபோது ஸ்கைப்பில் வந்தார். பொங்கல் பாதியில் அத்தை ஸ்கைப்பில் வந்தார். அக்காச்சியோடு இனிமேல்தான் பேசவேண்டும்.

ஸ்கைப்பில் ’இண்டைக்குத்தானடி நீ ஒரு நல்ல சட்டை(ஃப்ராக்) போட்டிருக்கிறாய்’ என்றார் அண்ணா. அது அம்மா 2004இல் ஊருக்குப் போனபோது தைத்துத் தந்தது. அன்றிலிருந்து பொங்கலுக்கு அதுதான். என்னவோ இன்னமும் பண்டிகைகளின்போது ஊர் பற்றிய ஏக்கம் விட்டுப் போவதாய் இல்லை. அதற்கு ஈடாக இந்த வழக்கம். ஒன்றை மறக்க இன்னொன்று. சரிதானே நான் சொல்வது??

எல்லோருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்!!

01 January, 2012

சிவப்பு ரோஜ்ஜ்ஜா.

முதலில் அனைவருக்கும் மனமார்ந்த புதுவருட வாழ்த்துகள். வருஷம் ஞாயிறில் பிறந்ததில் உங்களைப் போல எனக்கும் வருத்தமே. போகட்டும் விடுவோம். புத்துணர்வோடு புத்தாண்டை வரவேற்போம்.

இங்கு new year’s eve அன்றுதான் புத்தாண்டுக் கொண்டாட்டம் களைகட்டும். டின்னரை ஃபுல்கட்டு கட்டிவிட்டு, சரியாக இரவு 00:00 க்கு பட்டாசு சத்தத்தோடு புத்தாண்டு வரவேற்கப்படும். எங்களுக்கு மாம்ஸின் நண்பர் வீட்டில் விருந்து. சில வருடங்களாகத் தொடரும் வழக்கம் இது. இம் முறையும் சந்தோஷமாகக் கழிந்தது நேரம். miming game இல் படத்தின் பெயர் கண்டுபிடிக்க வேண்டிய முறை எனதானபோது தோழிகள் கையை விரித்துக் காட்டினார்கள். மலர் என்றேன். வேறு என்று காட்ட பூ என்றேன். உடனேயே என்னைக் காட்டினார்கள். சிவப்பு ரோஜா என்று நான் சொன்ன அடுத்த நொடி என் பின்னே இருந்த எதிரணி நண்பர் பெயரைச் சொல்லிப் புள்ளியை அள்ளினார். பூவைக் காட்டி என்னைக் காட்டியதும் சிவப்பு டிரஸ் போட்டிருந்ததால் சிவப்பு ரோஜா என்றேன். ஆனாலும் இனி எப்போதும் என்னை இதை வைத்துக் கலாய்க்கப்படும் என்பது உறுதி. படத்தின் பெயர் ‘பூவே உனக்காக’ அவ்வ்வ்வ்..

மே 17 சுதந்திர தினத்தன்று இரவு அரசாங்கமே வாண வேடிக்கை காட்டும். நாங்கள் வேடிக்கை மட்டும்தான் பார்க்க முடியும். ஆனால் வருஷத்துக்கு முதல் நாளும், வருஷத்தன்றும் தான் இங்கு பட்டாசுக்கு அனுமதி உண்டு. வருடம் முழுவதற்கும் சேர்த்து வைத்துக் கொளுத்திப் போடலாம். இம்முறை ஸ்னோவும் இல்லாததால் விபத்துகள் அதிகமாகி விடுமோ என்று பயந்து கொண்டிருந்த வேளையில் வந்து சேர்ந்தது மழை. பொதுவான ஒரு இடத்தில் செய்யப்படும் அரசாங்க வாணவேடிக்கைகளைப் போய் பார்க்கும் ஆசையை மழையும், குளிரும் கொளுத்திப் போட்டன.

021 022 சரியாக 30ஆம் திகதி ஆரம்பமாகும் பட்டாசு வியாபாரம். குறிப்பிட்ட இடங்களில் குட்டியாக டெண்ட் போட்டு பக்கத்திலே இந்த பட்டாசு பலூனையும் வைத்திருப்பார்கள். காற்றில் அது படபடவென்று சத்தம் போடுவது பட்டாசு வெடிப்பது போலவே இருக்கும். நாங்கள் போகவும் தீயணைப்புப்படை ஆட்கள் வந்து பட்டாசுக் கடையின் பாதுகாப்பை ஆராய்ந்து போகவும் சரியாக இருந்தது. பட்டாசுகளின் அளவு கொஞ்சமாக இருந்தாலும் விலை.. உஸ்ஸ்ஸ்ஸ்..

010 அம்மு என்றும் வெடிச் சத்தத்துக்கு பயந்ததில்லை. சது மூன்றாவது வயதில் தான் வெளியே வந்து வேடிக்கை பார்க்கவே ஆரம்பித்தார். ஆனால் இப்போது இருவரும் போட்டிக்குச் சுட்டுப் போடுவார்கள். மாலை ஐந்து மணியிலிருந்து ஆங்காங்கே ஆரம்பிக்கும் வெடிச் சத்தம். அதிலிருந்து அவ்வப்போது வண்ணமாய் ஆகிக் கொண்டிருக்கும் ஆகாயம். பனிரெண்டு மணிக்கு ஒட்டு மொத்த ஊரும் ஒருசேர வெடிக்கும்போது சத்தம் காதைப் பிளக்கும். பொரி பொரியாய், பொட்டுப் பொட்டாய், பூப்பூவாய், நட்சத்திரங்களாய் வெடித்து விழும் வண்ணச் சிதறல்களின் அத்தனை அழகையும் கண்விரித்து, வாய் பிளந்து பார்த்துவிட்டு வந்து எல்லோருமாய் சாமிக்கு விளக்கேற்றி வணங்குவோம். அடுத்த சில நிமிடங்களில் அக்காச்சியிடம் இருந்து தொலைபேசி வழி வாழ்த்து வரும். இப்படியாகத் தொடங்கும் எங்கள் புதுவருஷம்.

என்னால் முடிந்த வரை மொபைலில் படங்கள் எடுத்தேன். மழையால் வெளியே போய் முழுவதையும் காமராவிற்குள் அடக்க முடியவில்லை. இங்கே ஒரு ம்க்கும் போடச் சொல்கிறது மனசாட்சி.

008  019 023 026 027 

 

013 என்னுடைய அதிகபட்ச தைரியம் stjerneskudd என்று சொல்லப்படும் நம்ம ஊர் மத்தாப்பூ தான். மீதி எல்லாம் முக்கால் குடும்பமும் சுட்டுப் போட பார்வையாளாய் மட்டுமே (பதுங்கி) இருந்து கொள்வேன்.

 

 

புதுவருடம் பகுதி இரண்டில் 2011 பற்றியும், 2012இல் நான் என்ன செய்யப் போகிறேன் என்பது பற்றியும் சொல்கிறேன்.

மலர்ந்த இந்தப் புதுவருடம் அனைவருக்கும் நல்வாழ்வையும், மனநிறைவையும் கொடுக்க என்னப்பனை வேண்டிக் கொள்கிறேன்.