Pages

  • RSS

14 April, 2010

செருப்பு.. அப்பப்போ சப்பல்..

எல்லோருக்கும் எங்களோட இனிய சித்திரைப் புது வருட வாழ்த்துக்கள்.

சித்திரை வருஷம் தடல் புடலா கொண்டாடினதெல்லாம் ஒரு காலம். நான் அது பத்தி சொன்னாலும் பசங்கள பொறுத்த வரைக்கும் தை முதலாம் தேதிதான் புது வருஷம். இங்க வந்த புதுசுல சில ஃப்ரெண்ட்ஸ் வருவாங்க. இப்போ எல்லாரும் பசங்க, வேலைன்னு பிஸி ஆயிட்டாங்க. நினைவிருந்தா வாழ்த்துவாங்க. அவ்ளோதான். இதுவே ஊர்லன்னா.. அவ்வ்வ்.. இன்னைக்கு வேணாம். வருஷத்தன்னிக்கு சந்தோஷமா இருந்தாத்தான் வருஷம் பூரா  சந்தோஷமா இருப்பேன்னு நம்புறவ நான். (அச்சச்சோ.. அப்போ இந்த வருஷம் உனக்கு அம்புட்டுதானா?? ) அதனால எங்க ஊர்ல புது வருஷம் கொண்டாடுறது பத்தி வேற ஒரு நாளைக்கு எழுதறேன். ஆவ்வ்வ்.. (அதுக்கேண்டி நீ அழறே.. அவங்க இல்ல அழணும்)

சரி அத விடுங்க. இந்த ஊர்ல 86/87 ஆண்டுப் பகுதியில வந்த விண்டர் சீஸன் 62 நாட்கள் தொடர்ச்சியா ஸ்னோ இருந்த வருஷம்னு ரெக்கார்ட் பதிவாச்சு. அதாவது ஸ்னோ தொடர்ந்து கொட்டும்னு இல்லை. ஆனா மழைக்குப் பெயர் போன எங்க ஊர்ல மழை பெஞ்சு கரைஞ்சு போகாம இருந்தது. இந்த சீஸன் 2009/2010.. மொத்தம் 98 நாட்கள். புது ரெக்கார்ட். இடையில ரெண்டு நாள் மழைன்னாலும் ஸ்னோ கரையல.

இனிமே போதும். முடியலங்கிர ரேஞ்சுக்கு ஸ்னோல பிறந்து, தவழ்ந்து, அள்ளித் தின்னு வளர்ந்தவங்களே வந்திட்டாங்கன்னா, வந்தேறு குடிகளான நம்ம நிலை?? மழை பெய்து கரைஞ்ச ஸ்னோ கண்ணாடியாட்டம் ஃப்ரீஸ் ஆகாம இருந்ததால வழுக்கி விழுந்து டேமேஜ் ஆன மக்கள் + வாகனங்களோட எண்ணிக்கை இந்த வருஷம் குறைவு. நானும் இந்த வருஷம் சாதனை செஞ்சாச்சு. ஒரு நாள் கூட ஆஃபீசுக்கு கண்ணாளன் கூட்டிப் போல. பஸ்லவும் போல. (சில பல நாட்கள் பரவால்ல நீயே தைரியமா போனு அவர் சொல்லிட்டார்னு பயத்தில நடுங்கி கிட்டே அவர திட்டிக்கிட்டு ட்ரைவ் பண்ணது யார்டி சுசி?? நீயா என்ன??)

அதையும் விடுங்க. தலைப்பு பத்தி சொல்லணும்ல. கண்ணன் மேல கோவம்  எனக்கு. ஒரு கட்டத்தில இனிமே என்ன செருப்புன்னு கூப்டுன்னு சொன்னேன். சொன்னது தப்புனு உணர்ந்து சாரி சொன்னேன். சிரிச்சுக்கிட்டே எதுக்கு சாரின்னிச்சு. இல்ல நான் அப்டி சொன்னது உனக்கு வருத்தமா இருந்திருக்கும்னு நினைச்சு சாரி சொன்னேன். ஆனா இப்போ உன் சிரிப்பு பாத்தா அப்டி இல்லைன்னு  தோணுது. அப்பப்போ ஒரு சேஞ்சுக்கு சப்பல்னும் கூப்டுன்னேன். நான் சொன்னது சரிதானுங்களே.. செருப்பு.. சப்பல்.. இதில எந்தப் பெயர் எனக்கு நல்லா இருக்கும்??

ரெக்கார்ட் வச்ச ஸ்னோவ ஊரெல்லாம் அமர்க்களமா படம் பிடிச்சாங்க. நானும் எங்க வீட்ல இருந்த ஸ்னோவ படம் பிடிச்சிருக்கேன். ராமலக்ஷ்மி அக்கா மன்னிச்சிடுங்க.. உங்கள மாதிரி முத்து முத்தா கவிதையா எடுக்க தெரியல எனக்கு. வெயில் பட்டு இறுகிப் போன ஸ்னோ அப்டியே டைமன்ல கம்பளம் செஞ்சு விரிச்சு வச்சா மாதிரி ஜொலிச்சுது பாருங்க.. அப்போ உங்கள நினைச்சேன்.

IMG_9023 பால்கனில இருந்து பாத்தா முன்னாடி இருந்த எதையும் காணோம்.

 

 

 

IMG_9026IMG_9025  கராஜ் கூரை மேல.

IMG_9031 IMG_9032

பின் பக்கம். இதுக்கு மேல கதவு திறக்க முடியல.

IMG_9068 IMG_9036 IMG_9073

இன்னொரு பால்கனி.. கதவே திறக்க முடியல.

IMG_9037 IMG_9038 IMG_9039 IMG_9040

வீட்டோட முன்பக்கம். பசங்க உழுது வச்சிருக்காங்க.

IMG_9041 IMG_9045

அநாதரவா புதைஞ்சு போய் இருக்கிற பேப்பர் ரீசைக்கிள் பின். நல்ல வேளை குப்பை போடற பின்ன முன்னாடியே எடுத்து கராஜ்ல வச்சிட்டோம்.

IMG_9048 IMG_9056 IMG_9057 IMG_9058 பள்ளத்தில ஃபுட்பால் க்ரவுண்ட், நெருங்க முடியாத நிலையில போஸ்ட் பாக்ஸ், ரோட்.

IMG_9047 வீட்ல இருந்து ரோடுக்கு போம்போது வழுக்கிச்சுன்னா ஒண்ணு  எதுக்க இருக்கிற பள்ளத்தில குபீர். இல்ல ரெண்டு பக்கமிருந்தும் வர வண்டி மேல டமார். 

 

 

IMG_9054 சைட்ல.. மேல இருக்குற வீடுகளுக்கு போறத்துக்கான படிக்கட்டு. நடக்க இல்லை. சறுக்க மட்டும்.

 

 

 

 

 

IMG_9049IMG_9055

ரோட்ல, நடைபாதையில இருக்கிற ஸ்னோவ அள்ளிக் கொண்டு போய் பள்ளத்தில கொட்டறாங்க.. வசதி இல்லாத இடங்கள்ல லாரில அள்ளிட்டுப் போய் குளங்கள்ல கொட்டினாங்க.

இப்பவே படங்கள் ஜாஸ்தி ஆயிடுச்சு. அதனால இப்போ ஸ்னோ விட்டுப் போயிருக்கிற மிச்ச சொச்சங்கள இன்னொரு பதிவில பார்க்கலாம்.

மீண்டும் புது வருஷ வாழ்த்துக்கள்.

வர்ட்டா..

11 April, 2010

கோக் சாப்டா சரி ஆய்டும்..

-சரியா இந்த இடத்தில என் மொபைல் திடீர்னு துளி துளி துளி மழையாய் வந்தாளேனு பாடிச்சு.. எங்க நேரம் இரவு 22:00. டிஸ்ப்ளேல என்னவர் பெயர பாத்ததுமே பரபரப்போட  ஹலோன்னு சொன்னேன்.. விபரம் அடுத்த பதிவில..

மேலும் விபரங்களுக்கு இங்க கிளிக்குங்க.

= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =

இப்போ அங்க சொன்ன அடுத்த பதிவான இந்த பதிவுக்கு வாங்க..

 ஹலோ..

ஏய் டாக்டர் சதுவுக்கு appendicitis ஆகி இருக்கலாம்னு சொல்றார்.. சீக்கிரம் ரெடியாகு ஹாஸ்பிடல் போணும்.. அம்மா அக்கா கூட வரணும்னு அடம் பிடிக்கிறார்.. வந்துட்டு இருக்கேன்..

கடவுளே என்னப்பா சொல்றீங்க.. என்ன ரெடியாகுறது.. இதோ இறங்கிறேன்.. சீக்கிரம் வாங்க..

அத்தனை கடவுளையும் வேண்டிக்க ஆரம்பிச்சேன்.. இன்னும் அம்மு குடுத்த அதிர்ச்சியில இருந்தே நான் முழுசா வெளியில வரல.. இப்போ இது.. என் குட்டிக் கண்ணன்.. வலி தாங்க மாட்டாரே.. என்ன செய்வேன் நான்.. அம்மு கூடவே இருந்து கேட்டுட்டு இருந்தவங்க பிஜாமாஸ் சேஞ் பண்ணிட்டு ரெடி ஆகி எனக்கும் ஷூஸ் எடுத்துக் கொடுத்து ஹெல்ப் பண்ணாங்க. பாவம் தம்பின்னும் அடிக்கடி சொல்லிட்டு இருந்தாங்க.

இன்னமும் என்ன ஆச்சுன்னு சொல்லலை இல்லை. இங்க இப்போ ஸ்டமக் ஃபீவர் சீஸன். ஒரு வகையான வைரல் ஃபீவர். தலை வலிக்கும், செம டயர்டா இருக்கும், குமட்டல், சமயத்தில வாந்தி, இனித்தான் மெயின்.. வயித்து வலீஈஈஈஈஈஈ.. ஸ்கூல்ல இருந்து முதல்ல கொண்டு வந்தவங்க அம்மு.. அடுத்து எனக்கு, கண்ணாளனுக்கு கடைசியா சதுவுக்கு. ஸ்கூல் முடிச்சு வந்து இருந்தவர் நைட்டு எட்டு மணி போல வலியில ரொம்ப கஷ்டப்பட்டார். கண்ணாளன் எமர்ஜன்சிக்கு கூட்டிப் போனார். இதுக்கு மெடிசின் கிடையாதுன்னு தெரிஞ்சாலும் டாக்டர் கிட்ட போனா அவருக்கு ஓக்கேவா இருக்குமேன்னுதான் கூட்டிப் போனார். நானும் அம்முவும் அவங்க வந்ததும் தூங்கலாம்னு வெயிட் பண்ணிட்டு இருந்தோம். பெயர்தான் எமர்ஜன்சியே தவிர டாக்டர பாக்க குறைஞ்சது ரெண்டு மணி நேரமாகும். அது வரைக்கும் நர்ஸ்தான் அப்பப்போ வந்து செக் பண்ணுவாங்க.

கார்ல நாங்க ஏறினதும் அழ ஆரம்பிச்சிட்டார்.                                  

அழாதிங்க கண்ணா.. எதுவும் ஆகாது.. அதான் ஹாஸ்பிடல் போறோம்ல..

ஊசி போடுவாங்க..                                                                                     

போடுவாங்க ஆனா பசங்களுக்கு வலிக்காம பாத்துப்பாங்க..                     

என் வயித்த வெட்டப் போறாங்க..                                                       

அதெல்லாம் ஒண்ணும் பயம் இல்லை.. அம்மா வயித்த ரெண்டு தடவை வெட்டித்தானே நீங்க ரெண்டு பேரும் பிறந்தீங்க..                                      

தம்பி.. எனக்கு கூட ஒரு தடவை ஆபரேஷன் பண்ணாங்களே.. மறந்துட்டீங்களா?? அதுவும்  முதலாம் வகுப்பில..                             

அப்பாவுக்கு கூட ரெண்டு தடவை முழங்கால்ல பண்ணாங்களேப்பா.. இப்போல்லாம் லேசர்லவே வயித்த வெட்டாம ட்ரீட்மெண்ட் குடுப்பாங்க தெரியுமா..                                                                                                       

ஆஆஆஆ.. லேசராஆஆஆ.. லேசர் வச்சு சுட்டா நான் செத்துப் போய்டுவேனே..

வேற ஒண்ணும் இல்லைங்க. பசங்களோட அத்தனை கேம்ஸ்லயும் லேசர் வெப்பன்ஸ் வச்சு எதிரிய சுட்டு வீழ்த்துறதா வருதில்லையா.. அவர் பயம் போகட்டும்னு சொன்னது இப்டி ஆயிடிச்சு.. மறுபடி அவர சமாதானம் பண்ணி கார் பார்க் பண்ணிட்டு எல்லாரும் இறங்கினா அவர் இறங்கணுமே.. ஒரு வழியா இறங்க வச்சு எமர்ஜன்சி போணும்னா சிவப்பு லைன பிடிச்சு போங்கனு இருந்தத படிச்சு உள்ள போனோம். டாக்டரோட ரெஃபரல் பாத்து இவர இப்போ எப்டி இருக்குனு கேட்டா வலியா.. எனக்கா.. கிடையவே கிடையாது ரேஞ்சுக்கு பேச ஆரம்பிச்சிட்டார். அவர் பயத்திலதான் அப்டி சொல்றார்னு சொன்னோம். ஒரு மேல் நர்ஸ்தான் வந்தார். “ஹலோ யங் மேன்.. என் பெயர் ஹூல.. உங்க பெயர்”னு ஆரம்பிச்சு பேச்சு குடுத்துக் கிட்டே ஒரு பெட்ல படுக்க வச்சு இன்னொரு ரூமுக்கு கொண்டு போனார். ரூமுக்குள்ள இருந்த அத்தனை  உபகரணங்களும் தன்ன செக் பண்ணத்தான்னு நினைச்சு இன்னமும் அழுகை பெருசாயிடிச்சு. மறுபடி நர்ஸ் தன் பேச்சால வசியம் பண்ணி யூரின் டெஸ்ட் எடுத்தாச்சு. இப்போ ப்ளட். அம்மா கண்ண மறைங்க.. அப்பா கைய்ய பிடிங்கனு சொல்லி ஊசி குத்தியாச்சு. இதோ பாரு உன் ப்ளட் எவ்ளோ அழகா இருக்குனு அவர் சொன்னதும் எட்டிப் பாத்தவர் என்ன இத்தன புட்டில எடுக்கறே?? என் ரத்தம் முழுக்க எடுத்து முடிக்க போறியானு கேட்டு லைட்டா பயத்தோட சிரிச்சார்.

நர்ஸ் “பயந்தா மாதிரி appendicitis இல்ல.. அதுனா வலி ஜாஸ்தி ஆயிட்டே போகும். இது வேற எதுவோ தான்.. பாக்கலாம்.. யூரின் ரிசல்ட் க்ளியரா இருக்கு. ப்ளட் ரிசல்ட் வந்ததும் டாக்டர் வருவார். அது வரைக்கும் நீ ஒரு துளி தண்ணி கூட குடிக்க கூடாது. சமத்தா இருக்கணும். அப்டி எதுனா டவுட்னா உன்ன இன்னைக்கு ஆப்ஸர்வேஷன்ல வச்சிருப்போம். இல்லைன்னா நீ வீட்டுக்கு போலாம்”னார். நான் தனியா இருக்க மாட்டேன் அம்மாவும் என் கூட இருக்கணும்னு மறுபடி அழுகை. மறுபடி சமாதானம் பண்ணிட்டு அப்புறமென்ன.. ரிசல்டுக்கு வெயிட்டிங்தான்.

அழுத களைப்பில அவர் தூங்க ஆரம்பிச்சிட்டார். அம்முவுக்கும் சாமம் ஒரு மணி ஆயிட்டதால கண்ணு சொக்க ஆரம்பிச்சிடுச்சு. கண்ணாளனும் அதே அதே.. 01:50 க்கு டாக்டர் வந்தார். ஒரு வழியா இவர எழுப்பி விட்டோம். இது வரை வந்த ரிசல்ட்ல எந்த ப்ராப்ளமும் இல்லை. மீதி வந்ததும் எதுனா டவுட்னா நாங்க காண்டாக்ட் பண்றோம். மறுபடி வலிக்குதுனு சொன்னார்னா டைரெக்டா இங்க வாங்க. மத்த படி நீங்க இப்போ வீட்டுக்கு போலாம்னு வயித்தில பால வார்த்தார். அப்போதான் எனக்கு நமக்கு வந்த தண்ணீர் சப்ளை ப்ராப்ளம் நினைவுக்கு வந்து சொன்னேன். அதுன்னா டயரியா பிச்சுக்கும். அதான் அதுக்கு முதல் சைன். இவருக்கு வெறும் வலிங்கிறதுனால இது வைரஸ்தான்னு சொன்னார்.

Bilde004

அவர் ஸ்கூல் போகல. நான் லீவ் எடுத்துட்டேன். புதன் டு வெள்ளி.. ராத்திரில வலிச்சா உடனவே அம்மாவ எழுப்புங்கனு சொல்லி எங்க ரூம்லதான் அவர் தூங்கறார்.

 அம்மா..                                                                                                                         

ம்.. என்னடா செல்லம்..                                                                                   

வயித்த வலிக்குதும்மா..                                                                                           

ஓ.. சரி தூங்குங்க.. அம்மா வருடி விடறேன்..                                          (லைட்டா கண்ண திறந்து பார்த்தேன் மணி 03:14. வெள்ளி அதிகாலை)

அம்மா..                                                                                                            

என்னப்பா.. இன்னமும் வலிக்குதா..                                                     

இல்லம்மா.. கொஞ்சம் கோக் சாப்டா சரி ஆகும்னு நினைக்கிறேன்.

கோக்காஆஆ..                                                                                                     

எனக்கு இப்போ சரி ஆயிடிச்சுன்னு நீங்க இன்னைக்கு பூரா கோக் குடுக்கல இல்ல.. அதான் எனக்கு வயித்த வலிக்குதுனு நினைக்கிறேன்..

சரிப்பா எடுத்துட்டு வரேன். கொஞ்சம்தான் குடிக்கணும் ஓக்கேவா..             

ம்ம்..

இப்போ இந்த ரேஞ்ச்ல போயி கிட்டு இருக்கு. இங்க பசங்களுக்கு வயிறு சரியா இல்லைனா கோக் குடுக்கிறது பாட்டி வைத்தியம். எங்களுக்கு சின்ன வயசில சோடா காய்ச்சல்னு ஒண்ணு வரும். மருந்தே இல்லாம அவரவருக்கு பிடிச்ச சோடா சாப்டா அன்னிக்கே சரி ஆய்டும். ஒரு பாட்டிலையும் தனிய்ய்யா அவங்களே சாப்டுறதுதான் பாயிண்டே. அதே கதைதான் இங்கவும் நடக்குது. அம்மு சும்மான்னா விட மாட்டாங்க. தம்பி அழுதது அவங்களுக்கு ரொம்ப கஷ்டமா ஆயிட்டதால விட்டிருக்காங்க.

என் செல்லங்கள் குறையே இல்லாம ஆளாளுக்கு கலங்க வச்சிட்டாங்க. இப்போ தனக்கு ஹாஸ்பிடல்னா எந்த பயமும் இல்லைனு சொல்ற அளவுக்கு அவருக்கு தைரியம் குடுத்த நர்ஸுக்கு தான் அன்னிக்கு நிறைய நன்றி சொன்னோம். மேல் நர்ஸ் அன்பா பாத்துக்க மாட்டாங்கன்னு எனக்கு இருந்த ஒரு அபிப்பிராயத்த அடியோட மாத்தின அந்த ஹூல..

பங்கக பிங்கோ பாங்கோ.. அதாங்க.. எங்கிருந்தாலும் வாழ்க..

இத எழுதி முடிச்சிட்டு நிம்மதியா தூங்கிட்டேங்க.. வ போ ஞாயிறு போஸ்ட் செஞ்சு உங்க நிம்மதிய குலைக்கலாமேன்னுட்டு. என் மொபைல் திடீர்னு பாடிச்சு.. சிறகடிக்கும் நிலவு கரம் பிடித்ததென்னை.. பாட்ட ரசிக்க முடியாம பயத்தோட பார்த்தேன் டிஸ்ப்ளேல புது நம்பர்.. ஏற்கனவே நடுங்கிட்டு இருந்த கையால ஒரு வழியா எடுத்து விழுந்திடாம இறுக்கி பிடிச்சிட்டே சொன்னேன்.. ஹஹஹலோலோ.. வெறும் காத்து தாங்க வந்துது.. மீதி அ டு த் த ப தி வு ல..

வர்ட்டா..

07 April, 2010

ஒரு யுகமாய் ஒரு மணித்துளி..

திங்களும் இங்க ஈஸ்டர் லீவுங்கிரதால வழக்க விரோதமா ஞாயிறு அதுவுமா முழுக் குடும்பமும் சீக்கிரமே எந்திரிச்சோம். மலைக்கு ஒரு டூர் போய்ட்டு வரலாம்னு கண்ணாளன் முத நாளே சொல்லி இருந்தார். நான் வீட்ல தலைக்கு மேல வேலை இருந்ததால போகல. ஒரு பத்தரை மணி போல புறப்பட்டாங்க. நான் அப்பப்போ ஃப்ரெண்ட்ஸ் கிட்ட பேசிக்கிட்டே வேலை செஞ்சுட்டு இருந்தேன். ஒரு மணி இருக்கும். என் மொபைல் திடீர்னு துளி துளி துளி மழையாய் வந்தாளேனு பாடிச்சு.. டிஸ்ப்ளேல என்னவர் பெயர பாத்ததுமே இன்னைக்கு சமையல் பண்ணாத வெளிய சாப்டலாம்னு சொல்ல போறாரோன்னு சந்தோஷமா ஹலோன்னேன்..

 

இப்போ நாங்க மலைக்கு டூர் போறது பத்தி சின்னதா சொல்றேங்க.. என்னோட ஒரு ஃப்ரெண்டு கேட்டுது ”எப்டி? பார்க்குக்கு போறா மாதிரி மலை மேல டூர் போவீங்களா”னு. அதே தாங்க. இங்க எங்க ஊர்ல மொத்தம் ஏழு மலை இருக்கு. அப்டியே ஊர சுத்தி, தொடரா. அதில ஒண்ணு எங்க வீட்டுக்கு எதிர்க்க இருக்கு. போன வருஷம் சம்மர்க்கு நாங்களும்  ஏறிப் பாக்கலாம்னு போனோம். அவ்ளோ நல்லா இருந்துது. (கஷ்ட நஷ்டங்கள் இன்னொரு பதிவில கண்டிப்பா சொல்வா பாருங்க)

 

ஹலோ..

லச்சு வீட்டுக்கு வந்திட்டாளா?

என்னப்பா.. நீங்க கூட்டிட்டு போய்ட்டு வீட்டுக்கு வந்துட்டாளான்னா..

இல்லடி.. பாதி வழி வந்ததும் முன்னாடி இறங்கட்டுமான்னா.. சரி போயி கீழ கார் பக்கத்துல வெயிட் பண்ணுங்கனு சொன்னேன். இங்க வந்து பாத்தா காணோம்டி..

என்னப்பா சொல்றீங்க.. எதுக்கு அவள தனியா விட்டீங்க.. என்னப்பா இது ஏன்..

சரி சரி ஃபோன வை. நான் மறுபடி ஏறிப் பார்க்கறேன்..

 

கடவுளே.. எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல.. பேசிக் கிட்டு இருந்த ஃப்ரெண்ட் கிட்ட விஷயத்த சொன்னேன். அதுக்கு என்ன பத்தி நல்லாவே தெரியும்கிறதால சொல்லிச்சு. “ஒண்ணும் ஆகாது. பயப்படாத. அவ அங்கதான் நிப்பா.. அவர் பாத்துப்பார்”னு.  இருந்தாலும் வெளிய மலைய பார்க்கிறதும் அது கிட்ட எதுனா சொல்றதும்னு ஜன்னலுக்கும் பால்கனிக்குமா ஒரு பத்து நிமிஷம் ஓடினேன்.. அவருக்கு கால் பண்ணேன்..

 

என்னப்பா..

இரு.. பாக்கறேன்..

சத்தமா கூப்டு பாருங்களேன்..

இல்லடி.. இரு.. அதான் நான் ஏறிட்டு இருக்கேன்ல.. சந்திரன் அடுத்த வழியால ஏறிட்டு இருக்கார்..

ஐயோ.. மழை வேற பெய்ய போதுப்பா.. யாரும் கூட ஏறிட்டு இருக்கிறவங்க கிட்ட ஹெல்ப் கேளுங்களேன்.. இல்லேன்னா  நான் வரட்டா..

நீ இங்க எங்கனு வருவே.. நான் பாத்துக்கறேன். இரு..

 

மறுபடி மனசு அடிச்சுக்க ஆரம்பிச்சுது. பிள்ளையாரே.. என் குழந்தை பாவம் தவிக்கப் போறாளே.. மழையும் தன் பங்குக்கு மிரட்ட ஆரம்பிச்சுது. என் தங்கம் தவிச்சுக்கிட்டே ஓடறா மாதிரி ஒரு எண்ணம் வந்துது.. அடி வயித்தில இருந்து ஒரு வலி வந்துது பாருங்க.. என் ஃப்ரெண்டு மட்டும் இல்லேன்னா என் இதயம் நின்னு போயிருக்கும். அழுது கிட்டே எல்லா கடவுளையும் வேண்டிக்கிட்டு மறுபடி ஃபோன்..

 

என்னடி.. இன்னும் காணல..

என் தங்கம் பயந்துடப் போறாப்பா.. போலீஸ்ல சொல்லிடலாமா.. எனக்கு பயமா இருக்குப்பா..

இல்ல.. இரு பாக்கலாம். இங்க ஒருத்தர் கிட்ட வழி கேட்டிருக்கா.. அவரும் தேடிட்டு இருக்கார். வை ஃபோன.. பாக்கலாம்..

 

இப்போ அரைமணி போயாச்சு. இன்னொரு ஃப்ரெண்டுக்கு ஃபோன் பண்ணேன். அவர் உடனவே என்னவர் கிட்ட பேச அவர இன்னொரு வழியால வர சொல்லி சொல்லி இருக்கார். அவர் ”பயப்பிடாதீங்க.. இதோ நான் போயிட்டே இருக்கேன். போலீஸ்லாம். வேணாம். நாங்க பாத்துக்கறோம்”னார். இதுக்குள்ள இன்னும் ரெண்டு தரம் கண்ணாளன் கிட்ட பேசிட்டேன். இது மூணாவது கால்..

 

என்னப்பா..

என்ன.. மலை உச்சிக்கு வந்துட்டேன். காணோம்.. இரு..

இல்லைப்பா.. இப்பவாவது போலீசுக்கு ஃபோன் பண்ணுங்க.. என்னால தாங்க முடியலைப்பா..

சரி நீயே பண்ணு.. நான் இன்னும் கொஞ்சம் தேடறேன்.

 

கை நடுங்க 112 அழுத்திட்டு அவங்க லைனுக்காக வெயிட் பண்றேன் டிங் டாங்.. காலிங் பெல்.. பால்கனி கதவ திறந்து ”லச்சும்மாஆஆஆஆ”ன்னேன் ஒரு எதிர்பார்ப்பில.. ”அம்மா அப்பா என்னய வெயிட் பண்ண சொல்லிட்டு தனியா விட்டிட்டு வந்திட்டார்”னு விசும்பலோட சொன்னா.. உங்க பொண்ணு பேச ஆரம்பிச்சதும் முத முதலா பேசினது என்னன்னு தூக்கத்தில எழுப்பி கேட்டாக் கூட இனிமே இத தாங்க சொல்வேன். எப்டியோ படி இறங்கி கீழ போயி கதவு திறந்து என் செல்லத்த அணைச்சதும் தான் என் உயிர் திரும்பி வந்துது.. உடனவே அவருக்கும் ஃப்ரெண்டுக்கும் சொல்லிட்டு, அவங்க ஈர உடுப்பெல்லாம் மாத்த வச்சு, மூஞ்சி கழுவி, சாமி கும்பிட வச்சு, சாமி முன்னாடி பணமும் எடுத்து வச்சேன். அவ அப்பா மாதிரி தைரியசாலி. இத்தனைக்கும் அவ பயப்பிடல. எப்டியாவது தான் வந்திடுவேங்கிற மனத் திடம் இருந்திருக்கு. அது படியே வீட்டுக்கு தனியா வந்தும் விட்டா. ஏற்கனவே ஸ்கூலால + அப்பா கூடனு நிறைய தடவ அதே மலையில ஏறி இருக்கா. அதனாலதான் அவர் தனியா இறங்க சம்மதிச்சதே.

 

ஒரே மலைக்கு ஏற இறங்க நிறைய வழிகள் இருக்குங்க. ஏழு மலையும் தொடரா இருக்கிறதால வழி தப்பி பக்கத்து மலைக்கு போகவும் வாய்ப்பு இருக்கு. நானும் அவரும் ஒரு தடவை அப்டி போயிருக்கோம். ப்ராப்ளம் என்னன்னா எல்லா வழியும் பெரும்பாலும் ஒரே மாதிரி இருக்கும். சில இடங்கள்ள வெறும் பாறையா இருக்கும். நாமதான் கரெக்டா போகணும். இவங்களும் இறங்கும் போது வேற இடத்துக்கு போயிட்டாங்க. அப்புறம் மறுபடி மேல ஏறி கரெக்டா இறங்கிட்டாங்க. அப்போதான் ஒருத்தர் கிட்ட வழி கேட்டது. பக்கத்து வீட்டுக்கு போறாங்கன்னாலே மொபைல் கொண்டு போங்கம்மான்னு சொல்வேன். அன்னிக்கு என்னமோ எனக்கு அது தோணவே இல்லை. அவங்க மொபைலும் எடுத்து போகல. என்னவரும் ரொம்ம்ம்ம்ம்ப பயந்துட்டார். ஒரு மணி நேரம்.. நாங்க பட்ட அவஸ்தை இருக்கே.. யாருக்கும் அது வரக் கூடாதுங்க. குட்டித் தளபதி சொன்னார் ”அக்கா இனிமே நீங்க எங்கள விட்டு போக கூடாது. எனக்கு பயத்தில அழுகையே வந்துச்சு தெரியுமா”ன்னு. பாவம் இவர் கூட போன ஃப்ரெண்ட் சந்திரன் பசங்க ரெண்டு பேர் + சது இவ்ளோ கூத்துக்கும் வண்டில தனியா உக்காந்திருந்தாங்க.

 

ஒரு தடவை இப்டி ஆனத்துக்காக அவங்க தைரியத்த கெடுக்க வேணாமேன்னுட்டு இதோ இன்னைக்கும் அவரும் பசங்களும் டூர் போனாங்க.  ”மொபைல் எடுத்தீங்களாம்மா, அப்பா கூடவே போகணும், தனியா போயிட கூடாது”ன்னு சொன்னத்துக்கு சரிம்மான்னு சமத்தா தலை ஆட்டிட்டு போய் வந்து இதோ இப்போ எப்டி இருந்தது டூர்னு சொல்லிட்டு இருக்காங்க. பனையால விழுந்தவன மாடேறி மிதிச்சா மாதிரி என் அம்மாவும் அக்காவும் என்னய போட்டு கிழி கிழினு கிழிச்சுட்டாங்

 

-சரியா இந்த இடத்தில என் மொபைல் திடீர்னு துளி துளி துளி மழையாய் வந்தாளேனு பாடிச்சு.. எங்க நேரம் இரவு 22:00. டிஸ்ப்ளேல என்னவர் பெயர பாத்ததுமே பரபரப்போட  ஹலோன்னு சொன்னேன்.. விபரம் அடுத்த பதிவில..

 

இப்போ நேரம் எங்க நேரம் அதிகாலை 02:35. தொடர்ந்து படிங்க. இத எங்க விட்டேன்.. ஆங்.. கிழிச்சுட்டாங்க. அம்மா சொன்னாங்க ”உன் அக்காவுக்கு பெண் குழந்தை இல்லையேங்கிர கவலை இனிமே எனக்கு இல்லடிம்மா. இருக்கிறத பாத்துக்க முடியாம நீ பண்ணுறதே போதும் எனக்கு”னு. அக்கா அதுக்கும் மேல போயி “இதோ பாரு இது ரெண்டாவது தடவை. (ஓ.. அப்போ முதல் தடவை என்ன ஆச்சுன்னும் இன்னொரு போஸ்ட்ல சொல்லப் பேறியாஆ?) உன்னால வளர்க்க முடியலைன்னா குடுடி. என் செல்லத்த நான் வளர்த்துக்கறேன்”னு மிரட்டறா. செலவப் பாக்காம டிக்கட்ட போட்டு வந்து கூட்டிட்டுப் போயிடுவாளோன்னு பயந்து வருது எனக்கு.  அண்ணன்கள் ”என்னடி இது கவனமா பாத்துக்கோ”ன்னாங்க. மாமியார், மச்சினர்கள் கிட்ட பேசவே பயமா இருக்கு. அப்பா சொன்னார் ”நீ ஏற்கனவே நொந்து போய் இருக்கேன்னுட்டு நான் எதுவும் சொல்லலைம்மா.. ஆனா எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு, கோவமாவும்”னார்.

 

நான் என்னங்க வேணும்னா செஞ்சேன்.. அவங்க பயம் கோவமாகி திட்டிட்டாங்க. இனிமே என்ன.. உங்க பங்கையும் தீர்த்திடுங்க.

 

வர்ட்டா..

04 April, 2010

சாது மிரண்டால்..

பசங்களுக்கு பள்ளியில பெற்றோர் சந்திப்பு வச்சாங்க. போன அரையாண்ட விட இப்போ முன்னேற்றம் இருக்குன்னு சொன்னாங்க. ரெண்டு பேர் டீச்சருங்களும் ரொம்ப சந்தோஷப்படறாங்களாம் இவங்க ஸ்டூடண்ட்சா கிடைச்சத்துக்கு. அவங்க நிறைய சொன்னாங்கங்க. நான் ரொம்ப சமத்துன்னு மட்டும் எழுதிடறேன். (படிக்கிற நீங்க பாவம்ல) விஷயம் சின்னதா இருந்தாலும் கேக்கும்போது.. ஈன்ற பொழுதில்..

 

சின்ன வயசில இருந்து சது ஒரு ஜெண்டில்பாய்னு சொல்லி இருக்கேன். அவர விட சின்னப் பசங்க அடிச்சிட்டாங்கன்னா கூட திருப்பி அடிக்க மாட்டார். நர்ஸரி டீச்சர் சொன்னாங்களாம் யாரையும் அடிக்க கூடாது, அதிலயும் உங்கள விட சின்னப் பசங்கள அடிக்கவே கூடாதுன்னு. ஸ்கூல் சேர்ந்ததும் தான் ப்ராப்ளமாச்சு. நிறைய புது பசங்க. அப்போ என் கண்ணாளன் ஒரு நாள் சொல்லி வச்சார். யாராவது அடிச்சா உங்களுக்கு வலிக்குதில்ல. அதே மாதிரி நீங்க அடிச்சாலும் அவங்களுக்கு வலிக்கும். திருப்பி அடிச்சிங்கனா வலியோட பயத்தில மறுபடி அடிக்க மாட்டாங்க. இல்லேனா ஒரு விளையாட்டு மாதிரி எப்பவும் உங்கள சீண்டிப் பாப்பாங்கனு. இருந்தாலும் அவரால அத முழுசா ஒத்துக்க முடியல. சின்னப் பசங்க அடிச்சா எங்க கிட்ட சொல்வார். இனிமேல திருப்பி அடிச்சிடுவேன். ஏன்னா எனக்கு வலிக்குது அப்டினு. எங்க ஃப்ரெண்ட் ஒருத்தங்க பையனுக்கு ஒண்ணு வச்சிட்டார். அவர் இப்போ அண்ணா அண்ணானு ரொம்ப மடக்கம்.

 

க்ளாஸ் பையன் ஒருத்தர் ஓவரா டார்ச்சர் குடுத்திட்டார். இவருக்கு வந்த கோவத்தில அவர விரட்டி விரட்டி அடி.. அவர் பாத்ரூம்ல போயி தாழ்  போட்டுட்டு வெளிய வர மாட்டேனு அழுது கடசில டீச்சர் போயி சது அந்த ஏரியாலவே இல்லனு சொல்லி சமாதானம் பண்ணி தான் வெளிய வந்தாராம். அடுத்து ஒருத்தர் கூட சண்டை போட்டப்போ இவர் டீச்சரால விலக்கி விட முடியாம போக இன்னொருத்தங்க வந்து ரெண்டு பேருமா கஷ்டப்பட்டு பிரிச்சு விட்டாங்களாம். டீச்சர் சொன்னாங்க. ”அவ்ளோ கோவமா அன்னிக்குதான் நான் உன்ன பாத்தேன். வழக்கமா சண்டைக்கு நீயா போறதில்ல. அன்னிக்கு உனக்கு கோவம் வந்தது நியாயம்தான் இருந்தாலும் நீ அடிக்கிற அளவுக்கு போவேன்னு நான் நினைக்கல சது”னு.. உடனவே இவரு சொன்னார். ”நானா அடிக்க நினைக்கல அப்பாதான் சொன்னார் அடினு.” லைட்டா கம்ப்ளைண்ட் மாதிரி டீச்சர் எங்க கிட்ட சொல்ல வந்தாங்க போல. என்ன இதுங்கிறா மாதிரி என்னவர ஒரு லுக்கு விட்டாங்க. என்னவர் சொன்னார் ”சும்மாவே தொட்டத்துக்கெல்லாம் சண்டை போடறவங்கன்ற ஒரு தப்பான அபிப்பிராயம் வெளிநாட்டவங்க மேல இங்க இருக்கு. அதிலயும் நாங்க ஆயுத சண்டைக்கு பெயர் போன நாட்ல இருந்து வந்தவங்க. பசங்களுக்கும் அது தெரியும். யாரும் அடிச்சா தற்காப்புக்காக திருப்பி அடிக்கிறதோ, தடுக்கிறதோ தப்பில்லைங்கிறத புரிய வைக்க ட்ரை பண்ணேன். அததான் சொல்றார்”னு.. சொன்னேன் ஆனா சொல்லலை ரேஞ்சுக்கு பேசினார். அப்டியே நர்ஸரி டீச்சர் சொன்னத நான் சொன்னேன். டீச்சர் சிரிச்சிட்டே சொன்னாங்க. ”புரியுது. சது தானா வம்புக்கு போக மாட்டார். எனக்கு நல்லாவே தெரியும். ஆனா வந்ததையும் விட மாட்டார். இது இனி எல்லாருக்கும் தெரியும். (பன்ச் டயலாக்??) அதனால பெருசா ப்ராப்ளம் ஒண்ணும் வராது. இருந்தாலும் நீங்களும் தெரிஞ்சுக்கணும்னுதான் சொன்னேன்”னாங்க.

 

அவர் இத முன்னாடியே எங்ககிட்ட சொல்லி இருந்தார். இருந்தாலும் அப்பாவ மாட்டி விடுவார்னு நாங்க எதிர்பார்க்கல. அதொண்ணும் இல்லிங்க. அந்தப் பையன் நிறைய்ய்ய கெட்ட வார்த்தை சொல்வாராம். அன்னிக்கு கெட்ட வார்த்தை சொல்லிட்டே அடிச்சிட்டு நீ கருப்பன் தானே அதனால நான் அடிச்சாலும் திட்டினாலும் நீ வாங்கிதான் ஆகணும்னு சொன்னாராம். அப்புறமென்ன.. சாது மிரண்டிட்டார். அதென்னமோ தெரிலிங்க. இவங்க உடனவே சொல்றது நம்ம நிறத்ததான். பசங்க கிளாஸ்ல நல்லா படிக்கிறாங்கன்னா உடனவே நிறத்த சொல்லி கிண்டல் பண்ணுறது பெரிய வகுப்புகள்ள நிறையவே இருக்கு. இவங்க அதை எல்லாம் கண்டுக்காம படிச்சு மேல வரது இவங்க சாம்ர்த்தியம்.

 

நான் கூட எத்தனையோ தடவ கேட்டிருக்கேன். சுள்ளுனு கோவம் வந்தாலும் ஒண்ணும் சொல்ல மாட்டேன். அப்பாவப் பாத்து கத்துக்கிட்டது. பேசாம ஒரு சிரிப்போட போயிட்டோம்னா அதுவும் கூட அவங்களுக்கு செருப்படிதான். இருந்தாலும் ஏன் இப்டி இருக்காங்கன்னு வலிதான் கொஞ்ச நாளைக்கு மனச போட்டு வதைக்கும். நல்ல வேளை அப்போல்லாம் பக்கத்தில என் கண்ணன் இல்லையேனு நினைச்சுப்பேன். சின்ன சின்ன விஷயங்களுக்கு ஊரையும் உறவுகளையும் தேடி ஓடற மனச இழுத்து வச்சிக்கிட்டு, இந்த நாட்டோட காலனிலை தொடக்கம் கலாச்சாரம் வரைக்கும் எங்கள மாத்திக்கிட்டு வாழற வாழ்க்கையோட கஷ்டம் புரியுமா இவங்களுக்கு.

 

ஆஃபீஸ்ல இது வரைக்கும் ஒரு தடவை கூட எனக்கு விஷ் பண்ணாத ஏன் ஒரு ஹாய் கூட சொல்லாத ஒருத்தர் இருக்கார்னா பாருங்களேன். ரிஸப்ஷன்ல நிக்கிறப்போ, கிச்சன்ல காஃபி எடுக்க போறப்போ, லிஃப்ட்ல, இல்ல எதிர்க்க கடந்து போறப்போ சமயத்தில சிலர் கண்களுக்கு எப்டித்தான் நான் தெரியாம போறேனோங்கிறது எனக்கு இன்னமும் தெரியாத, புரியாத ஒண்ணு. (அதுவும் இவ்ளோ பெரிய உருவம் தெரியலைன்னாஆ.. அதையும் சொல்லேண்டி சுசி) அதுக்காக நான் அலட்டிக்கிறதில்ல. எங்க டீம் லீடர் நான் வேலைக்கு சேர்ந்த புதுசில ட்ரெய்னிங்ல இதையும் கத்துக் குடுத்தா. யாரெல்லாம் கண்டுக்காம போறாங்களோ அவங்கள பாத்து சத்தமா ஹாய் சொல்லு.. அடுத்த வாட்டி அவங்களாவே சொல்வாங்கனு. எனக்கு என்னமோ அது சரியா படலை. அதனால என் கண்ணன் சொல்றத செஞ்சிடுவேன். அது சரியானு சொல்லுங்க.

பிடிக்கலேன்னா போயிட்டே இரு..

வரட்டா..

31 March, 2010

விண்ணைத் தாண்டிய தமிழ் அவதாரம்..

அன்னிக்கும் பயங்கர ஸ்னோ.. இருந்தாலும் அதையும் தாண்டி ரொம்ப எதிர்பார்ப்போட போனேன். கண்ணாளன வேற உசுப்பேத்தி கூட கூட்டிட்டு போயாச்சு. அதே க்ரூப். அதாவது எங்க நண்பர்கள் வட்டம். ஒருத்தர் இது பசங்களுக்கு புரியாத படம் அதனால அவங்கள நான் bowling center கூட்டிப் போறேன்னு சதுவ பொறுப்பெடுத்தார். லச்சும்மா அவங்க ஃப்ரெண்டி வீட்டுக்கு போனாங்க. தியேட்டர் உள்ள போனா எந்த தமிழ் முகத்தையும் காணோம். இருங்கப்பா இவ்ளோ மோசமா ஸ்னோ கொட்டும்போது எல்லாரும் நம்மள மாதிரியே சீக்கிரமா வர நினைச்சிருக்க மாட்டாங்கனு  என்னவர் பார்வைய தவிர்த்து பதில் சொன்னேன்.

 

கொஞ்சம் ஆளுங்க வந்தாங்க. வந்தவங்க என்ன கேட்ட கேள்வி பெரும்பாலும் இப்டியா இருந்துது. தெரிஞ்சேதான் அந்தப் படத்துக்கு வராம இதுக்கு அதுவும் சீக்கிரமா வந்திருக்கீங்க இல்ல.. நல்லாருங்க. யாரும் நம்ப மாட்டேங்கராங்க. அவ்ளோ ஏன் நீங்க கூட நம்பாம என்ன திட்னீங்க இல்ல.. சரி விடுங்க.. ஒரு ஃப்ரெண்டோட அம்மா வராங்க வாங்க அவங்க கிட்ட பேசலாம்.

 

ஹாய் ஆண்டி.. எப்டி இருக்கீங்க?

நல்லா இருக்கேம்மா..

எப்டி போச்சு இந்தியா பயணம்லாம்?

நல்லா போச்சும்மா.. என்ன எல்லாருக்கும் உடம்புக்கு முடியாம போச்சு.. அதான் கொஞ்சம் கஷ்டப்பட்டுட்டோம்.. இங்க வந்தா இந்த ஸ்னோ இப்டி கொல்லுது.. இப்போ கொஞ்சம் பரவால்லடா..

(இப்டியே கொஞ்ச நேரம் அவங்க பயணம் பத்தி பேச்சு போயி படங்கள் பக்கம் வந்து நின்னிச்சு)

இங்க என்ன படம்லாம் போட்டாங்கம்மா?

குட்டி, கோவா.. ஆயிரத்தில் ஒரு..

அப்பாடா.. ஓடி முடிஞ்சுதா அந்த படம்.. தப்பிச்சேன்.

ஏன் ஆண்டி.. அப்டி சொல்றீங்க?

அது ஒரு கருமம் பிடிச்ச படம் போல.. ட்ரெய்லர் பார்த்தே நான் பயந்துட்டேன்.

நான் நீங்க இந்தியால பாத்திருப்பீங்கனுல்ல நினைச்சேன்..

ஏம்மா.. எற்கனவே உடம்புக்கு முடியல.. அதில இது வேறயா..

 

அப்டியே டிக்கட் குடுக்க ஆரம்பிச்சாங்க. உள்ள போய்ட்டோம். இருந்தாலும் என் மைண்ட்ல ஒரு கேள்வி சுத்திட்டே இருந்துது. கருமம் படமா இல்ல பாத்தவங்களா இல்ல பாக்காமலே திட்டு வாங்கிறவங்களா??

 

17:30 ஷோ.. சீட் நம்பர்லாம் கிடையாது நீங்களே போய் இஷ்டத்துக்கு உக்காருங்கன்னாங்க. நடு ரோல வசதியா, வரிசையா உக்காந்தோம். என்ன கூட்டம் கம்மியா இருக்கு. பின்ன கடசியா பாத்த படம் அப்டி.. ரொம்ப மிரண்டிட்டாங்க போல.. பாவம்ல மக்கள்.. இந்த வகையில பேச்சு அடிபட்டுது. நான் எதுவும் சொல்லவும் இல்லை. கேக்கவும் இல்லை. நோட் பண்ணிக்கோங்க. என் இடப் பக்கம் கண்ணாளன். வலப் பக்கம் கொலைவெறி கொஞ்சம் கம்மி ஆயிட்ட அக்கா. நான் வரதால நல்ல படமா இருக்கும்னு நம்பி வந்திருந்தாங்க.

 

ரொம்ப நேரமா பாத்துட்டு இருந்தோம். வந்திச்சு பாருங்க இண்டர்வல்.. அடப்பாவிகளா இப்போதான் இண்டர்வலா? சொன்னது என்னவர். அதுவும் கொஞ்சம் சத்தமா.. பக்குனு எல்லாரும் சிரிச்சிட்டாங்க. அன்னிக்குனு காஃபி மெஷின் கூட ரிப்பேர். தியேட்டர் எதிர்க்க இருந்த காஃபி ஷாப்ல வாங்கிட்டு வந்தது குளிர்ல ஜில்னு ஆயிடிச்சு. வேற வழி.. மறுபடி உக்காந்தோம்.

 

போகும்போதே என் ஃப்ரண்டுக்கு ஒரு பிரச்சனைனு மனசு சரியா இருக்கல. படம் இருந்த வலிய அதிகம் ஆக்கிடிச்சு. பாடலும் காமராவும் கட்டிப் போடலேன்னா எப்பவோ எந்திரிச்சு போயிருப்பேன். பொறுமைய இழுத்து பிடிச்சிட்டு இருந்த என்னவர் கூடவே வந்திருப்பார்.

 

- சிம்பு ஒவொரு தடவையும் அந்த கேள்விய கேட்டப்போ எல்லாரும் சிரிச்சாங்க. நான் மட்டும்    ரசிச்சேன்.. அது நான் என் கண்ணன எப்போதும் கேக்கற கேள்வியாச்சே :))

- சிம்புவும் த்ரிஷாவும் பார்க்ல உக்காந்து பேசறப்போ உதடு துடிக்க சிம்பு பேசிட்டு இருந்தார். என் கண்ணில தூசி.. அவ்வ்.. மத்தவங்க குசுகுசுனு ஆரம்பிச்சு இப்போ சத்தமாவே பேசிட்டு இருந்தாங்க.

- இந்த வலி இவ்ளோ கஷ்டமா இருக்கும்னு நினைச்சுப் பாக்கலன்னு த்ரிஷா சொன்னப்போ ஆவ்வ்..

 

இனி வெளிய வந்து பேசிக்கிட்டது.

- என்னங்க இந்த படத்துக்கு போயெல்லாம் அழுவீங்களானு என் மூஞ்சிய பாத்து கேட்டவங்களுக்கு பக்கத்தில இருந்தவங்க சொன்னாங்க அவங்க இந்த படத்த பாத்தோமேங்கிற கஷ்டத்தில அழுதாங்கப்பானு.

- ஒருத்தங்க சொன்னாங்க எனக்கு கௌதம் மேனன் எடுத்த படத்த விட சிம்பு எடுத்த படம்தான் பிடிச்சுதுங்கனு.

- ஒருத்தங்க சரி விடுங்கப்பா அதான் த்ரிஷாவே சொல்லிட்டாங்களே மூவ் ஆன் னு.. அப்புறம் என்னன்னு சொன்னாங்க.

- ஒருத்தங்க ரொம்ப இழுவ்வ்வ்வையா இருந்திச்சுல்லன்னாங்க.. நான் சொன்னேன் விண்ணைத்தாண்டணும்னா சும்மாவா.. அவ்ளோ தூரம் போணும்ல.. அதான்..

 

என்னப் பொறுத்த வரைக்கும் பாடல்கள் சொன்ன அளவுக்கு படம் காதலை சொல்லைங்க. காட்சிகள் தனித்தனியா பார்க்க நல்லா இருக்கு.. படத்தில திணிச்சா மாதிரி இருந்துது. ட்ரெயின்ல நடந்தது.. வா ஆ ட்ரெயின் சீன்ல இருந்தே நான் இன்னும் வெளிய வரல.. இது அத விட நல்லா இருந்திருக்கணும். த்ரிஷா வீட்ல கல்யாணம் நின்னப்போ சிம்பு பாக்க போவாரில்ல.. திரை பின்னாடி அவர கூட்டிப் போய் உக்கார வச்ச சீன் தேவை இல்லாத ஒண்ணு.. இது மாதிரி நிறைய. இத எல்லாம் ஏன் சொல்றேன்னா இதெல்லாம் இல்லாது இருந்திருந்தா காதல் இன்னும் அழகா இழுவை இல்லாம சொல்லப்பட்டிருக்கும். எதிர்பார்ப்பு கம்மியாகி த்ரிஷா இத தான் சொல்லப்போறாங்கனு முன்னாடியே யூகிக்க முடிஞ்சது ஆர்வத்தை குறைச்சிடுச்சு.

 

பசங்கள பிக் அப் பண்ணிட்டு வர வழில லச்சு கேட்டா யாரெல்லாம் வந்தாங்கனு. அவ க்ளாஸ் பையன் ஒருத்தர் வந்திருந்தார்னும் சொன்னேன். கதை என்ன. சொன்னோம். படம் நல்லா இல்லையானு அடுத்த கேள்வி. நானும் அவரும் அர்த்தமுள்ள ஒரு பார்வை பரிமாற்றம் செய்து கொண்டோம். இல்லடா ஓக்கேதான். ஆனா கொஞ்சம் பிடிக்கலை. அப்டினா எந்திரிச்சு வந்திருக்க வேண்டியதுதானேன்னா. அம்மாவுக்காக நானும் உக்காந்திட்டு இருந்தேண்டான்னார் என்னவர். பாவமா இருந்துது. எனக்கும் ஒரு வகையில அந்த காதலோட வலி பிடிச்சிருந்துது. அதான் வர்லனு சொன்னா அவங்களால புரிஞ்சுக்க முடியாதேனு நான் எதுவும் சொல்லல. வீட்டுக்கு வந்ததும் சாட்ல அந்த பையன் கிட்ட பேசிட்டு வந்து சொன்னாங்க.. அம்மா அவருக்கு படம் ஒண்ணுமே புரியலையாம். நல்ல வேளை நாங்க வர்ல. என் உடன் பிறப்பு பேசிச்சு. என்னடி டல்லா இருக்கே. இல்லக்கா படம் பாத்துட்டு வந்தோம். அதான். ஃபோனப் புடுங்கி தன்னோட ஆதங்கத்த வெளிப்படுத்தினார் என்னவர். ஊர்ல இருக்கும்போது எங்கள மகளிர் மட்டும் பாக்க வச்சீங்க இல்லை.. உங்களுக்கு நல்லாவே வேணும்ணா.. எல்லாம் கேட்டுட்டு சந்தோஷமா சொல்லிச்சு என் உ.பி.

 

அடுத்து தமிழ்ப்படம் பார்த்து சிரிரிரிரிரிரிச்சோம்.

 

அவதார்.. நானே ஒரு அவதாரம் அப்புறம் எதுக்கு அத போயி பாக்கணும்னு என்னவர் வர்ல. நான் பசங்க அதே நண்பர்களோட போனோம். ரசிச்சு பாத்துட்டு வந்தோம்.

 

இப்போ போன வாரம் கலைஞர் + ஐங்கரன் டிவி ஒளிபரப்பின போர்க்களம் பாக்க போறேன். ரெக்கார்ட் செஞ்சு வச்சிருக்கேன்.

இடையில ஒரு விஷயம் கேள்விப்பட்டு என் ஃப்ரெண்டுக்கு ஃபோன் பண்ணேன்.

வர செவ்வாய் பையா போடறாங்களாம் அக்கா.. போலாமா..

இனிமே வருவேனு நினைக்கிறீங்க உங்க கூட படம் பாக்க? காமடி பண்ணாம வேற எதுனா பேசுங்க.. இல்லேனா ரணகளம் ஆயிடும்..

படம் எடுத்தவங்கள விட்டிட்டு என் மேல இவ்ளோ கொலைவறி ஆகாதுனு அவங்களுக்கு நான் எப்டி புரிய வைப்பேன். பாவம் நான்.

 

வர்ட்டா..

24 March, 2010

அணைக்க மறந்து போகிறேன்..

என் புது வீட்ட பாத்தீங்களா மக்கள்ஸ்..
என் உயிர் நட்பு கட்டிக் கொடுத்துது.. நல்லாருக்குதுங்களா?? எனக்கு ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப பிடிச்சிருக்கு. அதனால அதுக்காக இன்னைக்கு வழக்க விரோதமா ஒரு ஸ்பெஷல் போஸ்ட்.. ஏற்கனவே எழுதி கிடப்பில இருந்த ஒண்ணுதான். இப்போ அவசரத்துக்கு உதவுது. எல்லாருமா சேர்ந்து ஜோரா அதுக்கு ஒரு நன்றி சொல்லிடலாம். நான் தனியா சொன்னா திட்டும். ஏற்கனவே உனக்கு நன்றி சொல்லணுமான்னு கேட்டு திட்டு வாங்கிட்டேன். எப்டி இருக்குனு சொல்லுங்க. அதுவும் படிச்சு தெரிஞ்சுக்கட்டும்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
 hug
நீட்டிய உன் கைகளுக்குள்
ஓடி வந்து ஒளிந்து கொள்கிறேன்
உன் நெஞ்சோடு அப்படியே
ஒண்டிக் கொள்கிறேன்
என் மனதின் சுமைகளை
அங்கேயே இறக்கி வைக்கிறேன்
உன் அணைப்பின் சூட்டோடு
பஞ்சாய் வெளி வருகிறேன்
அதனால்தான்
சமயத்தில் பதிலுக்கு
உனை அணைக்க
மறந்து போகிறேன் கண்ணா..

*******************************************************************************************************************
hugging

முத்தம் கேட்டு
கன்னம் காட்டினான்
ஆவ்.. கொஞ்ச கேட்டா
கடிச்சு வைக்கிறே..
செல்லமாய் முறைத்தவன் காதில்
மெல்லமாய் சொன்னேன்
ஆப்பிளை கடிச்சுதாண்டா
கண்ணா சாப்டணும்
தெரியாதா உனக்கு??

22 March, 2010

கொஞ்சம் குறைச்சுக்கோங்க..

மழைக்கும் மலைக்கும் பெயர் போன ஊருங்க எங்க ஊர். நான் இங்க வாழ வந்த இந்த பதினொரு வருஷத்தில இவ்ளோ கொடுமையான ஒரு விண்டர் சீஸன் இந்த வருஷம்தான் அனுபவிச்சிட்டு இருக்கேன். ஸ்னோ கொட்டும். ஒரு வாரம் இருக்கும். அப்டியே ஒரு மழை வந்து எல்லாம் கரைஞ்சு போய்டும். மறுபடி ஸ்னோ.. மழை..னு குளிர்ல இருந்து தப்பிடுவோம். நார்வேல இருந்து வந்துட்டு இங்க குளிருதுனு சொல்றீங்களேனு மத்த நாட்டுக்காரங்க கேப்பாங்கனா பாருங்களேன். யார் கண்ணு பட்டுதோ.. இந்த தடவை மழை பெய்வேனா பாருனு அடம் புடிக்குது. 1879 ஆம் வருஷத்துக்கு அப்புறம் வந்திருக்கிற ரொம்ப ட்ரையான வின்ரர் சீஸன் இதானாம். விளைவு??

 

எங்கள தண்ணீர சிக்கனமா மட்டுமில்லாம கொதிக்க வச்சும் பாவிக்க சொல்லி இருக்காங்க.

 

இந்த ஊருக்கு Gullfjell  ங்கிற ஒரு மலையில இருந்து தண்ணீர் சப்ளை பண்ணிட்டு இருந்தாங்க. மழை இல்லாததுனால சம்மர்க்குனு ரிசர்வில இருக்கிற நீரையும் பாவிக்க வேண்டியதாயிடுமோனு பயந்து Storavatnet ங்கிற இடத்தில இருந்து சப்ளை ஆரம்பிச்சாங்க, போன செவ்வாயில இருந்து. பிரச்சனை என்னன்னா என்னதான் நாங்க குளோரின் போட்டு சுத்தம் செஞ்சாலும் தண்ணீர் அவ்ளோ சேஃப் கிடையாது. நீங்க கொதிக்க வச்சு பாவிங்கனு சொல்லிட்டாங்க. பல் துலக்க, காய்கறி, பழங்கள் கழுவ, அடுப்பில செய்யாத சமையலுக்கு  எல்லாம் சுட வச்ச தண்ணிய பாவிக்க சொல்லி இருக்காங்க. குளிக்கும்போது வாய மூடிக்கிட்டே குளிக்கிறதுதான் கொஞ்சம் கஷ்டமா இருக்கு. கொதிக்க வைக்கிற கரண்ட் செலவுக்கு பாட்டில் தண்ணி செலவு கம்மியா இருக்கும்கிறதால அததான் வாங்கறோம். நாளையில இருந்து வழக்கம்போல பாவிக்கலாம்னு அவங்க சொன்னாலும் இன்னும் கொஞ்ச நாளைக்கு எங்க வீட்ல பாட்டில் தண்ணிதான்னு முடிவு செஞ்சிருக்கோம்.

 

அம்மா இந்த தண்ணி நல்லாவே இல்லைனு பாட்டில் தண்ணி குடிக்க பசங்க பண்ற அடம் தாங்கல. எந்த நேரமும் பைப் தண்ணி குடிச்சிடுவாங்களோனு பயத்திலவே சுத்த வேண்டியதா இருக்கு. அதனால நானும் என் பங்குக்கு சிக்கனமா இருக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்.

 

- வெள்ளை நிறமுள்ள ஆடைகள தனியா துவைச்சாதான் வெள்ளையா இருக்கும்னு இனிமே தனியா வாஷிங் மெஷின்ல போட்டு துவைக்க மாட்டேன்.

 

- டிஷ் வாஷர் ஃபுல் ஆகாம ஸ்டார்ட் பண்ண மாட்டேன்.

 

- குளியலோட நேரத்த குறைச்சுக்கணும். முக்கியமா பாத் டப்ல குளிக்க கூடாது. போன வாரம் 200 லீட்டர் டாங்க்ல இருந்த சுடுதண்ணி தீர்ந்து போச்சு என் உல்லாசக் குளியலால. பசங்க அய்யா ஜாலி, குளிக்க வேணாம்னாங்க. ஃபுட்பால் விளையாடிட்டு வந்த கண்ணாளன்  குளிக்க முடியாம போனதால வெளிய போறதா இருந்த ப்ளான் ஊத்திக்கிச்சு.

 

- இது கண்ணாளன் கவனிக்க வேண்டியது. கார் வாஷ். ரோட் ஃப்ரீஸ் ஆகாம இருக்க உப்பு போடுவாங்க. அதுவும் ஸ்னோவும் சேர்ந்து கருப்பா பிடிச்சுக்கும். சமயத்தில இது நம்ம வண்டிதானானே டவுட் ஆகிற அளவுக்கு வண்டியோட நிறம் மாறி இருக்கும். கொஞ்ச நாளைக்கு கார் வாஷ் பண்ண கூடாதுனு ஆர்டர் போட்டிருக்கு ஊராட்சி.

 

ஒரு நாள் ஃப்ரிஜ்ல தண்ணீர் பாட்டில வைக்க மறந்துட்டேன்னு ஆஃபீசுக்கு ஃபோன போட்டு குடும்பமே கூட்டு சேர்ந்து திட்டித் தீர்த்திடுச்சுங்க. என்னதான் ஃப்ரிஜ்ல வச்சு குடிச்சாலும் பாட்டில் தண்ணி நல்லாவே இல்லைங்க. ஜில்லுனு டப்ல எடுத்து குடிக்கிறா மாதிரி இல்லை. மலைல இருந்து வர அருவியில நேரா அள்ளிக் குடிச்சாப்ல இருக்கும் எங்க ஊர் தண்ணீர்.

Gullfjell னா தங்க மலைனு அர்த்தம். தங்கத்தோட நிலை தண்ணிக்கும் வந்திட்டா?? இப்போ ஸ்னோ இருக்கிறதால அத உருக்கியாவது பாவிக்கலாம். சம்மர்ல?? காலநிலை தாறுமாறா மாறி வேற இருக்கு. காலப் போக்கில தண்ணீர் தீர்ந்து போய்டிச்சின்னா?? ஸ்னோவும் இருக்காதே.. நிறைய இல்லைனாலும் கொஞ்சூண்டாவது எல்லாரும் யோசிக்கலாம்ல.. அப்டியே நம்மால முடிஞ்சதையும் செய்லாம்ல.. வாங்க எல்லாருமா எதுனா செய்லாம்..

 

ராமலக்ஷ்மி அக்காவோட இந்த பதிவ படிச்சுப் பாருங்க. எப்டி சிக்கனமா தண்ணீர பாவிக்கலாம்னு நல்லா சொல்லி இருக்காங்க. கீழ இருக்கிற படத்த உங்க வலைப்பக்கத்தில சேர்த்தும் பங்களிப்பு செய்யலாம்னு அக்கா சொல்லி இருந்தாங்க.

அப்புறம் என்னங்க.. வரட்டா..

 

vann 2010 kopi bildet

14 March, 2010

உனக்கு நேரம் சரி இல்ல..

நான் இன்னமும் பாக்கலை. பாக்காம எழுதக் கூடாதுங்கிர வைராக்கியத்தோட இருந்தேன். என்னையும் எழுத வச்சிட்டாங்க. பாக்க கூடாதுனு நினைக்கலங்க. பாக்க முடியாம போச்சு. எப்டியோ தட்டிப் போச்சுனும் சொல்லலாம். பாக்கணும்னு நிறைய எதிர்பார்ப்பு இருந்துச்சு. பாக்கலாம்னு முடிவானப்போ வேணாம்னு  தோணிச்சு. ஆனா அத நான் வேணும்னு செஞ்சதா நினைச்சிட்டாங்க. அதுதான் எனக்கு ரொம்ப கஷ்டமாயிடுச்சு.

 

இங்க வந்ததில இருந்து பழகறவங்க. என் மேல சொன்ன குற்றச்சாட்டுக்கள் நியாயமானு நீங்களே சொல்லுங்க. ரொம்ப கம்பல் பண்ணாங்க பாக்க போலாம்னு. இப்போ முத பத்தியோட மூணாவது லைன்ல இருந்து படிச்சுட்டு வாங்க.. என் சொல் பேச்சு கேட்டு போய் மறுபடி படிச்சவங்களுக்கு நன்றி.. இப்போ இந்த பத்திய முதல்ல இருந்து மறுபடி படிக்காமலே உங்களுக்கு புரிஞ்சிருக்கும், நான் விட்ட இடத்திலேர்ந்து சொல்லறேன்னு.. பாத்திட்டு வந்ததில இருந்து என் கிட்ட பேசல. ரெண்டு வாரம் கழிச்சு எங்க வீட்டுக்கு வந்திருந்தவங்க கிட்ட எப்டிக்கா படம்னு ரெண்டு வார்த்தைதான் கேட்டேங்க.. பொங்கிட்டாங்க போங்க.. கிச்சன்ல நின்னு கேட்ட என் தப்ப உணர்ந்து உயிர்ப் பயத்தோட நான்.. இனி அவங்க சொன்னது இல்ல இல்ல.. கொலைவெறியோட சொன்னது..

ரொம்ப எதிர்பார்ப்போட போனேன் தெரியும்ல உங்களுக்கு. அங்க போனா தியேட்டர் காத்தாடுது.. படம் ஆரம்பிச்சுதா.. பாத்துட்டே இருந்தோமா.. கொஞ்ச நேரம் ஆனதும் என் அக்கா சிரிக்க ஆரம்பிச்சுட்டா.

ஏங்கா.. காமடி சீனா..

நீங்க காமடி பண்ணாதீங்க. எதுவும் புரியலப்பா.  என் பொண்ணு அப்பப்போ அவங்கள பாத்து முறைக்க ஆரம்பிச்சுட்டா. அவ கண்டுக்கணுமே.. இப்டியே போனா வந்தாரு பாருங்க பார்த்திபன். பேசினாரு பாருங்க ஒரு தமிழ்.. அதுக்கு அப்புறம் அக்கா சிரிச்ச சிரிப்பில பொண்ணு கடுப்பாகி வேற சீட்ல போய் உக்காந்துட்டா. அவங்கள பாத்து நானும் சிரிக்க ஆரம்பிச்சிட்டேன். அவங்க அப்டி சிரிச்சு அன்னிக்குதாம்பா பாத்தேன்.

யாரும் திட்டலையா உங்கள?

எங்க அவங்களும் புரியாம தான் பாத்துட்டு இருந்தாங்க போல.. எங்க கூட  சிலர் கூட்டு சேர்ந்து சிரிக்க ஆரம்பிச்சிட்டாங்கப்பா.

இல்லக்கா.. இது புது விதமான கதைனு சொல்றாங்க..

எவன் சொன்னான்? கூட்டிட்டு வாங்க என் முன்னாடி. இந்த படம் இந்தியால இப்பவும் ஓடுதுன்னு சொல்லுங்க இனிமே நான் வாழ்க்கேல படம் பாக்கல. 

இல்லக்கா.. ஓடிட்டு இருக்காம்..

(இப்போ ஒரு லுக்கு விட்டாங்க பாருங்க.. என்னத்த சொல்ல)

அப்டினா போய்ப் பாருங்க எங்கள மாதிரி அறியாம போய் மாட்டிக்கிட்டவங்க தான் பாத்திட்டு இருப்பாங்க.

பார்ட் டூவும் எடுக்க போறாராம் செல்வா..

(இப்போ முன்னய விட கேவலமா ஒரு லுக்கு)

வேணாம் என்ன கொலைகாரி ஆக்கிடாதீங்க சொல்ட்டேன்.

அப்போ காமடிக்குனு யார் வந்தாங்க?

அதான் அவரு கார்த்தி வந்தாரே. அவருதான் பெரிய காமடி பீஸு.

கார்த்தி ட்ரெய்லர்ல பாக்கும்போது ஒரு மாதிரி தலைய குனிஞ்சுட்டே போறாறே.. அது என்ன சீன்?

அவர் படம் பூரா அப்டிதான் போறார். இதில எதனு நான் சொல்ல. நீங்க இந்த படத்த டிவிடில கூட பாத்துடாதீங்கப்பா. அப்டியே பாக்குறதுனா கூட நான் வர நேரம் என் கண்ல படற மாதிரி வச்சிடாதீங்க. சொல்ட்டேன்.

பாட்டுக்கா.. ஆனா மாலை நேரம் வர்லயாமே..

உங்களுக்கு எப்டி தெரியும்?

அது சும்மா நெட்ல மேயும்போது படிச்சேன்..

இந்த குழப்பத்தில அத யாரு கேட்டா. அன்னிக்கு ஒரு படம் பாக்க வான்னீங்க. விஜய பிடிக்காத நானே அவ்ளோ என்ஜாய் பண்ணி பாத்தேன். அது உங்களுக்கு பொறுக்கல இல்ல. ஏம்பா.. ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாமே.. வேற என்ன படிச்சீங்க..

இல்லக்கா.. நீங்க சொன்ன எல்லாமே படிச்சேன்.

(இங்கனதான் வசமா மாட்டிக்கிட்டேன். அவ்ளோ கோவமா அவங்கள நான் பாத்ததே இல்ல) ஆனா நான் வேணும்னு வராம விடலக்கா.. அது உங்களுக்கே தெரியும்.. அவர் மாட்டேனுட்டார்.. பசங்களுக்கும் புரியாது..  நான்  தனியா வரலாம்னா இந்த ஸ்னோல ரிஸ்க் எடுத்து ட்ரைவ் பண்ண பயமா இருந்துது..

(இத சொல்லிக்கிட்டே மெதுவா அவங்கள கிச்சன விட்டு ஹால் பக்கம் கூட்டிட்டு வந்துட்டேங்க. கரண்டி எடுத்து வீசினா பரவால்ல.. கத்தி எடுத்து வீசிட்டா??)          

படம் பாக்காமலே எனக்கு வந்த நிலைய பாத்தீங்களா?? என் சித்தி ரெண்டு நாள் பொண்ணு மேல கடுப்பாவே இருந்தாங்க. அவங்கதான் அடம் பிடிச்சு கூட்டிப் போக சொன்னாங்களாம். அப்பா சொன்னார் யாம் பெற்ற துன்பம் நீயும் பெறணும்டாம்மா.. கண்டிப்பா நீயும் பாருன்னு. இதுக்கப்புறம் ஒருத்தர் கிட்ட கூட நான் மறந்தும் கேக்கல.

நீங்க ஆயிரத்தில் ஒருவன் பாத்தீங்களாஆ??

aayirathil-oruvan கார்த்திக்குப் பதில் செல்வாவ இங்க நிக்க வச்சிருக்கணுமோஓ??

அப்பப்போ என் கண்ணன் சொல்றதுதான் இப்போவும் என் நினைவுக்கு வந்துதுங்க. அதான் தலைப்பா போட்டுட்டேன். கரெக்டா இருக்குதுங்களா??

வரட்டுங்களா..

09 March, 2010

திட்டாதீங்கப்பா..

வேற ஒண்ணும் இல்லீங்க.. வி தா வ நானும் பாத்துட்டேன். அது பத்தி எழுதிட்ட்ட்ட்ட்ட்ட்டே இருக்கிறதால இப்போதைக்கு என் பதிவுலக வரலாற்றிலேயே முதல் முறையா, நெட்ல தேடி பிடிச்சு சில நாட்களே ஆன புத்தம் புதிய ஒரு படத்த வச்சு..

ஒரு குட்டிப் பதிவு.

படிச்சிட்டு தலைப்ப படிங்க. அப்டியே படம் பாத்ததும்.. அட அந்த படத்த சொல்லலைங்க.. இங்க நான் போட்டிருக்கிற படம்.. உங்க மைண்ட்ல தாண்டுற.. சாரி.. தோன்றுற வரிகளை கவிதையா கமண்ட்ல பொழிஞ்சிட்டு, தீட்டிட்டு, வடிச்சிட்டு, வரைஞ்சிட்டு.. ரைட்டு விடுங்க.. எழுதிட்டு போங்கங்க.. படத்துக்கு பெருமையா இருக்கும். மறுக்கா சொல்றேன் இந்தப் படத்துக்கு.

வரட்டுங்களா..

j 014

விண்ணையும் தாண்டி விடலாம்

என் அருகே நீ இன்றி

உன் நினைவுகளோடு

வாழ்வதை விட.

-----------------x-----------------

பாதம் மண்ணை தீண்ட வில்லை...
காதலி நினைவில்...

-நன்றி சீமான் கனி.

-----------------x-----------------

உன்னைத் தாண்டியே
இன்னும் வரவில்லை
விண்ணைத் தாண்டி வருவது
அப்புறம்

-நன்றி சங்கர்.

--------------x---------------

ஆளற்ற ரோட்டில் நடந்து கொண்டியிருந்தேன்
உன் நினைவுகளேடு
பயனற்ற பயணங்கள் முடியாமல் போகின்றது
உன் பிரிவைப் போல
சோகங்களோடு சுகங்களும் சேர்ந்து சுமக்கின்றேன்
உன்னை என் நெஞ்சில் தாங்குவதைப் போல

-நன்றி சுதாண்ணா.

------------------x-----------------

விழியெட்டும் தூரம் வரை
இலக்குகளற்று நீளும்
இந்த தார்ச்சாலையில்
என்னை தனியே நடக்கவிட்டு
கையசைத்து சென்றவளே..
உற்றுப்பார்.
உன்
புறங்கையில் தெரியும்
புன்னகைக்கும் என் முகம்.

-நன்றி கார்க்கி.

-------------------x----------------

என்னோடு
நீ வருவதாய் இருந்தால்
இந்த சாலையின் நீளம்
போதாது எனக்கு

-மீண்டும் நன்றி கார்க்கி.

-------------------x------------------

விண் தாண்டி

உன்னிடம் வந்துவிட்டேன்

இரு வழிப் பாதை

இருந்தும்

திரும்பி வர மனமில்லை.

-நட்புக்கு நன்றி.

--------------------x----------------

28 February, 2010

என் அண்ணாவுக்கு..

m   a

அண்ணா.. எங்க வீட்ல அப்பாவுக்கு அடுத்த இடத்தில நான் மரியாதையும் பயமும் வைத்திருக்கும் பாசத்துக்குரியவர் நீங்க. இத்தனைக்கும் என்ன நீங்க திட்னதில்ல, அடிச்சதில்ல. ஒரே ஒரு தடவை காதை திருகி இருக்கீங்க. உங்க காஸட் ஒண்ண நான் நாசவேலை பண்ணி அழிச்சு வச்சிட்டதால. ஒரு வார்த்தை திருப்பி பேச மாட்டேன். சொல்றத செய்துடுவேன். உங்க கூட சண்டை போடணும்னு நினைச்சது கூட இல்லை. நீங்க எங்கள விட்டு முதல்ல படிப்புக்கும் அப்புறம் வேலைக்கும்னு அதிக நாட்கள் பிரிஞ்சு இருந்ததுதான் காரணமான்னா அதுவும் கிடையாது.

சின்ன வயசில குருட்டு எலிக்கு யாராவது சாப்பாடு குடுங்கப்பா.. பாவம் கண்ணு தெரியாதுனு சொல்லி நீங்க எங்க பங்கையும் கபளீகரம் பண்றப்போ முதல்ல தெரியாமலும், பின்னாடி தெரிஞ்சும் ஏமாந்து போறது நாந்தான். யாரும் உங்களுக்கு சொந்தமான எதையும் எடுத்திட முடியாது. உங்கள யாரும் எதுவும் சொல்லவும் கூடாது. ஒரு தடவை அழுக்குத் தேச்சு குளிக்கலேன்னு உங்களுக்கு அம்மா சாத்துப்படி வச்சுக்கிட்டே குளிக்க வைச்சப்போ, கைல கல்லு எடுத்து அண்ணாவ இப்போ விடலேன்னா அடிச்சிடுவேன்னு நான் மிரட்டினது வரலாற்று நிகழ்வாச்சே. உங்க டீச்சர் க்ளாஸ் கட் அடிச்சிட்டு நீங்க கேணியில குளிக்கப் போனத்துக்கு பிரம்பால கால்ல வரி வச்சிட்டார்னு இன்னை வரைக்கும் அவர் கிட்ட பேசிறதில்ல நான்.

உங்களுக்கு ஒவொரு தடவையும் விபத்துக்கள் நடந்தப்போ எனக்கு அது வந்திருக்க கூடாதானு அழுதிருக்கேன். வலிய வெளிய காமிக்க மாட்டீங்கன்னாலும் நீங்க அனுபவிச்சது கொஞ்சம் இல்லைண்ணா. உயிர் தப்பி வருவீங்களானு கூட எத்தனை தடவை தவிக்க விட்டிருக்கீங்க. நீங்க விடுமுறைல வந்தா வீடே களை கட்டும். நீங்க திரும்ப போற நாள் நெருங்க மனசு அடிச்சிக்கும். கண்ல இருந்து உங்க பைக் மறையிற வரைக்கும் பாத்துட்டு இருப்போம். மறுபடி வீடு சகஜ நிலைக்கு வர கொஞ்சம் நாளாகும்.

கல்யாணம்.. எல்லாரையும் விட்டு வர முடியாம அலைஞ்சுட்டு இருந்துது மனசு. எத்தனையோ குழப்பங்கள். என்னய விட அவர் நல்லவர்டி. அண்ணா சொல்றத நம்பு. உன்ன நல்லபடியா அவர் பாத்துப்பார்னு நீங்க சொன்னதுக்கு அப்புறம்தான் எனக்கு கல்யாணப் பொண்ணு நாந்தாங்கிற உணர்வே வந்துது. உனக்கும் அவருக்குமான நட்பு.. கல்யாணத்துக்கு அப்புறம் அத்தான்னு சொல்லி மரியாதைப் பன்மையில நீ பேச ஆரம்பிச்சப்போ என்னடா இது புதுசானு என்னவர் கேட்டத்துக்கு நட்பு வேறங்க, இது உறவு, அதுக்கான மரியாதைய நான் குடுக்கிறதுதான் நல்லதுனு சொன்னே.

எப்பவும் அப்பாவுக்கு உன் ஆலோசனை தேவைப்படும். இத தான் நீங்க செய்யணும்னு சொல்ல மாட்டே. இப்டி செஞ்சா நல்லதுனு தோணுது. நீங்க பாத்து செய்ங்கனு சொல்வே. அவ்ளோதான். அது சரியாதான் இருக்கும். அண்ணியோடான உன் காதல். கல்யாணம். அவங்களுக்கு எல்லாமே நீயாய். போன வாரம்தான் ரொம்ப நாளைக்கு அப்புறம் உங்க ஃபோட்டோ வந்துது. அண்ணி முகத்தில இருக்கிற சந்தோஷம்.. உங்க மடியில உரிமையோட இருக்கிற சின்னண்ணனோட சின்னக்குட்டி.. எங்க பசங்களுக்கு அந்த கொடுப்பினை கிடைக்கலையேன்னு என்னையும் அக்காவையும் ஏங்க வைச்சது.. வழக்கம் போல.

எல்லாம் நீ சொன்னா மாதிரி சரியா ஆய்டும்ணா. பிள்ளையார் துணையிருப்பார். நானும் அக்காவும் உங்க எல்லாரையும் வந்து பாப்போம். திட்டாத.. அதுவரைக்கும் எங்க தவிப்பு அடங்காதுண்ணா.. நாங்க முத தடவை ஊருக்கு வந்திட்டுப் போனப்போ நீ அக்கா கிட்ட சொன்னியே.. அவளே ஒரு குழந்தை. அவளுக்கு ரெண்டு குழந்தைனு.. இப்பவும் என் அண்ணாவுக்கு நான் குழந்தைதான். ஃபோன்ல நான் அண்ணா பேசறேன்னு உங்க குரல் கேட்டதும் அண்ணா.. சொல்லுண்ணா.. எப்டி இருக்கேன்னு சந்தோஷமா கண்ணீரை மறைச்சுக் கிட்டே பேசத் தெரிஞ்ச குழந்தை. இனிமே அப்டி எல்லாம் இருக்கக் கூடாது. எல்லோரும் எப்போதும் சந்தோஷமா இருப்போம்.

ஹாப்பி பர்த்டே அண்ணா..

இது நீங்க 25.12.2009 ல எங்களுக்கு எழுதினது. என் வாழ்நாள்ல நான் மறக்கணும்னு நினைக்கிற மறக்க முடியாத வரிகள்..

j 013

என் எல்லாம்

சிதைந்து அழிந்த பின்

நானும் என் .....ம்.

21 February, 2010

என் செல்ல அம்மாவுக்கு..

mother_child_79

அம்மா..

என் செல்ல அம்மா..

சமயத்தில்

அம்மா நானா

இல்லை நீங்களா

சந்தேகத்தில்

உங்கள் செல்ல மகள்.

------------x------------

ஆமாம் அம்மா.. எனக்கு அப்பப்போ இந்த சந்தேகம் வரும். நீங்க என் அம்மாவா? இல்ல நான் உங்க அம்மாவா? சிரிப்புதான் வரும் நினைச்சா. என்னைப் பொறுத்த வரைக்கும் நீங்க இன்னமும் குழந்தைதாம்மா.. உங்க செயல், பேச்சு எல்லாத்திலேம் நான் பாக்கிறது ஒரு குட்டிப் பொண்ணதான்.

எப்பவும் உங்க கூடவே ஒட்டிட்டு இருப்பேன். எனக்கு நினைவு தெரிய முன்னமிருந்தே நான் அப்டிதான்னு சொல்வீங்க. நீங்க வந்து பக்கத்தில படுக்காம என்னைக்கும் நான் தூங்கினதில்ல. ஜில்லுன்னு இருக்கும் உங்க கை.. அதுவே பனிக்கு இதமா சூடாவும் இருந்தது எப்டீன்னு எனக்கு இன்னமும் புரியல. என்ன அணைச்சு கிட்டு கதை சொல்லும்போது என் முதுகில உங்க குரலோட அதிர்வ என் முதுகில மெதுவா உணர்ந்துப்பேன். அப்டியே தூங்கியும் போவேன். நான் ஏன்மா வளர்ந்தேன்??

எப்பவும் உங்க கூட இருந்ததால உங்களோட அத்தனை பேச்சுக்களையும் கவனிப்பேன். சந்தோஷம், கவலை, கோபம், ஆற்றாமை, எரிச்சல்னு எல்லாமே இருக்கும். அப்போ அது மத்தவங்க கிட்ட நீங்க சொல்றதா இருந்துது. இப்போ என் கிட்டவே. இப்போ சந்தோஷப்படறேன். நான் வளர்ந்த்ததுக்காக.

யார் செல்லம்டா நீ குட்டிம்மான்னு கேட்கப்பட்டப்போல்லாம் உடனவே சொல்வேன் அப்பா செல்லம்னு. சிரிப்பீங்க. என்னிக்கு உங்க கண்ல கொஞ்சூண்டு வருத்தமும் தெரிஞ்சுதோ அன்னிலேருந்து நான் அப்பா செல்லமும் அம்மா செல்லமும் ஆயிட்டேன். எல்லார் கிட்டவும் பாத்தீங்களா அப்டியே அவ அப்பா ஜாடைன்னு பெருமை பேசுவீங்க. அதுவே என் மனசிலேம் எனக்கு பொண்ணு பிறந்தா என் கணவர் ஜாடையில இருக்கணும்கிற விருப்பமா இருந்து நிறைவேறிடிச்சு.

அக்காவுக்கும் உங்களுக்கும் என்னிக்குமே ஒத்துக்காது. ஏங்க இவ இப்டி இருக்கான்னு நீங்க சொல்லும்போது விடுப்பா.. இவ என்ன இன்னைக்கா இப்டி இருக்கான்னு அப்பா சமாதானம் சொன்னாலும் உங்க மனசு ஆறலேன்னு எனக்கு தெரியும். அவ செய்யாததையும் சேத்து நான் செய்வேன். உங்கள திருப்திப்படுத்த. இன்னை வரைக்கும் உனக்காக இத வாங்கினேன், உனக்குன்னு இதை செஞ்சேன்னுதான் நீங்க சொல்லி இருக்கீங்களே தவிர உனக்கு இதை வாங்கட்டுமா, இதை செய்யட்டுமான்னு கேட்டதே இல்ல. என்ன இப்டி ஒரு ட்ரஸ் போட்டிருக்கே.. நல்லாவே இல்லனு ஃப்ரெண்ட்ஸ் சொன்னாலும் பாத்தியா அவள நான் குடுத்தது ஒரு வார்த்தை பேசாம போட்டுட்டு போறானு நீங்க சொல்றதுதான் எனக்கு பிடிக்கும். இதனால சமத்தில அனியாயத்துக்கு அக்கா என் மேல கொலைவெறில இருந்தாங்கிறது வேற விஷயம்.

நான் பேசறத விட நீங்க பேசறத நான் கேக்கறதுதான் உங்களுக்கு பிடிக்கும். அண்ணன்கள், அப்பா, அக்கா பத்தி பேசும் போது நான் எப்டி அவங்கள கூப்டுவேனோ அப்டியே சொல்லி பேசுவீங்க. ரஜி இருக்கானே இன்னைக்கு என்ன கோச்சுக்கிட்டாம்மா. நான் இப்டி சொன்னது தப்பா, அக்கா கூட போய் வாங்கி வந்து நட்ட ஆரஞ்சு ரோஸ் பூத்திடுச்சும்மா, இன்னைக்கு அண்ணா பேசினார், அப்பா கிட்ட சொல்லும்மா சரியா சாப்ட சொல்லி இப்டியே போகும். எப்பவாவது நான் கொஞ்சம் பிஸியா இருந்து கவனிக்காம இருக்கேன்னா வருமே உங்களுக்கு ஒரு செல்ல கோபம். சரிம்மா உன் வேலைய நான் கெடுக்கல, உனக்கு நேரம் இருக்கும்போது பேசு பரவால்ல பேசுங்கம்மானு இங்க நான் சொல்றத்துக்குள்ள அங்க டொக்னு ஃபோன வச்சிடுவீங்க. அம்மா அக்கா சொல்ரத கேளுங்கம்மா, கொஞ்சம் கவனமா சமையல் பண்ணுங்க. ரஜி பாத்துப்பான்மா அவன் கிட்ட அண்ணிய கவனமா பாத்துக்க சொல்லி அவன் பேசும்போதெல்லாம் சொல்லாதீங்கனு லைட்டா ஒரு அட்வைஸ் சொன்னா போதும். நீயும் ஆரம்பிச்சிட்டியா. என்ன நினைச்சுட்டு இருக்கீங்க எல்லாரும் என்ன பத்தி. எனக்கு யாரும் சொல்ல வேண்டியதில்ல. எனக்கு அட்வைஸ் பண்ரவங்கள பிடிக்காதுனு சொல்லிட்டு ஒண்ணு லைன் கட் ஆவும், இல்லன்னா அப்பா இல்ல அக்கா கைல ஃபோன் திணிக்கப்படும். அப்புறம் உங்கள சமாதானம் பண்ண நான் படற பாடிருக்கே.. குழந்தை..

ஒரு பத்து வயசு வரைக்கும் உங்க கிட்ட அப்பப்போ அடி வாங்கி இருக்கேன். கொஞ்ச நேரம் பேசாம இருக்கியா தலை வலிக்குது எனக்குனு திட்டு வாங்கி இருக்கேன். அப்போல்லாம் அம்மா ஏன் இப்டி இருக்காங்கன்னு புரியாம இருந்தது, நான் அம்மாவா ஆனதும் புரிஞ்சுது. ஆனா நான் முன்ன உன்ன அடிச்சத்துக்காகதான் கடவுள் என்ன உன் கிட்ட இருந்து தூரத்தில வச்சிருக்கார்னு நீங்க சொல்லும்போது எனக்கு ரொம்ப வலிக்குதும்மா. பொறுத்துக்கோங்க. நீங்க இங்க வந்து நான் எப்டி குப்பை கொட்றேன்னு கண்டிப்பா ஒரு நாள் பாக்கத்தான் போறீங்க. என் கையால உங்களுக்கு சமைச்சு போட்டு தண்டனை குடுக்கத்தான் போறேன்.

என்னதான் நான் சாதாரணமா பேசினாலும் சமயத்தில என் மனசு சரியா இல்லைங்கிறது எப்டித்தான் உங்களுக்கு புரியுதோ எனக்கு தெரிலம்மா. அப்போ மட்டும் எனக்கு அம்மாவா பேசுவீங்க.  தலைவலிக்குதும்மா, ஆஃபீஸ்ல வேலை ஜாஸ்தினு சொல்லி மழுப்புவேன். சூடா ஒரு டீ சாப்டுனு சொல்வீங்க. நானே போட்டு சாப்டுறத்துக்கு இஷ்டம் இல்லமானு சொல்வேன். என் செல்லம்ல.. அம்மாவுக்காக எந்திரிச்சு போய் செய்னு கெஞ்சலா சொல்வீங்க.  பேசிக்கிட்டே செஞ்சு குடிப்பேன். என்னைக்கும் என் மனசில இருக்கிற ஒரே ஆசை என் அம்மா எப்பவும் சிரிச்சுக்கிட்டு இதே குழந்தையா இருக்கணும். நான் உங்க அம்மாவா இருக்கணும். உங்கள சிரிக்க வைக்கிறத்துக்காக, இல்ல என் வேதனைய மறைக்கிறத்துக்காகவும்னும் சொல்லலாம், என் பேச்சு சமயத்தில கலர்ஃபுல்லா போய்டும். ச்சீய்.. இந்த பொண்ணு வெளிநாட்டுக்கு போயி ரொம்ப கெட்டுப் போச்சு, மருமகன் காதில விழுந்தா என்ன நினைப்பாரும்பீங்க. சமத்துன்னு நினைப்பாரு ஏன்னா கத்துக் குடுத்ததே அவர்தானேம்பேன். வெக்கத்தோட சிரிப்பீங்க.

மருமகன்கள், மகள்கள் எல்லாம் உங்களுக்கு மறுமக்கள்தான். நானும் அக்காவும் சொல்லிக்குவோம் அண்ணிங்க குடுத்து வச்சவங்கன்னு. என் கல்யாணம் முடிஞ்சு மாமியார் ஊருக்கு திரும்பின அன்னிக்கு நீங்க ரெண்டு பேரும் கட்டிக்கிட்டு அழுதப்போ ரெண்டு மாசத்தில மறுபடி பாக்க போறீங்க. அவதான் நார்வே போறா. நீங்க இல்லனு நாங்க கிண்டல் பண்ணாலும் நீங்க வெறும் சம்பந்திங்க இல்லைன்னு எல்லாருமே புரிஞ்சுக்கிட்டோம்.

உங்களுக்கு இப்போ என்ன பாட்டும்மா பிடிக்கும்னு நேத்து கேட்டப்போ முதல்ல ராதையின் நெஞ்சமேன்னீங்க. அப்புறம் நான் தேடும் செவ்வந்தி பூவிது.. இல்ல இல்ல மார்கழிப் பூவே.. இல்லம்மா சினேகாவோட ஒரு பாட்டு.. நீங்க யோசிச்ச காப்ல பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் அதுவான்னேன். அதில்லம்மா.. ஆங்.. ஒவ்வொரு பூக்களுமே.. அதான் அதான் எனக்கு பிடிக்கும் இப்போ. அடுத்த வாரம் ஒரு பர்த்டே பார்ட்டில நீங்க அத பாடறத்துக்கு லிரிக்ஸ் அனுப்பறதா நான் சொன்னதோட பேச்சு முடிஞ்சது. இனிமேதான் உங்களுக்கு விஷ் பண்ண போறேன். அதுக்கு முன்னம் இங்க சொல்லிக்கிறேன்.

ஹாப்பி பர்த்டேம்மா.. உம்ம்ம்ம்மா..

சொல்ல மறந்துட்டேன். இன்னமும் என் ஃப்ரெண்டு கிட்ட கேட்டு கத்துக்கலை.. அதனால பாடல் இணைக்க முடியல. சாரிம்மா.. ஆனா எங்க நாலு பேரையும் நீங்க அணைச்சு வச்சிட்டு எடுத்த ஒரு ஃபோட்டோ போடறேன் பாருங்க. அப்பா.. நீங்க ஆஃபீஸ் போன சமயத்தில ஃபோட்டோ எடுத்தது என் தப்பில்ல. ஓக்கேவா.. உங்கள ரொம்ம்ம்ப ஒட்டிக்கிட்டு இருக்கிறது நானு.. தள்ளிப் போயி பட்டும் படாமலும் நிக்கிறது ஹிஹிஹி.. நீதான்கா.

svane mor

14 February, 2010

குடை கொண்டு வாங்க..

காதல்.. எனக்கு எப்பவும் பிடித்த ஒரு வார்த்தை.. உயிருள்ளவை மட்டுமன்றி உயிரற்றவையும் காதல் செய்வதாக கற்பனை செய்து கொள்வேன். காதலிப்பவர்களை பார்த்து குதூகலிக்கும் என் மனம் தோற்றுப் போகும் காதலைப் பார்த்தால் துவண்டும் விடும். காதலை காதலித்துக் கொண்டிருந்ததாலோ என்னவோ மனதில் காதலனுக்கு மட்டும் இடம் கொடுக்க முடியவில்லை. அல்லது எனக்கான என் கண்ணனை நான் அப்போது அறிந்திருக்கவில்லை.

இதுக்கு நான் வளர்ந்த விதமும் ஒரு காரணமா இருந்திருக்கலாம். காதல் பொல்லாதது, தெய்வ குத்தம்னு யாரும் சொல்லல. எட்டாவது படிக்கும்போது “அக்கா.. ட்யூஷன்லவே புக்க விட்டு வந்திட்டேன். உன் க்ளாஸ்மேட் விமலன் கொண்டாந்து குடுத்தான். அவன பாக்கும்போது நம்ம சின்னண்ணன் மாதிரி இல்ல” னு சொல்லி முடிக்கிரத்துக்குள்ள, “அதுக்குள்ளவே பசங்கள பத்தி பேச்சா.. ஆளப் பாரு” னு சொன்ன அம்மா பத்தாவது வந்தப்போ இவன் சிரிப்பு நல்லால்ல, அவன் சூப்பரா பேசரான் பாத்தியானு எங்க கூட அரட்டை அடிப்பாங்க. அப்பா கூட யாரோட லவ் எந்த லெவெல்ல இருக்குன்னு டிஸ்கஸ் பண்ணிக்குவோம். அண்ணன்களோட அத்தனை ஃப்ரண்ட்சும் எங்க வீட்டுக்கு வந்து போவாங்க. சிலருக்கு எந்த வேளையும் வந்து போகக் கூடிய சிறப்பு அனுமதியும் உண்டு. இருந்தும் எனக்கான என் கண்ணனை நான் இப்போதும் அறிந்திருக்கவைல்லை.

குட்டிப் பொண்ணா இருக்கும்போது சித்தியோட காதல், அதுக்கு பெரிய மாமாவால வந்த எதிர்ப்பு, அம்மா அப்பா துணையோட நடந்த அவங்க கல்யாணம் எல்லாம் பிரமிப்பை குடுத்துது. அவங்க மேல இருந்த பாசம் காதல் மேல ஒரு ஈர்ப்பை எனக்குள்ள உருவாக்கிடுச்சு. அதே சமயத்தில ரெண்டாவது மாமா காதல் கல்யாணத்தால தள்ளி வைக்கப்பட்டதும், மாமாவ தன் தம்பியே இல்லன்னு சொன்ன அம்மா தனியா உக்காந்து அழும்போது ஏன்னு தெரியாமலே நானும் அவங்கள கட்டிக்கிட்டு அழுதிருக்கேன். அது காதல் மேல ஒரு பயத்தையும் குடுத்தது. இருந்தும் எனக்கான என் கண்ணனை நான் இப்போதும் அறிந்திருக்கவைல்லை. (சிரிக்காதீங்க மக்கள்ஸ்.. அஞ்சு, ஆறு வயசிலேயே சிலருக்கு லவ்வு ஸ்டார்ட் ஆயிடுதாம்ல..)

அதே குட்டிப் பொண்ணா இருக்கும்போது ஒரு தடவை அப்பா கிராமத்துக்கு போயிருந்தப்போ ஒரு உறவுக்காரர் என்ன எப்ப பாத்தாலும் பிடிச்சு வச்சுக்கிட்டு “அக்கா இவள நான் கல்யாணம் பண்ணிக்கிறேன், உனக்கு கட்டிக் குடுக்க சம்மதம்தானே” ம்பார். இந்த அசட்டு அம்மாவும் (கோச்சுக்காதீங்க அம்மா.. அப்போ அப்டித்தான் தோணிச்சு) சிரிச்சுக்கிட்டே தலைய ஆட்டுவாங்க. அம்மா கிட்ட கேட்டதோட விட்டிருந்தா பரவால்ல. அவர் டைரக்டா என்கிட்டவே “குட்டிம்மா மாமாவ கட்டிக்கிரியா” னு கேட்டப்போ மிரண்டு போய்ட்டேன். அப்புறமென்ன.. அவ்..லாம் இல்ல.. டைரக்டா ஆவ்வ்வ்.. தான். அவர் மிரண்டு போய்ட்டார். அப்புறம் எல்லாரும் சேர்ந்து என்னன்னமோ சொல்லி சமாதானம் செஞ்சாங்க.

அதுக்கு அடுத்த வருஷம் பெரிய மாமா வீடு போயிருந்தப்போ மாமியோட கடைசி தம்பி அதே கேள்விய கொஞ்சம் மாத்திக் கேட்டார். “இவள நான் கல்யாணம் பண்ணிக்கிரதுன்னா உறவு முறை சரியா இருக்குமாக்கா.. கொஞ்சம் பாத்து சொல்லேன்” லைட்டா பயம் வந்தாலும் அம்மா முன்னாடி சொன்ன சமாதானத்துல இது மட்டும் கொஞ்சம் நம்பும்படியா இருந்ததால சொன்னேன், “குட்டிப் பொண்ணுங்கள பெரியவங்க கல்யாணம் பண்ணிக்க மாட்டாங்க. உங்களுக்கு தெரியாதா மாமா” என்னதான் எல்லாரும் சிரிச்சிட்டாங்கன்னாலும் அதுக்கப்புறம் அவர் வடக்க வந்தா நான் தெற்க போய்டுவேன். பச்சப் புள்ளய என்னம்மா மிரட்டி வச்சிருக்காங்க பாருங்க. ரெண்டும் ஒரே மாட்டர்ங்கிரதால இதுக்கு முந்தைய பத்தியில இத சொல்லல. எனக்கான என் கண்ணனை நான் இப்போதும் அறிந்திருக்கவைல்லை.

முடிவு பண்ணிட்டேங்க. எனக்கு ரொம்ப பிடிச்ச காதலையே தொடர் பதிவா எழுதிடலாம்னு முடிவு பண்ணிட்டேன். ரொம்ப நாளா தொடர் பதிவு எழுதணும்னு நினைச்சிருந்தாலும் இதுதான் சரியான சந்தர்ப்பம்னும் தோணிச்சு. இது பத்தின உங்க கருத்தையும் சொல்லிட்டு போங்க. பிடிக்கலேன்னா இங்கவே முற்றும் போட்டிடலாம்.

இன்னைக்கு இங்க ரொம்ப ஸ்பெஷல். ஏன் தெரியுமா? காதலர் தினம் மட்டுமில்லாம அன்னையர் தினம் + Fastelaven னு சொல்லி கிறிஸ்தவ மக்கள் கொண்டாடுற ஒரு நாள்.அன்னையர் தினத்துக்கு எல்லா அம்மாக்களுக்குமான பரிசு இதோ..j 011

ஃபாஸ்தெலாவென்(Fastelaven) னு சொன்னா இன்னையில இருந்து 40 நாட்களுக்கு அதாவது ஈஸ்டர் வரைக்கும் விரதம் இருப்பாங்களாம். அதுக்காக உடலை தயார்படுத்துற சின்ன கொண்டாட்டம்தான் இது. இன்னைக்கு ஒரு ஸ்பெஷல் பன் செஞ்சு, நிறைய்ய்ய்ய்ய ஃப்ரெஷ் க்ரீம் + ஜாம் வச்சு சாப்டுவாங்க. விரதத்துக்கு தயாரா உடல்ல நிறைய கொழுப்பு சேத்துக்குவாங்களாம். அப்டீன்னு சொன்னாங்க. நாம சம்பிரதாயப்படி பன் சாப்பிடறதோட சரி. மேலதிக விபரங்கள் தெரியல. உங்களுக்கும் இதோ..

1.1854492!img1854474

அத்தோட ப்யொர்க் (Bjørg) னு ஒரு மரத்தோட தடியில குட்டி குட்டியா அரும்புகள் வந்திருக்கும். இந்த வருஷ ஓவர் குளிரால இன்னும் வரல. அதில சாயம் போட்ட இறகுகளால அலங்கரிப்பாங்க. குறிப்பா நர்ஸரி பசங்க வேலை இது. அதும் பேரு ஃபாஸ்தெலாவென்ஸ்றீஸ் (Fastelavensris). அதையும் பாருங்க.

Fastelavensris

அப்புறம் என்னங்க.. எல்லா அன்பு இதயங்களுக்கும் என்னோட காதலர் தின வாழ்த்துக்கள். சந்தோஷமா, என்னைக்கும் இதே அன்போட இருங்க. வரட்டுங்களா..

07 February, 2010

என் சின்னண்ணாவுக்கு..

நலமா நண்பர்களே? மன்னிச்சுக்கோங்க. இன்னைக்கும் பெரிய இடுகைதான். இன்னைக்கு என் சின்னண்ணன் பர்த் டே. அவனப் பத்தி உங்களுக்கு சொல்லணும்னு தோணிச்சு. முடிஞ்ச வரைக்கும் கொஞ்சமா சொல்ல ட்ரை பண்றேன். ஓகேவா?

----------------------*-----------------------------

me   r

என்னடா.. உன்ன சின்னண்ணான்னு கெத்தா தலைப்புல போட்டுட்டேன். நாந்தான் உன்ன எப்பவுமே பேர் சொல்லி கூப்டுவேனே.. மரியாதைய தலைப்போட விட்டுடறேன். அது என்னமோ அன்னியமா இருக்குடா.

நான் பிறந்தப்போவும் அப்புறமும் நீ ரெம்பவே அழுவியாம். அம்மா என் கூட இருந்தது உனக்கு பிடிக்கலையாம். அப்போ ஆரம்பிச்சது நமக்குள்ள பகை.. வீட்ல எல்லாரும் என்ன குட்டிப் பொண்ணுன்னு செல்லம் குடுத்தப்போ நீ மட்டும்தாண்டா என்ன விரோதியாவே பாத்தே. எப்பப் பாரு நாம டாம் & ஜெர்ரிதான். இப்போ சிரிப்பா இருக்கு. நீயாவது அடியோட விட்டுடுவே. நான் அவ்ளோ திட்டுவேனே. நாயி பேயி ஏழரைனு வரைட்டியா..

நம்மளோட கடைசி ஃபைட் நினைவிருக்கா? நீ கத்தி எடுத்துட்டு வந்து உன்ன ஒரே குத்துல கொன்னுடுவேண்டி.. அம்மாவுக்காக பார்க்கறேன்.. புஸ்ஸூ.. புஸ்ஸூ.. (இது கோவத்தில நீ விட்ட மூச்சு) முடிஞ்சா குத்துடா பார்ப்போம். நீ என் அண்ணனே இல்ல அப்புறம் எதுக்கு அம்மாவுக்காக பாக்கறே. குத்து.. புஸ்ஸ்ஸூ.. புஸ்ஸ்ஸூ (இது அத விட கோவத்தில கொஞ்சம் பயத்தோட நான் விட்ட மூச்சு) அப்போ கரெக்டா அட்டன்ஸ போட்டாய்ங்க நம்ம நாட்டாமை அக்கா. செம திட்டு ரெண்டு பேருக்கும். அன்னிக்கு நினைச்சேண்டா இனிமே உங்கூட ஒன்லி வாய்ச்சண்டைதான் போடறதுன்னு. அவ அத அம்மா அப்பா கிட்ட போட்டு குடுத்துடுவாளோன்ற பயத்தில எவ்ளோ எடுபிடி வேல செஞ்சேன் அவளுக்கு. உன்னய இவங்க திட்டுரத்துக்கு முன்னாடி என் பங்கு கொலை முயற்சியையும் சொல்லிடறேன். அடுத்த பத்தியில.

உன்னய விட ரெண்டு வயசு சின்னவளா இருந்தாலும், உருவத்தில எட்டாவது வரைக்கும் நான் பெரியவளா இருந்தேன். பாட்டி வீட்டுக்கு போய்ட்டு வரும்போது வேலியோரம் என்ன விட்டுட்டு ரோட்டோரம் நீ வந்திட்டு இருந்தே. லைட்டா ஒரு இடி விட்டேன் பொத்துன்னு கரெக்டா வந்த கார் முன்னாடி நீ சுருண்டு விழுந்தே. ஸ்பீட் ப்ரேக்கர் இருக்கப் போயி கார் ஸ்லோவா வந்ததுனால தப்பிச்சே. அடுத்த முயற்சி இது மாதிரி சத்தியமா எனக்கு நினைவில்லடா. குளிக்க வச்ச தண்ணி பக்கட் உள்ள உன் தலைய அமுக்கி பிடிச்சேனாம். அம்மா மட்டும் பாக்கலேன்னா.. பிள்ளையாரே.. நான் கொலைகாரி ஆயிருப்பேன். நீ பத்தாவது வந்தப்போ வளர்ந்தே பாரு கிடுகிடுன்னு.. ஒட்டடைக்குச்சி. நாந்தான் அண்ணன் சொன்னா மாதிரி அதுக்கப்புறம் சைடாவே வளர்ந்துட்டு இருக்கேன்.

நான் வெளியூருக்கு வேலைக்குப் போனப்போதான் முத முதலா உனக்கு என் மேல இருந்த பாசத்தை லைட்டா புரிஞ்சுக்கிட்டேன். வெள்ளி சாயந்தரம் வந்திடுவே கூட்டிப் போக. அத விட எங்க ரெண்டு பேர் ஸ்கூலும் எதுக்காவது சந்திச்சா நான் ஒண்ணு உன் கூட, இல்ல உன் ஸ்கூல் வண்டீல வீட்டுக்கு வந்திடுவேன். ரெண்டு ப்ரின்ஸிங்களும் சிரிப்பாங்க. அதுவும் கல்யாணம் ஃபிக்ஸ் ஆகி வேலைக்கு முழுக்குப் போட்டு உன் முதுகில சாஞ்சு அழுதிட்டே பைக்ல வந்தப்போ எப்பவும் நான் பேசறத கேட்டுட்டு வர்ற நீ அன்னிக்கு நிறைய்ய பேசிட்டு வந்தே.

ஸ்வஸ்திகம் + திரிசூலம் ஒரு சைடும், மகாலக்‌ஷ்மி மறு சைடும் போட்ட டாலர் ஒண்ண குடுத்துட்டு நான் கூட இல்லேன்னாலும் உன் பாதுகாப்புக்கு என்னோட சின்ன கல்யாணப் பரிசுன்னு சொன்னே. இப்பவும் அது எனக்கு பாதுகாப்பாய். ஊர விட்டு நான் புறப்படும்போது உன் தோளக் கட்டிக்கிட்டு அழுதப்போ சரிடி.. சரிடி.. அழாத சந்தோஷமா போய் வான்னு சொல்லி என்ன சீட்ல உக்கார வச்சிட்டு ஜன்னல் வழியா அடிக்கடி நீ எட்டிப் பாத்தது வார்த்தைகள் சொல்லாத உன் வேதனைய சொல்லிச்சுது. கண்ணீர்க் கண்களுக்குள்ள மறைஞ்சு போன உன் உருவம்.. இப்பவும் என் மனசில இருக்கு. அப்போ புரிஞ்சுதுடா உன் முழுமையான பாசம். அதுக்கப்புறம் எதோ ஒண்ணு நமக்குள்ள விலகினா மாதிரி நீ என்கிட்டயும் மனசு விட்டு பேச ஆரம்பிச்சே. நண்பனா, அண்ணனா சமயத்துக்கு ஏற்ப. அது பிரிவு தந்த பாசம் கிடையாது. நமக்கு நம்மை புரிய வைக்க கிடைச்ச சந்தர்ப்பம்.

என் கல்யாணத்துக்கு நீயும், அக்கா கல்யாணத்துக்கு அண்ணனும் மாப்பிள்ளைத் தோழனா இருக்கணும்கிர எங்க ஆசை எனக்கு மட்டும் நிறைவேறலேன்னாலும் உன் கல்யாணத்துக்கு நான் தோழியா மட்டுமில்லாம ஒரு வகையில காரணமாயும். சிரிக்கிறியா.. அந்த கதைய ஒரு தனி இடுகையா போடறேன் பாரு.

என்னவர் மேல உனக்கு இருக்கிற மரியாதை. உங்களுக்குள்ள இருக்கிற நட்பும் உறவும் கலந்த ஒரு பாசம். எப்போ ஃபோன் பண்ணாலும் என்னடியப்பா.. என்ன செய்றே.. அத்தான் எப்டி இருக்கார்னுதான் உன் பேச்சு தொடங்கும். பசங்களயும் அத்தானையும் கவனமா பாத்துக்கோன்னு முடியும். நீங்கல்லாம் உயிர் பிழைச்சு வருவீங்களாங்கிற நிலமையில கூட உன் பேச்சு மாறல.

ரெண்டாவது தடவை நாங்க ஊருக்கு வந்தப்போ அண்ணி மேல எதுக்கோ உனக்கு கோவம். அங்கவே கத்தாம உள்ள கூட்டிப்போய் டோஸ் விட்டு அனுப்பினது நீ ஒரு நல்ல கணவன்னு சொல்லிச்சு. குட்டிப் பொண்ணுங்க ரெண்டும் பண்ற அப்பா ஜபம், அதிலேம் குட்டிப் பொண்ணு உன்ன விட்டு ஒரு நாள் கூட இருக்க மாட்டாங்கிரது நீ அன்பான அப்பான்னு சொல்லிச்சு.

எல்லாத்துக்கும் மேல அண்ணா, அண்ணி, பசங்களுக்கு நீ செஞ்ச, செய்றத்துக்கெல்லாம் உன் காலத் தொட்டு கும்பிடணும்டா. எனக்கான அத்தனை ஜென்மத்துக்கும் உனக்கு நான் தங்கையா பிறக்கிற குடுப்பினைய குடுக்க சொல்லி என் பிள்ளையார தினமும் வேண்டிக்கிறேன்.

உனக்கு எதாவது ஒரு நல்லது நடக்கணும்னா ரொம்ப அலைய வச்சு, கடைசீல நடக்காதோன்னு நினைக்கும்போது தான் அது கை கூடும். இதில உனக்கு வருத்தம் இருந்தாலும் உன் முயற்சிய விடாம போராடறே பாரு.. எங்க எல்லாருக்கும் ரொம்ப பெருமையா இருக்கும்.

இன்னைக்கு எங்க எல்லார் மனசிலேம் இருக்கிற சந்தோஷம் என்னைக்கும் நிலைச்சிருக்கணும். நீ என்னைக்கும் தீர்க்காயுசோட சந்தோஷமா அண்ணி, பசங்க கூட வாழணும். ஹாப்பி பர்த்டேடா ரஜி..

பி.கு – சித்தி பொண்ணு உன்னய விஷால் மாதிரி இருக்கேன்னு சொன்னதா செய்தி வந்துதே.. சிக்கிட்டேடா சின்னண்ணா..

பி.கு 2 – உனக்கு என்ன பாட்டு பிடிக்கும்னு தெரீலடா. ஆனா இப்போ உன் காலர் ஐடி புலி உறுமுது போடலாம்னா அதிலேம் ஒரு சின்ன சிக்கல். வீடியோ க்ளிப்பிங் போட ஹெல்ப் பண்ண வேண்டிய ஃப்ரெண்டு கொஞ்சம் பிசியா இருக்கு.. அது வந்ததும் போடறேன். ஓக்கேவா.. கோச்சுக்காத..

02 February, 2010

சாலையில போறவங்கள காப்பாத்தலாம்.

சின்ன அம்மிணி ரொம்ப நாளைக்கு முன்னாடி ஒரு தொடர்பதிவுக்கு என்ன கூப்டிருந்தாங்க. அவங்க மறந்திருப்பாங்க. நானும் அப்டியே விட்டுடலாம்னு நினைச்சேன். ஆனா..

நாம எப்பவுமே விழிப்பா இருக்கணும். விழிப்புணர்வு வாரத்தில மட்டும் விழிப்பா இருந்திட்டு அப்புறமா தூங்கிட்டே ட்ரைவ் பண்ணக் கூடாதில்லையா. இப்டி ஒரு எண்ணம் எனக்குள்ள வந்ததோட விளைவுதான்.. அதே அதே.. புரிஞ்சுக்கிட்டீங்களே.. சமத்து.. அது மட்டுமில்லாம இங்க விண்டர்ல நாம விழிவிழிப்பா இருக்கணும்ங்க. வெளிநாடு வாழ் என் வாசகர்கள மனதில் கொண்டு நான் இந்த சாலைப் பாதுகாப்பு தொடர தொடர நினைச்சேன்னும் சொல்லலாம்.

நான் ட்ரைவிங் லைசன்ஸ் எடுத்த கதைய நானே தனிய்யா.. ஒரு தொடர் பதிவு போடக் கூடிய சாத்தியக் கூறுகள் இருக்கிறதால இந்த தொடர் பதிவில அது பத்தி சொல்லல. இப்போ என் கிட்ட லைசன்ஸ் இருக்குங்கிறத மனசில வச்சிக்கிட்டு வாங்க விழிப்புணர்வ வளத்துக்கலாம்.

இங்க இப்போ அத்தனை தொடர்பாடல் சாதனங்களும் கூவிக்கிட்டு இருக்கிறது..

*வளைவுகள்ள ஸ்பீடா போகாதீங்க.

*ஸிக்னல்ல நிக்கும்போதும், போம்போதும் நிதானமா போங்க.

*Round about ல சுத்தும்போது முடிஞ்ச அளவுக்கு ஸ்லோவா போங்க.

இதோட தினமும் என் அம்மாவும், அப்பப்போ என் கண்ணனும் வேற அட்வைசுறாங்க, பாத்துப் போ, கவனமாப் போன்னு. ஆனா ஒண்ணுங்க ஸ்னோல ஸ்லிப்பாச்சுன்னு வச்சுக்குங்க.. அப்புறம் எதுவுமே நம்ம கைல இல்ல. சர்ர்ர்னு போயி முட்டிக்க வேண்டியதுதான். நம்மளுக்கு டேமேஜ்னா பரவால்ல. நம்மளால யாருக்கும் இல்ல எதுக்கும் எதுவும் ஆயிடக் கூடாது. இது அனைத்து ஜீவராசிகளுக்கும், அனைத்து சக்கர வாகனங்களுக்குமான குளிர் காலப் பொது நியதி.

இதில இந்த சைக்கிள்காரங்க பண்ற அலப்பர இருக்கே.. சைக்கிள் பாதை தனியா இருந்தாலும் அவங்க பாட்டுக்கு ரோட்ல இறங்கிடுவாங்க. அப்புறமென்ன? அவங்களுக்கும் நாலு சக்கர வாகனத்துக்கு இருக்கிர அத்தனை ரைட்ஸும் இருக்கு. அவங்க எப்போ கொஞ்சம் சைடுக்கு போவாங்க நாம ஓவர் டேக் பண்ணலாம்னு பொறுமையா பின்னாடியே போணும்.

அடுத்து நடந்து போறவங்க. நேரா போய்ட்டேடேடே.. இருப்பாங்க.  நடைபாதைய இவங்க கடக்கப் போறதில்லன்னு நினைக்குறத்துக்குள்ள குபீர்னு குதிச்சு கடக்க ஆரம்பிச்சிடுவாங்க. சடனா ப்ரேக்க போட வேண்டியது நம்ம பாடு. ரோடே அவங்களுக்காக போடப்பட்டதாவும் நாங்க என்னமோ தெரியாத்தனமா வண்டிய ஓட்டிட்டுப் போறா மாதிரியும் தெனாவட்டா போய்ட்டே இருப்பாங்க. நாமதான் ஓரமா ஒதுங்கி போணும்.

தூக்கக் கலக்கத்தோட ட்ரைவிங் வேண்டாம். அதிலயும் லாங் ட்ரைவ் போறீங்கன்னா குட்டியா ஒரு தூக்கத்த போட்டுட்டு பயணத்த தொடருங்க.

ஓவர் டேக் பண்ணும்போது ரொம்ப கவனமா இருக்கணும். விண்டர்ல வேண்டவே வேண்டாம். ரோட்ல சேர்ந்திருக்கிர ஸ்னோ நீங்க லைன் சேஞ்ச் பண்ணும்போது நிச்சயம் வழுக்கும்.

வண்டி மேல சேர்ந்திருக்கிர ஸ்னோவ தட்டி க்ளீன் பண்ணாம ஓட்டக் கூடாது. ட்ரைவர் தன் முன்னாடி மட்டும் தட்டி விட்டுட்டு உத்து பாத்துக் கிட்டே போவாங்க. அவங்க வண்டி மேல இருக்கிர ஸ்னோ அப்டியே காத்தில பறந்து பின்னாடி போற வண்டி மேல கொட்டி.. இந்த ட்ரைவர் கண்ண மறைச்சு.. அப்புறமென்ன? அது மட்டுமில்லாம பார்க்கிங் ஏரியாவையே ஒரு மினி குளமா ஆக்கிடும் கரைஞ்சு போற ஸ்னோ.

இங்க அனாவசியமா ஹாரன் அடிக்க கூடாது. ஹெட் லைட் போட கூடாது. இவங்க சும்மா இருப்பாங்களா? எதிர்க்க போற வண்டிக்காரன் தெரிஞ்சவனா இருந்திட்டா ஹாய் சொல்றத்துக்கு உடனவே ஹாரன், இல்ல ஹெட்லைட். இதனால சமயத்தில என்னமோ நாமத்தான் தப்பா ஓட்டரோமோன்னு பயப்பட வேண்டியதிருக்கு. அதுக்கும் மேல ஹாரன் கேட்டதும் ஸிக்னல்ல வெயிட் பண்ரவங்க க்ரீன் விழுந்திடுச்சின்னுதான் இவங்க ஸிக்னல் குடுக்கிரதா நினைச்சு [ஏன்னா அது எங்காவது வாய் பாத்துட்டு இருக்கும், இல்ல ஃபோன்ல பேசிட்டு இருக்கும்] ரெட்லவே வண்டிய எடுத்து.. வேற என்ன?

கிவ் வேல யாராவது விட்டு குடுக்கிராங்கன்னா, கிடைச்சது வழின்னு உடன போய்டாதீங்க. ஒண்ணு அவங்க ஹெட் லைட் போட்டு காமிக்கணும், எடுலே உனக்காகத்தான் வெயிட் பண்றேன்னு கைய காமிக்கணும் இல்ல அவங்க ஸ்லோ பண்ணணும். சிலர் இதுக்கெல்லாம் கவலைப்பட மாட்டாங்க. அவங்க பாட்டுக்கு போய்ட்டே இருப்பாங்க. ப்ரேக்க உதைச்சு ஆக்ஸிடண்ட் ஆகாம பாத்துக்கிரது அடுத்தவங்க பாடு.

என் கண்ணாளன் எனக்கு எப்பவுமே சொல்ரத்த இப்போ நான் உங்களுக்கு சொல்ரேங்க. நீ இன்னைக்குத்தான் முத முதலா ட்ரைவ் பண்ண ஆரம்பிச்சிருக்கேன்னு நினைச்சுக்கிட்டு கார் கீய கைல எடுத்துக்கோ. அப்போதான் எப்பவும் கவனம் இருக்கும்பார். சரிதானே அவர் சொன்னது?

இவ்ளோ கஷ்டம் எதுக்குங்க.. முடியலையா? தைரியம் இல்லையா? பயமா இருக்கா? பஸ்ல போய்டுங்க. உங்கள மாதிரித்தான் என்ன ஒருத்தங்க கேட்டாங்க. அது மட்டும் ஸ்லிப்பாகாதான்னு. பேஷா ஆகும். அது பஸ் ட்ரைவரோட பிரச்சனை. நான் ஏன் கவலைப்படணும்? இதுவும் சரிதானே?

நீங்க இந்த ஊருக்கு வரும்போது கீழ இருக்கிரத கவனமா பாத்துட்டு வாங்க. கணிசமான விபத்துக்களுக்கு டூரிஸ்டும் ஒரு காரணம்.

அப்புறம் ஸீட் பெல்ட் போடுன்னா யாரும் கேக்கலைன்னுட்டு இப்டி அங்கங்க பானர் வச்சாங்க. வித்யாசமா இருந்துது. அத வெறும் பெல்ட்னு நினைக்காதப்பா.. உனக்கு வேண்டியவங்க அணைச்சுக்கிராங்கன்னு   நினைச்சுக்கோன்னு சொல்றா மாதிரி.

என்னதான் இதுக்கு ஃபைன் அதுக்கு ஃபைன்னு போட்டாலும் பணத்த கட்டிட்டு அடுத்த நிமிஷம் ஒன் வேல போறவங்கள என்ன பண்ணலாம்?? என் பதிவோட லிங்க் குடுத்திடலாமா??

இந்த தொடர் பதிவோட முக்கியத்துவம் கருதி இத்தோட விடாம இன்னும் ஐந்து பேர தொடர அழைக்கிறேன். உங்க பங்குக்கு  நீங்களும் கொஞ்சம் விழிப்புணர்வ வளர்த்திடுங்க நண்பர்களே..

1. குருவே வாங்க நீங்கதான் ஃபர்ஸ்ட்டு. சாளரம் கார்க்கி.

2. உ.பி பிரியமுடன்......வசந்த்

3. சிங்கப்பூர் அண்ணா பித்தனின் வாக்கு சுதாகர்.

4. டெல்லித் தங்கை விக்னேஷ்வரி

5. உங்கள இத தொடர சொல்ரது ரொம்ப பொருத்தமா இருக்கும்னு நினைக்கிறேன் புலவன் புலிகேசி – வழிப்போக்கன். உங்க சமூக சேவை பத்தி படிச்சிட்டு வரதால.

அப்டியே நீங்களும் எத்தனை பேர வேணா கூப்டுங்க. சின்ன அம்மிணி எந்த ரூல்சும் போடலை. வரட்டுங்களா..