’ஃபோன் ஃபோன்.. புள்ளை எடூஊஊஊஊ.. லச்சு ஃபோன் எடூஊஊஊ.. எட ஃபோன் அடிக்குது எங்கயெண்டும் தெரியேல்ல.. புள்ளை.. எந்த ஃபோன் அடிக்குது.. தம்பீஈஈஈஈஈஈஈ (சதுவ).. புள்ளை எடுக்கிறியளே..’
மாம்ஸ் தவிர வீட்டில் இருக்கும் அனைவருக்கும் இப்படியாகச் சொல்லிக்கொண்டே ஃபோன் வரும் ஒவொரு சமயத்திலும் மாமியார் கீழுக்கும் மேலுக்குமாக ஓடித் திரிவார்கள். நான் எப்போதும் என் பக்கத்தில் இதற்காகவே ஒரு ஃபோனை வைத்திருப்பேன். குளிக்கும்போதோ, எங்காவது பசங்க தூக்கிப்போய் வைத்துவிடும்போதோ இப்படி ஆகி விடுகிறது. யாராவது எதுவும் முக்கிய விஷயம் சொல்ல கூப்பிடுவார்களாம். ஒரு தடவை வந்திருந்தபோது படியேறி ஓடி வந்து தடுக்கி வீழ்ந்து காலில் காயம். மாம்ஸ் வீட்டிலிருக்கும் போது சமத்தாக இருந்துவிட்டு அவர் தலை மறைந்ததும் மீண்டும் ‘ஃபோன் ஃபோன்..
#####
அலாரத்தில் அலறி எழுந்தேன். அசந்து தூங்கும் அரிதான நாட்களில் எல்லாம் அலாரச் சத்தத்தில் இப்படியாகத்தான் எழ நேர்கிறது. படபடத்த இதயத் துடிப்பை ஆழ் மூச்செடுத்து ஆசுவாசப்படுத்தியபடி வலப்பக்கம் கையை நீட்டினேன். பதட்டம் போக பக்கத்தில் படுத்திருப்பவரை தொட்டுப்பார்ப்பது க.முவிலும், அணைப்பது க.பியிலும் வழக்கமான ஒன்று. தேடிய கையில் யாரும் தட்டுப்படவில்லை என்றதும் தள்ளிப் படுத்திருக்கிறாரோ என்று எட்டித் துளாவினேன். இல்லையென்றது கை. திடீர் விழிப்பால் எரிந்த கண்களில் வலக்கண்ணை பாதி விரித்துப் பார்த்ததில் அய்.. ஜாலி.. மாம்சை யாரோ மோகினி கட்டிலோட ச்சே.. போர்வை தலையணை சகிதம் தூக்கிட்டு போய்ட்டா என்றது காட்சி. சரி பொழுது விடிஞ்சாச்சு திரும்ப கொண்டு வந்து படுக்கையில விட்டிட்டு போகத்தானே போறா. அவங்களுக்கு இடைஞ்சல் இல்லாமல் நான் இன்றாவது ட்ராஃபிக்கில் நெரியாமல் ஆஃபீஸ் போவோம் என்று வெளியே வந்தேன். கைப்பைக்குள் மொபைல் வைக்கப் போனவளுக்கு அடுத்த அதிர்ச்சி. சோஃபாவில் மாம்ஸ்.
'நைட்டு மூணு மணிக்கே வெக்கையில தூங்க முடியாம நான் இங்க வந்து படுத்திட்டேன். நீ நல்ல்ல்லா தூங்கினே போல' என்றார்.
அப்போ காபி ஆர்டர் பண்ணியதும், வாசம் வந்ததும், கம்பியூட்டர்ல லைட் எரிஞ்சா என்னம்மா நீங்க பாட்டுக்கு தூங்குங்க அதுவும் ஸ்லீப்பிங் மோட்ல போய் தூங்கிடும், மத்த லைட் இன்டர்நெட் சிக்னல்மா அத ஒண்ணும் பண்ணமுடியாதுனு பேச்சு சத்தம் கேட்டதெல்லாம் கனவாஆவ்வ்வ்வ். காலையிலேயே இரண்டு ஏமாற்றம்!!
#####
தீபாவளிக்கு முதல் நாள் மாமியார் பெட்டுக்கு கவர் மாற்றிக் கொண்டிருந்தேன். சீரியல் இடையே ஆட். நாளை தீபாவளி தினத்தை முன்னிட்டு.. என்று தொடங்கி அன்றைய ஸ்பெஷல் நிகழ்ச்சிகள் என்னவென்று அவர்கள் சொல்ல எது எது பார்க்கும்படியாக இருக்கும் என்று மாமியார் சொல்லிக் கொண்டு வந்தார்கள்.
'நல்லா பாடுவாள் போல கிடக்கு ஆனா ஆறு மணிக்கு ஆர் எழும்பி பாக்கிற' இது மகதியின் கச்சேரி.
'ம்ம்.. இது பாக்கலாம் நல்லாருக்கும்.. பாப்பான்ர பிரசங்கம்' இது சாலமன் பாப்பையாவின் பட்டிமன்றம்.
'அடப் போங்கடா பேயன்களே.. சும்மா புதுப்படம் புதுப்படம் எண்டிட்டு பழைய படத்தையே போடுங்கோ' என்றார்கள்.
'புதுப் படத்தை இப்பவே போட்டா அவங்களுக்கு நட்டம் வந்திடுமெல்லே.. அதான் தியேட்டர்ல ஓடி முடியப் போடுவாங்கள் மாமி' என்றேன்.
'ம்க்கும்.. பின்ன ஏன் புள்ளை உலகத்திலையே முதல் முறையா புதுப்படம் எண்டு சொல்ல வேணும்.. எங்களை ஆகலும் பேக்காட்டக் கூடாது கண்டியோ' என்றார்கள். அவ்வ்வ்வவ்.. அன்று காலை சிங்கம். நைட் வேட்டைக்காரன் போட்டார்கள்.
*பேயன்கள் = முட்டாள்கள். பேக்காட்டல் = ஏமாற்றல்.
#####
மாமியார் வந்த நாள் முதல் அவ்வப்போதும் இப்போது எப்போதும் ஹீட்டர் வேலை செய்கிறது. இன்னமும் விண்டரே வரவில்லை இப்பவே குளிர்ர்ர்ருது என்றால் கொஞ்சம் கண்ணைக்கட்டத்தான் செய்கிறது. சமயத்தில் வீடு சூடாகி நாங்கள் அவனில் வைத்த கோழி போல வேகிப் போகிறோம். சாக்ஸ், ஸ்வெட்டர் எல்லாம் குளிர் விரட்டும் என்று சொன்ன பின்தான் எடுத்துப் போடுகிறார். அவ்வப்போது திருட்டுத்தனமாக ஹீட்டரை ஆஃப் செய்த ஐந்தாவது நிமிஷம்
'என்ன புள்ளை.. இண்டைக்கு இவளவு குளிரா கிடக்கு'
என்பவர் காதுக்கு சீரியலையும் மீறி ஹீட்டர் வேலை செய்யாத சத்தம் எப்படித்தான் கேட்கிறதோ. இது கூடப் பரவாயில்லை தலைக்கு/குளித்து விட்டு வெளியில் நின்று உலர்த்திவிட்டு ஒரு மணி நேரம் குளிரால் போர்வைக்குள் சுருண்டு படுக்கிறார். சற்றே சூர்யா எட்டிப் பார்த்ததும் ஜன்னல் திறந்து வரவேற்றுவிட்டு மூட மறந்துவிடுகிறார். ஹீட்டர் அப்பீட்டாவென்று சந்தேகத்தோடு குளிர் காற்று வரும் வழி பிடித்துப் போனால் திறந்த ஜன்னல் ஜில்லென்று வரவேற்கிறது. நேற்றும் கால்வலியால் அவஸ்தைப்பாட்டார்கள். சாக்ஸ் போடாததும் காரணம். என்று சொன்னதும்
'அவனிட்ட சொல்லிப் போடாதை பேசுவான்'
என்றவர் ஓடிப் போய் எடுத்துப் போட்டுக் கொண்டார். அவரிடம் சொல்லமாட்டேன் ஆனால் இப்படியே சாக்ஸ் போடாமல் கால் வலித்தால் டாக்டர்ட்ட போறது தவிர வேற வழி இல்லையென்று சொல்லி(மிரட்டி) இருக்கிறேன். அவர்களுக்கு ஹாஸ்பிடல்/டாக்டர் அலர்ஜி என்று தெரிந்ததாலும் வேறு வழி இல்லாமலும்.
3 நல்லவங்க படிச்சாங்களாம்:
கலக்கல் மாமி ;-)
மாமிக்கு என் அன்பு:)!
டம்பி :)
@@
நன்றி அக்கா.. சொல்லிடறேன் :)
Post a Comment