அண்ணா.. எங்க வீட்ல அப்பாவுக்கு அடுத்த இடத்தில நான் மரியாதையும் பயமும் வைத்திருக்கும் பாசத்துக்குரியவர் நீங்க. இத்தனைக்கும் என்ன நீங்க திட்னதில்ல, அடிச்சதில்ல. ஒரே ஒரு தடவை காதை திருகி இருக்கீங்க. உங்க காஸட் ஒண்ண நான் நாசவேலை பண்ணி அழிச்சு வச்சிட்டதால. ஒரு வார்த்தை திருப்பி பேச மாட்டேன். சொல்றத செய்துடுவேன். உங்க கூட சண்டை போடணும்னு நினைச்சது கூட இல்லை. நீங்க எங்கள விட்டு முதல்ல படிப்புக்கும் அப்புறம் வேலைக்கும்னு அதிக நாட்கள் பிரிஞ்சு இருந்ததுதான் காரணமான்னா அதுவும் கிடையாது.
சின்ன வயசில குருட்டு எலிக்கு யாராவது சாப்பாடு குடுங்கப்பா.. பாவம் கண்ணு தெரியாதுனு சொல்லி நீங்க எங்க பங்கையும் கபளீகரம் பண்றப்போ முதல்ல தெரியாமலும், பின்னாடி தெரிஞ்சும் ஏமாந்து போறது நாந்தான். யாரும் உங்களுக்கு சொந்தமான எதையும் எடுத்திட முடியாது. உங்கள யாரும் எதுவும் சொல்லவும் கூடாது. ஒரு தடவை அழுக்குத் தேச்சு குளிக்கலேன்னு உங்களுக்கு அம்மா சாத்துப்படி வச்சுக்கிட்டே குளிக்க வைச்சப்போ, கைல கல்லு எடுத்து அண்ணாவ இப்போ விடலேன்னா அடிச்சிடுவேன்னு நான் மிரட்டினது வரலாற்று நிகழ்வாச்சே. உங்க டீச்சர் க்ளாஸ் கட் அடிச்சிட்டு நீங்க கேணியில குளிக்கப் போனத்துக்கு பிரம்பால கால்ல வரி வச்சிட்டார்னு இன்னை வரைக்கும் அவர் கிட்ட பேசிறதில்ல நான்.
உங்களுக்கு ஒவொரு தடவையும் விபத்துக்கள் நடந்தப்போ எனக்கு அது வந்திருக்க கூடாதானு அழுதிருக்கேன். வலிய வெளிய காமிக்க மாட்டீங்கன்னாலும் நீங்க அனுபவிச்சது கொஞ்சம் இல்லைண்ணா. உயிர் தப்பி வருவீங்களானு கூட எத்தனை தடவை தவிக்க விட்டிருக்கீங்க. நீங்க விடுமுறைல வந்தா வீடே களை கட்டும். நீங்க திரும்ப போற நாள் நெருங்க மனசு அடிச்சிக்கும். கண்ல இருந்து உங்க பைக் மறையிற வரைக்கும் பாத்துட்டு இருப்போம். மறுபடி வீடு சகஜ நிலைக்கு வர கொஞ்சம் நாளாகும்.
கல்யாணம்.. எல்லாரையும் விட்டு வர முடியாம அலைஞ்சுட்டு இருந்துது மனசு. எத்தனையோ குழப்பங்கள். என்னய விட அவர் நல்லவர்டி. அண்ணா சொல்றத நம்பு. உன்ன நல்லபடியா அவர் பாத்துப்பார்னு நீங்க சொன்னதுக்கு அப்புறம்தான் எனக்கு கல்யாணப் பொண்ணு நாந்தாங்கிற உணர்வே வந்துது. உனக்கும் அவருக்குமான நட்பு.. கல்யாணத்துக்கு அப்புறம் அத்தான்னு சொல்லி மரியாதைப் பன்மையில நீ பேச ஆரம்பிச்சப்போ என்னடா இது புதுசானு என்னவர் கேட்டத்துக்கு நட்பு வேறங்க, இது உறவு, அதுக்கான மரியாதைய நான் குடுக்கிறதுதான் நல்லதுனு சொன்னே.
எப்பவும் அப்பாவுக்கு உன் ஆலோசனை தேவைப்படும். இத தான் நீங்க செய்யணும்னு சொல்ல மாட்டே. இப்டி செஞ்சா நல்லதுனு தோணுது. நீங்க பாத்து செய்ங்கனு சொல்வே. அவ்ளோதான். அது சரியாதான் இருக்கும். அண்ணியோடான உன் காதல். கல்யாணம். அவங்களுக்கு எல்லாமே நீயாய். போன வாரம்தான் ரொம்ப நாளைக்கு அப்புறம் உங்க ஃபோட்டோ வந்துது. அண்ணி முகத்தில இருக்கிற சந்தோஷம்.. உங்க மடியில உரிமையோட இருக்கிற சின்னண்ணனோட சின்னக்குட்டி.. எங்க பசங்களுக்கு அந்த கொடுப்பினை கிடைக்கலையேன்னு என்னையும் அக்காவையும் ஏங்க வைச்சது.. வழக்கம் போல.
எல்லாம் நீ சொன்னா மாதிரி சரியா ஆய்டும்ணா. பிள்ளையார் துணையிருப்பார். நானும் அக்காவும் உங்க எல்லாரையும் வந்து பாப்போம். திட்டாத.. அதுவரைக்கும் எங்க தவிப்பு அடங்காதுண்ணா.. நாங்க முத தடவை ஊருக்கு வந்திட்டுப் போனப்போ நீ அக்கா கிட்ட சொன்னியே.. அவளே ஒரு குழந்தை. அவளுக்கு ரெண்டு குழந்தைனு.. இப்பவும் என் அண்ணாவுக்கு நான் குழந்தைதான். ஃபோன்ல நான் அண்ணா பேசறேன்னு உங்க குரல் கேட்டதும் அண்ணா.. சொல்லுண்ணா.. எப்டி இருக்கேன்னு சந்தோஷமா கண்ணீரை மறைச்சுக் கிட்டே பேசத் தெரிஞ்ச குழந்தை. இனிமே அப்டி எல்லாம் இருக்கக் கூடாது. எல்லோரும் எப்போதும் சந்தோஷமா இருப்போம்.
ஹாப்பி பர்த்டே அண்ணா..
இது நீங்க 25.12.2009 ல எங்களுக்கு எழுதினது. என் வாழ்நாள்ல நான் மறக்கணும்னு நினைக்கிற மறக்க முடியாத வரிகள்..
என் எல்லாம்
சிதைந்து அழிந்த பின்
நானும் என் .....ம்.