Pages

  • RSS

28 August, 2011

என்னம்மோ நடக்கு!!

’அது வேற ஒண்டும் இல்லை அப்பா. இப்ப என்னில யாருக்காச்சும் கோவம்னு வைங்க. இந்த சந்தர்ப்பத்த வச்சு உடனவே நைட் எங்க வீட்டுக்கு கிறீஸ் மனிதன் வருவான். அதுக்குன்னு கிறீஸ் மனிதன் இல்லேன்னு இல்லை. ஆனா நிஜமான கிறீஸ் மனிதர்களை விட போலிகள் ஜாஸ்தி ஆய்டிச்சு. பகல்ல கொல்லைல மூ*** கூட்டுக்கு போனாக்கூட அங்க கிறீஸ் மனிதன் நின்னா நம்ம ஊரு பொண்ணுங்க என்னதான் பண்ணுவாங்க. இந்த சந்தர்ப்பத்தை சாக்கா வச்சு அங்கங்க இப்டி தனியா இருக்கிறவங்களுக்கு தொல்லை பண்ணிட்டு இருக்காங்க. ஆனா நிஜ கிறீஸ் மனுசங்க எப்ப வருவாங்கன்னு யாருக்கும் தெரியல’

இது அப்பாவுக்கு ரஜி சொல்லியது. வெறுப்போடு இருக்கிறான். இப்போதுதான் திருடர் தொல்லை கொஞ்சம் ஓய்ந்துகொண்டு போகிறதென்றால் இது புதுத் தொல்லை. அண்ணாவின் வீடு நெருக்கமான இடத்தில் இருப்பதால் கத்தினால் உதவிக்கு யாராவது வருவார்கள். ரஜிக்கு அப்படி அல்ல. இருள ஆரம்பித்ததுமே அண்ணி அவனை எங்கும் போகவிடுவதில்லையாம்.

யாரைப் பற்றி சொல்கிறேன் என்று தெரியாதவர்களுக்காக எனக்குத் தெரிந்ததைச் சொல்கிறேன். இலங்கையில் தமிழர்/முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் கறுப்பு உடையோடு, உடலில் கிறீஸ் பூசியபடி மர்ம மனிதர்கள் அட்டகாசம் செய்கிறார்களாம். தனியாக இருக்கும் பெண்கள்தான் அவர்கள் குறி. ஆனால் எங்கேயும் திருட்டு நடைபெறவில்லை. முதலில் இரவில் ஆரம்பித்த தொல்லை இப்போது பகலிலும் நடக்கிறது. பிடிக்கப்போனால் இராணுவ முகாமுக்குள் தப்பி ஓடுகிறார்களாம். பொதுமக்களால் பிடித்துக் கொடுக்கப்பட்டவர்களும் விடுதலை செய்யப்பட்டோ அல்லது பொலிஸ் பாதுகாப்போடோ இருக்கிறார்களாம். இதனால் பொலிஸ்/இராணுவத்துக்கும் பொதுமக்களுக்குமிடையே பல முரண்பாடுகள் வந்து அடிதடியாகவும் போயிருக்கிறது. ஆனால் வெல்வது யார்?? உங்களுக்கே தெரியும்.

நேற்று ஸ்கைப்பில் பேசியபோது இளைய மச்சினர் வைஃப் கி.ம வுக்கு ஆணென்று காட்டிக்கொள்ளவென்று இரவில் சறமும் ஷர்ட்டும் போட்டுக்கொண்டு தூங்குவதாக மச்சினர் கிண்டல் பண்ணினாலும் எல்லோரும் இருட்ட ஆரம்பித்ததும் பயத்தோடுதான் இருக்கிறார்கள். மாமி தென்னந்தோப்பில் தனியாக பெரும் பொழுதைக் கழிப்பதால் சரியாகத் தூங்குவதில்லை என்றார். 20 வயதுக்குக் கீழேயும், 60 வயதுக்கு மேலேயும் உள்ளவர்களைக் கொன்று உடல் உறுப்புகளை திருடுகிறார்கள் என்றும் ஒரு கதை வந்ததாம். இப்போது மாமியின் உறவினர்கள் மாமி இங்கு வந்ததால் தனியாக இருக்கப் பயத்தோடு இருக்கிறார்கள்.

என் ஒன்றுவிட்ட அக்காவின் மாமியாருக்கு காதில் ஒரு துண்டை வெட்டியதோடு, புத்திசுவாதீனம் குறைந்த அவர்களின் உறவுப் பெண்ணுக்கும் வெட்டி இருக்கிறார்கள். அண்ணா ஹாஸ்பிடலில் போய் பார்த்திருக்கிறார். எங்கள் ஊர்ப் பெண்கள் இருவர் பகலில் சந்தைக்குப் போனபொழுது யாருமில்லாத வழியில் திடீரென வந்த கி.ம அவர்களை அடித்துவிட்டு ஓடி இருக்கிறான்.

ஒதுக்குப்புறமாகவும், தள்ளித் தள்ளியும் இருக்கும் வீடுகளுக்கு வருவதும் தப்பி ஓடுவதும் அவர்களுக்கு சுலபமாக இருக்கிறது. யாரும் பிடித்தாலும் நழுவ இலகுவாய் கிறீஸ் வேறு. திருவிழா சமயங்களில் ஊரில் கிறீஸ் பூசிய மரத்தில் ஏறி சாகசம் செய்யும் மாம்ஸின் ஃப்ரெண்ட் அது உடலில் பட்ட இடம்  அவ்வளவு எரிச்சலாக இருக்குமென்று சொல்வாராம். எப்படித்தான் அதை பூசிக்கொண்டு அலைகிறார்களோ தெரியவில்லை.

என்னதான் இருந்தாலும் ஒன்றுமட்டும் நன்றாகத் தெரிகிறது. நாங்கள் நிம்மதியாக இருப்பது யாருக்கோ பொறுக்கவில்லைப்போலும். அரசியலோ இல்லை வேறெதுவோ. காரணம் எதுவாயிருந்தாலும் இரவில் நிம்மதியாக உறங்க முடியாமல் பகலிலும் பயத்தோடு அலையும் அவலம் எம்மினத்துக்கு மறுபடி வந்திருக்கிறது. அண்ணா, ரஜி, மச்சினரோடு பேசும்போதெல்லாம் பத்திரமாக இருக்கச் சொல்லிக்கொள்வதை விட எங்களைப்போன்ற புலம் பெயர் வாழ் தமிழர்களால் வேறென்ன செய்ய முடியும்??

பிள்ளையாரப்பா!!

24 August, 2011

மாமி வந்தாச்சு.

ஊரிலிருந்து மாமியார் வந்திருக்கிறார்கள். மூன்று மாத விசா. விசா 20,000/-இன்ஷூரன்ஸ் 38,,000/-, டிக்கட் 190,000ரூபா. வந்ததும் ’வேற ஒண்ணுமில்லை பாசத்துக்கு விலை ஏறிப்போச்சு. இவ்ளோ செலவு செஞ்சுதான் என்ன கூப்டணும்னா இனிமேல நான் வரமாட்டேன்’ன்னு சொன்னார்கள். மாமியாரிடம் குண்டாயிட்டேன்னு கொஞ்சம் அதிகமாக சொல்லிவிட்டேன் என்பது அவங்க வாங்கி வந்த XL சைஸ் சுடிதாரைப் பார்த்ததும் புரிந்தது. போட்டுக்கொண்டு சதுரிடம் எப்படி என்று கேட்டேன். ‘இதான் அப்பம்மா உங்களுக்கு வாங்கிட்டு வந்த nattkjole (நைட்டி) வா??’ என்றார். பத்திரமாக மடித்து வைத்துவிட்டேன். இங்கே இருக்கும் தையல் அக்காவிடம் கொடுத்து டிங்கரிங் செய்தால் சுண்டக்கா காற்பணம் கதையாகிவிடும். அவ்ளோதான். சொக்கா.. அது உனக்கு இல்லை!!

மாம்ஸ்க்கு அழகாக எம்ப்ராய்டரி செய்த ஒரு சட்டை வாங்கியிருக்கிறார்கள். கொஞ்சம் லூசாக இருந்தது. டைட்டாக ஷர்ட்/டீஷர்ட் போட்டுப் பழகியவர் ‘என்னம்மா இது கொஞ்சம் பெருசா இருக்கே’ என்றார். ‘பரவால்ல.. நீ கொஞ்சம் குண்டாயிடு அப்போ சைஸ் சரியாய்டும்’ என்று மாமியார் சொன்னார். மொக்கைசாமி s/o மொக்கை மம்மி என்று நான் சொன்னேன்.

மாமியார் வந்த அன்று இடியப்பம் செய்தேன். மாம்ஸுக்கு புட்டு பிடிக்கும் என்பதால் இடியப்பம் எப்போதாவது அவருக்கு காய்ச்சல், சளிப்பிடிக்கும் சமயம் அவிப்பதோடு சரி. மாம்ஸ் இன்றுவரை அம்மா வந்ததுனாலதான் எனக்கு இடியப்பம் கிடைச்சுதென்று எல்லோரிடமும் சொல்லிக்கொண்டே இருக்கிறார்.

011 எனக்கு நினைவு  தெரிந்த நாளிலிருந்து அம்மா இடியப்பம் அவிக்கும் போதெல்லாம் நானும் கொஞ்சம் மாவை வாங்கி அதில் உருண்டைகளில் ஆரம்பித்து பின் படிப்படியாக பூ, குருவி, மீன் என விதவிதமாக செய்து கொடுப்பேன். அம்மா அதை இடியப்பத்தின் அருகில் வைத்து அவித்துக்கொடுப்பார். கையில் சுடாமல் ஊதியும், நேரமின்மைக்கு ஏற்ப ஒரு தட்டில் ஆவி பறக்கவுமென என் கைவண்ணம் கிடைக்கும். நசுங்காமல் இருக்கவென முதல் தட்டில் வைப்பதால் மூடியிலிருந்து நீர் சொட்டி மெல்லிய ஈரப்பதத்தோடு அவளவு சுவையாக இருக்கும். இன்று என்னவோ ஆசை வந்தாலும் குருவியோ மீனோ செய்ய வராததால் உருண்டைகளே செய்தேன். சுவை பார்த்த சது அடுத்த தடவை இடியப்பம் செய்யும்போது சொல்லச் சொல்லி இருக்கிறார்.

ஊரில் எங்கள் வீட்டின் எதிரில் அம்மாவின் அத்தான் வீடு. அவரும் மனைவியும் அம்மாவுக்குப் போலவே எங்களுக்கும் பெரியத்தான், சின்னாச்சி அக்காதான். யாரோ அவரை சின்னாச்சன் என்று சொல்லப்போய் எங்களுக்குள் இப்போதும் சின்னாச்சன் என்றே சொல்லிக்கொள்வோம். சின்னாச்சி அக்கா வீட்டில் மூன்று வேளை சாப்பாடும் சமைத்துக்கொடுப்பார். நாங்கள் மதிய, இரவுச் சாப்பாடு வாங்கியதாய் நினைவில்லை. ஆனால் காலைச்சாப்பாடு அதிகம் வாங்கி இருக்கிறோம். ஆரம்பத்தில் எவளவென்று சரியாக நினைவில்லை ஆனால் கடைசியாக 1990 இடப்பெயர்வின் முன் ஐம்பது ரூபாய் கொடுத்து வாங்கிய நினைவு. காலை மெனுவில் இடியப்பம், புட்டு இருந்தாலும் இடியப்பமே எங்கள் தேர்வு.

இடியப்பம் வாங்க ’குட்டிக்காலால போய்ட்டுவாம்மாச்சி’ என்ற ஐஸோடு நானே காலையில் அனுப்பி வைக்கப்படுவேன். குட்டிக்கால் வளர்ந்து விட்டதாய் சொன்னபோது கடைக்குட்டி சின்னப்பொண்ணு நீதான் போகணும் என்று விரட்டப்பட்டேன். ஓலைக்குசினி. இருட்டாக இருக்கும். உள்ளே போய் சிறிது நேரத்திலேயே கண்ணுக்கு எதுவும் தெரியும். ஆனால் எப்போதும் எல்லாம் அதனதன் இடத்தில் இருப்பதால் நேராகப் போய் வழக்கமாக இருக்கும் பலகைமீது அமர்ந்துவிடுவேன். அடுப்பின் வெளிச்சம் விளக்கின் தேவையை இல்லாது ஆக்கினாலும் அடுப்பின் ஓரத்தில் ஒரு மண்ணெண்ணெய் விளக்கு மங்கலாக எரிந்து கொண்டிருக்கும். சின்னாச்சி அக்காவின் தங்கை மகள் பிரேமாக்கா உதவியோடு வேலை மும்முரமாக நடந்துகொண்டிருக்கும். சும்மாவே இருட்டு மழைநாட்களில் கும்மிருட்டாகிப் போக ஈர விறகோடு அவர்கள் போராடுவதும்,  மழைக்குளிருக்கு இதமாய் குசினியின் கதகதப்பும் இப்போதும் நினைவிருக்கிறது.

ஒரு பெரிய ஓலைப் பெட்டிக்குள் மாவைக்கொட்டி முழுவதும் குழைத்தால் காய்ந்துவிடுமென்று ஒரு ஓரத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாகப் பதமாகக் குழைப்பார்கள். மர உரலால் இடியப்பத்தட்டில் பிழிந்துவிடும் வேகத்தை விட அவிந்த இடியப்பத்தை உலைப்பானையிலிருந்து இறக்கி ஒரு பெரிய சுளகில் அடுக்கி வைக்கும் வேகம் அதிகம். அதிசயமாய் பார்த்தபடி இருக்கும் என்னோடு பேசியபடியே பிரேமாக்கா வேலை செய்வார். இன்னொரு  மூலையில்  அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் பேப்பர் கிழித்து, லாவகமாக டிஷ்யூவை வாழை இலைக்குப் பதிலாக வைத்து சம்பலும் சேர்த்து பார்சலாகக் கொடுப்பார். சொதிக்கு ஏற்ற ஒரு பாத்திரமோ ஹார்லிக்ஸ் போத்தலோ நான் கொண்டு போவேன்.

சின்னாச்சி அக்கா நெற்றியில் ஒரு ரூபா அளவில் எப்போதும் குங்குமம் இருக்கும். கவுன் அழுக்காகாமல், வேலைக்கு இடைஞ்சலில்லாமல் இருக்கவென பிரேமாக்கா இடுப்பில் சறம் கட்டி இருப்பா. தாய், தங்கைகள் குடும்பமாக வந்து அங்கேயே இருந்து அவர்களும் சமையல் செய்து கொடுக்க ஆரம்பித்த போது கூட பிரேமாக்கா சின்னாச்சி அக்காவுக்கே உதவியாக இருந்தார்.

உள்ளங்கை அளவில் குட்டிக்குட்டியாய் இடியப்பம். ஒரு தடவை பிழிந்து பாலெடுத்த தேங்காய்ப்பூவில் சம்பல், மூன்றாவது பாலில் நீரோட்டமாய் இருக்கும் சொதி. ஆனால் எங்கிருந்து அந்தச் சுவையைச் சேர்த்தார்கள் என்று இன்றுவரை தெரியவில்லை.

சின்னாச்சி அக்காவின் ஒரே மகனுக்கு என் வயது. அவன் முழுப் பெயர் தெரியாது. வீட்டில் லகு என்று கூப்பிடுவார்கள். அம்மாவுக்கு அந்த அத்தானைக் கட்டி வைக்கக் கேட்டார்களாம். அம்மா தப்பியதால் என்னை லகுவுக்கு கொடுத்து அவரின் கவலையை போக்கிவிடலாமென்று கேலி பண்ணுவார்கள். என் தலை தெரிந்தாலே வீட்டுக்கோடியில் போய் ஒளிந்து கொள்ளும் லகு என்னிடமிருந்து தப்பிவிட்டான் பாவம். இப்போது சின்னாச்சி அக்கா சமைத்துக்கொடுப்பதில்லையாம். 2002 ஊருக்குப் போன சமயம் பார்த்துவிட்டு வந்தேன். அம்முவைத் தூக்கி அப்படியே என்னைப் பார்த்த நினைவு வருவதாகச் சொல்லிக் கொஞ்சினார். பெரியத்தான் அதே சிரிப்போடு தள்ளி இருந்து பார்த்துக்கொண்டிருந்தார். பிரேமாக்கா நர்ஸிங் கோர்ஸ் முடித்து அண்ணாவின் ஹாஸ்பிடலில் நர்ஸாக இருந்தார்.

idiyappam இணையத்தில் எடுத்த படம் இது. தனியாக இடியப்ப உரலென்றும், அதிலேயே முறுக்கு அச்சு போடக்கூடியது போலவும் கிடைக்கும். பூவரச மரத்தில் செய்த உரலும், பனை ஈர்க்கில் செய்த தட்டும் வெகுகாலம் இருக்கும். மாமி ஒரு முறை வரும்போது மர உரல் வாங்கிக்கொண்டு வந்தார். அதில் இடியப்பம் பிழிவதென்பது அவளவு இலகுவானதல்ல. கையில் நல்ல பலம் இருக்கவேண்டும். என்னால் இரண்டுக்கு மேல் அழுத்திப் பிழிய முடியவில்லை. இலகுவாக இருக்கவென்று மாவுக்கு நீரை அதிகம் சேர்த்தால் இடியப்பம் சாஃப்ட்டாக வரவில்லை.

278

அப்படியே பத்திரமாக அதை மாமியிடம் கொடுத்து அனுப்பிவிட்டு கன் டைப் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் உரலும், பிளாஸ்டிக் தட்டும் வாங்கிவிட்டேன்.

 

 

இப்போது இதற்கென்று மெஷினே வந்துவிட்டதாம். முன்பென்றால் சின்னாச்சி அக்காவுக்கு வாங்கிக் கொடுத்திருக்கலாம்.

21 August, 2011

எங்க ஊர் கோமாதா.

tine இங்கு வந்ததில் இருந்து நான் பாவிக்கும் dairy products எல்லாமே Tine என்கிற ஒரே ப்ராண்ட்தான். எனக்குத் தெரிந்து அநேகமானவரின் தேர்வும் இதுவே.

skolemelk பள்ளியில் பிள்ளைகளுக்கு பணம் கட்டிவிட்டால் பால் கிடைக்கும். அதனால் லஞ்ச் சரியாக சாப்பிடவில்லையே என்ற கவலை பாதி குறையும்.

 

 

 

003 - Kopi ஒவொரு வருஷமும் Tine யினால் 7 – 14 வயது வரையான பிள்ளைகளுக்காக football school காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை நடாத்தப்படுகிறது. இம்முறை நாடு முழுவதும் 403 கிளப்கள் பங்கேற்றிருக்கின்றன. இடத்துக்கு இடம் நேரம், நாள் வேறுபடும். பள்ளி விடுமுறையின் கடைசி வாரத்தை சதுரின் கிளப் தேர்வு செய்வது எல்லாருக்கும் வசதியான ஒன்று. கட்டணம் ஒரு பிள்ளைக்கு 900குரோனர். இங்கே பொதுவாகவே சம்மர் கேம்ப்/ஆக்டிவிட்டீஸ் குறைவு. இருக்கும் சிலவற்றுக்கும் கூட அனுப்ப முடிவதில்லை. ஆனால் சது ஃபுட்பால் ட்ரெய்னிங் தொடங்கியதில் இருந்து இதை மட்டும் தவற விடுவதில்லை. இரண்டு தடவை அம்முவும் போனார்.

006 - Kopi வீட்டின் முன்னே இருக்கும் கிரவுண்டில் நடப்பதால் தனியாகப் போய் வருவார். காலை அல்லது மதிய உணவு, ஜூஸ், ball, bag, டீஷர்ட்டோடு கடைசி நாள் பீஸா பார்ட்டியில் முடிப்பார்கள்.

 

 

 

013 - Kopi டெக்னிக்ஸ், ட்ரிக்ஸ் என்பதோடு நிறைய நிறைய ஜாலியையும் இந்த ஒரு வாரத்தில் சேர்த்துக்கொண்டு வருவார். இம்முறை முதல் நாள் சோ மழையும் கடைசி நாள் தூறலும் என ஜாலி இன்னும் கூடி இருந்தது.

 

 

 

Christian Kalvenes இடையில் ஒரு நாள் Brann என்ற ஃபுட்பால் டீம் வீரர் ஒருவர் வந்து அவர்களின் அனுபவங்கள்/ஆட்டோகிராஃப் பகிர்ந்து கொள்வதுதான் ஹைலைட். இம்முறை வந்தவர் Christian Kalvenes.

 

 

அப்படியே Tine யின் விளம்பரங்கள் சில. இவர் கவசகுண்டல கர்ணன்போல காலில் ski யோடு பிறந்தவராம். இந்த விளம்பரம் எனக்குப் பிடிக்க இதுவும் ஒரு காரணம்.

இது மிகவும் பிரபலமானது. அம்மு, சதுவுக்கும் பிடித்தது,

வாழ்க்கையில் சில சின்ன விஷயங்கள் பெரிய்ய்ய்ய மாறுதலை தருமென்று சொல்லும் தத்துவ விளம்பரம் இது.